Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01

குமாஸ்தாவின் பெண்
பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன்

    டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம். தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர், பல்கலைக கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர் இவர். தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். பதினாறு நூல்களின் ஆசிரியர் இவர் எழுதிய ‘தாகூர் நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார். தமிழவேள்’ என்னும் விருதினை வழங்கியுள்ளார் குளித்தலை காசு பிள்ளை இலக்கியக்குழு, தமிழ் நெறிக் காவலர் என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்

 

அண்ணா ஒரு சகாப்தம்
தமிழவேள் ச.மெய்யப்பன்

    • அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்தார். பேச்சிலும், எழுத்திலும் புதுமை பல செய்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் எழுத்தும் பேச்சும் விழி . ணர்ச்சி ஏற்படுத்தின. கலைகளில் சிறந்த காஞ்சியில் தோன்றி, தமிழ்ப் பாசறையாம் பச்சையப்பனில், பட்டம் பெற்றுப் பெரியார் பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற மாமனிதர். பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் புதிய தமிழகம் உருவாகக் கனவு கண்டவர். ஆற்றல் வாய்ந்த அவரது எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அண்ணாவின் பாணி (மரபு) பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. மொழி முறுக்கேறியது, புதியதோர் விசையைப் பெற்றது. அண்ணா வழியினரின் எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தன.

 

    • பண்டிதர் மொழி மக்கள் மொழியாயிற்று. நாவாலும் பேனாவாலும் அண்ணா ஆற்றிய பணி அளவிடற்கரியது. பல ஆய்வேடுகள் வந்திருந்தாலும் அண்ணாவின் பங்களிப்பு முழுவதையும் மதிப்பீடு செய்யவில்லை. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய அனைத்து இலக்கிய வடிவங்களிலும் ஈடுபட்டு உழைத்துப் புதிய பாணியை அவர் உருவாக்கியுள்ளார். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் காவிரியைப் போல் கங்கையைப் போல் அவரது பேச்சில் ஊற்றெடுத்தன். அவரது பேச்சில் தமிழகமே கட்டுண்டு கிடந்தது. கருத்தாலும் நடையாலும் சொல்லும் வகையாலும் அண்ணாவுக்கெனத் தனிவழி அமைந்திருந்தது. அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும், இலக்கியத் தரத்துடன் அமைந்து வளர் தமிழுக்குச் செழுமை சேர்த்தன. நாவன்மை மிக்க நாடு போற்றும் நாவலராகத் திகழ்ந்த அண்ணா வளமான நடையினால் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். சொற்பொழிவுகளில் புதிய பாணியை உருவாக்கி மேடைத்தமிழுக்கு வளம் சேர்த்தார். மேடைத்தமிழை உருவாக்கியவர்களில் அவர் முதல் வரிசையர். அவர் சொற்பொழிவுத் தலைப்புகளும் படைப்புகளுக்குச் சூட்டிய பெயர்களுமே புதுமையாய் அமைந்து விட்டன. கவிதைப் பண்பு அமைந்த உரைநடை, அவருக்கு உரைநடை வரலாற்றில் நிலைபேறு அளித்து விட்டது. அண்ணா அழகாகவும் சுவையாகவும் எழுதினார். அவர் படைப்பு எந்த இலக்கிய வடிவமாகயிருந்தாலும் சீர்திருத்த ஒளிவீசும். இதழாளராக அமைந்ததால் நிரம்ப எழுத வாய்ப்பும் கிடைத்தது. அவர் கருத்துப் பரப்பாளராகவும் விளங்கினார். அண்ணாவின் பன்முகச் சாதனைகளை அங்கீகரித்து, பெருமை சேர்க்கும் வகையில் புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம், டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது.

 

    அண்ணா ஒரு அறிவாலயமாகவே திகழ்ந்தவர். சொற்பொழிவாளர்- எழுத்தாளர் – நூலாசிரியர் – நாடகாசிரியர்- இதழாளர் – சிந்தனையாளர் – தலைவர் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்தார். தமிழகத்தில் அண்ணாவுக்கு அமைந்த நினைவுச் சின்னம் போல் யாருக்கும் அமையவில்லை. அறிஞர் அண்ணா மிகவும் புகழ்பெற்ற , ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். அண்ணாவின் படைப்புகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அரசுடைமையாக்கிய பாவேந்தரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டது மணிவாசகர் பதிப்பகம். தற்பொழுது அண்ணாவின் நூல்களையும் வெளியிட்டு மகிழ்ச்சியடைகிறது.

குமாஸ்தாவின் பெண்

    • “ஆமாம் நானும் ஒரு குமாஸ்தாவின் மகள் தான். என் பெயர் காந்தா. குமாஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமாஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல. நான் அதேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரிய சீதா தற்கொலை செய்து கொள்கிறாள். நான், பழி பாவத்துக்கு அஞ்சாதவள். கொலை செய்தேன். என்னைத் தண்டிக்கத் தயாராக உள்ள நீதிபதியே தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் தண்டிப்பதன் மூலம், நீங்கள் இந்த ஒரு காந்தாவை அடக்கலாம். இதே நேரத்திலும், இனியும் தோன்ற இருக்கும் காந்தாக்களைத் தடுக்க என்ன செய்வீர் பிளேக் வந்தவனுக்கு ஊசி போட்டுவிட்டால், ஊரிலே வேறு யாருக்கும் பிளேக் வராது என்று கூறிவிட முடியுமா? இந்தக் காந்தாவைக் கொன்றுவிட்டால், இனி வேறு காந்தா கிளம்ப மாட்டாள் என்ற எண்ணுகிறீர்கள்?

 

    • என் இளவயதில் நான் தூக்குமேடை ஏறவேண்டுமே என்று எனக்குப் பயமுமில்லை, துக்கமுமில்லை. என்னைப் பற்றி ஊரார் ஏசுவார்களே என்று வெட்கமுமில்லை. அந்த உணர்ச்சிகள் என்னை இப்போது அண்டுவதில்லை. மரத்துப் போன மனம் என்னுடையது. உளுத்துப் போன நியதிகளை நீதியாகக் கொண்ட உலகம் இது.

 

    • ஏனய்யா , இப்படி விறைத்துப் பார்க்கிறீர். கவலையா? எனக்கு மரண தண்டனை தரவேண்டுமே, என் செய்வது? அறியாத பெண்ணாயிற்றே, இவளைச் சாகச் சொல்வதா என்று சோகமா உமக்கு? பாவம் நான் உயிரோடு இருப்பதாகவா கருதுகிறீர்? நான் இறந்து பத்தாண்டுகள் கிட்டத்தட்ட வாகிவிட்டன. கள்ளங் கபடமற்ற காந்தா பன்னெடு நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்டாள். இந்தக் காந்தா, பழி வாங்கும் பேர்வழி.

 

    • வழக்கை வளர்த்திக் கொண்டிருக்க வேண்டாம். சோமுவை நான்தான் கொன்றேன். கழுத்தைத் திருகினேன். அவன் இறந்தான். சாகும்போது கூட நான் அவனை அணைத்துக் கொண்டிருந்தேன். அவனை மட்டும் நான் கொல்லாது போயிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? சோமு ஒரு கொலைகாரனாகி நின்று கொண்டிருப்பான். நான் அவனுக்குக் கடைசியாகச் செய்த உதவி, அவனைக் கொன்றேனே அதுதான். பத்தாண்டுகளுக்கு முன்பு சோமு என்னைக் கொன்றான். இப்போது நான் அவனைக் கொன்றேன்; அவனுக்கு உதவி செய்தேன்.

 

    • ஏன் விழிக்கிறீர்கள்? நான் உளறுவதாக நினைக்கிறீர்கள்? அப்படித்தான் எண்ணுவீர்கள். சகஜம். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை நானே எழுதி வைத்திருக்கிறேன். அது கிடைத்தால் என் மரணத்துக்குப் பிறகு அதைப் படியுங்கள், விஷயம் விளங்கும். போதும் நான் உலகில் வாழ்ந்தது. விடை கொடுங்கள். செல்கிறேன், முதலில் என்னைத் தண்டித்து விடுங்கள். உங்கள் வேலை முடியட்டும். பலருடைய ஆசையும் நிறைவேறட்டும்.
    • சோமு என்ற தனது “ஆசை நாயகனை”க் கொன்றதாக, காந்தா என்ற மாது குற்றஞ் சாட்டப்பட்டு, சென்னைக் கோர்ட்டிலே விசாரணை நடந்தது. காந்தாவுக்கு வயது இருபத்தைந்து அல்லது இருபத்தாறு இருக்கும். அழகி. ஆனால் கொலைகாரி! அதற்கு ஏராளமான ருசு கிடைத்து விட்டது. தண்டனை நிச்சயம், என்று இந்த வழக்கைக் காண வந்திருப்பவர்கள் பேசிக் கொண்டனர். கோர்ட்டிலே காந்தா, பயமோ, பதைப்போ, துக்கமோ, துடிப்போ, இல்லாமல் மிக அமைதியாக இருந்ததைக் கண்ட நீதிபதி, வக்கீல் முதலானவர்கள், தூக்கு மேடைக்குப் போவோம் என்று தெரிந்தும், இவளுக்கு இவ்வளவு தைரியம் எப்படி பிறந்தது என்று எண்ணி ஆச்சரியடைந்தனர். பல சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட பிறகு, குற்றவாளி ஏதாகிலும் கூற வேண்டியது இருக்கிறதோ என்று நீதிபதி கேட்டார். அப்போது காந்தா பேசியது. மேலே நாம் விவரித்தது. கோர்ட்டாருக்கோ, வேடிக்கைக் காண வந்தவர்களுக்கோ, காந்தா பேசியதின் பொருள் விளங்கவில்லை. தூக்குத் தண்டனை விதிப்பார்கள் என்று கிலி பிடித்துக் கொண்டதால், காந்தாவின் மூளை குழம்பி விட்டதென்றும், பைத்தியம் பிடித்ததாலேயே, ஏதேதோ உளறினாளென்றும், கோர்ட்டில் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மையில் காந்தாவுக்குப் பைத்தியமுமில்லை, மனக் குழப்பமுமில்லை. மிகத் தெளிவாகவே இருந்தாள். காந்தாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கமான சடங்குகளுக்குப் பிறகு காந்தா தூக்கிலிடப்பட்டாள்.

 

    • காந்தாவின் கதி கண்டு வருந்தினவர்கள் யார்? அவளது தங்கை சாந்தாவும், அவளது காதலன் சங்கரனுந் தவிர வேறு யாரும் வருந்தவில்லை .

 

    • விபசாரி! கொலைகாரி! குலத்தைக் கெடுத்தவள்! மிராசுக் குடும்பத்தை அழித்தவள்! சோமுவைக் கொலை செய்தவள்! – என்று பலர் பல விதமாகத் தூற்றினார்கள். காமத்துக்குப் பலியான சோமுவின் பரிதாபச் சிந்து காலணா என்றும், கொலைகார காந்தாவின் கோர மரணம் என்றும் பாட்டுப் புத்தகங்கள் விற்கப்பட்டன. பத்திரிகாசிரியர்கள் விபசாரத்தால் வந்த வினை என்று தலையங்கங்கள் எழுதித் தீர்த்தனர்.

 

    • வழக்கும் தூக்கும் வம்பளப்பும் முடிந்து சில நாட்கள் சென்ற பிறகு, சாந்தாவும் சங்கரனும் சென்னையை விட்டு வெளியேறி. கலியாணம் செய்து கொண்டு, ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களிருவருக்கு மட்டுமே காந்தாவின் பரிதாப வரலாறு முழுவதும் தெரியும். ‘காந்தாவின் டைரி’ அவர்களிடந்தான் இருந்தது.

 

    • சங்கரன் காந்தாவின் டைரியைப் புத்தகமாகப் பிரசுரிக்கத் தீர்மானித்தான். உலகில் மறுபடியும் காந்தாவைப் பற்றித் தாறுமாறாகப் பேசுவார்களே! எதற்காக அத்தகைய வம்பளப்புக்கு இடமளிக்க வேண்டும், ‘புத்தகம் போடக் கூடாது’ என்று சாந்தா கூறினாள். ‘சாந்தா! உலகத்தார் காந்தாவைத் தூற்றினாலும் கவலையில்லை. அவளது வாழ்க்கை வரலாற்றைப் படித்து ஓரிருவராவது பாடம் கற்றுக் கொண்டால் போதும். மேலும், விஷயத்தைப் பகுத்தறியக் கூடியவர்கள் காந்தாவைப் பற்றிப் பரிதாபப் படுவார்களே யன்றி பழிக்க மாட்டார்கள். அவர்கள் தூற்றினாலும் சரி, கவலையில்லை. நான் காந்தாவின் டைரியைப் பிரசுரிக்கத்தான் போகிறேன். நாமிருவரும் சேர்ந்து முகவுரை எழுதுவோம் என்று சங்கரன் கூறினான். அங்ஙனமே செய்தான். எவ்வளவோ எதிர்ப்புக்களை அடக்கிச் சாந்தாவைக் காதலியாகப் பெற்றவன் சங்கரன், அது வேறு கதை! ஆகவே அவன் தீர்மானித்தால் நிறைவேற்றாமல் விடுவதில்லை. காந்தாவின் ‘டைரி’ புத்தக ரூபமாக வெளிவந்தது. சிலர் கண்ணீர் வடித்தனர். படித்து முடித்ததும் சிலர், ”இதை வெட்கமின்றி வெளியிட்டானே பிரகஸ்பதி” என்று சங்கரனைத் திட்டினார்கள். ஆனால், அந்த டைரிதான் இதோ இனி நான் உங்களுக்குத் தரப்போவது கேளுங்கள் காந்தாவின் டைரியை … காந்தா எழுதியதில் சிறுசிறு பிழை திருத்தங்கள் செய்தேனேயன்றி விஷயத்தை மாற்றவில்லை. காந்தா எழுதினதில் காணப்பட்ட எழுத்துக்களில் இருந்த பிழையை நான் திருத்தினேனேயன்றி அவள் எண்ணத்தை, நடந்த சம்பவங்களை, காந்தா எழுதினபடி அப்படியேதான் உங்களிடம் தருகிறேன். பாருங்கள் இந்த பரிதாபப் பெண்ணின் படத்தை .

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 22சாவியின் ஆப்பிள் பசி – 22

மல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஓலைகள் வானத்தை வரிவரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின. கார் ஓரிடத்தில் போய் நிற்க, சாமண்ணாவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னை நிழல்களில் நடந்தார்கள். வெகுதூரம் நடந்த

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 25கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 25

அத்தியாயம் 25 – புலிப்பட்டி பிள்ளைவாள்      கதைகளிலும் இதிகாசங்களிலும் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு விரோதிகள் சிலர் தோன்றுவார்கள். கதை முடியும் வரையில் அவர்கள் கதாநாயகர்களுக்கு இன்னல் விளைவிக்க முயன்று கொண்டேயிருப்பார்கள். கடைசியில், கதை முடியும் சமயத்தில், தங்களுடைய தீச்செயல்களுக்கு அவர்கள் தண்டனையடைவார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9

மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல