Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 15

அத்தியாயம் – 15

 

காரைத் தனது அப்பாட்மென்ட்டிற்கு முன்னே கொண்டு சென்று நிறுத்தினான் லீ யூ வோன். ஏழாவது மாடியில் அவன் வீடு. ஷானவி காரை விட்டு இறங்குவதற்கு உதவி செய்து, அவளை மின்தூக்கியின் மூலம் அதுதான் லிப்ட்டின் மூலம் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வீட்டின் கதவைத் திறந்து உள் நுழைந்ததுமே வாயிலிலேயே பிரமித்து நின்று விட்டாள்.

 

அது ஒன்றும் பெரிய மாடா மாளிகையல்ல. இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய ஒரு அளவான வீடு தான். ஆனால் அதன் உள்ளகத் தோற்றம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியினுள் நுழைந்து விட்ட பிரமிப்பையே ஏற்படுத்தியது. ஆடம்பரங்கள் எதுவுமற்றது தான். ஆனால் அதன் நேர்த்தியும் சுத்தமும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தியது.

 

அசையாது சிலையாகி நின்றவளை தோளோடு அரவணைத்து வரவேற்பறையில் இருந்த ஸோபாவில் சென்று அமர்த்தியவன், சமையலறைக்குச் சென்று சூடாகத் தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டுத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, தேநீரை உறிஞ்சியபடி அதில் ஆழ்ந்தான்.

 

ஷானவிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படி ஆரம்பித்து, எப்படித் தன் கடந்த காலத்தை அவனிடம் தெரிவிப்பது என்றுப் புரியாமல் தொண்டையைச் செருமிக் கொண்டு மெதுவாய் அவனைப் பார்த்தாள்.

 

“லீ….”

 

‘ம்’ என்ற ஒற்றைச் சொல் கூட இல்லாமல் அவளை வெறுமனே நிமிர்ந்து ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான். அதனைக் கண்ட ஷானவிக்கு அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கிக் கொள்ளாதா என்றிருந்தது. சுயபச்சாதாபத்துக்கு இது நேரமல்ல என்று உணர்ந்தவள், தன்னை சமனப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில் உரைத்தாள்.

 

“என்னை மன்னிச்சிடு லீ… நான் வேணும் என்றே எதையும் மறைக்கல. அஸ்வின் என் மச்சான் மட்டும் தான்…”

 

என்றுத் தொடர்ந்தவளை ஒரு கையை உயர்த்தித் தடுத்தான்.

 

“இங்கப் பார் ஷானு… உன்னட்ட நான் எந்த விளக்கமும் கேட்கேல்ல… நீ எந்த விளக்கமும் எனக்கு சொல்லத் தேவையில்லை. நீ சொல்லும் காரணங்களைக் கேட்கும் நிலையில் நான் இல்லை என்றதும் உனக்குத் தெரியும். காலப் போக்கில் அதுபாட்டில எல்லாம் சரியாகட்டும். இப்போதைக்கு நீ இங்க தங்கிறதுக்குரிய ஒழுங்கை செய்ய வேணும். நான் IKEA இற்கு ஒருக்கால் போய்ட்டு வாறேன். அதுவரை நீ என்ர றூமில ரெஸ்ட் எடு. என்ன வேணும் என்றாலும் உடனே போன் பண்ணு… இனிமேல் இது உன்ர வீடும் தான். அதனால நீ இங்க சுதந்திரமாக இருக்கலாம். ஓகே ஒவ்வா (bye)”

 

கூறியவன் கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தான். அவன் இரண்டடி சென்றதும் தான், ஸோபாவின் முன்னேயிருந்த டீப்போவில் கைத்தொலைபேசியை மறந்து வைத்து விட்டுச் செல்வதைப் பார்த்த ஷானவி, போனைத் தூக்கிக் கொண்டு அவனை அழைத்தவாறே அவசரமாக எழுந்தாள்.

 

அன்றையக் குழப்பங்களாலோ என்னவோ தனது உடல் நிலையை மறந்தவள், தன்னை மறந்துச் சாதாரணமாக நடக்க முயலவும் கால் தடக்கித் தொப்பென்று விழுந்தாள். அவள் அழைப்பிற்கே திரும்பியிருந்த லீ இவள் இப்படி விழுந்து விடுவாள் என்று கொஞ்சமும் எண்ணவில்லை. பேச்சு மூச்சற்றுக் குப்பறக் கிடந்தவளை நோக்கித் துடிக்கப் பதைக்க ஓடி வந்தான்.

 

அந்த நொடியில் அவள் மேலிருந்த கோபம், வெறுப்பு, ஆதங்கம் எல்லாம் காணாமல்ப் போய், அவளுக்கு ஏதும் ஆகி விட்டதோ என்ற பதைப்பு மட்டுமே அவன் உள்ளத்தில் இருந்தது. அவளை அப்படியே மெதுவாகத் திருப்பியவன், அவள் மயங்கி விட்டிருப்பதைப் பார்த்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து முகத்திலே தெளித்தான். நீர்த்துளியின் குளிர்மையில் சுய உணர்வு வரப் பெற்றவள், மெதுவாய்க் கண்களைத் திறந்தாள். அதனைக் கண்டதும் தான் அவனால் இலகுவாய் மூச்சு விட முடிந்தது.

 

மெதுவாய் அவளை எழுப்பி ஸோபாவில் படுக்க வைத்தான். அந் நொடியில் ஒன்று மட்டும் லீக்குத் தெளிவாகப் புரிந்தது. எக்காரணத்தைக் கொண்டும் ஷானவியைத் தன்னால் வெறுக்கவும் முடியாது, அவளின்றித் தன்னால் வாழவும் முடியாது என்று. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இறுகிய குரலிலேயே அவளோடுப் பேசினான். இவ்வளவு நேரத்தில் அவன் வாய் திறந்தது அப்போதே.

 

“வலிக்குதா? ஹொஸ்பிட்டல் போவோமா?”

 

“இல்லை லீ… இப்ப நான் ஓகே… நீ போனை விட்டிட்டுப் போறாய் என்று தர வந்தனான். நாளைக்கு எப்படியோ ஹொஸ்பிட்டல் போறது தானே… அப்ப டொக்டரிடம் காட்டுவம். நீ போய்ட்டு வா…”

 

“உனக்கு வலி ஒண்டும் இல்லைத்தானே?”

 

“இல்லை… நீ போய்ட்டு வா…”

 

அவள் உறுதியாகக் கூறவும் அவனும் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்றதும் மீளவும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தாள் ஷானவி.

 

ஏதோ ஒரு எண்ணத்தில் லீயோடு புறப்பட்டு வந்திருந்தாலும் தான் செய்வது சரியா தவறா என்ற குழப்பம் அவளை இன்னமுமே ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருந்தது. என்ன தான் லீயைப் பிடித்திருக்கிறது என்றாலும் இந்த உறவு எதிர்காலமற்றது என்பதுத் தெளிவாகப் புரிந்தது.

 

“அடேய் நல்லூர்க் கந்தா! எதுக்கு இப்ப என்னை இந்தப்பாடு படுத்துறாய்? கேயான லீயால் என்னைக் கல்யாணம் செய்யவும் முடியாது. அவன் அம்மாவின் நினைவில்த்தான் என்னைக் கூட்டி வந்திருக்கிறான். நான் அவன் செலவில் நிறைய நாள் தங்கவும் ஏலாது. எப்படியாவது ஒரு வேலை எடுக்க வேணும். நாலு வார்த்தை பிரெஞ்சில கதைக்கத் தெரியாதனான் எங்க போய் என்ன வேலை செய்யுறது? இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலையே… சரி… இதைப் பற்றி யோசிச்சு மண்டை காயுறதைத் தவிர வேற வழியில்லை. விதி தீர்மானிச்சிருக்கிற படி வாழ்க்கைப் போகட்டும்…”

 

என்று முடிவெடுத்துக் கொண்டவள் இருந்த இடத்தில் அமர்ந்தவாறு கண்களால் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டாள். எங்கும் வெண்மை மயம். வெள்ளையைத் தவிர வேறெதுவும் நிறத்தைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப் பிடிக்க வேண்டும் போலிருந்தது. வீட்டுச் சுவர், தளபாடங்கள், திரைச் சீலைகள் அனைத்துமே வெள்ளை நிறத்தில்த் தான். சுவரில் மாட்டியிருந்த வெள்ளை நிறக் கடிகாரத்தில் மட்டும் இலக்கங்கள் பொன் நிறத்தில் மின்னின. சுவரில் எந்த வித அலங்காரங்களோ, படங்களோ மாட்டப்படாமல் வெறுமையாக இருந்தது. ஏனோ ஷானவிக்கு அந்த வெண்மையும் வெறுமையும் கூட ஏதோ மனதுக்கு இதமளிப்பதுப் போலத் தோன்றியது.

 

வரவேற்பறையிலோ, அதனோடுச் சேர்ந்து அமைந்திருந்த அமெரிக்கன் முறையிலான திறந்த முறைச் சமையலறையிலோ பெரிதாகத் தளபாடங்கள் போடப்பட்டு இடத்தை அடைத்திருக்கவில்லை. வரவேற்பறையில் மூவர் அமரக் கூடிய ஒரு ஸோபா தொலைக்காட்சியின் எதிர்ப்பக்க சுவரோரமாகப் போடப் பட்டிருந்தது. அதன் எதிர்ச் சுவரில் பெரிய திரையுடன் கூடிய தொலைக் காட்சி. வெள்ளை நிற ஸோபாவின் முன்னே கண்ணாடியிலான ஒரு சிறிய டீப்போ, ஸோபாவின் வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் வெண்ணிறச் சாடியில் தோளுயரத்தில் செடிகள் வைக்கப் பட்டிருந்தன. மற்றையபடி அந்தப் பெரிய வரவேற்பறை விட்டு வீசாடியாகத்தான் இருந்தது.

 

சமையலறையில்க் கண்ணாடியிலான நால்வர் அமரக் கூடிய மேசை ஒன்றைச் சுற்றி வெண்ணிறக் கதிரைகள் நாலு போடப்பட்டிருந்தன. சுவரில்ப் பொருத்தப்பட்டிருந்த சிறிய கப்பேர்ட்டுகளிலிருந்துக் குளிர்சாதனப் பெட்டி வரை அனைத்தும் வெண்மையே. கீழே தரை கூட வெள்ளை நிறத்தில்த் தான் இருந்தது.

 

“அடேய் மைதா மாவு! நீ வெளிக்கிடுறது தான் லூசு போல என்றால்….என்னடா இது வீட்டைக் கூட இப்பிடி மியூசியம் மாதிரி வைச்சிருக்கிறாய். இப்பிடி வெள்ளை வெளேரென்று ரின் சோப் விளம்பரத்தில காட்டுற மாதிரி இருக்கேடா எல்லா இடமும். இப்படிப் பளபளக்கிற நிலத்தில நடக்கக் கூடப் பயமாக இருக்கேடா. அடியே ஷானு! இந்த மியூசியத்தில வாழுறதுக்குச் சந்திரா மாமிட்டத் திட்டு வாங்கிறதே பெட்டராக இருந்திருக்கும் போல இருக்கே… தப்புப் பண்ணிட்டியே ஷானு… தப்புப் பண்ணிட்டியே…”

 

என்றுத் தனக்குள்ப் புலம்பியவளுக்கு உண்மையிலேயே இப்போது இந்த வெள்ளை வீட்டில் வாழப் போகும் நாட்களே பெரும் சவாலாகக் கண் முன்னே வந்து நின்று, மற்றைய பிரச்சினைகளைப் பின் தள்ளி அவளை அயர்ச்சி கொள்ள வைத்தது. பலவாறும் சிந்தித்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள். பாவம் அவள். அப்போது அறிந்திருக்கவில்லை இதை விடப் பெரிய அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் வீட்டின் மற்றைய பகுதிகளில்க் காத்திருப்பதை.

 

லீ வீட்டுக்குத் திரும்பிய போது பார்த்தது, அயர்ந்து நிச்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்த ஷானவியைத் தான். எழுப்ப மனம் வராவிட்டாலும் அவள் சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்து மெதுவாய் அவள் கன்னத்தைத் தட்டித் துயில் கலைத்தான். அவன் குளிர்ந்த கையின் தொடுகையில் விழித்தவள், லீயைக் கண்டதும் தூக்கக் கலக்கம் அறவே நீங்கி எழுந்து அமர்ந்தாள்.

 

“உன்னை என்ர றூமில போய்த்தானே படுக்கச் சொன்னான்? சரி… சரி… சாப்பிட்டிட்டுப் போய்ப் படு…”

 

என்றவும் அவளுக்கும் தனது பெருங்குடல், சிறுகுடலை விழுங்கிக் கொண்டிருப்பது புரிய மௌனமாய்த் தலையசைத்தவள்,

 

“லீ டாய்லெட்டுக்குப் போகோணும்”

 

என்றாள். அவள் மெதுவாய் நடக்க உதவி செய்தவாறே வரவேற்பறையின் ஆரம்பத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கதவைத் திறந்தவன்,

 

“இது தான் டூஷ் (குளியலறை)”

 

என்றான். உள்ளே எட்டிப் பார்த்த ஷானவியோ திறந்த வாய் மூட மறந்து பார்த்திருந்தாள். வாஸ் பேசினில் மீன்கள் ஓடிக் கொண்டிருந்தன. வாஸ்பேசினின் உள்ளே அல்ல. கண்ணாடியால் ஆக்கப்பட்டதில் உள்ளே மீன் தொட்டி போல அழகான அலங்காரத்தோடு நாலைந்து மீன்கள் சுற்றித் திரிந்தன. கண்ணைப் பறித்த அதன் அழகில் அதிசயித்து நின்றவள், விழிகளைச் சற்று அப்பால் திருப்பினாள்.

 

நான்கு பக்கமும் கண்ணாடியால்ச் சுற்றி அடைக்கப்பட்டிருந்த நின்றபடி குளிக்கும் இடத்தில் ஷவரெல்லாம் தங்க நிறத்தில் மின்னியது. அதன் அருகே சுவரோடிருந்த பாத்டாப் உடனேயே சென்று ஒரு குளியல் போட்டு விட மாட்டோமா என்று ஏங்கும் வண்ணம் பளிங்காய் பளபளத்தது. பாத்டாப்பைச் சுற்றி மூன்று பக்கமுமிருந்த சுவரில், மலைச்சாரல் ஒன்றில் ஊற்றெடுத்து ஓடும் நீர்வீழ்ச்சிக் காட்சி ஒன்று முப்பரிமாண ஓவியமாய் வரையப் பட்டிருந்தது. சுவரினுள்ளேயே பதிக்கப்பட்டிருந்த பிரத்தியேக மின் விளக்குகள் அந்த இயற்கைக் காட்சியை ஓவியம் என்று நம்பிக்கைத் தர மறுத்தன. அவளை அங்கிருந்து அழைத்துச் சென்று, குளியலறையின் அருகிலிருந்த இன்னொரு கதவைத் திறந்து,

 

“இது டாய்லெட்…”

 

என்றவன் அங்கே சுவரில் பொருத்தப்பட்டிருந்தச் சிறிய வெள்ளை நிறக் கப்பேர்ட்டிலிருந்து ஒரு ரிமோட்டை எடுத்துக் கொடுத்தான்.

 

“இப்போதைக்கு ரிமோட்டை யூஸ் பண்ணு… பிறகு வேணும் என்றா உன் போனில செட் பண்ணிடலாம்…”

 

ஷானவிக்கோ அடியும் புரியவில்லை, நுனியும் புரியவில்லை. திகைத்துப் போய் கேள்வியாய் அவனை நோக்கியவள், அங்கு தொலைக்காட்சி ஏதாவது பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். அதுவும் அங்கில்லை. அதற்கு மேல்த் தாங்க முடியாதவளாய்,

 

“ரிமோட் கண்ட்ரோல் எதுக்கு லீ?”

 

என்று வாய் விட்டே கேட்டு விட்டாள்.

 

“டாய்லெட் யூஸ் பண்ணத்தான். உனக்குத் தெரியாதா? பரவாயில்லை. வா… சொல்லித் தாறேன்.”

 

என்று விட்டு கொமட்டின் அருகே அவளை அழைத்துச் சென்றான். இவர்கள் அருகே நெருங்கவே மூடியிருந்த கொமெட்த் தானாகவேத் திறந்துக் கொண்டது. ஷானவி முதலில் பயந்து விட்டாள். மனதிற்குள் கந்த சஷ்டிக் கவசமே சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

 

கொமெட்டை நெருங்கியவளுக்கு அதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றிருந்தது. மேற்புறத்தில் ப்ளாஷ் பண்ணும் பேசின் இருக்கும் இடத்தில் சிறியதொரு வாஸ்பேசினும் அமைக்கப்பட்டிருந்தது. அது கூடப் பரவாயில்லை. கொமட்டின் முன்புறத்தில் ஏகப்பட்ட பொத்தான்கள். இதெல்லாம் எதுக்காக இருக்கும் எண்ணமிட்டவாறே துடைப்பதற்கு டாய்லெட் பேப்பர் எங்கே இருக்கு என்று நோட்டமிட்டாள். அது எங்கே கண்ணிலே பட்டால்த்தானே?

 

‘அட சண்முகா! இந்த பிரான்ஸ்க்கு வந்து நான் இந்தப் பேப்பரால துடைச்சுப் பழகவே என்ன பாடுபட்டன். இந்த கொரியன் ரோபோ துடைக்கக் கூட மாட்டுது போல கிடக்குதே… ஷானு! உன்பாடு இனித் திண்டாட்டம் தான்டியோவ்…’

 

தனக்குள்ப் புலம்பிக் கொண்டிருந்தவளை  லீ அழைத்தான்.

 

“ஷானு…! இதிலே உட்கார்… உன் பொசிசனுக்கு ஏற்றமாரி செட் பண்ணி விடுறேன்…”

 

‘அட நல்லூரானே…! என்னடா இது ஒண்டுக்கு ரெண்டுக்கு இருக்கிறதுக்கெல்லாம் வந்த சோதினை? கொமெட்டில குந்தினமா, பேப்பரை எடுத்துத் துடைச்சமா, போய்க் குளிச்சமா என்றில்லாமல் இப்பிடிப் படுத்திறியேடா சாமி… இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராத் தெரியேல்லையா முருகா?’

 

முருகனோடு மைண்ட் வாய்ஸ்சில் பேசிக் கொண்டிருந்தவளை லீயின் குரல் மறுபடியும் உரக்க அழைத்து நிஜத்துக்குக் கொண்டு வந்தது.

 

“ஷானு…! இந்த ப்ளாஷ் பண்ணுற படத்தை ப்ரெஸ் பண்ணினாய் என்றால் ப்ளாஷ் ஆகும். இந்த பட்டினை அமத்தினாய் என்றால் கழுவும். இது ட்ரை செய்ய… இது மசாஜ்க்கு… உனக்கு எவ்வளவு டெம்பரேச்சர்ல தண்ணி வேணும் கழுவ?”

 

ஷானவி கொமெட்டில் அமர்ந்திருந்தவாறே திறந்த வாய் மூடாமல் விழி பிதுங்க அவனைப் பார்த்தாள். அவன் புரிந்ததா என்று வினாவவும் மௌனமாய்த் தலையசைத்து ரிமோட்டை வாங்கிக் கொண்டாள்.

 

“ஓகே ஷானு… நீ ரிலாக்ஸா உன் வேலையைப் பாரு… ஏதாவது புரியலை என்றால் என்னைக் கூப்பிடு…”

 

என்று சொல்லி விட்டு லீ வெளியேறினான்.

 

‘ஏன்டா மூஞ்சூறு… உனக்கெல்லாம் சும்மா கொமெட்டில இருந்தால் இருப்படாதோ…? எதுக்குடா இப்படியொரு டாய்லெட் கட்டி வைச்சு என்ர கழுத்தை அறுக்கிறாய்?’

 

மனதுக்குள் வஞ்சனையற்று அவனைத் திட்டியபடியே, கொமெட்டை விட்டு எழுந்து ஒவ்வொரு பொத்தானாக அமுக்கி அதன் செயற்பாடுகளைக் கிரகிக்க ஆரம்பித்தாள்.

 

ப்ளாஷ் பொத்தானை அமுக்க ப்ளாஷ் செய்து சுத்தம் செய்தது. இன்னொரு பொத்தானுக்கு ஒரு சிறிய குழாய் நீண்டு வந்து எல்லாப் பக்கமும் திரும்பித் திரும்பித் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்து, இன்னமும் நுணுக்கமாகச் சுத்தம் செய்தது. இன்னொரு பொத்தானுக்கு ஆசன வாயைச் சுத்தம் செய்யுமாறு அளவான சூட்டில் நீர் சீறிப் பாய்ந்து வந்தது. அடுத்த பொத்தானுக்கு இளஞ் சூடான காற்று வந்து காய வைத்தது. இன்னொன்றை அமுக்கியதும் இருக்கையே ஒரு ஆட்டம் கண்டு மசாஜ் செய்தது.

 

அனைத்து செயற்பாடுகளையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்து பார்த்து உள்வாங்கி விட்டே, ஷானவி தனது இயற்கை உபாதையை வெளியேற்ற உரியவாறு அமர்ந்தாள்.

 

‘ஏன்டா வெள்ளெலி! உனக்கு எங்க இருந்து கொண்டு மசாஜ் பண்ணுற என்ற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை… இந்தளவு தூரம் யோசிச்சு ஒருத்தன் இதைக் கண்டு பிடிச்சிருக்கிறானே… அவனைச் சொல்லணும்… இப்படியெல்லாம் எங்க தான் றூம் போட்டு யோசிப்பாங்களோ?’

 

தனக்குள்ளேயே வழமை போல அவனைத் திட்டிக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று அந்தச் சந்தேகம் முளைத்தது.

 

‘என்ர கதிர்காமக் கந்தனே…! மாறிக் கீறிச் சுடுதண்ணி வந்து அடிச்சு விட்டுது என்றால், உட்காருர இடம் அவிஞ்சு போய்டுமே… வடிவேலுவும் விவேக்கும் கோழிக்குஞ்சு அடைச்சு வைக்கிற கூடையைக் கவித்து வேட்டியைச் சுத்திக் கட்டிக் கொண்டு திரிஞ்ச போல எல்லோ பிறகு நானும் திரியோணும்… படத்தில அது நல்ல காமெடியா இருந்துச்சு… நிஜத்தில பிழைப்பே சிரிப்பாப் போய்டுமேடா…

 

என்ர கடவுளே…! மனுசர் நிம்மதியாப் போற விசயம் இதொன்று தான். என்னை அதைக் கூட நிம்மதியாச் செய்ய விடாமல் பண்ணிட்டியேய்யா… நான் அப்பிடி என்னதான் பாவம் செய்தேன்…?’

 

என்று புலம்பியபடியே பயந்து பயந்து தான் ஒவ்வொரு பட்டனையும் அமுக்கினாள். முதலில் நடுக்கமாக இருந்தாலும், பின்னர் அந்த உயர் தொழினுட்பத்தின் அற்புத வசதிகளை உணர்ந்து அனுபவிக்கத் தொடங்கினாள். விட்டால் அங்கேயே இருந்து விடுவாள் போல இருந்தவளை லீயின் குரல் நடப்புக்குக் கொண்டு வந்தது.

 

“ஸ வா ஷானு…?” (ஓகே)

 

ஆமென்று பதிலுரைத்து விட்டுத் தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். அவளை மெதுவாய் அரவணைத்துச் சென்று உணவு மேசையில் அமர வைத்தவன், வாங்கி வந்திருந்த பீட்ஸாவை அவள் முன்னே வைத்து உண்ணுமாறு பணித்தான். அவளும் சாப்பாட்டைக் கவனிக்க, எந்த விதப் பேச்சு வார்த்தையுமற்று உணவு நேரம் முடிந்தது.

 

அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க லீ சென்று கதவைத் திறந்தான். புதிதாக ஒரு ஃபெட்ரூம் செட் வந்து இறங்கியது. மூன்று பேர்கள் சேர்ந்து எல்லாவற்றையும் ஒரு அறையில் சென்று வைத்துப் பூட்டி ஒழுங்கு படுத்தினார்கள்.

 

“அந்த அறையில் நான் எதுவுமே வைக்கல. அதுதான் இனி உன்னுடய ரூம். பிறகு நீ உனக்குப் பிடித்த கலர்ல, உனக்கு விரும்பின மாதிரி ரூம் செட் பண்ணிக்கொள்… இப்போதைக்கு இதை அட்ஜஸ் செய்து கொள்.”

 

லீ கூறவும் இவளும் சம்மதமாய்த் தலையசைத்தாள். அதன் பிறகு ஷானவியின் அறையைத் தயார் செய்வதிலேயே இருவருக்கும் நேரம் செலவாகியது. வரவேற்பறை வெண்மை என்றால் இங்கேயும் அதே கதை தான். ஷானவிக்குத் தான் ஏதோ மியூசியத்தில் இருக்கும் உணர்வு அகலவே இல்லை.

 

இவ்வாறாக அன்றைய தினம் இனிதாகவே முடிந்தது. இனிவரும் நாட்கள் எப்படியோ?
Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: