Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 05

வருகை

5

 

இன்று

என்னவோ

நான் சகலமும்

அடைந்து விட்ட

திருப்தி பிறந்தது

ஆனால்

நம் பிரிவில்

ஒரு சலனமும் இல்லை

அது ஏனோ…..

 

புது மலராய் புன்னகை மாறாமல் வந்தவளை “சீனியர் ராக்கிங்” செய்ய அழைத்த போது இருமடங்கு மிரண்டு போய் நின்றாள், பிரியா. அவ்வழியே வந்த  சீனியர் மாணவன்  தீபக் பிரியாவை கண்டவன், திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல முழித்து கொண்டிருந்தவளுக்கு உதவிக்கு வந்தான். போதும் அஞ்சலி அவள் பயப்படுறாள் விட்டுவிடு, என்று பிரியா அருகில் வந்து நின்று அவளை ராகிங் செய்து கொண்டிருந்த சீனியர் மாணவியிடம் பேசினான் தீபக்.

 

முதல்முறை ஒரு ஆண் தன்னை விடுத்து மற்றொரு பெண்ணிற்கு உதவ முன்  வருவதை எண்ணி கோபம் கொண்டவள், பிரியாவின் புறம் திரும்பி கனல் பார்வையை செலுத்தியபடி   இப்படி ஊமை மாதிரி நடித்து  இன்னும் எத்தனை பேரை மயக்கப் போகின்றாய் , ஒழுங்காய்  நான் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லும்  வேலையை  மறுக்காமல் செய்தால் தான்  உன் கிளாஸ்ரூம்குள்  நல்லபடியா போகலாம் இல்லை, என்று குனிந்து பிரியாவிற்கு மட்டும் கேட்கும் குரலில், என்னை பற்றி உனக்கு தெரியாது நான் நினைத்தால் இப்போதே உன் சீட்டை கிழித்து வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்  மறந்துவிடாதே என்று  மிரட்டினாள் அஞ்சலி. இனியும் அமைதியாக இருந்தால் பிரச்சனை  கூடிக்கொண்டே போகும் என்று உணர்த்தவள் தானாக பேச நினைத்தாலும் பயத்தில் வாய் ஒட்டிக்கொண்டது  போல இருந்தது தைரியத்தை வரவழைத்து பேச துவங்கினாள் பிரியா.  அது வந்து அக்கா என் பெயர் பிரியா, ஊர் தேனி, என்று திக்கித்திணறி தன் விபரம் சொன்னாள் பிரியா.

 

ஓ அப்படியா சரி அங்கே இருந்து இங்கே எதுக்கு வந்தாய் ஏன் உன் கிராமத்தில் கல்லூரியே இல்லையா? என்று கேட்டு சிரித்தனர் அஞ்சலியின்  தோழிகள்.  அவர்களை அடக்கிவிட்டு அக்கா வா என்ன உறவு முறை எல்லாம் பலமாய் இருக்கின்றது  ஒழுங்கா சீனியர் என்று மட்டும் சொல்லு போதும், என்றாள் அஞ்சலி.

 

ஏன் இங்கே வந்தாய் என்ற அஞ்சலின் கேள்விக்கு படிக்கத்தான் கல்லூரிக்கு வருவார்கள்  வேறு எதற்கு வருவார்கள், உன் கேள்வியே முட்டாள் தனமாய் இல்லை  என்று   பிரியாவிற்கு பதில் முந்திக்கொண்டு  கூறினான்   தீபக். அவன்  பதிலில் கொதிப்பின் உச்சத்திற்கே சென்றாள் அஞ்சலி, உனக்கு இங்கு என்ன வேலை தீபக், இது பெண்கள் ராக்கிங் பகுதி உன் வேலையை பார்த்துக்கொண்டு சென்று விடு இல்லை என்னை பற்றி உனக்கு தெரியும்தானே புதிதாக எந்த பிரச்சனையிலும்  மாட்டிக்கொள்ளதே, என்று எதையோ நினைவு படுத்துவது போல் கூறி மிரட்டினாள் அஞ்சலி.  தீபக் மனதில் சிறு அச்சம் பிறந்தது, பிரியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

“ம்ம்” அங்கு என்ன பார்வை கேட்டதற்கு பதில் சொல் அஞ்சலி குரலில் நடுங்கிய படி அப்பாவிற்கு வேலை மாற்றுதல் வந்தது அதனால் தான் என்றாள் பிரியா. பதில் சொல்ல இவ்வளவு நேரமா? சரியான அசமாந்தம் என்று சிடுசிடுத்தவள், சரி இதோ இந்த பூவை வாங்கிக்கொள் அங்கு பார் அது தான் பசங்க ராக்கிங் பகுதி அங்கு உள்ள யாரிடமாவது இந்த பூவை கொடுத்து “பிரப்போஸ்” செய்ய வேண்டும் என்றாள்,அஞ்சலி.

 

பயத்தில் விழித்தவளை கண்டு ஏய் அஞ்சலி நீ “இங்கிலீஷ்” ல சொன்னது இந்த பட்டிகாட்டுக்கு புரியவில்லை  போல எப்படி முழிக்கின்றது  பார் என்று ஒருவள் கேலி செய்ய ப்ரியாவின் கண்களில் கண்ணீரே வந்து விட்டது, இருந்தும் அஞ்சலிக்கு மனம் இறங்கவில்லை,  தினம் தினம்  அழகாய் தெரிய ஒப்பனைக்கே ஒரு மணிநேரம் செலவிடுபவள் அஞ்சலி, ஆனால் இவளோ எந்த ஒப்பனையும் இல்லாமல் ஒரு சாதாரண உடையிலேயே அழகாக தெரிகிறாள் என்று அஞ்சலிக்கு ப்ரியாவின் மேல்  பொறாமை உணர்வு ஏற்பட்டு இருந்தது, எனவே அவளை அவ்வளவு எளிதில் விட அஞ்சலின் மனம் ஒப்பவில்லை. கண்ணீர் விட்டு ஏமாற்ற முயலாதே இதை செய்து விட்டு நீ  போகலாம்,  அங்கு என்ன நடகின்றது இவளுக்கு எப்படி தெரியும் என்று என்னை ஏமாற்றிவிடலாம்  என்று எண்ணாதே, பின்விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அனுப்பிவைத்தாள், அஞ்சலி.

 

இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று உணர்த்த பிரியா அவர்கள் சொன்ன படி பூவை பெற்றுக்கொண்டு ஆண்கள் இருந்த பகுதியை நோக்கி சென்றாள். அவளை உனக்கு முன்பே தெரியுமா அஞ்சலி, எதுக்கு உனக்கு அவளிடம் அவ்வளவு கோபம் உன்னிடம் ஏதும் வாலை ஆடிவிட்டாளா?.என்ற ரம்யாவின் கேள்விக்கு இவள் எல்லாம் எனக்கு ஒரு ஆளேயில்லை, இவளிடம் எனக்கு என்ன கோபம், சும்மா தான் ரொம்ப பயந்தமாதிரி நடித்தாள் பார்  அதான் இந்த தண்டனை என்றவளிடம், நீ கொடுத்த தண்டனை உனக்கே வினையாக போகுது பார், அந்த பட்டிக்காட்டு பிரியா உன் ஆளை நோக்கித்தான் செல்கிறாள் என்றாள் ரம்யா.

 

சீனியர் கொடுத்த பூவை பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்ன இடம் நோக்கி சென்றவள் தடுமாறிப்போனாள் அங்கும் பலர் இருந்தனர் இங்கும் ராக்கிங் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் ரயில் ஓட்டிட, ஒருவன் தரையில் நீச்சல் அடிக்க, ஒருவன் பூனை நடை நடந்து கொண்டு இருந்தான். ஒருவன் மட்டும் ஓரமாய் ஒதுங்கி  தனியே நிற்பது கண்டு, நேரே அவனிடம் சென்று முகத்தை கூட நிமர்த்து பாராமல் கையில் இருந்த பூவை அவனிடம் நீட்டியவள் “ஐ லவ் யூ” என்று கூறிவிட்டு வேகமாய் திரும்பி நடக்கதுவங்கினாள் பிரியா.

 

ஒரு நிமிடம் என்று பூவை பெற்றுக்கொண்டவன் திமிராய் பிரியாவை அழைக்க, அந்த நேரத்தில் அங்கு வந்த தீபக் அது வந்து என்று இழுத்தான், வந்தாவது போயாவது, நீ சும்மா இரு அவள் பாட்டிற்கு வந்தாள் “ஐ லவ் யூ”  கூறிவிட்டு செல்கிறாள், என் பதில் என்ன என்று நான் கூறவேண்டாமா?. ஏய் உன்னை தான் இங்கு வா என்றான் அவன். மிரண்டு நின்றவளிடம் தீக்குச்சிக்கு பயந்து தீப்பந்ததிடம் மாட்டிகொண்டயே? சரி வா நான் பேசி பார்க்கிறேன் என்றான் தீபக்.

ஏதோ இனம் புரியாத உணர்வு ஆட்கொள்ள மெதுவாய் தற்போது அவன் அமர்ந்திருந்த மரத்தடிக்கு நகர்ந்தாள். உன் பெயர் என்ன ராக்கிங்கா?என்றான் அந்த புதியவன். அது வந்து சீனியர் செய்ய சொன்னாங்க அதனால் தான் அப்படி சொன்னேன் சாரி அண்ணா என்று குனிந்த தலை நிமிராமல் பதில் அளித்தாள் பிரியா.

 

அண்ணாவா இப்போது தான் காதலிக்கிறேன் என்றாய் அதற்குள் அண்ணன் ஆகிவிட்டேனா, என்ன சோதனை கடவுளே ஒரு அழகான பெண் வழிய வந்து காதலிப்பதாய் கூறவும் காற்றில் பறந்தேன் அடுத்த நொடி அண்ணன் என்று சொல்லி இப்படி கவிழ்த்துவிட்டாயே என்று போலியாய் வருத்தம் காட்டி உச்சுக்கொட்டினான் புதியவன். இங்கே பார் பாப்பா நான் அண்ணனில்லை,  என் பெயர் ஸ்ரீராம் நண்பர்களுக்கு ஸ்ரீ உனக்கு மாமா முறை சரி தானே செல்லம் என்ற ஸ்ரீராமை மருண்ட விழியில் மிரண்டு போய் பார்த்தாள் பிரியா.

 

அவள் பின் வந்த தீபக், எல்லாம் அஞ்சலி வேலை தான், பிரியா ஏற்கனவே ரொம்ப பயந்து இருக்கிறாள் அவளை மேலும் பயமுறுத்தாதே  ஸ்ரீ, என்று பிரியவிற்காக பேசினான் தீபக். பிரியா என்று அவள் பெயரை மெதுவாய் உச்சரித்தவன்  பயத்தில் உடல் நடுங்க நின்றிந்தவளை  கண்டு பிரமித்து போனான், எளிமைலும் என்ன அழகு என்று வியந்து போனான், அவளை இன்னும் அறியும் ஆவல் வந்தது, தன் எண்ணம் போன திசை கண்டு சற்று கடுப்புடன் ஏன் தீபக் சீனியர் ராக்கிங் வழக்கம் தானே ஏன் நாம் செய்யவில்லையா? நீ ஏன் வந்ததில் இருந்து இவளுக்கு ரொம்ப “சப்போர்ட் ” பண்ணுற என்ன விஷயம் என்றான் ஸ்ரீ.

 

அது ஒன்றும் இல்லை அந்த வழி வந்தேன் பார்க்க பாவமாய் இருந்தது அதனால் தான் வேற ஒன்றும் இல்லை என்றான் தீபக்.  ஒன்றும் இல்லை அல்லவா? அது வரை சந்தோசம் என்றவன் சத்தத்தில் அருகிலிருந்த நண்பர்கள்  என்ன என்று வினவியபடி அருகில் வர,   மெல்லிய புன்னகை சிந்தியபடி நடந்ததை விளக்கினான் ஸ்ரீ. “ஓ”என்ற கூச்சலுடன் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.  இதோடு எத்தனை பேர் உனக்கு “பிரபோஸ்” பண்ணுவது என்று ஒருவன் கேலி செய்ய நீ வேற அவள் இன்னும் என் முகத்தை கூட பார்க்கவில்லை, என்று கவலை குரலில் கூறினான் ஸ்ரீ.

எங்களுக்கு யாரும் மாட்டமாட்டேன் என்கின்றார்கள்  இவங்க  உங்களை பார்க்கவில்லை என்பது தான் உங்களுக்கு வருத்தமா? என்று மேலும் கேலி தொடர.  இப்படி மாட்டி கொண்டோமே என்று தன்னை தானே நொந்து கொண்டு இருந்தவள் ஸ்ரீயின்  கேள்வியில் அதிர்ந்து போனாள், பிரியா.

நீ “மேஜரா மைனாரா” என்றவன் அவள் மிரண்டு நிற்பதை கண்டு அவள் அருகில் இறங்கி வந்து இல்லை காதலிக்கிறேன் என்றாயே அதான் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன். திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம் பிரியா, ஸ்ரீ பிரியா ஸ்ரீப்ரியா பெயர் பொருத்தம் கூட நன்றாக இருக்கிறது. நீ என்ன சொல்கிறாய் தீபக் சாட்சி கையெழுத்து போட நீ வருகிறாயா? என்று கூறி வாய்விட்டு சிரித்தான், ஸ்ரீ.

 

அய்யோ  என்று அலறியபடி சீனியர் சொன்னதால் தான் செய்தேன் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்று படப்படத்தாள் பிரியா. ப்ரியாவின் தடுமாற்றம் ஸ்ரீக்கு புது அனுபவமாய் இருந்தது, கலங்கிய முகம் தனக்கும் கலகத்தை கொடுப்பதாய் உணர்ந்தவன்,  இதுவும் ராக்கிங் தான் பிரியா சரி நீ போகலாம் என்று அவளை அனுப்ப முற்பட்டவனை தடுத்தான், வினோத்.               அது எப்படி ஸ்ரீ நாங்கள் பார்க்கவில்லை அதனால் “ஒன்ஸ்மோர்” டா மச்சான் எங்களுக்காக என்று இழுத்தான், வினோத்.   நீ என்ன நம்ம மச்சான் கிட்ட போய் இப்படி கெஞ்சிக்கொண்டு இருக்கின்றாய்  ஒரு முறை சொன்னவளுக்கு  இன்னோரு தடவை சொல்வது  அவ்வளவு கஷ்டம் இல்லை அப்படி தானே பாப்பா என்று பிரியா வை சீண்டினான் விக்னேஷ்.  மச்சான் ஸ்ரீ சொல்ல சொல்லுடா நேரம் ஆகின்றது  என்று பரபரத்தான். ஏதாவது செய்து கப்பற்று என்று வேண்டுதல் பார்வையில் தீபக்கை  பார்த்தாள்  பிரியா.  இந்த பார்வை பரிமாற்றத்தை கவனித்த ஸ்ரீக்கு அது என்ன நான் இருக்கும் போது அவனிடம் உதவி  கேட்பது என்று உள்ளுக்குள்  கோபம் வந்தது, இது என்ன இப்படி யோசிக்கின்றோம் இவள் யார் எனக்கு என்னிடம் உதவி கேட்கவில்லை என்று எனக்கு எதற்கு கோபம் வரவேண்டும் என்று நினைத்தவன்  ஆனால் இந்த உணர்வு  கூட சுகமாய் உள்ளதாய் உணர்ந்தான் ஸ்ரீ.

 

தனக்குள் உண்டான புது உணர்வை  தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு,  விக்னேஷ்யிடம் என்னை மச்சான்னு சொல்கிறாய்  அப்படியென்றால்  இவள் உனக்கு தங்கச்சியா? இன்றைக்கு  உலகத்துக்கே மழை வரப்போகின்றது  நம்ம விக்கி முதல் தடவை ஒரு பெண்ணை தங்கை என்று ஒத்துகொண்டான் கண்டிப்பாக இதை கொண்டாட வேண்டும், வாங்க கேன்டீன் போகலாம் நான் ட்ரீட் தரேன் என்றான் ஸ்ரீ.  நீ ஏன் நழுவபார்கிறாய் ஸ்ரீ வெட்கமா? என்று அவனின் எண்ணத்தை கண்டுபிடித்து அவன் முயற்சியை தடை செய்தான் வினோத். நீ இன்னும் போகவில்லையா என்பது போல  பிரியாவை பார்த்தான் ஸ்ரீ.

 

அவள் எப்படி செல்வது அவளை சுற்றி தான் ஸ்ரீயின்  மற்ற நண்பர்கள் நிற்கின்றார்களே அதை பிறகு தான் கவனித்தவன், இருந்தும் நண்பர்கள் விடவில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை சொல்லும் படி அவளை கேட்டுக்கொண்டவன் அவள் தயங்குவதை கண்டு இதையும் ராக்கிங் என்றே எடுத்துக்கொள் பிரியா என்று சமாதானம் கூறியவன் மனதில் மீண்டும் அவள்  வாயால் அந்த வார்த்தையை கேட்க  ஆவல் எழுந்தது.

 

ஸ்ரீயின்  கைகளில் இருந்து பூவை பெற்றுக்கொண்டவள் முன்பு போலவே தலை நிமிராமல் ஆனால் முன்பைவிட தடுமாறியபடியே  அதே வார்த்தையை திரும்ப கூறிட பிரியா. இது உண்மையாய் இருக்ககூடாதா என்று ஸ்ரீ மனம் ஏங்கியது.

 

 

எங்கள்  ஸ்ரீயின் முகம் அவ்வளவு கொடூரமாகவா உள்ளது முகத்தை பார்க்க இப்படி பயப்படுகிறாய் என்று கலாய்த்தான் விக்கி. அவன் முகத்தை பார்த்து திரும்ப சொல்  இல்லை இங்கிருந்து  போக முடியாது என்று மிரட்டினான் வினோத்.  அவர்கள் கூறியபடி நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தவள் தடுமாறிப் போனாள் அவனுக்கும் அப்படி தான் இருந்தது போல வார்த்தைகள் கூறி முடிப்பதற்குள் திணறிப் போனவள் அவர்கள் அனுமதி தரும்முன்பே  தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட துவங்கினாள் பிரியா.  அவள் சென்ற திசையை வெறித்து நோக்கியபடி இருந்தான் ஸ்ரீ.

 

எங்கிருந்து வந்தாயடி!!

என்னை பார்த்து

பொய் காதல் உரைத்தாய்

என்னுள் மெய் காதல்

முளைத்தது….

நீ விலகி சென்றாய்

என் நிழல் கூட சுடுகின்றது……

பிரியாவை பின்தொடர்ந்து சென்றான் தீபக், பிரியா கொஞ்சம் நில்லுமா இது எல்லாம் கல்லூரி வாழ்கையில் சாதாரணம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்று அவளை தேற்ற முயன்றான்.

உங்களை அண்ணா என்று  கூப்பிடலாமா  அனுமதி கேட்டவள் அவன் அனுமதியுடன் நன்றி அண்ணா, எனக்கு உதவியாய் இருந்ததற்கு என்றாள் பிரியா.

 

நன்றி எதற்குமா நானும் வந்த புதிதில் உன்னை போல தான் மிரண்டு நின்றேன், என்றவன், அவள் கேட்கமலேயே பல விபரம் சொன்னான். அஞ்சலி இளநிலையில் கடைசி வருடம், அவள் அப்பா இந்த கல்லூரியில் ஒரு நிர்வாக உறுப்பினர் அதனால் தான் அவளுக்கு இவ்வளவு மரியாதை என்றவன் தயங்கிய படி நான் ஏதும் செய்ய முடியவில்லை என்றான் தீபக் குற்றயுணர்ச்சியுடன் இதற்கு மேல் நீங்கள் என்ன செய்தாலும் அது உங்களுக்கே பிரச்சனையில் முடிந்திருக்கும்  என்றாள் பிரியா.

 

நீ சொல்வதும் உண்மை தான் பிரியா, அவள் தோழி ஒருத்தி என்னை காதலிக்கிறேன் என்று தொந்தரவு செய்தாள், நான் மறுத்ததிற்கு நான் தான் அவளை தொந்தரவு செய்ததாக பழி போட்டு ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணவைத்தாள், அவள் மட்டும் இல்லை ஸ்ரீயும் இந்த இந்த கல்லூரியின் உறுப்பினர் தான். ஸ்ரீ  முதுகலை கடைசி வருடம். நீ இவர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது மறந்துவிடாதே என ஒரு அண்ணனாய்  எச்சரித்தான் தீபக்.

 

நாம் நினைப்பது மட்டுமே நடந்து விட்டால் நாம் கடவுளை எப்படி நினைப்போம்,

ப்ரியாவின் நினைவில் தன்னை மறந்திருந்தான் ஸ்ரீ, ஏனோ இனம் புரியா சந்தோஷத்தில் மூழ்கி இருந்தான்.  மீண்டும் அவளை சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் ஸ்ரீ.

 

எனக்கு

பேராசையெல்லாம்                                                  

ஒன்றும் இல்லை

உன் பெயருக்குப் பின்

என் பெயர் வர வேண்டும்

என்ற பெயராசை

மட்டும் தான்……

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: