Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 22

அத்தியாயம் – 22

 

காதல்! அது படுத்தும்பாடு ஏராளம். வார்த்தைகளால் வடிக்க முடியாதது. ஏதோ ஒரு உந்துதலில் லீ யூ வோனைப் பார்த்தே ஆகவேண்டும் என்றுப் புறப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உள்ளே பயப்பந்து வயிற்றுக்கும் தொண்டைக்குமாக ஓடிக் கொண்டிருந்தது.

 

இமிக்கிரேசனை அடைந்தவள், தனது முறை வரவும் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்த அதிகாரி அவளை மேலும் கீழும் நன்குப் பார்த்து அவள் பெயர் விபரங்களைக் கேட்டு உறுதி செய்து கொண்டவர், தொலைபேசியில் யாருக்கோ அழைத்து ஏதோ சொன்னார்.

 

இவள் உள்ளம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருக்கவும் ஒரு சீருடை அணிந்த அதிகாரி ஒருவர் வந்து இவளை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமரச் சொன்னார். ஷானவியோ வேர்த்து விறுவிறுத்துப் போனாள். இருந்தாலும் உள்ளத்தின் படபடப்பை முகத்தில்க் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

அப்போது அங்கே வந்த கோட் சூட் அணிந்த ஒரு இளைஞன்,

 

“ஹலோ மாம்…! ஐ ஆம் யூ வூன் சூக். தென்கொரியாவுக்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் புக் செய்த ஹோட்டலில் இருந்து வந்திருக்கிறேன். நீங்கள் இங்கு தங்கும் வரை உங்களை நன்குக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு.”

 

என்று சரளமான ஆங்கிலத்தில்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன்பிறகு தான் ஷானவிக்கு மூச்சே சீராக வெளிப்பட்டது எனலாம். அவனே அவளை அழைத்துச் சென்று லக்கேஜ்ஜையும் எடுத்துக் கொண்டு அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

 

விமானச்சீட்டோடு சேர்த்தே இவள் தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்திருந்தாள். இங்கு வந்து நின்று தடுமாற வேண்டாமே என்று. அதுவே இப்போது அவளுக்கு உதவியாகவும் இருந்தது. யூ வூன் வாய் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே வந்தான். சிறிது நேரத்தில் ஷானவிக்கும் அவன் கலகல பேச்சில் ஒரு இலகுத் தன்மை வந்து அவனோடு நன்றாகவே பேச ஆரம்பித்தாள்.

 

“இங்கே நீங்கள் சுற்றிப் பார்க்கவா அல்லது வேலை விடயமாகவா? எதறக்கா வந்துள்ளீர்கள் என்று தெரிந்தால் உங்களுக்கு உதவுவதற்கு வசதியாக இருக்கும் மேம்…”

 

யூ வூன் கேட்கவும் இவள் காரணத்தைச் சொன்னாள்.

 

“ஷானவி என்றே கூப்பிடுங்கோ யூ வூன். நான் லீ யூ வோனிட வெடிங்குக்கு வந்தனான். எனக்கு அவரை எப்பிடியாவது பார்க்க வேணும். அதுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”

 

“சூப்பர் ஷானவி. அதுக்கென்ன உதவிட்டாப் போச்சு. நம்மால முடியாத காரியம் என்று எதுவுமே இல்லைத் தெரியுமா?”

 

“ரிசல்ட் ஒன்லி கவுண்ட்”

 

சிரித்துக் கொண்டே சொன்னாள் ஷானவி. அவனும் சிரித்தவன்,

 

“நான் லீ யூ வோனிட பெரிய ஃபான் தெரியுமா? ஃபான் கிளப்ல இருக்கிற படியால எனக்கு அவரிட மூவி, கொன்சேர்ட் எல்லாத்துக்கும் டிக்கெட்டுக்கு டிஸ்கவுண்ட் இருக்கு. நாளைக்கு இரவு ஒரு கொண்சேர்ட் இருக்கு. மூன்று வருசத்துக்குப் பிறகு லீ யூ வோனிட ஸ்டேஜ்ல பாடப் போறார். டிக்கெட்லாம் எப்பவோ புக் ஆகியிருக்கும். நான் உங்களுக்கு ஒரு ரிக்கெட் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.”

 

“ரொம்ப தாங்ஸ் யூ வூன். குமாவோ…”

 

“வாவ்… சூப்பர். கொரியன் பாசையும் பேசத் தெரியுமா?”

 

“ஹி ஹி இது மட்டும் தான் தெரியும்.”

 

அவளை ஹோட்டலில் கொண்டே இறக்கி விட்டவன், தனது தொலைபேசி இலக்கம் உள்ள ஒரு விஸிட்டிங் கார்டைக் கொடுத்தவன்,

 

“என்ன தேவை என்றாலும் இந்த நம்பருக்குக் கூப்பிடுங்கோ. இப்போ டேக் ரெஸ்ட்.”

 

என்று விட்டு அவன் விடைபெற்றுச் சென்றான்.

 

ஹோட்டல் அறையை அடைந்தவளுக்கோ அறையைப் பார்த்தே பிரமிப்புத்தான். அத்தனை அழகு.

 

‘அட நல்லூர்க் கந்தா…! இங்க பாரன். இந்த ஊரில த்ரீ ஸ்டார் ஹோட்டல் கூட இவ்வளவு வசதியாக இருக்கே…’

 

என்று முருகனோடு பேச்சு வார்த்தை நடத்தியவள், பயண அலுப்புத் தீர பாத்டப்பில் அமிழ்ந்து எழுந்தாள். அதிகாலையிலேயே இவள் விமானம் வந்திருந்ததால் இப்போது நேரம் காலை ஆறு மணி தான். குளித்ததும் வயிறு பசிக்கவே, ரூம் சேர்விஸக்கு அழைத்துக் காலை உணவை அறைக்கே கொண்டு வரச் சொல்லிச் சாப்பிட்டவள் அந்த பட்டு மெத்தையில் வீழ்ந்தாள்.

 

பயணத்தின் போதும் தூங்கியிராதது இப்போது கண்களை மூடியதுமே அவளைத் தன் வசமாக்கியது. அடித்துப் போட்டது போல ஆறு மணி நேரம் தூங்கியெழுந்தவள், வெளியே செல்லத் தயாராகி விட்டு யூ வோனுக்கு அழைத்து வரச் சொன்னாள். அடுத்த ஐந்தாம் நிமிடம் அவனும் வந்து நிற்கவே,

 

“இங்க ஸ்றீட் பூட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை நல்ல ஒரு இடமாக லஞ்சுக்குக் கூட்டிட்டுப் போக முடியுமா? அப்புறம் நான் ஃபீப் சாப்பிட மாட்டேன்”

 

என்றாள். அவனும் மகிழ்ச்சியாகச் சம்மதித்தவன்,  சியோல் நகரத்தின் தெருவோர உணவகங்கள் நிறைந்திருந்த கடைகளுக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு இருந்த விதம் விதமான நூடிஸ்கள், குச்சியில் குத்தி பொரித்தெடுத்து வைத்திருந்த கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், காய்கறிகள் என்று மூக்கு முட்ட முடிந்த வரை புதுப்புதுப் பதார்த்தங்களாகச் சுவைப் பார்த்தாள்.

 

மறக்காமல் செல்பியும் சில நேரங்களில் யூ வோனிடம் சொல்லியும் புகைப்படங்கள் எடுக்கத் தவறவில்லை. அனுஷரா, ஆதூர், திருநாவுக்கரசுவுக்கு அவற்றை அனுப்பித் தான் நலமாக இருப்பதை அறியப்படுத்தினாள்.

 

உண்மையிலேயே அந்தக் கடை வீதிகளில்ச் சுற்றித் திரியும் போது ஷானவி தனது கவலைகள் மறந்து, குழந்தையாகவே மாறிப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். சில இடங்களில் மனதைக் கவர்ந்த பொருட்களை வாங்கவும் தவறவில்லை.

 

சிறுவர்கள் போலப் பெரியவர்களும் வீடியோ கேமிலிருந்து, பல விளையாட்டுக்களை ஜோடி ஜோடியாக விளையாடுவதைப் பார்த்தவள் மனது ஏக்கம் கொண்டது. அதற்கேற்றாற்ப் போல அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகையில் லீ யூ வோன் மைக்கோடு நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரம் அந்த விளம்பரத்தையே விழி வெட்டாமல்ப் பார்த்தவள், யூ வூனிடம்,

 

“யூ… என்னை லீயிட வீட்டுக்குக் கூட்டிச் செல்ல முடியுமா ப்ளீஸ்?”

 

“போகலாம் ஷானவி. ஆனால் அப்பொயின்மெண்ட் இல்லாமல் உங்களால உள்ள போக முடியாது. நான் லீயிட மனேஜருக்கு நீங்கள் பார்க்க விரும்புவதாக அப்பொயின்மெண்ட் கேட்டு மெயில் பண்ணியிருக்கிறேன். பதில் வந்ததும் சொல்கிறேன்.”

 

“குமாவோ யூ… எனக்கு வெளியே இருந்தாவது வீட்டைப் பார்க்க வேணும் போல இருக்கு. போவமா?”

 

அவனும் அவள் விருப்பத்தைத் தட்டாமல் அழைத்துச் சென்றான். சாதாரண ஒரு பங்களாவை எதிர் பார்த்துச் சென்றவளுக்கு, ஒரு ஊரையே வளைத்துப் போட்டது போலிருந்த அந்தப் பெரிய மாளிகை பிரமிப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே உண்டு பண்ணியது. அவன் வீட்டு வாசலில் பல இளம் பெண்கள் கைகளிலே அவனுக்கு வாழ்த்துச் செய்தி எழுதிய பதாதைகளைத் தாங்கியவாறு ஒப்பா ஒப்பா என்று கோசம் போட்டவாறிருந்தனர். அங்கிருந்த அந்தக் கும்பலைக் கண்டவள் வியப்பாய் அது என்னவென விசாரித்தாள்.

 

“இவங்க எல்லாம் லீயுடைய ஃபான். லீ வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம் அவனைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்.”

 

காரை விட்டிறங்கிய ஷானவி அவர்கள் அருகே சென்றாள். தங்கள் நாட்டுக்காரி இல்லாத ஒருத்தியைக் கண்டதும் எல்லோரும் அவளைச் சூழ்ந்தனர். அவர்கள் மாறி மாறி கொரியன் பாசையில் ஏதேதோ கேட்கவும் இவள் திருதிருவென முழித்தாள். இவள் உதவிக்கு வந்த யூ வூன் இருபகுதிக்கும் மொழி பெயர்த்தான்.

 

இவள் தானும் லீயின் ஃபான் தான். அவனைச் சந்திப்பதற்காக வந்திருப்பதாகக் கூறினாள். அப்போது ஒரு வெள்ளை நிற ஃபென்ஸ் கார் ஒன்று வாயிலை நோக்கி வரவே இந்த விசிறிகள் கூட்டம் ஒப்பா என்றுக் கத்திக் கொண்டே, அந்தக் காரை நோக்கி ஓடியது. நாலைந்து காவலாளிகள் வந்து அவர்களைத் தடுத்துக் கார் போக உதவி செய்தனர்.

 

முண்டியடித்துக் கொண்டு ஓடியவர்களோடு கூடச் செல்லத் தோன்றாமல் இவள் பின்னேயே தயங்கி நின்றாள். கார் இவளைக் கடந்து சென்ற அந்த ஒரு நொடிப் பொழுதில் பின்னிருக்கையிலச் சாய்ந்தமர்ந்திருந்த லீயைக் கண்டாள் இவள். அவனும் இவளை நோக்கியது போலிருந்தது. ஆனால்க் கார் நிற்கவில்லை. உள்ளே சென்றதும் கதவும் பூட்டிக் கொண்டது. விசிறிகளும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துச் செல்லத் தொடங்கினர்.

 

இவளுக்கும் ஏனோ அதன் பின்னர் சுற்றிப் பார்க்க மனம் வராது ஹோட்டலுக்கே திரும்பிச் சென்றாள். போகும் வழியில் வரைவதற்குரிய சில பொருட்களை மட்டும் வாங்கியவள் அறைக்குச் சென்றதும் இன்று லீயைக் கண்ட காட்சியைப் படம் வரைய ஆரம்பித்தாள்.

 

மதியம் நிறையச் சாப்பிட்டிருந்தது வயிறு இப்போது மந்தமாகவே இருக்க பசி மரத்திருந்தது. ஓவியத்தை முடித்துப் படுக்கையில் வீழ்ந்தவளுக்கு மனதிலே பல வித எண்ணங்கள்.  

 

பிரான்ஸ்ஸில் இவள் பார்த்துப் பழகிய எளிமையான லீக்கும் இங்கே காணும் இந்தக் கோடீஸ்வர நடிகனுக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசம் அவளைப் பிரமிக்க வைத்தது. அவனோடு தங்கியிருந்த நாட்கள் எல்லாம் வெறும் கனவோ என்று தோன்றியது.

 

இத்தனைப் பேரும் புகழும் இருப்பவன், வேற்றுநாட்டுக்காரியான தன்னைக் காதலித்தது நிஜம் தானா? அல்லது அந்த நாட்களைக் கூட அவன் திரைப்படத்தின் ஒரு காட்சியாக நடித்திருந்தானோ? எதற்காக அவன் இந்த ஆடம்பர வாழ்வைத் துறந்து பிரான்ஸில் அந்தச் சிறு வீட்டில் வாழ்ந்தான்? எதற்காகத் தன்னை கல்யாணம் செய்ய முன் வந்தான்? எதனால் சொல்லாமல்க் கொள்ளாமல் திரும்பவும் இங்கேயே ஓடி வந்தான்? எதனால் இப்போது இந்தத் திருமணத்திற்கு எனக்கு அழைப்பு அனுப்பினான்? இந்தத் திருமணம் பொய் வேலையாக இருக்கும் என்று நம்பி வந்தது வீணோ? நேரில் என்னைக் கண்டால் என் காதலைப் புரிந்து கொள்வான் என்று எண்ணி வந்தது மடத்தனம் தானோ?

 

பத்தும் பலதும் எண்ணிக் குழம்பித் தவித்தது மனது. ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லாமல்த் தனியாகப் புலம்பித் தவித்தாள் பேதையவள். அனுஷரா, ஆதூரோடு பேசினாலாவது மனப்பாரம் குறையும் என்று எண்ணி அவர்களுக்கு அழைத்தால் அவர்களும் அழைப்பை எடுக்கவில்லை. நேர வித்தியாசம் தூங்கியிருப்பார்கள் என்று எண்ணியவளாய் அந்த முயற்சியைக் கைவிட்டுச் சுயபச்சாதபத்தில் இறங்கினாள்.

 

ஒரு மனிதனைத் தனது உறுதியிலிருந்து தளர்த்தவல்லது இந்த சுயபச்சாதபம் கொள்வது. ஷானவியும் இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள். தங்கள் காதலின் மீதே சந்தேகம் கொள்ளுமளவு ஆட்டம் கண்டிருந்தது அவள் மனது.

 

எப்படி லீ யூ வோன் தன்னை விடுத்து இன்னொருத்தியை மணம் முடிக்கலாம்? அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி நாலு சாத்துச் சாத்துவோம் என்று எண்ணிப் புறப்பட்டு வந்தவளோ, இப்போது அவனது பக்கத்தில் இருந்து யோசித்துப் பார்த்தாள்.

 

இத்தனை பேரும் புகழும் இருப்பவன் ஒரு மிடில் கிளாஸ் வேற்று நாட்டு அநாதையை மணந்து கொள்வது என்பது அவன் புகழுக்கும் கௌரவத்துக்கும் பாதிப்புத் தானே. அதைவிட விவாகரத்தானவள். இத்தனை பெரிய பணக்காரன் எதற்காக விவாகரத்தானவளைக் கல்யாணம் செய்ய வேணும்? கண்ணெதிரேயே பார்த்தாள் தானே அவனுக்கு இருக்கும் ரசிகப் பட்டாளத்தை.

 

ஹோட்டல் அறையில் இன்டர்நெட் வசதி இருந்தும் லீ யூ வோனைப் பற்றி மேலதிக விவரங்களைத் தேடிப் பார்க்க இவள் மனதுத் தயங்கியது. அவனைப் பற்றி இப்போது அறிந்து கொண்ட விடயங்களே அவளை மலைக்கச் செய்து அவள் வாயை மூடியிருக்க இதுக்கு மேலும் அதிர்ச்சிகளைத் தாங்க அவள் தயாராக இல்லை.

 

ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கப் பார்க்க இவளுக்குத் தான் எந்த விதத்திலும் லீ யூ வோன்க்குப் பொருத்தம் இல்லை என்று தோன்றியது. லீயை நேரில்ச் சந்தித்து அவன் மனதில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தாள். அவனது திருமண விடயம் தெரிந்தாலாவது தான் மனசு மாறி அவனுக்குக் காத்திராமல் வேறொரு வாழ்க்கையைத் தேடிக் கொள்வேன் என்பதற்காகத்தான் அவன் திருமண அழைப்பிதழை அனுப்பியிருக்கிறான் என்பதை இப்போது தான் மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்துக் கண்டுப்பிடித்தாள்.

 

வந்ததுதான் வந்தோம். கடைசியாக ஒரு தடவை அவனைக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுப் பார்த்து விட்டுப் போய் விடுவோம் என்று முடிவு செய்தவள், தனது விமானப் பயணச் சீட்டை கொன்சேர்ட் முடிந்த பிறகு நேராக விமான நிலையம் செல்லக் கூடியவாறு மாற்றியமைத்துக் கொண்டாள்.

 

முடிவெடுத்து விட்டுச் செயற்படுத்தியவள், தனது பொருட்களைத் தான் கொண்டு வந்திருந்த சிறிய சூட்கேசில் அடுக்கி ஓரமாக வைத்தாள். அவள் வரைந்து காய வைத்திருந்த லீயின் ஓவியம் அவளைப் பார்த்துச் சிரித்தது.

 

“காதல் நீதானா காதல் நீதானா

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா?”

 

என்ற பாட்டு வரிகளை எழுதித் தன் கையொப்பத்தை இட்டவள் தூங்க ஆயத்தமானாள். அவள் அவ்வளவு நேரம் வருந்தியது போதும் என்று எண்ணியோ என்னவோ நித்திராதேவியும் அவளை வேகமாகவே தன் வசப்படுத்திக் கொண்டார்.

 

விடியல் அவளுக்கு வைத்திருப்பது என்ன?Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: