Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 13

அத்தியாயம் 13

 

இரவு உணவை முடித்ததும் லீ யூ வோனுக்கு ஏனோ வீட்டுக்குச் செல்ல வேண்டும் போன்று இருந்தது. பிறக்கப்போகும் வருடப்பிறப்பை அவன் ஷானவியோடுத் தனிமையில்க் கழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் ஷானவியோ அங்கும் இங்கும் கூட்டமாய்த் திரிந்துகொண்டிருந்த அந்தப் பிரெஞ்சு மக்களின் உற்சாகமும் சந்தோஷமும் ததும்பும் முகத்தைப் பார்த்துத் தானும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். அவளின் உற்சாகத்தை கெடுக்க மனமில்லாத லீயும் வீட்டுக்குச் செல்லும் தனது எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு ஷானவியிடம் பேசினான்.

 

“ஹேய் ஷானு! வீட்டுக்குப் போகப் போகிறாயா? அல்லது இங்கேயே சிறிது நேரம் கழித்து விட்டு ஆறுதலாக வீட்டுக்குச் செல்வோமா?”

 

“கொஞ்ச நேரம் இங்கேயே நிப்போம் லீ… வீட்டுக்கு போய் என்ன செய்வது? என்ர முகத்தை நீயும் உன்ர முகத்தை நானும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருக்க வேணும். அதற்குக் கொஞ்ச நேரம்    இங்கேயே நிற்கலாமே. உனக்கு வீட்டுக்குப் போக வேண்டும் என்றால்ப் பரவாயில்லை நான் வாறேன்.”

 

“எனக்கு ஒன்றும் அவசரமில்லை. அந்த பார்க்கில்ச் சென்று மியூசிக் ஷோ பார்த்துவிட்டு வீட்டுக்குப் போவோம். ஓகே தானே??”

 

“சரி லீ… நிறைய நேரம் இருந்தது, கால் வலிக்குது. கொஞ்ச நேரம் நின்றால்தான் சரியா இருக்கும்.”

 

கூறிவிட்டு அந்த ரெஸ்டாரண்டுக்கு அருகிலிருந்த பூங்காவை நோக்கிச் சென்றாள் ஷானவி. அவள் தோளை அணைத்து அவள் இலகுவாக நடக்க உதவி செய்தவாறு கூடவே அவனும் போனான். சிறு செயற்கை நீரூற்றைச் சுற்றிப் பூஞ்செடிகள் அலங்கரிக்கப்பட்ட அந்த சிறு பூங்காவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரிய மேடையொன்று போட்டு இசைக் குழு ஒன்றும் பாடிக் கொண்டு இருந்தது.

 

பெரிய திரை ஒன்றில் வருடப்பிறப்புக்கு இன்னும் எவ்வளவு நிமிடங்கள் இருக்கிறது என்பது ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு நிமிடமே என்ற நிலையில் மக்கள் அனைவரும் உற்சாகமாய்க் கத்தியவாறு ஒவ்வொரு செக்கனாய் எண்ண ஆரம்பித்தார்கள்.

 

சுவஸொந்த் (60), சங்கொந்த் நெஃப் (59), சங்கொந்த் வித் (58)….. திஸ் (10), நெஃப் (9),…

 

இப்படி எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்க, ஐந்து செக்கன்களே இருந்தன என்ற நிலையில் லீ யூ வோன், ஷானவியை அவள் பின்புறமிருந்து தன் வயிற்றோடு அவளை இழுத்து அணைத்து அவள் வயிற்றைச் சுற்றித் தனது கைகளைப் பிணைத்துக் கொண்டான். அவள் வலதுபுறப் பின் தோளில்த் தனது நாடியைப் புதைத்தவன், சரியாகப் பன்னிரெண்டு மணியாக அவள் வலது காதில் உதடுகள் உரச,

 

“புதுவருட வாழ்த்துக்கள் மொன்னம்மோர்…!”

 

என்று சுத்தத் தமிழும் பிரெஞ்சுமாய் உரைத்தான். மழலை ஒன்று தமிழ் பேசுவது போலிருந்தது சிரிப்பை வரவழைத்தாலும், அதை எதையும் உணராது சிலையாகிப் போயிருந்தாள் ஷானவி. அவனின் மூச்சுக் காற்று அந்த நள்ளிரவுக் குளிரில்க் காதோரம் உஷ்ணம் பரப்ப கன்னங்கள் சிவக்க, ஒரு பரவச உணர்வில் ஆழ்ந்து போயிருந்தாள் அவள்.

 

அந்த இடமே ஃபொன் அனே (ஹப்பி நியூ இயர்) என்ற சத்தத்தில் அதிர்ந்தது. ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர் அங்கிருந்த எல்லோரும். சர்சர்ரென்று சீறிப் பாய்ந்த வாணங்களும் மத்தாப்புகளும் கண்களுக்கு விருந்தளித்தன.

 

இவை எவற்றையுமே கருத்தில் உணரமுடியாது வேற்றுலகத்தில் பறந்து கொண்டிருந்தவளை மெதுவாய்த் தன்புறம் திருப்பினான் லீ. மின்விளக்குகளின் வெளிச்சத்திலே அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கியவன், இமைகள் படபடக்க அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவளின் நாடியைப் பற்றி இன்னமும் தன் முகத்தருகே கொண்டு வந்தவன் அவள் உதட்டை நோக்கிக் குனிந்தான்.

 

அவன் செய்யப் போவதை உணர்ந்ததைப் போல அதுவரை அவனைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தவள், இறுகக் கண்களை மூடிக் கொண்டாள். அப்போது இவர்கள் அருகே ஒரு பட்டாசு வெடிக்க, சுயநிலைக்கு வந்த லீ தான் செய்ய இருந்த காரியத்தை எண்ணித் தன்னையே நொந்து கொண்டான். தனது நோக்கத்தை மாற்றி அவள் முன்னெற்றியில் தன் உதடுகளைப் பதித்து அப்படியே அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

 

ஷானவிக்கும் உண்மையில் அப்போது அந்த அணைப்பு தேவையாகத்தான் பட்டது. படபடவென ரீஜீவி (பிரான்ஸ் கடுகதி ரயிலின் பெயர்) வேகத்தில்த் துடித்த இதயத்துடிப்பை எங்கே அவன் கேட்டு விடுவானோ என்ற பயத்திலேயே அவன் நெஞ்சில் அழுத்தமாக ஒன்றிக் கொண்டாள்.

 

சும்மா எடுத்ததுக்கெல்லாம் தன்னோடு சுடுசட்டியில்ப் போட்ட பாப்கார்னாக குதிப்பவள் இப்போது இவ்வளவு பாந்தமாக தன்னுள் அடங்கியிருப்பதைப் பார்த்ததுமே லீக்கு நன்றாகப் புரிந்தது, ஷானவிக்கு எவ்வளவு தூரம் தன்னைப் பிடித்திருக்கிறது என்று. இந்த அன்பிற்கு எதிர் காலம் இருக்கிறதா என்று கேட்டால் அதை அவனாலேயே நிச்சயம் பண்ணிச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவன் இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் நீங்கி இலேசாக பறப்பது போன்றிருந்த இந்த அற்புத நொடிகளை அவன் சிறிதும் வீணாக்கத் தயாராயில்லாமல் அவளை இன்னும் அதிகமாகத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

 

எவ்வளவு நேரம் அந்த ஏகாந்த மனனிலையில் இருந்தார்களோ தெரியவில்லை. ஷானவியின் கால் வலியைக் கொடுத்து அவளை நிதர்சனத்துக்கு அழைத்து வந்தது. மெதுவாய் அவன் நெஞ்சில் இருந்து தனது தலையைத் தூக்க, அவள் முகத்தைத் தன் ஒற்றைக் கரத்தால் ஏந்தி அவள் விழிகளை ஊடுருவினான்.

 

“எனக்கு விஷ் செய்ய மாட்டியா ஷானு?”

 

அவளோ எதுவும் புரியாத சிறு குழந்தையாக விழித்தாள். அதைக் கண்டவன் மெல்லிய முறுவலுடன்,

 

“ஹேய் லூசு…! நீ இன்னும் எனக்கு நியூ இயர்க்கு விஷ் பண்ணலடி…”

 

“ஆ…. ஓம் என்ன…? ஹப்பி நியூ இயர் லீ…”

 

என்றாள்.

 

“என்ன வெறும் விஷ் மட்டும்தானா?”

 

“அப்ப வேற என்ன வேணுமாம்?”

 

அவன் சிரித்துக்கொண்டே தன் கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டுக் காட்டி விட்டு அவள் முகத்தினருகே குனிந்தான். ஒரே எம்பில் பச்சக்கென அவசரமான ஒரு முத்தத்தை அவன் கன்னத்தில் வைத்தவள்,

 

“கால் வலிக்குது லீ… வீட்ட போவோமா?”

 

என்றாள். அவனும் சம்மதமாய்த் தலையசைத்தவன், அவளைத் தன் கைகளில் ஏந்திக் காரை நோக்கிச் சென்றான். அவளைக் காரில் உட்கார வைத்து, காரை எடுத்தவன் வீட்டை அடையும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஷானவியும் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தவள் எதையும் சிந்திக்க மனமற்றவளாய், மனதை ஒருமுகப்படுத்த கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

வீட்டுக்குச் சென்று ஷானவி உடை மாற்றியதும், அவள் அறைக் கதவை வந்து தட்டினான் லீ.

 

“ஷானு! உள்ள வரவா?”

 

“ம்… வா… கதவு லாக் பண்ணல…”

 

உள்ளே வந்தவன் அவள் கையில் சிறியதொரு கிப்ட் பாக்ஸ்சை வைத்தான்.

 

“என்ன லீ இது?”

 

“நியூ இயர் கிப்ட்…”

 

இந்தத் தடவை மனதில் குழப்பமற்று சந்தோசமும் ஆர்வமுமாகப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே ஒரு சிறு பெட்டியில் சூரியனுள் ஒரு சிறு கோளம் ஆடிக் கொண்டிருந்த பென்டன் இணைத்த நூல் போல மெல்லிய ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. அதைத் தனது கைகளில் எடுத்தவன்,

 

“இந்தச் சூரியன் நீ… இந்த ஃபோல் பூமி… அது நான். என் வாழ்க்கையில் இத்தனை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தோசத்தைப் பார்த்தது உன்னைச் சந்திச்ச பிறகுதான் ஷானு. சூரியனைச் சுற்றும் பூமியாய் இப்படி உன்னைச் சுற்றிச் சுற்றி வந்தே வாழ்ந்து முடிச்சிடணும் போல இருக்கு…”

 

என்றான் குரல் தளுதளுக்க. லீயிடமிருந்து இப்படி ஒரு பரிசையும் அதற்கு மேலாய் இந்த விளக்கத்தையும் எதிர்பாராத ஷானவியோ பேச வார்த்தைகள் மறந்து விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள். அப்போதும் அவள் மனதில்,

 

‘எனக்கு இந்த உவமான, உவமேயம் எல்லாம் சொல்லத் தெரியலை. ஆனா காலம் பூரா உன் அணைப்பிலேயே வாழ்ந்திடணும் போல ஆசையாக இருக்கு. இதெல்லாம் கொஞ்சம் கூட எந்த விதத்திலும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்பதால நீ சொன்ன போலவே சூரியனும் பூமியுமாய் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டே நாம வாழ்ந்து முடிச்சிடுவோம் லீ’

 

தனது எண்ண ஓட்டத்தை முழுவதுமாக வாய் விட்டுச் சொல்லாதவள்,

 

“எனக்கும் தான் லீ… நிறைய வருசத்துக்கு பிறகு இவ்வளவு சுதந்திரமாக நான் பீல் பண்ணுவதே இப்போது தான். இது அப்படியே தொடராதா என்று தான் ஏக்கமாக இருக்கு. ஆனால் நாளைக்கே நாம பிரியணுமே.”

 

அவள் சொன்னதைக் கேட்டவன் மனதும் கனக்க ஆரம்பித்தது. இந்த இரு கிழமைகளும் கனவு போல விரைவாய்க் கடந்து விட்டதை எண்ணிப் பெருமூச்செறிந்தவன்,

 

“உனக்குத் தூக்கம் வரேல்ல என்றால் ஹோலுக்கு வா ஷானு… டீவி பார்ப்போம். டயர்டாக இருக்கு என்றால்த் தூங்கு…”

 

அவளுக்குமே அவனோடு கழிக்கப் போகும் இந்தச் சில மணித்துளிகளை வீணாக்கி விட இஷ்டமில்லை. சம்மதமாய்த் தலையசைக்க இருவருமாய் வரவேற்பறைக்குச் சென்றார்கள். அவள் நீண்ட ஸோபாவில் சாய்ந்தமர ஸோபாவின் முன்னே நீள ஸ்டூலை இழுத்துப் போட்டு அவள் கால்களைத் தூக்கி அதிலே வைத்தான். தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் புதுவருட நிகழ்ச்சிகளைப் போட்டு விட்டுச் சமையலறைக்குச் சென்றவன், இரு கப்களில் பாலைச் சூடாக்கி ஓவல்மாட்டின் போட்டுக் கலந்து கொண்டு வந்து அவளுக்கும் கொடுத்து தானும் மெதுவாய் அருந்த ஆரம்பித்தான்.

 

தொலைக்காட்சி அதன் பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. இருவரின் பார்வையும் அதில் நிலைத்திருந்ததே தவிர சிந்தனைகள் வேறெங்கோ இருந்தது. ஷானவியும் பாலைக் குடித்து முடித்ததும் இரு கப்களையும் எடுத்துச் சென்று கழுவி விட்டு வந்தவன் ஷானவி கால் வைத்திருந்த ஸ்டூலில் அமர்ந்தான். அவளின் கட்டுப் போடாத காலை எடுத்துத் தனது மடிகளில் வைத்தவன், மெதுவாய் விரல்களைப் பிடித்து சொடக்கெடுத்து விட்டான். ஷானவி தான் பதறிப் போனாள். அவனின் பிடியிலிருந்து காலையும் அகற்ற முடியாமல்,

 

“என்ன செய்றாய் லீ? ப்ளீஸ் காலை விடு. இப்ப நீ எதுக்கு என்ர காலைப் பிடிக்கிறாய்? எனக்கு அந்தரமாக இருக்கு. விடு… சில்துப்ளே…”

 

என்றாள். அவனோ எந்த வித மாற்றமும் இன்றி மென்மையாக அவள் பாதங்களை அமுக்கி விட ஆரம்பித்தான்.

 

“இது எனக்கு ரொம்பப் பழக்கமான, ரொம்பப் பிடிச்ச வேலை ஷானு. சின்ன வயசில இருந்தே அம்மாவுக்கு கால் பிடிச்சு விடுவேன். அதனால நீ ரிலாக்ஸா இரு… நீ ரொம்ப நேரமாக இந்த காலிலேயே உடம்புட முழு வெய்ட்டையும் ஊன்றி நின்றது தான் வலிச்சிருக்கு… நாளன்றைக்கு கட்டுப் பிரிக்கிற தானே என்ன? நாளை ஒரு நாள் வரைக்கும் பொறுத்துக் கொள் என்ன…?”

 

என்றான். அவளும் அதன் பின்னர் ஏனோ மறுத்து விடத் தோன்றாமல் பின்னுக்கு நன்கு சாய்ந்தமர்ந்து கொண்டாள். லீயும் காலைப் பிடித்து விட்டபடி பேசிக் கொண்டிருந்தான்.

 

“ஷானு…!”

 

“ம்….”

 

“இனிமேல் நாங்க சண்டை பிடிக்க வேணாம் என்ன?”

 

“ம்…”

 

“நீ பிரெஞ்ச் கிளாஸ் முடிய வேலைக்குப்

போகப் போறாயா?”

 

“ம்…”

 

“அனுவும் மைக்கேலும் ரொம்ப நல்லவங்க என்ன?”

 

“ம்….”

 

“ஆதூர் உன்ர ரொம்ப குளோஸ் ப்ரெண்டா?”

 

“ம்…”

 

“உனக்கு உன்ர மாமா வீட்ட இருக்கப் பிடிக்காதா?”

 

“ம்….”

 

“அப்போ என்னோட என்ர வீட்டுக்கு வந்திடுறியா?”

 

“ம்….”

 

“நாங்க இங்க இருந்தது போலச் சந்தோசமாக இருக்கலாம் என்ன?”

 

“ம்….”

 

அவள் இதையும் ஒத்துக் கொண்டு “ம்…” சொன்னதை நம்ப முடியாமல் அவள் பாதத்திலிருந்து தன் விழிகளை உயர்த்தி அவள் வதனத்தை ஏறிட்டான். பார்த்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றிருந்தது. ஷானவி அப்படியே தலையை ஷோபா விளிம்பில்ச் சாய்த்து தூங்கியிருந்தாள். அரைத் தூக்கத்தில்த் தான் அவள் “ம்…” கொட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து புன்முறுவலித்தான் லீ. முதலில் பேசிக் கொண்டிருந்த அதே தொனியில்,

 

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”

 

“ம்…”

 

அவள் பதிலைக் கேட்டு மகிழ்ச்சியோடு தனக்குள்ளேயே கள்ளச் சிரிப்புச் சிரித்தவன், அவளை மெதுவாய் தூக்கிச் சென்று அவள் படுக்கையில்ப் படுத்தி அந்தக் கடுங் குளிருக்கு இதமாய்ப் போர்வையைக் கழுத்து வரை மூடி விட்டு மின்சாரக் கணப்பையும் உரிய அளவில் வைத்தான். பின்னரும் அவளை விட்டு நகர மனம் இல்லாதவனாய் அங்கிருந்த சிறு முக்காலியை அவள் அருகே இழுத்துப் போட்டு விட்டு அவளைப் பார்த்தவாறு உட்கார்ந்தான்.

 

முன்னுச்சியில் புரண்ட அவள் கூந்தலை ஒதுக்கி விட்டவன், அப்படியே ஒற்றை விரலால் அவள் முகவடிவை அளந்தான். உதடுகளை வருடியவன் எங்கே அவள் எழுந்து விடுவாளோ என்ற பயத்தில் கையை விசுக்கென எடுத்து விட்டுக் கட்டிலில் முழங்கைகளை ஊன்றித் தன் நாடியைக் கைகளில் ஏந்தி அவளையே வைத்த விழியகற்றாது அந்த விடிவிளக்கின் ஒளியில் பார்த்துக் கொண்டிருந்தான்.  

 

“ஷானு…! நீ தூக்கத்தில் சொன்னது போலவே என்னைக் கல்யாணம் செய்துக்கிறியா? நீ அம்மா, அப்பா இல்லாத ஆள் என்பதைத் தவிர எனக்கு உன்னைப் பத்தி வேறு எதுவும் தெரியாது. ஆனால் உனக்கு மாமா வீட்ட இருக்கப் பிடிக்கலை என்றது எனக்கு வடிவாத் தெரியுது. என்னோட வந்திடு ஷானு… உன்னை நல்லாப் பாத்துக் கொள்ளுறன். ஆனா என் கடந்த காலம் தெரிஞ்ச பிறகும் என்னோட இதே போலப் பழகுவியா? இதே அன்போட இருப்பியா? உன்னோட இருக்கிறப்ப எல்லாம் எனக்கு முன்பு அம்மாவோட சந்தோசமாக இருந்த போலவே இருக்கு. இனி உன்னைப் பிரிஞ்சு எப்பிடி இருக்கப் போறன் என்றே தெரியேல்ல ஷானு.”

 

மௌனமாய்ப் பலதும் எண்ணிக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில்த் தன்னை மீறி நித்ராதேவியின் வசப்பட்டான். காலையில்க் கண் விழித்த ஷானவி முதலில் உணர்ந்தது தன் வயிற்றின் மீது ஏதோ ஒன்று இருப்பதை. நன்றாகக் கண்களை விழித்துச் சுற்றுச்சூழலை ஆராய்ந்தாள்.

 

ஒற்றைக் கரம் அவள் வயிற்றின் மீது நீண்டிருக்க மற்றக் கரத்தை மடித்து அணையாக வைத்து அமர்ந்தபடியே அவளருகே தூங்கிக் கொண்டிருந்தான் லீ. சிறிது நேரம் அவனையே பார்த்தவள் அவன் தூக்கம் கெடாதவாறு அவன் புறமாய்த் திரும்பிப் படுத்து, அவன் நீண்ட கேசங்களை அளைந்து விளையாடினாள்.

 

“உன்னை எனக்கு இந்தளவு பிடிக்கும் என்று கனவிலும் நினைக்கலைடா நான். உன்னில என்ன பிடிக்கும் என்றால் எனக்கு அதுவும் என்ன என்று சொல்லத் தெரியாது… நீ என்னோட சண்டை பிடிக்கேக்கயே என்னால ஒரு நாளும் உன்னை வெறுக்க முடியலை. அதுவும் நீ இப்பிடி என்னைப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறதைப் பார்க்க உன்னைப் பிரிஞ்சு எப்படி இருக்கப் போறனோ தெரியேல்லடா…

 

உன்னோடயே என் வாழ்க்கை முழுவதும் கழிச்சிட மாட்டேனா என்று ஆசையாக இருக்கு லீ… இதெல்லாம் ரொம்பப் பெரிய பேராசை என்று எனக்குத் தெரியும். ஆனா ஆசைக்கு அளவில்லைத் தானே என்ன? ஆனா என்ர கடந்த காலம் பற்றின உண்மை தெரிஞ்சா அதுக்குப் பிறகும் என்னோட இதே பாசத்தோட இருப்பியாடா?”

 

அவள் வருடலில் மெதுவாய்க் கண் விழித்த லீ, தான் அங்கேயே தூங்கி விட்டதை உணர்ந்து ஷானவியைப் பார்த்து அசடு வழிந்தான்.

 

“சலு ஷானு… எழும்பிட்டியா? நீ குளிச்சிட்டு வா… நான் பெத்தித்ஜூர்ணே (காலை உணவு) ரெடி பண்ணுறேன்…”

 

என்ற படி எதுவுமே நடக்காத தொனியில் எழுந்து வெளியே சென்றான். ஷானவியும் சிரித்தபடி எழுந்து தயாராகினாள். காலை உணவின் பின்னர் க்ரினோபிளுக்குத் திரும்புவதாக முடிவு எடுத்திருந்தபடியால் தனது உடமைகளைப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டு வரவேற்பறைக்குச் சென்றாள். அங்கே லீ ப்ரெட் ரோஸ்ட் செய்து கொண்டிருந்தான். இவளும் அவனுடன் இணைய காலை உணவை முடித்துக் கொண்டார்கள்.

 

வீட்டின் அனைத்து யன்னல் கதவுகளையும் பூட்டித் திறப்பை எடுத்துக் கொண்டு தங்கள் பெட்டிகளை முதலில்க் காரில் கொண்டு சென்று வைத்து விட்டு ஷானவியை அழைத்துச் சென்றான் லீ. ஷானவியின் மாமா வீட்டிற்கு முன்னால் காரைப் பார்க் செய்யும் வரை இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இனி ஏதோ வாழும் காலம் முழுவதுமே சந்திக்கப் போவதில்லை என்பது போலத் தான் பிரிவுத் துயரில் வாடிக் கொண்டிருந்தார்கள்.

 

காரை நிறுத்தி விட்டு முதலில் ஷானவியின் பெட்டியைக் கொண்டு சென்று மாமா வீட்டின் மாடியின் கீழ்ப்பகுதியில் வைத்து விட்டு வந்து பின்னர் அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான்.

 

மாமா வீடு மூன்றாம் மாடியில்த் தானே. கீழே இன்டர்போனில் அழைத்தால்த் தான் மாடிப்படிக்குச் செல்லும் கதவு திறப்பார்கள். ஷானவி அழைப்புப் பொத்தானை அமுக்க முயல, லீ அவசரமாகத் தடுத்தான்.

 

“ஷானு… கொஞ்ச நேரம் இரு… ப்ளீஸ்…”

 

கரகர கையில்க் கூறியவன் அவளை அப்படியே இருவருக்குமிடையே காற்றும் புகுந்திடாவண்ணம் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

“ஷானு…! என்னோட வந்திடு… என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியாது ஷானு…”

 

“லீ… ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ… நடக்கிறதைக் கதை…”

 

“உனக்குத்தான் மாமா வீட்ட இருக்கப் பிடிக்காது… அப்புறம் ஏன் அங்க போறாய்…? என்ர வீட்டுக்கு வந்திடு…”

 

“டேய்… ப்ளீஸ்… சும்மா கண்டபாட்டுக்குக் கதைக்காதே… அதெல்லாம் சரியா வராது…”

 

“உன்னை விட்டிட்டு இருக்கணும் என்றதை என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியல… ப்ளீஸ் ஷானு… என்னோட வந்திடு…”

 

சொன்னவன் குரல் தளுதளுத்திருப்பதை உணர்ந்து, தலையை அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் கண்கள் கலங்கி ஒரு சொட்டுக் கண்ணீர்த் துளி கன்னத்தில் இறங்கியிருந்தது. அதைக் கண்டு பதைத்துப் போனவள்,

 

“டேய்… என்ன  இது… எதுக்கு இப்போ அழுகிறாய்? நீ அழுதா எனக்கும் அழுகை வருது… நாங்க இன்னும் ரெண்டு நாளில ப்ரெஞ்ச் கிளாஸ்ல பார்க்கலாம் தானே லீ… ப்ளீஸ்… இப்படிச் சின்னப் பிள்ளை போல நடக்காதை… எனக்கு கஸ்டமாக இருக்கு…”

 

அவள் முடிக்கும் முன்னரே அவள் முகத்தைத் தனது கரங்களில் ஏந்தி முகமெங்கும் முத்தமிட்டவன்,

 

“எனக்கு உன்னை இப்பதான் தெரியும் போலவே இல்லை ஷானு… காலம் காலமாக உன்னோடயே வாழ்ந்திட்டு இருக்கிற போல இருக்கு… என்னோட வந்திடு ஷானு… ப்ளீஸ்… போகாத…”

 

தாயைப் பிரியும் சேயாய்க் கலங்கிக் கொண்டிருந்தவனை ஆற்றும் வழி தெரியாது தவித்துப் போனாள் ஷானவி. அவன் முகத்தை வருடி ஆறுதல்படுத்த முனைந்தவளாய், என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல்,

 

“அழாதை லீ… ப்ளீஸ்… நான் போகணும்… சில்துப்ளே…”

 

என்றவாறிருந்தாள்.

 

அப்போது மாடிப் படிக்குச் செல்வதற்குரிய கதவைத் திறந்து கொண்டு புயலென இவர்களிருக்கும் இடம் வந்தார் ஷானவியின் மாமி சந்திரா.

 

இனி அங்கு சுழன்றடிக்கப் போவது நிஷாவா? இல்லைக் கஜாவா? எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறார்கள் லீயும் ஷானவியும்?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: