யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

 

கனவு – 01

 

தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.

 

கொஞ்சம் மெதுவாகத் தேயுங்கோம்மா… அந்த மனுசன் கலியாணம் கட்டின அன்றைக்குக் கழுத்தில போட்டது தான். மற்றபடி இது இங்க தானே கிடக்கு. நீங்கள் தேய்ச்சுத் தேய்ச்சே இருக்கிற மிச்ச சொச்சத் தங்கத்தையும் சுரண்டி எடுத்துப் போடுவியள் போல…

 

குரலில் வேதனை வெளிப்படையாகத் தெரியச் சிங்களத்தில் கூறிக் கொண்டிருந்தார் அந்தச் சிங்களப் பெண்மணி. வேலைக்கு வந்த புதிதில் வைஷாலிக்கு இப்படியான பேச்சுக்களெல்லாம் மனசைப் பிசையும். நகையைச் சுரண்டவே தயங்குவாள். அதுவும் தாலிக்கொடி என்றால் சொல்லவே வேண்டாம். கண்கள் கலங்க அந்தப் பெண்கள் கழுத்திலிருந்து கழட்டிக் கொடுக்கும் போது இவளும் சேர்ந்து கலங்குவாள்.

 

இதெல்லாம் ஏழெட்டு வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது இந்தத் தொழிலில் வைஷாலி பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இவளது புள்ளிகள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லப் போதுமானதாக இருக்கவில்லை. இவளுக்கோ திரும்பவும் பரீட்சை எழுதுவதிலும் நாட்டமில்லை. அப்போதுதான் இலங்கை வங்கி வைத்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று முகாமைத்துவ உதவியாளராகப் பணி நியமனம் பெற்றாள்.

 

காசாளராக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்தக் கிளையின் உதவி முகாமையாளராகப் பணி புரிகிறாள். அன்று நகை அடைவில் வேலை செய்யும் உத்தியோகத்தர் வரவில்லை எனவும் இவள் அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தாள். பொதுவாக இவளது வேலை, மற்றவர்களது வேலைகளை மேற்பார்வை செய்து அன்றன்று கணக்கு வழக்கோடு அறிக்கை சமர்ப்பிப்பதே. யாராவது வராதவிடத்து அவர்களது வேலைகளை இன்று போல் பார்ப்பதுமுண்டு.

 

சங்கிலியைத் தேய்த்த இடத்தில் உரைகல்லில் ஒரு சொட்டு சல்பூரிக் அமிலத்தை விட்டாள். தங்கத்தின் நிறத்தில் எந்த வித மாற்றமும் காட்டவில்லை என்பதை அவதானித்த படியே அதன் மீது ஒரு சொட்டு உப்புக் கரைசலையும் விட்டாள். இப்போது சற்று நிறம் மங்கியது.

 

உங்களில நம்பிக்கை இல்லாமல் இல்லையம்மா. இருந்தாலும் எங்கட கடமையை நாங்கள் சரியாகச் செய்யத் தானே வேணும்? தேய்ச்சுப் பார்த்தால் தானே எத்தனை கரட் என்று தெரியுமம்மா?”

 

சரளமாகச் சிங்களத்தில் உரையாடியபடியே வேலையைத் தொடர்ந்தாள்.

 

அதெல்லாம் சுத்தத் தங்கம் அம்மா. எல்லாம் இருபத்திநாலு கரட் என்று கொழும்பில இருந்து என்ர மனுசன் வாங்கி வந்தது…

 

வைஷாலி மெதுவாய்த் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நகை செய்பவர்கள் எளியவர்களை ஏதாவது சொல்லி ஏமாற்றி விடுவார்கள். உண்மையில் அந்தச் சங்கிலி பதினெட்டுக் கரட் தான். பொதுவாக இருபத்துநாலு கரட்டில் நகைகள் செய்வது இல்லை. தங்க பிஸ்கட்டுகள் தான் இருபத்து நாலில் இருக்கும். நகைகள் தரமானவை அதிகம் இருபத்தியிரெண்டு கரட்டில் தான் செய்யப்படும்.

 

உண்மையைச் சொல்லி அந்தப் பெண்மணியின் மனதை நோகடிக்க விரும்பாதவளாய், அவர் கேட்ட தொகை நகைப் பெறுமதியை விடக் குறைவாகவும் இருக்க, எந்த வித வாக்குவாதமும் இல்வாமல் கொடுத்து அனுப்பி விட்டு அடுத்த நபரைக் கவனிக்க ஆயத்தமானாள்.

 

மதியம் தாண்டிக் கொண்டிருந்தது. திங்கள் கிழமை என்பதால் கூட்டம் அதிகம். சின்ன இடைவேளை கூட எடுக்க முடியாமல் வாடிக்கையாளரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது, காலையில் வெறும் தேநீர் மட்டுமே அருந்தியிருக்க, வயிறு கபகப என்றது. இந்த நபரை முடித்துக் கொண்டு சாப்பிடச் செல்வோம் என்று எண்ணியவாறு வேலையைத் தொடர்ந்தாள்.

 

மகே ரத்தரங் ரிக டென்ன… (நகையைத் தாங்கோ)

 

வந்தவரிடம் கேட்டவாறே பணத்தை எண்ணிக் கட்டிக் கொண்டிருந்தாள்.

 

வைஷூ….!

 

இந்த மலையக நகரில் யார் தன் பெயரின் செல்லச் சுருக்கம் கூறிக் கூப்பிடுவது என்று அதிசயித்தவளாய் தனக்கு முன்னே அமர்ந்திருந்த நபரை உற்று நோக்கினாள் வைஷாலி.

 

கண்கள், மூக்கு, வாய் தவிர்த்து அங்கே முகம் என்ற இடத்தில் ரோமக்காடு தானிருந்தது. அதற்குள் எப்படிக் கண்டுபிடிப்பது இது யாரென்று? இவள் எதுவும் பேசாது ஆராய்ச்சியும் கேள்வியுமாய் அவனை நோக்கினாள்.

 

அவனோ அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாய், அவள் விழிகளைத் தவிர்த்து மேசை மீது ஒரு கைச்சங்கிலியையும் மோதிரத்தையும் வைத்தவன்,

 

இரண்டுக்கும் சேர்த்து எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வேணும். ரெண்டையும் தனித்தனி ரிசீட் போட வேணும்.

 

என்று சிங்களத்தில் சொன்னான். வைஷாலிக்கு அவன்வைஷூஎன்று கூப்பிட்டதே பிரமையோ என்ற எண்ணம் தோன்ற, அந்த சந்தேகத்தைப் பின் தள்ளி கருமமே கண்ணாய்ப் பணியைக் கவனித்தாள். அவனும் அதன் பிறகு எதுவுமே பேசாது நகைக்குரிய பணத்தைப் பெற்றுச் சென்றுவிட்டான்.

 

ஆள் அதிகம்  உயரமெல்லாம் இல்லை. கறுப்பு நிறத்தில் தான் சேர்த்தி. அகன்ற தோளோடு உயரத்திற்கேற்ற உடம்பாய் ஆஜானுபாகுவாய்த் தான் இருந்தான். ஆனால், அந்த அழைப்பும் பிரமை இல்லை எனும் விதமாக அவன் குரல் எங்கேயோ கேட்ட குரல் போலப் பரிச்சயமானதாகத் தோன்றியது.

 

இந்த மலையகப் பிரதேசத்தில் என்னைத் தெரிந்தவர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்று யோசித்தவாறே, அவசரமாக அவனது நகைக்குரிய சீட்டைப் பார்வையிட்டாள்.

 

வழக்கமான வாடிக்கையாளர் என்றால் அவரது அடையாள அட்டை இலக்கத்தை மட்டும் கணணியில் பதிந்தால் போதும், மற்றைய விபரங்கள் எல்லாம் தானாகவே அச்சிலேறும். இவனும் இங்கே வாடிக்கையாளன் போல. அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்ததும் விபரங்கள் வந்து விடவே, இவள் பசிக் கொடுமையில் வேறொன்றையும் கவனிக்காது, பற்றுச் சீட்டையும் பணத்தையும் வழங்கியிருந்தாள். அவனும் அமைதியாகவே பணத்தை வாங்கிச் சென்றிருந்தான்.

 

சஞ்சயன் என்ற பெயரைப் பார்த்தவள், மளமளவென கணணித் திரையில் அவனின் மீதி விபரங்களை ஆராய்ந்தாள். அவளின் சந்தேகம் சரியே என்பது போல அது அவனே தான். பிறந்த ஆண்டும், பிறந்த இடமும் ஐயமறத் தெளிவுபடுத்தியது.

 

அவனது தொலைபேசி எண்ணைத் தனது கைப்பேசியில் பதித்தவள், அவனுக்கு அழைப்பெடுக்க எண்ணி விட்டுத் தன் தலையில் தானே குட்டிக் கொண்டவள், பசி தன் வேலையைக் காட்டவும் பணம் வைத்திருந்த பெட்டகத்தைப் பூட்டிக் கொண்டு ஓய்வறையை நோக்கிச் சென்றாள்.

 

உண்ணும் போதும் ஏனோ அவன் ஞாபகமே மையம் கொண்டது. ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு மேலாகியிருந்தது அவனைப் பார்த்து. கடைசியாக உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்த நேரம் பார்த்தது. அதன் பின்னர் அவள் வாழ்வு சுனாமியாய் சுழற்றியடித்ததில் இப்படியொரு ஜீவன் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதையே அவள் மறந்திருந்தாள்.

 

அவனோடு பேச வேண்டும் போன்றதொரு ஆர்வமும் ஆசையும் உந்தித் தள்ளினாலும் அவளது ஈகோ அவனுக்கு அழைப்பெடுக்க இடம் கொடுக்கவில்லை. அவன்வைஷூஎன்று கூப்பிட்டது நிஐம் என்பது புரிந்தவள், பின்னர் எதற்காக அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருந்தாள்.

 

இந்த ஐந்து வருடங்களாக, பெற்றவர், உற்றவர்கள் அனைவரையும் விட்டு விலகி, சொந்த ஊரை விட்டு ஓடி வந்து பாதிக்குப் பாதி சிங்களவர் வாழும்  இந்தப் புது இடத்தில், மொழி புரியாத ஊரில் தனியாகத் தனது வாழ்க்கையைக் கட்டியெழுப்பி நிமிர்வாகவே வாழ்ந்து கொண்டிருந்தாலும் பழைய ஞாபகங்கள் வந்து அடிக்கடி இவளை சுருட்டிப் போடாமலில்லை.

 

தலவாக்கலை இலங்கையில் மத்திய மாகாணத்தில்  நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். சிங்களவர்களும் தமிழர்களும் சரிக்குச் சமமாக ஒற்றுமையாக வாழும் ஒரு பிரதேசம்.

 

இருந்தாலும் கூட வைஷாலியின் துரதிர்ஷ்டம் அவள் பணி புரியும் கிளையில் இவள் ஒருத்தி தான் தமிழ்ப்பெண். சிங்களம், எழுத வாசிக்க பாடசாலையிலேயே ஓரளவு படித்திருந்ததில் கூட வேலை செய்பவர்களோடு பேசிப் பழகியதில் விரைவிலேயே சரளமாகப் பேச ஆரம்பித்து விட்டாள்.

 

வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் இவளையும் சிங்களத்தி என்று எண்ணி சிங்களத்தில் பேசுமளவுக்கு இவள் நடை, உடை, பாவனையும் சிங்களவர் போலவே விரைவில் மாறி விட்டது. இவளது நண்பர்கள் பெரும்பாலும் வங்கியில் கூட வேலை செய்பவர்கள் தான். மற்றையபடி அங்கிருந்த வைத்தியசாலையில் வேலைபார்க்கும் கண்டியைச் சேர்ந்த வைத்தியர் அதுல்யா மட்டும் தான் இந்த ஊரில் இவளுக்கிருக்கும் ஒரேயொரு தமிழ் நட்பு.

 

தாய்மொழியைக் கேட்கவே ஏங்கிப் போயிருந்த மனதிற்கு சஞ்சயனின் வருகை உண்மையில் பேரானந்தமாய் தான் இருந்தது. ஆனால் அவனின் பாராமுகம் சிந்தையைக் குழப்ப, அதை ஒத்தி வைத்து விட்டுத் தனது வேலையில் ஆழ்ந்தாள்.

 

இங்கே சஞ்சயன் நிலையோ, வைசாலியினுடையதை விடப் பரிதாபமாக இருந்தது. இந்த ஜென்மத்தில் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்து, எட்டு வருடங்களாகச்  சொந்த ஊருக்கே போகாது அஞ்ஞாத வாசம் பூண்டிருந்தானோ, அவளையே இப்படி முகத்திற்கு நேராகப் பார்க்கும் போது எப்படி இருக்குமாம்?

 

தன்னை மீறி உணர்ச்சி வசப்பட்டு அவள் பெயரை அழைத்திருந்தாலும் அவள் அடையாளம் கண்டு கொண்டிராதது ஆறுதலாகவே இருந்தது. பெரிதாய் ஒரு மூச்சை வெளியேற்றியவன் தனது மோட்டார் வாகனத்தில் தலவாக்கொல தேயிலைத் தொழிற்சாலையை நோக்கிச் சென்றான்.

 

தொழிற்சாலையை அடைந்தவன் வெளி வாயிலிலேயே இவனையே எதிர்பார்த்துக் காத்திருந்த நபரிடம் பணத்தைக் கொடுத்தான்.

 

அண்ணா…! இந்தக் காசை ஆஸ்பத்திரிக்குக் கட்டிடுங்கோ. அரசாங்க ஆஸ்பத்திரில உங்கட முறைக்கு ஆறு மாசத்துக்குக் கிட்டக் காத்திருக்க வேணும். அதுவரையில் கண் சரியாகத் தெரியாமல் எப்படி வேலை பார்ப்பியள்? வேலை பறி போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்யிறதாக உத்தேசம்? அதனால நீங்க இந்தக் காசைக் கொண்டு போய் பிரைவேட் ஆஸ்பத்திரில ஒப்பிரேசனைச் செய்யுங்கோ. உங்களுக்கு வசதிப்படுற நேரம் திரும்பத் தாங்கோ.

 

கூறியவன் ஒரு சிரித்த முகத்துடன் அவர் நன்றியைப் பெற்றுக் கொண்டு தொழிற்சாலையினுள் சென்றான்.

 

இதுதான் சஞ்சயன். ஒருவருக்கு உதவி தேவை என்றால் முதல் ஆளாய் நிற்பான். அவனுக்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லோருமே மனிதர்கள். அவ்வளவுதான்.தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்என்பதெல்லாம் அவன் அகராதியில் கிடையாது.

 

ஒருவருக்கு உதவி தேவை என்றால் தன் தலையை அடமானம் வைத்தாவது செய்து விட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பான். உழைக்கும் பணமெல்லாம் அவனது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்துப் பொதுச் சேவைக்கே தான் போய்க் கொண்டிருக்கிறது.

 

சஞ்சயனுக்கு ஒரு அக்கா தான். திருமணமாகி ஜேர்மனியில் வசிக்கிறார். தந்தை சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட, தமக்கை தாயைத் தன்னோடு அழைத்துக் கொண்டார்.

 

வயம்ப பல்கலைக்கழகத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை தொடர்பான விவசாயக் கற்கை நெறியை முடித்தவன், பின்னர் ஹட்டன் நகரத்தில் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு, கடந்த மூன்று மாதங்களாகத் தான் தலவாக்கொலவிற்கு மாற்றலாகியிருந்தான்.

 

உள்ளே சென்று தொழிற்சாலையில் தனது பிரிவு வேலைகளைப் பார்வையிட்டான். தேயிலைக் கொளுந்துகள் ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டு விதம் விதமான தேயிலைத் தூள்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

 

தேயிலைக் கொளுந்தைத் தரம் பிரிக்கும் பகுதிக்கு இவன் தான் பொறுப்பாளர். ஒரு தடவை அனைத்தையும் சுற்றிப் பார்த்து விட்டுத் தனது அலுவலக அறைக்குச் சென்று பைல்களோடும் கணணியோடும் வேலையில் ஆழ்ந்தவன், வேலையை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் மணி இரவு எட்டு தாண்டியிருந்தது.

 

அவனுக்கு வேலை தான் உலகம். வீட்டுக்குப் போய் என்ன தான் செய்வது? அவனை அன்போடு வரவேற்க யார் இருக்கிறார்கள்? ஒற்றைப் படுக்கை அறையோடு கூடிய தனி வீடொன்று அவனது அலுவலகத்தாலேயே வழங்கப்பட்டிருந்தது. சமைக்கும் வசதியிருந்தாலும் தனக்கு ஒருவனுக்காய் சமைத்துச் சாப்பிடப் பிடிப்பதில்லை.

 

அதனால் கிடைக்கும் இடங்களில் அந்த நேரத்துக்குத் தேவையான உணவை முடித்துக் கொள்வான். ருசி அறிந்து சாப்பிட்ட காலம் எல்லாம் அந்த எட்டு வருடங்களுக்கு முன்பே முடிந்திருந்தது.

 

தலைக்கு மேலே கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன், ஏதோ எண்ணம் தோன்றியவனாய் அவன் மேசை மீதிருந்த புகைப்படத் தாங்கியைக் (போட்டோ ஸ்டான்ட்) கையிலெடுத்தான். அப்பா இறப்பதற்கு முன்பு தமக்கையின் திருமணத்தின் முன்பு எடுத்திருந்த குடும்பப் புகைப்படம்.

 

அதைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். குடும்பம் என்று ஒன்றிருந்தும் தான் அநாதையாகிப் போன உணர்வு எழ ஏக்கப் பெருமூச்சொன்று அவனையும் மீறி வெளியேறியது. தனது ஜீன்ஸ் பொக்கட்டிலிருந்த தனது பேர்ஸ்ஸை எடுத்தவன் பத்து வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தச் சிறு அடையாள அட்டைப் புகைப்படம் ஒன்றைக் கைகளில் எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான்.

 

இரட்டைப் பின்னலில் நெற்றியில் சிறு கறுத்தப் பொட்டும் காதுகளில் சிறு தங்கத் தோடுகளுமாய் வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க சிறு பெண்ணோருத்தி சிறு முறுவலோடிருந்தாள். கழுத்து வரைதான் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் அதன் வயதைச் சுட்டிக் காட்டும் முகமாக நைந்து போயிருந்தது. அதன் ஓரங்களை நீவிச் செம்மைப்படுத்தியவன்,

 

எப்பிடியிருக்கிறாய் குட்டிம்மா…?”

 

என்றவன், இந்த நெடிய ஆண்டுகளாய் இதயத்தின் அடி ஆழத்தில் ஏற்பட்டிருந்த காயங்களின் ரணம் தாங்க முடியாமல் அப்படியே மேசையில் தலை கவிழ்ந்தான். கனவாய்ப் போய் விட்ட தனது வாழ்க்கை மீதும் தன் மீதும் ஏற்பட்ட சுயபச்சாதாபத்தில் அவன் ரணம் என்னவோ அதிகரித்ததே தவிர இன்று வரை குறைவதாக இல்லை.

 

கனவு நனவாகுமா?

6 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01”

  1. அருமையான தொடக்கம் சத்யா… நானும் இந்த முறை முதலில் இருந்தே நேரம் கிடைக்கும் பொழுது படிக்கப் போகிறேன்… நிறை குறை எல்லாத்தையும் சொல்லப் போறேன்… be ready dear!!!

    1. குறைகள் அறிய ஆவலாய்க் காத்திருக்கிறேன் வெண்பா. நீங்கள் சுட்டிக் காட்டுவது என்னை மேலும் செம்மைப் படுத்த உதவும். மிக்க நன்றி தோழி

      1. அதற்காக தான் சத்யா… ஆனால் உங்களுக்கு அழகான எழுத்து நடை… எந்த குறையும் தோன்றுவதில்லை ☺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22

  கனவு – 22   சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ,   “நீயே போய் பார் வைஷூ…” என்றான்.   “ஏன் நான் போய்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60

60 – மனதை மாற்றிவிட்டாய் காலை எழுந்த திவி ஆதியின் கைக்குள் இருப்பதை கண்டு புன்னகைத்து மீண்டும் அவனிடம் நெருங்கி படுத்துக்கொள்ள ஒரு சில நிமிடம் கழித்து எழுந்தவள் மணியை பார்த்து ‘அட்ச்சோ இவன்கூட இருந்தா எல்லாமே மறந்திடறேன். வேலை இருக்கு…என்னை

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று