Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 20

அத்தியாயம் – 20

 

அனுஷராவும் மைக்கேலும்தான் வந்திருந்தார்கள். நீண்ட நாட்களின் பின்னர் தோழிகள் சந்திக்கும் போது மகிழ்ச்சிக்குக் குறைவேது? அனுஷராவும் ஷானவியும் கட்டித் தழுவிக் கொள்ள, லீ மைக்கேலை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான். நால்வருமாய் வடையையும் தேநீரையும் சுவைத்தவாறே இதுநாள்வரை நடந்த விடயங்கள் பற்றிப் பேசிக்கொண்டார்கள்.

 

கல்யாணப் பட்டுச் சேலைகளைத் தெரிவு செய்து விட்டு எங்காவது வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்து, அருகிலிருந்த பஸ்டிலுக்குச் சென்றார்கள். பஸ்டிலுக்கு கேபிள் காரில்த்தான் செல்ல வேண்டும். ஆரம்ப நாட்களில் லீயோடு அங்கு செல்லும் போது ஷானவி கண்களை இறுக மூடிக் கொள்வாள். கண்ணாடிக் கூண்டாலான கேபிள் காரிலிருந்து கீழே பார்த்தால் ஓடிக் கொண்டிருக்கும் ஆறும், மலையும், நகரமும் அழகான காட்சிதான். ஆனால் இவளுக்கோ பயத்தில்த் தலை சுற்றும்.

 

அடிக்கடி சென்று இப்போது கொஞ்சம் பழகிவிட்டிருந்தது. கண்களை மூடாமல்க் காட்சிகளை ரசிக்கக் கற்றிருந்தாள். இருந்தாலும் மலையுச்சிக்குச் சென்று இறங்கும் வரை லீயின் கையை இறுகப் பற்றியிருப்பாள்.

 

இப்போதும் மலையுச்சியை அடைந்து அங்கிருந்த உணவகத்தில் ஒரு வைனோடு லீயும் மைக்கேலும் பேசிக்கொண்டிருக்க, ஷானவியும் அனுஷராவும் மேற்பரப்புக்குச் சென்று அங்கிருந்து கிரினோபிள் முழு நகரத்தையும் பார்க்கும் வண்ணம் நின்றபடி பேச ஆரம்பித்தார்கள்.

 

“ஷானு…! நீ லீயோடு வசிப்பதையும் திருமணம் வரை முடிவாகி விட்டதையும் என்னால இன்னமும் நம்ப முடியலைடி…”

 

“ஹா…ஹா…! என்னாலயும்தான் அனு…”

 

“உண்மையைச் சொல்லு ஷானு… நீ உண்மையாகவே லீயைக் காதலிக்கிறாயா?”

 

“காதல் மட்டும் இல்லை என்றால் எப்பிடி கல்யாணத்திற்கு சம்மதித்திருப்பேன்? எப்பிடி அவன் கூட வந்திருப்பேன்?”

 

“அவன் கே என்று தெரிஞ்சும் எப்பிடிடி?”

 

“ஹூம்…! அது தெரியலை அனு… நான் சின்ன வயசில ரொம்பத் துறுதுறுன்னு இருப்பேன். அப்புறம் அம்மா, அப்பா எல்லோரும் மேல போன பிறகு அப்பிடியே அடங்கிட்டன். இங்க வந்த பிறகு ஒவ்வொரு நாளும் மாமியோட வாழ்க்கை நரகம் தான். மாமிக்கு எங்க நான் அஸ்வினோடயே வாழ ஆரம்பிச்சிடுவனோ என்ற பயம். அவவைப் பிழை சொல்லியும் என்ன செய்யிற? அவட இடத்தில இருந்து பார்த்தால் அவட பக்கமும் நியாயம்தான்…

 

நான் இத்தனை வருசங்களுக்குப் பிறகு நான் நானாகவே இருக்க ஆரம்பிச்சது, உன்னை லீயைச் சந்திச்ச பிறகு தான். அதுவும் லீயோடு சண்டை போடும் போதுக் கேட்கவே வேணாம். ஏதோ புதுசாப் பிறந்த உணர்வு. பத்து வயசு குறைஞ்ச போல. அவன்ட கண்டிப்பும் சரி, அன்பும் சரி அம்மா,அப்பா, அண்ணா எல்லாம் இருந்திருந்தால் என்னை இப்பிடித்தானே பார்த்திருப்பினம் என்று தோண ஆரம்பிடுச்சு. மாமா வீட்டில ஒட்டாமலே இருந்த எனக்கு லீயை என் குடும்பமாகப் பார்க்க வைச்சிட்டு. உண்மையா லீ வீட்டில வந்த நாளில இருந்து நான் வேற ஒரு வீட்டில இருக்கிற போலவே ஃபீல் பண்ணலத் தெரியுமா? என்ர வீடு என்ற உணர்வுதான் எனக்கு.”

 

“ஹூம்… அதெல்லாம் சரி ஷானு… ஆனால் கல்யாணம் சின்ன விசயம் இல்லையே… அதில போய் விளையாடலாமா?”

 

“விளையாடுற என்று யார் சொன்னது? உனக்கு ஒரு விசயம் சொல்லவா அனு. லீயோடு தனியா வாறது என்றது அந்த நிமிசத்தில நான் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு தான். ஆனால் எப்ப மாமாவே என்னை சந்தோசமாகவே லீயோட அனுப்பி வைச்சாரோ அப்பவே என் முடிவில ரொம்ப உறுதியாக இருக்கிறேன். ஏன்னா எனக்கு மாமாவில அவ்வளவு நம்பிக்கை இருக்கு.

 

இந்த பத்து வருசமாக என்னைச் சொந்தப் பிள்ளைக்கு மேலால பாசமாகப் பார்த்துக் கொள்ளுறார். எனக்கு வேணும் என்றால் லீயிட ஃபாக்ரவுண்ட் எதுவும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மாமா லீயைப் பற்றி எதுவும் தெரியாமல்க் கடைசி வரை என்னை இப்படி அனுப்பியிருக்க மாட்டார். நான் லீயை உயிருக்குயிராக நேசிக்கிறது புரிஞ்ச படியால்த்தான் இப்படி வேற்றுநாட்டுக்காரன் என்றதையும் யோசிக்காமல் கல்யாணம் வரை முடிவு செய்திருக்கார்…”

 

“அதெல்லாம் சரி ஷானு… ஆனா லீ பற்றித் தெரியாமல் எப்பிடி உன்னால இயல்பாக வாழ முடியுது? உனக்கு அவன் கடந்த காலமும் தெரியாது. எதிர்காலத்தில வாழ்க்கை எப்பிடி இருக்கப் போகுது என்றும் தெரியாது. அப்பிடியிருக்க எப்பிடி உன்னால இவ்வளவு ஈஸியாக லைபை எடுத்துக்க முடியுது?”

 

“மற்றவங்களிட வார்த்தைக்கு முக்கியம் குடாமல் எங்கட சந்தோசத்துக்காக நிகழ்காலத்தை வாழ்ந்திட்டுப் போகணும் என்று நீதானே அனு சொல்லுவாய். இப்ப நீயே இப்பிடிக் கேட்கிறியே…”

 

“என் கதை வேற ஷானு… உன் விசயம் வேற… வாழ்க்கை ஒரு தடவை தான். அதோட விளையாடாதை…”

 

“அம்மா சாகப் போறா என்று முதல் செக்கன் வரை எனக்குத் தெரியாது. அதுதான் வாழ்க்கை. எனக்கு பழசு, நடக்கப் போறதையெல்லாம் நினைச்சு வாழ்க்கையை அழிச்சுக்க விருப்பம் இல்லை. இந்த நிமிசம் நான் லீயோட ரொம்ப சந்தோசமாக இருக்கிறன். எனக்கு அது போதும் அனு…”

 

இவளோடு பேசி வேலைக்காகாது என்று புரிந்த அனுஷரா தனது முயற்சியைக் கைவிட்டாள். நேரம் இரவு ஏழு மணி தாண்டியிருக்க இரவின் இருளில், ஒளி வெள்ளத்தில் மிதந்த நகரின் அழகை ரசித்தவர்கள், மறுபடியும் கேபிள் கார் மூலம் பஸ்டிலை விட்டுக் கீழிறங்கி சென்டர் வீலை (நகரின் மையம்) அடைந்தனர்.

 

மைக்கேல் இந்தியன் உணவு உண்ண ஆசைப்படவே நால்வருமாய் வட இந்திய உணவகமான நமஸ்தேக்குச் சென்று இரவுணவை முடித்துக் கொண்டு தத்தமது வீடு திரும்பினார்கள்.

 

லீ வரவேற்பறையில்ச் சென்றமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். Intouchables (தோழா படம் இதன் ரீமேக்) பிரெஞ்ச்சுத் திரைப்படத்தைப் போட்டவன் அதில் ஆழ்ந்து போனான். படம் முடிந்ததும்தான் ஷானவி அந்தப் பக்கமே வராதது புத்தியில் உறைக்க அவள் அறைக்குச் சென்று பார்த்தான். வழக்கமாக இருவரும் சேர்ந்து தான் படம் பார்ப்பார்கள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் இவனையும் பார்க்க விடாது ஏதாவது குழப்பம் பண்ணி வைப்பாள். அப்படியிருக்க இவ்வளவு நேரமாக என்ன செய்கிறாள் என்று எண்ணியபடி சென்றுப் பார்த்தவனுக்கு அவள் கட்டிலில்ப் படுத்திருந்து விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது பேரதிர்ச்சி.

 

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவன், ஓடிச்சென்று அவளை எழுப்பி இருத்தினான். நெஞ்சையே பிசையுமாறு அவள் அழுதது அவன் கண்களிலும் நீர் வழிய வைக்க அவள் கண்களைத் துடைத்து அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டவன், அவள் தலையையும் முதுகையும் ஆதூரமாய்த் தடவிக் கொடுத்தான். அவன் அணைப்பிலே விசும்பல் ஒரு கட்டுக்கு வந்திருந்தாலும் இன்னும் விசித்துக் கொண்டுதானிருந்தாள்.

 

அவளை விலத்தி அமர்த்தியவன் சூடாய்ப் பாலைக் கொண்டு வந்து குடிக்க வைத்தான். அவளுக்கும் அப்போது அது தேவைப்படவே, மறுபேச்சின்றி வாங்கிக் குடித்து விட்டு மேசை மீதுக் கோப்பையை வைத்தாள். லீ கோப்பையை சமையலறையில் வைப்பதற்குச் செல்ல எழ, அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தாள் இவள்.

 

“கொஞ்ச நேரம் என்னோட இரு லீ…”

 

சிறுகுரலில் அவள் கேட்கவும் மறுபடியும் கோப்பையை அருகிலிருந்த மேசையில் வைத்து விட்டுக் கட்டிலில்ச் சாய்ந்து அமர்ந்தான். இவளோ அவன் தோள்களில்த் தலை சாய்த்து அவன் கைகளைத் தனது கைகளோடுப் பிணைத்துக் கொண்டாள்.

 

“லீ…”

 

“ம்…”

 

“இன்றைக்குத்தான் அம்மாவை செத்த டேட்…”

 

அவள் சொல்லவும் அவள் வலி புரிந்தவனாய் அவள் தலையைத் தடவினான்.

 

“பத்து வருசம் ஆச்சு இப்ப. அப்ப எனக்குப் பதினைஞ்சு வயசு தான். வன்னிக்க யுத்த நேரம். ஒவ்வொரு இடமாக ஓடிட்டு இருந்தம். ஒருநாள் நான் என்ர ப்ரெண்டோட இருக்கப் போறன் என்றுப் பக்கத்து வீட்டு பங்கருக்க (பதுங்கு குழி)போயிருந்தன். மல்டிபரல் ஒன்று அடிச்ச அடில அம்மாவை இருந்த பங்கர் அப்பிடியே காலி. அவசரத்தில வெட்டின தானே. ஆழமாக வெட்டவும் இல்லை. அம்மா, அப்பா, அண்ணா, தம்பி எல்லாரும் என்ர கண்ணுக்கு முன்னால ஒரேயடியா….

 

அவங்க உடம்பைக் கூடப் பார்க்க முடியாமல் அப்பிடியே பங்கருக்கப் போட்டு மூடிட்டு, என்ர ப்ரெண்ட் பமிலி என்னையும் தங்களோடக் கூட்டிட்டுப் போச்சினம். சண்டை முடிய யாழ்ப்பாணத்தில அம்மம்மாவோட இருந்து படிச்சு கம்பஸும் முடிச்சன். அப்பத்தான் அம்மம்மாவும் ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல மேல போய்ட்டா.

 

மாமிக்குப் பயந்து மாமா அவ்வளவு நாளும் என்னை பிரான்ஸ்க்குக் கூப்பிட யோசிக்கலை. ஆனா அம்மம்மாவும் செத்து முடிய என்னை அங்க தனிய விட முடியாமல் செத்த வீட்டுக்கு வந்திருந்த நேரமே அஸ்வினோட எனக்கு ரிஜிஸ்டர் மரேஜ் செய்து வைச்ச இங்க கூப்பிட்டார். நாட்டில இப்ப யுத்தம் எல்லாம் முடிஞ்சபடியால அதைக் காட்டியும் விசா எடுக்கேலாது என்றிட்டுத்தான் சுகமாகக் கூப்பிடலாம் என்று இப்பிடிச் செய்தார்.

 

அநாதையாக நின்ற என்னைப் பார்த்து மாமிக்கும் ஏதோ மனமிரங்கி அந்த நேரம் அவவும் ஒத்துக் கொண்டிட்டா. நான் இங்க வந்து வீட்டு வேலை எல்லாம் செய்ய முதல்ல என்னோட நல்ல மாதிரித்தான் இருந்தவ. பிறகு அஸ்வினுக்கு என்னில விருப்பம் என்று தெரியவும்தான் என்னை ரொம்பத் திட்ட ஆரம்பச்சா. அவக்கு அவட ஒன்றுவிட்ட அண்ணாட மகளை அஸ்வினுக்குக் கல்யாணம் செய்து வைக்க விருப்பம்.

 

ஒருத்தரைப் பிடிக்காமல்ப் போனால்க் குற்றம் சொல்லுறது என்ன பெரிய விஷயமா? நின்றா குற்றம், இருந்தாக் குற்றம் என்று வீடே நரகமாச்சு. அப்பத்தான் பிரெஞ்ச் வகுப்பில உன்னைப் பார்த்துச் சண்டை போட ஆரம்பிச்சன். நான் நானாக இருக்கத் தொடங்கினன். இப்பிடியே வாழ்ந்து முடிக்கணும் என்று சுயநலமாக ஆசைப்பட்டுத்தான் இப்போ இங்க வந்து உன்ர உயிரை எடுத்திட்டு இருக்கிறன்.”

 

அழுகையோடுத் தன் கடந்த காலத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் ஷானவி. அவள் இலகுவாகச் சொல்லி விட்டாலும் இந்தப் பத்து வருடங்களில் அவள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பாள் என்பதுப் புரிய இவன் கண்கள் அருவியாய் ஊற்றெடுத்தது. துள்ளித் திரிய வேண்டியக் காலத்தில் இரத்தச் சொந்தம் அனைத்தையும் இழப்பது என்பது லேசுப்பட்ட விடயமா என்ன? இப்படியொரு சூழ்நிலையில் ஒரு பொம்மைக் கல்யாணம் நடந்திருப்பது தெரியாமல் அதை இவள் மறைத்து விட்டாள் என்று வேறு இத்தனை நாட்களாய்க் கோப முகம் காட்டிக் கொண்டிருந்தோமே என்று அவன் மீதே இப்போது எரிச்சல் மண்டியது.

 

தனது கைகளில்ச் சூடாய்ப் பட்டுத் தெறித்தக் கண்ணீர்த் துளிகளை உணர்ந்து இவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஷானவி. அவன் அழுவதைக் கண்டவள்,

 

“லூசாடா நீ…! என்னை ஆறுதல்ப் படுத்த வேண்டிய நீயே இப்பிடியிருந்து அழுது கொண்டிருக்கிறியே… பேபே (bébé) போல அழுறதை முதல்ல நிப்பாட்டு”

 

கூறியவள் அவன் விழிநீரைத் துடைக்கவும், அவள் கைகைளைத் தன் கைகளில் ஏந்தியவன்,

 

“டிசோலே (ஸாரி) ஷானு… உன் கடந்த காலம் தெரியாமல் நான் வேற உன்னை ரொம்பக் கஸ்டப் படுத்திட்டன். எனக்கு நீ டைவோர்ஸி என்றதெல்லாம் பிரச்சினை இல்லை. அதை நீ என்னட்டச் சொல்லாமல் மறைச்சிட்டாய் என்றதுதான் கோபம். ஆனா இப்பிடியொரு ரீசனுக்காய் கல்யாணம் என்று நான் நினைக்கவே இல்லை. இத்தனை நாளாய் உன்னோட கோபப்பட்டுக் கொண்டே இருந்ததுக்கு மன்னிச்சிடு ஷானு.”

 

“சும்மா போடா… உனக்கு இந்த மூஞ்சி செட் ஆகேல்ல. எனக்கு உன்ர கோப மூஞ்சிதான் ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே உன்னைக் கடுப்பாக்க வீட்டை அழுக்காக்கி ஏதாவது செய்து வைப்பன்.”

 

“அடிப்பாவி… உன்னை…”

 

என்றவன் வீட்டு லான்ட் லைன் விடாது அடிக்கவும் எழுந்து சென்று தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான். அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, கொஞ்சம் கொஞ்சமாக இவன் முகம் மாறத் தொடங்கியது. வெறும் உம் கொட்டியே பேச்சை முடித்தவன், இவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த ஷானவியிடம் திரும்பி,

 

“ஷானு…! நீ ரொம்ப டயர்டாக இருப்பாய்… போய்த் தூங்கு…”

 

“யார் ஃபோன்ல? என்னாச்சு லீ? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதும் பிரச்சினையா?”

 

“அது என் ப்ரெண்ட் தான். நீ எதுவும் யோசிக்காமல் கனவில விஜய்தேவரகொண்டாவோட டூயட் பாடுற வேலையைப் பார். ஃபொன் நுயி. (குட் நைட்)”

 

“ஹி ஹி ஹி… ஆனா இப்ப எல்லாம் கனவில அவனுக்குப் பதில் நீதான் வாறாய் டப்பாத் தலையா… ஃபொன் நுயி…”

 

என்று சிரித்துக்கொண்டே கூறி விட்டு ஓடிச்சென்று தனது அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி விட்டுக் கட்டிலில் வீழ்ந்தாள். இங்கே லீயோ தலையில்க் கையை வைத்துக் கொண்டு இடிந்து போய் அமர்ந்து விட்டான். அடுத்து என்ன செய்வது என்று புரியாதவனாய் சில மணித்துளிகள் சிந்தனையில் ஆழ்ந்தவன், தனது அறைக்குச் சென்று ஒரு சிறு தோள்ப்பையில் சில பைல்களையும் வேறு சில அத்தியாவசியப் பொருட்களையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு வெளியே செல்லத் தாயாரானான்.

 

இவனது அறையிலிருந்து ஷானவியின் அறைக்கு ஒரு பாதை இருந்தது. அதை ஒரு அலுமாரி மூலம் மறைத்து வைத்திருந்தான். இப்போதும் அதன் மூலம் அவள் அறைக்குச் சென்றவன், இரவு விளக்கின் வெளிச்சத்தில்த் தூங்கிக் கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நிச்சலமாய் உறங்கிக் கொண்டிருந்தவளின் முன் நெற்றியில் எச்சில்ப் படாமல் முத்தமிட்டவன் மனதோ பாரமாய்க் கனத்தது.

 

‘என்னை மன்னிச்சிடு ஷானு… நான் இந்தளவு விரைவில் உன்னைப் பிரிந்து போக வேண்டி வரும் என்று எதிர்பார்க்கல. நம் காதல் உண்மையானது என்றால் அது நம்மைச் சேர்த்து வைக்கும் என்று நினைச்சு இப்போ உன்னை இப்பிடித் தனியாக விட்டிட்டுப் போறன். ஷரங்கே ஷானு…”

 

கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவன் ஒரு டாக்ஸியை அழைத்து ஒன்றரை மணி நேரத் தூரத்திலிருந்த லியோன் சர்வதேச விமான நிலையத்திற்குப் போகச் சொன்னான். அடுத்ததாக டோக்கியோ புறப்பட இருந்த ஒரு விமானத்தில் அவசரமாக விமானச் சீட்டைப் பெற்று விமானத்தில் ஏறியமர்ந்தான்.

 

நடந்த எதையுமே அறியாத ஷானவியோ கனவிலே லீயோடு டூயட் பாடிக் கொண்டு சந்தோசமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: