அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 06

  • ”என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!”

 

  • என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன்.

 

  • பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள் மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது. நாளாகவாக அந்த ஆசை எனக்குப் பித்தம் போல் வளர்ந்து விட்டது. இதனைத் தங்களுக்குத் தெரிவிக்கும் துணிவு எனக்குக் கொஞ்சத்தில் வரவில்லை. மகா ரூபவானும், குணாளரும் செல்வனுமாகிய தங்களைக் கணவராக அடையும் பேறு மகா கேவலமான நிலையில் உள்ள எனக்கு, தரித்திரத்தைக் கட்டிக் கொண்டு புரளும் எனக்குக் கிட்டாது என்று எண்ணினேன். தங்களுடைய அந்தஸ்திற்கு எத்தனையோ ரதிகள் கிடைப்பர். பணக்காரப் பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டு பங்களாவில் உலவ, உங்களுக்கு ஆண்டவனின் கடாட்சம் இருக்கிறது. நான் உங்கள் மனைவியாக முடியுமா? திருடனுக்கு இராஜவிழி வருமா? இதை எண்ணி நான் என் ஆசையை அடக்கிப் பார்த்தேன், முடியவில்லை. தங்கள் வீட்டில் சமையற்காரியாகக் கூட ஆகமுடியாத அவ்வளவு அபாக்கியவதியாகத்தான் நான் இருக்க முடியும். ஆனாலும் குழந்தைகள், ’சந்திரனைப் பிடித்துக் கொடு’ என்று தாயாரைக் கேட்பது போல், நான் தங்களைத் தரும்படி தினமும் தேவியை வேண்டுகிறேன். மனமே பேராசை கொள்ளாதே என்று எவ்வளவோ கூறினேன் என் மனதுக்கு . மனது உம்மிடம் லயித்து விட்டது. தாங்கள் வெறும் பணக்காரராக மட்டும் இருந்தால் பரவாயில்லை. என் மனத்தைக் கொள்ளை கொண்டீர்கள். என்னைத் தங்கள் தர்மபத்தினியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தங்கள் திருப்பாத கமலங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்; சாதாரண பணக்காரராக மட்டும் தாங்கள் இருந்தால் அவர் பணம் அவரோடு , நமக்கென்ன அதைப் பற்றி என்று நான் எண்ணிக்கொண்டு என் விதிப்படி காரியம் நடக்கட்டும் என்று நான் இருந்து விட்டிருப்பேன். ஆனால் தங்களின் சுந்தரவதனத்தைப் பார்க்கப் பார்க்க என் ஆவல் கொழுந்துவிட்டு எரிகிறது. தங்கள் புன்னகை எனக்கோர் புதுமையான உணர்ச்சியை ஊட்டுகிறது. தங்கள் பேச்சு எனக்கு சங்கீதமாக இருக்கிறது.

 

  • இங்கு வீட்டிலே எவ்வளவோ தொல்லை, கஷ்டம் சொல்லி முடியாது. அப்பாவின் அழுகுரல், தங்கையின் சோகம் இவைகளெல்லாம் என்னை வாட்டிய போதிலும், தங்களை ஒரு முறை கண்டதும் என் துக்கமத்தனையும் பறந்து போகின்றன. துரையே! என் தம்பியிடம் தாங்கள் பேசும் போது பணம் மிகக் கேவலமென்றும், செல்வம் நிலையற்றது என்றும் கூறியிருக்கிறீர்கள். பணக்காரர்களிடம் இருக்கும் டாம்பீகம், ஆணவம் தங்களிடம் துளியும் இல்லாமல் தர்ம சிந்தனையும், தயாள நோக்கமும் கொண்டு என் கண்கண்ட தெய்வமாகக் காட்சியளித்து வருகிறீர். அபலையாகிய நான் கூச்சத்தை விட்டு தங்களிடம் பிச்சை கேட்கிறேன். தங்கள் அன்பை அளித்து என்னை இரட்சியுங்கள், எனக்கு வாழ்வு தானம் செய்யுங்கள். பக்தர்கள் தமது குறைகளை கடவுளிடம் கூறி வேண்டுவது போல் நான் தங்களிடம் என் குறையைக் கடாட்சிக்க கோருகிறேன். ஒரு இளமங்கை இவ்விதம் எழுதுவது தகாது என்று எண்ணி என்னை உதாசீனம் செய்து விடாதீர்கள். கண்ணன் மீது கொண்ட காதல் ருக்மணி எழுதிய காதற்கடிதத்தைப் படித்துப் புளகாங்கிதமடையும் பக்தர் தாங்கள். என் காதல், ருக்மணி கொண்டிருந்த காதலுக்குக் குறைவானதல்ல. ருக்மணி பிராட்டி இராசா மகள். நான் ஏழை குமாஸ்தாவின் பெண். ஆசை அரண்மனைக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்த குடிசையில் இருக்கும் குமரிக்கு , இராச மாளிகையில் ருக்மணி கொண்ட ஆசை போலவே இருக்கிறது. பித்துக் கொள்ளி – வாயாடி, வெட்கங் கெட்டவள் என்று இக்கடிதத்தைக் கண்டு விட்டு என்னைக் கூற எண்ணாதீர். என் தம்பி தங்களிடம் என் விஷயமாகப் பேசி தாங்கள் அலட்சியம் செய்ததாக எனக்குக் கடிதம் எழுதினான். அதைக் கண்டதும் மனம் துடித்தது. கண்களில் நீர் ததும்பிற்று. அதன் துளிகள் இக்கடிதத்தில் உள்ளன. என் மீது கிருபை வைக்கக் கோருகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்து வாழ்வதைவிட எனக்குப் பாரினில் பரமானந்தம் வேறு இல்லை. எனது அன்பை உமக்கு அபிஷேகித்து உம்மை வணங்குகிறேன். ஒரு ஏழைப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வது கேவலம் என்று மற்ற பணக்காரர்கள் கருதுவர்.

 

  • தாங்கள் அவ்விதமான குணமுடையவரல்ல. நான் தங்களின் பணத்தைக் கண்டதில்லை. தங்களைக் கண்டேன். தங்கள் திருமுகத்தில் தாண்டவமாடும் தேஜசில் சொக்கினேன். சொர்ண ரூபா! என்னைத் துடுக்குக்காரி என்று துப்பி விடாதீர். நான் பணக்காரக் குடும்பத்தினளாயிருந்தால், என்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அநேகர் தங்களிடம் சொல்லியிருப்பார்கள். நானோ ஏழை. எனக்குத் துணை யார் வர முடியும்? இப்போது என் மனதைத் திறந்து கடிதம் எழுதுகிறேன். இப்போது என் மனோ பீஷ்டம் நிறைவேறுதற்கு வேறு மார்க்கம் இல்லை. என்னைப் பற்றிச் சற்று ஈவு இரக்கம் காட்டுங்கள். என் கண்களில் ததும்பும் காதலை நோக்குங்கள். என் பெரு மூச்சையும், இரவில் நான் புரளுவதையும், தலையணையைக் கண்ணீரால் நனைப்பதையும் நீர் கண்டதில்லை. நான் அபலை. எனக்கு உமது அருளைத்

 

  • தரவேண்டுகிறேன். அன்பே என்னைக் கைவிடாதீர்.

 

  • காந்தா

 

  • இந்தக் கடிதத்தைக் கண்டு தான் அவர் சிரித்தாராம். திட்டினாராம். என்னைக் கண்டதால் உண்டான தோஷம் தீரவோ என்னவோ, அவர் தாயார் சகிதம் சில நாட்களுக்கெல்லாம் தீர்த்த யாத்திரை செய்யக் கிளம்பி விட்டார். தீர்த்த யாத்திரையாம்; என்னைத் துடிக்க வைத்துவிட்டு, மண்டியிட்டுச் சென்ற என்னை மார்பில் உதைத்து கீழே தள்ளிவிட்டு, பிச்சைக் கேட்கச் சென்ற இந்தப் பேதையைப் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டு, என்னைச் சாகடித்து விட்டு, அவர் தீர்த்த யாத்திரைக்குச் சென்று விட்டார். என் அன்பை அவர் நிராகரித்தது போல் அவரது அன்பை ஆண்டவன் நிராகரிக்காமலா போவார்.

 

  • வாழ்க்கையிலே இனி எனக்கு என்ன இருக்க முடியும்? ஒரு பெண் தனது உள்ளன்பை எடுத்துக் கூறியும் அது கேலி செய்யப்படுவது கண்டால் பிறகு உலகில் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்? மனம் உடைந்து ஏன் வாழ்வது? எதற்கு அந்த வாழ்வு? பூபாரமாக இருப்பதில் என்ன பயன்? என்னைப் பெற்றவர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கவலைப்படுவார்கள். எனக்கோர் வரன் கிடைக்க வில்லையே வரதட்சிணை தர வழியில்லையே என்று அவர்கள் வாடுகிறார்கள். என்னை யார் கலியாணம் செய்து கொண்டாலும் எனக்கு ருசி இருக்கப் போவதில்லை. சோமு தீர்த்த யாத்திரைக்குப் போன பிறகு நான் நடைப் பிணமானேன்; என் தேக காந்தி மங்கத் தொடங்கிற்று. உடலிலேயும் உள்ளத்திலேயும் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. வாழ்விலே வெறுப்புண்டாயிற்று. சமைப்பதும், படுப்பதும், அழுவதும், கண்களைத் துடைத்துக் கொள்வதும். இவைகளே என் நித்திய கர்மங்கள். நித்திரை என்னைப் பிரிந்தது. புண்பட்ட என் மனம் ஆற வழி என்ன?

 

  • மனங்குளிர மார்க்கம் இல்லை. காந்தா இறந்து விட்டாள். வெறும் குமாஸ்தாவின் பெண், கூனோ குருடோ, செவிடோ, ஊமையோ யாரோ ஒருவனுக்குப் பெண்டாகி அவனிடம் சோறு பெற்று, சாவு வந்ததும் சுகம் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெண்தான் மிச்சம். மணமில்லா மலரும். மதியில்லா இரவும் சுவையற்ற வாழ்வும் என்ன பயன்? உப்பில்லாப் பண்டம். நான், எந்த குப்பையில் கிடந்தாலென்ன?

 

  • கூந்தல் நரைத்து விட்டால் தலைமயிர் கருக்கும் தைலம் பூசிக் கொள்கிறார்கள். பல் போய் விட்டால் டாக்டர் போலிப் பற்கள் கட்டுகிறார். காலிழந்தவர்களும் கட்டையை ஊன்றிக்கொண்டு நடக்கக் காண்கிறோம். அது போல், இன்பமாக வாழலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுந்த பிறகு, சக்கை போன்ற சாதாரண வாழ்வுக்காவது வழி பிறந்ததா? இல்லை, மாளிகை இடிந்தாலும் மதிற் சுவற்றிலே கொஞ்சமும். மண்டபத்திலே பாதியுமாவது இருக்குமே. அது போலவாகிலும் என் மனக் கோட்டை இடிந்ததில் கொஞ்சமாவது மிச்சம் இருக்கக் கூடாதா? கூடகோபுரம் வெறுங் குப்பை மேடாகி விட்டது. எங்கள் குடும்ப பாரத்தைக் குறைப்பதற்காகவேனும் எனக்கோர் துணைவர் கிடைக்க வேண்டுமோ அதாவது சரியாகக் கிடைத்ததா? எனக்கா கிடைக்கும் கூன்பட்ட என் வாழ்வு நிமிரவில்லை. வளைந்த என் வாழ்க்கை முறியத் தொடங்கிற்றே யொழிய, ஊன்று கோலின் உதவி பெற்று உலவும் வழியும் பிறக்கவில்லை.

 

  • நான் திகில் பட்டுக் கொண்டிருந்தது போலவே என் திருமணம் நடந்தது. என்னை மனைவியாகப் பெற்ற மகானுபாவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். நரை மயிர், நல்ல கருப்புச் சாயம் பூசிக் கொண்டிருந்தார். பல் பல போய்விட்டன. பொய்ப் பற்கள் கட்டிக் கொண்டிருந்தார். கன்னங்களில் குழி , கை கால்களில் படை, அதை மாற்ற சந்தனம் பூசிக் கொண்டிருந்தார். உடலோ உலகில் உழன்றதால் இளைத்துப் போயிருந்தது. அதன் மீது பளபளப்பான பட்டு சரிகைப் போர்வைகள் அவருக்கு இந்த லட்சணத்திலே காச நோய். எனக்கு முன்பு அவருக்குப் படுக்கையறைப் பதுமைகளாக இருந்து விட்டு பரந்தாமன் திருவடி நிழலை அடைந்த பத்தினிமார் மூவர். நான் நாலாந்தாரம் அவருக்கு. அவரிடம் பணம் இருந்தது. ஏழ்மையில் நெகிழ்ந்து கொண்டு நானிருந்தேன். கிடா போல் வளர்ந்தவளை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காம-லிருக்கலாமோ என்று கேட்டு ஊரிலே பல பித்தர்கள் இருந்தனர். எத்தகைய பொருத்தமும், தட்சணை தந்தால் சரியாக இருக்கிறதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனர். உலகிலே எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா?

 

  எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று. அவர் முகத்திலே களை உண்டாயிற்று. வீடோ மாடோ குறைச்சலான விலைக்குக் கிடைத்து விட்டால் மகிழும் முதலாளிபோல் அவர் என்னைப் பூரிப்போடு பார்ப்பார். என் இளமை, அழகு, யாவும் அவருக்குத்தானே சொந்தம். இவ்வளவு லலிதமான பொருளை மிக மலிவாக வாங்கி விட்டோமே என்ற சந்தோஷம் அந்த வியாபாரிக்கும். பூரிப்பான வைர மோதிரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும் டம்பக்காரன் போல் அவர் நான் போகும்போதும், வரும்போதும் என்னைப் பார்த்துக் களிப்பார். அவருக்கு ஆனந்தந்தான். மூன்று மனைவிகள் இறந்ததும், இத்தகைய’ முத்து’ எனக்குக் கிடைக்க வேண்டி இருந்ததால்தான் என்றுகூடச் சொன்னார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”

கல்கியின் பார்த்திபன் கனவு – 27கல்கியின் பார்த்திபன் கனவு – 27

அத்தியாயம் 27 குந்தவியின் சபதம் காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

காதல் வரம் யாசித்தேன் – 3காதல் வரம் யாசித்தேன் – 3

ஹாய் பிரெண்ட்ஸ், காதல் வரம் யாசித்தேன் -3 பகுதி உங்களுக்காக அன்புடன், தமிழ் மதுரா. Premium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadFree Download WordPress ThemesDownload Nulled WordPress Themesfree download udemy paid coursedownload coolpad firmwareDownload