Tamil Madhura கல்கியின் 'ஒற்றை ரோஜா' கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

    • என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.

 

    • பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் வைரம் போனாலும் போகிறது. பெண் உயிரோடு பிழைத்தாளே, அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கிறேன்!” என்றார்.

 

    • “அவள் உயிருக்கு என்ன ஆபத்து வந்தது?” என்று கவலையுடன் கேட்டேன்.

 

    • “தெரியாதா? இதோ பாருங்கள்!” என்று சொல்லி ஒரு கடிதத்தை நீட்டினார். அது மனோகரி அவளுடைய தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதம். மனோகரி இலங்கையில் ஏதோ ஒரு பரீட்சைக்குப் போனதாகவும், அதில் அவள் தேறவில்லையென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

    • “பரீட்சை தேறாத அவமானத்தை என்னால் சகிக்க முடியாது. உயிரை விட்டுவிடத் துணிந்து விட்டேன். இங்கேயே இருந்து அப்பாவுக்குத் துயரம் கொடுக்க விரும்பவில்லை. வைரத்தைப் பொடி பண்ணிச் சாப்பிட்டால் உடனே உயிர் போய்விடும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்பாவின் வைரம் ஒன்றை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போய் உயிரை விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். என் உண்மையான சிநேகிதி நீ ஒருத்திதான். ஆகையால் உனக்கு மட்டும்….”

 

    • கடிதத்தை இதற்குமேல் நான் படிக்கவில்லை.

 

    • “ஐயையோ! என்ன காரியம் செய்துவிட்டேன்!” என்று பதறி எழுந்தேன்.

 

    • “என்ன? என்ன?” என்று மனோகரியின் தந்தையும் பதறிக்கொண்டு எழுந்தார்.

 

    • “வைரம் என்னிடந்தான் இருந்தது. இப்போதுதான் தங்கள் மகளிடம் போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தேன்” என்றேன்.

 

    • “அடப்பாவி! என்ன காரியம் செய்தாய்! என் குடியைக் கெடுத்துவிட்டாயே!” என்றார் அந்தப் பெரியவர்.

 

    • அவர்கொண்டு வந்திருந்த ‘டாக்ஸி’யில் ஏறிக் கொண்டு இருவரும் பறந்து சென்றோம்.

 

    • என் நெஞ்சு அந்தச் சில நிமிஷங்களில் எப்படித் துடித்தது என்று சொல்லவே முடியாது.

 

    • அந்த அழகிய பொன் மேனியைப் பிணமாகத் தான் காணப்போகிறோம் என்று எண்ணிப் பதை பதைத்தேன்.

 

    • ஆனால் என்ன சந்தோஷமான ஏமாற்றம்! ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சமீபமாகச் சென்றபோது, அறைக்குள்ளிருந்து குதூகலமாகப் பாடும் குரல் கேட்டது.

 

    • உள்ளே நாங்கள் இருவரும் சென்று விழுந்தோம். எங்களுக்குத்தான் உயிர் போய்விடும் போலிருந்தது.

 

    • “வைரம் எங்கே?” என்று இருவரும் ஒரே காலத்தில் கேட்டோம்.

 

    • மேஜையை அவள் சுட்டிக் காட்டினாள். அங்கே அது வானத்தில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

 

    • “எதற்காக இந்தப் பரபரப்பு” என்று கேட்டாள்.

 

    • “எங்கே இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பது போல் செய்துவிடுவாயோ என்றுதான்.”

 

    • “அதற்கு இனி அவசியம் இல்லையென்று தான் இவரிடம் சொன்னேனே! இந்த மனிதர் மூன்று தடவை பி.ஏ. பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார். ஒரு தடவை தோற்றதற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்?” என்றாள் மனோகரி.

 

    • ஆரம்ப அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஒருவாறு அடங்கிய பிறகு மனோகரியின் தகப்பனார், “இந்தப் பெண்ணைச் சமாளிக்க இனி என்னால் முடியாது; நீர்தான் இவள் உயிரைக் காப்பாற்றினீர். இனியும் இவளை நிர்வகிக்கும் பொறுப்பை நீர் தான் ஏற்க வேண்டும்?” என்றார்.

 

    • “கடவுளே! என்னால் எப்படி அது முடியும்? இந்நாளில் பசிக்கு அரிசி கிடைப்பதே துர்லபமாயிருக்கிறது. நானோ ஏழை. இவளுடைய பசிக்கு வைரம் எப்படி வாங்கிக் கொடுப்பேன்! அதுவும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் வைரமா? ஒன்றரை லட்சம் ரூபாய் வைரங்களுக்கு நான் எங்கே போவேன்?” என்றேன்.

 

    • மனோகரியின் தகப்பனார் இப்போது தான் முதல் தடவையாகக் கடகடவென்று சிரித்தார். “நான் கூட வைர வியாபாரத்தை விட்டுவிடப் போகிறேன். இந்தப் பெண் இருக்குமிடத்திலேயே வைரம் வைத்திருக்கப்படாது!” என்றார்.

 

    • எங்கள் திருமணத்தின்போது மனோகரி தன் வாக்குறுதியை நிறைவேற்றினாள். மணமுள்ள புது ரோஜா மலர்களால் கட்டிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.

 

    • மனோகரி வைர நகை மட்டும் அணிவதில்லை. எங்கள் வீட்டிலேயே வைரம் வைத்துக்கொள்வதில்லை. எதற்காக அத்தகைய விஷப்பரீட்சை பார்க்க வேண்டும்?

 

    • என்ன கேட்கிறீர்கள்? “பி.ஏ. பரீட்சை என்ன ஆயிற்று?” என்று கேட்கிறீர்களா? – எங்கள் திருமணம் நடந்தவுடனே முதற்காரியமாக பாபநாசத்துக்கு மறுபடியும் போனோம். அங்குள்ள இனிய நதி வெள்ளத்தில் இருவரும் கைகோத்துக் கொண்டு இறங்கி எல்லாப் பரீட்சைகளுக்கும் சேர்த்து முழுக்கும் போட்டோம்.

 

    நதிக்கரை மரங்களில் வாழ்ந்த பட்சிகள் எங்கள் செயலை ஆமோதித்து மங்கள கீதம் பாடின.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 2கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 2

என் வண்டியில் ஏறிய மனிதர் “அப்பா! பயங்கரம்!” என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.  

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3

திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. “சிறுமலை வாழைப்பழம்”, “சாம்பார் சாதம்” “பிரியாணி” என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 1கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 1

ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத்