Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 23

அத்தியாயம் – 23

 

அன்றுதான் லீ யூ வோனின் புதிய பாடல் வெளியீடு. நுழைவுச் சீட்டுக் கிடைக்குமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு, மதியம் போல் யூ வூன் அழைப்பெடுத்தான்.

 

“ஹலோ ஷானவி…! குட் நியூஸ். டிக்கெட் கிடைத்து விட்டது. கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ். பரவாயில்லை என்று புக் பண்ணிட்டேன். உங்களுக்கு ஓகே தானே?”

 

“அது பரவாயில்லை யூ. நீங்க புக் பண்ணுங்கோ.”

 

“ஓகே ஷானவி. நீங்க ஆறு மணிக்கு ரெடியாக இருங்கோ. நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன். அதுக்கு முதல் வெளில போக வேண்டும் என்றாலும் சொல்லுங்கோ.”

 

“இல்லை யூ. நீங்க ஆறு மணிக்கு வந்தால்ப் போதும். ரொம்ப தாங்ஸ்.”

 

சொல்லி விட்டு இவள் அழைப்பைத் துண்டித்தாள். அன்று முழுவதும் வெளியே செல்லவில்லை. இரவும் காலையும் சாப்பிடாதது, பசி தனது வேலையைக் காட்டியது. உடை மாற்றிக் கொண்டு கீழே ஹோட்டலுக்குரிய உணவகத்துக்குச் சென்றாள்.

 

பசியடங்கப் பெயருக்கு எதையோ கொறித்து விட்டு, மறுபடியும் அறையைத் தஞ்சம் அடைந்தாள். அவளின் வேண்டாத யோசனைகளிலேயே நேரம் அதுபாட்டிற்கு ஓடியது. மாலை ஐந்து மணியாகக் குளித்துத் தயாரானவள் முதலில் சாதாரணமாய் ஒரு ஜீன்ஸ், ரீசேர்ட்டைப் போட்டவள், பின்பு ஏதோ தோன்ற ஒரு டிசைனர் சேலையை எடுத்துச் சுற்றிக் கொண்டாள்.

 

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்கும் இடத்தில் இவள் சேலை கட்டியிருந்தால் மட்டும் என்ன அவன் கண்டுபிடித்து விடவா போகிறான் என்று எண்ணியவள், சேலையிலேயே தயாரானாள். ஆறு மணிக்கு இவளை அழைக்க வந்த யூ வூன் இவளைப் பார்த்து விட்டு மனம் திறந்து பாராட்டினான்.

 

“யூ ஆர் ரியலி லுக்கிங் ஜோர்ஜியஸ் ஷானவி.”

 

மௌனமாய் ஒரு மென்னகையைச் சிந்தியவள், தனது லக்கேஜ்ஜோடு ஹோட்டல் அறைக்குப் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டுக் காரில் ஏறினாள்.

 

“வேற ஏதும் இடத்துக்குப் போகணுமா? லக்கேஜ்ஜோட வந்து இருக்கிங்க. அதுதான் கேட்கிறன்.”

 

“ப்ரோகிராம் முடிய எயார்போட்டுக்குப் போனால்ச் சரி. நான் பிரான்ஸ்க்குத் திரும்பிறன்.”

 

“அப்போ நாளைக்கு லீயிட வெடிங்குக்குப் போகேல்லயா?”

 

“இல்லை. ஒரு அவசர வேலையாக போகணும் உடனே.”

 

“சரி ஷானவி.”

 

அவன் அதுக்கு மேலே எதுவும் கேட்கவில்லை. அந்த மிகப்பெரும் அரங்கின் கார்ப் பாக்கிங்கில் கொண்டு சென்று காரை நிறுத்தியவன், ஷானவியை உள்ளே அழைத்துச் சென்றான்.

 

அரங்கை நெருங்கியவள் அதன் பிரமாண்டத்திலும், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் எண்ணிக்கையும் பார்த்து மிரண்டு போனாள். மெதுவாய்க்குளிர் காற்று வீசவே, சேலைக்கு மேலே ஒரு மெல்லிய ஜக்கெட்டை அணிந்து கொண்டவள் யூ வூனைப் பின் தொடர்ந்தாள்.

 

அரங்கின் மையத்தில் தான் இவளுக்கு இடம் கிடைத்திருந்தது. மேடையிலிருந்து சிறிது தூரமாகவும் அதே நேரம் தெளிவாகப் பார்க்கக் கூடியவாறும் அமைந்திருந்தது அவளுக்குத் திருப்தியாகவே இருந்தது. யூ வூனும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். நேரம் குறித்தபடியே நிகழ்ச்சி சரியாக ஏழு மணிக்கு ஆரம்பித்தது.

 

லீ அரங்குக்கு வரவே கரகோஷச் சத்தம் வானைப் பிளந்தது. அத்தோடு ஒப்பா என்ற கோஷம் வேறு. அப்பா தெரியும். அதென்னது ஒப்பா என்று அறிந்து கொள்ள ஷானவி யூவை அர்த்தம் கேட்டாள். லீ கூட ஒரு தடவை இவளிடம் தன்னை இனி ஒப்பா என்று கூப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தான். இவளோ அது என்ன ஒப்பா, சுப்பா என்று கொண்டு என அவ்வாறு அழைக்க மறுத்து விட்டாள்.

 

அப்போது தோன்றவில்லை. ஆனால் இப்போது ஏனோ அர்த்தம் அறிய ஆவலாகியது அவள் உள்ளம்.

 

“வயதில் கூடியவங்களை ஒப்பா என்று சொல்லுவாங்க. அண்ணாவையும் சொல்லலாம். காதலனையும் அப்பிடித்தான் சொல்லுவாங்க.”

 

“ஓ… அப்ப ஷரங்கே என்றால் என்ன?”

 

“ஐ லவ் யூ…”

 

அதைக் கேட்டதும் ஷானவியின் கண்கள் பனித்தன. அவன் முன்பெல்லாம் அவளைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தைக்கு இப்போது அர்த்தம் இல்லையா? கடைசியாக போகும் போது இதைத்தானே எழுதி வைத்தான். நம் காதல் உண்மை என்றால் எதிர்காலத்தில் சந்திப்போம் என்றானே. அப்போ அவள் தேடி வந்தது என்ன? இப்போது சந்திக்க முடியாமல் போவது என்ன? அப்போ இந்தக் காதல் பொய்யா? அன்பொன்றை மட்டுமே எதிர்பார்த்த இந்தக்காதலின் ஆயுள் இவ்வளவு தானா?

 

யோசிக்க யோசிக்க மண்டை வெடித்து விடும் போலிருந்தது. அவளை மீறிக் கண்ணீர்த் துளிகள் கோடிட்டன. துடைக்கவும் மனமின்றி மேடையில் நின்ற லீயையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றரை மணிநேரம் எப்படிச் சென்றது என்று தெரியாமல் ஆட்டமும் பாட்டமுமாக ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தான். நீண்ட மூன்று வருடங்களின் பின்னரான வருகை அவனது ரசிகர்களுக்கு நன்றாகவே தீனி போட்டது அந்த நிகழ்ச்சி.

 

நிகழ்ச்சி முடிவடையும் நேரம். மேடையின் நடுவே கிட்டாரோடு வந்த லீ மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.

 

“மூன்று வருடங்களாக என்னைக் காணாதிருந்தும் என்னை மறந்து விடாத என் ரசிகர்களுக்கு வணக்கம். இப்போது நான் எனது புதிய பாடலை வெளியிடலாம் என்று எண்ணுகிறேன். இவ்வளவு நேரமும் காத்திருந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வென்றே சொல்லலாம். இதன் வார்த்தைகள் தான் என்னுடையவை. இன்னொருவரது உதவியோடே இசையமைத்தேன். காதலியை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு காதலனின் தவிப்புத் தான் இது.”

 

இத்தனையையும் தனது தாய் மொழியில்க் கூறியவன்,

 

“திஸ் ஸோங் இஸ் போர் யூ மொன்னம்மோர்”

 

என்று ஆங்கிலமும் பிரெஞ்சும் கலந்து கூறி விட்டுப் பாட ஆரம்பித்தான்.

 

இசை ஆரம்பித்ததுமே ஷானவி நிமிர்ந்து உட்கார்ந்தாள். இரு தினங்களாக உணவு, தூக்கம் மறந்து லீயும் அவளும் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்களே. எப்படி மறக்கும்?

 

இசைக்கு மொழி ஏது? அவன் பாடும் மொழி புரியாவிட்டாலும் அவனின் மெல்லிய குரல் அவள் காதுகளில்ப் புகுந்து மனதைப் பிசைந்தது. சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மியழ ஆரம்பித்தாள்.

 

அத்தனை நேரமும் லீ பாடும் போது சந்தோசக் கூச்சல் போட்டு ஆடிக் கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது நிசப்தமாகியிருந்தனர். எல்லோரையும் உருக்கிக் கொண்டிருந்தது அவனது குரலும் இசையும்.

 

ஐந்து நிமிடங்கள் அனைவரையும் அழ வைத்தவன், பாடலை முடித்தும் சில நிமிடங்கள் அரங்கு அமைதியாகவே இருந்தது. பாடலின் தாக்கத்தில் வெளிவர முடியாத ஒரு மனநிலையில் அனைவரும் இருந்தனர். அப்போது லீயின் குரல் அந்த நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு ஒலித்தது.

 

“அந்தக் காதலனின் பிரிவின் வலி நிரந்தரமானது இல்லை. அவனைத் தேடி அவன் உயிரானவள் வந்து விட்டாள்.”

 

ரசிகர்கள் கூட்டம் புரியாமல் ஆளுக்காள் பேசிக் கொள்ளவே அங்கே சலசலப்பு எழுந்தது. திடீரென அரங்கின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஷானவியின் மீது மட்டும் ஸ்பாட் லைட் அடிக்கப்பட்டது. அழுது கொண்டிருந்தவள், தன் மீது விழுந்த வெளிச்சத்தில் கண்களைக் கூசிக் கொண்டே ஏதும் புரியாமல் மேடையை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“ஷரங்கே ஷானு… வில் யூ மரி மீ?”

 

இரு கைகளை விரித்துக் கொண்டே லீ கேட்கவும், இவளுக்கு அதிர்ச்சியில் எதுவும் புரியவில்லை. திகைத்துப் போய் எழவும், யூ வூன் அவளை மேடையை நோக்கி அழைத்துச் சென்றான். அதற்குள் சில காவலாளிகளும் வந்து வழியமைத்துக் கொடுக்க, ஏதோ கனவுலகில் மிதந்து செல்வது போலச் சென்று கொண்டிருந்தாள் ஷானவி.

 

இவள் மேடையை அடைந்ததும் தனது விரலில் அணிந்திருந்த ஒரு மோதிரத்தைக் கழட்டியவன், அவள் முன்னே மண்டியிட்டான்.

 

“நீயில்லாத வாழ்வு எனக்கு வெறும் நரகமே. என் உயிருள்ளவரை என் கூடவே இருந்து என்னோடு சண்டை போடுவாயா ஷானு?”

 

கண்கள் கலங்கக் குரல் தளுதளுக்க இவன் கேட்கவும், மண்டியிட்டிருந்தவனை விம்மிக் கொண்டே ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தட்டமாலை சுற்றியவன் இறுக அணைத்துக் கொண்டான். ரசிகர்களின் கைதட்டல் ஒலி வானைப் பிளக்க, அங்கே இனிதாய் ஒரு காதல் மலர்ந்தது. சில நிமிடங்களில் சுயநிலைக்கு வந்தவனாய் அவளை விடுவித்து, அவள் விரலில் மோதிரத்தை அணிவித்து அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

 

அழுகையும் சிரிப்பும் ஒரு சேர பேச வார்த்தைகள் வராது முகம் விசிக்க நின்றாள் ஷானவி. அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு மைக்கைக் கையிலெடுத்த லீ,

 

“இவள் பெயர் ஷானவி. இலங்கையைச் சேர்ந்தவளை நான் பிரான்ஸில் சந்தித்தேன். சிறு பிள்ளைகள் போலச் சண்டையோடு ஆரம்பித்த எங்கள் அறிமுகம் இன்று ஒருவரை விட்டால் ஒருவர் இல்லை எனும் நிலைக்கு வந்திருக்கிறது. பேர், புகழ், பணம் எல்லாம் இருந்தும் அம்மா இறந்த பிறகு உண்மையான அன்பு கிடைக்காது, எதற்காக வாழ வேண்டும் என்று விரக்தியோடு இருந்த நேரத்தில் தான் ஷானுவைச் சந்தித்தேன்.

 

வேற்று மதம், மொழி, இனம், கலாச்சாரம் என்று எந்த விதப் பொருத்தமும் இல்லாமல் இருந்த நாங்கள் உண்மையில் ஒருவரை ஒருவர் உயிராய் நேசித்தது அதிசயம் தான். இத்தனைக்கும் நாங்கள் அன்பாய்ப் பேசிக் கொண்டதை விட சண்டை போட்டது தான் அதிகம்.

 

ஷானுவுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியாது. அப்படியிருக்க என்னை எனக்காய் மட்டுமே நேசித்தவள். அன்பைச் சண்டை போட்டுச் சொல்ல இவளுக்கு மட்டுமே தெரியும். என்னை விட அதிக திறமைகள் கொண்டவள். ஆனால் ஒரு நாள்க் கூட அதைப் பற்றி பெரிதாக எண்ணியது கிடையாது.

 

எனது இந்தப் புதுப்பாடலுக்கு என்னோடு சேர்ந்து இசையமைத்ததும் ஷானு தான். ஓவியத்தில் வல்லவள். தனது காதலின் இழப்பை ஓவியங்கள் வரைந்தே தீர்த்துக் கொள்ளப் பார்த்தவள். ஷானவியின் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இதோ.”

 

அவன் கூறி முடித்ததும் மேடையிலிருந்த பெரிய திரையில் ஷானவியும் ஓவியங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின. இவர்கள் இருவரது அறிமுகத்திலிர்ந்து பிரிந்து சென்ற கடைசி நாள் வரையான நிகழ்வுகளை ஒரு கதை போல தொடர்ச்சியாக வரைந்திருந்தாள். அந்தப் படங்களே இவர்கள் காதலை விளக்கப் போதுமானதாக இருக்கக் கடைசியாக இவள் முன்தினம் லீயைப் பார்த்ததும் வரைந்த ஓவியமும் திரையில்த் தோன்றியது.

 

ஷானவியோ இதெல்லாம் கனவா நிஜமா என்று நம்ப முடியாமல்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனமோ நல்லூர்க் கந்தனிடம் ஓடியது.

 

‘அடேய் நல்லூர்க் கந்தா! என்னடா நடக்குது இங்க. இந்த பனங்காய் மண்டையன் என்ன வேலை எல்லாம் பார்த்து வைச்சிருக்கிறான்? இதெல்லாம் எப்பிடி சாத்தியம்? ஒண்ணுமே புரியலையே. அப்போ நாளைக்கு இவன் கல்யாணம் என்று சொன்னது யாரைக் கல்யாணம் பண்ண? இந்த கொரியன் ரோபோ முதல்ல தனியாகக் கையில கிடைக்கட்டும். அப்ப இருக்குக் கச்சேரி ஐயாவுக்கு.’

 

கந்தனோடு புலம்பிக் கொண்டிருந்தவளை மறுபடியும் லீயின் குரல் நடப்புக்குக் கொண்டு வந்தது.

 

“எங்கள் வாழ்வு நலம் பெற வாழ்த்துமாறு வேண்டுகிறேன்”

 

அவன் கூறி விட்டு முன்னால் குனிந்து மரியாதை செலுத்தவும் ஷானவியும் அதே போல்ச் செய்து விட்டுச் சபையை நோக்கிக் கை கூப்பினாள். அப்போதுதான் முதல் வரிசையைப் பார்த்தவளுக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது.

 

ஆம்! அங்கு அனுஷரா, மைக்கேல், ஆதூர், திருநாவுக்கரசு அனைவரும் அமர்ந்திருந்தனர். அதெல்லாம் அதிசயம் இல்லை. திருநாவுக்கரசுவுக்கு அருகே சந்திரா, அஸ்வின், ஆத்விக் எல்லோருமே வந்திருந்தது தான் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே எரிமலையானாள் ஷானவி.

 

‘அடேய் டப்பா மூஞ்சியா…! அப்போ என்னை மட்டும்தான் நீ இப்பிடித் தவிக்க விட்டிருக்கிறாய்? என்ர காதல் உண்மையானது தானோ என்று சோதிச்சுப் பாத்திருக்கிறாய். என்ர பீலிங்ஸ்ஸப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் என்ர உணர்ச்சிகளோடு விளையாடியிருக்கிறாய். மவனே…! தனியா என் கைல மாட்டு. உன்னை அடிச்சுப் பிழிஞ்சு துவைச்சுக் காயப் போட்டிடுறன். இல்லை. இல்லை… இந்தப் புடலங்காயை நல்லா அம்மில வைச்சுப் பச்சை மிளகாயும் சேர்த்து வைச்சு அரைச்சு சட்னியாக்கிச்  சாப்பிட்டிடுறன்.’

 

மேடையை விட்டு அவளை உட்புறமாக அழைத்துச் சென்றவன் காற்றே போக முடியாத அளவுக்கு இறுக அணைத்துக் கொண்டான்.

 

“ஷரங்கே ஷானு…. ஐ லவ் யூ… உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்.”

 

ஷானு சுனாமியாய் அவனை சுழட்டி அடிக்கப் போவது தெரியாமல் இப்போது போய்க் காதலைச் சொல்லிக் கொண்டிருக்கும் நம் ஒப்பாவின் நிலை என்னாகப் போகிறதோ?

 

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: