Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 25 END

அத்தியாயம் – 25

 

அன்றைய தினம் காலை அழகாகவே விடிந்தது. மாலையில் திருமணம் லீ யூ வோனின் வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தனக்கு வேண்டியவர்கள், நெருங்கியவர்கள் என்று ஒரு ஐம்பது பேருக்குள்தான் அழைப்பு விடுத்திருந்தான்.

 

காலையிலேயே பணியாளர்கள் வரவேற்பறையையும் தோட்டத்தையும் அலங்காரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். யூ வூனுடன் சேர்ந்து அவற்றை மேற்பார்வையிட்ட லீக்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்காமலில்லை, ஷானவி என்ன செய்யப் போகிறாளோ என்று. ஆனால் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை எனவும் கொஞ்சம் தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

 

மதியமும் ஷானவி தனது அறைக்கே உணவை வரவழைத்து உண்டாள். சந்திராவும் அனுஷராவும் அவள் கூடவே இருந்தனர். லீ மெதுவாய் அனுஷராவிடம் பேச்சுக் கொடுத்து ஷானவியின் மனநிலையை அறிந்து கொள்ள முயன்றான். பலன் என்னவோ பூச்சியம் தான். அனுஷரா, ஷானவி மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் சொன்னாள்.

 

லீக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஷானவி மற்றவர்களிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொள்ளவில்லை, தன்னைத் தனியாகத்தான் கவனிக்கப் போகிறாள் என்பது. தனிமையில் தானே, அவள் காலில் விழுந்தாவது அவள் கோபத்தைச் சமாளித்து விடலாம் என்று எண்ணியவனாய், சந்தோசமாகக் கல்யாண வேலைகளைக் கவனிக்கலானான்.

 

மதியம் தாண்டவே மூன்று பெண்கள் வந்து ஷானவிக்கு வெண்ணிற திருமண ஆடையை அணிவித்து உரிய தலை அலங்காரம், முக ஒப்பனை செய்ய ஆரம்பித்தனர். லீக்கும் அங்கே பிரத்யேகமாக அலங்காரம் நடந்தது.

 

அழகாகப் பூக்களால் அலங்கரிப்பட்டிருந்த மணமேடையில் மணமக்கள் ஏறி நின்று விருந்தினர் முன்னிலையில் மோதிரம் மாற்றித் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர். வந்தவர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்க லீயோடு சேர்ந்து ஷானவியும் மென்னகை முகமாக மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டாள்.

 

எல்லோரும் பேசிச் சிரித்து சந்தோசமாக இரவுணவை முடித்தனர். விருந்தினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்று முடிய வீட்டினர்கள் மட்டும்தான் எஞ்சியிருந்தனர். எல்லோர் முகத்திலும் சந்தோசக் களைப்பு. அப்போது லீ,

 

“உங்க எல்லோருக்கும் நம்ம ஊரைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறேன். யூ வூன் உங்களோட வருவான்.”

 

அப்போது இடையில் குறுக்கிட்ட திருநாவுக்கரசு,

 

“லீ…! இன்னும் ஒரு வாரத்தில நீங்க சொன்னபடி லியோன் செல்வப்பிள்ளையார் கோயில்ல எங்கட முறைப்படி திருமணத்திற்கு ஒழுங்கு செய்து இருக்கிறேன்.”

 

“அடுத்த ஞாயிற்றுக்கிழமை தானே மாமா. நீங்க வெள்ளியே பிரான்ஸ்க்குத் திரும்பிடலாம். நாங்களும் சனிக்கிழமை அங்க வந்திடுவம். அதுவரை சந்தோசமாக இங்க சுத்திப் பாருங்கோ. நானும் ஷானுவும் வேற ஒரு இடத்துக்குப் போகலாம் என்று இருக்கிறம்.”

 

“ஹனிமூனுக்கு எங்க போற ஐடியா?”

 

யூ வூன் கேட்கவும், லீ சிரித்துக் கொண்டே மறுப்பாய்த் தலையசைத்தான்.

 

“அது சீக்கிரெட். உங்களையெல்லாம் சனிக்கிழமை பிரான்ஸ்ல சந்திக்கிறம். எங்களுக்கு மோர்னிங் பிளைட். அது வரைக்கும் ஃபாய். குட் நைட்.”

 

கூறி விட்டு எழுந்து தனது அறையை நோக்கிச் சென்றான். அவனைத் தொடர்ந்து ஷானவியும் அனுஷராவும் ஷானவியின் அறையை அடைந்தார்கள். ஷானவியின் ஆடையைக் களையவும், தலையலங்காரத்தை கலைக்கவும் அனுஷரா உதவி செய்ய, அது முடித்ததும் ஷானவி ஒரு குளியலைப் போட்டு விட்டு வந்தாள்.

 

அவளுக்காகவே காத்திருந்த அனுஷரா,

 

“சந்தோசமாக இரு ஷானு… இனி உன் லைப்ல நீ எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது. சரி… லீட ரூமுக்குப் போ… அவன் ரொம்ப நேரமாக வெய்ட் பண்ணிட்டு இருக்கிறான்.”

 

“தாங்ஸ் அனு…”

 

கூறியவள் எதுவும் பேசாது அடுத்திருந்த லீயின் அறையை அடைந்தாள். ஆனால் மனதிலோ பெரும் குழப்பம்.

 

‘மற்றவர்களுக்குத்தான் லீ கே என்பது தெரியாது. ஆனால் அனுவுக்குத் தெரியுமே. அப்புறமும் எப்பிடி இவள் சாதாரணமாக விஸ் பண்ணி அனுப்புறாள். விட்டால்த் தமிழ்ப்படங்கள்ல காட்டுறது போல கையில பால்ச்செம்பைத் தந்து அனுப்பிடுவாள் போல இருக்கே.’

 

இவள் தட்ட முதலே கதவு திறந்து கொண்டது. சிந்தனை வயப்பட்டவளாய் வந்தவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் லீ. காலையில் இருந்து அவனோடு அவள் ஒரு வார்த்தை இது வரை பேசவில்லை. அவள் கோபம் ரொம்பப் பெரியது என்று புரிந்தவனாய் இவனும் எதுவும் பேசாது இருந்தான். ஏதாவது பேசப் போய் அவள் எல்லோர் முன்னிலையிலும் கத்திக்கித்தி விட்டால் ஏன் அந்த வேண்டாத வேலை என்று தான் பேசாதிருந்தான்.

 

ஆனால் இப்போது இருவருமாய் இருந்த இந்தத் தனிமையில் அவள் அமைதி இவனைக் கொல்லாமல்க் கொன்றது. அவளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் யோசித்தவனாய் வாயைத் திறந்தான்.

 

“ஷானு…! நாம ஹனிமூனுக்கு எங்க போறம் என்று தெரிய வேணாமா?”

 

அவனை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்து விட்டுக் கைநகங்களில் இருந்த நகப்பூச்சை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அவள் மௌனம் கலைக்கப் போவதில்லை என்றுப் புரிந்தவனாய் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்,

 

“நான் செய்தது பிழை தான் ஷானு. உன்னைச் சோதிச்சுப் பார்த்திருக்கக் கூடாது. அதுக்காகவெல்லாம் இப்பிடி என்னோடக் கதைக்காமல் இருக்காதை சில்துப்ளே.”

 

அதற்கும் அவனை ஒரு வெட்டும் பார்வைப் பார்த்து விட்டு தன் நகங்களை ஆராயும் தீவிரப் பணியில் ஈடுபட்டாள் ஷானவி. அவளாய் மனம் மாறும் வரைத் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிந்தவனாய்,

 

“நீ அத்தியாவசியமான திங்ஸ் மட்டும் ஒரு ஹான்ட் லக்கேஜ்ல எடுத்து வைச்சால் போதும். மோர்னிங் செவினுக்கு பிளைட். வீட்ட இருந்து பைவ்வுக்குப் போகணும். ஸோ நீ போய் பக் பண்ணிட்டுத் தூங்கு.”

 

எதுவும் பேசாமல் எழுந்து சென்றவளையே சோகமாகப் பார்த்திருந்தான். அவள் அடிப்பாள், குத்துவாள், கத்திச் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு இந்த மௌன யுத்தம் எதிர் பாராத ஒன்று. அதே நேரம் மனம் வலிக்கச் செய்தது. ஹனிமூன் போகும் இடத்தில் காலில் விழுந்தாவது அவளைப் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியவனாய், நான்கு மணிக்கு அலாரம் வைத்து விட்டுத் தூங்க ஆயத்தமானான்.

 

காலையில் விமான நிலையத்திற்குச் சென்று விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னும் ஷானவி பேசவில்லை. இரவும் போதிய தூக்கம் இல்லாதது சிறிது நேரம் தூங்கினாள். பின்னர் எழுந்து லீயின் படம் ஒன்றைப் போட்டு விட்டுப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

லீக்கோ இதயம் எம்பி வெளியே குதித்து விடும் போல பக்குப்பக்கென்று அடித்துக் கொண்டது. காரணம் அது முத்தக் காட்சிகள் நிறைந்த காதல்ப்படம்.

 

“ஷானு…! இந்தப் படம் பெருசா நல்லம் இல்லை. நீ வேற ஏதும் பாரன்.”

 

இதை அவன் சொல்லாமல் இருந்திருந்தால் சில நேரம் அவள் வேறு படம் பார்த்திருக்கக் கூடும். அவள் அந்தப் படத்தைப் போட எத்தனிக்கும் போதே இவன் அவசரமாத் தடுக்கவும் அவள் அதையே பார்க்க ஆரம்பித்தாள்.

 

லீக்கோ எந்த வேலையும் ஓடவில்லை. அவஸ்தையின் உச்சியில் இருந்தான். ஒவ்வொரு முறையும் முத்தக்காட்சி வரவும் ஷானவி இவனைத் தீப் பார்வைப் பார்ப்பாள். அவனோ அசடு வழியச் சிரிப்பான். படம் முடிவடையும் தறுவாயில் படுக்கையறைக் காட்சி வரவே இவள் அதைக் காணச் சகிக்காமல் படத்தை நிறுத்தினாள்.

 

அவள் முகமோ செந்தழும்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. அவளின் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைப் பொறுக்க முடியாதவன்,

 

“ஷானு…!”

 

என்று காதலால் கசிந்துருகி அழைத்தான். அவன் நேசக் குரல் தந்த கிறக்கத்தில், ஒரு நொடி தனதுக் கோபத்தை மறந்து அவன் பக்கம் திரும்பியவளின் வதனத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான். இனியும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று எண்ணியவனாய், அவள் இதழ்களில் கவி வடிக்க ஆரம்பித்தான்.

 

இதனைச் சற்றும் எதிர்பாராத ஷானவியோ, முதலில்த் திணறி மறுத்து விட்டுப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவன் வசமானாள். அதன் பின்னரும் இருவரிடையேயும் மௌனம் தான் ஆட்சி செய்தது என்றாலும் முன்பிருந்த கோபத்தின் வெம்மை தணிந்திருந்தது.  

 

ஒருவாறு அந்த நீண்ட விமானப் பயணம் முடித்திருக்க, விமான நிலையத்தில் இருந்து ஒரு டாக்ஸிப் பிடித்து எங்கோ அழைத்துச் சென்றான். லீயோடு பேசாததன் காரணமாக ஷானவிக்கு இப்போது வரை எங்கே செல்கிறார்கள் என்று தெரியாது.

 

சில மணித்தியாலங்கள் ஓடிய கார் இப்போது கடலை ஊடறுத்த பாலம் ஒன்றினூடாகச் சென்றது. கரையோடே நின்றிருந்த மிகப் பெரும் பயணிகள் கப்பல்களும் ஆங்காங்கே நின்ற சிறு படகுகளும் ஷானவியை வியப்பில் ஆழ்த்த, அதற்கு மேலும் மௌனம் காக்க முடியாதவளாய் லீயிடம் திரும்பினாள்.

 

“ஹேய் லீ…! இது எந்த இடம்? நாம கப்பலில போகப் போறமா? இந்தளவு பெரிய கப்பல்களை நான் என்ர லைப்ல பார்த்ததே இல்லை.”

 

அவளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்ள, ட்ரைவரிடம் காரைக் கடற்கரை ஓரமாக விடச் சொன்னான். கார் அருகே செல்லவும் அந்தக் கப்பல்களின் பிரமாண்டம் பார்த்து இவள் அதிசயித்தாள். கரையோரமாகச் சென்று ஒரு வட்டமடித்துப் பழையபடி கார் உள்ளே செல்ல ஆரம்பித்தது.

 

“இந்தத் தடவை நாம கப்பலில போகேல்ல ஷானு. ஆனா நிச்சயமாகப் பிறகு போவோம். கப்பல்ல போனால் அது ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை எங்கட கல்யாணத்தை எப்பிடி நடத்துற? அதனால பிறகு போவம். சரியா?”

 

“ஓகே… ஓகே… பட் இப்ப எங்க போறம் என்று சொல்லு ப்ளீஸ். என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல…”

 

என்றவன் இவன் சிரித்தான். அப்போது கார் உரிய இடத்தை அடைந்து நிற்கவும் இருவரும் வண்டியை விட்டு இறங்கி உரிய பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு, சிறு லக்கேஜ்ஜோடு நடக்க ஆரம்பித்தனர்.

 

படிகளால் இறங்கி ஒரு படகுத் துறையை அடைந்ததும் ஷானவி துள்ளி விட்டாள். காரணம். அவள் இப்போது நின்றிருப்பது அவள் கனவு தேசத்தில் அல்லவா? சுற்றியிருந்த அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என்பதாலோ, அல்லது திருமணம் ஆகி விட்டதாலோ, அல்லது உச்சக்கட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடோ, ஷானவி தன்னிலை மறந்து லீயை இறுக அணைத்துக் கொண்டாள். உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்கியவள்,

 

“மெர்சி புக்கு லீ… கிரான் கிரான் மெர்சி. நான் ஒரு தடவை சொன்னதை நினைவு வைச்சு இப்பிடி இங்கக் கூட்டிட்டு வருவாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. ரொம்ப நன்றி லீ.”

 

உணர்ச்சி வசப்பட்டுக் கூறியவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“நீ சந்தோசமாக இருந்தால் எனக்கு அது போதும் ஷானு… சும்மா பீல் ஆகிறதை விட்டிட்டு என்ஜோய் பண்ணு. சரி… சரி… வா… நம்மைக் கூட்டிட்டுப் போக ஃபோட் வந்திட்டுது.”

 

கண் முன்னே விரிந்த அந்த அழகுக் காட்சியில் ஷானவி புல்லரித்துப் போய் நின்றிருந்தாள். கண்ணுக்குத் தெரிந்த தூரம் எங்கும் கட்டிடங்கள் எழும்பி நின்றன. ஆனால் அவற்றிற்குப் போவதற்கு வீதிகளுக்குப் பதிலாகக் கால்வாய்களே இருந்தன. அங்கும் இங்குமாய்ப் பல விதமான படகுகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. பொதுப்போக்குவரத்துப் படகுகள் சேவை, தனியார் டாக்ஸிப் படகுகள், கொண்டோலா எனப்படும் சுற்றுலாப் படகுகள் என்று பல விதம்.

 

காணக் காணத் திகட்டவில்லை ஷானவிக்கு. ஆம்! அவள் நின்று கொண்டிருந்தது காதலர்களின் சொர்க்க பூமி, மிதவை நகரான இத்தாலியின் வெனிஸ் நகரில்த்தான்.

 

முன்னொரு நாள் லீ யோடு வசித்த காலத்தில் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ‘எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு’ திரைப்படத்திலிருந்து “ஏதோ ஏதோ ஒன்று எனக்குள் நுழைந்து ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே…” பாடலைப் பார்த்தவள் அருகேயிருந்த லீயிடம்,

 

“நான் சாக முதல் ஒரு.தடவையாவது இந்த இடத்தை நேரிலப் பார்க்க வேணும்.”

 

என்று கூறியிருந்தாள். இவள் பேச்சு வாக்கில்ச் சொன்னதை இது வரை நாளும் இவளே மறந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இங்கே வந்ததும் தான் அன்றைய நாள்ச் சொன்னது நினைவுக்கு வந்தது.

 

இவர்களுக்கு இவர்கள் தங்க என்று லீ முன் பதிவு செய்திருந்த ‘கிரான்ட் கனல்’ ஹோட்டலிலிருந்தே டாக்ஸிப் படகு வந்திருந்தது. இவர்கள் ஏறியதும் நீரைக் கிழித்துக் கொண்டு மிதமான வேகத்தில்ச் சென்றது. ஷானவிக்கோ அங்கு கண்ணில்ப் படவும் காட்சியெல்லாமே அதிசயமாகத்தான் இருந்தது.

 

இந்த நீருக்குள் எப்படிக் கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? ஒவ்வொன்றும் நாலைந்து மாடி வேறு. வீதியிலேயே நம் மக்கள் நேராகப் போக மாட்டார்கள். இந்தப் படகுகள் எல்லாம் எப்படி ஒன்றையொன்று மோதாமல்ப் போய் வருகின்றன என்று அவளுக்கு எல்லாமே சிந்தனையைக் கிளப்பி விட்டன.

 

விதம் விதமான வர்ணங்களோடு எழுந்து நின்ற கட்டிடங்கள், அவற்றை இணைக்கும் சிறு சிறு பாலங்கள், அதற்குக் கீழே போகும் கொண்டோலாக்கள் (சிறு வள்ளம்), கரை நீட்டுக்கு இருந்த உணவுச்சாலைகள், ஆங்காங்கே உயர்ந்து எழும்பி நின்ற கலைச் சிறப்பு மிக்கத் தேவாலயங்கள் என்று கண்ணுக்கு விருந்தளித்த காட்சிகள். ஒருவாறு இவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலை முக்கால் மணி நேரத்தில் அடைந்தால் அங்கேயும் பிரமிப்புக்குக் குறைவில்லை.

 

இவர்கள் ஹோட்டலின் முன்பு தான் பெரிய கால்வாய் அமைந்திருந்தது. பெரிது என்றால் பெரிய கப்பலே போய் வரக் கூடியப் பெரிது. இவர்கள் போய் இறங்கிய நேரம், ஒரு பயணிகள் கப்பல் அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பலின் பிண்ணணியில் ஷானவியைத் தனது கமெராவில் அடக்கிக் கொண்டான் லீ.

 

ஹோட்டலில் இவர்கள் அறைக்குச் சென்றால் ஷானவிக்கு பேச வார்த்தை வராது வாயடைத்துப் போய் நின்று விட்டாள். உள்ளே நுழைந்ததும் எதிர்ப்பட்ட சிறு மேசையில் ஒரு வெள்ளி வாளியில் ஐஸ்கட்டிகள் நிரப்பி அதனுள்ளே ஒரு ஷம்பியன் போத்தல் வைக்கப்பட்டிருந்தது.

 

அதன் முன்னே ஒரு கடித உறை இருக்கவும், ஷானவி அதை எடுத்துப் பார்த்தாள். கடித உறையின் வெளியே மிஸ்டர் அன்ட் மிஸிஸ் லீ யூ வோன் என்று எழுதியிருக்க, உள்ளே தேனிலவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் ஹோட்டல் நிர்வாகத்தினரால் ஒரு வாழ்த்து அட்டை வைக்கப் பட்டிருந்தது.

 

அதைப் படித்து விட்டு முகம் சிவக்கத் திரும்பியவளுக்கு, அங்கேயிருந்த பெரிய படுக்கையும் ராஜ தோரணையுடன் அது அலங்கரிக்கப்பட்டிருந்த விதமும் இன்னமும் வெட்கத்தை அதிகரிக்க லீயைத் திரும்பிப் பார்த்தாள். அவனோ ஒரு கள்ளச் சிரிப்போடு இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கு லீ. இன்றைக்கு ஒன்றும் சுத்திப் பார்க்க முடியாது என்னால. குளிச்சிட்டுச் சாப்பிட்டிட்டுத் தூங்கப் போறேன்.”

 

என்று விட்டு மாற்றுடை ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த பளிங்காலான குளியலறைக்குள் நுழைந்தாள். இதயமோ எம்பித் துடித்தது.

 

“இந்த கொரியன் ரோபோட பார்வையே நல்லா இல்லையே… என்ன விசயம் என்று ஒன்றுமே புரியலையே. நீதான்யா என்னைக் காப்பாத்தணும் நல்லூர்க் கந்தா…”

 

என்று அந்த இரண்டு பொண்டாட்டிக்காரனிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தாள். பின்னர் லீயும் தயாராகி வர ஹோட்டலோடு இருந்த உணவகத்திலேயே இரவுணவை முடித்துக் கொண்டு வந்து அறைக்குச் திரும்பினார்கள்.

 

ஷானவி அறைக்குச் சென்றதுமே ஒரு பக்கமாய் விழுந்து படுத்து விட்டாள். அவள் பதட்டத்தைப் புரிந்து கொண்டவன், தனக்குள்ச் சிரித்துக் கொண்டே யூ வூனுக்கு அழைப்பெடுத்துத் தாங்கள் நலமாய் வந்து சேர்ந்ததைச் சொல்லி விட்டு அவர்கள் எல்லோரது நலமும் விசாரித்து விட்டுக் கைப்பேசியை வைத்து விட்டுப் பார்த்தால் ஷானவி உண்மையாகவே தூங்கிப் போயிருந்தாள்.

 

‘ஹனிமூனுக்கு வந்து, அதுவும் வெனிஸ்க்கு வந்து இப்பிடிப் படுத்துத் தூங்குவது என்ர ஃவைபாக மட்டும் தான் இருக்கும்’ என்று நினைத்துச் சிரித்தவன் சிறிது நேரம் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்து விட்டு அவனும் தூங்கிப் போனான்.

 

காலையில் கண் விழிக்கும் போது லீயை அணைத்துக் கொண்டு தூங்கியிருந்தது தவிர வேறு எதுவும் வித்தியாசம் தோன்றாதவள்,  இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் தொடுகைக்குப் பழக்கப்பட்டிருந்தாள்.

 

அங்கிருந்த ஐந்து நாட்களும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை இருவருக்கும். படகுகளிலும் சின்னச் சின்ன கடைத் தெருக்களிலும் சந்தோசமாகச் சுற்றினார்கள். பிரசித்தி பெற்ற இடங்களையும் அருங்காட்சியகங்களையும் சென்றுப் பார்த்தார்கள்.

 

அனைத்தையும் விட ஷானவிக்கு லீயின் கைகள் கோர்த்தபடி அவன் தோளோடு தோள் உரச, படகுகளில் நின்றபடி பயணம் செய்வதோ அல்லது கொண்டோலாக்களில் இருந்தபடிப் பயணம் செய்வதோ தான் ரொம்பப் பிடித்திருந்தது. லீயும் அவள் ஆசைக்கேற்ப அவளை அங்கும் இங்குமாக சும்மா சுற்றினான்.

 

பெரும்பாலும் மேற்கத்தையவர்களால் நிரம்பி வழிந்த அந்தச் சுற்றுலாத் தலத்தில் ஜோடி, ஜோடியாகத் திரிந்த அவர்களின் நெருக்கம் இவர்களுக்குள்ளும் ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த நெருக்கம் உரிய நிலையை அடைய முதலே இவர்கள் திரும்ப வேண்டிய நாளும் வந்திருந்தது.

 

அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் சோகமாகவே ஷானவி திரும்பிச் சென்றாள். ஆனால் இப்போது அவர்கள் சென்றடைந்த இடத்தைக் கண்டதும் பழையபடி அவள் உற்சாகமானாள். ஆம்! இவர்கள் பிரான்ஸ், கிரினோபிளில் முன்பு வாழ்ந்த வீடு தான்.

 

வீட்டினுள்ளே சென்ற இருவருக்கும் பழைய ஞாபகங்கள் ஆட்டிப் படைக்க லீ அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

“ஷரங்கே ஷானு… ஐ லவ் யூ வெரி மச்…”

 

என்றவன் காற்றே புகா வண்ணம் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளுக்கும் அப்போது அந்த அணைப்புத் தேவையாக இருக்க அவன் மார்பில் முகம் புதைத்து அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அப்போது சிவ பூஜைக் கரடியாக அழைப்பு மணி அடிக்கவும் லீ போய்க் கதவைத் திறக்க, அங்கு கொரியாவைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த பட்டாளம் முழுவதும் நின்றிருந்தனர்.

 

பிறகென்ன கலகலப்புக்கும் சந்தோசத்துக்கும் பஞ்சமா என்ன? அடுத்த நாள் இந்துத் தமிழ்த் திருணத்திற்குரிய ஒழுங்குகளைச் செய்து விட்டு, அனைவரும் கிளம்பிச் சென்றார்கள். அனுஷரா ஷானவியைத் தன்னோடு அழைத்துச் சென்று விட்டாள். லீயை விட்டுப் பிரிய மனமில்லாமல் விட்டாலும் எல்லோர் முன்பும் மறுக்க முடியாமல் ஒன்றும் பேசாது கிளம்பிச் சென்றாள்.

 

லியோன் செல்வ விநாயகர் ஆலயத்தில் எல்லோரும் அறுகரிசி தூவி வாழ்த்துச் சொல்ல, ஷானவியின் கழுத்தில் லீ யூ வோன் திருமாங்கல்யத்தை அணிவித்தான். திருமணச் சடங்குகள் முடிந்ததும் கோயில் மண்டபத்திலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்யாண விருந்தும் சாப்பாட்டை ஒரு கை பார்த்து விட்டு அனைவரும் தத்தமது வீடு திரும்பினார்கள்.

 

விருந்து, பின்னர் புகைப்படங்கள் எடுத்து என்று வீட்டுக்கு வந்து சேர இரவாகி விட்டது. ஷானவி தன் அலங்காரங்கள் கலைத்து குளிக்கும் நேரத்திலேயே லீ இரவுணவுக்கு ரமியோன் செய்து விட்டான்.

 

குளித்து விட்டு வந்தவளுக்கு பசி எடுக்க உண்டவள்,

 

“தாங்ஸ் லீ…”

 

“எதுக்கு?”

 

“எல்லாத்துக்கும் தான்…”

 

“எல்லாத்துக்கும் என்றா…”

 

“ஒட்டு மொத்தத்தில என்னை இவ்வளவு சந்தோசமாக வைச்சிருக்கிறதுக்கு.”

 

“நீ உண்மையா சந்தோசமாக இருக்கிறியா ஷானு…? என்னில இருந்த கோபம் எல்லாம் போய்டுதா?”

 

“ஆனானப்பட்ட சீதையையே தீக்குளிக்கச் சொன்ன புராணக் கதை படிச்சு வளர்ந்தவ தானே நான். அதனால நீ என் காதலை டெஸ்ட் பண்ணிப் பார்த்தது ஒன்றும் பெரிதாகத் தெரியேல்ல. முதல்ல ரொம்பக் கோபமாகத் தான் இருந்தன். அப்புறம் உன்ர பக்கம் இருந்து யோசிச்சுப் பார்க்க உன்னை மன்னிக்கலாம் என்று தோணிச்சு. அதுவும் வெனிஸ்க்கு கூட்டிட்டுப் போன படியால மன்னிச்சிட்டன்.”

 

“ஹூம்… ஒரு வழியா தப்பிட்டன் என்று சொல்லுறாய். மெர்சி. மெர்சி. ஆமாம். உனக்குக் குழந்தைங்க என்றால் ரொம்பப் பிடிக்குமே ஷானு. இந்தக் கேயைக் கல்யாணம் பண்ணிட்டமேன்னு உனக்குக் கொஞ்சம் கூடவா வருத்தம் இல்லை?”

 

“உண்மையைச் சொன்னால் எனக்குச் சொல்லத் தெரியலை லீ. ஆனா நான் சந்தோஷமாக இருக்கிறன். எனக்கு இது போதும். அப்படி ஒரு குழந்தை வேணும் என்றா தத்தெடுத்திட்டாப் போச்சு.”

 

லீ எதுவும் பேசவில்லை. உண்டு முடித்ததும் சிறிது நேரம் பழைய கதைகள் பேசிய படியே தொலைக்காட்சிப் பார்த்தார்கள். நேரம் பதினொன்றைத் தாண்டவும் லீ தூக்கம் வருவது போல கைகளை உயர்த்தி அலுப்பெடுத்தான்.

 

“ஷானு… நான் தூங்கப் போறேன். குட் நைட்…”

 

சொல்லி விட்டுத் தனது அறைக்குச் சென்று விட்டான். இவளுக்குத் தூக்கம் வராமலிருக்க கைப்பேசியில் அன்றைய தினம் எடுத்த புகைப்படங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

 

அப்போது லீ அழைத்த சத்தம் கேட்டது.

 

“ஷானு…! ஒருக்கால் இங்க வா… என்ர ஜக்ல தண்ணீ முடிஞ்சுது. ப்ளீஸ் எடுத்துத் தா…”

 

என்றான். இவளும் எழுந்து சென்று அவன் அறைக் கதவைத் திறக்கவும் கதவின் பக்கமிருந்தவன், அவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கதவைக் காலால் அறைந்து சாத்தினான். இதை எதிர்பாராத ஷானவி,

 

“விடு லீ…! என்ன செய்யிறாய்?”

 

என்று கேட்டுக் கொண்டிருந்தவளின் பார்வை அறையைச் சுற்றி நோட்டமிட்டு விட்டு வியப்பால் விழி விரிந்து வெட்கத்தால் முகம் சிவந்தது. வெண்ணிறப் படுக்கையில் சிவப்பு ரோஜாக்காளால் இதயம் வரைந்து நடுவிலே ஐ லவ் யூ ஷானு என்று எழுதி வைத்திருந்தான்.

 

விடயம் புரிந்தவளாக அவன் அணைப்புக்கேற்ப, இவளும் உடல் குழைந்தவளாக, அவள் தோள்களைச் சுற்றிப் போட்டிருந்த அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

 

“லீ…”

 

“ம்…”

 

“உன்னட்ட ஒன்று சொல்லோணும்…”

 

“ம்… சொல்லு…”

 

அவன் கைகளை விடுத்து அவன் புறம் திரும்பியவள்,  அவன் கண்களை நேராகப் பார்த்து,

 

“ஷரங்கே ஒப்பா…”

 

என்றாள். ஒரு நொடி புரியாதவனாய் நோக்கியவன், அடுத்த நொடி அவளைத் தன் அன்பு முத்தங்களால் ஆக்கிரமித்தான்.

 

“ஷானு… நான் கேயில்லை என்று உனக்குக் கொஞ்சம் கூடவா டவுட் வரேல்ல…”

 

“உஹூம். நான் தான் நீ கிஸ் பண்ணினதைப் பார்த்தனே… ஆனா ஏன் அடிக்கடி கிஸ் பண்ண வாறாய் என்று குழப்பமாக இருக்கும்…”

 

“லூசு… லூசு… அது அவன் கண்ணில என்னவோ என்று நான் பார்த்திட்டு இருந்ததைத்தான் நீ பிழையாகப் பார்த்து இருக்கிறாய்.”

 

“ஆ…”

 

என்று சிரித்தவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்ச இந்த வீட்டிலேயே தான் நாம ஹஸ்பண்ட் அன்ட் வைஃபாகச் சேர்ந்து வாழுறதும் ஆரம்பிக்கணும் என்று தான் இந்தளவு நாளும் பொறுமையாக இருந்தேன். அதுவும் உன்னைப் பக்கத்திலேயே வைச்சுக் கொண்டு…. ஹூம்… ஆனா இனியும் என்னால பொறுக்க முடியாது”

 

என்றவன் தான் கேயில்லை என்பதை நிருபிக்கும் வேலையில் இறங்கினான். அவளும் அதைச் சந்தோசமாகச் சரி பார்க்க ஆரம்பித்தாள்.

 

# # # # #

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு தென்கொரியாவில் லீயின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

 

“அட நல்லூர்க் கந்தா…! இப்பிடி என்னை இங்க கொண்டு வந்து மாட்டி விட்டியேப்பா…”

 

என்று புலம்பியபடி ஒரு லக்கேஜ்ஜை அடுக்கிக் கொண்டிருந்தாள் ஷானவி. அவளுக்கு அருகே அவர்கள் ஒரு வயது மகன் கடம்பன் அவள் பெட்டியில் எடுத்து வைப்பதை மறுபடியும் வெளியே எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு பொறுமையை இழந்த ஷானவி,

 

“அப்பாவும் பொண்ணும் அங்க என்ன செய்திட்டு இருக்கிறீங்க? நான் ஒருத்தி இங்க தனியாக எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கு.”

 

மகனைத் தூக்கிக் கொண்டு லீயைத் தேடி வீட்டிலிருந்த அவனது ஸ்டூடியோவுக்குச் சென்றாள். அங்கே அவர்கள் மூத்த மகள் நான்கு வயதான நிலாவுக்கு கீபோர்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் லீ.

 

“லீ இவனைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளு பாப்பம். இந்த ரேஞ்சில நாம ரெடியாகினால் ஆதூரிட கல்யாணத்துக்கு இல்லை அவைட பிள்ளைட பேர்த்டேக்குக் கூடப் போக முடியாது.”

 

மகனை லீயின் கையில்க் கொடுத்தவள், மகளைப் பார்த்து முறைத்தாள்.

 

“எனக்கு வந்து ஹெல்ப் பண்ணு பாப்பம்.”

 

நிலா பாவமாய் லீயைப் பார்க்க அவனோ, ஷானவிக்கு லூசு என்பது போல ரீல் சுத்திக் காட்டினான். இதைக் கண்டு விட்ட ஷானவி கொலைவெறியோடு லீயை அடிக்கத் துரத்தினாள். மகளைக் கையிலேந்திக் கொண்டு லீ ஓட மகனோடு இவள் துரத்த பிள்ளைகள் இருவரும் கிளுகிளுத்துச் சிரித்தனர்.

 

ஷானவி, லீயோடு கொரியாவிலேயே வாழ ஆரம்பித்து விட்டாள். இப்போது கொரியன் பாசையைச் சரளமாகப் பேச, எழுத, வாசிப்பாள். லீக்கு பிஸ்னஸ் பக்கம் கொஞ்சமும் விருப்பம் இல்லாது போகவே, லீயின் அப்பாவோடு சேர்ந்து, யூ வூனின் உதவியோடு இப்போது அவள் தான் பிஸ்னஸ்ஸைக் கவனித்துக் கொள்வது.

 

லீ இன்னமும் திரைப்படங்களில் நடிப்பது, ஆல்பங்களுக்கு இசையமைப்பது என்று கலைத் துறைக்குத்தான் சேவையாற்றிக் கொண்டிருக்கிறான். பிள்ளைகளுக்கு கொரியன் பெயர் வைத்திருந்தாலும் வீட்டிலே அவர்களைத் தமிழ்ப்பெயரால்த் தான் அழைப்பாள் ஷானவி. அத்தோடு தமிழும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். லீயும் இது எதற்கும் தடை சொல்வதில்லை.

 

முன்பு இவர்கள் இருவருமாய்ச் சண்டை போட்டார்கள். இப்போது அப்பாவும் மகளும் ஒரு கட்சி, அம்மாவும் மகளும் ஒரு கட்சியாகச் சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவர்களின் செல்லச் சண்டைகளோடு எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இவர்கள் வாழ்வு சிறக்க நாமும் வாழ்த்துவோமாக.

 

சுபம்.  

 

 

 

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

 

உண்மையில் உங்கள் எல்லோருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திண்டாடிப் போய் இருக்கிறேன்.

 

எனது முதல் இரு நாவல்களுமே கொஞ்சம் சீரியஸ் பீல் தந்ததால இதை அப்படி இல்லாமல் எழுத வேண்டும் என்று எண்ணினேன்.

 

எந்த விதக் கதைக் கருவும், ஐடியாவும் இல்லாமல் ஆரம்பித்தேன். நான் முடிவு செய்த ஒரே விடயம் இந்தக் கதை “மோதல், காதல், ஊடல், கூடல்” என்பதாய் இருக்க வேண்டும் என்பது தான்.

 

கொரியன் சீரியல் பைத்தியமான எனக்கு ஏன் நம் ஒப்பாவை ஹீரோவாக வைத்து எழுதக் கூடாது என்ற எண்ணம் தோன்ற உடனே ஆரம்பித்து விட்டேன்.

 

நான் இப்போது வசிப்பது பிரான்ஸில்தான்.   எனக்கு இந்த இடத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றிருந்த ஆசையை இக் கதை மூலம் தீர்த்துக் கொண்டேன். அதேபோல கதையின் பிற்பகுதியைக் கொரியாவில்தான் முடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

 

அதாவது நான் கொரியாவுக்கு சென்று எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக விஸாப் பிரச்சினை காரணமாக என்னால்ப் போக முடியவில்லை.

 

பொதுவாக எனக்குக் கூகிளின் உதவியோடு எழுதுவது பிடிப்பதில்லை. நேரில் பார்த்த, அனுபவித்த விஷயங்களை எழுதும் போது, கூட உயிர்ப்புடையதாக இருக்கும் என்று நம்புகிறவள் நான். அதனால்த்தான் கொரியா பற்றிய காட்சிகளைக் குறுக்கி விட்டேன்.

 

ஆரம்பத்தில் பெரிதாக யாருக்கும் ஒப்பாவைப் பிடிக்கவில்லை. ஆதூரைக் ஹீரோவாகப் போடுங்கள் என்று பலர் கேட்டனர். “கொரியன்காரனை ஹீரோவாக மனசு ஏற்கவில்லை. அதனால் கதை படிக்கவில்லை” என்று படிக்காமல் ஒதுங்கியவர்ளும் இருக்கிறார்கள்.

 

ஆனால் கதை போகப் போக நீங்கள் எல்லோரும் தந்த வரவேற்பு, நிச்சயமாக நான் கனவில்க் கூட எதிர்பார்க்காத ஒன்று. அதுவும் என்னால் உரிய நேரத்தில் யூடி போட முடியாத போது கூடக் காத்திருந்து படித்ததும், உங்கள் அன்பான திட்டுக்களும் உண்மையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத கதை இது.

 

எனது முதல் கதை ஹீரோ ஸாம் அபிஷேக்கை யாரும் ரசிக்காத ஹீரோ என்று ஒருவர் சொல்லிய போது, என்னுடைய ஒரு ஹீரோவையாவது யாரும் ரசிக்க மாட்டார்களா என்று நான் ஏங்கிய போது, முன்பு பூனைக் கண்ணன், நுவானுக்கும் சரி, இப்போது லீக்கும் சரி நீங்கள் தந்த வரவேற்பு அளவற்றது.

 

மெய் சிலிர்த்துப் போக வைத்திருக்கிறீர்கள்.

 

இந்தக் கதையை ரசித்த உங்கள் எல்லோருக்கும் ஒரு சின்ன வேலை தரலாம் என்று எண்ணுகிறேன். ஒரு பக்கத்துக்குள் கதையைப் பற்றி உங்கள் கருத்துக்களை அழகாய் எழுதி எனக்கு மெயில் பண்ணி விடுங்கள். எனக்கு ரொம்பப் பிடித்த விமர்சனத்தை இந்தக் கதை புத்தகமாக வெளிவரும் போது புத்தகத்தில் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். அத்தோடு மூவருக்கு என்னுடைய கையெழுத்தோடு முதல் கதையான “இரு மலர்கள்” (உனக்காகவே நான் வாழ்கிறேன்) புத்தகத்தை அனுப்பி வைக்கலாம் என்றிருக்கிறேன்.

 

நீங்கள் உங்கள் விமர்சனத்தை எழுதும் போது கதையை முழுவதும் சொல்லி விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கதைச் சுருக்கமாக இருக்கக் கூடாது. அதேவேளை கதையைப் படிக்கத் தூண்டும் விதமாகவும் இருக்க வேண்டும். கவிதை வடிவிலோ, கட்டுரை வடிவிலோ எதுவானாலும் சரி தான்.

 

என்னை இந்தளவு தூரம் மகிழ்ச்சிப் படுத்திய வாசகர்களுக்கு என்னுடைய மிகச் சிறு நன்றியறிவிப்பு இது. நீங்கள் உங்கள் விமர்சனத்தை அனுப்ப வேண்டிய முகவரி

yaazsathya@gmail.com

 

அப்புறம் மறக்காமல் இந்த முடிவு உங்களுக்குத் திருப்தி தந்ததா என்று வழக்கம் போல் உங்கள் கமெண்ட்ஸ் மழையால்ச் சொல்லிச் செல்லுங்கள். இனி எல்லோரது கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை செய்கிறேன் மக்கா. ரிப்ளை செய்யும் நேரத்தில் கதையை டைப் பண்ணிடுவோம் என்றுதான் இவ்வளவு நாளும் ஒழுங்காக ரிப்ளை செய்யவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

 

நிறைய ஒப்பா லவ்வர்ஸ் இந்தக் கதை படிக்கிறீர்கள். ஷானவி ரூபத்தில் ஒப்பாவை விதம் விதமாய் திட்டியதற்கு என்னை மன்னிக்கவும்.

 

அப்புறம் அடுத்த கதை எப்போது தொடங்குவேன் என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் ஆதூர் தான் ஹீரோ என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதூரின் திருமணத்தில் மறுபடியும் லீயையும் ஷானவியையும் நீங்கள் சந்திக்கலாம்.

 

உங்கள் தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்.

 

ஷரங்கே மக்கா…! குமாவோ…!

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா.

 

6 Comments »

 1. Hi Sathya,
  This is one of the best stories I have read,
  I enjoyed it and gonna read it again😉
  “True love never fails” regardless of country, culture, language, skin type and many more…. what else to say???😊
  Thanks for giving a wonderful experience.
  Eagerly waiting for ur next story…..
  Best wishes👍

 2. Different story. Korean hero lee is so good. Sana’s prayers n puzhambal with nallur kandha is different. I learnt some French n Korean words from this story. Sarenke ” unni kanaythaan kangal kondena” . Mercy….

 3. Really i enjoyed to read this story. Especially today with your continuous updates makes the day very happy.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: