Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 16

அத்தியாயம் – 16

 

அந்தத் தை மாதக் கடுங் குளிர் கட்டிலை விட்டு எழவே விடாது ஒரு சோம்பல் மனோ நிலையை உண்டாக்க, அந்த தடித்தப் போர்வையை மறுபடியும் கழுத்து வரை இழுத்து மூடிக் கொண்டு புரண்டுப் படுத்தாள் ஷானவி. எழுந்தும் என்ன செய்வதென்று புரியாத நிலை. இதுவே மாமா வீடாக இருந்திருந்தால் இப்படிப் புரண்டுப் படுப்பதைக் கூடச் சிந்திக்க முடியாதளவுக்கு வேலைகள் வரிசையில்க் காத்திருக்கும்.

 

ஆனால் இப்போது லீ யூ வோன் வீட்டில் எப்படித் தன் அன்றாட வாழ்க்கையை ஆரம்பிப்பது என்ற எண்ணம் தோன்ற குழப்பமான மனவுணர்வுகளோடு தன் வழக்கமாய் நல்லூர்க் கந்தனை அழைத்தாள்.

 

“அடேய் கந்தா! இப்போ எப்பிடித்தான் நான் இங்க சும்மா இருந்து சாப்பிடுறது? லீ வேற என்னில ரொம்பக் கடுப்பில இருக்கிறான். இந்த நிலைமைல அவனிட ஆதரவில இருக்கிறது மானம், ரோசம் இல்லாத போல போலவல்லோ இருக்கு. நான் இன்னும் ஆஆ (A1) கூட பிரெஞ்ச் கிளாஸ் முடிக்கேல்ல. இந்த நிலையில என்ன வேலை செய்து எப்பிடிச் சம்பாதித்து இந்த கொரியன் ரோபோக்கு அவன்ட வீட்டில இருக்கிறதுக்கு வாடகைக் குடுப்பன்?

 

நினைக்கவேத் தலை சுத்துதே… ஏதாவது வழியைக் காட்டு முருகா… ஊருக்கு வரேக்க உனக்கு நல்ல கறுத்தக் கொழும்பான் மாம்பழமாக (யாழ்ப்பாணத்துப் பிரசித்திபெற்ற மாம்பழ வகை) வாங்கி வைச்சு அர்ச்சனை பண்ணுறேன். உன்ர அண்ணர் கணேசருக்கு உண்மையா வாங்கிக் குடுக்க மாட்டேன். நீ சும்மா அந்தாளோட அடிபடாமல் வடிவாச் சாப்பிடலாம். உனக்கு என்ன லஞ்சம் என்று சொல்லிட்டேன் தானே. ஸோ இப்ப நல்ல ஐடியாவாத் தாறது உன்ர பொறுப்புச் சரியா?”

 

தங்கக் கூரையின் கீழ் வீற்றிருக்கும் நல்லூர் அலங்காரக் கந்தனுக்கே மாம்பழம் லஞ்சம் தருவதாய்க் கூறிப் பெரும் யோசனையில் ஈடுபட்டிருந்தாள் ஷானவி.

 

சிறு வயதில் இருந்தே பற்பலத் துன்பங்களைத் தாங்கி அவற்றையெல்லாம் கடந்து வரப் பழகியிருந்ததனாலோ என்னவோ, எந்த ஒரு சூழ்நிலையையும் ஷானவி துணிவாகவே எதிர் கொள்வாள். இக்கட்டானச் சந்தர்ப்பங்களையும் தளர்ந்து போயிடாது எளிதாய்க் கடந்துச் செல்லத் தீர்வைத் தேடுவாள். அதனால்த் தான் என்னவோ லீ வீட்டில் வாழ்வதாய் முடிவெடுத்தப் பின்னும் அவளால்ச் சிறுச் சிறு மனக்குழப்பங்கள் மட்டுமே மனதை மையம் கொள்ள லீயின் டாய்லெட்டிலிருந்து அனைத்தையும் புதிய இடமென்ற பாகுபாடின்றி அனுபவித்து ரசிக்க முடிகின்றது.

 

ஆனாலும் அவளும் சாதாரணப் பெண் தானே. அந்தந்த நேரங்களின் உணர்ச்சித் தாக்கங்களால் வசமிழந்து போகும் சந்தர்ப்பங்களும் நடந்தேறத்தான் செய்கின்றன. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த நோக்கற்று இப்போது லீ வீட்டுக்கு வந்திருப்பது போல.

 

தனது சிந்தனைகளிலேயே ஆழ்ந்திருந்தவள் லீ அழைத்ததைக் கவனிக்கவில்லை. அவள் அறைக் கதவை மெதுவாய்த் தட்டியவன் எதிர் முனையில் பதிலற்றுப் போகவே மெதுவாய்க் கதவைத் திறந்துப் பார்த்தான். ஷானவி இன்னமும் கட்டிலில்ப் படுத்திருப்பதைப் பார்த்து அவளுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையோ என்று எண்ணமிட்டவாறு அவள் அருகில்ச் சென்றவன், தனது புறங்கையை அவள் நெற்றியில் வைத்து உடற் சூட்டைக் கணிக்க முனைந்தான். அவன் தொடுகையுணர்ந்து இவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

 

“சலூ ஷானு! நான் கூப்பிட்டும் நீ எழும்பேல்ல என்றக் காய்ச்சலோ தெரியல என்றுப் பார்த்தேன்.”

 

“குட் மோர்னிங் லீ! நான் ஏதோ யோசிச்சிட்டு அப்பிடியே படுத்து இருந்தேன்.”

 

“சரி… சரி… எழும்பி வா. பெத்தித்யூர்னே (காலை உணவு) ரெடி பண்ணுறேன்.”

 

கூறியபடி அவள் எழுவதற்கு உதவி செய்தவன், அவள் போர்வையைத் தானே மடித்து வைத்து விட்டு அவளை குளியலறையின் அருகே கொண்டு சென்று விட்டான். அவளும் தனது காலைக் கடன்களை முடித்துத் தயாராகி வரவே அவளைச் சாப்பாட்டு மேசையில்க் கூட்டிச் சென்று அமர்த்தினான்.

 

மல்டி சீரியல் பாண் டோஸ்ட்டரில் வெந்துக் கொண்டிருக்க, லீ ஓம்லெட் போட்டுக்கொண்டிருந்தான். செர்ரி ஜாம், பட்டர் வைக்கப் பட்டிருந்தன. அவனுக்கு ப்ளாக் கஃபேயும் அவளுக்கு ப்ளாக் டீயும் தயாராய் இருந்தன. இரு கண்ணாடிக் குவளைகளில் புதிதாய்த் தயாரிக்கப்பட்ட தோடம்பழச் சாறும் இருந்தது. ஓம்லெட் ஒன்றை அவள் தட்டிலும் மற்றையதைத் தன்னதிலும் போட்டுக் கொண்டு ஷானவியின் முன்னர் அமர்ந்தான் லீ.   

 

எதுவும் பேசாது மௌனமாய் பாணில் ஜாமைத் தடவலானாள். லீயும் தட்டிலிருந்த ஓம்லெட்டைக் கத்தியால் வெட்டி முள்ளுக்கரண்டியால் நாசூக்காய் எடுத்து வாயில்ப் போட்டான். ஷானவி அடுத்த துண்டுப் பாணுக்கு பட்டரைப் பூச எண்ணி அதை எடுக்கக் குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததனால் இறுகிப் போயிருந்தது.

 

“கொஞ்சம் பொறு ஷானு!”

 

அவள் சிரமப்படுவதைப் பார்த்துத் தடுத்தவன், கொதிநீரை ஒரு கண்ணாடிக் குவளையில் நிரப்பி மூடினான். இரு நிமிடங்களில் குவளை சூடாகி விட, நீரை வெளியே ஊற்றி விட்டு அந்தக் குவளையால் பட்டரை மூடினான்.

 

‘மைதா மாவு பட்டருக்கு என்ன வைத்தியம் பார்க்குது?’

 

என்று சிந்தித்தபடியே தேநீரை மெதுவாய் உறிஞ்சிக் கொண்டிருந்தாள் ஷானவி. சில நிமிடங்களில் குவளையை அகற்றி விட்டு, பட்டரை எடுக்க அது பாணில் பூசுவதற்கு ஏற்ப இளகி இலகுவாய் வந்தது. தானே ஒரு துண்டில் பட்டரைப் பூசி ஷானவியிடம் கொடுத்தான் லீ யூ வோன். அவளும் வாங்கியுண்டவாறே லீயின் முகத்தை ஆராயும் விழிகளோடு நோட்டமிட்டாள். அவள் பார்வையை உணர்ந்த அவனும், ‘என்ன?’ என்பதாய்ப் புருவம் தூக்கிப் பார்வையாலேயே விசாரித்தான்.

 

“உன்னோட கொஞ்சம் கதைக்கோணும் லீ”

 

“ம்… சொல்லு… ஆனா உன் கல்யாணக் கதையைப் பற்றி என்றால் அதைக் கேட்க எனக்கு நேரமில்லை.”

 

“அதில்லை. வந்து… நான் இங்க இப்பிடி உன்ர செலவில் இங்க இருக்கேலாது தானே…”

 

எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்வதென்று தெரியாமல் மென் குரலில்த் தடுமாறினாள். லீயும் எதுவும் பேசாது அவளே சொல்லி முடிக்கட்டும் என்று பார்வையாலேயே அவளை ஊக்கியபடித் தனது உணவிலேயே கவனமாய் இருந்தான்.

 

“அது வந்து… நான் இங்க இருக்கிறதுக்கு உனக்கு வாடகை தந்திடுறேன். இப்போதைக்கு என்னட்ட காசு அவ்வளவாக இல்லை. நீ இந்தச் செயினை வைச்சுக் கொள். நான் எப்படியாவது ஒரு வேலையெடுத்திட்டு உனக்கு பிறகுக் காசாகத் தந்திடுறேன். சரியா?”

 

கூறியபடிக் கழுத்திற்ப் போட்டிருந்த ஒரு தடித்த நீண்ட தங்கச் சங்கிலியைக் கழட்டி அவன் முன்னே மேசை மீது வைத்தாள். சிறிது நேரம் எதுவும் பேசாமல் புருவங்கள் சுழித்து யோசனையூடே உணவை முடித்தவன் கஃபேயை ஒரு மிடறு அருந்தி விட்டு அவளைப் பார்த்தான். அவள் இன்னமும் இவன் பதிலுக்காய்க் காத்திருப்பது புரிய அந்தத் தங்கச் சங்கிலியை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து கொண்டான்.

 

“லீ…! இது அம்மாவுக்கு அப்பா முதலாவது வெடிங் அனிவசரிக்குக் குடுத்ததாம். இப்போ அவங்க ஞாபகமாக இது மட்டும்தான் இருக்கு. அதனாற்க் கவனமாக வைச்சிரு. நான் பிறகுக் காசு தந்திட்டு திரும்ப வாங்கிறேன்.”

 

“ஓகே ஷானு…! இது என் சொந்த வீடு தான். சாப்பாட்டுக்கும் சேர்த்து நீ ஐநூறு யூரோ வாடகைத் தந்தால் போதும். நீ வீட்டை கிளீன் பண்ணுறது, என் ட்ரெஸ் தோய்க்கிறது, அயர்ன் பண்ணி வைக்கிறது, சமையல் என்று வீட்டு வேலைகளையும் பார்த்தாய் என்றால் நான் உன் வாடகையைக் குறைச்சிடுறேன். நீ முன்னூறு யூரோ தந்தால்ப் போதும். உனக்கு ஓகே என்றால் எல்லாவற்றையும் எழுதி ஒரு கொந்த்ரா (ஒப்பந்தம்) போட்டிடுவோம்.”

 

சிந்திக்க இடமின்றி உடனடியாகச் சம்மதம் தெரிவித்தாள் ஷானவி. அந்த முன்னூறு யூரோக்களை எப்படி உழைப்பது என்பதே இப்போது பெரும்பாடாய் இருக்கையில் அவள் ஏன் மறுக்கப் போகிறாள்?

 

இருவரும் உண்டு முடித்ததும் அந்த இடத்தைச் சுத்தப்படுத்த முனைந்தாள் ஷானவி. அதைத் தடுத்தவன்,

 

“உன் கால் நன்றாகச் சுகமாகும் வரை நீ என் விருந்தாளி தான் ஷானு… அதனால் நீ எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. இப்போ போய் ஹொஸ்பிட்டல் போக ரெடியாகு…”

 

கூறிவிட்டுச் சாப்பாட்டு மேசையைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்களைப் பாத்திரம் கழுவும் இயந்திரத்திற்குள் கொண்டு சென்று அடுக்கி விட்டுத் தானும் வெளியே செல்வதறக்குத் தயாராகினான். மேக்கப் போட வேண்டுமே 🙂

 

வைத்தியசாலையில் ஷானவியின் கால்க்கட்டுப் பிரிக்கப்பட்டு அவளுக்கு சில இலகுவான பயிற்சிகள் தினமும் செய்வதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். காலுக்குத் தடவுவதற்கு ஒரு கிரீமும். மற்றையபடி அவள் பூரண நலமே என்ற செய்தி மகிழ்ச்சியளிக்க இதமான மனனிலையோடு வெளியே ஒரு உணவுச்சாலையில் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

 

அன்றையப் பொழுது எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றிக் கழிய அடுத்த நாள் காலையில் இப்ராவுக்கு பிரெஞ்ச் வகுப்பிற்கு இருவரும் புறப்பட்டுச் சென்றனர். லீயின் காரில் இருந்து ஷானவி இறங்குவதைக் கண்ட ஆதூர் ஆச்சரியமாய் நோக்கியபடியே இவர்கள் அருகே வந்தான்.

 

“என்ன ரெண்டு பேருக்கும் இன்னும் வக்கேசன் முடியலையா? சேர்ந்து வாறீங்கள்?”

 

இந்த மொழி தெரியாதப் புது நாட்டில் மனதுக்கு நெருக்கமானவர்களில் ஒருவனான ஆதூரைக் கண்டதும் தனது கவலைகள் எல்லாம் ஒரே நொடியில் மனதைத் தாக்க ஷானவியின் கண்களில்க் கண்ணீர் ஆறு ஊற்றெடுக்கத் தொடங்கியது. அதைக் கண்டுப் பதறிய ஆதூர்,

 

“என்னாச்சு ஷானு? ஏன் இப்ப அழுகிறாய்? லீ நீயாவது சொல்லேன்…?”

 

இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி கேட்டான். உதட்டைச் சுளித்தபடி லீ ஷானவியைக் கேட்குமாறுச் சைகை செய்து விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தான். அவள் இன்னமும் அழுகையை நிறுத்தியபாடில்லை. அதனைக் கவனித்த ஆதூர்,

 

“ஷானு…! நீ என் காரில ஏறியிரு. நான் வகுப்புக்குப் போய் எக்சர்சைஸ்க் கொஞ்சம் கொடுத்து விட்டு வாறேன்.”

 

அவள் சம்மதமாய்த் தலையசைத்து விட்டுக் காரில் ஏறியமர, ஆதூர் வகுப்பறையை நோக்கிச் சென்றான். அப்போது அங்கே திருநாவுக்கரசு வருவதைக் கண்ட ஷானவி, “மாமா” என்றபடிக் காரை விட்டிறங்கி ஓடினாள்.

 

மருமகளைக் கண்டவர் முகத்தில் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும்.

 

“நீ வகுப்புக்கு வந்திருப்பாய் என்றுத் தெரிஞ்சு தான் உன்னைப் பார்க்க வந்தேன். ஏனம்மா அழுதியா? கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு.”

 

அப்போது ஆதூரும் அங்கு வந்தவன் அவரைக் கண்டு விட்டு,

 

“நீங்க ரெண்டு பேரும் கதையுங்கோ. நான் கொஞ்சத்தில வாறேன். என்ன உதவி வேணும் என்றாலும் யோசிக்காமல் என்னட்டக் கேளுங்கோ”

 

என்றான்.

 

“நீங்களும் வாங்கோ தம்பி. உங்களுக்கும் எல்லாம் தெரியிறது ஷானுவுக்கு நல்லது.”

 

திருநாவுக்கரசு கூறவும் குளிரைத் தவிர்க்கும் காரணமாய் மூவரும் ஆதூரின் காரில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

 

“எப்பிடி இருக்கிறாய் ஷானு? லீ நல்லபடியாக பார்த்துக் கொள்கிறானா?”

 

“ஓம் மாமா! அவன் ரொம்பக் கவனமாக பார்க்கிறான். ஆனால் எனக்குத் தான் அவனிட செலவில இருக்க ஒரு மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் கதைச்சு மாசம் முன்னூறு யூரோ வாடகை தாறதாக கொந்த்ரா போடலாம் என்றிருக்கிறோம். நான் எப்பிடியாவது ஒரு வேலை எடுக்க வேணும் மாமா… ஆதூர் நீங்களும் தான் உதவி செய்ய வேணும்.”

 

என்ன நடந்ததென்று புரியாமல் விழித்த ஆதூருக்கு நடந்ததைச் சொன்னார்கள். நம்ப முடியாமல் வியப்புடன் கேட்டிருந்தான் ஆதூர்.

 

“நீயும் லீயும் போட்ட சண்டைக்கு இப்ப ரெண்டு பேரும் ஒன்றாக இருக்கிறியள் என்றதை என்னால நம்பவே முடியலையே.”

 

ஷானவியும் மெதுவாய்ச் சிரித்துக் கொண்டே,

 

“என்னாலயும் தான் ஆதூர். ஆனா அவனில்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால கற்பனைப் பண்ணிக்கூடப் பாரக்க முடியல. இந்த கொஞ்ச நாளில இது எப்பிடி சாத்தியம் என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியேல்ல. ஆனா அவன் தான் இனி என் உலகம் என்றது தான் உண்மை.”

 

மருமகள் தீவிர முகபாவத்தோடு சொல்வதைக் கேட்ட திருநாவுக்கரசு,

 

“ஆதூர்! எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்லுவம். ‘காதலுக்கு கண்ணில்லை’ என்று. இப்ப அதை நான் ஷானுவில பார்க்கிறேன்.”

 

என்று கூறிச் சிரித்தார். ஆனால் அடுத்த நொடியே மனம் வாடியவராய்,

 

“லீயும் உன்னளவு தீவிரமாக உன்மேல் அன்பு வைச்சிருக்கானாம்மா? அவனிட கலாச்சாரம் வேற. சும்மா டைம் பாஸ்க்கு பழகிட்டுப் போறவனாய் இருந்தால் உன்ர எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் யோசிச்சுப் பாரம்மா. அன்றைக்கு நீ சந்திராக்கு முன்னால லீயோட போகப் போறேன்னு சொன்னாப் பிறகு திரும்ப வீட்டுக்கு வந்தால் அவள் உன்னை வார்த்தையால குத்தியே சாகடிச்சிடுவாள். அஸ்வின் வேற மனசு அலைபாய ஆரம்பிச்சிட்டான். அதுதான் நான் உன் விருப்பத்துக்குத் தலையாட்டிட்டேன்.

 

நான் உனக்குத் தனியாக வீடெடுத்துத் தாறனம்மா. செலவுக்கும் காசு தாறேன். இப்ப நான் வந்தது ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்று சொல்லத் தானம்மா. இந்தா… உன்ர டைவோர்ஸ்த்  தீர்ப்பு… இனி நீ அஸ்வினுடைய வைஃப் இல்லை.”

 

“ஆ… வந்திட்டுதா மாமா… ரொம்ப சந்தோசமாக இருக்கு. நான் லீயோடேயே இருக்கிறேன் மாமா. ப்ளீஸ்… ஏதும் பிரச்சினை என்றால் நிச்சயமாக நான் உங்களிட்டச் சொல்லுவன். இது என்ர போன் நம்பர். இது லீயிட. ஆதூரிடயும் வாங்கி சேவ் பண்ணி வையுங்கோ. வீட்டு அட்ரஸ் நான் லீயை அனுப்பச் சொல்லுறன் மாமா.”

 

“சரிம்மா. ஆனால் நீ எந்தக் காலத்திலயும் உனக்கு மாமா இருக்கிறேன் என்றதை மறக்கக் கூடாது. இந்தக் காசைச் செலவுக்கு வைச்சுக் கொள்ளம்மா. என்ன தேவை என்றாலும் யோசிக்காமல்க் கேள். நான் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன் என்ன?”

 

வாஞ்சையாய் அவள் தலையைத் தடவியர் பத்தாயிரம் யூரோக்களை எடுத்து மருமகள் கையில் கொடுத்தார்.

 

“ஏன் மாமா இவ்வளவு காசு? நீங்களே வைச்சிருங்கோ… நான் தேவைப்பட்டால் கேட்கிறன். நீங்கள் இவ்வளவு காலம் எனக்குச் செய்யுறதே பெரிய விசயம் மாமா.”

 

“இதுதான் உன்னில எனக்குப் பிடிக்காத விசயம் ஷானும்மா. நீயும் என்ர பிள்ளை தானேடா. இது உன்ர கல்யாணத்திற்கு சேர்த்து வைச்ச காசிலயிருந்து தானம்மா தாறன். ஒரேயடியா எல்லாக் காசும் எடுக்க முடியேல்ல. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தாறனம்மா. அதோட லீக்கும் நீ காசுக்காக அவனோட போய் இருக்கேல்ல; நாங்கள் உன்னைக் கைகழுவி விடேல்ல என்றதும் தெளிவாகத் தெரியத்தானேம்மா வேணும்.”

 

மாமானின் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்தவள் ஆதூரை நோக்கினாள். அவள் பார்வையை உணர்ந்தவன்,

 

“மாமா சொல்லுறது சரி ஷானு. நல்ல ஒரு வேலை கிடைக்கும்வரை உனக்கு செலவுக்குக் காசு வேணுமேம்மா. அப்புறம் நாலு செட் ட்ரெஸ்ஸோட தான் லீ வீட்டுக்குப் போயிருப்பாய். உன் சின்னச் சின்னத் தேவைகளுக்குக் கூட நீ லீயை எதிர்பார்க்க முடியாது தானே.”

 

அவன் சொல்வதிலுள்ள உண்மையைப் புரிந்து கொண்டவள் பணத்தைப் பெற்றுக் கொண்டாள்.

 

“ஆதூர்! நான் ஷானுவை கிராண்ப்ளேஸ் (ஷாப்பிங் மால்) கூட்டிட்டுப் போய் கொஞ்சம் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்திட்டு மறுபடியும் இங்க கொண்டு வந்து விடுறேன்.”

 

திருநாவுக்கரசு கூறவும் ஆதூரும் ஒத்துக் கொண்டு, இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வகுப்பறைக்குச் செல்ல ஷானுவும் அவருமாய் கிராண்ப்ளேஸில் இருந்த H&M இற்குச் சென்றார்கள். ஷானவி தனக்குத் தேவையான அளவுக்கு அனைத்தையும் வாங்கிக் கொண்டு இப்ராவுக்கு திரும்பினார்கள்.

 

திருநாவுக்கரசு லீயையும் சந்தித்து சிறிது நேரம் அவனோடு தனிமையில் உரையாடினார்.

 

“தம்பி…! நான் ஷானும்மாவுக்குத் தனியாக வீடெடுத்துக் கொடுக்க ரெடியாகத்தான் இருக்கிறேன். ஆனால் அவள் உன்னோட இருக்கிறதுதான் தனக்குச் சந்தோஷம் என்று சொல்லுறாள். இன்றைக்கு அவளுடைய டைவோர்ஸ் தீர்ப்பும் வந்திட்டுது. ஷானுட்ட குடுத்து இருக்கிறேன். அவளிட்டச் செலவுக்கும் காசு குடுத்திருக்கிறேன் தம்பி.

 

உங்கட நாட்டில வேலை செய்யிற என்ர ப்ரெண்டிட்ட உங்கட விவரம் குடுத்து விசாரிக்கச் சொன்னான். நீங்க ரொம்பப் பெரிய இடம் என்றுத் தெரியும். உங்கள் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லைத்தான். ஆனா ஷானு உங்க மேல உயிரையே வைச்சிருக்கிறாள். நீங்க இல்லாமல் தனக்கு வாழவே பிடிக்கேல்ல என்று சொன்ன காரணத்தினாலே மட்டும் தான் எங்கட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளை உங்களோட அனுப்பினான்.

 

ஏனென்றா இத்தனை வருசத்தில என்ர மருமகள் நிறையக் கஷ்டத்தைப் பார்த்திட்டாள் தம்பி. அவள் இனியாவது சந்தோசமாக இருக்கோணும் என்று தான் அவள் ஆசைக்கு ஓம் என்றனான். இத்தனை வருசத்தில உங்களோட போகப் போறன் என்றதை விட அவள் என்னட்ட எதுவுமே கேட்டதில்லை.

 

அவ ரொம்ப அன்பான பிள்ளை தம்பி. இதையெல்லாம் ஏன் உங்களிட்டச் சொல்லுறன் என்றால் நீங்களும் அவளைப் புரிந்து கொண்டு நல்லபடியாக வாழோணும் என்று தான். டைம் பாஸ்க்குத் தான் பழகுற என்றால் இப்பவே சொல்லிடுங்கோ. நான் அவளைக் கூட்டிட்டுப் போய்டுறேன்.”

 

அவர் கூறுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டிருந்தவன், அவர் ஷானவியைக் கூட்டிக் கொண்டு போகப் போகிறேன் என்று சொன்னவுடன், அவசரமாகக் குறுக்கிட்டான்.

 

“இல்ல அங்கிள். ஷானு என்னோடயே இருக்கட்டும். அவள் இல்லாத வாழ்க்கையை என்னாலயும் நினைச்சுப் பார்க்க முடியாது. என்ர லைப்ல நடந்த விசயம் உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரியுமோ தெரியேல்ல. நானே எல்லாவற்றையும் சொல்லிடுறேன் அங்கிள்.”

 

என்றவன் தனது கடந்த காலக் கசப்புகளைக் கூறி முடித்தான்.

 

“அம்மா இறந்த பிறகு அங்கே இருக்கவே ரொம்ப வெறுப்பாக இருந்துச்சு அங்கிள். அந்த வீட்டில இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் செத்திடலாம் போலத் தோணும். அப்போதான் என் கட்டாய ஆர்மி ட்ரெயினிங்க முடிச்சிட்டு அப்படியே யாரிட்டயும் சொல்லாமல் இங்க வந்து செட்டில் ஆகிட்டேன்.

 

ஆனா இப்போ கொரியா திரும்பப் போகலாமோ என்றும் யோசனையாக இருக்கு அங்கிள். நீங்கள் எப்ப வேணும் என்றாலும் ஷானுவை அங்க வந்துப் பார்க்கலாம். நாங்களும் இங்க அடிக்கடி வந்து போறம் அங்கிள்.”

 

“சரி தம்பி. உங்க மனசுப்படி செய்யுங்கோ. ரெண்டு பேரும் சந்தோசமாக வாழ்ந்தால் எனக்கு அது போதும்.”

 

என்றவர் தனது ஜக்கெட் பொக்கெட்டிலிருந்து ஒரு வெல்வெட் பெட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தார். அதில் அம்மன் உருவம் பொறித்த தாலியொன்று தங்கச் சங்கிலி ஒன்றில் கோர்க்கப் பட்டிருந்தது. அவன் அது என்ன என்று புரியாமல் பார்க்கவும்,

 

“குறை நினைக்காதீங்கோ தம்பி… இதை ஆண் பொண்ணுடைய கழுத்தில்ப் போட்டுத்தான் எங்க முறைப்படி திருமணம் செய்து கொள்ளுவம். கல்யாணம் ஆகாமல் நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறது கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாக இருக்குத் தம்பி. உங்களுக்கு இஷ்டம் என்றால் எங்கட கோயில் ஒன்றில வைச்சு எங்கட முறைப்படி கல்யாணம் செய்து கொள்ளுங்கோ. அப்புறமாக உங்களுக்குத் தோணுறப்ப நீங்க பதிவு செய்து கொள்ளுங்கோ…”

 

சிறிது தயக்கத்தோடேயே கூறினார் அந்த மாமானார். ஆனால் அவனோ சிறிதும் தயக்கமின்றி,

 

“உங்க ஆசைப்படி என்ன செய்ய வேணுமோ அதைச் செய்து கொள்ளுங்கோ அங்கிள். நான் எங்க வரோணும் என்ன செய்யோணும் என்று மட்டும் சொன்னால்ச் சரி.”

 

அவன் இவ்வளவு இலகுவாக சம்மதிப்பான் என்று எதிர்பாராதவர், கண்கள் பனிக்க,

 

“நான் எல்லா ஒழுங்கும் செய்து விட்டுச் சொல்லுறன் தம்பி. ரொம்ப நன்றி.”

 

என்றவர் அவனது தொலைபேசி இலக்கத்தையும் வீட்டு முகவரியையும் பெற்றுக் கொண்டு நிறைந்த மனதோடு வீடு திரும்பினார். போக முதல் மறுபடியும் மருமகளைச் சந்தித்து திருமணத்துக்கு லீ சம்மதித்து விட்டதைத் தெரிவிக்க, ஷானவியோ அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தாள்.

 

இருவரும் வகுப்பறையில் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. திருமணச் செய்தியைக் கேட்டு ஷானவி மகிழ்ந்திருப்பாள் என்று லீ எண்ணிக் கொண்டு அவளை நோக்க, அவளோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள். காரணம் என்னவாக இருக்கும் என்று புரியாமல் விழித்தவன் வீடு போனதும் விசாரிப்போம் என்று முடிவெடுத்தவனாய் பாடத்தில்க் கவனத்தைச் செலுத்தினான்.

 

வீட்டுக்குச் சென்றதும் பெரும் பூகம்பமே வெடிக்கப் போவது தெரிந்திருந்தால் லீ யூ வோன் திருமண முடிவைக் கொஞ்சம் யோசித்து எடுத்திருப்பானோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: