Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 6

பாகம் ஆறு

“பாவம்! பிள்ளைக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று மிகவும் கவலையில் இருப்பவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளணும்” என்கிற தீர்மானத்தோடு தான் லலிதா அவரை அணுகினாள். அவர் இம் எனு முன் அவருக்கு வேண்டியதைகையில் கொண்டு வந்து கொடுத்தாள்.

காயத்ரியின் மாமியார் இங்கேவந்து தங்கின பிறகு அவர்கள் எதிரில் மனஸ்தாபம் வந்தது போலகாட்டிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தது போல லல்லு சுமூகமாகவே நடந்து கொள்ள, நூல் பிடித்தாற் போல ரமேஷும் அவளிடம் தழைந்தே பேசினான்.

மரகதவல்லி என்கிற மரகத்தம்மாவை ரமேஷ் காயத்ரியின் வீட்டில் இருந்து கூட்டிவந்து இங்கே லலிதா வசம் ஒப்படைத்து விட்டு தட்கலில் டிக்கட் வாங்கி காயத்ரியை ஏர்போர்ட்டில்விட்டு விட்டு வருவதற்குள்மரகதம்மா அலையஸ் மரகதவல்லியும் லல்லு ஆகிய லலிதாவும் பரஸ்பரம் அறிமுகம் முடிந்து ஒருவர் மற்றவரை எடைபோட்டு மார்க் எழுதி முத்திரைகுத்தி தீர்ப்புகள் வழங்கி, மனதுக்குள் சில பல முடிவுகள் செய்துகொண்டு பிறகு எதுவுமே நடக்காத மாதிரி சிநேக புன்னகையுடன் தகவல் பரிமாறிக்கொண்டனர்.

என்ன தான் அப்பாவி ரமேஷிடம் உதார் விட்டு ஓங்கிப் பேசினாலும் வயதில் சின்னவளாக இன்றைய தலைமுறை சிந்தனையோடு வலம் வருவதாக தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த லல்லு, மரகதத்தின் தீக்ஷண்யத்தின் முன்னால் டெப்பாசிட் இழந்த உள்ளூர் அரசியல்வாதியாக தோற்றுத்தான் போனாள்.

வந்த சில மணி நேரங்களிலேயே, “அத்தை, என்ன சமைக்கட்டும் சொல்லுங்க?”, என்று பதவிசாக கேட்ட லல்லுவிடம், “எனக்கென்னம்மா, வயசாகினாலேபெரிசா ஜீரண சக்தி இருக்காது. சும்மா மிளகு சீரக ரசம் போதும். மற்றபடி, உங்களுக்கு என்னசாப்பிடணுமோ அதை சமைச்சுக்கோ”, என்று பட்டும்படாமல் பேசினார் மரகதம்மா.

சரிதான், இப்படியே மைன்ட்டைன் பண்ணலாம் என்ற குஷியில், “இதோ லேப்டாப் எடுத்து வைக்கிறேன் அத்தை, உங்களுக்கு பிடிச்சதை யூட்யூபில போட்டு பார்த்திட்டு இருங்க. வசதியா உட்கார்ந்துக்கோங்க”, என்று வசதி செய்து கொடுத்துவிட்டு லேப்டாப்பை ஆன் செய்து கொடுத்தாள்.

சில பல நிமிடங்களுக்கு அவரிடமிருந்து பெரிதாக எதுவும் சத்தம் வரவில்லை. அவருக்குலேப்டாப், youtube இதெல்லாம் அறிமுகமான விஷயங்கள்மட்டுமல்ல மிக சகஜமாக பழக்கமான விஷயங்களாகவும்இருந்ததே லல்லுவுக்கு மிகவும் ஆச்சரியம் தான். எழுபது வயதாகிவிட்டபடியால் இதெல்லாம், இன்றைய தொழில் நுட்பமெல்லாம், அறிந்திருக்கமாட்டார் என்று நினைத்தது தவிடு பொடியானது.

கிட்டத்தட்ட அரை மணிக்கும் மேல்கழிந்த பிறகு, சமையல் முடியும் தறுவாயில் குடிக்க ஏதாவது வேண்டுமா என்று கேட்க போனவளிடம், “அங்க, பானு(அவரது மகள்) வீட்டில் இப்படி ஸ்க்ரீனை தொட்டாலே லாப்டாப்பிலே வேற பாட்டு போடலாமே. இங்க நாமளே டைப் பண்ணணுமோ!”, என்று வேறுகேட்டு லல்லுவை திகைக்கவைத்தார்.

சரிதான், ‘டச் ஸ்க்ரீன் லேப்டாப்’எல்லாம் வேறு தெரிந்து வைத்திருக்கிறார்…. பாட்டி ரொம்ப அப் டு டேட் தான் என்று நினைத்துக் கொண்டாள் லலிதா.

அதற்கு பிறகு அவரிடம் சற்றேமரியாதையான தூரத்தில் நின்று கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் லலிதாவிற்கு பாத்திரங்களை எடுத்து வைத்து சாப்பிட்ட இடத்தைசுத்தம் செய்வது என்று கொஞ்சம் உதவின பிறகு, “காற்றாட நடந்துட்டு வர்றேன், கொஞ்சம் வயிறு உப்புசமா இருக்கு” என்றுசொல்லியபின் அந்தர்த்யானம் ஆனார்.

அப்பாடா என்ற பெருமூச்சோடு இருந்தவளுக்கு பிறகு தான் தெரிந்தது, அவர் மாடிப்படியில்இரண்டாம் மாடியில் இருந்து தரைதளம் வரை இறங்கி விட்டு மீண்டும் ஏறி வந்து என்று இரண்டு மூன்று முறை அப்படி செய்திருக்கிறார் என்று. இரண்டு மூன்று பேர்களிடம்ஹாய் ஹாய் என்று நட்பு பரிமாற்றம் வேறு. காலை சண்டை, பிறகு ஏர்போர்ட் என்று பிசியாகஇருந்ததில் மதிய உணவுக்குப்பிறகு சற்று நேரம் கண்ணயர்ந்து எழுந்து வந்த ரமேஷிற்கு மனைவியின் ஆயாசம் புரியவில்லை.
அரை நாள் மரகதவல்லிஅத்தையை சமாளித்த லல்லுவுக்கு இப்போதே எப்போதடா பத்து நாள்முடியும் என்று இருந்தது. சிலமணி நேரங்களுக்கே கண்ணைகட்டுதே, இவங்களை எப்படி தான் தினம் தினம் சமாளிக்கிறதோ என்று நினைத்துக்கொண்டாள்.

************************

“கண்ணு! செல்லம்! லல்லும்மா!” இதைத்தவிர அத்தையின் முன்னால் வேறெப்படியும் லலிதாவை அழைக்க மாட்டான் ரமேஷ். எத்தனை தான் சோதனை வந்தாலும் இந்த மனுஷனுக்கு ரொமான்ஸ் பண்ணுவது தண்ணிபட்ட பாடு தான் போலும்!

“என்னங்க, பிள்ளைகளை ஸ்கூலில் விட்டுட்டு நான் அப்படியேஒரு பிரெண்டை பார்த்துட்டுவருவேன் இன்னிக்கி”, பவ்யம்போல காட்டிக்கொண்டு தகவல் சொன்னாலும் இதில் பெரும் பகுதி தனக்காக சொல்லப்பட்டவை அல்லஎன்று கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளல்ல நம்ம ரமேஷ்.

“இந்த வாரம் சினிமாக்கு போகலாமா கண்ணு?”, என்றுகேட்டுவிட்டு சைக்கிள் காப்பில் அவள் தோள் மேல் கை போட வந்தவனை லெப்ட்டில் ஒடித்து ரைட்டில் ஜகா வாங்கி நிஜமாகவே பகிரங்கமாக முறைத்து, வடிகரண்டியை பத்திரம் என்பதுபோல ஆட்டினாள் லலிதாம்பிகை.

இவுருக்கு மட்டும் கொஞ்சம் இடம்கொடுத்தா போதுமே, மடத்தையேபுடுங்கற ஆசாமி…. மனதுக்குள்திட்டிக் கொண்டாலும், அத்தையின்முன்னால் “இன்னும் பூஜைமுடிக்கலை, கிட்ட வராதீங்க, நீங்கஇன்னும் குளிக்கலை”,

“இல்லியே, என்ன சொல்லறா நம்மபொண்டாட்டி! நாம ஏற்கனவேகுளிச்சிட்டோமே! குளிக்காத மாதிரியா இருக்கோம்! தேய்ச்சி குளிச்சது பத்தலியோ!”,

லத்தீன் கிரேக்க பார்சிய மொழிபேசினது போல விளங்காமல் திருதிருவென முழித்த ரமேஷைமரகதம் அத்தையின் குரல்குறுக்கிட்டது, “நீ சீக்கிரம் டிபன்வேலைய முடிச்சிட்டு அவனைஅனுப்பி வைக்கிறதை பாரு. அப்புறமா பிரெண்ட பார்க்கபோகலாம்”

தளதளவென கொதித்து ஆவி எழும்பி சூடு பரவி – இத்தனையையும் நீங்கள் இத்தனை நாட்கள் சாம்பாரில்மட்டும் தானே பார்த்திருப்பீர்கள்…. அன்று அந்த கணம் லலிதாவின் மனதில் இதெல்லாம் நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே லலிதாவிடம் காலையில் ரௌத்ரபாவம் பார்த்துவிட்டான், பிறகுபயாநக பாவம், தொடர்ந்து கருணாபாவம் என்று பயணித்ததில் அவள் மனதில் ஓடுவது சும்மா சிசி டிவிகாமெரா போட்டு கண்ணெதிரே காட்டுவது போல ரமேஷுக்கு தெரிந்தது.

ஹாஸ்ய பாவம் இப்போதைக்கு ரமேஷுக்கு வழியில்லை, சிருங்காரம் முயன்று பார்த்து பவுன்சர் ஆகிவிட்டது, இவளோ இப்படி கொதிக்கிறாளே என்று நினைத்துக் கொண்டு சட்டென மனதுக்கு தோன்றியதை சொன்னான், “இதோ பாரு, நேத்தேசொல்லணும்னு நினைச்சேன், மறந்து போச்சு, ஆபீஸ்ல ஆடிட்டிங்சமயம். நான் சீக்கிரம் போயே ஆகணும். டிபன் சாப்பிட எல்லாம் நேரமில்லை. நான் கிளம்பறேன்”, என்றான் மிச்சம் இருக்கும் வீரபாவம் எழுச்சி பெற.

கொதிப்பது சற்றே அடங்க, லல்லுசற்றே சௌஜன்யமாகதலையாட்டலாமா என்று யோசிக்கும் போதே, அத்தை மறுபடியும், “மதிய சாப்பாடு கட்டி வெச்சிட்டியா? பாவம், வேலை அவசரத்துல சாப்பிட முடியுமோமுடியாதோ! அப்படியே அவன்கிளம்பறதுக்குள்ள ஒரு காபிகலந்துடு. டிராவல் கப்புல போட்டுக்கொடுத்துடு. போகிற வழியிலசிந்தாம குடிச்சிக்கட்டும்”

லலிதாவின் மணிக்கட்டில் ப்ளட்பிரஷர் மானிட்டர் வைத்திருந்தால் சும்மா தீபாவளி ராக்கெட் கணக்காக எகிறி இருக்கும். நல்லவேளை, மீண்டும் ரமேஷ் குறுக்கிட்டான், “மதியம் ஆடிட்டர்களோட வெளிய சாப்பாடு, கம்பெனி கொடுக்கணும். காபி எல்லாம் வேண்டாம் லல்லும்மா, சும்மாவே அவங்களுக்கு கம்பெனி கொடுக்கன்னு நானும் அடிக்கடி எடுத்துக்கும்படியா தான் இருக்கும். லேட்டாச்சு, நான் கிளம்பறேன். வரேன் அத்தை”, அதிகம் வார்த்தையை வளர்க்காமல்வாஷிங் மீனில் ரன்னிங் மீனாக எஸ்கேப்பினான்.

ரமேஷ்ஷிடம் பாச்சா பலிக்காததால்மீண்டும் லலிதாவின் பக்கம் பார்வையை திருப்பினார் மரகதவல்லி, “பிரெண்ட பார்த்துட்டு அரை மணியில திரும்பிடுவியா?”, என்று வினவ,

“இல்ல அத்தை, எனக்கு வர்றதுக்கு எப்படியும் பதினோரு மணி ஆகிடும். உங்களுக்கு வேண்டியதை சமைச்சு இங்கே வச்சிருக்கேன். பசிக்கும் போது எடுத்து போட்டு சாப்பிட்டுக்குங்க.
செய்ய வேண்டிய வேலைகள் என்று பட்டியல் போட்ட வேலைகளை முடித்துக் கொண்டு பதினொன்றரை மணிக்கு அகோர பசியுடன் வீட்டுக்குள் லலிதா நுழைந்த போது அத்தை இன்னும் சாப்பிடாமல் தான் இருந்தார்.
“இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க, நான் தான் சமைச்சு வச்சிட்டு போயிருந்தேனே!”, வயிற்றுக்குள் சிறு குடல் பெருங்குடல் எல்லாம்கதகளி டிஸ்கோ மற்றும் பரதநாட்டியம் என்று கலந்து கட்டிஆட, குரல் சற்று ஓங்கியே வந்தது. அதற்கு நேர் எதிராக கண்கள் சற்று குளம் கட்டத் தொடங்கின.

“என்ன இப்போ, எனக்கு பசியே இல்லை. தவிர, எனக்கு தனியா சாப்பிடவே பிடிக்காது. நீ தான்பதினோரு மணிக்கு மேல வந்துடுவேன்னு சொன்னியே, அதான் சேர்ந்தே சாப்பிடலாம்னு காத்திருந்தேன். வா, போன வேலையெல்லாம் நல்லபடியா நடந்ததா? சாப்பிட்டுட்டே பேசலாம்வா!”, என்று அவள் கண்கள் குளம் கட்டினதை கவனிக்காதது போல பேசின படியே தனக்கும் லல்லுவுக்குமாக பரிமாறத் தொடங்கினார்.

“தெரியலை, விசாரிச்சிட்டுவந்திருக்கேன். ரம்… ரம்ஷ்… வந்து இவர்கிட்ட பேசணும்…..”, என்று முனகினவள், கைக்கும் வாய்க்கும் சண்டையாக கவளம் கவளமாக உணவை அள்ளி முழுங்கலானாள்.

ரம் ரமஷ் என்று விட்டு பிறகு இவர்என்று பொதுவாக சொன்னதாகட்டும், பிறகும் அள்ளி அள்ளி உணவை விழுங்குவதாகட்டும், போன வேலை என்னாயிற்று என்பதற்கு குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக முடித்ததாகட்டும் – எதையுமே கவனித்ததாக மரகதவல்லி காட்டிக் கொள்ளவில்லை.

அது மட்டுமல்ல, பிறகு இரவு பத்துமணிக்கு மேல் கணவனும் மனைவியும்  மூடின கதவுக்கு பின்புறம் உரத்த குரலில் வாக்கு வாதம் செய்த போது அது எல்லாம் காதில் விழுந்த போதும் அடுத்த நாள் காலை எதுவும் தெரியாதது போலவே வலம் வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: