Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 04

 

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 04

 

ரோகிணிக்கு சந்திரனை மிகவும் பிடிக்கும். அவளுடைய தாயார் நீலவேணிக்கு அடுத்து அவளின் வாழ்வில் அதிமுக்கியமானவன் அவளுடைய ஆருயிர் கணவன் தான். ஆனால், அவனைப் பொறுத்தவரையில்? பெரும்பாலும் திருமணமான புதிதில் இருக்கும் ஈர்ப்பு தானே, அனைவரின் வாழ்விலும் பிணைப்பை உருவாக்கும் அடித்தளம். இங்கே அதுவே ஆட்டம் காணுகிறதே! ஒருவேளை தான் அவனை கவர எந்த முயற்சியும் எடுக்கவில்லையோ? நாள் முழுவதும் வேலை, வேலை என்று அலைபவருக்கு இருக்கும் சோர்வும், சலிப்பும் நம்மை கவனிக்க விடுவதில்லையோ என பலவாறு யோசித்து, கோமதி கூறியதை செயல்படுத்த நினைத்தாள். ஆனால், நிச்சயம் இப்படி ஒரு எதிர்வினையை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

“என்ன ரோ? என்ன ஆச்சு?” என சந்திரன் மீண்டும் சற்று அழுத்தி கேட்க, எப்பொழுதும் போல அவனின் பிரத்யேக அழைப்பு அவளை குளிர்வித்தது. ‘ஒருவேளை இதுதான் அவரோட நேச்சர் போல!’ என மனதை முயன்று சமாதானம் செய்து, “ஒன்னும் இல்லைங்க” என்று கூறி சப்பாத்திகளை அவனுக்கு பரிமாறினாள்.

 

உண்டு முடித்தவன், தளர்வாக சோபாவில் அமர்ந்து அவளையும் அருகே வரும்படி செய்கை செய்தான். திருதிருவென முழித்தபடி அவன் அருகே சென்றாள். பின்னே, எட்டாம் அதிசயம் அல்லவா நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கைப்பேசியில் பேசிக் கொண்டே இருப்பவன், இப்படி அவளிடம் பேச அழைத்தால்? தயங்காமல் எப்படி இருக்க? சந்திரனுக்கும் அவளிடம் அவ்வப்பொழுது எழும் தயக்கங்கள், ஏன் என்றே புரிந்ததில்லை. இன்றும் அவள் பாவனை புரியவில்லை தான், ஆனாலும் மிகவும் ரசனைக்குரியதாய் இருந்தது.

 

அருகில் வந்து அமர்ந்தவளிடம், “ரோ… உன்கிட்ட கொஞ்சம் பேசணும். தப்பா எடுத்துக்க மாட்ட தானே?” என கேள்வியாக நிறுத்த, ‘பேசறதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு’ என்று தோன்றியபோதும் மறுப்பாக தலையசைத்தாள்.

 

“குட். நீ ரொம்ப டிப்ரண்ட். பொதுவா உன்னை மாதிரி பாக்கிறது ரொம்ப அபூர்வம். எப்படி சொல்ல…” என வார்த்தைகளையும், சம்பவங்களையும் யோசித்தவன் பின்பு நினைவு வந்தவனாக, “ஹ்ம்ம்… நான் உன்கிட்ட கேட்டுக்கிட்டதுக்காக, யூ.எஸ் க்கு பொருந்தற மாதிரி ட்ரெஸ்ஸிங், ஹேர் ஸ்டைலை எல்லாம் மாத்திகிட்ட தானே! ரியலி ஐ லைக்ட் இட். அது மாதிரி தான், இன்னும் சில விஷயங்கள் கூட, எனக்கு கம்பெர்ட்டா இல்லை, எப்படி சொல்ல? ஹ்ம்ம்… அது… நீ என்னை கூப்பிடற பாத்தியா வாங்க, போங்கன்னு… ஏதோ பெரியவங்க கிட்ட பேசற மாதிரி இருக்கு. அது எல்லாம் பிடிக்க மாட்டீங்குது. ஜஸ்ட் பேர சொல்லி கூப்பிடு போதும்!” என்றான் அவன் மனதில் இருப்பதை மறையாமல்.

 

‘உஃப்ப்… இவ்வளவு தானா!’ என்றிருந்தது அவளுக்கு. கூடவே, மனதில் சந்தோஷமும், ‘பிடிக்காவிட்டால் நாசூக்காக சொல்கிறார். பரவாயில்லை’ என்று. அவனைப் போன்றே அவனிடம் பிடிக்காத விஷயங்களை அவனுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்று ஏனோ அவளுக்கு தோன்றாமல் போய்விட்டது. “சரிங்க…” என்று தொடங்கியவள் நாக்கை கடித்துவிட்டு, “சாரி. இனிமே சொல்லலை சந்துரு… உன்னை பேரு வெச்சே கூப்பிடறேன்” என்றாள் சிறுபுன்னகையுடன். அவளுடைய வெட்கமும் அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. ஆனால், அவள் முகச்சிவப்பும் மிகுந்த ரசனைக்குரியதாய் இருந்தது. இதுவரை அவன் அறிந்திடாத பக்கங்கள் இவை!

 

அவனுடைய முழுப்பெயர் சந்திரன் மாணிக்கவேல், ஆகவே இங்கு அனைவரும் அவனை ஷாம் (எஸ்.எம்) என்று தான் சுருக்கமாக அழைப்பார்கள். இந்தியாவில் அவன் அனைவருக்கும் சந்திரன் தான். இவளின் அழைப்பு தனித்துவமாக இருந்ததோடு, ஏனோ சந்திரனுக்கு மிகவும் பிடித்திருந்தது. “என்ன சொன்ன? சந்துருவா? ஹ்ம்ம் பரவாயில்லை ரோ, சூப்பரா தேறிட்ட” என்றான் புருவங்களை ஏற்றி இறக்கி மெச்சுதலாக. அதில் ஏனோ அவளுக்கு மேலும் வெட்கம் வந்தது.

 

பிறகு ரோகிணியே மிகுந்த தயக்கத்தோடு, “அப்பறம் முடிஞ்ச வரை மெயின்டைன் பண்ணறேன், அப்பப்ப என்னை அறியாம மரியாதை வந்துட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்க” என்றாள் மீண்டும். “ஹ்ம்ம் இது வேறயா… சரி சீக்கிரம் பழகிடு” என்று சலுகை அளித்தான் கணவன்.

 

ரோகிணி கணவனின் முகம் பார்த்து, “வேற எதுவும் சொல்லணுமா?” என்றாள் இன்னும் ஆர்வமாக. அது அவனுக்கு விசித்திரமாக இருந்தது. “உனக்கு கோபம் வரலையா ரோ… உன்னோட வழக்கத்தையே மாத்த சொல்லறேனே!” என்று அதிசயித்தான் அவன்.

 

உண்மையில் சந்திரன் சொல்வது அவளுக்கு விளங்கவில்லை. இதில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது? என்பது போன்ற தோற்றம். முன்பு தாயார் கூறியதன்படி நடந்து கொண்டாள், இப்பொழுது கணவன் சொல்படி… ஆகவே, இதில் என்ன இருக்கிறது? என்ற எண்ணம் தான் வந்தது. அதோடு அவனும் முடியாத விஷயம் எதையும் கூறவில்லையே. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பதற்கிணங்க சொல்கிறான். கணவனின் தயக்கத்தை போக்க மலர்ந்த முகத்துடன், “உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கறதுல எனக்கும் சந்தோசம் தான் சந்துரு” என்றாள். ஏனோ அவளை மிகவும் பிடித்தது அந்த நொடி. அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் ஆழ்ந்த முத்தம் தந்தான். அவளின் உயிர் வரை சிலிர்க்கும் அவன் தொடுகை இப்பொழுதும் அந்த வேலையை செவ்வனே செய்தது. முத்தத்தோடு முடிக்கும் மனநிலை இல்லாமல், அது அவளுடனான கூடலுக்கான தொடக்கமுமாய் இருந்தது.

 

ரோகிணி கூறியதன் படி, அவன் சொன்ன விதிமுறைகளை மீறி இருந்தாள், அவர்களின் கூடல் தருணத்தில். ஆம்! தன்னிலை முழுவதும் மறந்திருந்தவளுக்கு, அந்த நேரத்தில் ஒருமையில் அழைக்க எங்கிருந்து நினைவு வரும்? மரியாதை பன்மையில் அவளும் அறியாமல் ஓரிரு வார்த்தைகள் வெளிப்பட்டது. ஆனால், இந்த முறை சந்திரனுக்கு எப்பொழுதும் தோன்றும் எரிச்சல் வரவில்லை. ஏனோ ஆழ்மனது ரகசியமாக ரசித்தது அவளது பிதற்றல்களையும், மரியாதை பன்மையையும். அதை அவனும் அறியாமல் போனது தான் விதியாகி போனது. பின்னாளில் அதற்காக அவனை ஏங்கவும் வைத்தது.

 

சில தருணங்கள் அதிக இன்பத்தை வாரி வழங்கும். ஆனால், அது நிரந்தரம் என்றில்லை. எந்த நொடி வேண்டுமானாலும் மாயம் ஆகலாம். ஏன், அடுத்த நொடியே பெரும் துன்பம் கூட தாக்கலாம். வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது என்று அறிந்தவர் தான் யார்?

 

அன்றைய இரவும் அவ்வாறே! சிறு ஏமாற்றத்தில் தொடங்கியிருந்தாலும், பெரும் மகிழ்ச்சி வெள்ளம் ரோகிணியை சூழ்ந்தது. ஆனால், அதில் அவள் மூழ்கி மகிழும் வேளையில் அந்த வெள்ளம் அவளை துன்ப சுழலிலும் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு, விழிப்பு வர, மெல்ல கண்களைப் பிரித்தாள். எப்பொழுதும் உறங்கும் முன்னர் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வந்து படுப்பாள். ஆனால், அன்றையதினம் கணவன் தான் எதற்கும் விடவில்லையே, அந்த நினைவு அந்த நேரத்திலும் வெட்கத்தை தந்தது, ஆதுர்யத்துடன் கணவனை பார்த்தாள்.

 

ரோகிணிக்கு தற்பொழுது ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும். என்னதான் விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தாலும் இரவும், தனிமையும் அவளுக்கு சற்று பயம் தான். ஆனாலும் கணவனை தொந்தரவு செய்ய அவள் பொதுவாக விரும்புவதில்லை, ஆகவே வழக்கம் போல தனியாகவே அந்த அறையில் இருந்த ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றாள். அந்தோ பரிதாபம், இன்று பார்த்து தான் அந்த விளக்குகள் எரியாமல் இவளை மிரட்ட வேண்டுமா?

 

வெளியில் இன்னொரு ரெஸ்ட் ரூம் இருக்கிறது. ‘இரவில் வேறு எந்த விளக்குகளையும் அணைக்காமல் வந்து படுத்தோமே!’ என்ற நினைவில், முயன்று வரவழைத்த தைரியத்துடன் கதவை திறந்தாள். ஆனால், அங்கிருந்த மை இருட்டு அவளுக்குள் ஒரு கிலியை உண்டாக்கியது. பயத்தில் தொண்டை அடைக்க பேசாமல் அறையை சாத்தி விட்டு, வந்து படுக்கையில் அமர்ந்தாள். இவள் தூங்கியபிறகு கணவன் அனைத்து விளக்குகளையும் அணைத்திருப்பான் என்று புரிந்தது.

 

கணவனை துணைக்கு எழுப்பலாம் என்று பார்த்தால், அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். சிறிது நேரம் பேசாமல் அமர்ந்து கொண்டாள், எப்படி போவது என்னும் யோசனை அவளுள்? சந்திரன் மெதுவாக புரண்டு படுக்க, இவள் அமர்ந்திருப்பதை பார்த்து, “என்ன ரோ, தூங்கலையா?” என்றான் தூக்க கலக்கத்தோடு.

 

“அது… ரெஸ்ட் ரூம் போகணும்…” என்றாள் தயங்கியபடி. “போ… அதுக்கு ஏன் இப்படி உக்காந்துட்டு இருக்க?” என்றான் மெல்லிய எரிச்சல் படர, அதை உணரும் நிலையில் அவள் இல்லை என்பதால், “இல்லைங்க இங்க லைட் எரியலை. வெளில இருட்டா இருக்கு, எனக்கு போக பயமா இருக்கு” என்றாள் பயந்த தவிப்பான குரலில்.

 

“ம்ப்ச்… என்ன ரோ? சின்ன குழந்தை மாதிரி?” என சலிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தி, எதிர்புறம் திரும்பி படுக்க, அவன் மனநிலை இப்பொழுது தான் புரிந்தது. ‘இவரு ஏன் சலிச்சுக்கிறாரு? நானா இவரை எழுப்புனேன்! இல்லை துணைக்கு தான் கூப்பிட்டேனா?’ என்று மனம் சுருங்கியது. முகம் கூட வாடி விட்டது. ஆனால், உண்மையில் அவள் அதை எதிர்பார்த்து தான் அவனிடம் கூறினாள். துணைக்கு வரமாட்டானா? என்னும் ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் தான் அவனிடம் கேட்டாள். நிச்சயம் இப்படி ஒரு சலிப்பை எதிர்பார்க்காததால் அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

 

பயம் வேறு படுத்த, பேசாமல் படுத்துக் கொள்ளப் பார்த்தாள். அதை உணர்ந்தவனோ, “என்ன ரோ, போயிட்டு வா? ஏன் இப்படி பிஹேவ் பண்ணற? இட்ஸ் ஹைலி டிஸ்ஸப்பாய்ன்டிங்” என்றான் மீண்டும் எரிச்சலாக. அதற்கு மேலும் என்ன செய்ய, வேகமாக எழுந்து வெளியே சென்றாள். ரோஷம், அவமானம், வீம்பு என அவள் மனம் கொண்ட உணர்வுகளாலும், அவளுடைய பயத்தை பின்னுக்கு தள்ள முடியவில்லை. பயத்துடனேயே விளக்கை தேடி அதை ஒளிரவிட்டு தனது வேலைகளை முடித்து வேகமாக திரும்பினாள். ஆனால், அதற்குள் அவள் அடைந்த பயமும், பதற்றமும், தவிப்பும் வார்த்தைகளில் அடக்க முடியாது. மிகவும் தவித்து போனாள்.

 

அதே தவிப்போடும், நடுக்கத்தோடும் மெத்தையில் வந்து படுக்க, “இப்போ எப்படி போன? இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் என் தூக்கத்தை கெடுக்கிற” என்றான் இவள்புறம் திரும்பி. இத்தனை நேரம் கூட, தூக்க கலக்கம் எழ முடியாமல் எரிந்து விழுகிறார் என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொள்ள, ஆனால், அவள் கணவனோ விழித்திருந்து வர விரும்பாமல் இருந்திருக்கிறான். ‘என்ன இது?’ என்று நினைவு தான். அவள் மனம் ஏற்கனவே வருந்தி இருக்க, அதை உணராத அவனோ மேலும் வார்த்தைகளை கொட்டினான்.

 

“பாரு ரோ, யூ ஆர் நாட் மெசூர்ட் எனாஃப், உன் பிஹேவியர் ரொம்ப சைல்டிஷா இருக்கு. கொஞ்சம் மாத்திக்க ப்ளீஸ்” என்றான் அறிவுரையாக. “இந்த நேரத்துல கோயில் போகணும்னு அந்த காஸ்ட்யூம் போட்டு நிக்கிற?” என்று அவன் சொல்ல, அவள் பரிதாபமாக விழித்தாள். ‘ராத்திரில யாருடா கோயில் திறந்து வெச்சு இருக்கான்? அதோட வெளில போக எந்த கோட்டும் எடுத்துக்காம போவேனா? உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு அறிவு? உனக்காக புடவை கட்டுன என் புத்திய என்ன சொல்லறது?’ என அவள் சோர்ந்து போனாள்.

 

எதிராளியை வாயடைக்க வைக்கும் சாமர்த்தியம் வாய்ந்தவனோ இன்னும் நிறுத்த மனமின்றி, “அப்பறம் அதென்ன கோயிலுக்கு வழி தெரியலை, கடைக்கு வழி தெரியலைன்னு எப்ப பாத்தாலும் சொல்லற, கூகுள் பண்ணினா எல்லா டீடைல்ஸும் கிடைக்க போகுது” என்று அடுக்க, ரோகிணிக்கு தான் மூச்சு முட்டியது. ‘என்ன இது? விமான நிலையத்திலிருந்து இங்கு அழைத்து வந்ததோடு இவர் கடமை முடிந்து விட்டதா? ஏன் இப்படி பேசுகிறார்?’ என்னும் எண்ணம் அவளை வாட செய்ய, “சாரி சந்துரு…” என்று கூறி பேசாமல் படுத்துக் கொண்டாள். அவன் வாயை அடைக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை. இந்த நள்ளிரவில் சண்டையிடவும் அவளுக்கு மனம் இல்லை.

 

இருவரின் மனதிலும் சஞ்சலம். சந்திரனுக்கு ரோகிணியின் செய்கைகள் வெறுப்பை தர, அவளுக்கோ அவன் பேசியது பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அவனை உண்மையில் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு ஏற்ப எப்படி மாற வேண்டும் என்றும் அவளுக்கு விளங்கவில்லை. வேதனையோடு அந்த இரவை கழித்தாள்.

 

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: