Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 21

அத்தியாயம் – 21

 

காலையில் நித்திரை விட்டெழுந்த ஷானவிக்கு முதலில்ப் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. காலைக்கடன் முடித்துக் குளித்து விட்டு, லீயைத் தேடியவள் அவன் வீட்டில் இல்லாததைப் பார்த்து விட்டு காலை நடைக்குப் போயிருக்கிறான் போல என்று எண்ணிக் கொண்டவள் வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். காலை பத்து மணி தாண்டியும் அவன் வீட்டுக்கு வரவில்லை எனவும் மனதுக்குள் ஏதோ பிசையத் தொடங்க, அவனுக்கு ஃபோன் செய்தாள்.

 

அவன் இலக்கம் தொடர்பில் இல்லை என்று வரவும், மறுபடியும் மறுபடியும் முயற்சித்துக் கொண்டிருந்தாள். மாலை வரை வாயிலும் பச்சைத் தண்ணீரும் படாமல் அவனது தொலைபேசிக்கு முயன்றவள், களைத்துச் சோர்ந்து அமர்ந்த நேரம் வீட்டு அழைப்பு மணி அடிக்கவும் தாயைப் பிரிந்த கன்றின் தவிப்போடும் ஆவலோடும் ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

 

ஆனால் அங்கே நின்றிருந்தது மைக்கேலும் அனுஷராவும் ஆதூரும் கூடவே திருநாவுக்கரசுவும். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்தவள் பதறிப் போனாள். உள்ளே அழைக்கவும் மறந்து அனுஷராவைப் பிடித்து உலுக்கினாள்.

 

“அனு…! லீ எங்க? காலையில இருந்து அவனைக் காணேல்ல. ஃபோனும் ஓப். இப்ப எதுக்கு நீங்க எல்லாரும் ஒன்றாக வந்திருக்கிறியள்? அவனுக்கு அக்சிடெண்ட் ஏதும் ஆகிடுச்சா?”

 

அவளை அரவணைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆதூர் ஓடிச்சென்று குளிர்ந்த நீர் ஒரு குவளையில் எடுத்து வர, அனுஷரா அதை ஷானவியிடம் கொடுத்தவள்,

 

“இங்க பாரு ஷானு… முதல்ல இதைக் குடி. நீ பயப்பிடுற போல லீக்கு எதுவும் இல்லை. அவன் ரொம்ப நலமாக இருக்கிறான். ஆனா அவன் ஒரு முக்கியமான விசயமாக அவசரமாக ஜப்பான் போயிருக்கிறான். பிறகு கொரியா போய்டுவான். அவன் வேலை முடிச்சு எப்ப திரும்புவானோ தெரியேல்ல. உன்னட்டச் சொல்லிட்டுப் போனானோ தெரியலை என்றுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தம். மற்றபடி அவனுக்கு ஒண்ணும் இல்லை. நீ பயப்பிடாதை…”

 

அனுஷரா சொல்லச் சொல்ல ஷானவி நிதானப்பட்டாள். இதற்குள் திருநாவுக்கரசு அனைவருக்கும் சூடாய் கஃபேயும் தேநீரும் போட்டுக் கொண்டு வந்திருந்தார். லீ ஷானவியிடம் சொல்லாமல்ச் சென்றிருப்பது புரிய அனைவரும் என்ன சொல்லி ஆறுதல்ப் படுத்துவது என்றுத் தெரியாமல் இருந்தனர்.

 

“அவன் ஜப்பான் போனது உனக்கு எப்பிடித் தெரியும் அனு? உனக்கு ஃபோன் பண்ணினானா?”

 

“இல்லை ஷானு… எனக்கு நியூஸ்ல பார்த்துத்தான் தெரியும். தான் தான் அங்கிளுக்கும் ஆதூருக்கும் சொன்னான்.

 

“நியூஸ்ல பேர் வாற அளவு அவர் பெரிய ஆள்ப் போல…”

 

முகம் சிவந்து இருந்தவளை அமைதிப்படுத்தும் நோக்கோடு ஆதூர் குறுக்கிட்டான்.

 

“ரிலாக்ஸாகு ஷானு… நாங்க எவ்வளவோ தரம் லீயைப் பற்றி உனக்குச் சொல்ல வந்தம். ஆனா நீ தான் அவன் சொல்லுற நேரம் சொல்லியே எனக்குத் தெரியட்டும் என்று எங்களைத் தடுத்திட்டாய். இப்ப கூட அவன் வேணும் என்று போகேல்ல. அவன் நிலைமை அப்பிடி.”

 

“சில்துப்ளே ஆதூர்…! அவனைப் பற்றித் தெரிஞ்சு கொள்ளாமல் இருந்தது என்ர மோட்டுத்தனம் தான். இல்லை என்று சொல்லேல்ல. ஆனால் என்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம் தானே. இவ்வளவு நேரமாய் எவ்வளவு தவிச்சுப் போனன் தெரியுமா?”

 

“நீ லீட அறையில போய்ப் பார். அவன் ஏதும் எழுதி வைச்சிருக்கிறானோ தெரியேல்ல…”

 

அதுவரை லீ தன்னை விட்டுப் போயிருப்பான் என்று சிறிதும் எண்ணியிருக்காதவள், அவனுக்கு விபத்து ஏதுமோ என்று தான் தவித்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதையும் யோசிக்கவில்லை. இப்போது ஆதூர் சொல்லவும்தான் ஓடிச்சென்று லீயின் அறையில்ப் பார்த்தாள். அவன் மேசையில் ஒரு தாள் பேப்பர் வெயிட் வைத்து இருக்க, அதை அவசரமாக எடுத்துப் பார்த்தாள்.

 

“கடமை அழைக்கிறது ஷானு… என்னைச் சுற்றி என்ன வேணுமானாலும் நடக்கலாம். நம் காதல் உண்மை என்றால் எதிர்காலத்தில் சந்திப்போம். ஷரங்கே ஷானு…”

 

என்று ஒரு சிறு துண்டில் எழுதி வைத்திருந்தான். அதைக் கொண்டு வந்து மற்றவர்களிடம் கொடுத்து விட்டு ஓய்ந்து போய் அமர்ந்தாள்.

 

“இங்க பாரும்மா ஷானுக்குட்டி… லீ உன்னை வேணாம் என்று சொல்லிட்டுப் போகேல்லயே. அப்புறம் ஏனம்மா கவலைப் படுகிறாய்? அவன் நிச்சயமாக திரும்ப உன்னைத் தேடி வருவான்.”

 

திருநாவுக்கரசு கூறவும் அவரைப் பாவமாய் நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

“நீ இங்க தனியாக இருக்க வேணாம் ஷானு. எங்கட வீட்டுக்கு வா. வா… வந்து நாலைஞ்சு ட்ரெஸ்ஸை எடு. வீட்ட போவம்.”

 

அனுஷரா சொல்லவும் எல்லோருக்கும் அவள் யோசனை சரியாகப்படவே ஷானவியை ஏறிட்டனர். ஆனால் அவளோ இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தாள். திருநாவுக்கரசும் அவளை அனுஷரா வீட்டிற்குப் போகச் சொல்லவும், ஷானவியோ பலமாக மறுத்தாள்.

 

“நோ மாமா. அந்த கொரியன் ரோபோ என்னைத் தேடி வாற வரைக்கும் நான் இங்க தான் இருப்பன். ஒரு இடமும் வர மாட்டேன்.”

 

அவள் உறுதியான குரலில் கூறவும் அவள் மனதை மாற்ற முயற்சித்து முடியாது போகவே, அவளைப் பேருக்கு எதையோ சாப்பிட வைத்து விட்டு தத்தமது வீட்டிற்குத் திரும்பினர்.

 

அனைவரும் விடை பெற்றுச் சென்றதும், லீயின் அறைக்குச் சென்றவள் அவன் கட்டிலில் வீழ்ந்தவளுக்கு இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை பெருக்கெடுத்தது. இன்னும் மூன்று வாரங்களில்த் திருமணம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தவளுக்கு அவன் எப்போது திரும்புவான் என்று தெரிவிக்காமல்ச் சென்றது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது.

 

மாறி மாறிப் பலதும் யோசித்தவள் இறுதியில், லீ இந்தத் திருமணம் பிடிக்காமல்த் தான் அவசர வேலையைக் காரணம் காட்டிப் புறப்பட்டுச் சென்றிருக்கிறான் என்று முற்று முழுதாக நம்பினாள். இல்லையென்றால் என்ன காரணமாக இருந்தாலும் அவளை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லி விட்டுச் சென்றிருக்கலாமே என்று அந்தப் பேதை மனது எதிர்மறையாகவே எண்ணிக் கலங்கியது.

 

அவனைப் பற்றி எதுவும் அறிந்து வைத்திராத தனது மடத் தனத்தை எண்ணி நொந்தவளுக்கு, ஏனோ இப்போதும் அவனைப் பற்றி அறிய மனம் வரவில்லை. கண்ணீரோடே தூங்கிப் போனவளுக்கு காலை வெறுமையாகவே விடிந்தது. நாட்கள் கடந்தனவே தவிர, லீயிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. திருநாவுக்கரசு, அனுஷரா, ஆதூர் என்று மாறி மாறி இவளை வந்து பார்த்துச் செல்வதும், இவளை வெளியே அழைத்துச் செல்வதுமாகப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டனர். இருந்தாலும் இவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. லீயைப் பற்றி மற்றவர்கள் ஏதாவது பேசினாலே அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விடுவாள்.

 

இவளது இந்த மாற்றம் கண்டு என்ன செய்வது என்றுக் குழம்பினாலும், திருநாவுக்கரசுவும் அனுஷராவும் தொடர்ந்து லீயைத் தொடர்பு கொள்வதற்கு முயல்வதை நிறுத்தவில்லை. ஆனால் அவனோடு நேரடியாகப் பேசும் வாய்ப்புக் கிடைக்காமல் மின்னஞ்சல் அனுப்புவதும் அவன் அலுவலக, வீட்டு இலக்கங்களுக்கு அழைப்பெடுத்துத் தோற்பதுமாக இருந்தனர். அதனால் அவர்களுக்கும் ஷானவிக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்பது புரியாமல் லீயைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தனர்.

 

இவளை இப்படியே சும்மா விட்டால்க் கண்டதையும் யோசித்து மனதை வதைப்பாள் என்றுணர்ந்து அவளை ஒரு பிரெஞ்ச்சு வகுப்பில் சேர்த்து விட்டான் ஆதூர். காலையில் இருந்து மாலை வரை வகுப்பிலேயே கழிந்து விட, வார இறுதிகளில் யாராவது அவளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அப்படி இல்லாத தருணங்களில் விதம் விதமாய் தனக்கும் லீக்குமான சில அற்புத நிகழ்வுகளை ஓவியமாய் வடிப்பதில் ஆழ்ந்து விடுவாள்.

 

திருமண நாளும் வந்தது. அன்று ஷானவிக்கு எங்கும் செல்ல மனமில்லாமல் இருக்கவே வீட்டிலேயே தங்கியிருந்தாள். அவள் வரைந்த அவர்கள் கல்யாணக் கோல ஓவியத்தை எடுத்து வைத்துக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தவளை புதிய இலக்கம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பு சுய உணர்வுக்கு கொண்டு வந்தது. வேறு நாட்டு இலக்கமாக இருக்கவே யோசனையோடு கைப்பேசியைக் காதில் வைத்தாள்.

 

“ஹலோ ஷானு….!”

 

“லீ…..!”

 

அவன் ஒற்றை அழைப்பிலேயே அடையாளம் கண்டு கொண்டவள், ஏறக்குறைய கத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

“எப்பிடியிருக்கிறாய் லீ? ஏன்டா என்னை விட்டிட்டுப் போனாய்? ஏன் இவ்வளவு நாளாய் எனக்குக் ஹோல் கூடப் பண்ணல. நான் எவ்வளவு தவிச்சுப் போனன் தெரியுமா?”

 

படபடவெனப் பொரிந்தவளை அமைதிப்படுத்த அவன் படாதபாடு பட வேண்டியிருந்தது.

 

“ஷானு…! கொஞ்சம் பொறுமையாக நான் சொல்லுறதைக் கேள். ஷானு… சில்துப்ளே…”

 

அவன் கொஞ்சம் அதட்டலாகக் கூறவும் தான் இவள் அவன் பேசுவதையேக் காது கொடுத்துக் கேட்கலானாள்.

 

“என்னை மன்னிச்சிடு ஷானு… எனக்கு வேற ஒரு பொண்ணோட என்கேஜ்மென்ட் முடிஞ்சுது. நீ எனக்காகக் காத்திருக்காமல் உனக்குப் பிடிச்ச ஆளாகப் பார்த்துக் கல்யணாம் பண்ணிக் கொள். உந்த வீட்டை என் கல்யாணப் பரிசாக வைச்சுக் கொள்.”

 

“நோ….. நான் நம்ப மாட்டேன்… நீ சும்மா என்னோட விளையாடிறாய்…”

 

நம்ப முடியாமல்க் கதறினாள்.

 

“உன் மெயிலுக்கு போட்டோ அனுப்பிறன் பாரு. ஒவ்வா.”

 

கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான். தனது மின்னஞ்சலுக்கு வந்த புகைப்படங்களை நம்ப முடியாமல்ப் பார்த்தாள் ஷானவி. லீ இன்னொரு பெண்ணுக்கு மோதிரம் அணிவிப்பதும், அந்தப் பெண்ணை முத்தமிடுவதும் போன்ற காட்சி அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. எத்தனைத் தரம் பார்த்தாலும் அதே காட்சித்தானே.

 

கண்ணீரிலேயே நாட்களைக் கழித்தவள் யாரோடும் இந்த விடயத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தனக்குள்ளேயே மருகி மருகி வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு ஆளாகியிருந்தாள். வீட்டிலும் சரி, வெளியேயும் சரி ஒவ்வொரு அணுவுமே லீயைத்தான் நினைவுப்படுத்தியது. லீ இவளை விட்டுப் பிரிந்து இரு மாதங்களுக்கு மேலாகியிருந்தது.

 

அவன் இன்னொருத்திக்குச் சொந்தமாகப் போவதை அறிந்தும் அவன் நினைவும் அவன் மீது கொண்ட காதலும் சற்றும் குறைவதாய் இல்லை. அப்போதுதான் அவளுக்கு அந்த கல்யாண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. ஆம்! லீயின் திருமண அழைப்பிதழ் தான். அதையேப் பார்த்து நான்கு நாட்கள் கண்ணீரில்க் காலத்தைக் கடத்தியவள், ஏதோ எண்ணம் வந்தவளாய் தென்கொரியாத் தூதரகத்துக்குச் சென்று அந்தத் திருமண அழைப்பிதழைக் காட்டி விஸாவுக்கு விண்ணப்பித்து விட்டு வந்தாள்.

 

இரண்டு கிழமைகளில் விஸாவும் வந்து விட பயணமாவதற்கு முதல்த்தான் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி விட்டு சியோல் செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்தாள். மற்றவர்கள் தனியாகப் போக வேண்டாம், தாங்கள் யாராவது கூட வருகிறோம் என்று சொன்னதைப் பொருட்ப்படுத்தாமல்த் தன் காதலைத் தேடிப் பயணமானாள் இந்தக் காதல் பைத்தியக்காரி.

 

ஏதோ ஒரு அசட்டுத் துணிவில் விமானத்தில் ஏறியமர்ந்து விட்டாலும் இப்போது இதயம் படபடத்தது. பாதி வழியில் இறங்கி ஓடி விடலாம் என்று தோன்றியது. இது என்ன நம்ம ஊர் பஸ்ஸா? பெற்றோல் போடும் போது இறங்கிச் சென்று விடுவதற்கு. மனம் பல விதமான உணர்ச்சிக் கலவையில்க் குழம்பித் தவிக்க மனதைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டாள்.

 

ஏதாவது படம் பார்ப்போம் என்று எண்ணி இருக்கையின் முன்னாலிருந்தத் திரையைத் தட்டியவள் கண்களில் கொரியன் படங்கள் கண்ணில்ப் பட பட்டியலில் முதலிலிருந்த ஒரு படத்தைப் போட்டு விட்டு இருக்கையைப் பின்னே சரித்து நன்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு படம் பார்க்க ஆயத்தமானாள்.

 

அப்போது திரையில்த் தோன்றிய உருவத்தைப் பார்த்தவள் அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

 

“அடப்பாவி ரோபோ… நீ ஆக்டரா…”

 

வியந்துப் பார்த்தவள், கண்கள் முழுவதும் அவனை நிரப்பிப் படத்தில் ஆழ்ந்தாள். அதிலிருந்த அத்தனை லீயின் படங்களையும் பயண நேரம் முழவதும் ஒரே மூச்சில்ப் பார்த்து முடித்தாள்.

 

லீ யூ வோன் நடிகன் என்று தெரிந்ததும் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால் இன்னொரு புறம் ஏமாற்றம் மனதைக் கவ்வியது. லீ பணக்காரனாக இருப்பான் என்றுதான் எதிர்பார்த்தாளே தவிர அவனின் இந்த முகம் அவள் எதிர்பாராத ஒன்று.

 

விமானம் தரையிறங்கியதும் ஒருவாறு தன்னைச் சமனப்படுத்திக் கொண்டு, மற்றைய பயணிகளோடு சேர்ந்து இமிகிரேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அப்போது ஆங்காங்கே விளம்பரத்துக்கு வைத்த திரைகளில் லீ கிட்டாரோடு நிற்கும் படம் தோன்றவே மறுபடியும் அதிர்ந்து போய் நின்று விட்டாள்.

 

ஒரு விளம்பரத்தின் அருகில்ச் சென்று வாசித்துப் பார்த்தாள். கொரியன் எழுத்துக்களுக்குக் கீழே ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது. சியோல் நகரில் பெரிய அரங்கு ஒன்றில் அவனது ரசிகர்கள் மத்தியில் நாளை இரவு அவனது புதுப்பாடல் ஒன்று வெளியிடப்பட இருப்பதாகத் தெரிவித்தது. அந்த விளம்பரத்தை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு இமிக்கிரேசனை நோக்கி நடந்தவளுக்கோ மனம் பெருமிதத்தில் பொங்கியது.

 

‘என் லீ ஆக்டர், சிங்கர், அதோட மியூசிக் டைரக்டர் வேற… உனக்குள்ள இவ்வளவு திறமையா? அது தெரியாமல் நான் என்னவெல்லாம் சொல்லி உன்னைத் திட்டிப் போட்டன் மை டியர்  மேக்கப் மன்னா..’

 

தனக்குள்ளேயே பேசிக்கொண்டு இமிக்கிரேசன் கவுண்டரை அடைந்தாள்.

 

மொழி புரியாத புது நாட்டில், தனியாக என்ன செய்யப் போகிறாள் இந்தக் காதல் பிசாசு? இவளைக் கண்டதும் லீ மனம் மாறுவானா?Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: