Tamil Madhura கதை மதுரம் 2019,வாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வணக்கம் தோழமைகளே,

‘கதை மதுர’த்தில் அடுத்த கதையாக வருவது எழுத்தாளர் வாணிப்ரியாவின் நகைச்சுவைப் புதினம் ‘குறுக்கு சிறுத்தவளே’. எழுத்தாளர் வாணிப்ரியா ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’, ‘அன்பிற்கும் அழகென்று பெயர்’ என்று காதல் கவிதை சொல்லும் இவர் இல்லற இம்சைகளை நகைச்சுவையாகவும் அடுக்குவார். அவரது ‘குறுக்கு சிறுத்தவளே’ உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

குறுக்கு சிறுத்தவளே – 1

ன்னா நான் குண்டாவா இருக்கேன்?”, லலிதா முழு நீளக் கண்ணாடியின் முன்னால் இடமும் வலமுமாக தன்னை  வளைத்து திரும்பிப் பார்த்த படி கணவனிடம் கேட்டாள்.
லலிதாவின் கணவன் ரமேஷுக்கு ஆலயமணியில் தொடங்கி அவசரத்திற்கு அடிக்கும் தீயணைப்பு வண்டியில் உபயோகிக்கும் அபாயமணி வரை எல்லாவிதமான மணிகளும் காதுக்குள் இன்னிசை பாடி ‘வருதுடா உனக்கு ஆப்பு’ என்றது. 


ஆனாலும் ஒரு சிலருக்கு சும்மாயிரு என்று காதுக்குள் மைக்ரோபோன் வைத்து கத்தி, மூக்கிற்கு நேர் கீழே சுட்டு விரலை ஆட்டி பேசாதே என்று மிரட்டினாலும் வேண்டாத சமயத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளுவதில் சமர்த்தர்கள். ரமேஷும் அதே ரகம் தான்.
கல்யாணம் ஆன இந்த எட்டு வருடங்களில் மனைவியின் முன்னால் லட்சோபலட்சம் முறை டெப்பாசிட் இழந்த அரசியல்வாதியை போல தோற்றுப் போய் நிராயுதபாணியாய் ‘இன்று போய் நாளை வா’ என்று அவளால் திருப்பி அனுப்பப் பட்டாலும் மீண்டும் மீண்டும் அவளிடம் சென்று மாட்டுவது என்பது ரமேஷிற்கே கை(வாய்) வந்த கலை.


“ஏன்னா, கேக்கறேனோல்லியோ! அங்க என்ன விட்டத்தை வெறிச்சு பார்த்துண்டு இருக்கேள்?”,

மனைவி கொடுத்த ஒரு இன்ஜெக்ஷனில் உசுப்பேற்றப் பட்டு, “ஹான்ன்…..”, என்று விழிக்க,

மீண்டும் முதல் பாராவில் கேட்ட அதே கேள்வியை நிறுத்தி நிதானமாக சுருதி சுத்தமாக கேட்டாள்  லலிதா.

கெத்தாக, “குண்டுன்னு சொல்ல மாட்டேன் லல்லு (பெண்டாட்டியை செல்லமாக அழைக்கிறாராம்!!!)….. ரெண்டு குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இடுப்பு அகன்று போய்டறது சகஜம் தானே. கொஞ்ச நாளா உக்காரும் போது சில சமயம் வயிறுல மடிப்பு தெரியறது….. கையை தூக்கினா ட்ரைசெப்ஸ் லேசா டாட்டா காட்டுறது போல ஆடறது…… “,

மனைவியின் கேள்விக்கு புவியியல் வகுப்பில் உலக வரைபடத்தில் குறிப்புகளோடு கொடுக்கும் ‘படம் வரைந்து பாகங்களை குறி’ என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் புள்ளி விவரங்களோடு விலாவரியாக பதில் சொன்னான் ரமேஷ்.


கன்னம் சிவந்து (கோபத்தில்), மூக்கு விடைத்து (முந்தையதின் பக்க விளைவு), கண்கள் குளமாக (சென்டிமென்ட்ட்….டு), “யூ டியூப்ல காஜல் அகர்வாலையும் தமன்னாவையும் நீங்க உத்து உத்து பாக்கும் போதே நினைச்சேன்”, என்று சொல்லி விட்டு அபவுட் டர்ன் அடித்து கணவன் முன்னால் வந்து நின்று இல்லாத இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.


“இல்ல கண்ணு….”, மனுஷனுக்கு எப்போ ரொமான்ஸ் பண்ணுறதுன்னு விவஸ்தையே இல்லை போல. “நான் என்ன சொல்ல வரேன்னா….”,

சல்லாபமாக ஆரம்பித்து சரசமாக லலிதாவின் கைகளை பிடிக்கப் போக, பானுமதி எபெக்ட்டில் கழுத்தை ஒடித்து உதட்டை சுளுக்கி சூடு கண்ட ஆட்டோ மீட்டர் போல விலுக்கென்று சென்றுவிட்டாள்.  


என்ன நடந்தது என்று மூளையின் இட, வல, கீழ் மற்றும் மேல் மூலையில் இருக்கும் மூளையின் செல்களுக்கு செல்லும் முன்னால் மனைவி கண்ணை விட்டு மறைந்துவிட, ரமேஷ் வழக்கம் போல திருதிரு முழியுடன் அமர்ந்துவிட்டான்.


*****************


வேகமாக சமையல் அறைக்கு வந்த லலிதா, அங்கே அஞ்சரைப் பெட்டிக்கு அருகே கௌரவமாக அமர்த்தி வைக்கப் பட்டிருந்த அவளது கைப் பேசியை எடுத்து தோழியின் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள். அவள் உடனே எடுக்காததால், வொய்ஸ்மைல் “கல்ப்ப்பு…. ஹிக்(விக்கல்)…. நான்தான் லலிதா ஹிக்…. உனக்கு நேரம் கிடைக்கிறப்போ எனக்கு போன் பண்ணேன் ஹிக்க்க்…. உன்னோட கொஞ்சம் அவசரமா பேசணும்”, மொட்டைத்தாத்தா பட்டணம் போனாராம் என்கிறது மாதிரி (புதுமொழி) ஒன்னும் புரியாமல் வாச்சான் பிழைச்சான் என்று ஒரு மெஸ்சேஜ் விட்டுவிட்டு அடுத்த தோழிக்கு கூப்பிட்டாள்.


“ஹலோ, கீதா…. கீதாதானே ஹிக்க், நான் தான் லலிதா பேசறேன். இப்போ நீ ஹிக்க்… பிரீயா இருக்கியா (போன் செய்துவிட்டு இதென்ன கேள்வி)? உன்னோட ஹிக்க்….. அவசரமா பேசணும்!”


“……………….”


“ஓ, சாரி ஹிக்க்…., ராங் நம்பரா? என் friend போன் நம்பர் மாற்றிட்டா போல ஹிக்க்….., நான் அப்பறம் கூப்பிடறேன்…. இல்ல இல்ல, ஸாரி, ஹிக்க்…  உங்களை தொந்தரவு செய்ததுக்கு சாரி….வைக்கிறேன்”


“…………………”


“இல்ல, இல்ல ஹிக்க்….., எனக்கு பெரிய பிரச்சினை எல்லாம் இல்லை”


மறுபடியும் கை பேசியை பார்த்ததில், தோழியின் எண்ணுக்கு பதில் முதல் நாள் காஸ் சிலிண்டர் புக் பண்ணுவதற்கு போன் செய்த கடைக்கு அழைத்தது புரிந்தது. சரி தான் என்று ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொண்டு டயல் செய்தாள்.


“ஹலோ, கீதா? ஓ…. மாலு, உனக்கு போன் செய்துட்டேனா? பரவாயில்ல, இதை கேளேன், இன்னிக்கி என்ன நடந்தது தெரியுமா? இவர் இருக்காரே! இவர்!”, இந்த இடத்தில் தகுந்த வாய்ஸ் எபெக்ட் கற்பனை செய்து கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 


குரல் நடுங்க தனது வில்லுப் பாட்டை ஆரம்பித்த லலிதாவை அப்படியே அலேக்காக நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கினாள் மாலு என்கிற மாலதி. 


“லலிதா, இரு இரு, நான் இப்போ ஜிம்முக்கு கிளம்பிட்டு இருக்கேன். இன்னும் ஒரு மணிநேரம் கழிச்சு நான் பிரீ தான். நேரா அங்க உன் வீட்டுக்கே வந்துடறேன்”, 


மனம் விட்டு ஒரு மூச்சு அழக்கூட முடியாமல், தகுந்த ஆள் கிடைக்காமல், மீண்டும் மறைந்திருந்து கண்ணாமூச்சி ஆடும் அந்த கீதாவின் எண்ணை அழுத்தினாள்.   

 
இந்த முறை தெய்வாதீனமாக சரியாக கீதாவுக்கே அழைப்பு போக, “கீதா, எங்கேடி இருக்க? (மறுபடியும் இதென்ன கோக்கு மாக்கான கேள்வி? அவ எப்படியும் உன் பக்கத்துல இல்ல) நான் உன்னை உடனே பாக்கணும்”


“என்னாச்சு லலிதா? நான் இப்போ பசங்களை ஸ்கூலில் ட்ரோப் பண்ண தான் போய்ட்டிருக்கேன். பண்ணிட்டு அப்படியே பத்து நிமிஷத்தில் அங்க இருக்கேன்”


பத்து நிமிடம் கழிந்து அதற்கு பிறகும் மேலும் நான்கைந்து நிமிடங்கள் சென்ற பிறகு, கீதா லலிதாவின் வீட்டுக்குள் வருவதற்குள், லலிதா, மேலும் நான்கு தோழிகளுக்கு போன் செய்து அவர்களை உடனே பார்க்கவேண்டும் என்று குரலில் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல, அவர்களும் முடிந்த அளவில் உடனே வருவதாக வாக்களித்தார்கள்.


இந்த நேரத்துக்குள் மூன்று முறை எட்டிப் பார்த்த ரமேஷை லலிதா, கடும் முறைப்பு மற்றும் விறைப்பு சரிவிகிதத்தில் கலந்து ஆக்ரோஷமான மூச்சை மேலாக தூவி, இல்லாத கண்ணீரை இருப்பது போல துடைத்து அவனது சமாதான முயற்சிகளை நிர்தாட்சண்யமாக நிராகரித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13

துளிதுளியாய் சேர்த்து வைத்த உன் நினைவுகளில் காற்றெல்லாம் உன்வாசத்தை சமைக்கிறேன்…. சமைத்த உன் நினைவுகளை துளி துளி தேனாய் அருந்தியே உயிர் வாழ்கிறேன்…. **************************************************************************************************************** ஸ்வேதா  இறந்து பத்து நாட்கள் முடிந்திருந்தன, ஸ்ருதி மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்று

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 13யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 13

கனவு – 13   புகைப்படங்களைப் பார்த்து முடித்த சஞ்சயன் பழைய ஞாபகங்களிலிருந்து தன்னை மீட்டெடுத்துத் தனது அலுவலக வேலையைச் செய்து முடித்தவன் தூங்கச் சென்றான். வைஷாலியும் தனது வீட்டில் தூக்கம் வராது பழைய நினைவுகளில் தான் உழன்று கொண்டிருந்தாள்.  

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7

குறுக்கு சிறுத்தவளே  பாகம் ஏழு  “இப்போ நான் என்ன கேட்டேன்! ஒரு ஆறு மாசம் ஜிம்முக்கு போனா வெயிட் குறைஞ்சிடுவேன். அதுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா என்னவாம்! அதுக்கு பெறுமானம் இல்லாதவளா ஆகிட்டேனா?”, காலை கண் விழித்ததில் இருந்து அந்த அரை