Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,Tamil Madhura மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 5,6

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 5,6

ம்மன் கோவில் மணி சத்தம் தூரத்தில் ஒலித்தது. கவலைபடாதே சுஜி உனக்கு நானே துணை இருப்பேன் என்று கூறியது போல் இருந்தது. கடவுள் கண்டிப்பாக என்னைக் கைவிடமாட்டார். எனது வெற்றி தள்ளிபோகிறது அவ்வளவுதான் என்று எண்ணியபடியே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

5

வீட்டைத் திறந்து உள்ளே சென்ற சுஜி காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்தாள். மறுநாளுக்கு வேண்டிய வேலைகளை அவசர அவசரமாக செய்தாள். சித்தியும், வாணியும் இன்னமும் வீட்டுக்கு வரவில்லை. சித்தியின் அம்மாவுக்கு சற்று உடம்பு சரி இல்லை என்பதால் பாதி நாட்கள் அங்கேயே தங்கி விடுகிறார்கள். எப்போது வருவோம் என்று முதலிலே சொல்வதில்லை. திடீரென்று வீட்டுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து விட்டு வீட்டில் இருந்த மிதுக்கு வத்தலை போட்டு குழம்பு வைத்தாள். தேங்காய் சில்லையும், பச்சை மிளகாயும் துளி புளியுடன் சேர்த்து துவையல் அரைத்தாள். இன்றும் நாளையும் இது போதும் அவர்கள் வரும் போது அப்பளம் பொரித்து சாதம் வடித்துக் கொள்ளலாம். முகம் கழுவி, விளக்கேற்றி விட்டு சுவாமி பாடல்களைப் பாட ஆரம்பித்தாள்.

“தேமதுரத் தமிழ் முழங்கும் மாமதுரை நகர் தன்னில் பூ மகளாய் வந்த கயர்கன்னியே…”

கால் மணி நேரம் பாடிய பின் அவள் மனம் லேசாகி இருந்தது.

‘Every cloud has a silver lining’ என்ற கூற்றை நினைவுப் படுத்திக்கொண்டாள்.

இந்த துன்பம் தற்காலிகம் தான். இதற்கு பின் எனக்கு ஒரு பெரிய நன்மை வரப்போகிறது என்று மந்திரம் போல் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

தோழியிடம் கடன் வாங்கி வந்திருந்த புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

இரவு தந்தை வந்ததும் அவருக்கு உணவைப் பரிமாறி விட்டு சமையல் அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுஜி.

“சுஜி சாப்பிட்டியா?” என்ற தந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“ம்ம்…” என்றவாரே திரும்பாமல் வேலையைத் தொடர்ந்தாள். இப்போதெல்லாம் தந்தையிடம் பேசுவது மிகவும் குறைந்து விட்டது.

சமையல் அறையின் வாசலில் தயங்கி நின்றவர், “அப்பா உன்னை ரொம்ப நோகடிச்சுட்டேன்னு புரியுது. என்னை மன்னிச்சிடுமா”

சுஜியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பாத்திரத்தில் இருந்த தண்ணீரோடு கலந்தது.

அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் ஒரு பெருமூச்சு விட்டபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் சுந்தரம்.

பாயை விரித்துப் படுத்த சுஜிக்கு ஏகப்பட்ட குழப்பம். அப்பாவிடம் சொல்லாமல் தான் செய்யப்போவது சரியா என்று யோசனை. சரி தான் சொல்ல வந்த போது காது கொடுத்து கேட்டாரா என்ற வருத்தம். இது எல்லாவற்றிற்கும் காரணமானவனின் மேல் ஆத்திரம் என்று கலவையான உணர்வு.

அவளது மனம் நடந்ததை அசை போடத் துவங்கியது.

6

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில், கையில் அலுமினிய தூக்கு வாளியுடன் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாள் சுஜி. கிளிபச்சையில் வெள்ளைப் புள்ளி வைத்த பாவாடையும் அதே துணியில் ஜாக்கெட்டும், கரும் பச்சை தாவணியும் அணிந்திருந்தாள். முகத்தில் முத்து முத்தான வியர்வைத் துளி. வழியில் தான் அண்ணாச்சி கடையில் சாமான் வாங்க, விட்டு போனது நியாபகம் வந்தது. திரும்பி கடைக்குச் சென்றாள்.

“அண்ணாச்சி ஒரு கிலோ பட்ட மொளகா, மூணு கிலோ தனியா, கால் கிலோ மஞ்சள், ஒரு கிலோ மண்ட வெல்லம், ரெண்டு கிலோ சீனி இதெல்லாம் இப்ப குடுங்க. அப்பறம் இந்த வாரத்துக்கு அரிசி, பருப்பு, உளுந்து எல்லாம் கடைல போட்டுட்டு அப்பா கிட்ட காசு வாங்கிக்கோங்க” என்றாள்.

“அப்படியே இந்த கோக்குக்கும் சேர்த்து அங்கேயே காசு வாங்கிக்கோங்க. என்ன சுஜி உங்க அப்பா தருவருல்ல?”

“ஹே மினி எப்ப மெட்ராஸ்ல இருந்து வந்த?”

“வந்து 30 மணிக்கூறுகளாகி விட்டன. என்னம்மா பச்சைக்கிளி கையில என்ன தூக்குச்சட்டி?”

“மெஷினுக்கு போயிட்டு வரேண்டி. மாரியம்மன் கோவில் திருவிழா வருதில்ல. மாவிளக்கு போடணும், கொழுக்கட்டை செய்யணும் அதான்”.

“சரி இப்ப வீட்டுக்கு வந்துட்டுப் போ.”

“நாளைக்கு வரேனே. இதையெல்லாம் வீட்டுல கொண்டு போய் வெக்கணும்.”

“கவலை படாதே கிளியே நான் உனக்கு லிப்ட் தரேன்.”

“லிப்டா ஹே அப்ப வண்டி வாங்கிட்டியா?”

“எஸ்… புது டிவிஎஸ் ஸ்கூட்டி ரெட் கலர். வா உன்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறேன். வீட்டுல வச்சுட்டு வந்துடலாம்.”

“இரு தோழிகளும் பேசிக்கொண்டே சுஜி வீட்டில் பொருட்களை வைத்து விட்டு மினி வீட்டுக்குச் சென்றார்கள்.”

“அப்போதுதான் டேபிளில் இருந்த அதிதியின் அப்பிளிகேஷன் ஃபார்மை பார்த்தாள் சுஜி”.

“என்ன இது அப்பிளிகேஷன் ஃபார்மை இப்படிப் போட்டு இருக்குற?”

“பச்… நான் அப்ளை பண்ண போறதில்ல”.

“உனக்கு வேண்டாம்ன அப்பறம் ஏன் அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்த?”

“உனக்கு தான் தெரியுமே சுஜி எனக்கு மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, போடோனி, ஜூவாலஜி, அக்கௌன்டன்சி எதுவுமே பிடிக்காது. சோ இது எதுவும் இல்லாத கோர்ஸ் சேரலாம்னு அப்பாவ கேட்டேன். இத வாங்கிட்டு வந்திட்டாரு”

“அப்ப ஏன் அப்ளை பண்ணல?”

“நீ வேற அது ரெசிடென்சியல் காலேஜ். பாக்குற நேரமெல்லாம் படிக்க என்னால முடியாதுப்பா. நான் காலேஜ் போறது நெறைய என்ஜாய் பண்ணிட்டு, கொஞ்சமே கொஞ்சமா படிக்கணும். அப்பறம் இன்னொரு விஷயம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்கு விடுவானாம். இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.”

காபியும் டிபன் எடுத்தபடி வந்த மினியின் அம்மா ராஜி, “நல்லா சொல்லு சுஜி. இவ சொல்லுற கண்டிஷன் படி காலேஜ்ல சேர்க்கணும்னா நம்மளே ஒரு காலேஜ் ஆரம்பிச்சால் தான் உண்டு. மேத்ஸ் பிடிக்கலேன்னா எப்படி நாளைக்கு உன் புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித் தருவ?”

“கவலை படாதம்மா உனக்கு ஒரு இஞ்ஜினீயர் மருமகனா பார்த்திடலாம். அவன் மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லித் தந்திடுவான். டியூஷன் செலவு மிச்சம்.”

“வாலுத்தனதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” என்றபடி தன் மகளின் காதை திருக…

“அம்மா வேணாம்மா, ஏன் காதுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் நீ தான் வரதட்சணை ஜாஸ்தி தரணும்”.

இடையே தொலைபேசி மணி அடிக்க ராஜி பேச ஆரம்பித்து விட்டார்.

“மினி உங்க அம்மா கிட்ட என்ன சொன்ன? மாப்பிள்ளை பார்த்திடலாம்ன இல்ல பார்த்துட்டேன்னா?” என்றாள் சுஜி மெல்லிய குரலில்.

“ச்சி போடி” என்றபடி நழுவப் பார்த்தாள் மினி.

“உன் அண்ணனுக்கு தெரியுமா?”

“அவனுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”

“பேர் என்னனு என்கிட்ட மட்டும் சொல்லு ப்ளீஸ்”

“போடி இவளே அந்த ஆளே பிடி கொடுக்க மாட்டேங்கிறார். அவர் கிட்ட இருந்து ஒரு தெளிவான பதில் முதலில் வரட்டும்.”

“பேர் வேண்டாம் யாருன்னு ஒரு க்ளு கொடுடி”

“எங்க அண்ணனோட ஃபிரெண்ட் போதுமா?”

“ஆளு எப்படி? நான் பார்த்து இருக்கேனா?”

“சூப்பரா இருப்பாரு. உனக்கும் நல்லா தெரியும். இதுக்கு மேல என்னை கேட்காதே”

“யார் மாதவனா?” என்று கேட்டாள் சுஜி. கேட்கும் போதே தன் மனம் ஏன் இப்படி படபடவென அடித்துக்கொள்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

மினி பதில் சொல்லவில்லை. ஆனால் மினியின் கண்களில் சட்டென்று தோன்றிய மின்னல் அது மாதவன்தான் என்பதை உறுதிச் செய்தது.

இப்போது சற்று சுஜி பற்றி பார்போம். சற்றே ஒல்லியான உடல்வாகு. ஐந்திரை அடி உயரம். சுருட்டைமுடி. அதுவே அவளுக்கு ஒரு அழகாக இருந்தது. செதுக்கி வைத்தாற் போல் முகம். பொன்னிறம் என்று சொல்ல முடியாது அதற்கு சிறிது கம்மி. காதில் சிறிய பவளதோடு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல். எளிமையான சுடிதார். இதுதான் சுஜி. அவள் பேசுவதைவிட அவள்கண் ஆயிரம் கதை பேசும்.

வீடு பூட்டி இருந்தது. எதிர்பார்த்ததுதான்.

 “சுஜி வழக்கம் போல உன் சித்தி ஊர் சுத்த போய்ட்டா. வந்து சாவி வாங்கிட்டு போ”என்றார் பக்கத்து வீட்டு கமலம்.

உள்ளே செல்ல திரும்பிய கமலம் ஏதோ நியாபகம் வந்தவராக சுஜியிடம், “சாப்டியா?”என்றார்.

“இதோ இப்ப வீட்ல போய் சாப்பிடபோறேன்”என்ற சுஜி பதிலில் திருப்தி அடையாமல்,

“ஆமா நீ போய் சமைச்சு சாப்பிடறதுக்குள்ள மயக்கமே வந்திடும். கொஞ்சம் உட்காரு மத்தியானமே சாப்பிட்டியோ என்னமோ தெரியல” என்றபடியே ஒரு தட்டிலே சூடாக இரண்டு தோசையும் கொத்துமல்லி சட்னியும் கொண்டு வந்தார்.

சுஜிக்கு உண்மையிலே ரொம்ப பசி. வீட்டில் ஒன்றும் இருக்காது. இப்போது உள்ள மனநிலையில் சமைத்து சாப்பிடுவது முடியாத காரியம். தன் முடிவைச் சொல்லி வாதாடுவதற்கு நிறைய தெம்பும் தேவை. மறுப்பேதும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

“நில்லுடி போய்டாதே, இன்னொரு தோசை கொண்டு வரேன்”என்று சூடாக ஒரு கையில் தோசையையும் இன்னொரு கையில் பில்ட்டர் காபியும் எடுத்து கொண்டு வந்த கமலத்தைப் பார்க்க அன்னபூரணி போல் தோன்றியது சுஜிக்கு. ஆமாம் வயிற்றுப் பசி அறிந்து அன்போடு சாப்பாடு தருபவர் எல்லாம் அன்னபூரணிதானே?

“என்னடி இப்படி பார்க்குற?”

“இல்லத்த உங்கள பார்க்க இப்ப அன்னபூரணி போல தோணுது”.

“போடி ஊருக்கே சமைச்சுபோடுறார் உங்கப்பா. என்னமோ, ரெண்டு தோசைக்காக எனக்கு அன்னபூரணி பட்டம் கொடுக்கற” என்றார் சிரித்தபடி.

சுஜி தோசை சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள். இந்த பதினெட்டு வருஷத்தில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். கடவுளே இனிமேயாவது இந்தக் கொழந்தைக்கு வாழ்க்கைல நிம்மதிய கொடு.

“என்னடி முடிவடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

“அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

அத்தியாயம் – 14 வழக்கத்துக்கு மாறாக அன்று காலை சித்தாரா எழுந்தபோது அரவிந்த் எழுந்து சென்று விட்டிருந்தான். ‘இவனுக்கு என்ன வந்தது? நான் வந்து காபி கொடுத்து, வனி அவன் மேல ரெண்டு குதி குதிச்சாத்தானே எழுந்திருப்பான்’ என்று எண்ணிக்  கொண்டே

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

  மறுபடியும் ஜிஷ்ணுவின் அறை முதலிரவு மேக்அப் போட ஆரம்பித்தது. எரிச்சலுடன் அறைக்கதவைத் தாள் போட்டான். ‘நானும் அம்மா உடம்பு சரியாகணும்னு பாத்தா தாலி கட்ட வச்சதுமில்லாம இப்ப முதலிரவாம். முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவாங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்குற விஷயத்துக்கும்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்