Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 09

சந்திரனை வேறொரு பெண்ணோடு பார்த்த ரோகிணியின் மனம் அவனை தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. ‘என்ன இது, இந்த நேரத்தில் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காம இங்க இருக்காரு… இவருக்கு ஷாப்பிங் வர எல்லாம் நேரம் இருக்குமா? மனுஷனுக்கு பொண்டாட்டியை விட பிரண்ட்ஸ் கூட இருக்கிறது தான் ரொம்ப பிடிக்கும் போல!’ என்று தான் நினைக்கத் தோன்றியது. இன்னும் தன் கணவனைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லையோ! என்று மனம் யோசிக்க, புரிதல் என்ன அவனைப்பற்றி என்ன தெரியும்? திருமணமாகி இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் எதையும் தெரிந்து கொள்ள முடிந்ததில்லையே! என்று மனம் உண்மையை உரைக்க கலங்கி தான் போனாள். கூடவே, நம்மை அவனுக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா என்ற ஆராய்ச்சி வேறு! இது அவ்வப்பொழுது எழுவது தான், இன்றுவரையிலும் தெளிவான விடை கிடைத்ததில்லை.

‘சந்திரனுக்கு ஏற்றாற் போல இன்னும் என்ன மாற வேண்டும்? இந்த வாழ்வை நிலைப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் அவ்வப்பொழுது சிந்தனைகள் ஓட, அவள் உலகம் இயங்காமல் நின்றுவிடும். அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ்ஸிங்ஸ், ஹேர் ஸ்டைல், இன்னும் சொல்லப்போனா அவர் கேட்டுக்கற மாதிரி இண்டிபென்டன்டாவும் (independent) இருக்கேன்… நானே கடைக்கு போறது, வெளில போறதுன்னு எதுக்கும் அவரோட துணையை எதிர்பார்க்கிறது இல்லை, அதோட ரொம்ப முக்கியமா இப்போ எல்லாம் தனியா இருக்க பயப்படறது இல்லை. வேற என்ன? இன்னும் வேற என்ன பண்ணனும்? ஏன் தண்ணி அடிக்கிறாங்க? ஏன் என்கூட சரியா ஒட்டாத மாதிரி தோணுது? ஒருவேளை கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகுமா? ஒரு குழந்தை பிறந்தா இன்னும் அன்னியோன்யம் அதிகமாகுமோ? ஏதேதோ எண்ணம் செல்ல, எண்ணங்களின் போக்கு குழந்தையில் வந்து இளைப்பாறும். சமீப காலமாய் குழந்தைக்காக வெகுவாக ஏங்கிப் போனாள்.

அந்த ஏக்கம் இன்னும் அதிகரித்தது தனசேகரன் தம்பதியர் அழைத்திருந்த பிறந்தநாள் விழாவில் கொழுக் மொழுக் என்றிருந்த அந்த சின்ன தேவதையை பார்த்ததும். ரித்திகா, அவளுக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடலாம் என்று தோன்றி விட்டது ரோகிணிக்கு. பொக்கை வாய் சிரிப்பும், சுருள் சுருளாய் அடர்ந்திருந்த கேசமும், பால் கன்னமும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. அவளை விட்டால் பார்த்துக் கொண்டே இருப்பாள். விருந்து என்று வந்தாயிற்று அதிகம் யாரையும் தெரியாது, இந்த தேவதையை பார்த்த பின்னர் தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. குழந்தை கண் பார்வையில் தெரியும் இடத்திலேயே சுற்றி சுற்றி வந்தாள். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், உடனே சென்று உதவினாள்.

விருந்தாளிகளை கவனிக்க குழந்தையின் பெற்றவர்கள் ரவியும், லலிதாவும் செல்லும் நேரம் எல்லாம் குழந்தையை இவள் பார்த்துக் கொண்டாள். அந்த தம்பதியருக்கு ரோகிணியை மிகவும் பிடித்துப் போனது. தனசேகரன் தம்பதியனரோடு அவர்கள் இருவரும் அவளிடம் மிகவும் நன்றாக பேசினார்கள். தனித்து வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் உடனேயே வைத்துக் கொண்டனர். “என்ன ரோகிணி உங்க வீட்டுக்காரரை அழைச்சுட்டு வருவேன்னு நினைச்சேன்” என விசாலம் அம்மா குறைபட, அவளுக்கு சங்கடமாய் இருந்தது. “மன்னிச்சுடுங்க மா. முடிஞ்சா இன்னொரு முறை கூட்டிட்டு வரேன்” என்றாள் சமாளிப்பாக. என்ன நினைத்தாளோ அவனுக்கு வேலை, வரமுடியவில்லை அது, இதுவென்று மழுப்பவில்லை. அப்படி மழுப்பி இருந்தால், இன்னும் சற்று நேரத்தில் வரவிருக்கும் அவளுடைய கணவனை என்னவென்று அறிமுகம் செய்திருக்க முடியும்?

“சரி சரி அதுக்குன்னு முகம் வாடாத, நீ முகம் வாடுனா இவரு என்னமோ நான் உன்னை கொடுமை படுத்திட்ட மாதிரி சண்டைக்கு வந்துடுவார்” என்றார் கணவரைப் பார்த்தபடி. “பாத்தியா ரோகிணி நான் சண்டை கட்டறேனாம். இவ செய்யாத தப்புக்கு திட்டு வாங்கற மாதிரி நல்லவ மாதிரியே பேசறத பாரேன். ஒன்னையும் உருப்படியா பண்ண மாட்டா” என்று தனசேகரன் ஐயா விசாலம் அம்மாவை மட்டம் தட்டி ரோகிணியிடம் புகார் வாசிக்க, அவளுக்கு வழக்கம் போல நல்ல வேடிக்கை தான். ஒருவேளை தன் தந்தை உயிரோடு இருந்திருந்தால், அவரும் அன்னையும் கூட இப்படி தான் ஒற்றுமையாக இருந்திருப்பார்களோ என்று அவ்வப்பொழுது எண்ணம் எழும். ஆம், இவர்கள் பொய்சண்டை போட்டாலும், அதனுள் மறைந்திருக்கும் ஓர் உரிமையும், அன்னியோன்யமும் அவளை வெகுவாய் வசீகரிக்கும். தன் கணவனிடம் பேசுவதற்கே ஒத்திகை பார்ப்பவளுக்கு இவர்களின் செய்கைகள் எப்பொழுதும் ஆச்சர்யம் தான்.

மேடையின் அருகேயே இருந்தவள், சிறிது நேரத்தில் அந்த விழாவிற்கு வருகை வந்த கணவன் சந்திரனை கண்டு பெரிதாக அதிர்ந்தாள். அதிர்வுக்கு அதிமுக்கிய காரணம் அவனுடனேயே இழைந்து, குலைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டு யுவதியின் செய்கைகள் தான், அது அவளை முகம் சுளிக்க வைத்தது. கணவன் கண்ணியமானவன் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த செய்கை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அங்கிருந்த பெரும்பாலானோர் இப்படிதான் இருந்தனர் என்பதை பார்வையால் அலசியவளுக்கு என்னவோ அருவருப்பாய் இருந்தது. இவளின் முகம் போன போக்கை இரண்டு தம்பதியர்களும் பார்த்து விட்டனர். “ரோகிணி நீ புதுசா வந்திருக்கல்ல அதான் உனக்கு இப்படி இருக்கு. நீ வேற பார்ட்டிக்கு போனதில்லையா?” என லலிதா ஆதரவாய் கேட்க, மறுப்பாய் தலையசைத்தாள்.

“அதான் தெரியலை போல, உன் வீட்டுக்காரர் பரவாயில்லை உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரிஞ்சு அவரு மட்டும் போயிப்பாரு போல, இவரு இருக்காரே கூட கூட்டிட்டே சுத்துவாரு. இதெல்லாம் பாத்து… சகிச்சு… பழகறதுக்குள்ள… அப்பப்பா!” என அந்த நாளின் நினைவுகளுக்கே சென்று மீண்டு வந்த லலிதாவை பார்க்கும் பொழுது பாவமாய் இருந்தது. இன்று, தான் அனுபவித்ததைத்தானே முன்பே அனுபவித்திருக்கிறாள் பாவம் என பரிதாபப் பட்டாள். ஆனால், ரோகிணி அனுபவிப்பது இன்னும் ஒரு படி மேல் அல்லவா! இந்த முகசுளிப்பு சொந்த கணவனையும் பார்த்து அல்லவா? சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் எதையோ அவசரமாய் வாயில் அடைத்துக் கொண்டு முழுங்க முடியாமல் அவதிப்படுவதைப் போன்று பரிதவித்தாள்.

இதற்குள் லலிதா சொன்ன குற்றச்சாட்டை கேட்ட ரவி, “இல்லை ரோகிணி இவ சொல்லற மாதிரி எல்லாம் இல்லை. என்னால போகாம அவாய்ட் பண்ண முடியாது, சரி இவளையும் கூட்டிட்டு போயிடுவோம் நினைச்சா, என்ன பேச்சு பேசறா பாரு” என மனைவியை முறைக்க, அப்படியே மூத்த தம்பதியர் போன்று, எத்தனை அன்னியோன்யம் என எண்ணியவளுக்கு தன் நிலையை எண்ணி கண்கள் கரித்தது. அவளையும் அறியாமல், “உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?” என ஏக்கமாய் கேட்க, “மூணு வருஷம் ஆச்சு ரோகிணி. ஏன் கேக்கிற?” என்றான் ரவி.

ஒன்றும் இல்லை என்பதாய் தலையசைத்தவள், நமக்கு ஒரு ‘வருஷம் தானே ஆகி இருக்கு. நாமளும் சீக்கிரம் இப்படி மாறிடுவோம்’ என்று குருட்டு நம்பிக்கை வைத்து ஆறுதல் அடைந்தாள் ரோகிணி. ஆந்த எண்ணம் எழும்பொழுதே மனம் அதிர்ந்தது. ‘என்ன ஒரு வருசமா?’ என மனம் அதற்குள் கணக்கிட, ஆம் இன்னும் சில வாரங்களில் அவர்களுடைய திருமண நாள் என்று புரிந்தது. பிறந்த நாள்களின் கதியே திக்கு முக்காடி போயிருக்க, வேதனைப்பட இதுவும் வந்துவிட்டதா என்று மனம் இருண்டது. யாரேனும் அவளிடம், முதல் திருமண தினம் வருவதே உனக்கு பிடிக்காது, வெறுப்படைவாய் என்று கூறியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருந்திருப்பாள். ஆனால், அதுவன்றோ அவளின் இன்றைய நிலை. யாரும் அறியாத, யாராலும் பெற முடியாத நிலை.

அதற்குள் லலிதாவும் கணவனை முறைத்து நிற்க, அப்பொழுது தான் கவனித்தவளாய், “என்னங்க அது லுனா தானே, அந்த இந்தியன் டாக்டர் இன்னும் இவ கூட தான் இருக்கான்னு சொன்னேன் கேட்டீங்களா? இப்போ பாருங்க” என்று சந்திரனையும், லுனாவையும் காட்டினாள். லுனா இவர்கள் குடியிருப்பில் தான் தங்கி இருக்கிறாள். லலிதா யாரை சொல்கிறாள் என்று ரோகிணியும் கவனித்திருந்தாள்.

“ஹே! ஆமா. ஆனா அர்ஜுன் சொன்னானே இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு. அதுக்கு தகுந்த மாதிரி இவ பிளாட்ல இவனை பாக்கவே முடியறதில்லையா, அதான் அப்படி நினைச்சிட்டேன்” என்றான் ரவி ஆச்சர்யமாக. அர்ஜுன், சந்திரனின் கல்லூரி நண்பன், தற்பொழுது அவன் பணிபுரியும் மருத்துவமனையில் தான் பணியில் இருக்கிறான். அர்ஜுனும் இதே குடியிருப்பில் தான் தங்கி இருக்கிறான்.

“என்னமா இவங்களுக்கு பேரு தான் லிவ்விங்-ஆ?” என அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் படி விசாலம் அம்மா மருமகளின் காதை கடிக்க, மாமியார் கூட இங்கு அடாப்ட் ஆகி விட்டார் என்று எண்ணிய லலிதாவிற்கு புன்னகை பூத்தது. “லிவ்விங் அப்படின்னா என்ன லலிதா?” என படபடப்போடும், சோர்ந்த தோற்றத்தோடும் ரோகிணி கேட்க, அவள் நிலையை சரியாக கவனிக்காமல் ஊர்வம்பு பேசுவதில் அவர்கள் மும்மரமானார்கள். “லிவ்விங் னா லிவ்விங் டுகெதர் சொல்லுவாங்க தானே, அது தான். ஆனா, இவங்க லிவ்விங் இல்லை பெனிபிட்டேட் பிரண்ட்ஸ்” என்றாள் லலிதா.

“அதென்ன லலிதா புதுசா?” என மாமியார் சந்தேகம் கேட்க, “அத்தை போன வாரம் தான சொன்னேன். ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் மட்டும் தான், லவ் இல்லை, ஒரே வீட்ல ஒண்ணா இருக்கணும் இல்லை, கல்யாணம் அவசியமில்லை, வேற யாரையும் லவ் பண்ண தடை இல்லை, எப்போ வேணா விலகிக்கலாம். அதோடு தப்பும் பண்ணிக்கலாம்” என்றாள் கிசுகிசுப்பாய். கேட்ட ரோகிணிக்கு தலையில் பெரிய பாறாங்கல் விழுந்ததைப் போன்று ஆயிற்று. கட்டுப்பாடின்றி கண்ணீர் விழ, பதறிப் போன இருவரும் “என்ன ஆச்சு ரோகிணி?” என அவசரமாக கண்ணீரை துடைத்து விட, முயன்று கண்ணீரை அடக்கியவளுக்கு என்ன பதில் சொல்ல என்றே தெரியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என அச்சுறுத்திய கண்ணீர் வேறு பயம் காட்டியது.

அதீத தவிப்போடு அவள் நின்றிருக்க, “ரோ…” என்னும் அழைப்பு அவர்களுக்கு வெகு அருகினில் கேட்டது. அங்கிருந்த ஐவரும் ஒருசேர திரும்ப அங்கே சந்திரன் புன்னகையோடு நின்றிருந்தான். “இங்க என்ன பண்ணற?” என புன்னகை முகமாய் கேட்டவன், “ஓ! இந்த பார்ட்டி தான் அன்னைக்கு சொன்னியா?” என்றான் மீண்டும். பேசும் நிலையிலா அவள் இருக்கிறாள் ‘ஆம்!’ என்று தலையசைத்தாள், அவனை நேர்கொண்டு பார்ப்பதை தவிர்த்தபடி. அவனை மட்டும் இல்லை, சூழ இருந்த யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்க இயலவில்லை.

அந்த நேரம் பார்த்து விழாவிற்கு சற்றே தாமதித்து வந்திருந்த அர்ஜுன் அதிவேகமாய் மேடைக்கு வந்து, “சாரி சாரி ரவி, நேரம் ஆயிடுச்சு” என ரவியிடம் மன்னிப்பு கேட்டபடி, அங்கிருந்த ரோகிணியையும், சந்திரனையும் பார்த்தவன், “என்ன மச்சான் ஒருவழியா தங்கச்சியை கூட்டிட்டு பர்த்டே பார்ட்டிக்கு வந்து இருக்க? பெரிய அதிசயம் தான்” என்று சந்திரனிடம் கேட்டவன், ரோகிணியைப் பார்த்து, “என்னமா நல்லா இருக்கியா?” என்றான். கேட்ட பிறகே அங்கிருந்த கனமான சூழ்நிலையை ஆராய்ந்தபடி, “உனக்கு ரவியை எப்படி தெரியும்? நீ எப்படி வந்த?” என்று சுற்றம் ஆராய, அங்கே லுனா தென்பட்டாள். அர்ஜுனின் ரௌத்திரம் அதிகரிக்க, நண்பனின் மீது கடும் கோபம் எழ, ரோகிணியை ஆராய்ந்தான். தலையை கூட நிமிராமல் அவள் நின்றிருந்த தோற்றத்தை பார்க்கவே அவனுக்கு பாவமாய் இருந்தது.

3 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: