Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 14

அத்தியாயம் – 14

 

மூத்த மகன் அஸ்வின் இறக்கிய இடியைத் தாங்க மாட்டாதவராய், வீட்டில் நின்று மேலும் சண்டை போட விரும்பாத சந்திரா தனது தோழியைச் சந்திப்போம் என்று எண்ணி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். ஷானவியின் நல்ல காலமோ இல்லை கெட்ட காலமோ லீ அவளைப் போக விடாது தடுத்ததிலிருந்து முத்தமிட்டது வரை எதுவுமே சந்திராவின் கண்களிலிருந்து தப்பவில்லை.

 

சிறிது நேரம் மாடிப் படி வளைவிலே நின்று நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் புயலென கீழிறங்கி கதவைத் திறந்து கொண்டு ஷானவியும் லீயும் இருந்த இடத்துக்குச் சென்றார். சென்றவர் சும்மா இருந்தால் அவர் சந்திரா அல்லவே. முதல் வேலையாக இன்டர்போனை அமுக்கினார். அழைப்பை எடுத்த கணவரிடம்,

 

“அப்பரும் பிள்ளையும் முதல்ல கெதியா கீழ வாங்கோ. வந்து இங்க நடக்கிற கூத்தைப் பாருங்கோ… பெருசா மருமகள் என்று தலையில தூக்கி வைச்சுக் கொண்டாடினீங்க தானே… அதுக்கு நல்ல கைம்மாறு செய்திட்டாள் உங்கட மருமகள்…”

 

கூறி விட்டு, விதிர் விதித்துப் போயிருந்த ஷானவியின் பக்கம் திரும்பினார். ஷானவிக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிப் பேச்சு வர மாட்டேன் என்றது. இந்த கொஞ்சமும் எதிர்பாராத பிரச்சினையால் என்ன செய்வது என்று புரியாமல் லீயை விட்டு அசையவில்லை அவள். அதுவே சந்திராவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

 

திருநாவுக்கரசுவும் அஸ்வினும் கிடுகிடுவென இறங்கி ஓடி வந்தார்கள். வந்த இருவருக்குமே லீயின் கையை இறுகப் பற்றியவாறு மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்த ஷானவியின் தோற்றம் பெரும் அதிர்ச்சி தான். இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாது வாயைத் திறந்தார் திருநாவுக்கரசு.

 

“சந்திரா…! முதல்ல எதுவென்றாலும் வீட்டுக்குள்ள போய்க் கதைப்போம்… என்ன இது… குடும்பப் பொம்பிளைப் பிள்ளையை நடுத்தெருவில வைச்சு கத்திக் கொண்டிருக்கிறாய்?”

 

“என்னது வீட்டுக்குள்ள போய்க் கதைக்கிறதோ? இங்க என்ன நடந்ததென்று முதல்ல உங்களுக்கு தெரியுமோ? இந்த ஓடுகாலி நாயை வீட்டுக்க இனியும் நான் விடுவேன் என்று நினைச்சியளோ… நல்லாருக்குது உங்கட கதை… பொது இடத்தில வைச்சு இந்த கேடுகெட்டவள் செய்த வேலை என்ன என்று தெரியுமோ? யார் குடும்ப பொம்பிளை? இந்த சனியனை இனியும் ஒரு பொம்பிளைப் பிள்ளை என்று சொல்லேலுமோ?”

 

“அம்மா… முதல்ல கொஞ்சம் கத்துறதை நிப்பாட்டுங்கோ… என்ன நடந்த என்று சொன்னால்தான் தெரியும். நீங்கள் உங்கட பாட்டில வார்த்தையளை விடாதீங்கோ சொல்லிப்போட்டேன்…”

 

“அது சரி… அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இதுக்கு மட்டும் குறைச்சலில்லை. நான் கத்துறன் கத்துறன் என்டுறியளே… அமுசடக்கு மாதிரி நிக்கிறாளே… இந்த கிராதகியை ஒரு வார்த்தை கேட்டியளோ…?”

 

“அம்மா… கத்தாதைங்கோ… முதல் வீட்டுக்காரன் போலீசுக்கு போன் பண்ணப் போறான். ஷானு…! என்னாச்சு…? நீயாவது என்ன நடந்ததென்று சொல்லன்…”

 

“அவள் எப்பிடிச் சொல்லுவாள் சண்டாளி… வெட்கம் கெட்டவள்… மான ரோசம் சூடு சுரணை இருந்தால் தானே… என்ன நடந்ததோ… பொது இடமென்ற அறிவு கூட இல்லாமல் ரெண்டு நாயும் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிக் கொண்டு நிக்குதுகள். அந்தக் கறுமத்தை என்ர ரெண்டு கண்ணாலயும் பார்த்தன்…”

 

சந்திரா சொன்னதைக் கேட்டு திருநாவுக்கரசுவும் அஸ்வினும் ஆடித்தான் போனார்கள். அவர்கள் அந்த அதிர்ச்சியான செய்தியிலிருந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ள எடுத்த சில நொடிகளில் சந்திரா மறுபடியும்  தன் திருவாயை மலர்ந்தார்.

 

“அநாதைக் கழுதையை பத்து வருசமாக செலவழிச்சு வளர்த்து ஆளாக்கிப் படிப்பிச்சு விட்டதும் இல்லாமல் இங்க வேற இத்தனை ஆயிரம் யூரோவைக் கொட்டிக் கூப்பிட்டு விட்டியளே… அதுக்கு தன் நன்றியைக் காட்டிட்டா உங்கட மருமகள். நான் தேவையில்லாமல் கதைக்கிறன் என்று சொல்லுவியளே… எங்கட குடும்பத்துக்கு ஒரு கெட்ட பேர் வந்திடக் கூடாதென்று தான் நான் இந்த நாயை வீட்டில அண்ட வேணாம் என்று சொன்னன்… பிரெஞ்சுப் படிக்கப் போறன் என்று சொல்லி எங்கெங்க போய் வந்தாளோ… எவனோடயெல்லாம் திரிஞ்சாளோ… யார் யார் கண்டினமோ தெரியேல்லையே…”

 

சந்திராவின் இத்தனை பேச்சுக்கும் எதுவுமே சொல்லத் தோன்றாமல் மௌனமாய்க் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் ஷானவி. லீக்கோ தமிழில் நடந்த உரையாடல்கள் எதுவும் புரியவில்லை என்றாலும் சந்திரா தங்களை நெருக்கமாக கண்டு விட்டதுதான் பிரச்சினை என்ற அளவில் புரிந்தது. அதனால் அவனும் அமைதியாக நின்றான். ஒருவாறு திருநாவுக்கரசு வாயைத் திறந்தார்.

 

“என்னம்மா இதெல்லாம்? மாமி சொல்லுறது உண்மையா?”

 

விக்கித்தபடி மெதுவாய் “ஆமாம்” என்று தலையசைத்தாள் ஷானவி. சந்திராவுக்கு இது போதுமே. உடனே மறுபடியும் கொதித்தெழுந்தவர்,

 

“அதுதான் நான் கையும் களவுமாகப் பிடிச்சிட்டேனே… அப்புறம் எந்த மூஞ்சிய வைச்சுக் கொண்டு இல்லை என்று சொல்லுவாள்?”

 

“அம்மா கொஞ்ச நேரம் வாயை மூடுறியளா?”

 

தாயை அதட்டி விட்டு ஷானவியிடம் சென்றான் அஸ்வின்.

 

“ஷானு…! என்ன இதெல்லாம்? முதல்ல இவன்ட கையை விட்டிட்டு வீட்டுக்கு வா… மிச்சத்தைப் பிறகு கதைக்கலாம்.”

 

“என்னது….? இந்த ஓடுகாலி நாயை வீட்டுக்கு வரச் சொல்லுறியோ…? இனி ஒரு நிமிசம் கூட அவள் என்ர வீட்டுல காலெடுத்து வைக்கக் கூடாது. இப்பவும் அந்த தாய்லாந்துக்காரி வீட்ட போறன் என்று சொல்லிட்டு எவனோட கூத்தடிச்சிட்டு வாறாளோ…? இனி இந்த சனியன் பிடிச்சவளுக்கு என்ர வீட்டில இடமில்லை சொல்லிப் போட்டன்…”

 

ஒரு உருத்திர தாண்டவத்துக்கு கொலை வெறியோடு தயாரானார் சந்திரா.

 

“உமக்கென்ன விசரே சந்திரா? அவளுக்கு எங்களை விட்டால் வேற யார் இருக்கினம்? வீட்ட விட்டுத் துரத்தினால் அவள் எங்க போவாள்?”

 

“அதை அவள் எல்லோ யோசிச்சு நடந்திருக்கோணும்… கண்டவனோடயும் திரியேக்க அந்த புத்தி வரேல்லயோ… நான் சொன்னது சொன்னது தான். இனி இந்த கழுதைக்கு என்ர வீட்டில இடமில்லை. அவளை வீட்டுக்குக் கூப்பிட்டியளோ… நான் வீட்டை விட்டு வெளிய போறன். இந்த மானங் கெட்டவள் இருக்கிற இடத்தில நான் இனி ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டேன். பாம்புக்குப் பாலூத்தி வளர்த்தால் என்ன செய்யும் என்று காட்டினதுக்குப் பிறகும் உவளையெல்லாம் நிப்பாட்டி வைச்சுப் பேசிக் கொண்டிருக்கிறியளே… உங்களை என்ன செய்யிற?”

 

சந்திரா அரிதாகக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை இழக்கத் தயாராக இல்லை. முடிந்தவரை முயற்சி செய்து ஷானவியை வீட்டை விட்டு வெளியே துரத்துவதிலேயே குறியாக இருந்தார். சந்திராவின் பிடிவாதக் குணமறிந்த திருநாவுக்கரசுவும் அஸ்வினும் எப்படி அவரைச் சமாளிப்பது என்று விழித்துக் கொண்டிருக்கவே ஷானவி முதன் முறையாக வாயைத் திறந்தாள்.

 

“மாமா…! என்னை மன்னிச்சிடுங்கோ… நான் செய்யிற தப்புத்தான். நான்… நான்… லீயோடயே போய்டுறேன்…”

 

மறுபடி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தாள் ஷானவி.

 

“ஷானு…! அம்மா தான் கோபத்தில ஏதோ சொல்லுறாங்க என்றால்… நீ வேற ஆரம்பிக்காதை… அம்மா இன்னும் யாழ்ப்பாணத்திலேயே தான் இருக்கிறா. அவக்கு சும்மா கட்டிப்பிடிச்ச கிஸ் பண்ணின எல்லாம் பெரிசாத் தான் தெரியும். நாங்க அதை கணக்கெடுக்கல. நீ வீட்டுக்கு வா ஷானு. அப்புறம் ஆறுதலா எல்லாம் கதைப்போம்…”

 

“என்னை மன்னிச்சிடு அஸ்வின். நான் லீயோடேயே போறன். எனக்கு லீயை ரொம்பப் பிடிச்சிருக்கு… சாகிற வரைக்கும் அவனோட தான் வாழணும் என்று ஆசைப்படுறேன்….”

 

“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? அப்பரும் மோனும் நான் சொன்னப்ப நம்பலையே… இப்ப அவளே தன்ர வாயால சொல்ல நம்பிறியளா? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சாலும் அது தன்ர சொந்தக் குணத்தைத் தானே காட்டும்… கொஞ்சம் கூட நன்றியில்லாத ஜென்மம்…”

 

“என்ன ஷானு சொல்லுறாய்? இவனை உனக்கு எத்தினை நாளாய் தெரியும்? ரெண்டு மாச பழக்கத்தில சாகிற வரைக்கும் கூட வாழுற அளவுக்கு பிடிச்சிடுச்சா? கொஞ்சமாவது புத்தியோட கதை ஷானு… அப்பா என்னப்பா பார்த்திட்டு இருக்கிங்க… நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கோவன்… ஷானு… ப்ளீஸ் முதல்ல வீட்டுக்கு வா…”

 

“என்னை மன்னிச்சிடுங்கோ மாமா… நீங்க எனக்கு செய்த உதவியளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்… அதுக்கு இந்த ஜென்மத்தில நான் பிரதியுபகாரம் செய்யவும் முடியாது. லீயை உண்மையாகவே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மாமா. அவனுக்கும் என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் அவனோடேயே போறன் மாமா. என்னால இனியும் உங்களுக்கு எந்த மனக் கஷ்டமும் வேணாம். வீட்டிலயும் நிம்மதி கெட வேணாம்.”

 

விக்கி விக்கி கண்களில் நீர் ஆறாக வழிய சொன்னாள் ஷானவி. பேச்சின் இடையிடையே லீ என்று தன் பெயர் அடிபட்டதைத் தவிர வேறு எதையும் லீயால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் ஷானவி அவ்வளவு தூரம் வேதனையோடு விம்முவதைப் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போனான். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் ஷானவி லீயைப் பற்றியிருந்த கையை விடவில்லை. பிடிதான் இறுகி லீயின் வெள்ளைத் தோல் சிவந்து கணன்று கொண்டிருந்தது.

 

“சும்மா லூசு மாதிரி கதைக்காதை ஷானு… அவன் எப்பிடிப்பட்டவன் என்றே தெரியாமல் போறன் போறன் என்றுறாய்… நீ போனா என் கதி? அதைக் கொஞ்சம் கூட நீ யோசிக்கலையா? இந்த ஒரு வருசத்தில ஒரு துளியாவது என்னில அன்பு வரேல்லையா?”

 

கோபத்தில் இருந்தாலும் ஆதங்கமாக கேட்டான் அஸ்வின். அப்போது திருநாவுக்கரசு குறுக்கிட்டார்.

 

“ஷானும்மா…! நீ புத்தியுள்ள பிள்ளை… வாழ்க்கையில் நீ படாத கஷ்டம் எதுவுமில்லை. நீ ஏன் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறாய் என்று புரிந்து கொள்ள முடியாதளவுக்கு இந்த மாமா ஒரு முட்டாள் இல்லை. இந்த கையாலாகாத மாமாவை மன்னிச்சிடும்மா… நீ எங்க இருந்தாலும் சந்தோசமாக இரும்மா… இனியென்றாலும் அந்த நல்லூர்க் கந்தன் உனக்கு எந்தக் கஷ்டத்தையும் தராமல் இருக்கட்டும். சந்தோசமாக போய் வாம்மா…”

 

ஷானவியோ, அஸ்வினோ, சந்திராவோ திருநாவுக்கரசின் இந்த முடிவைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போய் நின்றார்கள். முதலில் சுதாரித்த அஸ்வின் தான்,

 

“என்னப்பா உங்களுக்கும் விசர் முத்திட்டுதே… அவள் தான் ஏதோ லூசு மாதிரி கதைக்கிறாள் என்றால் நீங்க வேற… அவளைப் போக வேணாம் என்று சொல்லுங்கோப்பா…”

 

திருநாவுக்கரசுவோ அத்தோடு தன் பணி முடிந்து விட்டது போன்று வீட்டுக்கு செல்லத் திரும்பினார்.  கணவர் மனசு மாறி விடுவாரோ என சிந்தித்தபடி சந்திராவும் அவரோடு படியேறத் தொடங்கினார்.

 

லீயிடம் திரும்பிய ஷானவி,

 

“நான் உன்னோட வாறேன் லீ…”

 

என்றாள் ஆங்கிலத்தில். லீயின் மகிழ்ச்சிக்கு அளவேது? இவ்வளவு நேரம் நடந்தவற்றை பார்த்து புரிந்தும் புரியாமலும் ஷானவியின் கண்ணீர் பார்த்து தானும் கலங்கிக் கொண்டிருந்தவன், தனது கண்ணீரை உள்ளுக்கிழுத்தவாறே ஷானவியின் கண்ணீரைத் துடைத்து விட்டவன் அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

“மெர்சி புக்கு மொன்னம்மோர்…”

 

கூறியவன் அவள் உச்சியில் இதழ் பதிக்கவும் மறக்கவில்லை. இந்தக் காட்சியைக் காணச் சகிக்காத அஸ்வின், தன் பொறுமையெல்லாம் காற்றில் பறக்க விட்டவனாய் ஆங்கிலத்தில்,

 

“ஹேய் மிஸ்டர்! அவ என் மனைவி… அதை என்றைக்கும் மறந்திடாதை…”

 

அவன் கூறியதைக் கேட்ட நொடி லீயின் அணைப்பு ஒரு கணம் எங்கே எலும்பெல்லாம் நொறுங்கி விடுமோ எனும் வண்ணம் இறுகித் தளர்ந்தது. ஷானவியின் முகத்தை நிமிர்த்தியவன்,

 

“அவன் சொல்லுறது உண்மையா? நீ மரீடா?”

 

என்று வினவினான். அஸ்வின் இப்படிப் போட்டுடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காதவள், லீ இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறானோ என்ற பயம் ஒருபுறம் நெஞ்சைப் பிசைய பதட்டத்துடன் லீயைப் பார்த்தவள் பேச முயற்சித்தும் வெறும் காற்றே பதிலாய் வர, “ஆமாம்” என்று தலையாட்டினாள்.

 

“என்னோடு வாற உன் முடிவில் ஏதும் மாற்றம் இருக்கா?”

 

“இல்லை” என்று தலையசைக்கவும் ஷானவியைத் தோளோடு அணைத்துக் கொண்டு, அவள் பெட்டியை மறு கையில் தூக்கிக்கொண்டு காரை நோக்கிச் சென்றான். அஸ்வினோ செய்வதறியாது அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

காரில் சென்று அமர்ந்ததும் தான் ஷானவி மூச்சு விட்டாள் எனலாம். ஆனால் இப்போது இருதயம் முன்னை விட வேகமாக அடித்துக் கொண்டது. காரணம் லீயின் இந்த முற்றும் புதிதான இறுகிய தோற்றம். அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாது காரை எடுத்தான்.

 

ஷானவிக்கோ  இத்தனை நாட்கள் தான் கல்யாணமானவள் என்பதை மறைத்து பழகினேன் என்று லீ கோபம் கொண்டிருப்பது புரிந்தாலும் எப்படித் தன் பக்கத்து நியாயத்தை விளக்குவது என்று தெரியாமல் மறுபடியும் கண்ணீர் ஆறு ஊற்றெடுக்க அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

லீ பற்றிச் சொல்லவும் தேவையில்லை. ‘எத்தகைய பெரிய விடயத்தை என்னிடம் மறைத்து விட்டாள், அப்புறம் எப்படி என்னோடு இவ்வளவு அன்பாகப் பழகினாள்? எல்லாமே வெறும் வேசமா? சில வேளை நான் யாரென்ற உண்மை தெரிந்து என் பணத்துக்காகத்தான் பழகினாளோ? எல்லா நாட்டுப் பெண்களும் ஒன்று தானா? ஒரு தடவை பட்டும் திருந்தாமல் எப்படி ஏமாந்தேன்?’

 

என்று தனக்குள்ளேயே பலவும் யோசித்து உள்ளே எரிமலையாய் கணன்று கொண்டிருந்தான்.

 

எரிமலை அணையுமா? இவர்கள் வாழ்வில் தென்றல் வந்து தெம்மாங்கு பாடுமா?7 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: