Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 03

 

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி– 03

 

ரோகிணி சென்னையிலிருந்து லண்டன் வந்து அங்கிருந்து சிகாகோ வந்தடைந்தாள். ‘சிகாகோ ஓ’ஹேர் விமான நிலையம்’ வந்தடைவதற்குள் அமெரிக்கன் ஏர்லைன்ஸோடு இருபது மணி நேரங்களுக்கும் மேல் போராடி விட்டாள், அவளைப் பொறுத்த வரையிலும் அவளுக்கு அது மிகப்பெரிய சாதனை.

 

பழக்கப்படாத நெடுநேர விமான பயணம் தந்த அலுப்பைத் தாண்டியும், கணவனை காணப் போகிறோம் என்னும் எண்ணம் அவளுள் பரவசத்தை தந்தது. ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்திருந்த அந்த விமான நிலையம் இரவு நேரம் என்பதால் அழகாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதிவேக ஆங்கிலம், புதிய முகங்கள், அறியாத சூழல், உடலை துளைக்கும் குளிர் என அவ்விடம் அவளை மிரட்டியது என்னவோ உண்மை.

 

விழிகளால் கணவனை தேடியபடி நடந்துவந்தவளின் கரங்களைப் பற்றி திருப்பினான் சந்திரன். எத்தனை நாட்கள் கழித்து பார்க்கிறாள். உண்மையில் அவள் மனம் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. அவனையே பார்த்தது பார்த்தபடி நின்றாள். “என்ன ரோ, கூப்பிட்டே இருக்கேன், கவனிக்காம போயிட்டே இருக்க?” என்று அவன் கேட்ட பொழுது, அவனிடம் இருந்து இன்னும் எதையோ எதிர்பார்த்தது மனம். அதையே விழிகளில் தாங்கி அவனைப் பார்க்க, அவளின் விழிகளின் மொழிகளை புரிந்து கொள்ளும் அள்வு நுணுக்கம் அவனிடம் இல்லையே! ‘மிஸ் யூ…’ என்னும் வார்த்தைகள் அவளுள் அழகாய் கோர்த்து நிற்க, அதை அவன் சொல்லிவிட மாட்டானா என்று மனம் ஏங்கி தவித்தது. அவளாக முதலில் சொல்லவும் மெல்லிய தயக்கம் அவளுள்.

 

ஆனால், சந்திரனோ வெகு இயல்பாக, “ஹொவ் வாஸ் யுவர் ஜெர்னி?” என்று கேட்க, அவளுக்குள் பெரிய ஏமாற்றம், ‘என்ன யாரோ கிட்ட கேக்கிற மாதிரி கேக்கிறாரு?’ என்று மனம் சுணங்கிய போதும் தலையை மட்டும் அவன் கேள்விக்கு பதிலாய் அசைத்தாள். அங்கிருந்து அவனுடைய வசிப்பிடம் இருக்கும் ‘டேரியன்’ பகுதியை நோக்கி பயணித்த பொழுதும் அவள் அவன் முகத்தையே தான் பார்த்தாள். ரோகிணிக்கு சந்திரனை பிரிந்தது பெரும் வருத்தம். இப்பொழுது அவனை கண்டது மனதுள் அத்தனை இதமாக இருந்தது. அதேபோல அவனும் உணர்கிறானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அவளுள் பேரலையாய் எழ, அவனோ வெகு இயல்பாக இருந்தான்.

 

சந்திரனே அவளிடம், “என்ன ரோ, டையர்டா இருக்கா?” என்று அவளின் சோர்வை பார்த்து கேட்க, “லைட்டா” என்றாள் சிறு புன்னகையுடன். உண்மையில் அவளுக்கு குளிர் வாட்டி எடுத்தது. இத்தனை குளிரை அவள் இதுவரை அனுபவித்தது இல்லை. அந்த கனமான ஆடையையும் தாண்டி, குளிர் அவளது உடலை துளைத்தெடுத்தது.

 

அவளின் சோர்வை உணர்ந்தவன், அவளுக்கு உணவு வாங்கி தந்து, இருப்பிடம் அழைத்த செல்ல அவ்விடத்தை பார்த்தவளுக்கு பேச்சே எழவில்லை. ஏதோ பல அடுக்கு மாடி கட்டிடங்களை அவள் எதிர்பார்த்திருக்க, அங்கே அளவாக மூன்று அடுக்குகளில், மேலே கூரை போன்றதொரு அமைப்பில் இருந்த இருப்பிடங்கள் அத்தனை அழகாய், நேர்த்தியாய் இருந்தது. முன்புறம் அதிகம் இடம் விட்டு இருக்க, அதில் புல்வெளிகளும், மலர் செடிகளும் விளக்கின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்தது. விசாலமான சாலை, ஆங்காங்கே சிறு கூட்டம் போல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் என அந்த ரம்மியமான சூழல் மனதிற்கு இதமாய் இருந்தது.

 

இரண்டாம் தளத்தில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றவன் அவளை உறங்க சொல்லி, அவனும் படுத்துக் கொண்டான். ரோகிணிக்கு விமானத்தில் அதிக நேரம் உறங்கியே கழித்ததால், உறக்கம் வரவேயில்லை. இருந்தாலும் இருள் தந்த பயத்தினால் பேசாமல் கண்களை மூடி படுத்துக் கொண்டாள். இதுவரை அனைத்து விஷயங்களுக்கும் தாயை தேடியவள், இனி கணவனை தான் மனம் தேடும். ஆனால், அந்த கணவனோ, அவளை பிரிந்ததற்கான சிறு வருத்தத்தைக் கூட காட்டவில்லை. சரி, அவள் வந்ததில் அடைந்த மகிழ்வையேனும் வெளிப்படுத்துவான் என்றால், அதுவும் இல்லை. சிறு அணைப்பின் மூலம் கூடவா இந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது?

 

‘பொதுவாக ஆண்களுக்கு வார்த்தைகளில் தமது நேசத்தை வெளிப்படுத்த தெரியாது, அவர்களின் சிறு சிறு செயல்களின் தான் நாம் உணர்ந்து கொள்ள முடியும்’ என்று எப்பொழுதோ கேள்வி பட்டதாய் நினைவு. அதைத்தான் வெகு நேரம் ரோகிணியும் எதிர்பார்த்தாள். ஆனால் கணவனோ சிறு அணைப்பின் மூலம் கூட பிரிவுத்துயரை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை பிரிவில் துயர் என்பதே இல்லையோ? அந்த எண்ணம் எழும்போதே மிகுந்த வேதனையாக இருந்தது. இல்லை அப்படி இருக்காது என்று முடிந்தவரை மனதை சமன்படுத்தி எதையும் சிந்திக்காமல் படுத்துக் கொண்டாள்.

 

சந்திரனுக்கு ரோகிணியை பிரிந்ததில் உண்மையிலேயே எந்த வருத்தமும் இல்லை. அவளோடு சில நாட்கள் தான் இருந்தான், அதன்பிறகு இங்கு வந்த பிறகும் கைப்பேசியின் உதவியால் பேசிக்கொண்டு தான் இருக்கிறான். அவள் பிரிவால் எந்த வருத்தமும் இல்லை, அவள் வரவால் பெரிதாக மகிழ்வும் இல்லை. அவன் அவள் பிரிவிற்காக மட்டுமில்லை, வேறு யார் பிரிவுக்கும் வருந்தியது இல்லை. இப்பொழுதும் அவள் களைப்பாக இருக்கிறாள், ஓய்வு தேவை என்று தான் எண்ணினானே தவிர, அவளை அணைத்து ஆறுதல் தர வேண்டும் என்று எண்ணவில்லை.

 

அதன்பிறகு வந்த நாட்கள் எல்லாம் ரோகிணிக்கு ‘ஜெட் லாக்’ (jet lag) இருந்ததால் மந்தமாகத் தான் சென்றது. எப்பொழுது தூங்கினாள், எப்பொழுது உண்டாள் என்று அவளுக்கே தெரியாது. கணவனுக்கு இரவு உணவை மட்டும் மறக்காமல் சமைத்து விடுவாள். இந்திய நேரம் கணக்கிட்டு அவளுடைய அன்னை நீலவேணியிடமும், தோழிகள் கார்த்திகா, கோமதியிடமும் பேசினாள். அவளுடைய மாமனார், மாமியாரிடம் கூட பேசினாள் தான், ஆனால், அவர்களோ நாகரீகத்திற்காக கூட, பிரயாணம் குறித்தோ, அவளின் சௌகரியங்கள் குறித்தோ, மகனின் நலம் குறித்தோ அதிகம் கேட்கவில்லை. அதிகம் செலவு செய்ய கூடாது என்னும் போதனை, அதிகம் பணம் சேர்க்க வேண்டும் என்கிற கட்டளை, பொறுப்பாக இருக்க வேண்டும் என்று பல புத்திமதிகள் என அவளை போதும் போதும் என்று வதைத்து விட்டு வைத்திருந்தனர்.

 

ரோகிணி இயல்புக்கு திரும்பிய பின்னர் குடும்ப பொறுப்பு முழுவதையும் எடுத்துக் கொண்டாள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான். சந்திரன் அவளிடம் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அனைத்தையும் செய்கிறான் தான், ஆனால், அதனுள் மனைவி என்னும் நெருக்கத்தை அவளால் உணர முடிந்ததில்லை. ஏன் நெருங்கிய நட்பு என்று கூட அவள் உணர்ந்ததில்லை. ஏதோ தெரிந்தவரிடம் பேச மாட்டோமா அது போல தான் பேசுவான். அதற்காக அவளுக்கு மனைவி என்னும் ஸ்தானம் தரவில்லை என்று சொல்லிவிட முடியாது, அவளை ஆள்வதில் அவன் எப்பொழுதும் தயங்கியதில்லை. ஆனால், கணவன், மனைவி உறவு என்பது அதில் மட்டும் தானா? எதுவோ நெருடல், மனவுளைச்சல் அவளுக்குள், எதற்கும் விளக்கங்கள் இல்லை. ‘சில காலம் எடுத்த்துக்கொள்ளுமோ அன்னியோன்யம் உருவாக?’ ரோகிணி தனது பெற்றவர்கள் வாழ்க்கையையும் பார்த்ததில்லை, அவளுக்கு விவரம் தெரியும் வயதில் தந்தையை இழந்திருந்தாள், ‘ஒருவேளை பார்த்த்திருந்தாள் புரிந்திருக்குமோ?’ யாரிடம் கேட்க முடியும், மனதோடு சுமந்தாள் கேள்விகளையும், பாரங்களையும்.

 

சந்திரனுக்கு ரோகிணியை பிடித்திருந்தது. அவளோடான வாழ்வு சிறுசிறு குறைகள் என்றாலும் நன்றாகவே சென்றது. அதோடு அவனுக்கு தற்பொழுது குழந்தைக்கான திட்டம் எதுவும் இல்லை. அவன் பழகிய மற்ற பெண்களுக்கு இந்த விவரங்கள் தெரியும் என்பதால், மனைவிக்கும் தெரியும் என்று எண்ணி அது தொடர்பாக அவளிடம் எதையும் பேசியதில்லை. ரோகிணிக்கும் முன்பு கோமதி அவளிடம், “திருமணம் முடிந்ததும் ‘போலிக் ஆசிட்’ டேப்லெட் போட்டா நல்லதுடி. கருவை தங்க வைக்க” என்று கூறிய நினைவில், கணவன் தரும் கருத்தடை மாத்திரைகளை கருவை வலுப்படுத்தும் மாத்திரை என்று எண்ணி போட்டுக் கொண்டாள். அவளுக்கு இது போன்றெல்லாம் செய்வார்கள் என்றே தெரியாதே! அதிலும் கணவன் மருத்துவன் என்னும் பொழுது அவள் இதுபோல எப்படி சந்தேகம் கொள்வாள்? மொத்தத்தில் சந்திரன் அவனாகவே இருந்தான். மனைவிக்காக எதிலும் மாறவில்லை. என்ன மாற வேண்டும் என்று கூட அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

தினமும் ரோகிணி அவளுடைய தோழிகளிடம் பேசும் பொழுது அவர்கள் அவரவர் குடும்பங்கள் பற்றியும், கணவன்மார்கள் குறித்தும், சில சொல்லத்தகுந்த ஊடல்கள், அதனை தீர்த்த விதங்கள் என பேசிக் கொளவதுண்டு. அது உயிர் தோழிகளின் அந்தரங்கம்! அதிலும் அவர்களுக்கு அவர்களாலேயே சூட்டப்பட்ட பெயர்கள் தான் எப்பொழுதும் வழக்கத்திற்கு வரும். ராகி சேமியா, குருத்து, கோமாதா ஆகிய மூவரும் பேசிக்கொள்ளும் தருணங்கள் அவர்களுக்கே அவர்களுக்கானது. தற்பொழுதெல்லாம் தோழிகளிடம் சொல்வதற்கு ரோகிணியிடம் எந்த கதைகளும் இருப்பதில்லை. இருந்தாலுமே, அவள் சில அந்தரங்கங்களை அவ்வளவு எளிதில் பகிர்ந்த்து கொள்ள மாட்டாள் என்பதால் அவளுடைய மௌனம் அவர்களுக்கு பழக்கமே! ஆகையால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வழக்கம்போல அவளை குறையில்லாமல் கேலி மட்டும் செய்வார்கள். அதற்கும் மௌனம் காப்பவளை வெட்கம் கொள்வதாக நினைத்து சீண்டுவார்கள்.

 

தோழிகள் கதை கூறும் பொழுது, ரோகிணிக்கு தான் அதில் பங்கு கொள்ள இயலாது. அப்படியே அவள் பகிர்ந்து கொண்டாலும் எதை பகிர்ந்து கொள்ள முடியும் என்று சிந்தித்து கூட இருக்கிறாள். காலையில் கிளம்பிவிடும் கணவன், அதன்பிறகு இந்த அடைபட்ட வீடு, தன்னிடம் எதையும் அதிகம் எதிர்பார்க்காத கணவன் இவற்றைப்பற்றியா? நினைக்க நினைக்க வேடிக்கையாய் இருந்தது. என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பு கூட வந்தது. ஒருவேளை நமக்கு வாழும் முறை தெரியவில்லையோ என்று கூட எண்ணிவிட்டாள். ஏதோ ஒருவித பயம் மனதினை ஆக்கிரமிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

 

அன்றைய தினம் பேச்சு வாக்கில் கோமாதா, அவளுடைய கணவனுக்கு அவள் புடவையில் இருந்தால், மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தாள். அதனைப்பற்றிய பேச்சுக்களும், கேலியும் சிறிது நேரம் வளர்ந்தது. அவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது சிம்போஸியத்திற்காக புடவை கட்டியதும், அன்று அவர்களை ரசித்து கேலி செய்த மாணவர்கள் பற்றியும், அவர்களுக்கு பதிலடி தந்தது குறித்தும் பேசி கல்லூரி நாட்களுக்கே சென்றிருந்தனர்.

 

சந்திரன் அன்று இல்லம் திரும்பும் பொழுது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக ரோகிணி புடவையில் இருந்தாள். அவளை ரசனையாக பார்த்தவன், “எங்க கிளம்பிட்ட ரோ?” என்று கேட்க, ‘என்ன கேள்வி இது? எங்க கிளம்ப போறேன்? அதுவும் இந்த நேரத்துல, தனியா? இவர் இல்லாம நான் எங்க போக முடியும்? எனக்கு இங்க யாரை தெரியும்?’ என்று கேள்விகள் அணிவகுத்து நிற்க, முகம் வாடி விட்டது. ‘ஏர்போர்ட்டில் இருந்து இங்க கூட்டி வந்து விடுவதோட இவரோட வேலை முடிஞ்சதா? இதுவரை எங்கேயும் கூட்டி போகணும் தோணலை! இப்போ தனியா போக சொல்லுவாரு போலவே!’ என ஏதேதோ எண்ணங்கள் எழ, அவன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, அப்பொழுது எதுவும் பேச இயலும் என்று அவளுக்கு தோன்றவில்லை. ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையசைத்து விட்டு, அறையினுள் சென்றாள்.

 

கண்ணாடியில் அவள் பிம்பம் பாரத்தவளுக்கு அவனுடைய கணவனின் விழிகளை எட்டாத வதனம் அவளுக்கும் எட்டவில்லை. அவளின் பிம்பத்தைப் பார்த்தவளுக்கு பாவமாய் இருந்தது. மேலும் நேரத்தை கடத்தாமல் விரைந்து உடை மாற்றி வெளியே வந்தாள். “என்ன ரோ? ஏன் மாத்திட்ட, எங்கேயும் போகணும்னா போயிட்டு வா, நான் சாப்பிட்டுக்கறேன்” என கூற, அவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. எதையாவது கூற வேண்டும் என்பதற்காக, “கோயிலுக்கு போகலாம் நினைச்சேங்க, அப்பறம் கோயில் எங்க இருக்குன்னு தெரியலை, அதான்…” என்றாள் சமாளிப்பாக. அதை சொல்லி முடித்த பிறகு தான் தோன்றியது, ‘இந்த நேரத்தில் எந்த கோயில் திறந்து இருக்கும்’ என்று. அதை யோசித்தபடி அவள் இருக்க, அவனோ இவளின் தோற்றத்தில், “என்ன ஆச்சு ரோ?” என்றான் மீண்டும். கேட்கும் அவனையே விழி அசையாது பார்த்திருந்தாள் ரோகிணி. ஏனோ அவன் மிகவும் வித்தியாசமாக தெரிந்தான், தான் சந்தித்த, தான் கேள்விப்பட்ட வர்ணனைகளுக்குள் அடங்காமல்! வாழ்வின் மீது பயம் கூட துளிர் விட்டது.

 

3 Comments »

  1. ஏங்கும் நாட்கள் நூறா? பல நூறா தோழி?
    Oru velai 100th episodelathan theriyumo!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: