Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

சாவியின் ‘ஊரார்’ – 06

6

குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் ‘கேப்பு’களை வைத்து ‘டப்டப்’பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன்,

“கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான்.

“இது ஏதுடா துப்பாக்கி?”

“மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு வந்தாரு. ரொம்ப நல்லவரு மாமா.”

“துப்பாக்கி வாங்கி கொடுத்துட்டாரே உனக்கு. அது போதுமே உனக்கு! ரெண்டு ரூபா செலவிலே நல்லபேரு வாங்கிட்டான் உன் மாமன். அவனுக்கு உள்ளபடியே உன்மேலே அக்கறை இருந்தா என்ன வாங்கித் தருவான்? புக்ஸுங்க வாங்கித் தருவான். பள்ளிக்கூடத்திலே சேர்ந்து படிக்கச் சொல்லுவான். நீ எக்கேடு கெட்டா அவனுக்கு என்னடா? உன் சொத்தெல்லாம் அவன்கிட்டே போயாச்சு. இனிமே நீ படிச்சா என்ன, படிக்காட்டி என்ன?”

சாமியார் அவனுக்காக வாங்கி வந்திருந்த புத்தகம், பென்சில், பேனா, எல்லாவற்றையும் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

குமாரு அந்தப் புத்தகங்களை வாங்கி அவற்றிலுள்ள படங்களைப் பார்த்தான். திரு.வி.க, பெரியார், காமராஜ், அண்ணா, ராஜாஜி இவர்களின் படங்கள் அத்தனையும் இருந்தன.

“காமராஜைத் தெரியுமாடா உனக்கு?”

“நம்ம ஊருக்கு வந்திருக்காரே. மீட்டிங்லே பேசினாரே! ஜெயசங்கர், நம்பியாரெல்லாம் வரமாட்டாங்களா!”

“அவங்க எதுக்கு?”

“அவங்கதான் துப்பாக்கிச் சண்டை போடுவாங்க…”

“நீ துப்பாக்கிலேயே இரு. படிக்காதே. ஏழைப் பிள்ளைங்கெல்லாம் படிச்சு முன்னுக்கு வரணும் நாட்டிலே அறியாமை ஒழியணும்னு பாடுபட்டாங்க. காமராஜரும் அண்ணாவும் ஊர் ஊரா பள்ளிக்கூடங்களைத் திறந்தாங்க. நீ அவுங்களுக்கெல்லாம் நாமத்தைப் போட்டுட்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கே…”

குமாரு புதுப் புத்தகங்களைப் பிரித்து முகர்ந்து பார்த்தான். “நீ எழுத்து வாசனை இல்லாதவன். அதான் புத்தகத்தை வாசனை பார்க்கிறே.” என்றார் சாமியார்.

“நான் படிக்கப் போறேன். நீங்க சொல்லித் தருவீங்களா?”

“ஆவட்டும்… கொள்ளைக்கூட்டம் உங்க வூட்டுக்குள்ளே வரலையா குமாரு?”

“கம்பி போட்டிருக்குதே, எப்படி வர முடியும்?”

“பின்னே யார் வூட்லே கொள்ளை அடிச்சாங்களாம்?”

“டெண்ட் சினிமா முதலாளி வூட்லே…”

“அப்புறம்”

“போலீஸ்காரர் அதோ வராரே!”

“கேள்விப்பட்டீங்களா சாமி?” என்று கேட்டுக் கொண்டே பழனி வந்தான்.

“ஆமாம். முழு வெவரம் தெரியல்லே. கொள்ளைக் கூட்டம்னா யாரு அவுங்க? எப்படி வந்தாங்க? இதுவரைக்கும் கேள்விப்படாத அதிசயமாயிருக்கே!”

“ஒண்ணுமே புரியலீங்க. நைட்ஷோ நடந்துக்கிட்டிருந்தது. அம்மாவாசை இருட்டு. திடீர்னு கரெண்ட் வேறே ஃபெயில். ஷோ பாதியிலே நின்னுட்டுது. இந்த நேரத்துலேதான் கொள்ளை நடந்திருக்கிறது. நாலைஞ்சு வீட்டிலே புகுந்து கொள்ளை அடிச்சிருக்காங்க. நகை நட்டு பணம் எல்லாம் போயிருக்கு. வந்தவங்க யாருன்னே புரியல்லே. ஆத்தோரம் வாராவதி பக்கத்திலே ஒரு ஆள் செத்துக் கிடக்கிறான். அவனைப் பார்த்தா வடக்கத்தி ஆள் மாதிரி தெரியுது. எப்படிச் செத்தான்னே தெரியல்லே. முகமெல்லாம் அடையாளம் தெரியாமே நசுங்கிப் போயிருக்கு. செத்தவன் யாருன்னு தெரியல்லே.”

“டி.எஸ்.பி. க்குத் தெரியுமா?”

“இண்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட்லேருந்து மோப்பநாய்ங்க வந்திருக்குது.”

“செத்தவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?”

“இன்னும் சரியாத் தெரியலையே! பாடி போஸ்ட் மார்ட்டத்துக்குப் போயிருக்கு… மெட்ராஸ் போன காரியம் என்ன ஆச்சு சாமி?”

“பழம்தான், ஆனா இங்கே இப்படி ஆயிடுச்சே. ரெண்டுநாள் ஊர்லே இல்லே. அதுக்குள்ளே இத்தனை கலாட்டாவா?”

பழனி போய்விட்டான். சாமியார் பையைப் பத்திரபடுத்திவிட்டு கிணற்றடிக்குப்போய் வெகுநேரம் குளித்தார். டீ போட்டுக் குடித்தார். குமாருவிடம் காசு கொடுத்து இட்லி வாங்கி வரச் சொன்னார்.

“குமாரு போனதும் கமலா வந்தாள். பிள்ளையாரைச் சுற்றிப் பெருக்கித் தண்ணீர் தெளித்தாள். கோலம் போட்டாள். விளக்கேற்றிச் சூடம் கொளுத்தினாள். பிறகு சாமியாரிடம் வந்து “போன காரியம் என்ன ஆச்சுங்க?” என்று ஆவலோடு கேட்டாள்.

“நீ எதிர்லே வந்தே. நல்ல சகுனம். எல்லாம் பழமா முடிஞ்சுது. உன் புருசனைக்கூடப் பார்த்துப் பேசினேன்.”

“பேசினீங்களா? என்ன சொன்னாரு?”

“வருவான்னுதான் தோணுது. நல்ல மாதிரியாத்தான் பேசினான். யாரோ அவன் மனசைக் கலைச்சிருக்காங்க. நான் எல்லாத்தையும் வெவரமா எடுத்துச் சொன்னேன். என் பேச்சிலே நாயம் இருக்கிறமாதிரி தலையாட்டினான். நாளைக்கே புறப்பட்டு வந்து கமலாவைக் கூட்டிக்கிட்டுப் போ. அவளைக் கண்கலங்கவிடாதே. தங்கமான பெண்ணுன்னு சொல்லிட்டு வந்தேன். வருவான்னுதான் நினைக்கிறேன்…”

கமலா மௌனமாக நின்றாள். நீர் நிறைந்த சோகவிழிகளோடு, நம்பிக்கையோடு, நன்றியோடு, சாமியாரைப் பார்த்தபடி நின்றாள்.

“கையிலே என்ன அது, எண்ணெயா? இப்படிக் கொஞ்சம் கொடு. செருப்பு காலைக் கடிச்சுட்டுது. கடிச்ச எடத்துல தடவறேன். ஆமாம், உங்க வூட்டுக்குக் கொள்ளைக்காரங்க வரலையா?”

“எங்க வூட்லே என்ன இருக்குது? சினிமாக் கொட்டா தங்கப்பன் வூட்லேதான் ஏகப்பணம் போயிட்டுதாம்.”

“அதோ தபால்காரர் வரார் பாரு. உனக்குத்தான் ஏதோ லெட்டர் வருது. கபாலி எழுதியிருப்பான்” என்றார் சாமியார்.

கமலாவிடம் ஒரு தபாலைக் கொடுத்துவிட்டுச் சென்றார் போஸ்ட்மேன்.

அது கமலாவின் புருசன் கபாலி எழுதிய கடிதம்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: