Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 08

கர்வமான மனிதர்களிடம் நமது கர்வத்தை வெளிப்படுத்தலாம். அதில் தவறேதுமில்லை. ரோகிணிக்கும் கணவனின் அலட்சியமும், அவமதிப்பும், கேலியும் துளியும் பிடிக்கவில்லை. ‘இதெல்லாம் அவ்வளவு அத்தியாவசியமா?’ என்ற எண்ணம் வர, நிமிர்வும் வந்திருந்தது. அதே நிமிர்வோடு கர்வமாக புன்னகை செய்தாள்.

ஆனால் சந்திரனுக்கு ரோகிணியின் புன்னகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை போலும். உண்மையில் இப்பொழுது அவன் பேசியது கூட லுனா அவனுள் புகுத்தியிருக்கும் விஷயங்களின் தாக்கத்தால் மட்டுமே! மற்றபடி அவனைப் பொறுத்தவரையிலும், இது அவளின் குறையை சுட்டிக்காட்டும் முயற்சி தானே அன்றி, அவளை மட்டம் தட்டும் எண்ணம் அவனிடம் துளியும் இல்லை.

லுனா நல்ல அழகி, அவளுக்கு சந்திரனின் நட்பு மிகவும் பிடித்திருந்தது. சந்திரன் அவளின் ரசனைக்கேற்றவன், தொல்லையற்றவன், பணம் செலவழிப்பதப்பற்றி கவலைப்படாதவன், இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம். அவனால் கிடைக்கும் பயன்கள், ஆதாயங்கள் மிகமிக அதிகம். இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள். இவன் இதய அறுவை சிகிச்சை மருத்துவன், அவள் அந்த மருத்துவமனையில் ஒரு சிறு பிரிவின் அட்மினிஸ்ட்ரேஷன் தொடர்பான வேலையில் இருக்கிறாள். சந்திரனால் அவளுடைய பணத்தேவைகள் எளிதாக தீர்ந்துவிடும். எங்கு கேட்டாலும் அழைத்து செல்வான். அவனும் இந்த நாட்டினவர்கள் போல வாழ்வை அனுபவித்து வாழ பழகியிருக்கிறான். ஆகையால் அவனை விட்டுவிட லுனாவுக்கு மனமேயில்லை. அதற்காக காதல், திருமணம் என்றெல்லாம் அவனை தேர்ந்தெடுக்க மனமில்லை. காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொண்டிருக்கிறாள் அவ்வளவே!

“என்ன அரேஞ்சுட் மேரேஜ்?” என்று முகம் சுளித்து சந்திரனிடம் வியப்பை காட்டியதாகட்டும், “உங்க மனைவி உங்க லெவலுக்கு இல்லை” என உரிய காரணத்தோடு சொல்வதாகட்டும், “அய்யோ எப்படி தான் சாமாளிக்கறீங்களோ?” என மட்டம் தட்டுவதாகட்டும் லுனாவின் பேச்சு சாமர்த்தியமே தனி. சிறு விஷயத்தை தெரிந்து கொண்டாலும் நேரத்திற்கு தகுந்தாற் போல சந்திரனிடம் அதை சுட்டிக்காட்டி ரோகிணியை மட்டம் தட்டி விடுவாள். பின்னே, திடீரென மனைவி என்றொருத்தி முளைத்து இவள் சந்தோஷத்தை பறித்து விட்டால்? ஆகையால் அதற்கேற்ப அழகாய் செயல்பட்டாள். ஏற்கனவே ரோகிணியின் மீது சந்திரனுக்கு இருக்கும் சிறுசிறு சுணக்கங்கள், லுனாவின் குறைவாசிக்கும் படலத்தால் அழகாய் வளரந்தது. லுனா இவனுக்குள் விதைத்த தாக்கங்களால் தான், அவனுடைய மனைவியை இன்னும் சமமாக நினைக்க தோன்றியதில்லை, அவள் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் முயன்றதில்லை, இவனுடைய காதலையும் உணர முடிந்ததில்லை. அதோடு அது அவ்வப்பொழுது இப்படி விஷமாகவும் வெளிவந்தது.

ரோகிணி எதுவும் பேசாமல் புன்னகைப்பதை கண்ட சந்திரன், “ஹ்ம்ம் சிரிச்சு என்ன பண்ண ரோ? சீக்கிரம் அடாப்ட் ஆகணும்” என்றான் மீண்டும் சற்று அழுத்தமாக. அவனது வார்த்தைகள் அவளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் அலுவலகம் கிளம்பி நிற்கிறான், வாக்குவாதம் செய்தா அனுப்ப முடியும்? அது அவன் தொழிலும் பிரதிபலிக்குமே என்ற எண்ணம் தோன்ற, எரிச்சலை காட்ட மனமில்லாதிருந்தாள். அதேசமயம் அவன் குற்றச்சாட்டை ஏற்கவும் மனமின்றி, “பிடிச்சிருந்தா முன்னவே அடாப்ட் ஆகி இருப்பேனேங்க…” என்றாள் எரிச்சலை விழுங்கிய இலகுவான குரலில்.

அவள் கூறியதற்கு பதில் பேசுவதை விட, அவளின் அழைப்புக்கு கண்டனம் தெரிவிப்பது சந்திரனுக்கு முக்கியமாக போய்விட்டது. அது இன்னோரன்ன வார்த்தைகளால் சொல்ல வேண்டுமெனில் அவள் தன்னை மகிழ்வாக வைத்திருக்கும் ‘இந்த கலாச்சாரம் பிடிக்கவில்லை’ என்று கூறியிருந்ததால் எழுந்த கோபம் என்று கூறலாம். அதை வேறு விதத்தில் வெளிப்படுத்தினான். “ஏன் இப்படி கூப்பிடற?” என் அவளது மரியாதை பன்மையை மனதில் வைத்து எரிச்சலான குரலில் கேட்டான்.

ரோகிணிக்கும் அவ்வப்பொழுது வாங்கி கட்டுவது தானே, ஆகையால் எதற்கு இந்த கோபமும், எரிச்சலும் என்று புரிந்திருந்தது. “சாரி சந்துரு” என்றதோடு வாக்குவாதத்தை தொடர மனமில்லாமல் மௌனித்து விட்டாள். இயன்றவரை இன்முகமாகவே வேலைக்கு வழி அனுப்ப அவள் முயற்சிக்க, அந்த எண்ணம் துகளளவும் இன்றி கடுகடுத்த முகத்தோடு கிளம்பி சென்றான் அவள் கணவன். ‘இதற்கெல்லாம் கோபம் வருமா?’ என்று தோன்றியபோதும் அவளால் வேறு என்ன செய்ய இயலும்? வழக்கம்போல, இயலாமையால் மனம் கனத்தது.

கோபத்தோடு நாளை தொடங்கியதால், மருத்துவமனைக்கு வேலைக்கு வந்த பிறகும் சந்திரனுக்கு அந்த கோபம் தொடர்ந்தது. ஒருமாதிரி கடுகடுத்த முகத்தோடே சுற்றி வந்தான். அகத்தின் அழகினை இவ்வளவு தெளிவாக முகத்தில் பிரதிபலிப்பதால் லுனாவுக்கு, அவளுக்கு ஏற்றாற்போல காய்களை நகர்த்துவத்தில் மிகுந்த சௌகரியம். மாலை நேரம் வேலை எல்லாம் முடியும் தருவாயில், “என்ன ஷாம் ரொம்ப அப்செட் போல” என்றாள் மயக்கும் குரலோடும், ஆளை அசரடிக்கும் புன்னகையோடும்.

“நத்திங் ரோ. ஏம் அல்ரைட்” என்றான் சந்திரன். அவன் அவ்வப்பொழுது இப்படித்தான் லுனாவை ‘ரோ’ என்று அழைத்து விடுவான். இதற்கும் அவளை விட இவளுடன் தான் நாள் முழுவதும் செலவிடுகிறான். இருந்தும் இந்த அழைப்பு தானாக வந்துவிடும். இதுவரையிலும் ஏன் என்று தெரிந்ததில்லை. ஆனால், ஒருமுறை கூட ரோகிணியை லுனாவின் பெயரைக்கொண்டு அழைத்ததில்லை.

வழக்கம்போல இந்த அழைப்பு லுனாவிற்கு எல்லையற்ற கோபத்தை தந்தது. இருந்தும் அதை முகத்தில் காட்டக் கூடாதல்லவா! “கண்டிப்பா டென்ஷன் தான், அதுதான் டென்ஷனுக்கு காரணமாவங்க பேர் வருது” என்றாள் சிறு முறுவலுடன். லுனா சொன்ன விதத்தில், சொன்ன தொனியில், ‘அதுதான் உண்மை போல!’ என்று தான் எண்ணத்தோன்றும். சந்திரனும் விதிவிலக்காக எல்லாம் இல்லை, அப்படியே நம்பினான். இருந்தும் பதில் கூற மனமின்றி அமைதி காத்தான்.

சந்திரன் அமைதியை பொருட்படுத்தாமல் லுனாவே தொடர்ந்தாள். “பிரீயா இருந்தா ஷாப்பிங் போகலாமா? பிரைடே பர்த்டே பார்ட்டிக்கு கிப்ட் வாங்கணும்” என்றாள் இதமாக. அவனுக்கும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, என்னவென்றே தெரியாமல் சமீபகாலமாய் ஒரு எரிச்சல். உண்மையில் ரோகிணி சமீபமாக கடைபிடிக்கும் அமைதி அவனுக்கு பிடித்தமின்மையை தருகிறது. ஆனால், அதனை அவனே அறியவில்லை என்னும்பொழுது யார் அவனுக்கு உணர்த்த இயலும்?

“ஓகே லுனா. கிவ் மீ ஹால்ப் அன் ஹவர்” என்றவன் மீதமிருந்த வேலையில் கவனமானான். சொன்னபடி அரைமணி நேரத்தில் கிளம்பி, அவளோடு “மெக்னிபிஷண்ட் மைல்’ பகுதிக்கு காரை செலுத்த லுனா தனக்கு தேவையானவற்றை மனதிற்குள் பட்டியலிட்டாள்.

ஓக் வீதியிலிருந்து சிகாகோ ஆறு வரை அமைந்திருக்கும் மெக்னிபிஷண்ட் மைல் பகுதியில் பல கடைகள், ஹோட்டல்கள், மியூசியம் என அமைந்திருக்கும் மிகப்பெரிய வணிக பகுதி. வருடம் முழுவதும் கூட்டம் நிறைந்திருக்கும் அந்த பகுதியில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம்.

ரோகிணியும் டேரியன் பகுதியில் இருக்கும் தங்கள் குடியிருப்பிலிருந்து, தனசேகரன், விசாலம் தம்பதியரின் பேத்தியின் பிறந்தநாளுக்கு பரிசு தருவதற்காக மெக்னிபிஷண்ட் மைல் பகுதியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியிருந்தாள். பல நேரமாக ஆலோசித்து எடுத்த முடிவு. அரை மணி நேரமாவது பயணிக்க வேண்டுமே! அத்தனை தூரம் தனியாக போக வேண்டுமா என்ற எண்ணம் வந்த பொழுதிலும், எப்பொழுது பழகப் போகிறோம் என்னும் கேள்வி எழ உடனே புறப்பட்டு விட்டாள். கிடைக்கப்போகும் அதிர்ச்சியைப் பற்றி தெரியாமல்!

அங்கிருந்த ஜனத்திரளை பார்த்த பிறகு மூச்சே முட்டிப்போனது ரோகிணிக்கு. ‘ஹையோ இதென்ன இவ்வளவு கூட்டம்? இங்க போயி கையை ஆட்டி ஆட்டி காட்டி ஒரு பொருளை வாங்கி, ஹப்பா இப்போவே கண்ண கட்டுதே! பேசறவனுக நிறுத்தி நிதானமா பேசுனா தான் என்ன? கொய்ய முய்ய கொய்ய முய்யன்னு உதட்டை கூட ஒட்ட வெக்கமா பேசிக்கிட்டே போறது’ என கடுப்பாக எண்ணியபடி அங்கே வலம் வந்தாள். அங்கங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் மறக்கவில்லை.

குருத்து பலமுறை கேட்டு விட்டாள். “ஏய் ராகி… கோயில், உங்க வீடு, பஸ் ஸ்டாப் இதை தவிர உருப்படியா எதுவும் எடுத்து போட்டோ அனுப்புடி” என அவள் கதறும் பொழுதெல்லாம் ‘எதை அனுப்புவது?’ என்று குழப்பம் எழும். இன்று என்னவென்றால் புகைப்படம் எடுப்பதற்கு அத்தனை இருந்தது. ‘ஐயோ யோசிச்சு யோசிச்சு நேரத்தை வீணாக்கிட்டமே, முன்னமே வந்திருந்தா நிறைய வேடிக்கை பாத்து இருக்கலாம் போல!’ என விழிகளை சுழற்றி வேடிக்கை பார்த்தபடி வலம் வந்தாள். ‘விண்டோ ஷாப்பிங்’ செய்வதில் தான் எத்தனை சுகம். அதற்காக பட்டிக்காட்டாள் என்பது போலவும் காட்டிக் கொள்ளாமல் மிக மிக இயல்பாக ஒவ்வொன்றையும் ரசித்தாள்.

இங்கு தான் ‘மெக்னிபிஷண்ட் மைல் லைட்ஸ் பெஸ்டிவல்’ நடக்கும் என்று கோயிலில் சந்திக்கும் வர்ஷா என்ற பெண் ஒருத்தி விவரித்திருந்தாள். நவம்பர் மாத சனிக்கிழமையில் மிக கோலாகலமாக நடக்கும் அந்த திருவிழாவில் மில்லியன் (பத்து லட்சம்) மின்விளக்குகளுக்கும் மேல் இருநூறு மரங்களில் மிளிர்ந்து இந்த நகரத்தையே வண்ண மயமாக ஒளிர வைக்குமாம். பலதரப்பட்ட நடனங்கள், பாடல்கள், இசைக்கச்சேரிகளின் அணிவகுப்பு நடக்க, மிகவும் கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறியிருந்தாள். அவள் கூறிய திருவிழாவை யூடூப்பில் பார்த்து மகிழ்ந்து கூட இருக்கிறாள். இப்பொழுது இந்த இடத்தை பார்க்கையில் அந்த திருவிழாவை நேரிலும் பார்க்க மாட்டோமா என்று ஆசை கூட எழுந்தது.

‘பொழப்ப பாரு, பொழப்ப பாரு. குளிர் அதிகம் ஆகறதுக்குள்ள வீடு போயி சேருவோம்’ என்று அலைபாயும் மனதிற்கு குட்டு வைத்தவள், மீண்டும் எந்த கடை செல்லலாம் என்று பார்வையை சுழற்றினாள். அப்பொழுது ஒரு கடையில் இருந்த புடவை அவளை மிகவும் கவர்ந்தது. மனதை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் சென்று அதன் விலையை பார்த்தவளின் முகம் வாடியது. விலை சற்று அதிகம் தான், அக்கவுண்டிலும் வீட்டு செலவுக்கு என தந்த பணம் தாராளமாகவே இருக்கிறது, இருந்தும் இத்தனை செலவு செய்ய மனம் வரவில்லை. கணவனாக பார்த்து வாங்கி தந்தால் அது வேறு! அவன் பணத்தில் அவளாக அவளுக்கென்று வாங்குவதற்கு என்னவோ முரண்டியது. ஆகவே, பேசாமல் நகர்ந்து விட்டாள்.

அங்கிருந்த விற்பனைப்பெண் கூட இவளிடம் பேசி அந்த புடவையை விற்க முயற்சித்தாள். விற்பனைப் பெண்களுக்கு தெரியாததா? பொருள் வாங்க வருபவர்கள் விழி விரித்து ஒன்றை ரசித்து விட்டால், அதை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள் என்று. ஆனால், எத்தனை மூளைசலவைக்கும் ரோகிணி மசியவே இல்லை. வேண்டாம் என்பதையும் இன்முகமாகவே மறுத்து அந்த பெண்ணிடம் இருந்து நழுவியிருந்தாள். ரோகிணி, தன் செய்கையால் அந்த விற்பனைப்பெண்ணை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தாள். ஏனென்றால், அவளிடம் பணம் இல்லாதது போலவும் தெரியவில்லை, அதோடு அந்த புடவையை பிடிக்காதது போலவும் தோன்றவில்லை, இருந்தும் மறுக்கிறாளே! அதிசயம் தான்! என்பது அவள் எண்ணம்.

தனக்கு பிடித்ததையே ரோகிணி மறுத்து செல்ல, அவள் கணவனோ லுனா கேட்டதை எல்லாம் குறையில்லாமல், கணக்கு பார்க்காமல் வாங்கி தந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாமல், “லுனா இட்ஸ் கெட்டிங் லேட், பர்த்டேக்கு பர்ச்சேஸ் முடிஞ்சதல்ல, உன்னோட ஷாப்பிங் இன்னொரு நாள் வெச்சுக்க. என்னை இப்படி சுத்த விடாத எனக்கு பிடிக்காதுன்னு பலதடவை சொல்லி இருக்கேன்” என்றான் கடுகடுவென.

‘நான் ஷாப்பிங் வந்தா, பில் யாரு கட்டுவா?’ என மனதிற்குள் நினைத்தவள், “ஓ! சாரி டியர். லேட் பண்ணிட்டேன். கிளம்பலாம்” என்று உடனே கிளம்பியும் விட்டாள்.

ரோகிணிக்கு ஒரு வயது குழந்தைக்கு என்ன வாங்குவது என்ற யோசனை, அந்த குழைந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடைக்குள் செல்லும் வரைதான். அங்கு சென்றதும் அனைத்து யோசனைகளும் மாயமாகி போயிருந்தது. குழந்தைகளுக்கான பொருட்கள் அங்கே குவிந்திருந்தது, என்ன வாங்குவது என்ற சிந்தனை போய், எதை வாங்க என்ற குழப்பமே வந்துவிட்டது. விளையாட ஒரு பொருள், அழகாக ஒரு ஆடை, படிக்கும் வயதில் படித்துக் கொள்ளட்டும் என்று ஒரு காமிக் கதை புத்தகம் என ஆசை தீர பார்த்து பார்த்து வாங்கும் பொழுது, நம் குழந்தைக்கு எப்பொழுது இப்படி வாங்குவோம் என்ற ஏக்கம் எழத்தான் செய்தது. ‘இதென்னடா மனசு, இல்லாதததையும், நடக்காத விஷயத்தையும், கிடைக்காத பொருளுக்கும்ன்னு ஆசைப்பட்டு இம்ச தருது’ என எரிச்சலோடு பில்லை போட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்க, தூரத்தில் அவள் கணவனுடைய காரில் இந்த நாட்டை சேர்ந்த ஒரு இளம் யுவதி கைகள் நிறைய பைகளுடன், தன் கணவனோடு காரில் ஏறும் காட்சி காணக் கிடைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: