Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 24

மூன்றாம் பாகம்

 

அத்தியாயம் – 2. மதி மயக்கம்

 

     இப்போது கங்கைகொண்ட சோழபுரத்தை விட்டு நமது கவனத்தைச் சற்றே கடாரத்தின் பக்கம் திருப்புவோம்.

போதிய படைப் பலத்துடன் கடாரத்தை வந்தடைந்த குலோத்துங்கன் இரண்டொரு நாட்களிலே அந்நாட்டைப் பகைவர்களிடமிருந்து மீட்டு அதன் பழைய மன்னருக்கு அளித்தான். பின்னர் தனது திக்குவிசயத்தைத் தொடங்கி அண்டை நாடுகளான தமாலிங்கம், இலங்காகோசம், மாயிருடிங்கம், தக்கோலம் ஆகிய நாடுகளைச் சோழ நாட்டுக்கு அடிமைப் படுத்திவிட்டு மாபப்பாளம் என்னும் நாட்டுடன் போர் தொடுப்பதற்காக அந்நாட்டின் எல்லைக்குச் சிறிது தொலைவுக்கப்பால் வந்து தன் படையுடன் தண்டிறங்கினான்.

 குலோத்துங்கன் மாசற்ற வீரன்தான். ஆனால் போர் ஒன்றையே குறியாகக் கொண்டு வாழ்க்கை இன்பங்களை மறந்துவிடுபவனல்ல. ஆதலால், பல திங்களாகப் போர் செய்து வந்துள்ள படையினருக்குச் சிறிது ஓய்வும், கேளிக்கைகளுக்கு வசதியும் செய்து கொடுக்கும் நினைவுடன் இங்கே சில நாட்கள் தங்க முடிவு செய்தான். வீரர்களுக்குச் சுவைமிக்க உணவு, காலையிலும் மாலையிலும் பல்வேறு பந்தய விளையாட்டுக்கள், பகலில் பிரியம்போல் எங்கு வேண்டுமாயினும் சுற்றி வருவதற்கு அனுமதி, இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், ஆகிய எல்லாம் அப்போது கிட்டின.

குலோத்துங்கனும் பாசறைக்குள்ளே தங்கியிருந்து விடவில்லை. அவனும் சுதந்திரமாக, எவருடைய பாதுகாப்பும் இன்றித் தன்னந்தனியாகக் குதிரையேறி நாடு நகரெல்லாம் சுற்றினான். தாங்கள் தங்கியிருந்த தக்கோல நாட்டு மக்களுடன், அவர்களில் ஒருவனாகக் கலந்து பழகினான். ஒருநாள் நடுப்பகலில் அவன் குதிரையேறித் தக்கோலத் தலைநகரைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, அங்குள்ள அங்காடியில் (கடைவீதியில்) ஓரிடத்தில் பெருங்கூட்டம் கூடியிருப்பதைக் கண்டு குதிரையை ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அங்கே சென்றான். வட்ட வடிவமாக நின்று கொண்டிருந்த அக்கூட்டத்தின் நடுவில் பேரழகு வாய்ந்த இளமங்கை ஒருத்தி, இனிய இசை ஓசையுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய நடனத்தை விட, குயிலின் குரலில் அவள் இசைத்த பாடல்கள் அவனைப் பெரிதும் கவர்ந்தன. இந்த இசையைத் தனது படையினர் கேட்டு மகிழ வேண்டுமென்று விரும்பிய குலோத்துங்கன், நிகழ்ச்சி முடியும் வரையில் காத்திருந்து, பிறகு அப்பெண்ணை அணுகி, அவள் தன்னுடன் வந்து ஓர் இசை-நடன நிகழ்ச்சியை நடத்தித் தர இயலுமா என்று கேட்டான்.

அப்பெண் குலோத்துங்கனின் கேள்விக்கு விடையளிக்காமல், வைத்த கண் மாறாமல் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

“ஐயா! தாங்கள் யார்?” என்று தயங்கியவாறே வினவினாள் அப்பெண்.

“நான் குலோத்துங்கன்; சோழ நாட்டுப் படைத்தலைவன்.”

“சோழ நாட்டுப் படைத்தலைவரா?” அப்பெண்ணின் கண்கள் வியப்பால் விரிந்தன. “என் பேறே பேறு!” என்று கூறிய அவள் உடனே புறப்படத் தயாராகி விட்டாள்.

அன்றிரவு சோழநாட்டுப் படை தண்டிறங்கியிருந்த இடத்தில் அந்தத் தக்கோலத்து நங்கையின் ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு நெடும் பொழுது நடந்தது. அந்நிகழ்ச்சியில் மெய் மறந்துவிட்ட படையினர், அப்பெண்ணை இன்னும் சில நாட்கள் தங்கச் செய்து, தங்களுக்குத் தொடர்ந்து இசை விருந்து அளிக்கச் செய்ய வேண்டுமென்று குலோத்துங்கனைக் கேட்டுக் கொண்டனர்.

குலோத்துங்கனையும் அவளுடைய கலாவல்லமை மிகவும் கவந்துவிட்டது. அவன் அவள் இன்னும் சில நாட்கள் தங்களுடன் தங்குமாறு கேட்டுக் கொண்டான். அப்பெண்ணும் இணங்கினாள். நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் தொடர்ந்து நடந்தன. ஏழு நாட்களும் அவள் இசையின் ஏழு பிரிவுகளில் அவர்களுக்கு விருந்தளித்தாள். ஏழாம் நாள் இரவு நிகழ்ச்சிகள் முடிந்ததும் குலோத்துங்கன் அவளுக்குப் பல பரிசில்களை அளித்து, ‘ஏழிசை வல்லபி’ என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினான்.

ஏழிசை வல்லபி மறுநாள் தக்கோலத் தலைநகருக்கு திரும்புவதாக இருந்தது. அன்றிரவு முழுவதும் குலோத்துங்கனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அவளுடைய இசை வல்லமை மட்டுமின்றி, பேரெழிலும் அவனைக் கிறக்கம் கொள்ளச் செய்தன. எவ்வளவு முயன்றும் அவனால் அவளுடைய எழிலுருவைத் தன் மனத்திரையிலிருந்து அழிக்க முடியவில்லை. கலாவல்லபியான அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் அவனுடைய நெகிழ்ந்த நெஞ்சில் ஒவ்வொரு தளிராக விட்டு வளர்ந்தது.

இறுதியில், மறுநாள் காலையில் ஏழிசை வல்லபி அவனிடம் விடைபெற வந்தபோது குலோத்துங்கன் தன் கருத்தை வெளியிட்டே விட்டான்.

இதைக் கேட்டதும் அப்பெண் நாணிக் கண் புதைத்தாள். பின்னர், “உங்களைக் கணவராகப் பெற நான் பெரும்பேறு செய்திருக்கவேண்டும், சேனாபதி. ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான் நமது திருமணம் நடக்க முடியும்!” என்றாள்.

“என்ன நிபந்தனை? சொல் வல்லபி. எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறேன்,” என்று தேனுண்டு மயங்கிய வண்டைப்போல் மிழற்றினான் குலோத்துங்கன்.

“சேனாபதி! தங்களை நான் மணக்க வேண்டுமானால், தாங்கள் என்றும் என்னைப் பிரிவதில்லை என்று வாக்குறுதி தர வேண்டும்.”

“உன்னைப் பிரிவதா? இனியா? என் உயிரைப் பிரிந்தாலும் பிரிவேன்; உன்னைப் பிரிய நானே நினைத்தாலும் இனி முடியாது, கண்மணி! என் போர்க்கலை மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீயாக என்னைப் பிரிந்தாலன்றி, அல்லது விதி நம் இருவருள் ஒருவரின் உயிரைப் பிரித்தாலன்றி, நம்முடைய பிரிவு ஏற்படாது, வல்லபி!” அழகு மயக்கத்தில் ஏழிசை வல்லபியின் கையைப் பிடித்து ஆணையடித்துக் கொடுத்தான் குலோத்துங்கன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: