Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 16,17,18

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 16,17,18

16

சுஜி ஆடிக் கழிவின் போது விளக்குத்தூணுக்கு கமலத்துடன் சென்று ஒரு வருடத்திற்கு தனக்குத் தேவையான பாவாடை துணிகளையும், சுங்குடி மற்றும் பிற சுடிதார் துணிகளையும் எடுத்துக் கொள்வாள். புது மண்டபம் சென்று வழக்கமாக தைக்கும் தையல்காரரிடம் தைக்கக் கொடுத்து விடுவார்கள். சுந்தரம் பாசமிகு தகப்பனாக இருந்தாலும், உடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். தனது பிள்ளைகள் ஒழுக்கம் பற்றி யாரும் தவறாக பேசி விடக்கூடாது என்று நினைப்பார். சுஜி பாவாடை தாவணி அல்லது சுடிதார் மட்டுமே அணிந்து பழக்கம். ராணி, வாணி கூட அந்தக் கண்டிப்பிற்கு தப்பவில்லை.

நேர்முகத்தேர்வுக்கு அணிந்து செல்கின்ற அளவுக்கு பிரமாதமான உடை அவளிடம் இல்லை. இறுதித் தேர்வு என்பதால், முக்கியமானவர்கள் வருவார்கள், நன்றாகவும் அதே சமயம் கண்ணுக்கு உறுத்தாமலும் உடை இருக்க வேண்டும் என்று சுஜிக்குத் தெரியும். அப்பாவிடம் கேட்கலாம் தான். ஆனால் ஒரு முடிவு தெரியாமல் அவரிடம் கேட்கப் பிடிக்கவில்லை. அதனால் இருப்பதிலே சற்று நல்ல உடையாக பார்த்து உடுத்திக்கொண்டாள்.

தேர்வு நடக்கும் இடத்துக்கு வந்த போதுதான் இன்னும் கொஞ்சம் நன்றாக உடை உடுத்தி வந்திருக்கலாமோ என்று தோன்றியது சுஜிக்கு.

யாரோ அவளை அழைத்த குரல் கேட்டுத் திரும்பியவளிடம், “நீ சொல்லலேனா எனக்குத் தெரியாதா? வேற யாரும் சொல்ல மாட்டாங்களா?” என்று சொல்லியபடியே தன் கையில் இருந்த ஹாஜீமூசா துணி பையை கொடுத்தார் மூர்த்தி.

அதனுள்ளே புத்தம் புதிய சுடிதார் உடல் முழுவதும் லவெண்டேர் நிறத்திலும், கைகளிலும், கழுத்தைச் சுற்றியும் சிறிய சிறிய வெள்ளை பூக்கள் எம்பிராய்டரி போட்டு இருந்தது. அதற்கு பொருத்தமான வளையலும், காதணியும், மாலையும் கூட. எப்படியும் 1000 ரூபாய்க்கு குறையாது.

“ஏன் இவ்வளவு விலைக்கு வாங்கிட்டு வந்திங்க மாமா?” என்று கடிந்துகொண்டாள் சுஜி.

“அதை அப்பறம் பார்க்கலாம் போய் பாத்ரூம்ல மாத்திட்டு வா” என்றார்.
எப்படி இவர்களுக்குத் தெரியும்? சுஜிக்குப் புரிந்து விட்டது. “மினிதானே இந்த வேலைய செஞ்சது”.

மூர்த்தி அசட்டுச் சிரிப்புடன், “கண்டு பிடுச்சிட்டியே! அறிவுக் கொழுந்தே! போ போய் இந்த அறிவ இன்டெர்வியூல காமி”.

உடை மாற்றிக் கொண்டு தேவதை போல் வந்த அவளை இமைக்காது தொடர்ந்தன இரு விழிகள். அதை அறியாமல் தனது முதல் நேர்முக தேர்வு பயத்தில் இருந்தால் சுஜி.

நேர்முக தேர்வு மிகவும் சுலபமாக இருந்தது. ஏன் இந்தத் துறையை தேர்ந்தெடுத்தாய்? போன்ற பொதுவான கேள்விகள் தான். இதன் மூலம் உண்மையிலேயே இந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதா இல்லை பொழுதுபோக்காக இந்தப் படிப்பை எடுக்க விரும்புகிறார்களா என்று அறிய முயற்சி செய்தனர். ஏற்கனவே செய்முறைத் தேர்வில் சுஜாதா சமைக்கும் முறையைப் பார்த்த பழனிக்கு அவள் மேல் நல்ல அப்பிராயம். சுந்தரம் மெஸ் வைத்திருந்தது சுஜிக்கு மேலும் சாதகமாயிற்று. அதிக சிரமபடாமல் தேர்வாகி விட்டாள் சுஜி.  

“நீ செலக்ட் ஆகிட்டமா போய் பீஸ் கட்டிடு” என்றார் அலுவலகத்தில் இருந்தவர்.

வானத்தில் ஜிவ்வென்று பறப்பது போல் இருந்தது சுஜிக்கு. தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான அதிதியில் தனக்கு இடம் கிடைத்ததை நினைத்தாலே நம்பமுடியவில்லை அவளால்.

“பீஸ் எவ்வளவு சார்?”

“ஒரு செமெஸ்டருக்கு Rs.50,000”

இதை தவிர விடுதியில் தாங்கும் செலவு, சாப்பாடு, துணிமணி நினைத்தாலே தலை சுற்றியது சுஜிக்கு. வானத்தில் பறந்த சுஜியின் மனது தொப்பென்று தரையில் விழுந்தது. தான் படித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

துன்பம்குற நெருப்ப எடுத்துக் கையுல வச்சுகிட்டே அலையுது காலம். தட்டுப்படுற ஆளுக தலையில் எல்லாம் வச்சு வச்சுப் பார்க்குது.

நீ சருகா இருந்தா கருகிக் காணாமப் போயிருவ.
தங்கமா இருந்தா மெருகாகிப் போயிருவ.
நீ சருகா, தங்கமான்னு சோதிக்குறேன்“.

தீய வச்சுட்டுக் கண்ண சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்குது காலம்.

17

து தன்னால் முடியாதது எட்டாக் கனி என்று நினைத்து ஆறுதல் படுத்தி கொள்ள வேண்டியதுதான்.

“மாமா இந்த காலேஜ்ல சேரமுடியாது. அந்த அளவு வசதி இல்லை”

“ஏன் சுஜி இப்படி நினைக்குற? நான் உங்க அப்பாட்ட பேசுறேன். வீடு இருக்கு. பாங்க்ல லோன் தருவாங்க.”

“வேண்டாம் மாமா. அவர் நினைச்சால் கூட முடியாது. ஏன்னா வீட்ட அடகு வச்சுதான் விக்கி படிப்புக்கும், ராணி வாணி படிப்புக்கும் அப்பா பணம் செலவு பண்ணுறார்.”

இதை அப்போதுதான் கேள்விப்பட்ட மூர்த்தி அதிர்ந்து போனார்.

“உன்னோட நகைகளை வித்துத்தான் விக்கி காலேஜ் பீஸ் கட்டினதா கேள்விபட்டேன்.”

“சித்தி அதுவரை என்னோட நகைமேல கைவைக்காம இருந்திருப்பாங்கன்னு நினைக்குறிங்களா?”

“இந்த காலேஜ்லையே பீஸ் கம்மி பண்ண சொல்லி கேட்டுப் பார்க்கலாம். ஸ்காலர்ஷிப் ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கலாம். எங்களால் முடிஞ்ச உதவி செய்யுறோம். நீ வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கு”.

கிட்டாதாயின் வெட்டென மறன்னு சொல்லுவாங்க. ஆனா இந்த கோர்ஸையே முழுசுமாக நம்பி இருந்த சுஜிக்கு மறப்பது சற்றுக் கஷ்டமாகவே இருந்தது.

இரண்டு நாட்கள் சென்றது. வீட்டில் இருப்பது எரிச்சலாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்றாள் சுஜி.

“என்ன சுஜி குட்டி என்ன இந்த சோகம்… எந்த கப்பல் கவிழ்ந்து போச்சு?” என்றார் மூர்த்தி மாமா.

“போங்க மாமா உங்களுக்கு எல்லாமே வெளாட்டுத்தான்”

“சரி சீரியஸா பேசலாம். அடுத்து என்ன செய்யப் போற?”

“பச்… அடுத்த வருஷம் ஏதாவது காலேஜ்ல சேர்ந்து படிக்கலாம்னு இருக்கேன்.”

“அப்படியா. நானும் அத்தையும் அடுத்த வாரம் ஊருக்குப் போறோம். வர கொறஞ்சது ஆறு மாசம் ஆகும். எங்க நியாபகமா உனக்கு ஒரு பரிசு. இந்தா இதை வச்சுக்கோ” என்று சுஜியின் கையில் ஒரு கவரைத் திணித்தார் மூர்த்தி.

புதிரோடு பிரித்துப் பார்த்த சுஜிக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

“மாமா… இது… இது…”

“அதிதில பீஸ் காட்டியாச்சு. நாங்க ஊருக்குக் கிளம்புறதுக்கு முன்னால உன்னைய ஹாஸ்டல்ல விட்டுட்டுப் போறோம்”.

“எப்படி மாமா?”

“உங்க அப்பாவும், நானும் சேர்ந்து கட்டினோம். என்ன பாக்குற? உங்க அப்பாட்ட சொல்லியாச்சு. விக்கி தான் சேத்து வச்ச பணத்துல இருந்து பத்தாயிரம் அனுப்பி இருக்கான். உனக்குத் தேவையான டிரஸ் மத்த சாமானெல்லாம் நானும் அத்தையும் போய் வாங்கிட்டோம்” என்று ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர் மேலும் தொடர்ந்தார்.

“மாப்பிள்ளை ஃபிரெண்ட் ஒருத்தர் டிரஸ்ட் வச்சு இருக்காரு. அடுத்த வருஷத்தில இருந்து உனக்கு ஸ்காலர்ஷிப் வந்திடும். அப்பறம் இன்டெர்வியூ நடத்துனவரைப் போய் பார்த்துப் பேசினோம். இந்த மாதிரி வருஷத்துக்கு மூணு, நாலு பேர் படிப்பான்கலாம். அவங்களுக்கு காலேஜ் ஏழு மணி நேரம் போக, அவங்க ஹோட்டல்ல ஒரு ஷிப்ட் வேலை தருவாங்களாம். உனக்கும் தரேன்னு சொல்லி இருக்காங்க. மூணு வருஷம் நீ வீட்டையே நினைக்காதே. நிம்மதியாப் போய் படி. அதுக்குள்ளே இந்த பிரச்சனை எல்லாம் அடங்கிடும்”

“சித்தி” என்று இழுத்தவளிடம்,

“அவளப் பத்தி நீ கவலைப் படாதே, உங்க அப்பா பாத்துக்குவார்” என்று சொன்னார் மூர்த்தி.

விக்கிக்கு போன் பண்ணி நன்றி சொன்னாள் சுஜி.

“இது என்னோட கடமை சுஜி. நன்றி எல்லாம் சொல்லி என்னைய அடுத்தவங்க மாதிரி நடத்தாதே. கடைசி வருஷ படிப்பு செலவையாவது நானே ஏத்துக்கணும்னு இருக்கேன். நல்லாப் படி. நான் முடிஞ்சப்ப உன்ன வந்துப் பாக்குறேன்”.

நாகரத்னத்தின் அம்மா இறந்துவிட, அவளுக்கு சுஜியைக் கண்காணிக்க நேரம் இல்லை. சுந்தரமும் அவளின் கவனம் சுஜியிடம் சென்று விடாமல் பார்த்துக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுஜி அதிதியில் சென்று விடுதியில் சேர்ந்தாள். அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்த மூர்த்தி தம்பதியினர் கிளம்பும்போது, “சுஜி நீ கொஞ்சம் உங்க சித்தியோட சொந்தக்காரங்க கண்ணுல படாம ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று ஆயிரம் முறை எச்சரித்தபின் அமெரிக்கா சென்றனர்.

ஒரு சுபயோக நன்னாளிலே அதிதியில் நுழைந்தாள் நம் சமையல் ராணி சுஜாதா.

18

யாருக்கு எப்படி இருந்தாலும், சுஜிக்கு அதிதியின் வாழ்க்கை ரொம்பப் பிடித்து விட்டது. மொத்தமே பதினைந்து பேர் தான் அவள் வகுப்பில். அனுப், பாலா, அர்ச்சனா, சைதன்யா இப்படி. பல மாநிலங்களின் கலவையா இருந்தாங்க. இவங்களப் பத்தி எல்லாம் நாம இந்தக் கதைல பார்க்கப் போறது இல்ல. நம்ம முக்கியமா பார்க்கப் போற சுஜியின் தோழர்களைப் பத்தி மட்டும் உங்களுக்குச் சொல்லுறேன்.

சுஜி, ரோசி, பிரசன்னா, சாகுல், வேலு அனைவரும் நண்பர்களாகி விட்டனர். இவர்களில் சுஜியப் பத்தி இவங்க எல்லார விடவும் உங்களுக்குத்தான் தெரியும். வேலு வெள்ளந்தியான கிராமத்துப் பையன். விளாங்குடில இருந்து உமச்சிகுளம் வழியா நத்தம் போற ரூட்ல ஏதோ ஒரு கிராமம்னு வச்சுகோங்களேன். பிரசன்னா மாடர்ன் மெட்ராஸ் பாய். அவனுக்கு அதிதில படிப்புங்கறது ஒரு குறிக்கோள். இந்த செட்டுலையே கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவன் இவன்தான். ரோசி நாகலாந்தில் உள்ள ஒரு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவள். இப்போதுதான் முன்னேறிக் கொண்டு இருக்கும் மக்கள் அவர்கள். சாகுல் தந்தை ஹைதராபாதில் சிறிய ஹோட்டல் வைத்திருந்தார். இப்பவே சூப்பரா சமைப்பான். இவனுக்கெல்லாம் பழனிச்சாமி என்னத்த புதுசா சொல்லித் தரப் போறாரோ தெரியல.

மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடுச்சு போட்டாப்புல, எப்புடிடா இவங்க ஃபிரெண்ட்s ஆனானுங்கனு பாக்குறிங்களா… எல்லாம் அவிய ஆத்தா அப்பன் செஞ்ச வேலை. அட்டெண்டன்ஸ்ல அடுத்தடுத்து பேர் வரவும் ஒரே குரூப் ஆயிட்டாங்க. தயக்கத்தோட ஆரம்பிச்ச நட்பு முடிச்சு கொஞ்ச நா போனதும் இருகிகிச்சு.

அனைவருக்கும் காலையில் மொழி வகுப்பு. மொழிப் பாடத்தில் ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற வெளிநாட்டு மொழிகளும், ஹிந்தி தெரியாதவர்களுக்கு ஹிந்தியும் கற்றுத் தரப்பட்டது. இதை தவிர ஃப்ரன்ட் ஆபீஸ் எனப்படும் வரவேற்பு சம்பந்தமான பயிற்சி, ஒரு விடுதியில் இருக்கவேண்டிய பாதுகாப்பு வசதிகள், அடிப்படை கணினி மற்றும் கணக்குப் பயிற்சி, வெளிநாட்டு மற்றும் நம் நாட்டு சமையல் வகைகள், பேக்கரி உணவு தயாரிக்கும் முறை முதலியன சொல்லித் தரப்பட்டது.

ல்லூரி நேரம் முடித்தபின் சுஜி, லில்லி, வேலு மூவரும் வேலைக்குச் செல்ல வேண்டும். ஃப்ரன்ட் ஆபீஸ், விடுதி அறைகள் பராமரிப்பு மற்றும் சமையல் அறை இவை மூன்றிலும் ஆட்கள் தேவை எப்போதுமே இருக்கும். சுஜி பெரும்பாலும் சமையல் அறை பணிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டாள். தனக்கு தெரிந்தவர்கள் கண்களில் இருந்து தப்பிக்க அது உதவும் என்று நினைத்தாள்.

தினமும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு தயார் செய்வது என்பது மிகவும் கடினம். அதற்கு உதவி செய்வதே மிகச் சவாலான விஷயமாக இருக்கவே மற்றவர்களுக்குப் பிடித்தமானதாக இல்லை. ஆனால் சுஜியோ அதில் தனது கவனத்தைச் செலுத்தினாள். விடுமுறை நாட்களிலும் வேலை கடினமாக இருந்தது. மற்றவர்களுக்கு விடுமுறை தினங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புது வருடப் பிறப்பு போன்ற நாட்கள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடுமையான வேலை இருக்கும் நாட்கள். அதனால் அந்த நாட்களை உறவினர்களுடன் கொண்டாட முடியவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது இல்லை. பண்டிகை நாட்களுக்கு சில நாட்கள் முன்னோ பின்னோ சுஜியைப் பார்க்க, விக்கி, சுந்தரம், மினி ஆகியோர் வந்து செல்வார்கள்.

னைவருக்கும் முதல் வருட இறுதியிலே எந்தத் துறை நன்றாக வரும் என்று பார்த்து அதற்கு சிறப்புப் பயிற்சி அளித்தார் துறை முதல்வர் பழனியப்பன். ஆம் நுழைவுத் தேர்வு நடத்திய அதே பழனிதான். அதன்படி ரோசிக்கு சூப்ஸ், starters மற்றும் சீன மற்றும் தாய் உணவிலும், வேலுவுக்கு ட்ரிங்க்ஸ்சிலும், சாகுலுக்கு வட இந்திய உணவு வகைகளிலும், பிரசன்னாவுக்கு வெளிநாட்டுஉணவு வகைகளிலும், சுஜிக்கு பேக்ரி, பேஸ்ட்ரி மற்றும் டெசெர்ட் இலும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் கூட இனிப்பு செய்யும்போது தடுமாறி விடுவார்கள். பேக்ரி அதுபோலத்தான். சரியாக செய்யாவிட்டால் முழுவதும் பாழாகிவிடும். ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு “practice makes perfect”. அதை அழகுத் தமிழில் “சித்திரமும் கைப் பழக்கம்” என்று சொல்லலாம். உணவு வகைகளைத் திரும்பத் திரும்ப சிரத்தையோடு செய்து பார்த்து அதில் முதல் இரண்டு வருடத்திலேயே தேர்ச்சி பெற்றார்கள் நண்பர்கள் அனைவரும்.

  ன்று பிப்ரவரி பதினாலு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாகவும், கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் கட்டாயத்திற்காகவும் வாங்குவதால் வாழ்த்து அட்டைகள் விற்றுத் தீர்ந்துக் கொண்டிருந்தன. கே.கே.நகர் ரேமுகி அருகே ஒரு உருவம் தனது பைக்கை நிறுத்தியது.

“இருக்குறதிலேயே நல்ல காஸ்ட்லியா, சூப்பர் கார்டு ஒண்ணு கொடுங்க.”

விற்பனைப் பெண் கொடுத்த கார்டை வாங்கிய அந்த உருவம், அதில் பின் வருமாறு எழுதியது.

சுனாமியாவது வந்தால்தான் சேதம் ஊரில்
பெண்ணே நீ பார்த்தாலே சேதம் என் இதயத்தில்

டூ மை ஸ்வீட் சுஜி டார்லிங் என்று எழுதி கீழே தனது கையெழுத்தைப் போட்டான் மினியின் அண்ணன் ராகேஷ்.

அவன் முணுமுணுத்ததை அருகே இருந்த மாதவன் கேட்டுக் கொண்டு இருந்ததை ராகேஷ் கவனிக்கவில்லை. மாதவனையே அவன் கவனிக்கவில்லை. ஒரு மோன நிலையில் இருந்தான். ஆனால் அவன் சொன்னதைக் கேட்ட மாதவனின் முகம் கோவத்தில் சிவந்தது.

‘கடவுளே! அடுத்த வருஷமாவது இந்த நாளை நாங்க ஒண்ணாக் கொண்டாடனும்’ என்று நினைத்தபடியே பைக்கை உதைத்தான் ராகேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 12என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 12

அத்தியாயம் – 12  மறுநாள் காலை அரவிந்த் விழித்தபோது பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது. வெளிச்சத்தில் நன்றாக விழித்துப் பார்த்தான். அந்த வீட்டில், ரொம்ப நாட்களுக்கு முன்பு மாடியில் ஒரு  அறை கட்டி இருப்பார்கள் போலிருக்கிறது. அதனை சற்று பெரிதாக்கி ஒரு வீடாக்கும்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27

27 நாகலாந்தில் உள்ள ஒரு உணவு வகையை சேர்க்கலாம் என்று யோசனை சொன்னான் மாதவன். “இல்ல மாதவன் எந்த அளவு மக்களுக்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியல”. “ஏன்?” “நாகலாந்து, அஸ்ஸாம் இந்த பக்கம் எல்லாம் மசாலாவே சேர்க்கமாட்டாங்க. விதவிதமான பச்சை மிளகா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)

      சில வருடங்களுக்குப் பின், மியூனிக்கில் சற்று பெரிய வீட்டுக்குக் குடியேறி இருந்தார்கள் ஜிஷ்ணு ராம் குடும்பத்தினர். பெருகிவிட்ட குடும்பம்தான் அதற்குக் காரணம். இந்தியாவில் ஊறுகாய் கம்பனி மற்றும் மிளகாய் ஏற்றுமதியை ராஜுகோகுலம் வசமும், மற்ற இடங்களில் அலைவதை