Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 10

இவ்வளவு கனமான சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களுக்கு சந்திரன் தான் ரோகிணியின் கணவன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும், அவள் பாவனையைப் பார்த்தால், இன்று தான் கணவனைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் என்பது திண்ணம். அவளின் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினார்கள்.

ஆனால், ரோகிணியால் எப்படி தான் அதை ஜீரணித்து, மீள முடிந்ததோ தெரியவில்லை. தன் கைக்குட்டையால் முகத்தை துடைத்தவள், “நல்லா இருக்கேன் னா. நீங்க நல்லா இருக்கீங்களா?” என்றாள் அர்ஜுனைப் பார்த்து மெல்லிய புன்னகையோடு. அதை உதிர்ப்பதற்கே அவள் வெகுவாய் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. அதிலும் அவள் கண்களில் இருந்த கலக்கமும், பரிதவிப்பும்… அவளால் என்ன முயன்றும் அதை மறைக்க முடியவில்லை.

ரோகிணி, அவளால் அந்த மகிழ்வான சூழல் கெட்டு போக வேண்டாம் என்று நினைத்திருந்தாள். அதோடு, மிகவும் உரிமையாய், பரிவோடு தன் நலத்தை விசாரிக்கும் குரலுக்கு பதில் சொல்லாமல் அவளால் எப்படி உதாசீனம் செய்ய இயலும்? ஆகையால் தான் அர்ஜுனுக்கு பதில் தந்தாள். ஆனால், திருமணத்தில் பலரையும் பார்த்திருந்ததால், அவளுக்கு அர்ஜுனை அடையாளம் தெரியவில்லை. அவளின் குரலில் இருந்த சோர்வும், முகத்தில் இருந்த கலக்கமும் சந்திரனுக்கும் புரிய, “ரோ, ஆர் யூ ஆல்ரைட்?” என்றான் பரிதவிப்போடு. உண்மையில் அந்த பரிதவிப்பில் இருக்கும் நேசம் அவளுக்கு வேம்பாய் கசந்தது. எப்படி இவனால் முடிகிறது? என்று அவளுக்கு புரியவில்லை. தலையை மட்டும் ‘ஐ ம் ஓகே’ என்பதாய் அசைத்தவள், இனியும் அங்கிருக்க பிடிக்காமல், “நான் கிளம்பறேன் மா. நேரம் ஆயிடுச்சு” என்று அவர்கள் அனைவரிடமும் விடைபெற எத்தனித்தாள்.

ரோகிணி இன்னும் உணவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்பொழுது இருந்த சூழலில் அவளை இங்கே தொடர்ந்து இருக்க சொல்லி மேலும் வேதனை படுத்த வேண்டாம் என்று எண்ணியவர்கள், “ஒரு ரெண்டு நிமிஷம் பொறு மா” என்று அவளுக்கு தேவையான உணவை சிறு பாத்திரத்தில் கொண்டு வந்து அவளிடம் தந்தனர். விழாவிற்கு வரும் பொழுது பேருந்து நிலையம் சென்று தனசேகரன் ஐயா தான் ரோகிணியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார், ஆகையால், “டேக்ஸில போறயா மா? இல்லை பஸ் ஸ்டாண்ட்க்கு வரவா” என அவர் கேட்க, ‘இவ என்ன பண்ணறா? அதுக்குள்ளே கிளம்பறேன்னு சொல்லறா? ஏன் டல்லா இருக்கா?’ என சிந்தித்துக் கொண்டிருந்த சந்திரன், அவள் பேருந்தில் செல்கிறாள் என்றதும் சுதாரித்து, “என்ன ரோ டேக்ஸில போகாம பஸ்ல எதுக்கு போற?” என்றான் கேள்வியாக.

தனசேகரனுக்கும், விசாலத்திற்கும் அத்தனை கோபமாய் வந்தது. இவன் கண்டவளோடு ஊர் சுற்றுவதோடும் அல்லாமல், இவனை நம்பி வந்த பெண் என்ன செய்கிறாள் என்று கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறானே என்று அத்தனை கோபம். விசாலம் கட்டுப்படுத்திக் கொள்ள கூட முயலாமல், “அவ எங்க போறதுன்னாலும் தனியா பஸ்ல தான் போறா” என்றார் அழுத்தம் திருத்தமாக முகத்தில் அடித்தாற்போன்று. அவரின் குரல் வேறுபாட்டை புருவம் சுருக்கி ஆராய்ந்தவன், “ஏன் ரோ?” என்றான் மனைவியிடம் பார்வை செலுத்தி.

ரோகிணியால் ஏற்கனவே அங்கே நிற்க கூட முடியவில்லை. தனியாக போய் மனதில் இருக்கும் பாரம் தீர அழ வேண்டும். ஆனால், தீரும் பாரமா அவளுடையது? இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நெருப்பு குழியில் நிற்பவள் போல அவள் தவித்திருக்க, இங்கு அனைவரும் கேள்வி கேட்டு ஏன் தாமதிக்கிறார்கள் என்று வாட்டமாய் இருந்தது. பதில் கூறாமல் சோர்வாக இருந்தாள்.

“உங்க பொண்டாட்டி தான, வீட்ல போயி ஆற அமர கேட்டுக்கங்க, பாவம் அந்த பொண்ணுக்கு உடம்பு முடியலையாம் கிளம்பட்டும்” என்று மீண்டும் விசாலம் அம்மா சந்திரனிடம் எரிந்து விழ, “விசாலம்…” என அதட்டினார் தனசேகரன் ஐயா. ரவியும், லலிதாவும் நிஜத்தை உள்வாங்கினாலும், சந்திரனும் அந்நியம், ரோகிணியையும் இன்று தான் தெரியும் என்பதால், எதிலும் தலையிட முடியாமல் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிந்தது.

அர்ஜுன், கோபத்தில் எதுவும் பேசிவிட போகிறோம், அந்த அளவு உரிமையெல்லாம் நமக்கு இல்லை என்பதை புரிந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். விசாலம் அம்மாவிற்கு கணவனின் அதட்டலும் கோபம் தர, “என்னங்க, யாரும் பேசாட்டி எப்படி?” என தவிப்போடு கேட்க, தனசேகரத்திற்கும் அது புரிந்து தான் இருந்தது. அந்த பெண்ணிற்கு என்று இங்கு யார் இருக்கிறார்கள், இவன் இவ்வளவு பொறுப்பற்றவன் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் சமீப காலமாய் சோர்ந்து போய் இருக்கும் ரோகிணியின் முகம் அவருக்கு அத்தனை வேதனையை தந்தது.

‘இவர்கள் ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள்? அதோடு ரோ உடல்நிலை நன்றாக இருக்கிறது என்கிறாள், இவர்கள் வேறாய் பேசுகிறார்கள்’ என்று குழம்பிய சந்திரன், பிறகு அதை விடுத்து, “ரோ, டேக்ஸில போ” என்று மீண்டும் அழுத்தி கூறினான். அவனை அனைவரும் அதிசய பிறவி போல பார்த்தனர். இதற்கு மேல் பொறுமை காக்க அர்ஜுனால் முடியவில்லை. “டேய் நீ எல்லாம்… எனக்கு வாயில ஏதாவது வந்துட போகுது. தங்கச்சிக்கு உடம்பு முடியலை போல, நீ கூப்பிட்டு போகாம, டேக்ஸில போன்னு சொல்லற” என சீறவும், ‘அர்ஜுன், தான் தன் மனைவியோடு வந்ததாய் நினைத்துக் கொண்டு, இப்பொழுது தனியாக அனுப்புவதற்கு கோபமாக பேசுகிறான் போலும்’ என்று தவறாக கணித்த சந்திரன், “டேய் மச்சான், யூ ஆர் மிஸ்டேக்கன். ரோகிணிக்கு இவங்கள முன்னமே தெரியும் போல, அவ தனியா தான் வந்தா…” என விளக்கம் தர முயல, என்னவோ ரோகிணிக்கு அவமானமாக இருந்தது. இங்கிருந்து சென்றால் போதும் என மனம் கூக்குரலிட அதற்கு அவளால் செவி சாய்க்க முடியாத வண்ணம் சூழல் இருந்தது.

அர்ஜுனுக்குமே சந்திரன் யாருடன் வந்திருக்கிறான் என்பது தெரியுமே! ரோகிணியின் நிலையை சந்திரன் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்னும் கோபத்தோடு, ரோகிணியும் கலக்கமும் வேதனையை தர, அவனை தனியாக இழுத்துக் கொண்டு அர்ஜுன் சென்றான். “டேய்… தங்கச்சிக்கு உடம்பு முடியல” என பல்லை கடித்தபடி அடிக்குரலில் சீற, “மச்சான் நான் லுனாவோட வந்திருக்கிறேன் டா. இப்போ பார்ட்டி முடியறதுக்கு முன்னமே, அவளையும் தனியா விட்டுட்டு போனா அது மேனர்ஸ் இல்லைடா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சந்திரன் பதில் கூற, இவனுக்கு அவனை அடித்து விடலாம் போல இருந்தது. சபை நாகரிகம் தெரிந்தவனுக்கு கடமையும், பொறுப்பும், குடும்ப கட்டமைப்பும் தெரியவில்லையே என்ன செய்வது என்று ஆத்திரமாக இருந்தது.

அர்ஜுன் கட்டுப்படுத்த முடியா கோபத்தில், “ஆமா லுனா இந்த ஊருக்கு, இல்லை… இல்லை… இந்த நாட்டுக்கே புதுசு. அவளை தனியா எப்படி விடமுடியும்? அதோட அவளுக்கு இங்க யாரை தெரியும், இந்த பார்ட்டில பாதில விட்டுட்டு போனா என்ன பண்ணுவா? வீட்டுக்கு கூட தனியா போக தெரியுமோ என்னவோ? நீ கையை பிடிச்சு கூட்டிட்டு போகணும் இல்ல” என நக்கலாக கேட்க, சந்திரனுக்கு முதல்முறையாய் எதுவோ உரைத்தது. ஆம், லுனா இவன் இல்லாமலும் இயங்குவாள். இது அவள் நாடு, அவளுக்கு தெரிந்தவர்களின் பார்ட்டி, அவள் தங்கியிருக்கும் குடியிருப்பு. ஆனால், தன் மனைவி அவள் தன்னை நம்பி இந்த பார்ட்டிக்கு வரவில்லை தான், இருப்பினும் அவளை இங்கு பார்த்த பிறகும் கூட அவளுக்கான பொறுப்பை ஏற்காமல் அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருப்பதா? அதுவும் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தபிறகும். அவனுக்கே ஏதோ தவறுகிறோம் என்று புரிந்தது.

“சாரி மச்சான். இதை யோசிக்கலை” என்றபடி மேடையை நோக்கி நகர்ந்தான். அர்ஜுனுக்கு என்னவோ போல் இருந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருவரும் ஓரளவு பேசிக் கொள்வார்கள். சந்திரன் யாரிடமும் ஒட்டாத ரகம், அர்ஜுன் அனைவரிடமும் கலகலப்பானவன் என்பதால் ஓரளவு பேசியிருக்கிறான். இருவரும் மேற்படிப்பிற்கு அமெரிக்கா வர, வெவ்வேறு கல்லூரியில் படித்ததால் அதிகம் தொடர்பு இல்லை. பிறகு சந்திரன் சிகாகோவில் வேலை வாங்கி வந்துவிட, அர்ஜுன் டென்வர் நகரத்தில் வேலை செய்து வந்தான். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் அர்ஜுனும் சிகாகோ நகரத்திற்கு வந்திருந்தான். இங்கு வந்ததும், தலைகீழாய் மாறியிருந்த சந்திரனை பார்த்து பெரிய அதிர்ச்சி. கல்லூரி, வீடு, படிப்பு தவிர வேறு எதையுமே அறியாதவன், முழுக்க முழுக்க அமெரிக்க கலாச்சாரத்தில் மாறி இருந்தால் அதிர்ச்சியாகாமல் எப்படி இருக்க முடியும்?

முன்பெல்லாம் பேசவே தயங்கிய சந்திரன், இவனைப் பார்த்ததும் தானாக வந்து பேசினான். அர்ஜுனும் சந்திரனுக்கு அவன் செய்கைகள் தவறு என புரியவைக்க நினைத்தான் தான். ஆனால், அதிகம் பழக்கம் இல்லாதவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியாததால் விட்டுவிட்டான். தவறை சுட்டிக்காட்டும் அளவு உரிமையும், நட்பும் இல்லை எனவும் தோன்றியது. அதோடு இந்த காலத்தில் யார் அறிவுரையை கேட்கிறார்கள் என்பதால் பேசாமல் விட்டுவிட்டான். சந்திரனின் திருமணத்தில் கூட, ரோகிணி வந்தால் மாறிவிடுவான் என்று தான் மனம் ஆறுதலாய் நினைத்தது. ஆனால், ரோகிணியின் இன்றைய நிலை பார்த்தபிறகு நண்பனின் தவறை அவனுக்கு உணர்த்தாமல் பெரிய தவறு செய்து விட்டோமோ என்று குற்றவுணர்வாய் போய்விட்டது.

தன் சிந்தனையிலேயே வெகுநேரம் இருந்தவன், யாரோ தன் தோளினை தொடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க ரவி நின்றிருந்தான். “என்ன டாக்டர் சார், பலத்த யோசனை போல…” என ரவி கேட்க, “வாங்க இன்ஜினியர் சார், உங்க அளவு நாங்க யோசிக்கவா போறோம்” என இருவரும் இலகுவாக பேச முயற்சித்தனர்.

அர்ஜுன் தனது பார்வையை சுழற்ற, அதை உணர்ந்த ரவி, “அவர் கிளம்பிட்டாரு” என்றான். அதைக் கேட்டதும் மனதில் மெல்லிய நிம்மதி படர, “தங்கச்சியை கூட்டிட்டு தானே!” என ஆசுவாசமாய் கேட்க, “இல்லை டா, நீங்க ரெண்டு பேரும் தனியா பேச வந்தப்பவே அப்பாவை கூட்டிட்டு டேக்ஸி வெச்சு விட சொல்லி ரோகிணி கிளம்பிட்டாங்க. பாவம் அந்த பொண்ணுக்கு இங்க இருக்கவே முடில போல, வந்ததிலிருந்து அவ்வளவு கலகலப்பா இருந்துட்டு இப்படி கிளம்பறத பாக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றான் உண்மையான வருத்தத்தோடு. “என்ன தனியாவே கிளம்பிட்டாங்களா?” என யோசனையில் ஆழ்ந்தவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சந்திரனுக்கு ரோகிணி கிளம்பிவிட்டாள் என்று தெரிந்தததும், சொல்லாமலே சென்று விட்டாளே என்று இருந்தது. உடல்நிலை சரியில்லை என்பது வேறு மனதை உறுத்த, லுனாவிடம் விடைபெற்று, உடனடியாக வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அங்கு தெரிந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த லுனாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சந்திரன் தங்களது குடியிருப்பை அடைந்ததும், கதவை தட்டி விட்டு காத்திருக்க கூட பொறுமை இல்லாமல், தன்னிடம் இருக்கும் சாவியால் கதவை திறந்து உள்ளே சென்றான். ரோகிணிக்கு கொடுத்து விட்டிருந்த உணவு, அங்கிருந்த மேஜை மீது தன்னந்தனியாய் சிரித்திருக்க, அனைத்து விளக்குகளும் எரிந்து வெளிச்சம் பரவிக்கிடந்தாலும், படுக்கையறையில் இருந்த திரைசீலைகளை விளக்கி, நிலவை வெறித்து பார்த்தபடி ரோகிணி நின்றிருந்தாள்.

தான் உள்ளே நுழைவது கூட தெரியாமல், ஜன்னலின் வழியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளையும், அவளது பார்வை செல்லும் இடத்தையும் ஆராய்ந்த சந்திரன் குழப்பமானான். பௌர்ணமி முடிந்து சில தினங்கள் ஆகி இருந்ததால், நிலவு மேல் புறமாக சிறிது தேய்ந்திருந்தது. அவன் வந்து சிறிது நேரம் கடந்த பிறகும் அவள் மௌனம் கலைவதாய் இல்லை, அவனை உணர்வதாகவும் இல்லை. அவளது தோள்களை பற்றி, “ரோ…” என அழைக்க, ரோகிணியின் உடல் சிலிர்த்து, உடனேயே விறைத்தது. அவன் கைகளை விடுவிக்காமல் மெல்ல நகர்ந்து படுக்கையில் அமர, அவன் கைகள் தாமாக விலகி இருந்தது.

அவளின் செய்கையில் குழப்பமடைந்தவன், “என்ன யோசனை?” என்றான் அவளையே ஆராய்ந்தபடி. அவனை நிமிர்ந்து கூட பாராமல், “அந்த நிலவு ஏன் தேயுதுன்னு ஒரு புராண கதை இருக்கும், அதை யோசிச்சேன்” என்று இயந்திரகதியில் ஒரு மெல்லிய பெருமூச்சுடன், கனவில் இருந்து மீண்டவள் போல கூறியவள், பேச்சு முடிந்தது என்பது போல படுத்துக் கொண்டாள். அவள் கூறியதை கேட்ட சந்திரன்தான், அவள் என்ன பேசுகிறாள் என்றும் புரியாமல், ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்றும் விளங்காமல் குழம்பி போனான்.

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: