Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 26

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 26

மூன்றாம் பாகம்

 

அத்தியாயம் – 4. சந்தர்ப்பம் செய்த சதி

 

     மனிதர் மனிதரைச் சதி செய்வது ஒருபுறம் இருக்கட்டும்; சிலபோது சந்தப்பங்களே மனிதரைச் சதி செய்து விடுகின்றனவே, அதை என்னவென்று சொல்வது? மதுராந்தகிக்கும் குலோத்துங்கனுக்கும் அப்போது போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற ஓலை மதுராந்தகனிடமிருந்து விக்கிரமாதித்தனுக்கு வந்தபோது அதை ஒருவாறு நிறைவேற்றத் தயாராக ஓர் ஆள் கடல் கடந்த நாட்டிலிருந்து கல்யாணபுரத்துக்கு வந்து காத்திருப்பானா?

*கடாரத்தை அந்நாட்டு மன்னனிடமிருந்து பறித்துக் கொண்டவன் மாபப்பாளத்து மன்னனான மகிபாலான் என்பான். குந்தள நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் எவ்வாறு பல தலைமுறைகளாகப் பகை இருந்து வந்ததோ, அவ்வாறே கடாரத்துக்கும் மாபப்பாளத்துக்கும் பகைமை இருந்து வந்தது. அந்தப் பகுதியிலே இருந்த நாடுகளில் இவ்விரண்டும் அதிகப் படைப்பலம் பெற்றவை. கங்கை கொண்ட சோழர் கடாரத்தை அடிமைப் படுத்தி, அதனைச் சோழநாட்டுக்கு உள்ளடங்கியதாகச் செய்யும் வரையில் கடாரத்துக்கும் மாபப்பாளத்துக்கும் இடையே இடைவிடாது போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சில போர்களில் கடாரம் மாபப்பாளத்தை வெல்லும்; வேறு சில போர்களில் மாபப்பாளம் கடாரத்தை வெல்லும். இவ்வாறு அவ்விரு நாடுகளும் சொக்கட்டான் காய்களைப்போல் ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறிக்கொண்டே இருந்தன. ஆனால் கடாரம் சோழ நாட்டின் ஒரு பகுதியான பிறகு, அப்போது அந்நாட்டின் அரசனாக விளங்கிய இந்த மகிபாலனின் தந்தையான வேற்கொண்டான் என்பான் இனி கடாரத்தின் மீது படையெடுத்தால் சோழர்கள் பெரும்படையுடன் வந்து நம் நாட்டையும் அடிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சி அமைதியாக இருந்து விட்டான். தனக்குப் பின்னர் முடிசூட்டிக்கொள்ள இருந்த மகிபாலனிடமும் அவன் அவ்வாறே அச்சுறுத்தியிருந்தான்.

(*மாபப்பாளத்தைப் பற்றிய இந்நிகழ்ச்சிக்குச் சரித்திர ஆதாரம் ஏதும் இல்லை; அது முற்றிலும் கற்பனையே.)

ஆனால் மகிபாலன் குந்தள விக்கிரமாதித்தனைப் போலவே ஒரு சிறந்த வீரன். போர்த்தினவெடுக்கும் தோள்களைப் படைத்தவன். எனவே தந்தை இறந்து தான் மாபப்பாள அரசை ஏற்றதும் அவன் பெரும் படை ஒன்றுடன் சென்று கடாரத்துடன் போர் நிகழ்த்தி அந்நாட்டைத் தோற்கடித்து அதன் மன்னனையும் நாட்டை விட்டு விரட்டிவிட்டான்.

இதைச் செய்தபோது, கடாரத்தரசன் சோழர்களைச் சரணடைவான்; அவர்கள் பெரும்படை ஒன்றுடன் கடாரத்தை மீட்க வருவார்கள் என்று எதிர்பார்த்தே அவன் செய்தான்; சோழர்களையும் முறியடித்துவிட வேண்டும் என்ற வீறுடனே செய்தான். ஆனால் குலோத்துங்கனின் படை நடத்தும் திறமையின் முன் அவனுடைய வீரம் நிலை நிற்க முடியவில்லை. தன் படையில் பெரும் பகுதியை இழந்து கடாரத்தைவிட்டு மாபப்பாளத்துக்கு ஓடி ஒளிய வேண்டியதாயிற்று. அதோடு குலோத்துங்கன் கடாரத்தை மீட்டு கொடுத்துவிட்டு நாடு திரும்பி விடாமல், கடாரத்துக்கும் மாபப்பாளத்துக்கும் இடைப்பட்ட சிறு நாடுகளான தமாலிங்கம், இலங்காகோசம், மாயிருடிங்கம், தக்கோலம் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டுவரத் தொடங்கியதும் மகிபாலன் கிலியடைந்தான். தன் நாடு பறிபோகாமல் இருக்க வேண்டுமானால் தானும் கடல் கடந்து படையுதவி தேடிவர வேண்டுமென்று தெளிந்தான். சோழநாட்டுக்கும் குந்தள நாட்டுக்கும் நீடித்த பகை இருப்பதை அவன் அறிவான். குந்தளத்தார் சோழர்களைப்போலவே வீரம் செறிந்தவர்கள்; அவர்களுக்கு இணையான படைப்பலம் பெற்றவர்கள் என்றும் அவன் கேள்வியுற்றிருந்தான். ஆதலால் சோழர்களை முறியடிக்க அவர்கள் உதவியை நாடுவதே நல்லதென்று அவன் உடனே கடல் கடந்து குந்தளநாட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்த அன்றுதான் விக்கிரமாதித்தனுக்கு மதுராந்தகனின் ஓலையும் வந்து சேர்ந்தது.

விக்கிரமாதித்தன் எப்படி வீரத்தில் வல்லவனோ, அவ்வாறே இராசதந்திரக் கலையிலும் வல்லவன். உளவியல் கலையையும் ஓரளவு தெரிந்தவன். ஆதலால் கடல் கடந்து சென்றிருக்கும் குலோத்துங்கனை அங்கேயே வஞ்சகமாகக் கொன்றுவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற மதுராந்தகனின் வேண்டுகோளை அப்படியே நிறைவேற்ற அவன் விரும்பவில்லை. அது மிக எளிதானதுதான். குலோத்துங்கன் அழைத்துச் சென்றிருக்கும் படையின் அளவு இப்போது அவனுக்குத் தெரியும். அதில் ஒரு பகுதியேனும் இடையே அவன் நிகழ்த்தியிருக்கும் போர்களில் மடிந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். அப்போர்களிலே அவன் அடிமைப்படுத்திய நாடுகளின் சிறிய படைகள் அவனுக்கு உதவக்கூடும். அவைகளையும் சேர்த்துக்கொண்டால் கூட அவன் வசம் இருக்கக்கூடிய படையின் அளவு மிக அதிகமாக இருக்க முடியாது. அவனிடம் இருக்கும் மொத்தப் படையின் எண்ணிக்கைக்குச் சிறிது அதிகமான படை ஒன்றை மாபப்பாளத்து மன்னனுடன் அனுப்பிச் சோழப்படையைத் தோற்றோடச் செய்துவிட்டுக் குலோத்துங்கனையும் வஞ்சகமாகக் கொன்றுவிடச் செய்ய விக்கிரமாதித்தனால் முடியும். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அவன் சோழர்களுக்கு எதிராகப் போரிட தனது படைகளை அனுப்ப முடியாது. அது சோழ நாட்டு மக்களை அவன்மீதும், அவனுக்கு இதுவரையில் உடந்தையாக இருந்து வந்த காரணத்துக்காக மதுராந்தகனின் மீதும் வெறுப்புக்கொள்ளச் செய்யும்.

சோழ மக்கள் தன்மீது வெறுப்புக் கொள்வதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் ஏற்கெனவே அவர்களுக்கு மதுராந்தகனின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கையில், இதன் காரணமாக அவ்வெறுப்பு அதிகமானால், அங்கே உள்நாட்டுக் கலகம் நிகழ்ந்து அவன் முடிசூடிக்கொள்ளக்கூட முடியாமல் போய்விடக்கூடும் என்று அவன் அஞ்சினான். ஆதலால், குலோத்துங்கன் உயிரோடும் இருக்க வேண்டும்; அதேபோது அவன் சோழநாட்டுக்குத் திரும்பி வராதிருக்கவும் வழி செய்யவேண்டும் என்று அவன் திட்டமிட்டான். இத்திட்டத்தை வெற்றியுடன் உடனே நிறைவேற்றிக்கொள்ளவும் பாழும் சந்தர்ப்பம் அவனுக்கு அப்போது வழிவகுத்துக் கொடுத்திருந்தது.

மகிபாலன் விக்கிரமாதித்தனிடம் உதவி வேண்டி வந்தபோது வெறுங்கையுடன் வரவில்லை. பல விசேட வெகுமதிப் பொருள்களையும் உடன் கொண்டுதான் வந்திருந்தான். அந்த விசேடமான பரிசில் பொருள்களிலே ஆடவராகப் பிறந்த யாவரையும் கவரக்கூடிய பொருள் ஒன்றும் இருந்தது. அது சடப்பொருளல்ல; உயிர்ப்பொருள். ஆம், ஊனும் உயிருங்கொண்ட ஓர் ஆரணங்கு அப்பொருள். அழகுக் கவர்ச்சி மட்டுமின்றிக் கலைக் கவர்ச்சியும் நிரம்பப்பெற்றவள் அந்த ஆரணங்கு. கனிவாய்மொழி என்ற தன் பெயருக்கு ஏற்ப, வாய் திறந்தால் இன்னிசைக் கனிகளை உதிர்க்கும் அருள் பெற்றவள். ஆடற்கலையிலும் தேர்ச்சி பெற்றவள். கணிகை அல்ல அவள்; ஒரு காவலனின் மகள்-மகிபாலனின் இளைய சகோதரி. அந்தக் கனிவாய் மொழியை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தால் அவன் உதவியைப் பெறுவது திண்ணம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தான் மகிபாலன். வந்ததுமே தன் கருத்தையும் விக்கிரமாதித்தனிடம் வெளியிட்டிருந்தான். தனக்கென வந்த இந்தப் பரிசிலை இக்காரியத்துக்குப் பயன்படுத்த முடிவுறுத்தினான் விக்கிரமாதித்தன்.

குலோத்துங்கனோடு நேரடியான தொடர்போ, பழக்கமோ இல்லையெனினும் அவனுடைய மனப்போக்கைப் பற்றி நிறையக் கேட்டறிந்திருந்தான் விக்கிரமாதித்தன். அவன் போர்ப்பித்தம் மட்டும் கொன்டவனல்லன்; கலைப்பித்தமும், பெண்பித்தமும் கொண்டவன் என்பது விக்கிரமாதித்தனுக்குத் தெரிந்திருந்தது. ஆதலால், கனிவாய் மொழி போன்ற கலையும் அழகும் ஒருங்கே திரண்ட ஒருத்தியினால் அவனை எளிதில் வயப்படுத்திவிட முடியும் என்று அவன் துணிந்தான்.

எனவே அவன் மகிபாலனிடம் சொன்னான்: “மாபப்பாளத்து மன்னவா! உங்களுக்கு உதவி செய்ய நான் பெருமகிழ்ச்சியே கொள்வேன். ஆனால் உங்களுக்கு என் உதவியை அளிக்க இத்தருணம் ஏற்றதன்று. ஏனென்றால் சோழநாட்டுடன் இருந்து வந்த நெடுநாட் பகையை நான் துரதிர்ஷ்ட வசமாக கொள்வினை உறவால் போக்கிக் கொள்ள நேர்ந்துள்ளது. இப்போது சோழநாடு என் மாமன், மைத்துனர்களின் நாடு. ஆதலால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்யப்போகும் உங்களுக்கு என் படைகளை வெளிப்படையாக உதவிக்கு அனுப்ப முடியாமைக்கு மிக்க வருந்துகிறேன்.”

“ஆயின், நீங்கள் என் உதவியை எதற்காக நாடி வந்தீர்களோ, அதை நீங்களே மிக எளிதாக நிறைவேற்றிக் கொள்ள நான் ஒரு வழி வகுத்துத்தருகிறேன். மகிபாலரே! குலோத்துங்கன் மாசற்ற வீரன்தான்; ஆயினும் கலைப்பித்தும் பெண்பித்தும் அவனுக்கு மிகையாக உண்டு. எழிலும், இசைத்திறனும் ஒருங்கே உடைய உங்கள் சகோதரி மட்டும் மனம் வைத்து வலை வீசினால், அதில் உடனே சிக்கிக் கொண்டுவிடுவான். அவனிடம் சாதுரியமாக உரையாடி, என்றும் தன்னைப் பிரிவதில்லை என்ற வாக்குறுதி பெற்றுக்கொண்டு அவனை மணந்துகொள்ளச் செய்யுங்கள். பிறகு அவனை என்றென்றுமே மாபப்பாளத்தை விட்டுப் புறப்படாதபடி அட்டையாகப் பற்றிக்கொள்ளச் செய்யுங்கள். உங்களுக்கு உங்கள் நாடு நிலைப்பதோடு, குலோத்துங்கன் வெற்றி கொண்டுள்ள கடாரமும், இதர நாடுகளுங்கூட அடிமைப்பட்டதாகிவிடும். என் பங்குக்கு நான் இங்கிருந்து மீண்டும் கடாரத்தை மீட்கவோ, குலோத்துங்கனைத் திருப்பிச் சோழாட்டுக்கு அழைத்துக் கொள்ளவோ வீரராசேந்திரர் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளாதிருக்க ஏற்பாடு செய்துவிடுகிறேன்,” என்றான்.

முன்பு, வீரராசேந்திரர் மதுராந்தகியிடம், “வேங்கி மன்னனாகப் போகும் குலோத்துங்கனே சோழ நாட்டுக்கும் மன்னன் ஆனாலும் ஆகலாம்; ஒரு குந்தளத்தானோ, அல்லது வேறு அயல்நாட்டானோ இந்த அரியணையில் அமர நீங்கள் விடக்கூடாது,” என்று கேட்டுக்கொண்டபோது அவள் எப்படிக் கரும்பு தின்னக்கூலியா வேண்டும் என்ற பெரு மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுகொண்டாளோ, அவ்வாறே இப்போது மகிபாலனும் விக்கிரமாதித்தனின் ஏற்பாட்டை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான்; சகோதரியுடன் நாடு திரும்பினான்.

தாய் நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்துகொள்ளப் போகும் நினைவுடன்தான் கனிவாய்மொழி முதலில் தன் அண்ணனின் கோரிக்கைக்கு இணங்கினாள். நாடோடிப் பெண்ணாக மாறுவேடம் தாங்கி, குலோத்துங்கன் தண்டிறங்கியிருந்த இடத்துக்கு அருகே வந்து தனது ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினாள். ஆனால் குலோத்துங்கனை நேரில் பார்த்ததும், அவளுக்கு அந்தத் தியாகம் பெரிய பாக்கியமாக மாறிவிட்டதாகத்தான் தோன்றியது. இப்போது அண்ணனின் நாட்டுக்காக மட்டுமின்றி தனக்காகவும் குலோத்துங்கனை இந்த ஸ்ரீவிசயராச்சியத்தின் எல்லையைவிட்டு அப்பாற் செல்லவிடக்கூடாது என்ற உறுதி அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆம், இவரை நாடு திரும்பவிட்டால், அங்கிருக்கும் இவரது ஆசைக்கிழத்தியான முதல் மனைவி இங்கே திரும்பி வரவிடமாட்டாள் என்று உறுதியாக நினைத்தாள், கனிவாய் மொழியாக இருந்து ஏழிசைவல்லபியான அப்பெண்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 29மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 29

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 7. அதிராசேந்திரன்        சோழ நாட்டின் சரித்திரத்திலே அந்த ஆண்டு மிகவும் குழப்பமான ஆண்டு. அரச மாளிகையில் வதிந்தவர்கள் முதல் சாதாரணக் குடிமக்கள் வரையில் அப்போது மிகவும் மனக் குழப்பமான நிலையில் இருந்தனர். அடுத்து

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 6. சிவபோத அடியார்        வாழ்வில் எத்தனையோ தோல்விகளை மனிதர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான தோல்வியாக இருந்தாலும் சரி, அதற்குள்ளானவர்களைத் தாக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடுமையான தாக்குதலை

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 8. மீண்டும் பாதாளச் சிறை! மீண்டும் போர்!        வீரராசேந்திரரின் உடலிலிருந்த உதிரமெல்லாம் முகத்துக்கு ஏறியிருந்தது. பெயருக்கேற்ப வீரக்களை ததும்பும் அந்த முகம் இபோது அனலென எரிந்தது. கதவு திறக்கப்பட்டதுதான் தாமதம்; “எங்கே அந்தத் துரோகி?