Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04

    • சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான் மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தை சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன். அப்போது என் நெஞ்சம் துடித்ததை என்னென்பேன். அவர் அதனைக் கவனிப்பாரா? கவனித்தாலும் விஷயம் இன்னதென்று புரிந்து கொள்வாரா? துஷ்டச்சிறுக்கி என்று என் மீது சீறுவாரா? அலமுவிடம் காட்டி விடுவாரோ? அப்பாவிடம் உன் மகளின் யோக்யதையைப் பார் என்று கூறுவாரோ? என்ன நடக்குமோ என்று பயமாகவே இருந்தது. நான் கோடிட்டு அனுப்பிய பாகத்தில் ஆபாசமான வார்த்தைகள் ஏதும் இல்லை .

 

    • “கண்ணன் மீது நான் கொண்டுள்ள காதலின் ஆழம், கடலாழத்தைவிடப் பெரியது. அவரே என் ஆவி. அவர் இன்றி நான் வாழேன். ஆனால் அந்தோ என் மன நிலை அவருக்குத் தெரியுமோ? தெரியவந்தால் அவர் என் காதலை ஏற்றுக் கொள்வாரோ? ஏளனஞ் செய்வாரோ? என் செய்தியை அவரிடங் கூற யார் இருக்கிறார்கள்? இரவுக் காலங்களில் என்னை வாட்டி வதைக்கும் நிலவே கனல் போல் வீசிக் கருத்தைக் கெடுக்கும் காற்றே பொறாமை மூளும்படி உன் சந்தோஷத்தைப் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கிளியே கூவும் குயிலே ஆடும் மயிலே! தாமரை பூத்த குளத்திலே தாண்டவ நடை நடக்கும் அன்னமே! யார் போய் கூற முன்வருவீர்கள்.” இதுதான், நான் கோடிட்ட பாகம்.

 

    • சாந்தா குறும்புத்தனமாக ஒரு வேலை செய்து விட்டாள் என்பது எனக்கு பிறகே தெரியவந்தது. கண்ணபிரான் என்பதை அடித்து விட்டு சோமு என்று அவள் எழுதிவிட்டு, பிறகு புத்தகத்தை சோமுவிடம் கொடுத்தாளாம். கொடுக்கும்போது, “இந்தப் புத்தகம் ரொம்ப நன்றாக இருந்ததாம், அக்கா படித்து விட்டு முக்கியமான இடத்திலே கோடு போட்டு இருக்கிறாள்” என்றும் சொன்னாளாம். சோமு புன்னகையுடன் “சாந்தா நல்ல புத்திசாலி யல்லவா! பரம சாது பகவத்கடாட்சம் அவளுக்குக் கிடைக்கும். புண்ணிய கதைகளைப் படிப்பதிலே அவளுக்கு விருப்பம் இருப்பதால் அவள் நல்ல குணவதியாக விளங்குவாள்” என்று கூறினாராம்.

 

    • ” புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தாராடி?” என்று நான் ஆவலுடன் கேட்டேன். புத்தகத்தைப் பார்த்து விட்டு. விஷயம் தெரிந்து கொண்டு, சோமு தன் சம்மதத்தைக்

 

    • கூறியனுப்பினார் என்று பேதை நான் எண்ணிக் கொண்டேன்.

 

    • ”புத்தகத்தைப் பிரித்து பார்க்கவில்லையே, அக்கா” என்று சாந்தா சோகத்துடன் கூறிவிட்டு, ”நான் வந்து விட்ட பிறகு நிச்சயம் பார்த்திருப்பார்” என்று என்னைத் தேற்றினாள். சாந்தா தேற்றிவிடக் கூடிய நோயா எனக்கு! என் மருந்து எதிர் வீட்டில். என் நோய், அவருக்குத் தெரிந்தால்தானே! !

 

    • தம்பி இராகவன் சோமுவிடம் நெருங்குவதில்லை. காரணம், இராகவனுக்கு நல்லவர்களே பிடிப்பதில்லை. சோமு எப்படியாவது இராகவனைத் தோழனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, இராகவன் இருக்கும் நேரத்தில், சில நாட்கள் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு, பேசுவதுண்டு. பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். எனக்கு நல்ல விருந்து. ஆனால் இராகவன் கண்டிப்பாய் பேசுவான்.

 

    • நான் பாரதத்தில் கோடிட்டு அனுப்பியதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இராகவன் ஒரு தினம் களைத்து வந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வறுமையினால் வாடும் வாட்டம் எனக்கிருப்பதைவிட அவனுக்கு அதிகம். நான் வீட்டிலேயே கிடப்பவள், அவன் வெளியே போய் வருவான். வறுமையின் கொடுமைகள் அவனுக்கு அதிகமாக உறுத்தலாயின. தனது நண்பர்களின் நாகரிக உடை தனது அழுக்குக் சட்டையைப் பார்த்துப் பரிகாசம் செய்வது போலிருக்கிறது. தானோர் திருஷ்டி பரிகாரம் ; சனீஸ்வரூபம் என்று ஏதேதோ பேசுவான். தன்னைத்தானே நொந்து கொள்வான். வாட்டத்தைக் கொடுத்த வறுமை இராகவனுக்கு முரட்டுத்தனத்தையும், பணக்காரர் என்றால் ஒரு வெறுப்பையும், நீதி, நேர்மை, பாவ புண்ணியம், தர்மம், தயை என்று பேசப்படுவதிலே கசப்பையும் கொடுத்து விட்டது. சதா கடுகடுத்த முகத்தோடுதான் இருப்பான். ”விரச நாயகன் வந்தான்” என்று சாந்தா கேலி செய்வாள். பேசும்போது துடுக்குத்தனமாக இருக்கும். அதிலும் பணக்காரர் பேச்சை எடுத்தால் போதும், சீறுவான். மனத்திலே அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கடவுளை பற்றிகூடக் கேலி செய்வான்.

 

    • சோமுவிடம் பேசுவது இராகவனுக்கு இஷ்டமில்லை என்ற போதிலும் வீடேறி வந்தவனிடம் எப்படிப் பேசாமலிருப்பதென்று வேண்டா வெறுப்புடன் பேசுவான். சோமு மிக்க வாத்சல்யத்துடன் பேசுவதுடன் மத விஷயமாக இராகவனுக்குப் போதிப்பதுண்டு. சில சமயங்களில் இராகவன் அவைகளைக் கேட்டுக் கொள்வான். சில சமயங்களில், ”சோமண்ணா , வேறு ஏதாவது பேசுங்கோ , கேட்போம். இந்த இழவுப் பேச்சு வேண்டாம்” என்று கூறி விடுவான். ”சிவ, சிவா! இராகவா, அப்படிச் சொல்லாதே. அபச்சாரம்” என்பார் சோமு. ”அபச்சாரமாவது கிரகச்சாரமாவது” என்று இராகவன் முரட்டுத்தனமாகக் கூறிவிட்டு வெளியே போய்விடுவான். அப்பா, அம்மா இராகவனிடம் கோபித்துக் கொள்வார்கள். வைவார்கள். நான் மட்டும் கோபிப்ப-தில்லை. இராகவன் முரட்டுத்தன-முடையவனாவதற்கும், வெறுத்துப் பேசுவதற்கும் காரணம் வறுமையின் கொடுமைதான் என்பது எனக்குத் தெரியும். சிற்சிலசமயங்களில் இராகவன் தன் மனதைத்திறந்து காட்டுவது போல் என்னிடம் பேசுவான். கேட்கமிக உருக்கமாக இருக்கும் அவனது பேச்சு.

 

    • ஒருநாள், சோமுவுக்கும். இராகவனுக்கும் கீழ்க்கண்ட படி பேச்சு நடந்தது.

 

    • சோமு : இராகவா! எங்கே உன்னைக் காண்பதே அரிதாகி விட்டது ?

 

    • இராகவன் : கழுதை கெட்டால் குட்டிச் சுவற்றிலேதானே! சாக்கடைக்குப் போக்கிடமேது? வேலை ஏதாவது கிடைக்குமோ என்று தேடி அலைந்தேன்.

 

    • சோமு : கிடைத்ததோ?

 

    • இராகவன் : நன்றாகக் கிடைத்தது. டாமிட். இடியட் என்ற அர்ச்சனை . வேலையாவது கிடைப்பதாவது. புலிப்பாலில் குதிரைக் கொம்பை தேய்த்து அந்தத் திலகத்தை நெற்றியிலே வைத்துக் கொண்டு வந்தால் கிடைக்குமாம் !

 

    • சோமு : காலம் இப்படியே இராது இராகவா! பகவான் கிருபை செய்யாமற் போக மாட்டார்.

 

    • இராகவன் : அது சரி அண்ணா! கிருபை பண்ணுவார். ஒய்வு இருந்தால்தானே! தேரும், திருவிழாவும் வேத பாராயணமும், பஜனையும், கதா காலட்சேபமும், பரத நாட்டியமும், அதிர்வெடியும். அக்காரவடிசலும், அன்னாபிஷேகமும், விடாயத்தியும் அனுபவித்து-விட்டு. மிகுந்த நேரத்தில், உம்மைப் போன்ற ’பக்தர்’களைக் கண்டு பேசிக் கடாட்சித்து விட்டுப் பிறகுதானே என்னைப் போன்ற பஞ்சையிடம் வருவார். அதற்குள் எனக்கு வேலையே அவசியமில்லாத நிலைமை வரும். சாவுதான் அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடாட்சம்.

 

    • சோமு : மனம் வெறுத்துப் பேசாதே இராகவா . இது ஒரு கஷ்டமா? சாட்சாத் ஸ்ரீராமரே காடு சுற்றினார். கஷ்டமும் சுகமும் இரவும் பகலும் போல மாறி மாறித்தான் வரும். இதற்காக பகவத் நிந்தனை செய்வதா?

 

    • இராகவன் : நானா நிந்திக்கிறேன்? என்ன அண்ணா , உம்மைப் பெரிய வேதாந்தி என்று கூறுகிறார்களே. நான் பேசுகிறேன், நான் ஏசுகிறேன் என்று சொல்லலாகுமா? நான் ஏது? நீர் ஏது? எல்லாம் அவன் மயம்! எல்லாம் அவன் செயல். உம்மை இலாட்சாதி பதியாக வைத்திருப்பது அவன் செயல் என்னைப் பிட்சாதிகாரியாக வைத்திருப்பதும் அவன் செயல் மிக நல்லவன் அவன்.

 

    • சோமு : இராகவா! நீ நாத்திகம் பேசுகிறாய், நாக்கு கூசவில்லையா?

 

    • இராகவன் : இதற்கப் பெயர் நாஸ்திகமா? எனக்குத் தெரியாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது . எனது நாக்கின் அசைவும் அவனது செயல்தான்! சோமு : பிராமண குலத்தில் உதித்து இப்படிப் பகவத் வேஷியாவதா?

 

    • இராகவன் : பூர்வகர்ம பலன் !

 

    • சோமு : நீ வக்கீல் போல பேசுகிறாய். நீ மட்டும் வக்கீல் வேலைக்குப் படித்திருந்தால்.

 

    • இராகவன் : கிழிந்த கருப்பு சட்டையுடன் வெளியே கிளம்பியிருப்பேன். வேறென்ன நடந்திருக்கும் !

 

    • சோமு : நீ சத் விஷயங்களைப் படிக்கவேண்டும்.

 

    • இராகவன் : அருமையான புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருக்கிறேன், உலகத்தை விட உன்னதமான புத்தகம் இருக்கிறதா அண்ணா ! அதை நான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

 

    • இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு சோமு மெளனமாக இருந்து விட்டுப் போய்விட்டார். நான் இராகவனைத் திட்டினேன். நல்லவர்கள் மனதை நோகச் செய்வது அழகல்ல என்றேன். நான் இவ்விதம் இராகவனுக்குப் புத்தி சொன்னதேயில்லை. அன்று அவனது பேச்சு சோமுவின் முக விலாசத்தையே மாற்றி விட்டதைக் கண்டேன். ஆகவே எனக்குக் கோபம் பிறந்தது. இராகவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தான். ”அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்ன?” என்று நான் சீறினேன்.

 

    • ”எண்ணாத எண்ணமெல்லாம்

 

    • எண்ணி எண்ணி

 

    • எட்டாத கோட்டைக்கு

 

    • ஏணியிட்டு”

 

    • என்று இராகவன் பாடிக் கொண்டே சிரித்தான்.

 

    • எனக்குச் சோமு மீது இருக்கும் எண்ணத்தை இராகவன் எப்படியோ தெரிந்து கொண்டான் என்பது தெரிந்தது. நான் நாணத்தால் தலை குனிந்தேன். ”அழகுக்குத் தக்க யோகம் அடிக்க வேண்டும்” என்று குறும்பு பேச ஆரம்பித்தான் இராகவன்.

 

    • புன்சிரிப்புடன் நான் இராகவனை முறைத்துப் பார்த்தேன்! ‘இந்தப் பார்வைக்கே அவன் உன்னைத் தான் பட்ட மகிஷியாக்கிக் கொள்ளலாம்’ என்று இராகவன்

 

    • கூறினான்.

 

    • ”இராகவன் வம்புத் தும்பும் பேசாதே! நான் கூறினேன். இராகவன், அதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே, “உனது அழகைக் கண்டிருப்பான் அவன். ஆனால் அதற்கேற்ற அந்தஸ்தை உனக்கேற்படுத்த அவன் முன்வருவானா என்பது சந்தேகம் தான். அவன் ஒரு முட்டாள் என்று கூறினான். இராகவனின் அந்தப் பேச்சு, கேலி செய்வது போல தோன்றவில்லை, ஆழ்ந்த கருத்துடன் அவன் அதனைக் கூறினதாகவே தென்பட்டது. அதைக் கூறும் போது, இராகவனின் முகம் வாடியது. என் மனம் ஒரு குலுக்கு குலுக்கிற்று.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 70ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 70

70 – மனதை மாற்றிவிட்டாய் “கண்டிப்பா பழைய மாதிரி இல்லை ஆதி.” “அப்போ இன்னும் கோபம் போகலையா? நீயும் அவங்கள வெறுக்கிறியா? ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. மத்தபடி உன் மேல அவங்களுக்கு இருக்கற பாசம் உனக்கே தெரியும்ல? ” மெலிதாக புன்னகைத்து

கல்கியின் பார்த்திபன் கனவு – 61கல்கியின் பார்த்திபன் கனவு – 61

அத்தியாயம் 61 பொன்னன் பிரிவு பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது,

உள்ளம் குழையுதடி கிளியே – 12உள்ளம் குழையுதடி கிளியே – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற கதைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முன்பே சொன்னது போல வேலையில் சற்று பிஸி. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். சற்று ப்ரீ ஆனதும் பெரிய பதிவாகத் தர முயல்கிறேன். இனி  இன்றைய பதிவு. உள்ளம்