Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25

25

ன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த ஜொள் கடனை தவறாமல் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான். (பதிலுக்கு ஜொள் விட்டான்னு பாலிஷா சொன்னேன்). இருந்தாலும் சுஜியிடம் சற்று நெருக்கத்தை அதிகமாகவே காட்டினான்.

‘அனிதா மட்டும் இப்பப் பார்த்தால் மகனே நீ அவ்வளவுதான். பின்னே அன்னைக்கு என்கிட்ட கோவமா பேசினப்பயே அவளால தாங்க முடியல, இப்ப இந்த ஜொள்ளு மழையைப் பாத்தா நீ தொலஞ்ச’ என்று நினைத்துக் கொள்வாள்.

மாதவனின் செயல்கள் சுஜிக்கு பெரும் புதிராகவே இருந்தது. அதனால் அவனுடன் தனியாக இருப்பதை போன்ற சந்தர்ப்பத்தை அறவே தவிர்த்தாள். மாதவன் ஒழுங்காக இருப்பது போல் இருந்தாலும் அவளை செல்லச் சீண்டல்கள் செய்யவே செய்தான். சுஜிக்குச் சொந்தக்காரன் என்று அனைவருக்கும் தெரிந்தே இருந்ததால், அவர்களும் பொருட்படுத்துவதில்லை.

வேலு வேறு, “ஏன் சுஜி சார்கிட்ட கோச்சுக்குற? முறைப்பையன் கொஞ்சம் முறைச்சுட்டு போறார். கல்யாணம் வேற ஆச்சுன்னு சொல்லுற” என்று அவளுக்கே புத்தி சொன்னான்.

ன்று சுஜி வெளிநாட்டு விருந்தினர்களுக்காக வித்யாசமான ஒரு மீன் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாள். நேராக சமையல் அறைக்கே வந்து விட்ட மாதவன் அருகே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.

“வாவ் மீனா! என்ன சுஜி, முழு மீன அப்படியே செய்யுற? சுத்தம் பண்ணல?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”

“கொஞ்சம் என்ன உனக்காக வாழ்நாள் பூரா வெயிட் பண்ணுவேன்”.

வீட்டுல கிளி மாதிரி பொண்டாட்டிய வச்சுட்டு என்கிட்ட பேசுற பேச்ச பாரு என்று நினைத்த சுஜி, “மீனுக்காக மட்டும் அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க போதும்”

என்று சொல்லியபடியே அந்த மீன்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். வெளிப்புறத்தை நன்றாக சுத்தம் செய்தவள், மெல்லிய கத்தியால் வயிற்றுப் பாகத்திற்கு எதிர்பாகத்தில் மெதுவாக வெட்டி, உள்ளே இருந்த முள்ளை அப்படியே எடுத்தாள். பின்னர் உள்ளே இருந்த கசடுகளை நீக்கி விட்டு, சிறு பிளக்கர் போன்ற ஒன்றைக் கொண்டு மிச்சம் மீதி இருக்கும் சிறு முற்களையும் கவனமாக அகற்றினாள். பின் பிரசன்னா ஏற்கனவே வதக்கி வைத்திருந்த, பொடியாக நறுக்கி வதக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது இத்துடன் கிரீம் சாஸ் கலந்த கலவையை அந்த மீனின் வயிற்றுப் பகுதியில் வைத்து, ஒரு பாயில் பேப்பரில் சுற்றி ஓவனில் இருபது நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பின் தட்டில் அலங்கரித்தனர் சுஜியும் நண்பர்களும்.

மாதவனுக்காக வைத்திருந்த தட்டை அவன் கையில் கொடுத்தாள்.
“அப்பாடா எவ்வளவு கவனமா வேல செய்ய வேண்டி இருக்கு?” என்று ஆச்சிரியமாகப் பேசியவன், “ரொம்ப நல்லா இருக்கு சுஜி” என்று அவள் கைகளைப் பற்றி குலுக்கினான்.

“இந்த மாதிரி தினமும் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு” என்றான்.

“அதுக்கென்ன தாராளமா சாப்பிடலாம். ஆனா இன்னைக்கு மாதிரி ஓசிக்கு கிடையாது. பில் ஒழுங்கா பே பண்ணிடனும்” என்று சொல்லியபடி நகர்ந்தான் வேலு.

“கரடி கரடி” என்று மாதவன் முணுமுணுத்தது வேலுவின் ஒரு காதில் கூட விழவில்லை.

தினமும் மாலையில் மட்டும் சிறிது நேரம் என்று இருந்த மாதவனது வரவு, குறுகிய நாளிலே ஒரு நாளைக்குத் தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்குச் செல்வது என்றானது. மாணவர்களுடன் சேர்ந்து அவனும் தன்னாலான உதவியைச் செய்தான்.

காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து ஆசைப்பட்டு ஒரு வெங்காயம் நறுக்கிய மாதவனின் கையில் கத்தி கிழித்துவிட, சுஜி பதறிப் போய் விட்டாள். முதலுதவி பெட்டி சமையல் அறையிலேயே தயாராக எப்போதும் இருக்குமாதலால், அதில் இருந்த மருந்தினை எடுத்து காயத்தில் தடவ ஆரம்பித்தாள். அவனது விரலில் பஞ்சினை வைத்து அழுத்தியவள், “என்னத்தான் இது… பாத்து செய்ய மாட்டிங்க… அத்தைக்குத் தெரிஞ்சா ரொம்ப பயந்துடுவாங்க” என்று தன்னை அறியாமல் கூறியவள், அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் நிமிர்ந்தாள்.

மாதவன் விழி அகலாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ரொம்ப வலிக்குதா?”

“வலிச்சதுதான். ஆனா உன் வார்த்தையே அதற்கு மருந்து போட்டுருச்சு”.

“என்னது?”

“இல்ல சுஜி, உங்களுக்கு எப்படி கத்தி படாம வெட்ட முடியுதுன்னு கேட்டேன்?”

“கத்தி படாமலா… எங்க கையப் பார்த்தா தெரியும்” என்றபடி கையை நீட்டினாள். கைகளில் கத்தி பட்டு பட்டு, நெருப்பு சுட்டு காய்ப்பு காய்த்து இருந்தது.

“என்ன சுஜி இது?”

“பின்னே விளம்பரத்துல காண்பிக்குற மாதிரி மாசு, மருவில்லாம இருக்கும்னு நினைச்சிங்களா? நாங்க படிக்க வந்த புதுசுல, எங்க முதல் வேலையே காய்கறி வெட்டுறது தான். இப்ப மாதிரி இல்ல மூட்ட மூட்டையா வெங்காயம், தக்காளி வெட்டணும். ஒவ்வொரு காயத்துக்கும் மருந்து போட முடியாது இல்லையா… அப்படியே பழக்கம் ஆயிடுச்சு”

வேலுவும் சாகுலும் சூடாக அவனுக்கு ஒரு டீ போட்டு கப்பில் கொண்டு வந்து தந்தனர். வேலு ஆரம்பித்தான்.

“ஏன் சார் பழனி சாருக்கு தம்பி மாதிரி இங்கேயே இருக்கிங்களே, போய் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்க சார்”

“இன்னும் பொறக்காத புள்ளங்கள எப்படி வேலு படிக்க வைக்கிறது?”

“சரி புள்ள குட்டிங்க இருந்தாலாவது பரவாயில்ல, புடுங்கல் தாங்காம இங்கேயே இருக்கிங்கன்னு சொல்லலாம். இப்ப என்ன சார் போய் உங்க வைப் கூட ஜாலியா திருமலை நாயக்கர் மகால்ல டூயட் பாடிட்டு வாங்க”

“டூயட் பாட நான் ரெடி என்னோட வைப்ப நீ கண்டுபிடிச்சு தரியா?”

“அப்ப கல்யாணமே இன்னும் ஆகலையா? சுஜி நீ தானே சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்ன.”

“சுஜி சொன்னதுல பாதி உண்மை”

“ஒண்ணுமே விளங்கல”

“எனக்கும் ஒரு பொண்ணுக்கும் நிச்சயம் ஆனது நிஜம் ஆனா கல்யாணம் ஆகல. சுஜி இங்க வந்துட்டதால கல்யாணம் நடக்காதது அவளுக்கு தெரியாது.”

“சாரி சார். எங்களுக்குத் தெரியாது. நாங்க சும்மா வெளையாட்டுக்கு”

“பரவாயில்ல விடுங்க”.

சுஜி ஒரே குழப்பத்துடன் மாதவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சுஜி ஸ்டாக் எவ்வளவு இருக்கு? வா போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்…”.

சற்று தூரம் நடந்து சென்றவுடன் சுஜியைப் பார்த்த மாதவன், “சொல்லு சுஜி, என்ன தெரியனும் உனக்கு?”

மாதவன் இதனைக் கேட்பதற்குத்தான் தன்னைத் தனியே அழைத்தான் என்பதை சுஜியும் ஓரளவு ஊகித்திருந்தாள். பின்னே காலையில் தானே கை இருப்பு நிலவரத்தை அவனிடம் சொல்லி இருந்தாள். அதனால் நேராக விஷயத்துக்கு வந்தாள்.

“ஏன் மாதவன் அனிதாவையும் உங்களையும் நான் கொடைக்கானலில் பார்த்தேனே”

“எப்படி கணவன் மனைவியாவா?”

“இல்ல ஆனா ஹனி மூன் வந்ததா”

“ஓ அப்ப அம்மையார் என்னப் பத்தி விசாரிச்சு இருக்கீங்க போலருக்கே… கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”

“ஹலோ, நான் உங்களைப் பாத்தது ஹனி மூன் சூட்”

“அப்படி ஒரு விஷயம் இருக்குதோ… நான் கூட ரொம்ப சந்தோஷப் பட்டுட்டேன். அனிதாவுக்கு கல்யாணம் ஆனது நிஜம். மாப்பிள்ள சத்தியமா நான் இல்ல. அவ கூட அமெரிக்கால படிக்குற சந்தீப். அங்க அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. இந்தியால வந்து அவங்க அப்பா அம்மா கிட்ட விஷயம் சொல்லிட்டு, கொடைக்கானல்ல ஹனிமூன் கொண்டாடிட்டு போனாங்க. அவங்கள நான் விஷ் பண்ண வந்தப்பத் தான் இந்த ஐத்த மகளை மறுபடியும் பாத்தேன் போதுமா?”

அவளது முகத்தில் தெரிந்த குழப்பம் குறைந்து இருந்தது. “வேற என்ன சந்தேகம் சுஜி? எதுவா இருந்தாலும் தயங்காம என் கிட்ட கேட்டுடு”

“இல்ல நீங்களும் அனிதாவும் லவ் மாரேஜ் தானே பண்ணிக்க இருந்திங்க. அப்பறம் எப்படி சந்தீப்ப அனிதா கல்யாணம் பண்ணிகிட்டா?”

“நீ சொல்லுறது சரிதான். அனிதா அப்பாவோட பார்ட்னர் பெண். அதனால நாங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிட்டா தொழிலுக்கு நல்லதுன்னு பெரியவங்க பண்ணின ஏற்பாடுதான் இது. அனிதாவுக்கு இதுல விருப்பம். எனக்கு வேணாம்னு சொல்ல எந்த காரணமும் அப்ப இல்ல. அப்படி முடிவானது தான்”

“இல்ல ஏற்கனவே கடை எல்லாம் வச்சு இருக்கீங்க. அப்பறம் என்ன புதுசா பஹரிகா?”

சற்று தயங்கிய அவன், “நான் அனிதாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னது அவங்க அப்பாவுக்கு கோவம். பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகிட்டார். நாங்க ஏற்கனவே வச்சு இருந்த கடைகள் எல்லாம் அவருக்கு சொந்தம் ஆயிடுச்சு. அப்பறம் தான் பஹரிகாவை ஆரம்பித்தோம்”.

சுஜிக்கு இந்த செய்திகள் புதிது. அதனால் அதனை நினைத்துக் கொண்டே வந்தாள். மாதவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது தனக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சியைத் தர வேண்டும்? மனம் போகும் பாதையைப் பார்த்த சுஜி, மணல் வீடு கட்டாதே மனமே என்று அதட்டி அதற்குக் கடிவாளம் போட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: