Advertisements

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 06


ரோகிணியின் வெகுநாளைய ஏக்கம், கணவன் நம்முடன் நேரம் ஒத்துக்குவதில்லையே!’ என்பது. அவளே எதிர்பாராமல் அது நிவர்த்தியானது அவனுடைய அவ்வப்பொழுதான விடுமுறைகளில். ஆனால், உண்மையில் சந்திரனுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு இருக்கும். என்ன, அந்த நாளையும் நண்பர்களோடு அல்லது லுனாவோடு செலவழித்து விடுவான். சனிக்கிழமை இரவு மிகவும் தாமதமானால் மட்டுமே ஞாயிறு வீட்டில் இருந்தான், இல்லாவிட்டால் அன்றும் வீட்டில் தங்க மாட்டான்.

ஆரம்ப காலத்தில் இதில் ரோகிணிக்கு சந்தேகம் எழுந்ததில்லை. அவளைப் பொறுத்தவரையிலும் கணவன் வீட்டில் இல்லையென்றால், அவன் மருத்துவமனையில் இருப்பான். ஆனால், அது உண்மையல்ல என்பதை அவள் அறியும் தருணமும் வந்தது.

சந்திரனின் நட்பு வட்டம் அதிகம். ஆகையால் அவன் செல்லும் பார்ட்டிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம். மற்றவர்கள் அனைவரும் மனைவியோடு வருகைதர, இவன் லுனாவுடன் செல்வான். மனைவியை அழைத்து வரவேண்டும் என்று அவனுக்கு தோன்றியதே இல்லை. அந்த எண்ணம் வருமளவு லுனாவும் விட்டதில்லை. முதல்முறை மட்டும்தான் தாமதம் குறித்து ரோகிணியிடம் சொல்லிவிட்டு சென்றான். ஆனால், அதன்பிறகு வந்த ஒவ்வொரு சனிக்கிழமையும் அது அவனால் மொழியப்படாமலேயே தொடர்கதை ஆனது.

அவன் தாமதம் குறித்து சொல்லி சென்ற மறுவார சனிக்கிழமை இரவும் கணவனுக்காக சமைத்துவிட்டு ரோகிணி காத்திருக்கலானாள். சந்திரன் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு கொண்டு செல்கிறான். இன்று மட்டும் ஏனோ மறுத்து விட்டான், ஆகவே இரவில் அவனுக்கு பிடித்த உணவுவகைகளை சமைத்து வைத்து காத்திருந்தாள். நேரம் பதினொன்றாகவே, பாவம் வேலை போலும் என்று எண்ணி உணவை உண்டுவிட்டு உறங்கியிருந்தாள், பொதுவாக, அவனுக்கு கைப்பேசி அழைப்பு விடுத்து தொந்தரவு தருவது அவளுக்கு பிடிக்காத விஷயம். சந்திரனுக்காக சமைத்தது எல்லாம் வீணானது தான் மிச்சம். அவன் எப்பொழுது வந்தான், எப்பொழுது உறங்கினான் என்றே தெரியவில்லை. இது தொடர்கதையாக அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனிமை பயத்தை எல்லாம் கடக்க பழகிவிட்டிருந்தாள், வேறு வழி இல்லை என்பதே உணமை.

பிறகு தாமதம் என்பது சனிக்கிழமை என்ற வரைமுறையின்றி வார நாட்களிலும் தொடர்ந்தது. இன்னும் ஒருபடி மேலாக ஓரிரு தினங்கள் அறிவிப்பின்றி வீட்டிற்கு வர கூட இல்லை. அப்பொழுதெல்லாம் தவித்து போய் கைப்பேசியில் இவளாக அழைத்து விவரம் கேட்டால் தான் அவன் வெளியிலேயே தங்கிவிட்ட விவரம் கூட தெரியும். பல நாட்கள் உணவு வீணாவதால், ஒருதினம் சந்திரனுடன் பேசும்பொழுது அதை கோடிட்டு காட்டியிருந்தாள். “சந்துரு உன்கிட்ட ஒன்னு கேக்கணுமே!” என மிகுந்த தயக்கத்துடன் தொடங்க, “சொல்லு ரோ, என்ன கேக்கணும்?” என்றான் வெகு இயல்பாக. அவளால்தான் அதே இயல்போடு தொடர முடியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வானோ என்னும் தயக்கம்.

மிகுந்த தயக்கத்தோடு, “சந்துரு, நீ அப்பப்ப லேட்டா வர இல்லாட்டி வரதில்லை, இன்கேஸ் லேட் ஆகும்ன்னா கொஞ்சம் முன்னாடியே சொன்னா நல்லா இருக்கும்” என தயக்கத்துடன் கேட்க, அவனுக்கு எங்கே அதெல்லாம் புரிய போகிறது. முன்பு தந்தையும், தாயும் அவன் செலவழிக்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கணக்கு கேட்பார்களே! அந்த நினைவு தான் வந்தது. அந்த நினைவில் சினம் துளிர்க்க, “என்னோட பிளான்ஸ் என்னன்னு எனக்கே தெரியாது. அதோட எனக்கு இந்த மாதிரி யாருகிட்டையும் பெர்மிஷன் கேட்டுட்டு பிளான் பண்ணவும் பிடிக்காது” என்றான் எரிந்து விழுந்தபடி.

இப்படி ஒரு பதிலை ரோகிணி எதிர்பார்க்கவேயில்லை. மனம் துடிக்க, கண்கள் கூட கலங்கப் பார்த்தது. சந்திரன் தவறாக எண்ணிவிடக் கூடாது என்றுதானே, பல நாட்கள் ஒத்திகை பார்த்து ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து அவனிடம் கேட்டாள். அதிலும் உணவு பலநாட்கள் வீணாகவும் தானே! அவனை கட்டுப்படுத்தவோ, அவனுக்கு புத்திமதி கூறவோ அவள் எண்ணவில்லையே! இதற்கு போய் இப்படி எரிந்து விழவேண்டுமா? மனம் தவிக்க, அவனது உறுமலுக்கு எந்த பதிலையும் தரமுடியாமல் மௌனமாகவே இருந்தாள்.

ஆனால், சந்திரனின் கோபம் இன்னும் மட்டுப்படவில்லை போலும். அந்த இரவு வேளையிலும் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தான். கோபமாக செல்கிறானே என்று தவிப்போடு அவன் வருகைக்காக அவள் உறங்காமல் காத்திருக்க, முதல்முறை தடுமாறியபடி வரும் கணவனை கண்டு அதிர்ந்தாள். ‘தன் கணவனா? அனைவரும் மதிக்கும் மருத்துவ தொழில் செய்பவன், ஊரே நல்லவன் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒருவன், மது அருந்துவானா?’ அவளால் அதை நம்பவே முடியவில்லை.

‘என்ன சோதனை இது? மருத்துவமனையில் பணியில் இருக்கிறான் போலும் என்ற நம்பிக்கையில் தானே, அவன் வரும்வரை காத்திருக்காமல் உறங்க சென்றேன். அவனானால், இப்படி ஒரு காரியத்தை செய்கிறானா?’ என மனம் வெதும்பியது. மனம் வேகவேகமாக அவ்வப்பொழுது அவன் தாமதித்து வருவதோடு, இந்த பழக்கத்தையும் முடிச்சிட்டு பயந்தது. இல்லை இல்லை அப்படியிராது என சுயசமாதானம் செய்து கொண்டவளுக்கு, மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை வேறு? ஒருவேளை நம்மீது இருக்கும் கோபத்தில் இன்று இவ்வாறு செய்து விட்டானோ என்று. ஆனாலும், முகமும் மனமும் தெளியவில்லை. அவனது செய்கையை ஏற்கவும் முடியாமல், ஏதோ தவறுதலாக நடந்திருக்குமோ என்று முழுதாக நம்பவும் முடியாமல் தவித்து போனாள். தெளிவே இல்லாமல், மிகுந்த குழப்பத்துடன் மறுதினம் வழக்கம்போல கணவனை எழுப்பினாள்.

“என்னங்க… நேரம் ஆச்சு…” என தொடங்கியவள், பின்பு சுதாரித்து, “சந்துரு… சந்துரு… எழுந்திரு” என எழுப்பலானாள். தினமும் புத்துணர்வான முகத்தில் விழித்தே பழக்கப்பட்டவனுக்கு, அவளுடைய வாடிய முகத்தை கண்டறிய முடியாதா என்ன? யோசனையோடே எழுந்து கிளம்பினான். ரோகிணி சிகாகோ வந்து நான்கு மாதங்கள் ஆகியிருக்கும், இதுவரையிலும் அவள் இப்படி ஒரு மௌனம் சாதித்ததில்லை.

பொதுவாக ரோகிணி சந்திரனை எழுப்பியத்திலிருந்து வழி அனுப்பும் வரை, அவனுக்கு பிடிக்கிறதா என அறியக்கூட முற்படாமல் வாய் ஓயாமல் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பாள். அவனின் மனநிலை கூட உணராமல் அவள் செய்யும் செயல் பல நேரங்களில் அவனுக்கு எரிச்சலை வாரி வழங்கும். அவன் எங்கு அறியப் போகிறான், அவன் வீட்டில் இருக்கும் அந்த சொற்ப நேரம் தான் அவளால் பேசவே முடியும், மத்த நேரம் எல்லாம் வாயை இறுக மூடியபடி இருக்கவேண்டும் என்று. சுயநலம் பிடித்த பெற்றவர்களின் பிள்ளை என்பதை பிரதிபலிக்கும் மைந்தன் அவன். ஆனால், இன்றையதினம் ரோகிணியிடம் ஒருவித நிசப்தம், வழக்கத்துக்கு மாறான இந்த செயலில் எதையோ இழந்ததைப் போன்று சந்திரன் உணர்ந்தான்.

காலையில் உணவருந்தும்போது, “உடம்பு சரியில்லையா?” என்று மொட்டையாக கேட்டான். அவளது பெயரையும் உச்சரிக்காமல், அவள் முகத்தையும் பார்க்காமல் கேட்ட அந்த கேள்வி, ஏற்கனவே மனசுணக்கத்தில் இருந்தவளுக்கு இன்னும் வருத்தத்தை தந்தது. “ஒன்னும் இல்லை” என்று சொல்லும்போதே குரல் கரகரத்தது.

உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “உக்காரு” என்றான். எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள். “என்ன ஆச்சு?” என்று கேட்க, மீண்டும் இடவலமாய் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தாள். ஒரு பெருமூச்சை விட்டவன், “ஏன் இப்படி பண்ணற? கொஞ்சம் கூட மெசூர்டா பிஹேவ் பண்ண மாட்டியா? என்ஜினீயரிங் முடிச்சிருக்க சொன்னாங்க, பட் ரொம்ப சைலட்டிஷா நடந்துக்கற” என கூறியவன், சிறிது இடைவெளிவிட்டு “எதுக்கு அழற?” என்றான் மீண்டும்.

‘அழுகையை கட்டுப்படுத்தி அமர்ந்திருப்பவளையும் அழும் அளவு தூபம் போட்டுவிட்டு, கேள்வி வேறு கேட்கிறான்’ என்று ரோகிணியின் மனம் அவனை சாடியது. அவளால் மௌனத்தை உடைக்க முடியவில்லை. மௌனத்தை உடைத்தால் அணையிட்டு தடுத்திருக்கும் விழிநீரும் வெளியேறும் என்பது உறுதி. ஆகவே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“ரோகிணி பிளீஸ் என்னை இரிடேட் பண்ணாத. பீ நார்மல். இனியொரு முறை உன் முகத்தை இப்படி நான் பாக்க கூடாது” என அழுத்தமாக கூறியவன், கோபமாகவே மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான். உண்மையில் சந்திரனால் ரோகிணியின் வாடிய முகத்தையோ, சோர்ந்த தோற்றத்தையோ பார்க்க முடியவில்லை. அவனது குற்றப்பத்திரிகை நேசம் கொண்ட மனதின் வெளிப்பாடு. அவன்தான் அன்பை பொழியும் மொழி அறியாதவன் ஆயிற்றே! ஆகையால், தனது கோபத்தின் மூலம் பதிவு செய்து விட்டு போனான்.

அவன் சென்ற வழியையே பார்த்தவள், உதடு சுளித்து, “உன்னோட ட்ரேட் மார்க் டைலாக் ‘யூ ஆர் நாட் மெசூர்ட் எனாஃப்’ ன்னு சொல்ல மறந்துட்ட சந்துரு” என்று முனங்கினாள். அவள் மனம் அவளை எள்ளி நகையாடியது. ‘வாய்க்கு வந்தத சொல்லிட்டு போறான். நீ என்னடான்னா இதெல்லாம் மறந்துட்டான்னு எடுத்து குடுக்கிற? நேத்து நைட் தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கான். ஏன்னு கேக்க மாட்டீங்கற?’ என ஏக வசனத்தில் அவள் மனம் ஏச, இன்னும் ஏதோ ஒரு வித நம்பிக்கை, நேற்றைய சம்பவம் அவள்மீது கொண்ட கோபத்தில் நிகழ்ந்திருக்கும் என்று, ஆனாலும் சந்தேகமும் முழுவதுமாய் அகலவில்லை.

ரோகிணியின் மனம் சந்தேகிப்பது மெய்தானா என உறுதிப்படுத்த கணவன் தாமதித்து வரும்பொழுது விழித்திருந்து பரிசோதித்தாள். அந்தோ பரிதாபம்! அவளது எண்ணத்தை பொய்யாக்காமல் அவளது கணவன் மெல்லிய தடுமாற்றத்தோடு வந்தான். ‘ஆக, அவன் தாமதித்து வருவது இதனால் தான், நாம் தான் வேலை செய்து களைத்து வருகிறான் என்று எண்ணிக் கொண்டோமா! என்ன மடத்தனம்? கணவனின் சாதாரண நடத்தையை கண்டறிய இத்தனை மாதம் தேவைப்பட்டு இருக்கிறது’ என அவளின் மனம் மிகுந்த பாரமாகி போனது. இந்த பாரங்கள் வரும் காலத்தில் கூடிக்கொண்டே போகும் என அவளிடம் யார் சொல்லி தேற்றுவது.

Advertisements

One thought on “யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 06”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: