Tamil Madhura கதை மதுரம் 2019,வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 4

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 4

பாகம் நான்கு 

“ஹாய் நிம்மி, ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து! இப்படி வான்னு கூப்பிட்டா தான் எங்க வீட்டுக்கு நீ வருவியா?”, உரிமையோடு கோபித்தபடி தோழியை வரவேற்றாள்.

“தோ டா, நீ எங்க வீட்டுக்கு ஒரு நாளைக்கி நாலு தடவ வர்ற மாதிரி என்ன பெருசா பேசுற? கடைசியா எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது, ஞாபகம் இருக்கில்லையா? ஓ, ஹலோ அண்ணா, நீங்க இன்னிக்கி லீவா? இந்த நேரத்துக்கு வீட்டுல இருக்கீங்களே? எப்படி இருக்கீங்க?”, நிர்மலாவின் குரல் கேட்டு ஆவலாக வெளியே எட்டிப் பார்த்த ரமேஷின் ‘மேலே பேசாதே’ கண்ணசைவை பார்த்து தன்னுடைய எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாவை நிறுத்திக் கொண்டாள் நிர்மலா.

சட்டென தோழி தன்னிடம் சேம் சைட் கோல் போட்டது மறந்துவிட, ரமேஷின் மேல் பாய்ந்தாள் லலிதா. அவர் இன்னிக்கி வீட்டுல இருந்துகிட்டே வேலை பண்ணுவாராம். வர்க் பிரேம் ஹோம். அதெல்லாம் சும்மா கட்டுக் கதை. உள்ள போயி பாரு, லாப்டாப்பிலே மருதநாயகம் பார்த்திட்டு இருப்பாரு….”, முறைப்பாக சொல்ல,

பெண்டாட்டியை சமாதானப்படுத்தும் விதமாக ஹாஸ்யமாக, “கண்ணு, மருதநாயகம் இன்னும் எடுத்தே முடிக்கலை”, சட்… இதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம்.

லலிதா இன்னும் கடுப்பாகி, “அந்த மாதிரி வெளியவே வராத படங்களை கூட விட்டு வெக்காம பார்த்துட்டு இருப்பீங்க நீங்க…”

“ஐயோ லல்லு, அவர் என்ன சொல்லறார்னா, இன்னும் அது டைரக்ட் பண்ணலை. வேற ஏதாவது படம் பார்க்கிறாரோ என்னவோ”

“இருக்கும் இருக்கும், அரிசிமாவு அன்னபூரணி, சாதாரண கோழி 4.௦ ன்னு…”, இடக்காக வந்தது லலிதாவின் குரல்.

கேள்வியாக ரமேஷை பார்க்க, அவன் ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து சண்டை என்பது போல காட்டினான். ஒரே நொடியில் விஷயத்தை கிரஹித்த நிர்மலா, ரமேஷிடம் இருந்து பார்வையை தோழியிடம் திருப்பி, “என்ன ஆச்சு சொல்லு?”, இதமாக அவள் கையை பிடித்தபடி வினவ,

சட்டென கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு, “நிம்மி! நான் எதைன்னு சொல்றது? அவருக்கு இப்போல்லாம் என்னை பிடிக்கவே இல்லை! நான் எது பண்ணினாலும் தப்பா தான் தெரியுது. ஆமாம், என்னை பார்த்தாலே பிடிக்கறதில்லை…. ரொம்ப வெறுப்பா போச்சு”, குரல் கம்ம பரிதாபமாக சொல்லிக் கொண்டு வந்த லலிதாவை மகா குழப்பமாக பார்த்தாள் நிர்மலா.

“லலிதா, நீ என்ன சொல்லறேன்னே புரியலை. யாருக்கு உன்னை பிடிக்கலை? என்ன தப்பா போச்சு? வெறுத்து போச்சு?”, விஸ்வரூபம் 2.௦ வையும் எந்திரன் 2.௦ வையும் ஒரே நாளில் பார்த்தால் எப்படி தலை சுற்றி போகுமோ அதை விட அதிக குழப்பத்தோடு கேட்டாள் நிர்மலா.

“எல்லாம் இந்த மனுஷர் தான்! அதான் ரமேஷை தான் சொல்லறேன்”

“ரமேஷா? அவர் என்ன செஞ்சார்?”

“ஒரு பேச்சுக்கு குண்டாகிட்டேனான்னு கேட்டேன்…உடனே மனுஷர், அங்க குண்டாகிட்டே, இங்க குண்டாகிட்டன்னு பட்டியலே போட்டுட்டார். நீயே சொல்லு நிம்மி, நான் என்ன குண்டாவா இருக்கேன்?”

தோழியின் விசும்பலும் குரல் கம்மலும் இல்லையென்றால் என்ன பதில் சொல்லி இருப்பாளோ நிர்மலா, இப்போது ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தபடி தோழி சமாதானம் அடைய காத்திருந்தாள்.

பாவம் லலிதா, என்ன காரணத்தால் தோழி ஒன்றும் பதில் சொல்லாமல் இருக்கிறாள் என்று கூட யோசிக்காத அப்பாவியாக, அவளே தொடர்ந்து பேசினாள், “அதனால தான் இன்னும் ஒரே மாசத்துல பத்து கிலோ வெயிட் குறைச்சுடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீ தான் நிம்மி எனக்கு ஹெல்ப் பண்ணனும்”

“என்கிட்டே சொல்லிட்டே இல்லையா! கவலைய விடு. ஒரே மாசத்துல உன்னை பத்து கிலோ குறைச்சு காட்டறேனா இல்லையான்னு பாரு”

“தேங்க்ஸ் நிம்மி. எனக்கு தெரியும், நீ எனக்கு நிச்சயம் ஹெல்ப் பண்ணுவேன்னு”, உணர்ச்சி மிகுதியில் கட்டிப்பிடி வைத்தியத்தில் தொடங்கி இறுக்கி அணைச்சி ஒரு உம்மாவும் கொடுத்தாள்.

நிர்மலாவோ நாசுக்காக நகர்ந்தபடி, “நாளைக்கு காலையில….”,

பீதியுடன், “என்ன செய்யணும்?”, கடவுளே ஜிம்முக்கு வா, அஞ்சு கிலோமீட்டர் ஓடுன்னு சொல்லாம இருக்கணுமே என்று வேண்டிக் கொண்டாள் லலிதா.

“நாளைக்கி காலையில எழுந்ததும் ஒரு டம்ளர் சூடு தண்ணியில எலுமிச்சை ஜூஸ், தேன் ரெண்டும் கலந்து குடிக்கணும்”

“காபி குடிச்சு எத்தனை மணி நேரம் கழிச்சு இதை குடிக்கணும்?”, அப்பாவியாய் கேட்ட லலிதாவை சந்திரமுகி ரேஞ்சுக்கு முறைத்தாள் நிர்மலா.

“தூங்கி எழுந்து பல் தேய்ச்சதும்…. காபி குடிக்கும் முன்னால….”

“ஓ…”

“அதுக்குப் பிறகு, அரை மணி நேரம் கழிச்சு….”

“காபி குடிக்கலாமா?”, ஏக்கமும் தாபமுமாக கேட்டாள் லலிதா.

“ம்ம்ஹ்ம்…. நோ, ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் லவங்கப் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், இதை எல்லாம் கலந்து குடிக்கணும்”

“என்னது? தேங்காய் எண்ணெய்யை குடிக்கணுமா?”, கிட்டத்தட்ட அலறினாள் லலிதா.

“ஒரு ஸ்பூன் எண்ணெய் தானே! அதுக்கு என் இப்படி அலறுற?”, சட்டென கடிந்து கொண்ட நிம்மி, “இதோ பாரு லலிதா, எவ்வளவு சாப்பிடுறாங்கறது எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியம் எப்போ சாப்பிடுற என்ன சாப்பிடுற என்கிறதும். காலையில எழுந்ததும் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேன் சாப்பிடும் போது, ரத்தத்துல இருக்கிற அழுக்குகள் சுத்தமாகிடும். இரவு பூராவும் சாப்பிடாம இருக்கிறதால வயிற்றுப் புண் ஏதாவது இருந்தாலும் உணவுக்குழாயை தாண்டி தேன் வயிற்றுக்கு போயி அந்த புண்களை ஆற்றும்”

வேற்று கிரகத்தில் இருந்து வந்த வினோத ஐந்து பேசும் ஏதோ கிரந்த  மொழியை கேட்பதுபோல வாய் திறந்து பார்த்திருந்தாள் லலிதா. அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் நிம்மி அவளது காலட்சேபத்தை தொடர்ந்தாள்.

“மஞ்சள் பொடி ஒரு கிருமி நாசினி; லவங்கப் பட்டை பொடி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்தக் கொதிப்பு, இதய நோய், அல்சைமர், மூட்டு வலி இதெல்லாத்துக்கும் நல்லது. தேங்காய் எண்ணையில் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது. அதுனால தான் இதையெல்லாம் தவறாம எடுத்துக்கணும்.

நான் முன்னமே சொன்ன மாதிரி நல்ல விஷயங்களை சாப்பிட ஆரம்பிச்சாலே உன் உடம்புல தங்கி இருக்கிற டாக்சின்ஸ் எல்லாம் வெளிய வந்துடும். அப்போ தானாகவே முகம் ஜொலிக்கும், உடம்பில் கொழுப்பு தாங்காது, சுறுசுறுப்பு வரும். டியர், வெயிட் லாஸ் என்கிறதை விட நீ உனக்கு எது ஆரோக்கியம் கொடுக்கும் என்று தான் பார்க்கணும். சீக்கிரமே முப்பத்தைந்து வயதாக போகுது இல்லையா? இனிமேல் இதிலெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்”

“………………..”, சுத்தமாக பேசும் சக்தியை இழந்தவளாக திறந்த வாய் மூடாமல் தோழியை பார்த்திருந்தாள் லலிதா.

“அடுத்து…..”

“இன்னுமா?” என்பது போல லலிதாவின் முகத்தில் அதிர்ச்சி கூடியது.

“சாப்பாட்டில் வெள்ளை பொருட்களை தூர ஒதுக்கி வெச்சிடு!”

“அப்படின்னா?”, தெய்வாதீனமாக அத்தனை குழப்பத்திலும் தெளிவாக தான் எந்த அளவிற்கு குழம்பி இருப்பதை காட்டிக் கொண்டாள்.

“வெள்ளை நிறத்துல இருக்கும் எதுவும் சாப்பிடக் கூடாது. அரிசி, பால், தயிர், சர்க்கரை, உப்பு, மைதா… இது எதுவும் கூடாது! என்ன? என்னாச்சு?”

இத்தனை நேரமாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த லலிதா அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் படாரென்று நிமிர்ந்து மேசையில் கைகளை ஊன்றி உட்கார்ந்து மீண்டும் மயக்க நிலைக்கு போனாள்.

“என்னாச்சு லல்லு?”,

“லல்லு லல்லுன்னு சொல்லி லொள்ளு பண்ணறியே. இதெல்லாம் சாப்பிடாம வேறே எதை சாப்பிட? புல்லு, புண்ணாக்கு, கழுநீர் தண்ணி இதெல்லாமா?, அதிர்ச்சியும் ஆவேசமும் சம விகிதத்தில் கலந்து அதில் லவலேசம் அழுகையும் சேர்ந்து அவள் குரல் நானா வித பரிமள புஷ்ப பூஜாலங்காரமும் கொண்டு ஒலித்தது.

“ஏன், காய்கறி இல்லையா? பழங்கள் இல்லையா? கொண்டைக்கடலை, பட்டாணி, காராமணி இதெல்லாம் இல்லையா? சாமை, வரகு, தினை இதெல்லாம் இல்லையா?”

“அது சரி தான்…… இதெல்லாமும் சாப்பிட்டாலும் சாதம் சாப்பிட்டால் தானே சாப்பிட்ட நிறைவு வரும். காலையில் எழுந்ததும் காபி குடிக்காம எப்படி இருக்கிறது? தயிர், மோர் இதெல்லாம் வேண்டாமா?”

“தியாகம் பண்ணித்தான் ஆகணும் லல்லி. ஹான்…. சொல்ல மறந்துட்டேன், கொள்ளு இருக்கில்லையா, அதை அடிக்கடி சமையலில் உபயோகப்படுத்து. இஞ்சி, கறிவேப்பிலை, தனியா இதெல்லாம் கஷாயம் வெச்சி குடி. சர்க்கரைக்கு பதிலா பனங்கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி உபயோகப் படுத்து. முக்கியமா, உப்பு ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் உப்பு தான் சேர்த்துக்கணும். அதுனால, அளவா தான் சமையலில் உப்பு போடணும்”

“முக்கியமான விஷயம், சாயந்திரம் ஏழு மணிக்கு மேல எதுவும் சாப்பிடக் கூடாது. அப்போ தான் ராத்திரி பத்து மணிக்கு நீ தூங்கப் போகும் முன் உன் வயிறு காலியாக இருக்கும். சாப்பிட்டதும் தூங்கினால், வயிற்றில் ஜீரணம் ஆக நேரம் இல்லாமல், சாப்பிட்ட சாப்பாடு அப்படியே கொழுப்பாக மாறி உடம்பில் சேர்ந்துக்கும். அதனால, தூங்கப் போகும் போது வயிறு காலியாக இருக்கவேண்டியது ரொம்ப அவசியம்!”, சுட்டு விரலை ஆட்டி பத்து வயது குழந்தைக்கு சொல்வது போல பாடம் எடுத்துக் கொண்டிருந்த நிர்மலாவை பார்த்துக்கொண்டிருந்த லலிதாவின் மண்டைக்குள், “நீ இத்தனை நேரம் சொன்னதை வைத்துப் பார்த்தால் பகலிலேயே என் வயிற்றுல ஒண்ணும் இருக்காது போல இருக்கே!”, காதுக்குள் வயலின் இசை சோக கீதம் எழுப்பியது.

வாழ்க்கையில் கத்தியின்றி ரத்தமின்றி ஒருவரை ஜீவஹிம்ஸை படுத்துவது என்றால் என்னவென்று அன்று தான் லலிதாவுக்கு புரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9

பாகம் – 9 நினைவுகளின் சுகங்கள் என்னை தாலாட்டும்   நொடிகளில் எல்லாம் காற்றில் உன் வாசங்கள் என்னை தழுவிச் செல்கின்றன !!! ********************************** ஸ்ருதியின் கோபமுகத்தை பார்த்து கொண்டே குமார் புன்னகையுடன் வழி சொல்லிக் கொடுத்தான். “பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு! அவ்வளவுதான்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03

3 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் காலையில் அனைவரும் தங்களது பணிகளை தொடங்க அக்சராவும் அனீஸ்,ரானேஷிடம் சொல்லிக்கொண்டு குமாருடன் அனுப்பிவிட்டு எஸ்டேடிற்கு கிளம்பினாள். அவள் அங்கே அனைவருடனும் பேசிக்கொண்டே வெளியில் வேலைகளை கவனித்துக்கொண்டே இருக்க ஆதர்ஷ், ஜெயேந்திரன், அவரது

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று