Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – இறுதிப் பகுதி

அத்தியாயம் 54 – கடவுளின் காதலி

இத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது.

முத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே மாறி அமைவதற்குக் காரணமாயிற்று.

அத்தகையவர்களில் முதன்மையாக ஸ்ரீமான் ஸர்வோத்தம சாஸ்திரியைக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாய்ப் போலீஸ் உத்தியோகஸ்தர்களிடம் நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அவரிடத்தில் இல்லையென்பதை முதலிலேயே கண்டோம். அவர் அப்படி ஒரு அசாதாரண போலீஸ் அதிகாரியாயிருந்தபடியினால் தான் இந்தச் சரித்திரம் இவ்வளவு தூரம் நீண்டு வந்தது.

முத்தையனுடைய முடிவு சாஸ்திரியைப் பெரிதும் சிந்தனையில் ஆழ்த்தி, அவரை உலக வாழ்க்கையின் மகா இரகசியங்களைப் பற்றி விசாரணையில் இறங்குமாறு தூண்டிற்று.

     “அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை”

என்னும் தமிழ் மறைக் கூற்றின் உண்மைப் பொருளை அவர் அப்போதுதான் நன்கு உணர்ந்தார். இந்தக் குறளுக்குச் சாதாரணமாய், “நற்கருமங்களுக்கே அன்பு ஆதார மென்று தெரியாதவர்கள் சொல்வார்கள்; தீச்செயல்களை விலக்குவதற்கும் அன்பே ஆதாரமானது” என்று வலிந்து பொருள் கூறுவது வழக்கம். ஆனால் தமிழ் நாட்டில் தற்போது வாழ்ந்திருக்கும் பெரியார்களில் ஒருவர், மேற்படி பொருளின் பொருத்தமின்மையை எடுத்துக் காட்டி, “தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்” என்று பொருள் கூறியதை சாஸ்திரியார் கேட்டிருந்தார். இது எவ்வளவு உண்மையென்பது முத்தையனுடைய வாழ்விலிருந்து அவருக்குத் தெளிவாக விளங்கிற்று.

அபிராமியிடம் வைத்திருந்த அன்பினால் அல்லவா முத்தையன் கள்வனாக நேர்ந்தது? மற்றும் பல தீச்செயல்கள் அவன் செய்யும்படி நேர்ந்ததற்கு அந்த அன்பேயல்லவா காரணமாயிற்று?

*****

மற்றும், வாழ்வுக்கு அன்பு காரணமாயிருப்பது போல் மரணத்திற்கும் காரணமாயிருக்கிறது என்பதையும் சாஸ்திரியார் கண்டுணர்ந்தார். முத்தையனிடம் அபிராமியும், கமலபதியும், கல்யாணியும் கொண்டிருந்த அன்பேயன்றோ அவனுக்கு யமனாக முடிந்தது? அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா? அத்தகைய தூய அன்பின் காரணமாகத் தீமை விளைவது சாத்தியமா?

இவர்களுடைய துன்பத்துக்கெல்லாம் ஆதிகாரணமான கார்வார் சங்குப்பிள்ளை இன்னும் உயிர் வாழ்ந்து தன்னுடைய பாவ கிருத்தியங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கொடிய சந்தர்ப்பங்களின் காரணமாகக் கள்வனாக நேர்ந்த முத்தையனோ துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த முரண்பாட்டைப் பார்க்கும்போது, வாழ்வு நல்லது, மரணம் தீயது என்று சொல்வதற்குத்தான் இடமிருக்கிறதா?

உலகத்திலே எல்லாக் காரியங்களும் ஏதோ ஒரு நியதிப்படி காரண காரியத் தொடர்புடன் தான் நடந்து வருகின்றன. நன்மையின் பலன் இன்பம். தீமையின் விளைவு துன்பம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நன்மை எது, தீமை எது, சுகம் எது, துக்கம் எது என்றெல்லாம் நிர்ணயிப்பது மட்டும் எளியதன்று. “நன்மை தீமை, சுக துக்கம் முதலிய துவந்த உணர்ச்சிகளைக் கடந்தவன் தான் ஞானி; அவன் தான் சித்த புருஷன்” என்று பெரியோர் சொல்வதன் இரகசியமும் ஒருவாறு சாஸ்திரிக்குப் புலனாகத் தொடங்கிற்று.

இவ்வாறெல்லாம் ஆத்ம சிந்தனையினாலும், தத்துவ விசாரணையிலும் இறங்கிவிட்ட சாஸ்திரிக்குப் போலீஸ் இலாகா உத்தியோகம் பிடிக்காமல் போனதில் வியப்பில்லையன்றோ? உரிய காலத்திற்கு முன்பே அவர் பென்ஷன் பெற்றுக் கொண்டு விலகி, பாரமார்த்திக சாதனங்களிலும், பொது நன்மைக்குரிய காரியங்களிலும் ஈடுபடலானார். “போலீஸ் சாமியார்” என்றும் “போலிச் சாமியார்” என்றுங்கூட அவரை அநேகர் பரிகசித்தார்களாயினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையை அவர் அடைந்து விட்டார். அவருடைய நற்காரியங்களுக்கெல்லாம் அவருடைய தர்ம பத்தினி பெரிது உதவி புரிந்து வந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா?

முத்தையன் இறந்த பிறகு சாஸ்திரியின் முயற்சியினால் குறவன் சொக்கன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் அந்தப் பாவி மகன் சும்மா இருக்கவில்லை. கொள்ளிடக்கரைக் காட்டுக்குப் போய்ப் பல தினங்கள் அலைந்து திரிந்து கடைசியில் முத்தையன் மரப்பொந்தில் ஒளித்து வைத்திருந்த சில நகைகளைத் தேடிப் பிடித்தான். அவற்றை அவன் டவுனில் கொண்டு போய் விற்க முயன்ற போது போலீசார் பிடித்துக் கொண்டார்கள். வேறு ஒரு திருட்டுக் கேஸில் அவனை சம்பந்தப்படுத்தி, மூன்று வருஷம் கடுங் காவல் விதித்து சிறைக்கு அனுப்பி விடார்கள். ஆனால், இதன் பொருட்டு நாம் சொக்கனிடம் அனுதாபம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவன் பிறவியிலேயே வேதாந்தியாய்ப் பிறந்தவனல்லவா? அவனுக்கு வெளியிலிருப்பதும் ஒன்றுதான்; சிறையிலிருப்பதும் ஒன்றுதான். சுகமும் ஒன்றுதான், துக்கமும் ஒன்றுதான். இருவினைகளையுங் கடந்த யோகி என்று உண்மையில் அவனையல்லவா சொல்லவேண்டும்?

*****

உரிய காலத்தில், கமலபதியும் அபிராமியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். முத்தையனுடைய மரணத்தினால் கமலபதிக்கும் அபிராமிக்கும் ஏற்பட்ட அளவிலாத துக்கமே அவர்களை ஒன்று பிணைப்பதற்கு முக்கியச் சாதனமாயிருந்தது. முத்தையனை நினைத்து அவர்கள் விட்ட கண்ணீர் அவர்களுடைய காதல் பயிரைத் தளிர்க்கச் செய்யும் வான் மழையாயிற்று. இப்படி அவர்களுடைய நேசத்தைப் பெருக்கி வளர்த்த பிரிவுத் துக்கம் நாளடைவில் மறைய, அவர்களுடைய காதல் இன்பம் மட்டுமே மிஞ்சி நின்றது. சில சமயம் அவர்கள், ‘ஐயோ! முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே?’ என்று எண்ணி வெட்க முறுவார்கள். பின்னர், “நாம் இப்படிச் சந்தோஷமாயிருப்பதுதான் முத்தையனுக்கு மகிழ்ச்சி தருவதாகும்” என்று எண்ணி ஒருவாறு ஆறுதல் பெறுவார்கள்.

*****

கல்யாணி உயிர் வாழ்ந்திருந்தாள்!

முத்தையனுடைய மரணத்திற்குப் பிறகு அவளும் உயிர் துறப்பாள் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் உண்மையில் அவ்வாறு நேரவில்லை.

முத்தையன் பிடிபட்ட அன்றே உயிர் துறக்க முயன்ற கல்யாணி, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சி செய்யாதது ஆச்சரியம் அல்லவா?

ஆச்சரியந்தான். ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் செய்தது.

முதல் நாள் கல்யாணி உயிர் துறக்க முயன்றபோது அவள் “இவ்வுலகத்தில் உண்மையானது ஒன்றுமேயில்லை; எல்லாமே பொய்” என்ற மனோபாவத்தில் இருந்தாள். மறுநாள் முத்தையனைப் பார்த்த பிறகு, அந்த எண்ணம் அவளுக்கு மாறிவிட்டது. “உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு” என்ற உறுதிப்பாடு அவளுக்கு ஏற்பட்டது.

*****

யமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்:

“தோழி! ஏன் துயரப்பட வேண்டும்? இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு? சகலமும் அநித்யமல்லவா” மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

“சகியே! இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை.”

“பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது.

“தோழி! நமது ஹரி பெரிய திருடன் அல்லவா? ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா?”

“பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்?”

ராதையின் மேற்சொன்ன மனோநிலையைத்தான் கல்யாணி அடைந்திருந்தாள். முத்தையனுடைய மரணம் அவளுக்குத் துக்கம் விளைவிக்கவில்லையென்று நாம் சொல்ல மாட்டோ ம். ஐயோ! கல்யாணிக்கா துக்கமில்லை? துக்கமில்லாமலா அப்படிச் சித்திரப் பதுமை போல நிற்கிறாள்? துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள்? ஆனால் அது சாதாரண துக்கமல்ல; அதிசயமான துக்கம் என்று மட்டும் சொல்லத்தான் வேண்டும்.

சாதாரணமாயிருந்தால் அதை மறக்க முயல்வது அல்லவா நியாயம்? அதுதானே மனித இயற்கை? ஆனால் கல்யாணி அந்தத் துக்கத்தை மறக்க விரும்பவில்லை. அந்த மகத்தான துக்கத்தில் அவள் ஏதோ ஒரு மகத்தான இன்பத்தையும் கண்டிருக்க வேண்டும்.

உண்மையில், கல்யாணி இரண்டாம் முறை உயிர் துறக்க முயலாததன் காரணமே இதுதான்; உயிர் துறந்தால், முத்தையனுடைய ஞாபகம் போய்விடுமோ, என்னமோ? அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே! சாவிலும் அப்படித்தானே போய்விடும்? – முத்தையனையும் அவனுடைய காதலையும் மறந்துவிடச் செய்யும் மரணம் வேண்டாம்.

கல்யாணியின் சுயநலமற்ற, பரிசுத்தமான காதல் அவளை ஒரு தெய்வப் பிறவியாக மாற்றியது. வாழ்க்கையில் அவளுடைய செயல்கள் எல்லாம் அதற்கு உகந்தவையாகவே அமைந்தன. பூங்குளத்திலும் தாமரை ஓடையிலும் அவளுக்கிருந்த திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் துயர்தீர்ப்பதற்காகவே அவள் பயன்படுத்தி வந்தாள்.

கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 18கல்கியின் பார்த்திபன் கனவு – 18

அத்தியாயம் 18 குந்தவியின் கலக்கம் “புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி” என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01

குமாஸ்தாவின் பெண் பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம். தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், தமிழகப் புலவர்