Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11

    • நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமற் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும் ஒரு நாள் வீடு வந்து பேசினான். அப்போது நான் ”சிறந்த வேதாந்தியான நீர் கேவலம் காமாந்தகாரத்திலே மூழகலாமோ? எவ்வளவு படித்தவர், என் போன்ற கெட்டவளின் சகவாசம் ஆகுமா? வேண்டாம் சோமு விட்டுவிடு. நான் என்ன , என்னைவிட உன் மனைவி அழகு, என்று கூறுகிறார்கள்” என்று நான் சோமுவுக்கு புத்திமதி

 

    • கூறத் தொடங்கினேன்.

 

    • ”காந்தா! வேதாந்தமெல்லாம் போய் வெகு நாட்களாகிவிட்டன. கையில் இருந்த காசில் பெரும் பகுதி அந்த இழவுக்கே அழுது விட்டேன். கடைசியில் ஒரு பணக்காரப் பெண்ணை கலியாணம் செய்து கொண்டேன். ஆனால் வாழ்க்கையிலே ருசி இல்லை. உன்னைக் காண்பதற்கு முன்பும் நான் எத்தனையோ முறை உன்னைப்பற்றி எண்ணி எண்ணி ஏங்கியதுண்டு.”

 

    • ”என்னைப் பற்றிய சேதியைக் கேள்விப்பட்ட பிறகுமா?”

 

    • ”ஆமாம்! நான் தானே உன் நிலை கெட்டதற்குக் காரணம். நான் வீணான வேதாந்தமும், விரசமும் கொண்டு, ஏதோ உலகிலேயே நான்தான் புது நாயன்மார் என்று எண்ணிக்கொண்டு. கலியாணபந்தமே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே, உன்னை நான் கலியாணம் செய்து கொள்ள மறுத்தேன். இந்த ஆறு வருடத்தில் நான் அனேக பாடங்கள் தெரிந்து கொண்டேன். உலகில் வாழ்க்கை இன்பம் இருக்க வேண்டுமானால், மனமொத்த காதலியைக் கூடி வாழ வேண்டும். பாடுபட்டுப் பிழைக்க வேண்டும். பலருக்கு நன்மை தரும் காரியம் செய்ய முயல வேண்டும். வெட்டிக்கு வேதாந்தம் பேசிக் கொண்டு, பணத்தையும், காலத்தையும் பாழாக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. காந்தா நான் மணம் செய்து கொண்டவளுக்கு என்னிடம் ஆசை இருக்கக் காரணமில்லை. எனக்கும் அவளிடம் ஆசை கிடையாது. ஆனாலும் ஏதோ வாழ்ந்து வந்தேன். உன்னைக் கண்டது முதல், நீ அன்று மூட்டி விட்ட காதல் பெரிய ஜுவாலையாகி விட்டது. இனி உன்னோடு வாழ்ந்தால்தான் நான் வாழமுடியும் என்னை நீ ஏற்றுக் கொள்.”

 

    • ”அது எப்படி முடியும்?”

 

    • ”ஏன் முடியாது? என்மீது உனக்கு ஆசை இல்லையா? நிச்சயமாகச் சொல் காந்தா. ஆசை இல்லையென்றால் அடிக்கடி உன்னைக் கண்டு பேச அனுமதிப்பாயா? உன்னைக் கன்னத்தில் அடித்ததைக்கூடப் பொறுத்துக் கொண்டாயே. தோட்டக்காரன் எதிரில் திட்டினேன். பிறகும் என்னிடம் சகஜமாகவே பேசுகிறாயே! இருப்பதை மறைக்காதே என் மீது ஆசை உண்டு உனக்கு முன்பு உன் ஆசையை நான் வீணாக்கினேன். இன்று நம்மிருவர் விருப்பமும் ஒன்று கலக்கட்டும்.”

 

    • ”அதுதானே முடியாது.”

 

    • ”ஏன் காந்தா முடியாது?”

 

    • ”நான் வேறொருவனின் பொருள். என்னை வறுமைப்பிணியிலிருந்து மீட்டு, உலகில் நிம்மதியாக வாழச் செய்யும் மிராசுதாரின் வைப்பாட்டி . ஆமாம் உமது மனைவியாக இருக்கத் தவம் கிடந்தேன். முடியவில்லை வேறு ஒருவன் பெண்டானேன். அவன் விட்டுச் சென்றான். காட்டு ரோஜாவாக இருந்தேன். கவலையில் மூழ்கினேன், துக்கத்தில் துடித்தேன். கஷ்டத்தின் மேல் கஷ்டம் வந்தது. காப்பாற்றவோ ஆதரவு தரவோ , ஐயோ பாவம் என்று சொல்லவோ யாரும் முன் வரவில்லை. குடும்பத் தொல்லை கொட்டிற்று. விஷம் தலைக்கேறிற்று. சோமு! நான் விபச்சாரியாக வேண்டிய நிலையும் வந்தது. நான் குலமாதாக, குடும்ப விளக்காக , உன் தர்மபத்தினியாக இருக்க அவாவினேன். இன்று உனது கண்களை மயக்கும் காம வல்லியாக இருக்கிறேன். பணம் படைத்த நீ என்னை மணந்து கொள்ள மனமின்றி கைவிட்டாய். வேறோர் பணக்காரப் பெண்ணை மணம் செய்து கொண்டாய். வாழ்க்கையிலே வசீகரம் இல்லை என்று இன்று வருத்தப்படுகிறாய். ஏற்பாரற்று கிடந்த ஏழையாகிய நான் விதவையாகி வேதனைப்பட்டபோது எனக்கு வாழ்வு என்ற ஒன்று இருக்க முடியுமா? என் இளமையும், அழகையும், அன்பையும், ஆவியையும் உனக்கு அர்ப்பணம் செய்ய நான் முன் வந்தேன். உன் காலடியிலே வைத்தேன். நீ உதைத்துத் தள்ளினாய். இப்போது என்னை அடையவேண்டுமென்று அலைகிறாய், என் மனம் அந்நாட்களில் பட்ட பாடு என்ன என்பது உனக்குத் தெரியுமா? ஒரு பெண் தன் கூச்சத்தையும் விட்டு தன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி கடிதம் எழுதவும் துணிந்தாள் என்றால் அவளுடைய விருப்பம் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாயா? பணக்கார குடும்பத்தவராக இருந்தால் உமக்கு உள்ளம் என்ற ஒரு வஸ்து இருக்கும் என்பது கூடத் தெரியாது போயிற்று.

 

    • பணம் குறையக் குறைய நீர் உமது வைராக்கியத்தை விட்டு, ஒரு பெண்ணை மணந்து கொண்டீர். அன்று என்னை உதறித் தள்ளினீர். இன்று என்னைத் துரத்திக் கொண்டு வருகிறீர். ஆனால், உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன். எனக்கு இப்போது வாழ்க்கையைப் பற்றிய கவலை இல்லை. வேண்டியதைப் பெறப் பணம், ஏவல் புரிய ஆட்கள், சிங்கார மாளிகை, செல்வச் சாமான்கள், நகைகள், நாசூக்குகள் எல்லாம் காத்துக் கொண்டு கிடக்கிறேன், என் முகத்தைத் தனது ‘மோட்ச லோகம்’ என்று கருதும் ஒரு சீமானின் ஆதரவில் நான் இப்போது இருக்கிறேன். நீ என்னைத் தொலைவில் நின்று, கண்டு பெருமூச்செறியலாமே தவிர, அடைய முடியாது. நான் மாடியில் நிற்கிறேன். நீ படிக்கட்டில் நிற்கிறாய். நான் முன்பு அபலை. அப்போது ஆதரிக்க முன் வரவில்லை , நீ . இப்போது நான் உன்னை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் மிராசுதார் என்னாவது…”

 

    • “அவன் மண்டையில் இடி விழட்டும் எனக்கென்ன?”

 

    • ”உமக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்கு?’

 

    • ”உனக்குப் பணத்தின் மீது அவ்வளவு பேராசையா பிடித்து விட்டது?”

 

    • ”பேராசையல்ல! அதன் அருமையைத் தெரிந்து கொண்டேன். அடைந்து இருக்கிறேன் அதை இழக்க மனம் வருமா?”

 

    • ”பணந்தானா பெரிது?”

 

    • ”சந்தேகம் என்ன? வாழ்க்கையில் பணம் பிரதானமாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. ஏழையென்றும், பணக்காரரென்றும் இரு ஜாதிகள் உலகில் இல்லாமல் ஒரே ஜாதியாக இருந்தால், இந்த எண்ணம் எனக்கும் இராது. இந்தக் கேள்வியும் பிறந்திராது. பணமின்றி எங்கள் குடும்பம் பாடுபட்டபோது, பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக் கொண்டு, எங்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லையே. பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதானே நான் பரிமளத்தோடு வாழ முடிந்தது என்று கூறினேன். சோமு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததைக் கண்டேன். என்னால் அதற்கு மேல் பிடிவாதம் செய்ய முடியவில்லை . ஆகவே, நான், ”அழாதே கண்ணா, நான் உன்னை அதிகமாகத்தான் வாட்டி விட்டேன். இதோ பார்! கொஞ்சம் சிரி , இன்னமும் ஏன் துக்கம். இதோ போதுமா, இன்னொரு முத்தம் தரட்டுமா. ஆஹா முகத்திலே இப்போது தானே சந்தோஷம் தோன்றுகிறது. சோமு. இப்படி உன்னைத் தழுவிக் கொண்டு கொஞ்சிக் குலவ நான் எவ்வளவு நாட்கள் எண்ணி எண்ணிக் கிடந்தேன் தெரியுமா . வியர்வையைத் துடைத்துக் கொள். இதோ முந்தானையால் துடைத்துக் கொள். இனி உனக்கு நான் விருந்தாக இருப்பேன். பயப்படாதே. மிராசுதாரர் கண்களில் படக்கூடாது. விஷயம் அவர் காதுக்கு எட்டக் கூடாது. கொஞ்சம் ரகசியமாக இருக்கட்டும். ஆனால் நீ தான் என் ஆசை நாயகன் , என் இன்பக் களஞ்சியம், என் உல்லாசப் புருஷன் , என் உயிருக்குயிர், ஏன் இன்னமும் விம்முகிறாய் கண்ணே ! இதோ பார். இப்படி இருந்தால் நான் மறுபடியும் கோபித்துக் கொள்வேன் பார், பார் மடியிலே படுத்துக் கொண்டாயே. என் மடிதான் உனக்கு மஞ்சமா? என்று சோமுவிடம் கொஞ்சி விளையாடினேன். என்னிடம் தஞ்சமடைந்த சோமு என் இதழ் சுவைத்தான், முத்தம் தந்தான், இன்ப ஆற்றிலே நீந்தினோம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அடைய முடியாமற் சோமு இன்று என்னிடம் அடைக்கலம் புகுந்து விட்டான் அடிமை நம்பர் இரண்டு என்று என் மனதிலே பதிவு செய்து கொண்டேன்.

 

    • சோமுவும் நானும் மிக்க சல்லாபத்தோடு சில நாட்கள் உதகமண்டலத்தில் இருக்க முடிந்தது. மைசூர் ரேசுக்குச் சென்றிருந்த மிராசுதார் பலத்த நஷ்டத்துடன் உதகை வந்தார். சென்னைக்குப் பயணமானோம். சோமு நியூ மோடார் கம்பெனியின் சென்னை ஆபிசுக்கு வேலையை மாற்றிக் கொண்டு சென்னை வந்து சேர இரண்டு மாதங்கள் ஆயின், அதுவரை எங்களின் இன்பக் கணைகளாகக் கடிதங்கள் இருந்தன. காதல் சுவை சொட்டச் சொட்டக் கடிதம் எழுதுவார் சோமு. நானும் மன மகிழ்ச்சியை அவருக்குத் தெரிவிப்பேன். இருவரும் ஆவலோடு ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொள்ளும் நாளும் வந்தது.

 

    • சோமுவின் வரலாற்றைக் கூற மறந்து விட்டேனே. அடைந்த ஆனந்தத்தில் அதை மறந்தேன். என்னை வெறுத்து வேதாந்தத்தை துணைக் கழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரைக்கு கிளம்பின சோமு, மோட்டார் ஏஜண்டாகி மோகணாஸ்திரத்தால் தாக்கப்பட்டு என்னை வந்தடைவதற்கு முன்னால் பரம் பொருளை நாடி பல பல குருமாரை அடுத்தாராம், வேதாந்தம், சித்தாந்தம் பயின்றாராம். பூசைகள் பலப்பல செய்தாராம். ஒவ்வொரு குருவும் ஒவ்வோர் விதமான வழி காட்டினார்களாம். ஆண்டவனைக் காண. ஒவ்வொரு வழியும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாயை விழுங்கிற்றேயொழிய, ஆண்டவ தரிசனம் ஆலயத்தில் காண்பதோடு நின்று விட்டதாம். லோகமே மாயை, வாழ்வதே அநித்தியம் என்று போதித்த குருமார்கள், ரொக்கத்தைப் பற்றி அக்கரை கொண்டதையும் ஒரு பூசா முறையை மற்றோர் பூசா முறைக்காரர் குறை கூறுவதையும் ஒரு தத்துவத்தைக் கூறி. மற்றோர் தத்துவத்தை ஒருவர் போதிப்பதையும், எல்லா தத்துவக்காரரும் பணத்தினிடம் மட்டுமே பரமபக்தி கொண்டிருப்பதையும் சோமு தெரிந்து கொள்ள நெடுநாட்கள் பிடித்தனவாம். அனுமத் உபவாசிகளாம் மாகாளியைக் கூப்பிட்ட போது வரவழைக்கும் மகா மந்திரவாதிகளாம் மற்றும் யாராரோ. சோமுவுக்கு இருந்த மதப் பித்தை சாக்காக வைத்துக் கொண்ட மட்டும் கொள்ளையிட்டுக் கொழுத்தார்களாம். பணம் குறையக் குறைய தாயின் திட்டு அதிகரித்ததாம். இவரின் புத்தியும் துலங்கிற்றாம். பிறகுதான் வடநாட்டில் உள்ள ஒரு வக்கீலின் மகளை மணந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினார். தாயும் காலமானார்கள். பம்பாயில் மோட்டார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு அமர்ந்தார். அதன் உதகை பிராஞ்சுக்கு சீசனுக்காக தன் மனைவியுடன் வந்திருந்த போதுதான் என்னைக் கண்டார்.

 

    • சென்னையிலிருந்து சோமு வந்த பிறகு மிராசுதார் , கண்களுக்குத் தெரியாதபடிதான் எங்கள் சந்திப்பும் சல்லாபமும் இருந்து வந்தன. ஆனால் நாங்கள் மிராசுதாரின் கண்களை ஏய்த்தோமே தவிர, காதை அடைத்து வைக்க முடியுமா? மிராசுதார், அடிக்கடி என்னிடம் உறுமத் தொடங்கினார். சோமுவிடம் கூறும் போதெல்லாம், ”கிடக்கிறான் தள்ளு, நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று தைரியமூட்டலானார். மிராசுதார் என் மீது கொண்டிருந்த ஆசை இந்த வதந்திகளால் மட்டும் குறைந்து விட்டதாகக் கூறுவதற்கில்லை. அவருடைய பொக்கிஷமும் வறண்டு வரத் தொடங்கிற்று. ஆகவே சோமுவிடம் நான் காசு எதிர்ப்பார்த்து நேசங் கொள்ளவில்லை என்ற போதிலும், அவராகப் பணம் தரும் போது கூறிவிட மனம் வரவில்லை . ருக்குவின் தோடும் தொங்கட்டமும், நோட்டும் ரூபாயுமாக மாறின. அவளது தங்கச் சங்கிலியும், தாழம்பூ வளையலும் என்னிடம் பண ரூபத்திலே வந்தன. இவைகளை சோமு கூறவில்லை, நான் கேள்விப்பட்டது. தனது மனைவியிடம் தொந்தரவு செய்து நகைகளைக் கழற்றி விற்று எனக்கு பணம் தருவதாகக் கூற சோமு எப்படி சம்மதிப்பார்? நான் கேட்கும்போதெல்லாம் இந்த மாதத்தில் கமிஷன் அதிகம் கிடைத்தது என்று பொய் கூறுவார். அவருக்கு அவரது மனைவி, நான் இருந்திருக்க வேண்டிய இடத்தில் வந்து நின்றவள் – நகைகளை மட்டுமா இழந்தாள், பாவம் கலங்கியிருப்பாள். கதறியிருப்பாள். நான் என்ன செய்வது? நான் வாழ வேண்டுமானால், இதைக் கவனித்தாலா முடியும்? பிறர் அழ , அதுதான் வாழும் பேர் வழி உலகில் நான் ஒருத்திதானா? வட்டிக்காரர்கள் வாழ்கிறார்களே. நான் மட்டும் ஏன் வீண் வேதாந்தம் படித்தும் பாழ்பட வேண்டும். ஒருவர் வாழ மற்றொருவர் பாழாக வேண்டுமா என்று என்னைக் கேட்டால் கூடாது என்றுதான் சொல்லுவேன். ஆனால், நீ வாழ்வது அவ்விதமாக இருக்கிறதே ருக்கு தன் கணவனை பிரிந்து வாழுகிறாளே. நகைகள் போய் விட்டன என்று நொந்து கொள்கிறாளே. அவளுடைய கஷ்டத்துக்கு நீதானே காரணம். அவள் அழ , நீ சிரித்துக் கொண்டு சிங்காரியாக வாழ்கிறாயே, தகுமா? என்று கேட்பீர்கள். நான் சொல்லுகிறேன். தகாதுதான். ஆனால் என்னைக் கேட்கிறீர்களே, மற்றவர்களைக் கேட்பதுதானே பலருடைய சிங்கார வாழ்வு இவ்விதமாகத்தானே இருக்கிறது? என்னைப்போல் இன்பத்தை விற்பவரைத்தானே குறை கூறுகிறீர்கள். இதையும் கொடாது ஏய்த்துப் பிழைக்கும் பேர்வழிகள் ஏழைகளின் ஏமாளித்தனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சொகுசாக வாழ்வோர் இல்லையா? இதோ என் மிராசுதாரரின் வாழ்வு இன்பமயம், அவரது பண்ணையாள் பகல் பட்டினி. இதையும் கேளுங்கள், இத்தகைய முறையே கூடாது என்று சொல்லுங்கள். உலகத்தை ஒழுங்காக அமைத்து விடுங்கள். நான் மட்டுமா? ஏய்த்துப் பிழைக்கும் எவருக்கும் இடமில்லாதபடி செய்து விடுங்கள். அது நல்லது என்பேன், என்னை மட்டும் தண்டித்து விட்டு பிறரைச் சும்மா விட்டுவிடுவதென்றால்,

 

    • அது தகாது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14

உனக்கென நான் 14 போஸ் முதலில் காரின் அருகே வந்து நிற்க சன்முகம் மூச்சுக்காற்றை நுரையீரலில் வேகமாக பாய்ச்சிகொண்டே காரின்மீது இரூகையையும் வைத்து நின்றார். கார் தடம்புரண்டு விடும் என்று நினைத்தார் போலும். அதுவரை தன் மனதை பறிமாறிகொண்டிருந்த இருவரும் விலகி

காதல் வரம் யாசித்தேன் – 12காதல் வரம் யாசித்தேன் – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு. [scribd id=301019435 key=key-Wo3jTnMKpvsZsGTpxoU6 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.  

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 07

எனக்குத் திருமணம் நடந்தது. திவ்வியமான நாளாம். மங்களமான முகூர்த்தமாம். மங்களத்தின் லட்சணம் மறுமாதமே தெரிந்துவிட்டது. கழனியைச் சுற்றிப் பார்த்து விட்டு வரச் சென்ற கணபதி சாஸ்திரிகள் – என் கணவர் கால் வழுக்கிக் கீழே விழுந்து சில நாட்கள் படுக்கையில் இருந்து