மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30

30

விடுதியில் அவளது அறைக்கு வந்த சுஜி, இவ்வளவு நாளாகத் தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தைச் சேர்த்து வைத்து அழுதாள். நீண்ட நாட்களாக அவள் மனதிற்குப் போட்டு இருந்த மேல் பூச்சு களைந்து, மனதில் உள்ள துக்கம் எல்லாம் வெடித்து கண்களில் இருந்து கண்ணீராக வெளியே வந்தது. இனிமேல் அழுவதற்கு கண்களில் நீர் இல்லை எனுமளவு இருந்தது அவளது அழுகை. அவளது அழுகை ஓயும் வரை காத்துக் கொண்டிருந்த ரோஸி, மெதுவாக தனது தோழியைத் தட்டிக் கொடுத்தாள்.

இந்த மூன்று வருடங்களில் ரோஸியும் சுஜியும் நெருங்கிய தோழிகளாய் மாறி இருந்தனர். சுஜியின் கதையைப் பற்றியும் ரோசி ஓரளவு அறிவாள். ரோஸியின் குடும்ப நிலைமை பற்றி சுஜி நன்கறிவாள். காலம், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தவர்களையும் ஒரே கல்லூரியில் படிக்க வைத்து, நட்பெனும் மந்திரத்தால் கட்டிப் போட்டு இருந்தது.

“சுஜி உன் மனசுல நிறைய வருத்தம் இருக்குன்னு உன்னப் பார்த்த உடனே கண்டு பிடிச்சுட்டேன். இந்த மூணு வருஷத்துல அந்த வருத்தம் மறஞ்சு ஒரு நிம்மதி இருந்தது. ஆனா மாதவன் கூட பழகுன சில நாட்கள்ல, உன் முகத்துல ரொம்ப சந்தோஷம் தெரிஞ்சது. உன் சந்தோஷம் நிலைச்சு இருக்கணும்னு ஜீசஸ் கிட்ட வேண்டிகிட்டேன். இன்னைக்கு என்ன வந்தது?”

நடந்ததைச் சொன்னாள் சுஜி. மாதவனைப் பார்க்க முடியாத தவிப்பு அதில் மறைந்து இருந்தது ரோசிக்குத் தெரிந்தது. அவளுக்குத் தெரிந்து என்ன பயன்? உணர வேண்டிய சுஜி அல்லவா அதனைக் கண்டு கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஆளுக்கு ஒரு டீ கப்பில் எடுத்து வந்த ரோசி, “சுஜி, கொலுசு விஷயம் மட்டும் மாதவன நீ மறுக்கக் காரணம் இல்ல. ஏன்னா அதுல முக்கியமான பங்கு அனிதாவுக்கு இருக்கும்னு தோணுது. அனிதாவ கொடைகானல்ல பார்த்து இருக்கேன். ஒரு வாரம் அவங்கள அட்டென்ட் பண்ணது நான் தான். அனிதாவோட பிடிவாத குணத்தைப் பார்த்தேன். அத வச்சு சொல்லுறேன். அதுக்கு மேல மாதவனாலோ இல்ல அவங்க குடும்பத்தாராலோ என்னமோ நடந்து இருக்கு?”

ஒரு பெருமூச்சு விட்ட சுஜி, “நீ சொல்லுறது சரிதான். அன்னைக்கு நடந்த விஷயம் கூட மாதவன் தெரியாம செஞ்சதுன்னு சொல்லலாம். ஆனா என் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சப்பறமும், மாதவனும், அவங்க அம்மா அப்பாவும் செஞ்ச காரியம் தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட”.

மாதவனும், அனிதாவும் செய்த குளறுபடியால், சுஜியின் மாந்தளிர்மேனி முழுவதும் புண்ணாகி இருந்தது. சுஜியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற கமலம், அவர்கள் வீட்டிலேயே நான்கைந்து நாட்கள் வைத்து புண் சற்று ஆறிய பின்பே சுஜியை வீட்டுக்கு அனுப்பினார்.

நடந்த நிகழ்ச்சி, வெறும் வாய மெல்லுற நாகரத்னத்துக்கு வெள்ளை அவல் கிடச்சாப்புல ஆயிடுச்சு. நேரா மினி வீட்டுக்கு மறுநாள் சென்றவள், அவர்களது அம்மா அப்பாவை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு வந்தாள். அவர்களது ஊர் சுற்றிப் பிள்ளை ராகேஷால் சுஜியின் வாழ்வே பாழாக இருந்தது பற்றி மினியின் பெற்றோருக்கு உணர்த்தி, இனிமேல் எங்க வீடு இல்ல… இல்ல… சுஜி இருக்கும் தெரு பக்கம் வந்தாலே நடப்பது வேறு என்று கூறி விட்டு வந்தாள்.

இது சுஜியின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் முயற்சிதான். ஆனால் சுஜி என்ற வெள்ளாட்டுக்கு வந்த கஷ்டத்துக்கு நாகரத்தினம் என்ற வேங்கை ஏன் கண்ணீர் வடிக்கிறது. ஏனென்றால் முதலில் சுஜியைத் தேடிச் சென்ற ராகேஷ், அவளது சித்தியிடம் தானே சுஜி கோவிலுக்குச் சென்றதைக் கேட்டு அறிந்துக் கொண்டான். ராகேஷ் வீட்டுக்கு வந்ததையே மறைத்து, சுஜி ராகேஷுடன் வெளியே போவது அப்போதுதான் தெரிவது போல் நாடகம் போட்டு, சுஜியின் மேல் எல்லோருடைய கோவத்தையும் திருப்பி விட்டிருந்தாள் நாகம். விஷயம் அறிந்தவுடன் அவர்கள் வீட்டினர் யாராவது வீட்டில் உண்மையை சொன்னால் அவளது குட்டு வெளிப்பட்டு விடுமே.

அன்று மட்டும் கமலம் வந்து உண்மையை சொல்லாமல் இருந்திருந்தால், அவளது கனவுகள் எளிதில் பலித்திருக்கும். இப்போது மட்டும் என்ன கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் அவள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவாள். அவளது நோக்கம் நிறைவேற முதலில் சுஜிக்கு உதவி செய்ய யாரும் இருக்கக் கூடாது. மூர்த்தியையும், கமலத்தையும் பற்றி அவளுக்குக் கவலை இல்லை. இருவரும் மகளுக்கு பிரசவம் பார்க்க ஊருக்குச் சென்று விடுவார்கள். மினி சென்னைக்குச் சென்று விட்டாலும் மினியின் குடும்பத்தினரின் உதவி அவளுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. அதனை முதலில் தடுக்க வேண்டும். அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டாள். கழுத்தில் கிடந்த கெம்புக்கல் பதித்த புது இரட்டை வடத்தை ஆசையாக தடவிப் பார்த்துக் கொண்டாள் நாகரத்தினம்.

ற்று நாள் கடந்தது. எல்லாம் ஓரளவு சரியாகி விட்டதாக நினைத்தாள் சுஜி. அன்று நாகரத்தினத்தின் உறவினர்கள் சில பேர் வருவதாக சொல்லி இருந்தாள். இது வழக்கம் தான். மதுரையில் நிறைய பேர், எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்னும் மீனாட்சியைப் பார்த்து விட்டு செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர். பொண்ணு பார்க்கப் போறது, நிச்சயதார்த்தம், கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் ஊருக்கே பெரியம்மாவான மீனாட்சி கிட்ட போய் முதல்ல சொல்லிட்டா ஒரு பெரிய திருப்தி. அப்படி வரவுங்க கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற சுந்தரம் வீட்டுக்கு வந்துட்டு, நாகரத்னத்தையும் விசேஷத்துக்கு அழைச்சுட்டுப் போறது வாடிக்கை. அன்னைக்கு சீக்கிரமா குளிச்சு முடிச்சிருந்த நாகரத்தினம் சுஜியையும் நல்லா டிரஸ் போட்டுக்க சொன்னா.

“இன்னைக்கு விசேஷத்துக்குத் தட்டு எடுத்துட்டுப் போக ஒரு கை குறையுது. நீயும் வரணும். நல்ல பாவாடையைக் கட்டிக்கோ”.

முதல் நாளே சுந்தரம் விக்கியைப் பார்க்க சென்னைக்கு கிளம்பி இருந்தார். விசா விஷயமாக மூர்த்தியும், கமலமும் அவருடன் சென்று இருந்தார்கள். நாகரத்தினம் செய்த காரியத்திற்கு மினி வீட்டை நினைத்துப் பார்க்கவே முடியாது. இல்லாவிட்டால் அவர்கள் யார் வீட்டுக்காவது சென்று இருக்கலாம். சுஜி தன்னிடம் உள்ள ஊதாவில் லாவெண்டர் பூ போட்ட பாவாடையும், அதே துணியில் ஜாக்கெட்டும், லாவெண்டர் தாவணியும் அணிந்துக் கொண்டாள். காதுகளில் அழகான ஜிமிக்கி. கழுத்தில் அணிந்திருந்த அவளது நிறத்திலே இருந்த சிறிய பொன் சங்கிலி, நன்றாக உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிந்தது. கைகளில் வழக்கமாகப் போடும் கண்ணாடி வளையல்.

சற்று நேரத்தில் உறவினர் அனைவரும் வந்த சத்தம் கேட்டது. சுஜி மாடியில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அங்கிருந்தவாறே எட்டிப் பார்த்தாள். நிறைய பேர் வந்து இருந்தனர். மாதவனின் தாயும் தந்தையும் கூட அதில் அடக்கம். எல்லோரும் இறங்கி விட்டனர். கடைசியாக இறங்கியவனைப் பார்த்ததும் கோவம் கொப்பளித்தது சுஜிக்கு. மாதவன் தான் அது. மேலே சுஜி நின்றுக் கொண்டு இருந்ததைப் பார்த்தவன், அழகான புன்னகையை உதிர்த்தான். சண்டைப் போட்டுக் கொண்ட சிறுவர்கள் சமாதானமாகப் போவதற்கு முயற்சிக்கிராற் போல். கோவமாக உதட்டைச் சுளித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சுஜி. கீழே வரவே அவளுக்கு இஷ்டமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 16நிலவு ஒரு பெண்ணாகி – 16

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை இருவருடன் சேர்ந்து நாமும் காட்டுவழியில் பயணிக்கலாமா? நிலவு ஒரு பெண்ணாகி – 16 அன்புடன் தமிழ் மதுரா.

உள்ளம் குழையுதடி கிளியே – 7உள்ளம் குழையுதடி கிளியே – 7

கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான்.  அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும் தோட்டம், நடுவே வீடு. 

ஒரு காதல் ஒரு கொலைஒரு காதல் ஒரு கொலை

வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சாயி பிரியதர்ஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். சாயி ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதை  மற்றும் கட்டுரை எழுத்தாளராக முத்திரை பதித்தவர். ‘ஒரு காதல் ஒரு கொலை’ எனும் இந்தத் த்ரில்லர்