Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 18

அத்தியாயம் – 18

 

சனிக்கிழமை காலை. ஷானவிக்கும் லீ யூ வோனுக்கும் பிரெஞ்ச் வகுப்புகள் நல்லபடியாக முந்தினம் தான் முடிந்திருந்தது. பரீட்சைக்குப் படித்த அயர்ச்சியில் இருவரும் தாமதமாகத்தான் எழுந்திருந்தனர். ஷானவி எழுந்து அறையை விட்டுக் குளியலறை நோக்கிச் செல்லும் போது, லீ சமையலறையில் தனது நளபாகத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று காலையிலேயே டப்போக்கி எனப்படும் ஸ்பைசி ரைஸ் கேக் சாப்பிட வேண்டும் போலத் தோன்றவும் ஆரம்பித்து விட்டான்.

 

“சலூ லீ…! குட் மோன்னிங்…”

 

சொன்னபடி இவள் குளியலறையில்ச் சென்று மறைந்தாள். இனி அவள் வெளியே வர அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தவன், தனக்குப் பிடித்த ஒரு பாடலை மெதுவாய் முணுமுணுத்தபடி முதலில் ரைஸ் கேக் செய்ய ஆரம்பித்தான்.

 

இரண்டு கப் அரிசி மாவுக்கு அளவான உப்புச் சேர்த்து முக்கால் கப் அளவில் தண்ணீர் விட்டு இடியப்ப மா பதத்தில் நன்கு பிசைந்தெடுத்தான். பின்பு பிளாஸ்டிக் கவரால் மூடி இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தவன், நன்றாக மாவைப் பிசைந்து மறுபடியும் இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து எடுத்தான்.

 

கைகளுக்கு உறையை மாட்டிக் கொண்டவன், செஸாமி ஒயில் சிறிதை கட்டிங் போட்டில்த் தடவி விட்டு, இந்த மாக் கலவையை அதில் வைத்துச் சப்பாத்திக் கட்டையால் நன்றாக அடித்துப் பதப்படுத்தினான். பதப்படுத்தி விட்டு அதை நன்கு உருளையாக உருட்டிப், பின்னர் அவற்றை சாதாரண சொசேஜ் சைஸ்ஸில் சிறு சிறு நீள உருளைகளாக்கினான்.

 

இவன் மாவைப் பதப்படுத்துவதற்காக அடித்த போது சத்தம் கேட்டு, பல் துலக்கிக் கொண்டிருந்த ஷானவி வெளியே எட்டிப் பார்த்தாள். தலையில் ஷெப்பிற்குரிய தொப்பி, ஏப்ரன் சகிதம், கையில் கிளவுஸோடு, வாயையும் சுற்றி மாஸ்க் போட்டுக் கொண்டு அவன் மாவை உருட்டும் கோலம் பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் குளியலறையில்ச் சரணடைந்தாள்.

 

‘அட நல்லூர்க் கந்தா…! இவனிட்டக் கொண்டு வந்து இப்பிடி என்னை மாட்டி விட்டிட்டியேப்பா… பைவ் ஸ்டார் ஹோட்டல் ஷெப் கூடத் தோத்துப் போய்டுவார். இவன் இப்ப சமைக்கிறானா இல்லை ஒப்பரேசன் ஏதும் செய்யிறானா?’

 

கை அது பாட்டில்ப் பற்களைத் தேய்க்க, மனதோ லீக்கு சகஷ்டநாம அர்ச்சனை பாட ஆரம்பித்தது. ஆனால் இப்போதெல்லாம் அவன் மீது சிறு வெறுப்போ கோபமோ இல்லாமல் அவனை அவனது இயல்புகளோடே ரசிக்க ஆரம்பித்திருந்தாள். ஒரு தடவையாவது அவனோடு சண்டை போடாவிட்டால் அவளுக்குத் தூக்கம் வராது.

 

அவள் குளியலறையை விட்டு வெளியே சென்ற போது லீ இன்னமும் சமையலறையில்த்தான் நின்றிருந்தான். ரைஸ் கேக் செய்து முடித்திருந்தவன், இப்போது tteobokki ஸ்பைஸி ரைஸ் கேக்குக்கு உரிய வேலையில் ஈடுபட்டிருந்தான்.

 

நாலு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைத்தவன், ஏழு dried anchovies (நெத்தலி போன்ற சிறு மீன் கருவாடு) ஐச் சுத்தம் செய்துப் பாத்திரத்தில்ப் போட்டான். பின்னர் dried kelp (பெரும்பாலான கொரியன் உணவுகளில் உபயோகிப்பார்கள்.) ஐந்துக்கு ஆறு அங்குல அளவில் செவ்வகமாக வெட்டி அதையும் சேர்த்துப் போட்டுப் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விட்டான். இவை கொதிக்கும் போதே உறைப்புக்குத் தேவையான சோஸையும் தயாரிக்க ஆரம்பித்தான்.

 

பெப்பர் பேஸ்ட்டோடு மிளகாய்த் தூள், சிறிது சீனியும் சேர்த்தவன், பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தவற்றில் வெறும் தண்ணீரை விட்டு விட்டு மீதிப் பொருட்களை வடித்தெடுத்து வேறாக வைத்தான். பின் அந்த நீரில் தயாரித்து வைத்திருந்த சோஸ், ரைஸ் கேக், அவித்த முட்டை இரண்டு, நீளமாக வெட்டிய லீக்ஸ், பிஷ் ஃபோல்ஸ் எல்லாவற்றையும் போட்டு சிறிது நேரம் அவிய விட்டான்.

 

கொஞ்சமாய் மீன் வாசத்தோடு கமகமவென மணம் வீடு முழுவதும் பரவ, மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடித்தவாறே வந்தாள் ஷானவி.

 

“ஹேய் லீ…! என்ன சமைக்கிறாய்? வாசமே சூப்பராக இருக்கே…”

 

“ஸ்பைஸி ரைஸ் கேக்… நீ உறைப்புச் சாப்பிடுவாய் தானே”

 

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டிட்டாய்? நாம எல்லாம் லஞ்ச்சுக்கு வெறும் பச்சை மிளகாயையே சாப்பிடக் கூடிய ஆக்கள் தெரியுமோ?”

 

“அப்ப சரி… வா… வந்து சாப்பிடு…”

 

இரண்டு கிண்ணங்களில் இருவருக்கும் அளவாய் ஊற்றி கரண்டி, முள்ளுக் கரண்டி வைத்து ஒன்றை அவளிடம் கொடுத்தான். தனக்கு முள்ளுக் கரண்டிக்குப் பதிலாய்க் குச்சியோடு உண்ண அமர்ந்தான்.

 

“ஷானு…! ரொம்பச் சூடாக இருக்கு. பார்த்துக் கவனம்.”

 

தலையாட்டிக் கொண்டே கொஞ்சமாய் எடுத்து ஊதி விட்டு வாயில் வைத்தாள். சூடும் உறைப்பும் உச்சியில் அடிக்க, புரைக்கேறி இரும ஆரம்பித்தாள். கண்களில் நீர் வடியத் தானே நடு உச்சியைத் தட்டிக் கொண்டாள். லீ பதறிப் போய்க் குடிக்கத் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். வாங்கி மடமடவெனக் குடித்து இருமல் ஒரு கட்டுக்குள் வரவும், சிந்திய மூக்கைத் துடைத்தவாறு அசடு வழிய லீயைப் பார்த்தாள். அவனோ கோபத்தின் உச்சியில் இருந்தான் என்பதை அவன் சிவந்த முகமே காட்டியது.

 

“உனக்கு இந்த ஸீன் போடுறதில மட்டும் குறைவில்லை. உறைப்புச் சாப்பிட ஏலாது என்றால்ச் சொல்ல வேண்டியது தானே. சுடுகுது என்று சொன்னது உனக்குக் காதில விழேலையா? காதென்ன செவிடா? அதை அங்கால வை. நான் ஃப்ரெட் ரோஸ்ட் பண்ணுறன். ஜாமோட சாப்பிடு.”

 

“நோ… நோ… அது சூட்டில தான் உறைப்பும் சேர பிரக்கடிச்சது. நான் இதையே சாப்பிடுறன் ப்ளீஸ்…”

 

“ஏதோ செய்துத் தொலை…”

 

என்று விட்டுத் தனது உணவில்க் கவனமானான். ஆனால் அவன் உள் மனமோ, மறுபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. ‘இவளுக்கு இருமினால்க் கூட என் மனம் இப்பிடித் துடிக்குதே… இவளில்லாமல் என் வாழ்வு சாத்தியமா?’ லட்சம் தடவையாக அதே கேள்வியோடு ஐக்கியமானான்.

 

இப்போது சூடும் கொஞ்சம் குறைந்திருக்க, ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தாள் ஷானவி.

 

“உண்மையா சூப்பர் லீ… த்ரே ஃபொன்… ஆனா நீ இவ்வளவு உறைப்புச் சாப்பிடுவாய் என்று நான் எதிர்பார்க்கலை…”

 

பதில் ஏதும் கூறாமல் அவளை நிமிர்ந்து பார்த்துத் தனது அக்மார்க் உதட்டுச் சுளிப்பை வழங்கி விட்டுத் தோளைக் குலுக்கினான்.

 

‘இந்த நெளிப்புச் சுளிப்புக்கு மட்டும் குறைவில்லை’

 

தனக்குள்க் கூறிக் கொண்டவள்,

 

“லீ…! நாளைக்கு அனுஷரா வாறாள்… நீ கதைச்சியா?”

 

“ம்…”

 

அவன் வெறும் ‘ம்’ மட்டும் சொல்லவும் இவள் கடுப்பானாள்.

 

‘தகர டப்பா மூஞ்சி மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில ஏறின போல பழைய பொசிசனுக்குப் போய்ட்டுது. இந்த கொதிதண்ணியை நம்பி வந்த என்னைச் சொல்லோணும்.’

 

இடக் கையால்த் தனது தலையைத் தட்டிக் கொண்டே உணவில்க் கவனமானாள்.

 

இருவரும் உண்டு முடித்ததும் ஷானவி சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு வரவேற்பறைக்குச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துச் சத்தமாக யூ டியூப்பில் தமிழ் குத்துப் பாடல்கள் என்று வைத்தவள், தலையாட்டிக் கேட்டுக் கொண்டே ஓவியம் வரைவதற்குரிய பொருட்களை அங்கே கடைப் பரப்பினாள்.

 

பாட்டுச் சத்தம் காதைப் பிளக்க, முறைத்தபடி வரவேற்பறைக்கு வந்த லீ, ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தான். ஷானவி வரைவதில் மும்மரமாகியதால் லீயை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டுத் தனது வேலையில்க் கவனமானாள்.

 

தனது அறைக்குச் சென்ற லீ கீபோர்ட்டில் எதையோ வாசிப்பதும் பாடுவதும் அவற்றைக் குறிப்பெடுப்பதுமாக இருந்தான். நேரம் போவதே தெரியாமல்த் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள் இருவரும். லீ தான் முதலில்த் தனது வேலை முடித்து வரவேற்பறைக்குச் சென்றவன், தனது கண்களைச் சிமிட்டவும் மறந்து பார்த்திருந்தான்.

 

லீயைப் பட்டு வேட்டிச் சட்டையிலும் ஷானவியைப் பட்டுச் சேலையிலும் திருமணக் கோலத்தில்த் தாலி கட்டும் காட்சியை அத்தனை தத்ரூபமாக வரைந்திருந்தாள் ஷானவி. இவள் கைகூப்பிச் சிறு வெட்கச் சிரிப்போடு தலை குனிந்து அமர்ந்திருக்க, லீ அவள்க் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்துக் கொண்டிருந்தான்.

 

அவனையும் அறியாமல்க் கண் கலங்கியவன், திரும்பவும் தனது அறைக்கே சென்றுக் கட்டிலில் வீழ்ந்தான். என்னவென்றே சொல்ல முடியாத உணர்வு மனதைப் பிசைந்தது. மனதிலே அத்தனை ஆழ்ந்த காதல் இல்லாமல் ஒரு கற்பனைக் காட்சியை இத்தனை தத்துரூபமாக வரைவது சாத்தியமா என்ன?

 

அவளின் காதல் புரிந்தாலும் அதை முற்று முழுதாய் நம்ப முடியாமல்த் தவித்தான் இவன். ஆனால் ஷானவியோ அதற்கு எதிர்மறையாக இப்போது மனதிலே எந்தக் குழப்பங்களும் இல்லாமல் லீயைத் தன் கணவனாய் மனதில் வரித்து அவனோடு செல்லச் சண்டைகள் போடுவதும், மனதுக்குள்ளே அவனை ஆசைக்கு திட்டிக் கொள்ளுவதுமாய் இருந்தாள்.

 

ஓவியத்தை முடித்தவள், அதை அப்படியே தாங்கியோடு சேர்த்துக் கொண்டு போய்த் தனது அறையில் உலர வைத்தாள். சமையலறைக்கு வந்தவளுக்கு அப்போது தான் நேரம் மதியம் இரண்டு மணி தாண்டியிருப்பது தெரிந்தது. ‘அச்சச்சோ…’ என்று நாக்கைக் கடித்தவள், அவசரமாக என்ன சாப்பாடு செய்யலாம் என்று யோசித்து விட்டு உப்புமாக் கிண்ட ஆரம்பித்தாள். முடித்து விட்டு லீயின் அறைக் கதவைத் தட்ட, அங்கு எந்தச் சத்தமும் இல்லை. மெதுவாய்க் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

 

கீ போர்ட் அருகே நோட்ஸ் குறித்து வைத்திருந்த கொப்பி திறந்தபடி கிடந்தது. அதை எடுத்துப் பார்த்து விட்டு அந்த நோட்ஸ்ஸின் பிரகாரம் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு தடவை வாசித்தவளுக்கு அந்த சங்கதி பிடிபட்டு விடக் கொப்பியைப் பார்க்காமல் வாசித்துக் கொண்டே ஹம் பண்ணினாள். அடுத்த தடவை கண்ணை மூடிக் ஹம் பண்ணிக் கொண்டே சில மாற்றங்களைக் கொண்டு வந்து வாசித்து முடிக்கவும் கை தட்டும் சத்தம் கேட்டது.

 

“ப்ராவோ… ஷானு…! நீ இவ்வளவு அற்புதமாக வாசிப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. அதுவும் நீ சேஞ்ச் பண்ணின பிறகு இன்னும் செமயா வந்திருக்கு…”

 

கூறியவன் கிட்டாரைக் கையில் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த ஸ்டீலில் அமர்ந்தவன், கிட்டாருக்கு சுருதி சேர்த்து ஒழுங்கு செய்தவாறே,

 

“ஷானு…! நீ கடைசியாக வாசிச்சதைத் திருப்பி வாசி… இந்த ஸ்டார்டிங்குக்கு ஏற்ப உன்னால கொன்டினியூ பண்ண முடியும் என்றால்த் தொடர்ந்து வாசி…”

 

என்றான். அவளும் அவன் ஆசையை நிறைவேற்ற மகிழ்ச்சியாகவே வாசிக்க ஆரம்பித்தாள். இவன் கொரியன் மொழியில் ஏதோ பாடியபடியே அவள் இசைக்கேற்ப கிட்டாரைத் தட்ட ஆரம்பித்தான். பசி மறந்து குறிப்பெடுப்பதும் திருத்துவதுமாக இவர்கள் தங்கள் வேலை முடித்த போது மாலை ஆறு மணி கடந்திருந்தது.

 

பெயருக்கு சாப்பிட்டு விட்டு மறுபடியும் அந்த இசை பற்றியே பேசிக் கொண்டிருந்தவர்கள் பொழுது எந்த விதச் சண்டையும் இல்லாமல் இனிதே கழிந்தது. அந்த இனிமை அடுத்த நாள் காலையில் லீ, “ஷானு…” என்று அலறிய வரைக்கும் தான்.

 

அவன் கத்திய சத்தம் கேட்டுத் துடித்துப் பதைத்து எழுந்து சமையலறைக்கு ஓடினாள். அங்கு கோபத்தின் உச்சியில் நின்றான் லீ.

 

“உனக்கு எத்தினை தரம் சொல்லுறது? கிச்சினை கிளீனா வை என்று. நேற்று சமைச்சிட்டு அடுப்பைக் கிளீன் பண்ணாம விட்டிருக்கிறாய்… டிஸ் வோஸ்ப் பண்ணாம விட்டிருக்கிறாய். பால் குடிச்ச கிளாஸ் காய்ஞ்சு போய்க் கிடக்கு. பாத்ரூம்ல உன்ர ட்ரெஸ் எல்லாத்தையும் அங்கயும் இங்கயும் தொங்க விட்டிருக்கிறாய்.”

 

அவன் மூக்கு நுனி சிவக்கக் கத்தவும், இவளோ ஒரு கொட்டாவியை வெளியேற்றிக் கொண்டு,

 

“நீ கத்தின கத்தில நானும் என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன். நைட் நீ தானே கீ போர்ட் வாசி… வாசி என்று உயிரை வாங்கினாய். அது தான் டயர்ட்டில கிளீன் பண்ண மறந்து தூங்கிட்டன். ஏதோ நான் கொலை செய்த போலக் கத்துறாய். எனக்குத் தூக்கம் வருது. இன்னும் கொஞ்ச நேரம் படுக்கப் போறன்… போ…”

 

கூறி விட்டுத் தனது அறையை நோக்கித் திரும்பியவளை கொலை வெறியோடு பார்த்தான் லீ. எதுவும் பேசாமல் அவள் கத்தக் கத்த, நெட்டித் தள்ளிச் சென்றுக் குளியலறையில் விட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறமாகப் பூட்டினான். அவள் கதவைத் தட்டிக் கத்தியதைப் பொருட்படுத்தாமல்ச் சமையலறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

 

“டேய் மைதா மாவு… கதவைத் திறடா… அடேய் கொரியன் ரோபோ…! இப்ப நீ கதைவைத் திறக்கேலையோ நடக்கிறதே வேற…”

 

அவள் கத்தல்கள் விழலுக்கு இறைத்த நீராகியது தான் மிச்சம். ஆனால்ச் சற்றும் சளைக்காதவளாய்த் தொடர்ந்துத் தட்டினாள்.

 

“ஏன்டா குரங்கு மூஞ்சி ஒரு நாள்க் கிளீன் பண்ணாதது அப்படியொரு குத்தமா? ஓவராத்தான் ஸீன் போடுறாய்…”

 

கதவின் அருகே வந்தவன்,

 

“உனக்கு இருபது நிமிசம் தரலாம். அதுக்குள்ள ஃபாத்ரூம் கிளீன் பண்ணிட்டு நீ வெளிய வரலாம். அதுவரைக்கும் நீ சும்மா சும்மா கதவைத் தட்டி நோ யூஸ்…”

 

கூறிவிட்டுச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துச் சத்தமாக வைத்து விட்டுத் தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். பாவம் லீ யூ வோன். ஷானவியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டான். காலையில் அபசுரமாய்த் தூக்கம் கலைந்த கடுப்பில் இருந்தவளுக்கு லீயின் செய்கைக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. கதவைத் தட்டுவதை நிறுத்தினாள். கதவு தட்டும் சத்தம் நின்றதும் உதட்டைச் சுழித்துச் சிரித்த லீ, ‘அப்படி வழிக்கு வா மகளே’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான், நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல்.

 

நடக்கப் போவது என்ன?


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: