Tamil Madhura கல்கியின் 'ஒற்றை ரோஜா' கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 4

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 4

    • ரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு என்னைக் கொண்டு போனார்கள். என்னுடைய பெட்டி படுக்கையும் கொண்டுவரப்பட்டன. ‘புஷ்கோட்’ மனிதர்கள் மூவரும் வந்து பெட்டி, படுக்கைகளைச் சோதனைப் போட்டார்கள். என்னையும் சோதித்தார்கள். துணிகளைக் கிழித்து மட்டும் பார்க்கவில்லை. மற்றபடி சாங்கோபாங்கமாகத் தேடினார்கள். என்னிடமிருந்து ஒன்றும் அகப்படவில்லை! அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகத் தெரிந்தது.

 

    • அன்றிரவு நான் தூங்கவில்லையென்று சொல்லவும் வேண்டுமா? என் எண்ணமெல்லாம் மனோகரியின் பேரிலேயே இருந்தது. அந்த ஒற்றை ரோஜாப்பூவின் ஞாபகமும் அடிக்கடி வந்தது.

 

    • காலை மூன்று மணி சுமாருக்கு என்னை விடுதலை செய்துவிட்டார்கள். பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து, “தவறுதல் நடந்துவிட்டது. உம்மைப் பிடித்து வைப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அந்த முட்டாள்கள் உம்மைப் பிடித்து அடைத்தார்கள். அதற்காக ரொம்பவும் வருந்துகிறேன்!” என்றார்.

 

    • “அதனால் பாதகமில்லை; இது எனக்கு ஒரு நல்ல அநுபவம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். காலை நாலு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் பாஸஞ்சர் வண்டியில் ஏறிச் செல்லத் தீர்மானித்தேன். மறுபடியும் அதே பிளாட்பாரத்துக்குப் போனேன். மனோகரியும் நானும் நின்று பேசிக்கொண்டிருந்த அதே தூண் மறைவுக்கு மறுபடியும் சென்றேன். நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தூண் ஓரத்தில் அந்த ஒற்றை ரோஜாப்பூ – காகிதப்பூ – கிடந்தது. மனோகரி அதைக் கையில் எடுத்து எனக்கு காட்டிவிட்டு மறுபடியும் தலையில் வைத்துக் கொண்டாள் அல்லவா? சரியாக வைத்துக்கொள்ளவில்லை. ஆகையால், அது கீழே விழுந்து விட்டது. விழுந்ததை அவள் கவனிக்கவில்லை! ஆனால் நான் கவனித்தேன். இதற்குள் போலீஸார் நெருங்கிவிட்டபடியால் நாங்கள் இருவரும் முன்னோக்கிச் சென்றுவிட்டோம்….

 

    • அந்த ஒற்றை ரோஜாப் பூவை இப்போது ஆவலுடன் எடுத்து, என் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டேன். சிறிது நேரத்துக்கெல்லாம் ரயிலும் வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். மனோகரி முதலியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆவல் இல்லாமற்போகவில்லை. அது எப்படியும் பின்னால் தெரியும் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன்.

 

    • ரயில் புறப்படும் சமயத்தில் அந்தக் கைப்பெட்டிக்காரர் பிளாட்பாரத்திற்கு ஓடி வந்து, அங்குமிங்கும் அலைந்தார். நான் அவரைக் கையைத் தட்டி அழைத்தேன். அவர் என்னைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் வந்தார். “பெரிய பிசகு நேர்ந்து விட்டது. மன்னிக்க வேணும். சென்னையில் தங்கள் விலாசம் என்ன? அங்கே வந்து எல்லாம் விவரமாகச் சொல்கிறேன்!” என்றார். என் விலாசத்தை அவருக்குத் தெரிவித்துவிட்டு, “எனக்குக் கொஞ்சங்கூட வருத்தம் இல்லையென்று மனோகரியிடம் சொல்லுங்கள்!” என்றேன்.

 

    • சென்னைக்குத் திரும்பி வந்து இரண்டு நாள் வரையில் என் அறையை விட்டு வெளிக் கிளம்பவில்லை. பத்திரிக்கைகளை மட்டும் ஆவலுடன் பார்த்தேன். ஒரு பிரபல சுதேச சமஸ்தான மகாராஜாவின் பிரசித்திப் பெற்ற-விலை உயர்ந்த வைரம் காணாமற் போய் விட்ட தென்றும், இலங்கைப் போலீஸார், சுங்க அதிகாரிகள் முதலியோர் அதைத்தேடி வருகிறார்கள் என்றும் பத்திரிக்கையின் ஒரு மூலையில் சிறிய செய்தி ஒன்று காணப்பட்டது.

 

    • அன்றிரவு என் அறைக் கதவை இறுகத் தாளிட்டுக் கொண்டு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்தேன். அதைக் கோத்திருந்த நூலைப் பிரித்து விட்டுக் கையினால் தட்டினேன், மேஜை மீது டணார் என்று விழுந்தது.

 

    • ‘கண்ணைப் பறித்தது’ என்று ஆசிரியர்கள் எழுதுவார்களே, என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் அது உண்மையாயிற்று. அந்த மாதிரி விடிவெள்ளி, அவ்வளவு பெரிய வைரத்தை, கண்ணைப் பறிக்கும்படி ஒளி வீசிய வைரத்தை, நான் அன்று வரை பார்த்ததேயில்லை. அந்த வைரத்திலிருந்து வெளியான விதவிதமான வர்ண கிரணங்களைத்தான் என்னவென்று வர்ணிப்பது! பாபநாசத்தில் அருவி விழும் இடத்தில் நான் பார்த்த வான வில்லின் அதிசய வர்ண ஜாலங்களெல்லாம் இந்த அற்புத வைரத்தின் முன்னால் மண்டி போட்டு ஒளிப் பிச்சை கேட்க வேண்டியதுதான் என்று தோன்றியது.

 

    • வெகு நேரம் அந்த வைரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மறுபடியும் முன்போல் அந்தக் காகித ரோஜாப் பூவுக்குள்ளேயே வைத்துத் தைத்தேன். பெட்டிக்குள் பத்திரப் படுத்தினேன்.

 

    • மறுநாள் நான் எதிர்பார்த்திருந்த மனிதர் வந்தார். தவறு நேர்ந்ததன் காரணங்களை விளக்கினார். அந்தப் பெண், “நான் என் காதலனோடு இந்தியாவுக்குப் போகிறேன்; என்னைத் தேட வேண்டாம்” என்று தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவருக்குத் தெரியாமல் வந்து விட்டாளாம். தகப்பனார் வைர வியாபாரியாம். “ஒரே ஒரு வைரம் மட்டும் எடுத்துப் போகிறேன். அது எனக்கு உங்கள் ஸ்ரீதனமாக இருக்கட்டும்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாளாம். அந்த வைரம் ஒரு மகாராஜாவுக்குச் சொந்தமான விலையுயர்ந்த வைரம் என்றும், ஒன்றரை லட்சம் பெறுமானமானது என்றும் கூறினார். தகப்பனார் பெண்ணையும் வைரத்தையும் தேடிக் கொண்டு புறப்பட்டார். அவள் ரயிலில் பிரயாணம் செய்கிறாள் என்று அறிந்து முன்னதாக விமானத்தில் திருச்சிக்கு வந்து விட்டாராம். இந்த மனிதரையும் தன்னுடைய ஒத்தாசைக்கு அழைத்து வந்தாராம். இதெல்லாம் சுங்க அதிகாரிகள் காதில் அரைகுறையாக விழுந்ததில், அவர்கள் வைரத்தைச் சுங்க வரி கொடுக்காமல் கொண்டு போவதைத் தடுக்க முயற்சி எடுத்தார்களாம். மனோகரி தன் கடிதத்தில் குறிப்பிட்ட காதலன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக எண்ணி, என்னைக் கைது செய்ய இவர் ஏற்பாடு பண்ணினாராம்.

 

    • என்னுடைய வாயைப் பிடுங்கி, அந்த ஒற்றை ரோஜாப்பூவில் வைரம் இருக்கிற விஷயம் எனக்குத் தெரியுமா என்று அறிந்து கொள்வதற்காக அம்மாதிரி பயங்கர கதையை அவர் கற்பனை செய்து கூறினாராம்.

 

    என்னை விட அவள் பெரிய கற்பனைக்காரி. ஒரு காதலனையே சிருஷ்டி செய்துவிட்டாள் என்பது எனக்கு என்னமாய்த் தெரியும்? ஆனால், சில சமயம் கற்பனையைக் காட்டிலும் உண்மையில் நடப்பது அதிசயமாயிருக்கிறது. “உன்னை நினைத்து நினைத்து அந்தப் பெண் உருகிக் கொண்டிருக்கிறாள். ஸர்தார் பவன் ஹோட்டலில் தகப்பனும் மகளும் தங்கியிருக்கிறார்கள். அவர்களைப் போய்ப் பார்!” என்றார் அந்த மனிதர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 1கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 1

ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3

திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. “சிறுமலை வாழைப்பழம்”, “சாம்பார் சாதம்” “பிரியாணி” என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதிகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.   பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய்