Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – நிறைவுப் பகுதி

மூன்றாம் பாகம்

 

அத்தியாயம் – 8. ஆணை நிறைவேறியது!
     மாபப்பாளத்தை வந்தடைந்தாள் மதுராந்தகி. அவள் வருகையைக் குலோத்துங்கன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மகிபாலனின் மாளிகையிலே தன் ஆசைக்கிழத்தி ஏழிசைவல்லபியுடன் அவன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் தன் மக்களுடன் அங்கு நுழைந்தாள் மதுராந்தகி. “அப்பா!” என்று தாவி வந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்ட சிறுவர்களை வியப்புடன் நோக்கிய ஏழிசைவல்லபி, மறுகணமே வந்திருப்பவள் யாரெனத் தெரிந்து கொண்டு விட்டாள். உடனே அவளுடைய உள்ளமும் அலையிடைத் துரும்பாகத் துடிக்கத்தான் செய்தது. ‘என் சக்களத்தி – குலோத்துங்கனின் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக இருந்தவள்-அவர் இருக்குமிடம் தேடிக் கடல் கடந்து வந்துவிட்டாளே? தன்னோடு நில்லாமல் அவர்களுடைய வேரோடிய காதலின் சின்னங்களையும் அல்லவா உடன் அழைத்து வந்திருக்கிறாள்? பெரிய விபரீதம் ஏதோ நிகழப்போகிறது. இவள் தன் கணவரை நாட்டுக்கு அழைத்துப்போகத்தான் வந்திருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; சிறிதும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது…!

 குலோத்துங்கனோ எனில், பெரும் பிழை ஒன்றைச் செய்தவன் கையும் களவுமாகப் பிடிபடும்போது எத்தகைய அதிர்ச்சியான மனநிலையில் இருப்பானோ, அவ்வாறுதான் இருந்தான். கைகள், ரத்தபாசம் காரணமாகத் தன் கால்களைக் கட்டிக்கொண்ட மைந்தர்களை அணைத்துக் கொண்டாலும், அவன் வாய் மூடிக்கொண்டது. மனைவியையோ மைந்தர்களையோ நோக்கி ஒரு சொல் பேசக்கூட அவனால் முடியவில்லை.

ஆனால் மதுராந்தகி பேசினாள். கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கிய அவள், ஓர் உத்தம மனைவி பன்னெடுநாள் பிரிந்திருந்த கணவனைக் காணும்போது முதல் முதலாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டாள்: “என் அன்பே, நீங்கள் உடல் நலத்தோடு இருக்கிறீர்களா?”

இந்த நடைமுறை விசாரிப்புக்கு, மிகச் சாதாரணமான ‘ஆம்’ என்ற விடை பகரக்கூட குலோத்துங்கனால் முடியவில்லை. ஆனால் அருகே நின்ற ஏழிசைவல்லபி ஒரு கேள்வியை வெடித்தாள்: “யார் இவள்? உங்களை-என் அன்புக்கு மட்டுமே உரிய உங்களை- என் முன்னே ‘அன்பே!’ என்று அழைக்கும் ஆணவம் கொண்ட இவள் யார்?”

அவள் இக்கேள்வியைக் குலோத்துங்கனை நோக்கியே கேட்டாள். வந்திருப்பவள் யாரென்று தெரிந்துவிட்ட போதிலும், வேண்டுமென்றே தன் வெறுப்பை அவளுக்கும் குலோத்துங்கனுக்கும் உணர்த்துவதற்காகவே இப்படிக் கேட்டாள். ஆனால் இதற்கும் அவன் பதில் உரைக்காமல் கற்சுவராக நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது மதுராந்தகிக்குப் பொறுக்கவில்லை.

“இவர் இன்றுதான் உன் அன்புக்கு உரியவராகி இருக்கிறார், சகோதரி. ஆனால் அதற்கு முன்பு என் அன்புக்கு உரியவராக இருந்தவர்தாம். உனக்கு ஐயமாக இருந்தால் இதோ இருக்கிறார்களே, இச்சிறுவர்கள், இவர்களுடைய முகச்சாயலைப் பார். எங்கள் அன்பின் பிணைப்புக்கு அது சான்றுதரும். சகோதரி, இன்னுங்கூட நான் யாரென்று உனக்கு விளங்காவிட்டால், நான் கூறிவிடுகிறேன். அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, எனக்கு மணமாலை சூட்டியவர் இவர். என் பெயர் மதுராந்தகி. நான் சோழ மன்னர்களின் வழித்தோன்றல்.”

“ஓ! என் சக்களத்தித் தேவியாரா? வாருங்கள் தேவியாரே. எங்கு வந்தீர்கள், கடல் கடந்து இத்தனை தூரம்?”

“சோழ நாடு ஒரு கோழையின் கையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்நேரமும் பகைவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்ளலாம். அவ்வாறு நேரிடாதிருக்க, அந்நாட்டின் அரசுரிமையை ஏற்பதற்காக என் கணவரை அங்கே அழைத்துப்போக வந்துள்ளேன், சகோதரி.”

“எங்கே அழைத்துப்போக வந்திருக்கிறாய்? சோழ நாட்டுக்கா?” என்று கேட்டுவிட்டு இடி இடியென்று நகைத்தாள் ஏழிசைவல்லபி. தொடர்ந்து மரமாக நின்றிருந்த குலோத்துங்கனின் விலாவில் குத்தி, “கேட்டீர்களா கதையை?” என்று தீவிரத்துடன் சொன்னாள்.

அடைத்திருந்த குலோத்துங்கனின் வாய் இப்போது திறந்தது. “நான்தான் எனக்குச் சோழ அரியணையும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம் என்று ஓலை அனுப்பியிருந்தேனே? வீணில் ஏன் இத்தனை தூரம் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகிறாய்?” என்று முணுமுணுத்தான் அவன்.

“ஆமாம் அம்மா; அத்தோடு இதையும் தெரிந்துகொள். இப்போது இவர் என் கணவர். என் அனுமதியின்றி இந்த ஸ்ரீவிசய நாட்டின் எல்லையைத் தாண்டி அப்பால் செல்வதில்லை என்று ஆணையிட்டு என்னை மணந்து கொண்டிருப்பவர்.”

“அதை நானும் அறிவேன், சகோதரி. எனவே, குறிப்பாக உன் அநுமதியைப் பெற்று இவரை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடுதான் வந்திருக்கிறேன்,” என்றாள் மதுராந்தகி.

“ஓ! இப்படி ஏதாவது பசப்பி அவரை அழைத்துச் சென்று அங்கே நிரந்தரமாக இருத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா? அது நடக்காது அம்மா; இந்த ஏழிசைவல்லபியின் உடலில் உயிர் இருக்கும்வரையில் நான் அவரை என்னைப் பிரிய விடமாட்டேன்.”

“உங்களைப் பிரிக்கும் நோக்கமும் எனக்குக் கிடையாது சகோதரி. என்னை முழுவதும் நம்பு. இவர் இங்கேயிருந்து புறப்படுவதானால், கூடவே நீயும் வருவாய்.”

“வந்து, முன்பின் தெரியாத அந்நாட்டில் உன்னால் வஞ்சிக்கப்பட்டு, புகலற்றவளாய்ச் செத்து மடியவா? எனக்குத் தெரியும் அம்மா உன் சூழ்ச்சி. அதெற்கெல்லாம் நான் இடமளித்துவிட மாட்டேன்.”

“சகோதரி, இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு அம்மாதிரியான துரோக நினைவுகள் ஒன்றும் கிடையாது. மாறாக, என் கணவர் சோழநாட்டின் மகிபரானால் உன்னை அந்நாட்டின் பட்டத்தரசியாக்கிவிட வேண்டும் என்றுகூட நான் எண்ணியிருக்கிறேன்.”

“ஏதேது, பசப்பல் எல்லை மீறிப்போகிறதே!” என்று எள்ளி நகைத்தாள் ஏழிசைவல்லபி. “நீ அவருடைய முதல் மனைவி. எனவே பட்டதரசியாகும் உரிமை உனக்குத்தான் உண்டு என்பதைக்கூட அறியாத அறிவிலியல்லள் அம்மா, நான். போதும், போதும்; இந்த நாடகமெல்லாம் இந்த ஏழிசைவல்லபியிடம் செல்லாது. போய்வா, வந்த வழியைப் பார்த்துக்கொண்டு.”

மதுராந்தகி சிறிது நேரம் ஒன்றும் பேச வாய் வராமல் கணவன் முகத்தையும், ஏழிசைவல்லபியின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு ஏதோ முடிவு செய்துவிட்டவள் போல், “இது தான் உனது இறுதி முடிவு என்றால் போய்விடுகிறேன், சகோதரி. ஆனால் போவதற்கு முன் சிறிதுநேரம் உன்னுடன் தனிமையில் பேச எனக்கு ஒரு வாய்ப்பாவது அளிப்பாயா?” என்று கேட்டாள்.

‘இவள் தனிமையில் வேறு என்ன சொல்லிவிடப் போகிறாள்? இன்னும் ஏதேனும் பசப்பிப் பார்ப்பாள். அவ்வளவுதான். ஆனால் அதற்கு நாம் மசிந்துவிடப் போகிறோமா? இவளுக்கு இந்த வாய்ப்பை அளித்தால் திரும்பிப் போய்விடுவதாகச் சொல்கிறாள். அதை அளிக்க மறுத்தால் அவள் இங்கேயே தங்கிவிடுவாள். என்னைப் பசப்புவதை விடுத்துக் கணவனைப் பசப்பத் தொடங்குவாள். இவரோ மன உறுதி அற்றவர். அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்றவாறு இவர் தமது வாக்குறுதியை உதறிவிட்டு இவளோடு கிளம்பிவிட்டால்…?’ இப்படிப்பட்ட சிந்தனை ஒன்று எழவே, ஏழிசைவல்லபி அன்று மதுரந்தகியைத் தனிமையில் சந்திக்க இணங்கினாள். அது வீண் சந்திப்பு; மதுராந்தகி நினைப்பது நடக்காது என்ற எண்ணத்துடன்தான் அவளை அழைத்துக்கொண்டு அரண்மனை அந்தப்புரத்துக்குச் சென்றாள். ஆனால் அந்த அந்தப்புரத்திலே மதுராந்தகி அவளுக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ, தெரியாது; சற்றைக்கெல்லாம் இருவரும் திரும்பி வந்தபோது ஏழிசைவல்லபி சொன்ன சொற்கள் இவைதாம்: “அன்பே; மன்னர் வீரராசேந்திரர் சோழநாட்டைக் காக்கும் பொறுப்பை உங்கள் மீது சுமத்திவிட்டுப் போயிருக்கிறாராம். காதல் காரணமாகக் கடமையை மறப்பது உங்கள் வீரத்துக்கு இழுக்கு. புறப்படுங்கள்; நாம், அக்காளுடனும் குழந்தைகளுடனும் இன்றே சோழ நாட்டுக்கு மரக்கலம் ஏறவேண்டும்!”

அவர்கள் மரக்கலம் ஏறிச் சில கிழமைகளுக்குப் பின்னர் சோழநாட்டுத் துறைமுக நகரை வந்தடைந்தனர். அங்கே, சிறிதும் எதிர்பார்த்திராத மகிழ்ச்சி நிரம்பிய செய்தி ஒன்று அவர்களை எதிர்கொண்டது. ஆம், இரண்டு நாட்களுக்கு முன் சோழ மன்னன் அதிராசேந்திரன் சரும் நோய்க்கு இரையாகிவிட்டான் என்ற செய்திதான். பழம் நழுவிப் பாலில் விழுந்ததென மகிழ்ந்த மதுராந்தகியும் ஏழிசைவல்லபியும், குலோத்துங்கனோடும் குழந்தைகளோடும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு விரைந்தனர்.

 நல்லவேளையாக விக்கிரமாதித்தனுக்கு அதிராசேந்திரனின் மறைவு பற்றிய செய்தி இன்னும் எட்டியிருக்க முடியாது. தம்பியின் முடிசூட்டு விழாவுக்காகக் கணவனுடன் வந்திருந்த வானவி அவனுடைய மரண விழாவையும் கண்டு போகத்தானோ என்னவோ, கணவனுடன் கல்யாணபுரத்துக்குத் திரும்பாமல் கங்கைகொண்ட சோழபுரத்திலேயே தங்கியிருந்தாள். அவள் இதுகாறும் விக்கிரமாதித்தனுக்குச் செய்தி அனுப்பித்தான் இருப்பாளென்று சோழநாட்டு அரசியல் அதிகாரிகள் கருதினர். ஆயினும் தொலைவில் இருக்கும் அவனுக்குச் செய்தி போய்ச்சேரக் குறைந்தது ஒரு திங்களாவது ஆகும். அதன் பிறகு அவன் படைதிரட்டிக்கொண்டு புறப்பட வேண்டும்; சோழநாட்டைத் தான் கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற பேராசையுடன் அவன் மிக வேகமாகத்தான் வருவான். இருந்தாலும் அதற்கும் குறைந்தது இருபது நாட்களாவது ஆகும். அதற்குள் மதுராந்தகி குலோத்துங்கனை அழைத்து வந்துவிட வேண்டுமே என்று சோழ நாட்டின்மீது பற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் இறைவனை இடைவிடாது வேண்டிக்கொண்டிருந்தனர்.

எனவே, தாங்கள் எதிர்பார்த்ததற்கு மிகவும் முன்னதாகவே குலோத்துங்கனுடன் அவள் திரும்பியது அவர்களுக்கு மெத்த மகிழ்ச்சியை அளித்தது. நாடு முழுவதும் மக்கள் குலோத்துங்கனின் முடிசூட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகளைத் துவக்கினர். அருமொழிநங்கையும் வானவியும் கொதித்தார்கள். ஆனால் அவர்கள் கொதித்து என்ன பயன்? நாட்டு மக்கள் அனைவரையும் எதிர்த்து நின்று இந்த முடிசூட்டு விழாவை அவர்கள் தடுத்துவிட முடியுமா?

அன்று குலோத்துங்கன் அரசுக்கட்டிலில் அமரும் நாள். கங்கைகொண்ட சோழபுரம் உம்பர்கோன் நாடான அமராவதியாகக் காட்சி தந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதந்தனர். எங்கும் ஒரே குதூகலம்; ஒரே கோலாகலம். அதிகாலையில் ஏழரை நாழிகைப் போதில் முடிசூட்டல் நடைபெற நற்பொழுது கணிக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் இரவு பிரியுமுன்னரே எழுந்து நீராடி, புதுப்பட்டாடைகள் உடுத்து முடிசூட்டு விழா நடைபெறும் மண்டபத்துக்குப் புறப்படத் தயாராக இருந்தான்.

சோழகேரளன் அரண்மனை அந்தப்புரத்திலே மதுராந்தகியும் மங்கள நீராடி, புத்தாடைகள் புனைந்து கொண்டிருந்தாள். ஆம், மதுராந்தகிதான்! அதிலும் அவளுக்கு ஆடை அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்த சேடி யார் தெரியுமா? ஏழிசைவல்லபிதான்!

அலங்கரிப்பு முடிந்தது. அவர்கள் விழா மண்டபத்துக்குப் புறப்பட வேண்டிய வேளையும் நெருங்கியது. அப்போது அரண்மனைப் பாங்கியர் அனைவரையும் அப்பால் போகச் சொல்லிவிட்டு ஏழிசைவல்லபியோடு தனித்திருந்த மதுராந்தகி, “கொண்டு வா சகோதரி,” என்று அவளை நோக்கிக் கையை நீட்டினாள்.

“வேண்டாம் அக்கா; என் மனம் உங்கள் நேர்மையைக் கண்டு அடியோடு மாறிவிட்டது. இனி நீங்கள்தான் நிரந்தரமாக இச்சோழ நாட்டின் பட்டத்தரசியாக இருக்க வேண்டும்,” என்றாள் ஏழிசைவல்லபி.

“என்ன சொன்னாய்? அப்படியானால் என் ஆணை என்னாவது?” என்று கோபத்துடன் கேட்டாள் மதுராந்தகி.

“அது மண்ணோடு மண்ணாகப் போகட்டும்.”

“நான் யார் மீது ஆணையிட்டிருக்கிறேன் என்பதை மறந்து பேசுகிறாயா, ஏழிசைவல்லபி? நம் இருவர் வாழ்வுக்கும் ஒரே ஆதாரமாக இருந்துவரும் அவர் உயிரை, நான் ஆணையை மீறுவதன் மூலம் போக்கடித்துக்கொள்ளச் சொல்கிறாயா? அது முடியாது. கொடு என் அமுதத்தை இப்படி,” என்று வேகத்தோடு பேசிய மதுராந்தகி, ஏழிசைவல்லபியின் கையிலிருந்த தந்தப் பேழை ஒன்றை வலுவந்தமாகப் பிடுங்கினாள். அதைத் திறந்து, உள்ளேயிருந்த பொற்சிமிழ் ஒன்றை எடுத்து, அதனுள்ளே அடக்கமாகியிருந்த ஏதோ ஒரு பொடியை அப்படியே வாயில் கவிழ்த்து விழுங்கிவிட்டு முடிசூட்டு விழா மண்டபத்தை நோக்கி விரைந்தாள்.

விழா சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சிகள் முடிவுற்றதும், இப்போது முடிகொண்ட சோழன் அரண்மனையில் வசித்து வந்த வானவியிடம் மதுராந்தகி சென்றாள். “என் ஆணையை நிறைவேற்றிக் காட்டிவிட்டேன், வானவி. இனி நீ என்னை ஏளனமாக நோக்கி நகைக்க முடியாது,” என்று கூறிவிட்டுச் சோழ கேரளன் அரண்மனைக்கு விரைந்து வந்தாள். அந்தப்புரத்தை எட்டும் வரையில்தான் அவளுடைய வாழ்வுக்குப் பொழுது அளித்திருந்தது – காலையில் அவள் உட்கொண்ட, நின்று கொல்லும் விஷப்பொடி. ஆம், அதன் பிறகு அது தன் வேலையைத் தொடங்கிவிட்டது.

விவரம் அறிந்த குலோத்துங்கன் ஓடி வந்தான். “கண்ணே, என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று கதறினான்.

மதுராந்தகி மிக அமைதியாக ஏழிசைவல்லபியின் கையை எடுத்து அவன் கையில் வைத்தாள். “என் ஆணை நிறைவேற நீங்கள் துணை செய்யவில்லை; இவள் செய்தாள், ஆதலால் இவள்தான் இனி என் இடத்தில் பட்டத்தரசியாக இருக்கத் தகுதி பெற்றவள். என் ஆணையை என் காதலுடன் இணைத்திருப்பதாக நமது திருமணத்தின் முன் சொன்னேன். அதன் பின்னர் நாம் கணவன்-மனைவியராக வாழ்ந்தோம்; மக்களைப் பெற்றெடுத்தோம். ஆனால் அவையெல்லாம் என் காதல் நிறைவேறியதன் சின்னமாக அமையவில்லை. அன்று வானவியின் முன் நான் இட்ட ஆணை நிறைவேறிய இன்றுதான் என் காதலும் நிறைவேறியது. எனது வாழ்வே அக்காதலைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தபோது, அது நிறைவேறிய பிறகு என் வாழ்வும் நிறைவு பெறுவதுதான் முறையாகும். அதிலும், எனக்கு இந்தப் பேருதவியைச் செய்த சகோதரி ஏழிசைவல்லபிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இம்மரணம் எனக்குத் தேவையாக இருந்தபோது, நான் அதை ஏற்காதிருப்பது பெரும் துரோகமாகும். ஆம், நான் உயிரோடிருக்கும் வரையில் அவள் இந்நாட்டின் பட்டதரசியாகச் சோழ மாவலி வாணவராயன் அரியணையில் தங்கள் பக்கலில் அமர முடியாதல்லவா…?”

மதுராந்தகியால் இதற்கு மேலே ஒன்றும் பேசமுடியவில்லை. அவளுக்கு நா குழறியது. கண்கள் பஞ்சடைந்தன. நிறைந்த நெஞ்சத்தின் எதிரொலி போல் சட்டென்று ஒரு விக்கல். அவ்வளவுதான்; அவள் கதை முடிந்துவிட்டது…!

முற்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: