Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 22

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 22

22

திதியில் உணவறையில், அன்று அனைவரும் அமர்ந்து ஒன்றாக உணவருந்திக் கொண்டிருந்தனர். வெள்ளி, சனி, ஞாயிறு உணவகங்களில் அதிகமான வேலை இருக்கும் நாட்கள். அதனால் திங்கள் அன்றுதான் அவர்களுக்கு விடுமுறை. வேலை நேரம் ஷிஃப்ட் படி இருந்ததால், அனைவரும் விடுமுறை நாட்களில் முடிந்தவரை ஒன்றாக அமர்ந்து உண்ணுவார்கள். பழனிசாமியும் சில சமயம் அவர்களுடன் உணவு அருந்துவார். அனைவரும் ஸ்பூன், போர்க் கொண்டு மேல்நாட்டு பணியில் தான் உண்ண வேண்டும் என்று பழனி வலியுறுத்துவார்.

“நம்மலே நாசுக்கா சாப்பிடத் தெரியாம இருந்தா, எப்படி மத்தவங்களுக்கு பரிமாறுவோம்?” என்பார்.

“சிக்கனை நீ கத்தில கட் பண்ணி, போர்க்ல எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாத்தான், எந்த மாதிரி சிக்கன் கட் பண்ணா சாப்பிடுறதுக்கு சுலபம்னு உனக்குத் தெரியும்” என்று விளக்கமும் தருவார்.

அன்று அப்படி ஒருநாள்.

“எங்கப்பா வேலுவக் காணோம்?”

“சார் நீங்க இன்னைக்கு லேட். வேலு அப்பெடிஸேர் முடிச்சுட்டு ரெண்டு மணி நேரம் முன்னாடியே கிளம்பிப் போயாச்சு.”

நீங்க இன்னைக்கு வந்து அப்பிடி சாப்புடு, இப்பிடி சாப்புடுன்னு சொல்லி எங்க உயிர எடுக்கப் போறிங்கன்னு முன்னாடியே அவனுக்குத் தெரியும். அதுதான் காத்தாட்டம் பறந்துட்டான். நினைத்துக் கொண்டார்கள். சொல்ல முடியுமா? இன்டெர்னல் மார்க் அவர் கைல தானே இருக்கு. போர்க் என்ன சோப்ஸ்டிக்ல பாயசம் குடிக்க சொன்னாலும் செய்யணும் தான்.

“என்ன சினிமாவா?”

“இல்ல சார் முனியாண்டி விலாசுக்கு”.

“ஏன் இங்க சாப்பாட்டுக்கு என்ன குறைச்சலாம்?”

“இதோ அவனே வந்துட்டான். கேட்டுக்கோங்க”

அருகே வந்த வேலு, “என்ன என் தல உருளுது?”

“இல்லடா நீ எங்கன்னு சார் கேட்குறாரு” இது சாகுல்.

பழனி அவனிடம், “என்ன வேலு அப்பெடிஸேர் மட்டும் சாப்பிட்டுட்டு கிளம்பிட்டயாம். ஏன் இங்க சாப்பாடு பிடிக்கலையா?”

சாகுலை முறைத்த வேலு பழனியிடம் பதில் சொன்னான். “அப்படி எல்லாம் இல்ல சார். சாப்பிட்டுட்டுத்தான் போனேன்”

புரியாது பழனி விழிக்க, உதவிக்கு வந்தான் பிரசன்னா, “சார் நம்ம சேர்வ் பண்ணுற சாப்பாடு அப்பெடிஸேர் மாதிரி கொஞ்சமா இருக்காம். அதுனால அப்பப்ப முனியாண்டி விலாஸ் போயிடுறான்.”

வாய்விட்டு சிரித்த பழனி, “இப்பத் தெரியுது நீ டெஸ்ட் அன்னைக்கு செஞ்ச குளறுபடி” என்றார்.

“அது என்ன சார் குளறுபடி?” என்று எல்லோரும் ஆவலுடன் கேட்க,

“சார் வேணாம் சார், ப்ளீஸ் சொல்லிடாதிங்க” என்று வேலு கெஞ்ச,

“வேலு ப்ராக்டிகல் டெஸ்ட் எனக்கு தந்த இன்க்ரிடியென்ட் ஸும் எடுத்துக்குச்சு. எப்டி அவ்ளோ ஃபாஸ்டா 21 பௌச்செட் எக் செஞ்ச? நான் உன்னப் பார்த்து பயந்தது” என்று ரோசி தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் சொல்லி, அவன் மானத்தைப் போட்டு தெருவில் உடைத்தாள்.

“என்ன இருவத்தொன்னா?” கோரசாக வந்தது குரல்கள்.

பிரசன்னா விவரமாக, “ஏண்டா வேலு, ஒரு தட்டுக்கு ஒரு முட்டை தானடா செர்வ் பண்ணனும். மூணு தட்டுக்கு மூணு முட்டை போதுமே. முன்னெச்சரிக்கையா வேணும்னா ஆறு முட்டை செய்யலாம். எதுக்குடா இருவத்தொன்னு பௌச்செட் எக் செஞ்ச?”

வேலு அனைவருக்கும் காரணத்தை விளக்கினான். “சார் த்தசு புஸுன்னு இங்கிலிஷ்ல பேசுனாரா… எனக்கு மூணு பேருக்கு சாப்பாடு செய்யணும்னு மட்டும் புரிஞ்சது. முட்டையத் தவிர, வேற ஒண்ணுத்தையுங் காணோம். வேற என்னத்த செய்யுறது? தட்டுல காக்காய்க்கு சோறு வைக்குற மாதிரி ஒரே ஒரு முட்டைய மட்டும் வைக்க சொல்லுறியா?”

“அதுக்காக ஒரு முட்டை வைக்க சொன்னா, தட்டுக்கு ஏழு முட்டை வச்சு முட்டையாலையே அவங்கள அடிசுட்ட”

“முதல்ல ஒவ்வொரு தட்டுலயும் நவ்வாலு முட்டைதான் வச்சேன். சார்தான் பக்கத்துல வந்து லாட் லாட்னு சொன்னாரு. அதான் கூட மூண வச்சேன்”

தலையில் அடித்துக்கொண்ட பிரசன்னா, “ஏண்டா அவரு நிறைய வச்சிருக்கன்னு சொன் னா, நீ இன்னும் மூணு முட்டைய சேர்த்து வச்சியா?”

எல்லோரும் கண்களில் கண்ணீர் வருமளவு சிரித்தனர்.

பழனியிடம் வேலு, “எப்படி சார் எனக்கு இடங்கிடச்சது? என் மண்டைல ரொம்ப நாளா கொடஞ்சுகிட்டுருக்கு”

“சந்தேகமில்லாம உன் வேகத்தாலதான். அதுவும் ரெண்டாவது ரௌண்டுல ஒன்னர நிமிஷத்துல மூணு ஜிகிர்தண்டா மாதிரி போட்டுக் கொடுத்த பாரு… என்கூட இருந்தவங்க எல்லாம் ஆடிப்போய்டாங்க. சரி பேவரேஜ் செக்ஸன்ல ட்ரெயின் பண்ணிடலாம்னு நினைச்சோம். நியூ இயர் சமயம் நீ பாட்டுக்கு லீவ் போட்டுட்டு ஊருக்குப் போய்டாதே. உன் சேவை எங்களுக்கு ரொம்பத் தேவை”.

யார் முகத்தில் அவள் வாழ்க்கையில் விழிக்கவே கூடாது என்று நினைத்தாலோ, அவனை மீண்டும் சந்திக்கும்படி நேர்ந்த சூழ்நிலையை என்னவென்று சொல்ல?

கொடைக்கானலில் இருந்த அவர்களது விடுதிக்கு விடுமுறையில் உதவச் சென்று இருந்தனர் சுஜியும் அவள் தோழர்களும். அன்று அறைகளைக் கவனிக்கும் பொறுப்பு சுஜி மற்றும் ரோசி இருவருக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. அழகான கருப்பு ஸ்கர்ட், வெள்ளை சட்டை, அதற்கு மேல் கருப்பு கோட் மற்றும் இழுத்துக்கட்டிய போனிடைல், கால்களே தெரியாது போட்டிருந்த கருப்பு நிற உல்லேன் ஸ்டாக்கிங்ஸ், உயரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியே காட்டும் ஷுஸ், அளவுடன் பூசிய லிப்ஸ்டிக் என்று சட்டென்று அடையாளம் தெரியாத மாதிரிதான் இருந்தாள் சுஜி. அதைத் தவிர வயதும் அவளைக் கொஞ்சம் மாற்றி இருந்தது. முன்பை விடவும் ஒரு சுற்று உடம்பு வைத்து, ரெண்டு ஷேட் நிறம் கூடி, பார்க்க ஊட்டி ரோஜா போல் இருப்பதாக மினி போன முறை சொல்லிச் சென்றாள்.

அறையில் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் வரவும், சரி செய்யும் பொருட்டு எலெக்ட்ரிசியனைக் கூட்டிச் சென்றாள். அந்த அறையில்தான் அவள் மாதவனையும், அனிதாவையும் மறுபடி சந்திக்க நேர்ந்தது.

அறையின் கதவைத் தட்டியதும் உள்ளே வருமாறு அனுமதி அளித்த குரல் அவளுக்கு நன்கு தெரிந்த குரலல்லவா? சற்று தாமதித்த சுஜி எலெக்ட்ரிசியன் பின்னால் நின்று கொண்டு மெதுவாகப் பார்த்தாள். ஆமாம் அவனேதான். சுதாரித்துக் கொண்ட சுஜி, முகத்தை சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு, சற்று குரலை மாற்றி, அழகான ஆங்கிலத்தில், “சார் உங்கள் அறையில் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் வந்து இருக்கிறது. இவர் சரி செய்வார்” என்று படபடவென கூறியவள் எலெக்ட்ரிசியனை உள்ளே செல்லுமாறு பணித்தாள். மாதவன் தன்னை உற்றுப் பார்ப்பது போல் தெரிவது ஒருவேளை பிரமையோ?

“மாது யாரது?” என்ற குரல் குளியலறையில் இருந்து கேட்க, “ரூம் சர்வீஸ் அனிதா” என்று பதிலளித்தான் மாதவன். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே ஓடி வந்து விட்டாள் சுஜி.

வரவேற்பறையில் சென்று அந்த அறையில் இருப்பவரது விவரங்களைப் பார்க்க, அது திருமதி. அனிதா என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த விவரம் தெரிந்தது. அறைகளைச் சுத்தம் செய்யும் செல்வியிடம் தூண்டில் போட்டுப் பார்த்ததில், தேனிலவுக்கு வந்த ஜோடி என்று தெரிந்தது. மாதவனது பாட்டி இறந்து விட்டதால் தள்ளிப் போன திருமணம் இப்போதுதான் நடந்தது போலும். யாரும் அவனைப் பற்றி சுஜியிடம் சொல்வதில்லை. எங்கே, இவள்தான் அவனை எட்டிக்காயாய் நினைத்தாளே.

சுஜிக்கு மிகவும் கோவம். கடவுளே, எல்லாருக்கும் பாலோட கலந்த தேனாட்டம் வர்ற சந்தோசம், எனக்கு மட்டும், அனல் காத்து வீசி, அடமழ பொழிஞ்சு, போ போ இனிமே வேற வழியே இல்லன்னு யாரோ கோல வச்சுட்டு மிரட்டுனதுக்கு அப்பறமேதான் வருது.

அது சரி அப்பவாவது வருதே அதச் சொல்லுங்க.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’

அத்தியாயம் – 5 கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி.   பயணிகள் கவனத்திற்கு…… யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….  

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 23என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 23

அத்தியாயம் – 23 ‘எங்கே போனாய் என் கவிதைப் பெண்ணே’ என்று அரவிந்தின் மனது துடித்துக் கொண்டிருந்தது. ‘சித்து உன்னை குள்ளக் கத்திரிக்காய்ன்னு கிண்டல் பண்ண மாட்டேன். எவ்வளவு மோசமா சமைச்சாலும் முழுங்கிடுறேன். ஆனா நீ மட்டும் சீக்கிரம் கண்ணுல பட்டுடு’