Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 10,11,12

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 10,11,12

10

ன்றில் இருந்து விக்கி கூடுதல் பொறுப்பானான். அதன் விளைவாக பள்ளி நேரம் போக தன் தந்தைக்கு உதவியாக வேலை செய்ய ஆரம்பித்தான். அப்போதுதான் அவர்களுக்கு தன் அப்பாவின் பணக்கஷ்டம் பற்றித் தெரிய வந்தது. குடும்பச் செலவுக்கு சிறிது சிறிதாக வாங்கிய கடன், வட்டி குட்டி எல்லாம் போட்டு சுந்தரத்தை நெருக்கிக் கொண்டு இருந்தது. தினமும் விக்கியும், சுஜியும் படிக்கும் நேரம் போக வீட்டிலேயே கறிகாய்களை வெட்டித் தருவது, அன்றாட சமையலுக்கு மெஸ்சுக்கு வேண்டிய மசாலாவை அரைத்துத் தருவது என்று தங்களால் முடிந்த சின்ன, சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். எப்போதும் வேலை செய்து கொண்டு இருந்ததால் இருவரும் நாகரத்னத்தைப் பற்றி பொருட்படுத்தவில்லை.

நாகரத்னத்தின் பொறுப்பற்ற தன்மையால் வாணி தட்டுத் தடுமாறி பாஸ் செய்து வந்தாள். அம்மாவின் எல்லா குணமும் அப்படியே இருக்க, விளைவு வருடம் ஒரு பள்ளிக்கு நன்கொடை தந்து சேர்க்க வேண்டிய கட்டாயம் சுந்தரத்துக்கு. எதாவது பேசினால், “உங்களுக்கு வக்கில்லனா சொல்லிடுங்க எங்க அண்ணன் கிட்ட பணம் வாங்கித் தரேன்” என்று சொல்லி அவர் தன்மானத்தைத் தூண்டி விட்டு காரியம் சாதித்தாள். அதற்கு பலி விக்கி, சுஜியின் படிப்பு. தனியார் பள்ளியில் இருந்து அரசாங்க பள்ளிக்கு மாறினார்கள்.

விக்கி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்திலே முதலாவதாக வந்து இருந்தான். அண்ணா பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது.

நாகரத்தினம் சும்மாவே அசல் வாழ்ந்தா அஞ்சு நாள் பட்டினி கிடக்குறவ. விக்கிய சும்மா விடுவாளா? காலையில் சுந்தரம் மெஸ்சுக்கு கிளம்பியதும் விக்கிக்கு வேப்பில்லையடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“ஏற்கனவே ஏகப்பட்ட கடன் அதுல நீ மெட்ராஸ் போய் படிக்கலைன்னு யார் அழுதது? அந்த மனுஷன்தான் புத்தி இல்லாதவரு. ஆடு நெனச்ச எடத்துல பட்டி கட்ட முடியுமா…? இன்ஜினியரிங் எல்லாம் வசதியானவங்க படிக்குறது… நீ இங்கனயே எதாவது காலேஜ்ல சேர்ந்துக்கோ. காலைலயும், சாய்ந்திரமும் கடையைப் பார்த்துக்கோ என்ன?”

எதுவும் பேசாமல் அப்பாவின் மெஸ்சுக்கு சென்ற விக்கி, அங்கே கவலையோடு உட்கார்ந்து விட்டான்.

ல்லோரும் சாப்பிட்டுவிட்டுப் போகும் வரை பேசாமல் இருந்த சுந்தரம் விக்னேஷின் அருகில் வந்தார். அவன் தலையை கோதிய அவர்,

“எய்யா, என்ன கவலை? அப்பா உன்னைப் படிக்க வைக்காம விட்ருவேன்னு நினைச்சியா? உனக்குத் தெரிய வேணாம்னு பார்த்தோம். நீ கண்டிப்பா படிக்குற. சுஜியோட நகைய வித்து பீசுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. நாளைக்கு மெட்ராஸ் கிளம்புறோம். அப்பறம் ஒரு விஷயம், எனக்கு மூணு புள்ளைங்க இருக்கு. வாணியோட படிப்புக் கல்யாணம் எல்லாம் நான் பாத்துக்குவேன். உன் மேல ஒரு துளிக் கூட பாசம் காட்டாத உங்க சித்திக்கும் அவ மகளுக்கும் செய்யணும்னு உனக்கு தலை எழுத்து இல்ல. ஆனா சுஜி உன் கூடப் பொறந்தவ. உன்னோட ரெண்டு மூணு வயசு தான் சின்னவ. உன்னைய படிக்க வைக்க செலவு செஞ்சா அவளப் படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு தர ரொம்பக் கஷ்டப்படுவேன். அதுக்கு படிப்ப முடிச்சுட்டு நீ கொஞ்சம் கை கொடுத்தேன்ன நல்லா இருக்கும். சுஜியோட கல்யாணம் மட்டும் உன்னோட பொறுப்பு. அத மனசுல வச்சுட்டுப் போற இடத்துல சூதானமா நடந்துக்கோ என்ன?”

 “கண்டிப்பா செய்வேன்பா”.

வீட்டில் நாகரத்னத்தை அடக்கும் பொருட்டு அவளிடம், “இங்க பாரு ரத்னா, இந்த வீடு அவங்க அம்மா பேருலதான் இருக்கு. விக்கி இப்ப மேஜர் ஆயிட்டான். வீட்ட வித்து படிக்க வைன்னு சொன்னா, நம்ம நடுத்தெருவுலதான் நிக்கணும்” என்று சொல்லி அவளின் வாயை அடைத்தார்.

ஊருக்குக் கிளம்புவதற்கு முன் சுஜியிடம் நன்றி சொல்லிய விக்கி, தான் வேலைக்குச் சென்றதும் அவளை தன்னுடனே கூட்டிச் செல்வதாக வாக்களித்துக் கிளம்பினான்.

சென்னை சென்றதும் கல்லூரி நேரம் போக பகுதி நேரமாக ஒரு கடையில் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தான். அவனது செலவுக்குப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததால் வீட்டில் வேறு பேச்சு இல்லை. இரண்டு வருடம் ஓடியது.

சுஜியும் பனிரெண்டாம் வகுப்பிற்கு வந்திருந்தாள். பள்ளி, வீட்டு வேலை, அப்பாவுக்கு உதவி என்று ஏகப்பட்ட வேலைக்கிடையே பொதுத் தேர்வு எழுதி முடித்தாள்.

இதற்கிடையே இன்ஜினியரிங் முடித்திருந்த மாதவனுக்கு திருமணம் நிச்சயமானது. அதுவும் காதல் திருமணம். பெண் அவனது அப்பாவின் பார்ட்னர் பெண். மாதவன் கூடப் படித்தவள். விரைவில் இருவரும் திருமணம் முடிந்து படிக்க வெளிநாடு கிளம்புகிறார்கள்.

மினியின் நிலையை நினைத்த சுஜிக்கு இருப்பு கொள்ளவில்லை.

11

யிரமீன் குழம்புக்கு வேணுங்குற வேலைய செஞ்சுகிட்டு இருந்தா சுஜி. அயிரமீன் இருக்கே அத சமைக்குறது தனி பக்குவம். மதுரைப்பக்கம் பார்த்திங்கன்னா, காலங்காத்தால, மீனு விக்கறவங்க கூடையில அயிர மீன அள்ளி போட்டுக்கிட்டு வந்துடுவாங்க. சுண்டுவிரல் அளவு வளந்த மீனுன்னாக் கூட, நம்ம மதுரக்கார அக்காங்க வாங்க மாட்டாங்க. அதுக்கும் சிறுசா இருக்கணும். அதைவிட முக்கியம் அந்த மீனு உயிரோட இருக்கணும். நம்ம ஊர் பக்கம் மாதிரி காகிலோ, அரக்கிலோலாம் கிடையாது, படி கணக்கு தான். வீசம்படி, அரக்காப்படி இப்படிதான் அளந்து போடுவாங்க. I.Tல வேல செயுரவங்க கூட, தினமும் கிலோ கணக்கா அயிர மீன வாங்கித் தின்ன முடியாது. தங்கம் மாதிரி வெல. அதுனால வறுக்க தனியா வவ்வா மீனு இல்ல விரா மீனு தான். மீன அளந்து போடுறப்ப அதுகூடவே நத்தை ஓடு, மண்ணு எல்லாம் வந்துடும். அதனால, அயிரமீன நல்லாக் கழுவி, ஒரு ஒருமண் நேரம் பாலுல போட்டுடுவாங்க.

அதுக்கு ஊடைல சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு உருச்சி வச்சுக்கிடுவாங்க. புளிய ஊறவச்சு கரைச்சுகிட்டு, பட்ட மொளகா, மல்லி, சீரகம், பெருஞ்சீரகம், மொளகு எல்லாம் வெருஞ்சட்டியில எண்ண ஊத்தாம வறுத்து அரச்சு வச்சுகிடுவாங்க. பாலுல போட்ட மீனும், பாலைக் குடுச்சுட்டு மண்ணக் கக்கிடும். அப்பறம் எடுத்து ஒன்னொன்னா உரசி சுத்தம் பண்ணுவாங்க. அப்பறம் என்ன, வழக்கம் போல மீன் குழம்பு வச்சு பட்டயக் கிளப்ப வேண்டியது தான்.

சுஜி இந்த வேலையைச் செய்துக் கொண்டு இருந்தபோது தான், இடி மாதிரி செய்தியைச் சொன்னாள் அவளது சித்தி. மாதவனுக்கு கல்யாணம். அதுவும் காதல் திருமணம். பெண் அவனது அப்பாவின் பார்ட்னர் பெண். மாதவன் கூடப் படித்தவள். இருவரும் திருமணம் முடிந்து வெளிநாடு படிக்கக் கிளம்புகிறார்கள். ச்சே… இந்த வாணி மட்டும் கொஞ்சம் பெரிய பொண்ணா இருந்திருக்கக் கூடாது. எப்படியாவது ஒருத்திய அவன் தலைல கட்டி இருந்திருப்பேனே என்று நாகரத்னத்துக்கு ஆதங்கம் வேறு.

மாதவனின் திருமணச் செய்தி சுஜிக்கு சற்று அதிர்ச்சிதான். மினியை நினைத்து அவளுக்கு சற்று கவலையாக இருந்தது. வேக வேகமாக சமையலை முடித்து விட்டு, சற்று அவசர வேலை என்று வீட்டில் சொல்லிவிட்டு, மினியின் விட்டுக்குச் சிட்டாகப் பறந்தாள்.

மினி வீட்டில் அவளைக் கண்ட மினியின் அம்மா ராஜி, “வா சுஜி உன்னப் பார்க்கத் தான் மினி கிளம்பிட்டு இருந்தா. ரொம்ப களைப்பா தெரியுற. கொஞ்சம் உக்காரு, நீர்மோர் கொண்டு வரேன்” என்றபடி உள்ளே சென்றார்.

“ஹே சுஜி… ஆயுசு நூறுடி உனக்கு. இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ” என்றபடி குதித்தோடி வந்த மினியைக் கண்டதும் ஒன்றும் புரியவில்லை சுஜிக்கு.

“என்ன விஷயம் மினி? எதுக்கு ஸ்வீட்?”

“தி கிரேட் யாமினி மெட்ராஸ்ல பேஷன் டெக்னாலஜி சேரப்போகிறார். இன்னும் கொஞ்ச நாளுல நான் டிசைன் பண்ணுற டிரஸ் மட்டுமே நீ போடப்போற”.

அப்பாடி இன்னும் மாதவனின் விஷயம் மினிக்குத் தெரியாது போலிருக்கு. சற்று நேரம் சலசலத்த பின், வீட்டுக்குக் கிளம்பினாள் சுஜி. இனியும் மினியிடம் மறைப்பது தப்பு. சீக்கிரமே சொன்னால் அவள் மனது சற்று தேறிவிடும். வேறு யாராவது சொன்னால் அந்த நேரத்தில் அதிர்ச்சியில் அவள் என்ன செய்வாளோ அது அவளுக்கே தெரியாது. இவ்வாறு எண்ணிய சுஜி மினியிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னாள்.

சுஜியே ஆச்சிரியப்படும் விதமாக மினி, “எனக்கு முன்னாடியே தெரியும். அதனால என்ன, அந்த மாதவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்றாள்.

“உனக்கு கவலையா இல்லையா மினி?”

“இல்ல சுஜி, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நான் என் கேரியர் தவிர வேற எதப் பத்தியும் கவலைப் படுறதா இல்ல. த்ரிஷா இல்லன திவ்யா. இந்த மாதவன் இல்லன இன்னொரு கேசவன். ஒரு நல்ல சாய்ஸ மிஸ் பண்ண மாதவன்தான் இதுக்காக வருத்தப்படணும்” என்று சொன்னவள் மேலும், “அந்த அனிதாவப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஒரு பொருள் நல்லதா பார்த்தால் உடனே அவளுக்கு வேணும்னு ஒரு குணம். அதுக்காக என்ன செய்யவும் தயங்கமாட்டாள். சாதாரண பொருளப் பார்த்தாலே வேணும்னு நினைக்குறவ, வாலி அஜித் மாதிரி இருக்குற மாதவன விட்டுடுவாளா?”

மினி சொல்வதும் உண்மைதான் ஆறடிக்கும் ஒரு விரற்கடை அளவே குறைந்த அவனது உயரமும், அதற்கேற்ற உடம்பும், சிரிக்கும் போது தெரியும் அழகான பல் வரிசையும், கூடவே சிரிக்கும் கண்ணும், சரியான அளவில் கத்தரித்த மீசையும், பொருத்தமான உடைகளும் பார்க்கும் பெண்களை மயக்கி விடுவதில் ஆச்சிரியம் இல்லை. சிறிய பார்வைக் குறைபாட்டுக்காக அவன் அணிந்திருந்த கண்ணாடி கூட அவனுக்கு அழகுதான். இவ்வாறு எண்ணிக் கொண்டாள் சுஜி.

முத்தாய்ப்பாக மினி சொன்ன விஷயம் சுஜியை அதிர வைத்தது.

மாதவன் அவகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படப் போறானோ தெரியல “.

12

சுஜியின் வாழ்கையையே புரட்டிப் போட்ட அந்த சம்பவத்துக்குப் பிறகு அவள் வெளியே அவ்வளவாக செல்வது இல்லை. உலகில் இல்லாத அதிசயமாக நாகரத்தினமும் தனது அம்மா வீட்டுக்குச் செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டிருந்தாள். அதற்கான காரணம் விரைவில் தெரியவந்தது.

சித்தியின் சுடுசொல் தாங்க முடியாதபோது, பக்கத்து வீடே சுஜிக்குப் புகலிடம். அதுவும் தடைபடும் காலம் விரைவில் வந்தது. கமலமும் மூர்த்தியும் தங்களது மகளின் பிரசவத்துக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய நாள் நெருங்கியது. மகளுக்குப் பிள்ளை பிறக்கப் போகும் சந்தோஷத்தைவிட, சுஜிக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு அதிகமாக இருந்தது.

அன்று தபால்காரர் வரும் நேரம் வீட்டுக்கு வெளியே நின்று இருந்த சுஜி, “அண்ணே, எனக்கு ஏதாவது வந்து இருக்கான்னு பாருங்க. இன்னும் ஒரு காலேஜ்ல இருந்தும் இன்டெர்வியூ கார்ட் வரல”.

“என்னத்தா சொல்லுற? உன் சின்னம்மாட்டதான் பூரா இன்டெர்வியூ கார்டையும் கொடுத்தேனே” என்று சொல்லி பெரிய பாறாங்கல்லைப் போட்டார்.

கோவமாக வீட்டுக்குள் சென்ற சுஜி கண்கள் சிவக்க, “ஏன் சித்தி இப்படி செஞ்சிங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன். ஏன் இப்படி எம் படிப்ப கெடுக்குறிங்க?”

விஷயம் அவளுக்கு தெரிந்துவிட்டதை உணர்ந்த நாகம், “ஆமாண்டி நான்தான் உன் இன்டெர்வியூ கார்ட் எல்லாம் எடுத்து கிழிச்சுப் போட்டேன். படிக்குற திமிர்தானே பெரியவங்கள எதிர்த்துப் பேசச் சொல்லுது. ஆமா… படிச்சு என்னத்தக் கிழிக்கப்போற? பேசாம கல்யாணத்துக்குத் தலையாட்டு. என் அண்ணன் வீட்ல உனக்கு வேளாவேளைக்கு சோறு போட்டு ராணி மாதிரி வச்சுக்குவாங்க” என்றாள்.

திருமணத்துக்குச் சம்மதிக்க வைக்க தனது சித்தி ஏவும் அஸ்திரங்களில் இதுவும் ஒன்று. என் உயிரே போனாலும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கமாட்டேன் என்று தனது மனதில் உறுதி பூண்டுக் கொண்டாள்.

மனதுக்கு வருத்தமாய் இருக்கும் போது கடவுள் மட்டுமே அவளுக்கு ஆறுதல்.
ஆம் ‘திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை’. வீட்டு அருகே இருந்த அம்மன் கோவிலுக்குச் சென்றாள் சுஜி. இப்போது மட்டும் மினியாவது அல்லது விக்கியாவது தன் அருகே இருந்தால் மிகவும் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அதைக் கேட்ட எந்த தேவன் ‘ததாஸ்து’ சொன்னாரோ தெரியவில்லை, அவளைத் தேடி மினியே கோவிலுக்கு வந்துவிட்டாள்.

“நான் இங்கே இருப்பேன்னு எப்படித் தெரியும் மினி?”

“உன்னப் பார்க்கத்தான் வந்துகிட்டு இருந்தேன். நீ கோவிலுக்குள்ள போன மாதிரி தெரிஞ்சது. வண்டிய நிறுத்திட்டு வரேன். கமலம் ஆன்டிய விட்டு உன்னக் கூட்டிட்டு வரச் சொல்லலாம்னு இருந்தேன். நல்லவேள இங்கேயே பார்த்துட்டேன்” என்றாள்.

“எப்போ மெட்ராஸ்ல இருந்து வந்த?”

“இப்பத்தான். வந்த உடனே உன்னை பார்க்க வந்துட்டேன்” சற்று தயங்கிய மினி, “சுஜி, உனக்கு இது சந்தோஷமான விஷயமான்னு தெரியல. அதிதில இருந்து உனக்கு என்ட்ரன்ஸ் டெஸ்டுக்கு ஹால் டிக்கெட் வந்து இருக்கு”.

செய்தியை நம்பவே முடியவில்லை சுஜியால். இந்த முறை தான் கேட்டது தெய்வத்தின் காதுகளில் நிஜமாகவே விழுந்து விட்டதா? “அன்னைக்கு உங்க வீட்டுல ஃபில் பண்ண அப்பிளிகேஷனை நீ அனுப்பினியா?”

“ஆமா. நம்ம அட்ரஸ் எழுதாததால, அப்பா எங்க வீட்டு அட்ரஸ் போட்டு அனுப்பிட்டார். அம்மா, அப்பா என்னைப் பார்க்க மெட்ராஸ் வந்து இருந்தாங்க. இப்பத்தான் வீட்டுக்கு வந்தோம். இதைப் பார்த்ததும் உடனே ஓடிவரேன்.”

“அது ஒண்ணுதான் நான் வாழ்கைல செஞ்ச நல்ல தப்பு. இல்லாட்டி இந்த லெட்டரும் அடுப்புக்குப் போயிருக்கும் “.

“அப்ப எழுதப் போறியா?”

“கண்டிப்பா.”

லெட்டரை கொடுத்த மினி, கூடவே ஒரு கவரையும் கொடுத்தாள்.

“இந்தா நாளைக்கு என்ட்ரன்ஸ் டெஸ்டுக்கு தேவையான புக்ஸ். ஒருவேள நீ எழுதினேன்ன உதவியா இருக்கும்னு வர்ற வழில என் ஃபிரெண்ட் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன். வீட்டுல போய் நல்லா படி. நாளைக்கு இங்கே வந்து வெயிட் பண்ணு. நான் உன்னைக் கூட்டிட்டு போறேன்”.

சுஜி கண்களில் கண்ணீர். “மினி எனக்காக எவ்வளவு செஞ்சிருக்க. இதுக்கெலாம் நான் என்ன செய்யப் போறேன்”.

“ரொம்ப சென்டிமென்ட்டை புழியாதே. அப்பறம் நானும் அழ வேண்டியிருக்கும். பப்ளிக்ல அழுதா இந்தக் கூடல் மாநகரிலே என்னோட இமேஜ் போய்டும். கவலைப் படாதே… பின்னாடி எனக்கு வேணுங்கிறத நானே உன் கிட்ட கேட்டு வாங்கிக்குறேன் போதுமா? ஆனா அப்ப நீ நோ சொல்லக்கூடாது” என்று சிரித்தபடி கூறினாள்.

மினி உடனே சென்று விட, சற்று நேரம் கோவிலில் அமர்ந்திருந்த சுஜி, வீட்டுக்குக் கிளம்பினாள். வழியில், பக்கத்து வீட்டில் கமலத்திடமும், மூர்த்தியிடமும் அவர்களிடம் தான் மறுநாள் எழுதவிருக்கும் தேர்வு பற்றி சொல்லி, படிப்புக்கு எதாவது லோன் அல்லது ஸ்காலர்ஷிப் வாங்க முடியுமா என்று கேட்க சொன்னாள். அன்றுதான் நாம் முதன் முதலாக சுஜி என்கிற சுஜாதாவை சந்தித்தோம்.

இதோ மனதளவில் சுஜி தேர்வுக்குத் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24

அத்தியாயம் – 24   பில்டரில் இரண்டு ஸ்பூன் காபி பொடியைப் போட்டவன், அதன் தலையைத் தட்டி, கெட்டிலில் சுட்டிருந்த சுடுதண்ணியை ஊற்றினான். சுகந்தமான டிகாஷனின் நறுமணத்தை அனுபவித்தபடி பாலை சுடவைத்தான். அவன் மனதில் நேற்றைய நினைவுகள். “ என்ன சித்து

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17

அத்தியாயம் – 17 வீட்டினருக்கு ஜவுளிகளை எடுத்த பின்,  பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சித்தாராவுக்கு அவள் மறுக்க மறுக்க ஜீன்ஸ் எடுத்துத் தந்தான் அரவிந்த்.  “எனக்கு ஜீன்ஸ் எல்லாம் பழக்கமில்லை அரவிந்த். ப்ளீஸ் வேண்டாம். நான் வேணும்னா சுடிதார்