Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

இனி எந்தன் உயிரும் உனதே – 6

தோழி பரிமளாவை முதல் முறையாக மனதில் திட்டினாள் லலிதா. காலை கிளம்பும்போதே இன்று என்னவோ சரியில்லை என்று லலிதாவிற்கு தோன்றியது. அதைப் பரிமளாவிடம் பகிர்ந்து கொண்டாள். அவளோ சட்டையே பண்ணவில்லை. காஞ்சீபுரம் பஸ்டாண்டில் இறங்கியபோது கூட

“என்னவோ கிளைமேட்டே ஒரு மாதிரி இருக்குடி. நம்ம வேணும்னா இன்னொரு நாள் வரலாமா”

 

“அடப்போடி எப்ப பார்த்தாலும் எதையாவது பேசிட்டு. நல்ல காரியம் செய்யக் கிளம்பும்போது சில பல  தடைகள் எல்லாம் வரும்தான். ஆனால் அதையும் மீறித்தான் வேலையை முடிக்கணும். காஞ்சீபுரம் பஸ்டாண்டில் இறங்கிட்டு அப்படியே திரும்பிப் போகணும்னு சொல்றியே இது உனக்கே நல்லாருக்கா?” என்று சமாதனம் செய்து கூட்டி வந்தாள்.

 

இந்த கிராமத்திற்குக் கூட இருவரும் சேர்ந்து தான் வந்தார்கள். புடவை செலெக்ட் செய்தாகிவிட்டது. இன்னும் சில புதிய மாடல்கள் மதியம் வருகிறது என்று அவர்கள் சொல்ல, பரிமளா கிளம்பிவிட்டாள்.

“சாயந்தரம் எங்க சொந்தக்காரங்க ரிசப்ஷனுக்கு நான் வீட்டில் இருக்கணும் லலிதா. இன்னும் ஒரு மணி நேரம்தானே புடவையைப் பாத்துட்டுக் கிளம்பு. இங்கிருந்து ஒரு பர்லாங்குதான் பஸ்ஸ்டாப். ஏறினால் நேரா காஞ்சி பஸ்டான்ட் அங்கிருந்து ஊருக்கு ஒரு பஸ். சாயந்தரம் வீட்டுக்குப் போயிடலாம்” என்று தைரியம் சொல்லிவிட்டே கிளம்பினாள்.

 

மதியம் இருவரும் அங்கு உணவு விற்பனை செய்ய வந்தவரிடம் சித்ரனங்களை வாங்கி உண்டிருந்தனர். அதனால் பசி தெரியவில்லை. ஆனால் இரவாகப் போகிறது. அத்துடன் இந்த மழை வேறு… இனி தாமதிக்க முடியாது… சற்று நேரம் கையைப் பிசைந்தபடி வெளியே மழையைப் பார்த்தவள் நேரமானது உரைக்கவும் , நனைந்தாலும் பரவாயில்லை என்று பையைத் தூக்கிக் கொண்டு ஓடிச் சென்று பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள். பத்து நிமிடங்களில் வந்த பேருந்தில் ஏறிக் கொண்டு தாயை அழைத்தாள்.

 

“லல்லி கிளம்பிட்டியா”

 

“பஸ் ஏறிட்டேன்மா”

 

“இங்க மழை பயங்கரமா பெய்யுதுடி, பாத்து பத்திரமா வா”

 

“இங்கேயும் அப்படித்தான்மா”

 

இடையிட்ட ப்ரீதா “அக்கா புயல் சின்னமாம் டிவில சொன்னாங்க. பத்திரமா வாக்கா”

 

“பரிமளா எங்க?” என்று கேள்வி கேட்ட அன்னையை  பயப்படுத்த மனமின்றி

 

“பரிமளா மெட்ராஸ் பஸ்ஸில் ஏறிட்டா… நானும் நம்ம ஊர் பஸ்ல ஏறிட்டேன். நீங்க பயப்படாதிங்க. நம்ம ஊர் ஆளுங்க கூட வர்றாங்க நான் அவங்க கூட பத்திரமா வந்துடுறேன்”

 

“நம்ம ஊர் ஆளா… எங்க, போனை அவங்க கிட்ட குடு ஒரு வார்த்தை உன்னை பத்திரமா கூட்டிட்டு வர சொல்லிடுறேன்”

 

“அம்மா… ஒரு பய்யன்… அப்பாவோட பழைய ஸ்டுடென்ட்மா… அவன்கிட்ட நான் பேசினதே இல்லை. போனை எல்லாம் தர மாட்டேன்”

 

“அட, ஏதாவது உதவி வேணும்னா தயங்கிட்டு நிக்காதே… ஆபத்து காலத்தில் நமக்குத் தெரிஞ்ச மனுஷங்க பக்கத்தில் இருந்தாத் தனி தைரியம்தான்.

மெட்ராஸ்ல மழை பெஞ்சப்ப கூட இந்த காலேஜ் பசங்க எல்லாம் எப்படி உதவுனாங்க”

 

“அம்மா சார்ஜ் தீந்துடும்மா வச்சுடுறேன். முக்கியம்னா நானே கூப்பிடுறேன். மெசேஜ் அனுப்புறேன்.  நீங்க அடிக்கடி கூப்பிடாதிங்க.”

 

“ஒரு போன் கூடப் பண்ணாம எப்படிடி பெத்தவங்க இருக்க முடியும்”

 

பொறுமையாக விளக்கினாள் “புரிஞ்சுக்கோங்கம்மா சார்ஜ் தீர்ந்தா ஆத்திர அவசரத்துக்குக் கூட உங்களைக்  கூப்பிடக் கூட முடியாது. நான் பத்திரமா வீட்டுக்கு வந்துடுவேன்னு நம்புறேன். நீங்களும் அதையே நம்புங்க”

 

அலைப்பேசியை அணைத்த பின் இப்போது என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்கத் துவங்கினாள். கெட்ட நேரம் ஓவர்டைம் பார்த்ததாக லலிதா நம்பும்வண்ணம் அவள் சென்ற பஸ் பாதி வழியில் நின்றது.

 

“காஞ்சிபுரம் போற வழி எல்லாம் முழங்கால் வரை தண்ணி. இனிமே பஸ் ஓடாது” என்று கண்டக்டர் சொல்லியதும், பயணிகள் பெரும்பாலும் உள்ளூர்வாசிகள் ஆதலால் இறங்கி வீட்டிற்கு  நடக்கத் துவங்க, சிறிது நேரத்தில் அவளுடன் பயணம் செய்த  அனைவரும் சென்றிருந்தனர்.

 

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இருட்டிய வேளையில், கணுக்கால் அளவுக்கும் மேல் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்த  வெள்ளக்காட்டிற்கும் மத்தியில் போகும் திசையேதும் தெரியாது  திகைத்து நின்றாள் லலிதா.

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: