மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31

31

ற்று நேரத்தில் சித்தி அழைக்கும் சத்தம் கேட்கவே, கீழே சென்றாள் சுஜி. கூடத்தில் பட்டுப் புடவை அணிந்த பெண்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்து இருக்க, பக்கத்திலே இருந்த சேரில் ஆண்கள் அமர்ந்து இருந்தனர். நடந்து வரும் வழியை ஒருவர் மறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, “கொஞ்சம் தள்ளிக்கோங்க அங்கிள்” என்றாள் சுஜி.

அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். அவர் மூஞ்சியைச் சுளித்த விதமே அவருக்கு அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அது மாதவனுக்கும் பிடிக்கவில்லை என்பதை அவனது கல் போன்ற முகமே காட்டியது.

ல்லோருக்கும் காபியை கலந்து கூடத்துக்கு கொண்டு வந்து கொடுத்த சுஜி, ஹாலின் அருகேயே இருந்த அறைக்குப் போனாள். அங்கே உள்ள சேரில் அமர்ந்தபடி அங்கு அமர்ந்திருந்த அவளை விட சற்று சிறிய பெண்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தாள். என்ன படிக்குறாங்க, எந்த ஊர் போன்ற பொதுவான பேச்சுத்தான். சற்று திரும்பிய சுஜிக்கு சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால் அங்கிருந்தவாறே மாதவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அது என்ன வகையான பார்வை என்று சுஜியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

வந்திருந்தவர்கள் மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது. அந்தப் பெண்கள் நிறம் கம்மி என்பதை விட மினுமினுக்கும் நவாப்பழ நிறம் எனலாம். கிராமத்துக் காற்றும், ஆரோக்கியமான உணவும் அவர்களுக்கு இயற்கையிலே ஒரு விதமான அழகைத் தந்து இருக்க, அதனை உணராதவர்கள் சுஜியைப் பார்த்து ஆசைப் பட்டார்கள்.

“நீங்க களிம்பு ஏதாவது தடவுவிகளா?”

“எதுக்கு?”

“வெள்ளையா ஆகுறதுக்கு?”

“தடவாமையா இப்புடி கலரா ஆனாக? அதெல்லாம் தடவுவாக?”

“என்ன சோப்பு போடுவீக? லக்ஸ் தானே?”

“இருக்கும், இருக்கும். அதுதானே சினிமால நடிகுறவாக போடுறது. மருதைல பூரப் பேரும் அதத்தான் போடுவாய்ங்கலாம். நாஞ்சொன்னது சரிதானே”

தன்னிடம் கேள்வி கேட்டு விட்டு தாங்களே ஒரு முடிவுக்கு வரும் அந்தப் பெண் குழந்தைகளைப் பார்த்து ரசித்தாள் சுஜாதா. அவர்களில் சற்று பெரியவளாகத் தோன்றியவள் மற்றவர்களை அதட்டினாள்.

“பேசாம இருக்க மாட்டிங்க தொன தொனனுட்டு”

அவளை நோக்கி மென்மையாகப் புன்னகைத்த சுஜி, “சின்ன பிள்ளைங்கள ஒன்னும் சொல்லாதம்மா” என்றாள்.

பின்னர் சிறியவர்களிடம், “நான் உடம்புக்கு மஞ்சள் கலந்த பயத்த மாவு, தலைக்கு சீயக்காய் இவ்வளவுதான் போடுவேன். முகத்துக்கு கோகுல் சாண்டல் பவுடர். போதுமா?”

“இதெல்லாம் எங்களுக்கு செஞ்சு தரிங்களா?”

“கண்டிப்பா. நான் அரைச்சு வச்சது நிறைய இருக்கு. நீ வீட்டுக்குப் போகும் போது ஒரு பொட்டலத்துல கட்டி எடுத்துட்டு போ. அப்பறம் அம்மாவை செஞ்சு தர சொல்லு”

“அம்மா…” என்று அந்த சிறு பெண் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது சுஜியை வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

“இங்க வாத்தா” என்று ஹாலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு வெளியே சென்றாள் சுஜி. தலையெல்லாம் நரைத்து, வேலை செய்தே இளைத்து இருந்தார் அந்த அம்மா.

“அலங்காரம் பண்ணாமையே புதுசா பறிச்ச மஞ்சக் கிழங்காட்டம் இருக்கியே. நக, நட்டெல்லாம் போட்டு அலங்காரம் பண்ணா, அந்த மீனாட்சி கணக்கா அம்பூட்டு அழகா இருப்ப. இங்கே இருக்குறவளுகளுக்கு எல்லாம் எம் பதைக்கத்து மேல ஒரு கண்ணு. கவலைப் படாதே வேற யாருக்கும் தர மாட்டேன். என்னோட பதைக்கம் உனக்குத்தான். கல்யாணத்தனைக்குப் போடுறேன். இப்ப இந்தாத்தா பூ வச்சுக்கோ” என்று சொல்லியபடி தானே அவள் தலையில் பூவைச் சூட்டி விட்டாள்.

“மருமக மேல பெரியாத்தாவுக்கு ஆசையப் பாரு” என்று ஒரு பெண் குரல் கேட்கவும் அங்கே வெடித்து கிளம்பியது சிரிப்பு. இதுக்கு நம்ம சிரிக்கணுமா வேண்டாமா? தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்து வைத்தாள் சுஜி.

அந்த வயதான பெண்மணி தணிவான குரலில், “தப்பா நினைக்காதே உன்கூட என் பையன் பேசணும்னு ஆசப்படுறான்” என்றார்.

எந்தப் பையன் என்கிட்ட என்ன பேசணும் என்று சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் மாதவனைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை.

மாதவனின் அருகில் இருந்த அந்த நடுத்தர வயது மனிதர் தொண்டையைக் கனைத்தபடி பேச ஆரம்பித்தார்.

“இந்த பாரு புள்ள, வீட்டக் கருத்தா பாத்துக்கணும். எங்கத்தாக்கு நல்ல மருமகளாவும், என் புள்ளங்களுக்கு நல்ல தாயாவும் இருக்கணும். இதுல ஒண்ணுல குற வச்சாலு நா மனுசனா இருக்க மாட்டேன். அப்பறம் ஒரு விஷயம்; நீ நல்ல சமைப்பேன்னு ரத்தினம் அத்த சொல்லுச்சு. அதனாலதான் வசதி இல்லாத பொண்ணுனாலும் பரவா இல்லன்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல்ல ஒரு டீக்கட பிடுச்சுருக்கேன். காலேல சுருக்க வேலைய முடுச்சுட்டு கடைக்கு வந்துடு. ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு முன்னூறு, நானூறு பஜ்ஜி, வட போட வேண்டி இருக்கும் என்ன? வேலைக்கு சுனங்குனா எனக்கு கெட்ட கோவம் வரும்.”

இப்போது நடந்தது தனக்கு பூ வைக்கும் விழா என்றும், நாகரத்தினத்தின் ஒன்று விட்ட அண்ணன் மகனான அந்த துரைப்பாண்டிதான் மாப்பிள்ளை என்றும், அவ்வளவு நேரம் தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தது அவனது மூன்று மக்கட் செல்வங்கள் என்றும் புரிந்த போது அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள் சுஜி. அந்த விழாவை முன் நின்று நடத்தித் தரும் பொருட்டே மாதவனும் அவனது பெற்றோரும் வந்து இருப்பது தெரிந்ததும், தனது இதயத்தை யாரோ கத்தியால் குத்தியது போல் துடித்துப் போனாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 6உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.  “பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம் கழிச்சு

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த

ஒகே என் கள்வனின் மடியில் – 12ஒகே என் கள்வனின் மடியில் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதி காதம்பரியின் பதில் மற்றும் அவர்கள் அண்மை பற்றியது… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒகே என் கள்வனின் மடியில் – 12 அன்புடன்,