Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

இனி எந்தன் உயிரும் உனதே – 3

அத்தியாயம் – 3

அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான் பாரி.

அமுதா அவனது உறவுமுறைதான். ஒன்றுவிட்ட ஈஸ்வரி அத்தை மற்றும் தூரத்து சொந்தமான துரைராஜ் மாமா என்று இரண்டு பக்கங்களிலும் பாம்பன் பாலத்தின் உறுதியுடன் நிற்கும் உறவு.

அவனது வண்டி வரும் சத்தம் கேட்டதும் வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருந்த துரை அவனை நோக்கி வந்தார்

“வா வா பாரி” என்று இயல்புபோல அழைத்தவர் நாக்கைக் கடித்துக் கொண்டு “வாங்க மாப்பிள்ளை” என்று திருத்தினார்.

“மாமா… பாரின்னே கூப்பிடுங்க. மாப்பிள்ளைன்னு சொன்னா வித்யாசமா இருக்கு”

“என்ன இருந்தாலும் முறைன்னு இருக்குல்ல. அதை நாமே கடை பிடிக்கலைன்னா எப்படி. ஈஸ்வரி மாப்பிள்ளைக்குக்  காப்பி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.

“அதெல்லாம் வேணாம் மாமா. அம்மா அமுதாவுக்குப் பிடிச்ச நிறத்தைக் கேட்டுகிட்டு, காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை எடுத்துட்டு வர சொன்னாங்க.”

“அட காஞ்சீபுரத்துக்கா போறிங்க”

“ஆமாம் மாமா… நீங்களும் வரிங்களா?”

“அதில்ல பாரி, நம்ம சுமோ ஒண்ணு கொட்டாய் நிறுத்தி  இருக்குல்ல அதை அங்கிருக்குற ஒருத்தன் கேட்டுட்டு இருந்தான். நீங்க அப்படியே அதையும் முடிச்சுட்டு வர முடியுமா?”

“நானா…”

“நீங்களேதான்… வண்டி ஓட்டுவீங்கல்ல”

“அதில்ல மாமா… நீங்க விலை பேசி முடிச்சுடுங்க, நான்  வண்டியை அவரு வீட்டில் விட்டுட்டு புடவை  கடைக்கு போயிட்டு வந்துடுறேன்”

“சரி… எங்க பட்டுப் புடவை எடுக்கறதா உத்தேசம்?”

“வழக்கமா வாங்குற கடைலதான். அம்மா  அமுதாவுக்குப் பிடிச்ச நிறத்தைப் பத்திக் கேட்டுகிட்டு வாங்கிட்டு வர சொன்னாங்க…”  என்று இழுக்க

“ஹோ… ஹோ… ஹோ… ” சத்தமெழச் சிரித்தவாறு “அமுதாவைக் கேக்கணுமாக்கும்” என்றார்

“நீங்க சொன்னாலே போதும் மாமா” என்றவாறு அவருடன் சேர்ந்து எழுந்தான்.

“எனக்கு என்ன தெரியும் மாப்பிள்ளை. உக்காருங்க நான் உங்கத்தை காப்பி கொண்டு வருவா அவ கிட்டயே கேளுங்க”

அதற்குள் அவரின் பேரன், அமுதாவின் அண்ணன் மகன்  ஓடி வந்து “மாமா… ” என்றபடி மடியில் அமர்ந்து கொண்டான். அவனும் அவனது அம்மாவும் இங்கிருக்க அவனது தந்தை திரைகடலோடி திரவியம் சேர்க்கும் பொருட்டு அரபு நாட்டிற்கு சென்றுள்ளார்.

“மாமா  ஒரு பாட்டு சொல்லித்தாங்களேன்” என்று கண்ணை சுருக்கிக் கொண்டு கெஞ்சினான்.

“அத்தை கேக்க சொன்னாங்க” என்று தயங்கி தயங்கி சொல்லிய போதே இது பொய் என்று தெளிவாக பாரிக்குத்  தெரிந்தது. நாக்கைத் துருத்தி “பொய் சொல்லாதடா” என்றான் செல்லமாக.

“அத்தை சொன்னாத்தான் நீங்க பாடுவிங்கன்னு எங்க அம்மா சொன்னாங்க. இப்ப சொல்லித்தாங்களேன்… அன்னைக்கு உங்க வயலுக்கு வந்தப்ப மண்ணு வெட்டிட்டு பாடுனிங்களே  அந்தப் பாட்டு”

“உங்க அத்தைக்காக இல்ல உனக்காகவும் பாடுவேன்” என்றபடி அவனது கன்னத்தைக் கிள்ளியவன் கூடத்தில் யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு

வீட்டை சுத்தி தென்னை மரம், வேலியோரம் வேப்பமரம்.

காட்டைச்சுத்தி முருங்கை மரம் குலுங்குதடி பூத்து

நம்ம காத்தாடப் போய் வருவோம் கையோட கை  சேர்த்து.

என்று நாட்டுப்புற மெட்டில் தெம்மாங்கு பாட்டுப் பாட, அதன் தாள லயத்தில் குதித்து ஆடினான் சிறுவன்.

சமையலறையில் வேலை செய்துக்க கொண்டிருந்த அவனது அத்தை ஈஸ்வரிக்கும் அவரது மருமகள் வளர்மதிக்கும் அது சரியாகச் சென்றடைந்தது.

அவன் என்னதான் மெதுவான குரலில் பாடினாலும், வேக வேகமாக ஒரு நல்ல சுடிதார் அணிந்து அம்மாவிடம் காப்பி டம்ளர் வாங்க சமயலறைக்கு ஓடி வந்த அமுதாவின் காதில் விழாமல் இல்லை. அதைக் கேட்டதும் அவளது முகத்தில் இருந்த மலர்ச்சி மறைத்து மிக லேசான சுழிப்பு. அதனை சரியாகக் கண்டு கொண்ட அவளது அண்ணி வளர்மதி

“என்ன அமுதா நாட்டுப்புறப் பாடல் கச்சேரி நடக்குது போல. கல்யாணம் முடிஞ்சதும் நீ வரப்பில் களையெடுக்க, என் தம்பி ஒன்னப் பாத்து தெம்மாங்கு பாட்டுப் பாடன்னு உங்க வயக்காட்டுல தினமும் சினிமாதான்” என்று கிண்டலாகக் கூறினாள்.

வளர்மதியின் வார்த்தைகளுக்கு கை மேல் பலன். வேகமாக கூடத்திற்கு வந்த அமுதா நங்கென்று டம்ளரை மோடாவில் வைத்த வேகத்தில் பாதிக் குவளைக் காப்பி கீழே கொட்டியது. பாதியில் பாட்டை நிறுத்திவிட்டு விக்கித்துப் போய்  பாரி அவளைப் பார்க்க, சிறுவன் பயந்து பாரியிடம் ஒட்டிக் கொண்டான்.

“ஏண்டா அவரு பாட்டுப் பாடவா வந்திருக்காரு… நீ போயி உங்கம்மாட்ட கேட்டு வீட்டுப் பாடத்தை முடி” என்று விரட்டி விட்டாள்.

“என்னாச்சு அமுதா… ஏன்  இவ்வளவு கோபம்” தணிவான  குரலில் கேட்டான் பாரி.

“நீங்க எதுக்கு இப்ப வந்திங்க. இவனுக்கு பாட்டுப் பாடி இங்க கச்சேரி பண்ணவா” எரிந்து விழுந்தாள்.

பாரியின் முகம் அவமானத்தால் சுண்டியது. “உங்க வீட்டுக்கு வந்து கச்சேரி பண்ணனும்னு எனக்கு அவசியமில்ல” அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது

“பின்ன” என்றாள்

“அம்மா உனக்கு பிடிச்ச கலர் கேட்டுட்டு புடவை எடுத்துட்டு வர சொன்னாங்க. அந்த ஒரே காரணத்துக்காகத்தான் வந்தேன்” என்றான் எரிச்சலை  ஓரளவு கட்டுப்படுத்த முயன்றவாறே.

“அதை போனில் கேட்டிருக்கலாமே” என்றாள்.

“ஏன் நான் வந்தது உனக்குப் பிடிக்கலையா? இல்லை என்னையே பிடிக்கலையா”

பாரியைப் பிடிக்காமல் என்ன அவர்களது உறவினர்களிலேயே மேற்படிப்பு படித்திருக்கிறான். சம்பாதிக்கிறான், கொஞ்சம் கருப்புத்தான் இருந்தாலும் குறையேதும் சொல்ல வழியில்லை. ஆனால்…

இரு சக்கர வாகனத்தில் வந்ததால் கலைந்திருந்த அவனது தலைமுடியையும், அவன் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிறக் கட்டம் போட்ட சட்டையையும் கண்டவள் முகம் சுளித்தவாறே

“கடைக்குத்தானே போறிங்க ஒரு ஜீன்ஸ், டீ ஷர்ட்  போட்டிருக்கலாமே”

“இந்த வெயிலுக்கு வேஷ்டிதான் நியாயப்படி கட்டிருக்கணும். நான்தான் பஸ்ஸில் ஏறி இறங்கணுமேன்னு பேண்ட்டு போட்டிருக்கேன்”

“எனக்கு ட்ரெஸ் வாங்குறது இருக்கட்டும் கொஞ்சம் இந்த காலத்துக்குத் தகுந்த மாதிரி நாகரீகமா நீங்க உடை போட்டுக்கோங்க. எங்க அப்பா தாத்தா போடுற மாதிரி சட்டை பேண்ட்டு போடாதீங்க. பிரெண்ட்ஸ் கேலி பண்ணும்போது நாக்கை புடிங்கிக்கலாம் போல இருக்கு”

“உடை என்னோட வசதிக்குத்தான் உன்னோட பெருமைக்கு இல்லை”

“அப்ப என்னை பாக்க வரும்போது இந்த ட்ரெஸ் போடாதிங்க”

முதிர்ச்சியின்றி பேசும் இந்தப் பெண்ணுடன் எப்படிக் குடும்பம் நடத்துவது. ஒரு சின்ன விஷயத்தில் கூட இந்தப் பெண்ணை சுலபமாக கொதிக்க வைக்க முடிகிறது என்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் எப்படியெல்லாம் பொங்கப் போகிறாளோ என்று மலைத்தான்.

தானும் அவளுடன் சரிக்கு சரியாக பேசி சச்சரவை அதிகமாக்குவது உரைக்க… “சரி விடு, இனிமே உனக்குப் பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு உன்னைப் பாக்க வரேன். இன்னைக்கு இது போதும். உனக்குப் பிடிச்ச நிறத்தை சொன்னா அதே நிறத்தில் எடுத்துட்டு வரேன்”

சற்று தணிந்தவளாக யோசித்தவள் “மஞ்சள்”

“சரி” என்றான்

“இல்லை காப்பர் சல்பேட் கலர்தான் இப்ப பேஷனாம். இங்க்  ப்ளூ நிறத்தில் சேலைகாப்பர் சல்பேட்ல ப்ளூ  பூ பிரிண்ட் போட்ட ஜாக்கெட்”

“என்ன…” என்று கேட்டான்.

பாவம் அவனுக்கு புடவை கிடவை எல்லாம் பற்றித் தெரிந்தால் தானே. பிரிண்ட் ஜாக்கெட்டா… அவனது அம்மா வீட்டு விஷேஷங்களுக்கு பெண்களுக்கு வைத்துத் தர பாலிஸ்டர் துணி பிட்டு இருபது முப்பது என்று மொத்தமாக வாங்குவார். இவனும் உடன் சென்றிருக்கிறான். இதென்ன ப்ரின்ட்டு ப்ளவுஸ்?

அவன் விழிப்பதைக் கண்டு “அதுதான் பாஹுபலி அனுஷ்கா போட்டிருப்பாளே  அதே மாதிரி”

“ஓஹோ…”

அவனுக்கு தெரிந்து நீலம் என்ற ஒரு நிறம்தான். அந்த  ஒரு  நிறத்தை இத்தனை விதமாகப் பிரித்து சேலை நெய்து இவனை  பிரச்சனையில் மாட்டி விட்டிருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை.

“அந்த புடவையை உடுத்திகிட்டாத்தான் அவளை மாதிரி கம்பீரமா இருப்பேன். அதுக்கு ஏத்த மாதிரி சில்வர் நிறத்தில் பழங்கால மாடல் ஆன்ட்டிக் நகைகளும் வாங்கணும். கையோட அதையும் வாங்கிட்டு வந்துடுங்க”

அறைக்குள் தந்தை நுழைந்ததும் பேச்சை நிறுத்தினாள் “என்னம்மா உனக்குப் பிடிச்ச நிறத்தை மாப்பிள்ளைகிட்ட  சொல்லிட்டியா”

“சொல்லிட்டேன்பா”

“இந்தாங்க மாப்பிள்ளை வண்டி சாவி. நேத்துத்தான் புல் டேங்க் ரொப்பினேன்.” என்றவண்ணம் கொடுத்தார்.

“அப்ப நான் வரேன் மாமா” என்று அவனும் கிளம்பினான்.

“பாரி, அமுதாவுக்குப் பிடிச்ச மாதிரி பச்சை  நிறத்தில் ஒரு நல்ல சேலை எடுத்துடுங்க. நம்ம வீட்டு விசேஷத்துக்கு அந்த நிறத்தில்தான் எடுக்குறது வழக்கம்”

அமுதாவுக்குப் பிடித்த பச்சை நிறமா? குழப்பமாகப் பார்த்தான் “அமுதா நீல நிறத்தில்  புடவை..”

இடைமறித்தவர் “அவளுக்கு என்ன மாப்பிள்ளை நம்ம பழக்கவழக்கம் தெரியும். நீங்க பச்சை நிறத்திலேயே எடுத்துடுங்க” என்றார் அதைத்தான் நீ எடுக்கவேண்டும் என்பதைப் போல.

தந்தையிடம் விருப்பமின்மையைக் காட்ட முடியாததால், பாரிதான் அமுதாவிடம் மாட்டினான். மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் உள்ளே சென்றாள்.

இப்போது அமுதா விருப்பப்படி நீல நிறத்தில் புடவை எடுப்பதா இல்லை இவரின் ஆணைப்படி பச்சை நிறத்தில் எடுப்பதா… இவங்க வீட்டுக்கு வந்தது தப்பாயிடுச்சு. பேசாம நாமே போயி ஏதோ ஒரு நிறத்தில் எடுத்திருக்கலாம்…

துரை பாரியை அழைத்துக் கொண்டு கொட்டகையில் நிறுத்தியிருந்த வண்டியைக் காண்பித்தார்.

சுமோ 90 இறுதிகளில் வந்த மாடல் நன்றாகவே இருந்தது. “இதை ஏன் மாமா விக்கிறிங்க நல்லாவே இருக்கே. நல்ல பில்ட் நம்ம கரடு முரடான பாதைக்கு நல்லா தாக்குப்பிடிக்குமே”

“எனக்கும் சம்மதமில்லைதான். ஆனால் உங்க மச்சான் கேக்க மாட்டிங்கிறானே… இது பழைய வண்டியாம் விலை பேசி வேற பார்ட்டிக்கு முடிச்சுட்டான்”

“துபாய்லேருந்துட்டு இந்த வேலை எல்லாம் பண்றாரா”

“அங்க வெயிலில் காஞ்சு சம்பாதிக்கிறதை இப்படி தாம் தூம் அடிக்கிறான். கல்யாணத்துக்கு வரும்போது புது வண்டி எடுக்கலாம்னு சொல்லிருக்கான். எனக்கு அவன் பேசிருந்தா ஆள் கிட்ட தர இஷ்டமில்லை. அதுதான் காஞ்சீபுரத்தில் என் பிரெண்ட்டுக்கிட்ட தர முடிவு பண்ணிருக்கேன். உனக்குப் பிடிச்சா நீயே எடுத்துக்கோ பாரி.”

“இப்போதைக்கு வண்டி எடுக்குற ஐடியா இல்லை மாமா. நான் உங்க பிரெண்டு கிட்டயே கொடுத்துட்டு வந்துடுறேன்”

வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

சுமோ காஞ்சி செல்லும் திசையை நோக்கிப் பறந்தது.

6 Comments »

  1. அருமையான அத்தியாயம் அக்கா. இன்று பல இளம் பெண்களின் எதிர்பார்ப்பு அமுதாவைப் போலத் தான் இருக்கிறது. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. காஞ்சிபுரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம். இந்த கலர் காம்பினேசன் எல்லாம் எனக்கே மண்டை காயுதே. பாவம் பாரி. என்ன செய்யப் போகிறானோ? அமுதா அனுஷ்கா மாதிரி இருப்பாளோ? 😂

  2. Ayyo ammadi ipidi oru parathevathayava pari ku parthirukanga please pa epidiyavathu avana thapika vachidunga .devasena mathiri pudavai kattina elarum avalagida mudiyuma enna.

  3. Hi. அமுதாவிற்கு IT வேலை செய்யற இளைஞன் மாதிரி ட்ரெண்டியான கணவான் வேண்டும்.ஆனால் பாரி ள் எதிர்பாக்கிற மாதிரி இல்லை. தூண்டிவிட அண்ணி. பாவம் பாரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: