Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 23

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 23

மூன்றாம் பாகம்

 

அத்தியாயம் – 1. இறுதி விருப்பம்

 

     வீரராசேந்திரரின் மரணத்துக்கு மனநோய்தான் காரணமென்று கண்டோம். ஆனால் அந்த மனநோய்க்குக் காரணம், பல்லாண்டுகளாகத் தோற்றோடச் செய்துவந்த குந்தளத்தாரிடம் ஒரு சமரச உடன்படிக்கைக்கு வர நேர்ந்ததே என்ற ஏக்கம் மட்டுமன்று; அதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. முதல் காரணம்: சோழ நாட்டின் வருங்காலத்தைப் பற்றி அவர் கொண்ட கவலை. அவருக்குப் பின் சோழ அரியணை ஏற உரிமை பெற்றிருந்தவன் மதுராந்தகனே. மதுராந்தகனையன்றி வீரராசேந்திரருக்கு வேறு சில மைந்தர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் பட்டதரசியின் மக்களல்லர். சோழகுல மரபுப்படி பட்டதரசியின் மக்களே நாட்டின் அரசுரிமை பெற்றவர்கள். எனவே மதுராந்தகன் ஒருவனே அப்போது சோழநாட்டின் அரசுக்கட்டிலில் அமரும் தகுதி பெற்றவனாக இருந்தான்.

ஆயினும் அவனுடைய போக்கு வீரராசேந்திரருக்குச் சிறிதளவு கூடப் பிடிக்கவில்லை என்பதோடு, அவனுடைய நடவடிக்கைகளும் குடிமக்கள் விரும்பத்தக்க வகையில் இருக்கவில்லை. ஏன்? அவனை அரியணையில் அமர்த்தினால், குந்தள நாட்டில் ஆகவமல்லனின் மறைவுக்குப் பிறகு திறமையற்ற இரண்டாம் சோமேசுவரனை அரியணையில் அமர்த்திய போது நிகழ்ந்த உள்நட்டுக் குழப்பம் போல் இங்கும் நிகழ்ந்துவிடுமோ என்றுகூட அவர் கவலை கொண்டார். இதனால்தான் குலமரபுப்படி தமது ஆயுட்காலத்திலே மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் அவர் இருந்தார்.

ஆனால் இப்போது தமது காலம் நெருங்கி விட்டதென்பது அவருக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. இந்நிலையில் என்ன செய்வதென்று அவர் மிகவும் குழம்பினார். தமது மூத்த சகோதரர்களான இராசேந்திரருக்கோ பட்டத்துரிமை உடைய மைந்தர்கள் இருந்திருந்தால், கூசாமல் அவர்களை அரியணையில் ஏற்றியிருப்பார். ஆயின், இராசாதிராசரோ மக்களே இன்றி உயிர் நீத்தார்; இராசேந்திரருக்குப் பல மைந்தர்கள் இருந்தும், அவர்களில் ஒருவர் கூடப் பட்டத்தரசியின் மக்களில்லை. மதுராந்தகிதான் பட்டத்தரசியின் புதல்வி. ஆனால் பெண்பாலருக்குப் பட்டத்துரிமை வழங்கும் மரபு அன்று மன்னர்களிடையே கிடையாது. ‘இப்படி எல்லா வழிகளும் அடைபட்டு, இந்த உதவாக்கரையே கீர்த்தி பெற்ற இந்தச் சோழமாவலி வாணராயன் அரியணையில் அமரும் தகுதி பெற்றிருக்கிறானே; இவனிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது?’ என்று அவர் இடைவிடாமல் குழம்பினார். இந்தக் குழப்பமும் கவலையும் வேறு வீரராசேந்திரரின் ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கு உதவின.

மற்றோரு மனப்புண்ணும் மாமன்னருக்கு இருந்தது. அது வெளியாருக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால் மன்னரின் மனத்தை அரிக்க அதுவும் காரணமாக இருந்தது. பிறர் அறியாத அந்த இரகசியம் இதுதான்: மன்னரின் அகவாழ்வு மிகமும் துன்பமயமாக இருந்தது. கொள்ளிக்கட்டைகளைப் போன்ற இரு மக்களை ஈன்ற பட்டத்தரசி அருமொழி நங்கை நாட்டுக்கும், அரசகுலத்துக்கும் அவர்கள் சூட்டிவரும் இழிபெயர்களைச் சிறிதும் மனத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு மேலும் மேலும் செல்லம் கொடுத்துக் கெடுத்து வந்தாள். அவர்களை இவ்வாறு வளர்ப்பது நல்லதல்ல என்று வீரராசேந்திரர் எடுத்துக் கூறினால் அவள் சீற்றம் அடைந்தாள். தன் மக்கள் மீது அவருக்குப் பற்றில்லை என்று குற்றம் சாட்டினாள். தன் சக்களத்தி மக்களிடமே அவர் பற்றுக் கொடிருப்பதாக அடிக்கடி இடித்துரைத்தாள். வானவி முதல் தடவை பாதாளச் சிறையில் தள்ளப்பட்டபோது அருமொழி நங்கை அரண்மனையையே இரண்டு படுத்தி விட்டாள். தன் மைத்துனர் இராசேந்திரரிடம் தானே போய், இது நியாயமா என்று கேட்கப் போவதாகக்கூடப் புறப்பட்டுவிட்டாள். அன்று அவளைத் தடுத்து நிறுத்துவது வீரராசேந்திரருக்குப் பெரும் பாடாகிவிட்டது. இறுதியில் தாமே மன்னரிடம் சென்று மகளின் விடுதலைக்கு இறைஞ்சுவதாகக் கூறிய பிறகுதான், அவள் சிறிதளவு அமைதி அடைந்தாள்.

ஆனால் இராசேந்திரர் வானவியைச் சிறையிலிட்டு விட்டு அதற்குத் தக்க காரணமும் காட்டிவிட்டபோது அவள் வாய் அடைத்துப் போயிற்று. ஆயின் சீற்றம் சிறிதும் தணியவில்லை. அந்தச் சீற்றத்தையெல்லம் கணவர் மீதே திருப்பினாள். அவருடைய இல்லற வாழ்வை அமைதியற்றதாக்கினாள். இரண்டாண்டுகளுக்குப் பிறகு வானவி விடுதலை அடைந்த போது அருமொழி நங்கை ஒருவாறு சீற்றம் தணிந்தாள். “நாடெனும் சொக்கட்டானில் பெண்களைப் பகடையாடும் இந்தப் பாழும் நாட்டிலிருந்து உனக்கு விடுதலை கிடைத்துவிட்டது, மகளே! இனி நீ உன் உள்ளம் கவர்ந்தவனோடு குந்தள நாடு சென்று இன்பமாக வாழலாம்!” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, வானவிக்கும் விக்கிரமாதித்தனுக்கும் இப்போது திருமணம் இல்லை என்று இராசேந்திரர் கூறிவிட்ட ஏமாற்றமான செய்தி வந்தது. இராசேந்திரர் விக்கிரமாதித்தனைத் திருமண ஓலையுடன் வரச் சொல்லியிருக்கிறார் என்ற செய்தியை அவள் அறிந்திருந்தால் ஆறுதல் அடைந்திருப்பாள். ஆனால் அவர்தான் அச்செய்தியைத் தமது உள்ளத்துக்குள்ளேயே புதைத்துக்கொண்டு இறந்துவிட்டாரே?

எரியும் கொள்ளியிலே எண்ணெயை ஊற்றியது போலாயிற்று, அதன் பிறகு விக்கிரமாதித்தன் தன் தந்தையின் திருமண ஓலையுடன் வந்தபோது வீரராசேந்திரர் அவனை அவமதித்து விரட்டி விட்டது. அன்றுதொட்டு அவள் கணவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள். வீரராசேந்திரருக்கு மற்ற மனைவியரை விட அருமொழி நங்கையிடந்தான் அதிகமான அன்பும், காதலும். இருந்தாலும் நாட்டின் நலத்துக்காக அவர் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக நடக்கத்தான் வேண்டியிருந்தது; மனைவியின் உறவைத் தியாகம் செய்ய வேண்டித்தான் இருந்தது. ஆனால் அந்தத் தியாகம் அவருடைய உள்ளத்தை எத்தனை தூரம் பாதித்தது என்பதை அவர் ஒருவரே அறிவார். இப்படிப்பட்ட நிலையில் அவரே தமது மகளை மட்டுமின்றி, பட்டத்தரசியின் மற்றோரு மகவான மகனையும் ஆயுள் தண்டனை வழங்கிப் பாதாளச் சிறையில் தள்ள நேர்ந்ததென்றால் அரண்மனையில் அன்று எவ்வளவு அல்லோல கல்லோலம் ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதை வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

ஆனால் வானவியை விக்கிரமாதித்தனுக்கு மணமுடித்து வைத்த பிறகாவது அருமொழி நங்கை கணவருடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தால், வீரராசேந்திரர் இதுவரை தாம் அடைந்து வந்த மனத்துயரையெல்லம் மறந்திருப்பார். ஆனால் அதன் பிறகும் அருமொழி நங்கை அவருடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. மன்னர் நோயுற்ற போதுகூட அவருக்குப் பணிவிடை புரிய வரவில்லை. தான் வராதிருந்தது மட்டுமல்ல; மன்னரின் இதர மனைவியரையும் அவரை நெருங்க விடாமல் தடை செய்தாள். மனைவியர் பலர் இருந்தும் பணிவிடைக்குப் பணிப்பெண்கள் படுக்கை அருகில் வந்து நிற்கும்போது வீரராசேந்திரரின் உள்ளம் வெதும்பிப் போகும். ‘சீ! இது என்ன சாரமற்ற வாழ்க்கை!’ என்ற வெறுப்பு ஏற்படும். ஆகவே இதுவும் அவருடைய மரணத்தை மிக வேகமாக அருகில் நெருக்கியது.

நாள் ஆக ஆக, மன்னரின் ஏக்கமும் கவலையும் தாபங்களும் பெருகி, அவரது நோயையும் பெருக்கின; அவருக்கு மிகுந்த விரக்தியையும் ஏற்படுத்தின. “சாவை எதிர்நோக்கியிருக்கும் நிலையில்கூட என்னைக்காண வராத இந்த மனைவி மக்களுக்கா நான் கடமை என்ற பெயரில் நன்மை செய்ய முயல வேண்டும்? இவர்களைவிட நாட்டின்மீது கருத்துடைய ஒரு பாமரனுக்கு அரியணையும், இந்த அரண்மனை வாழ்வும் கிட்டச் செய்தால் நாடாவது நன்மை அடையுமே!” என்ற அளவுக்கு அவருக்கு அவர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

அப்போது மன்னரின் கடைசி நாட்கள். சிலபோது அவர் நினைவடையும் போதெல்லாம் அரண்மனையைச் சார்ந்த யாராவது தன்னைக் காண வந்திருக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் அவருடைய கண்கள் எங்கும் துழாவும். சில போது, மனைவியரின் பெயர்களைக் கூறிக்கூடப் பரிதாபமாக அலறுவார். ஆனால், அருமொழி நங்கை, அரண்மனையைச் சார்ந்த எல்லோரிடமும், அவரைப் பார்க்கப்போயோ, அல்லது அவருடன் உரையாடியோ தொல்லை கொடுக்கக் கூடதென்று மருத்துவர்கள் அறிவித்திருப்பதாகக் கூறி நிறுத்தி விட்டிருந்ததால் எவருமே அவரைக்காண வரவில்லை. இந்நிலையில் ஒரு நாள் முன்னிரவில் மன்னர் நினைவு பெற்றுக் கண் விழித்தபோது, தமது மஞ்சத்துக்கு அருகில் கண்ணீர் ததும்பும் கண்களுடன் மதுராந்தகி நிற்பதைக் கண்டார்.

உள்ளத்தில் எழுந்த அன்பெல்லாம் வார்த்தைகளில் இழைய, “மகளே! உனக்காவது இந்த அபாக்கியனைக் காண வரவேண்டும் என்று தோன்றியதே; அதற்காகப் பெருமை அடைகிறேன்,” என்றார் மாமன்னர் தொண்டை அடைக்கும் குரலில்.

மதுராந்தகியால் அவருடைய கோலத்தைக் காணப் பொருக்க முடியவில்லை. “சிற்றப்பா! சோழ நாட்டின் மன்னரான உங்களுக்கா இந்நிலை?” என்று அவருடைய மெலிந்த மார்பின் மீது முகத்தைப் புதைத்துக் கதறி விட்டாள் அவள். பிறகு, “அப்படியானால் அரண்மனையிலிருந்து யாருமே உங்களைக் காண வரவில்லையா?” என்று அவள் வியப்புடன் வினவினாள். வெளியார்களான தங்களைத்தான் மன்னரைக் காண வந்து தொல்லை கொடுக்க வேண்டாம் என்று தனது சிற்றன்னை அருமொழி நங்கை தடை செய்திருக்க வேண்டும்; அவளும் மன்னரது மனைவியரான இதர சிற்றன்னையரும் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று மதுராந்தகி இதுவரையில் கருதியிருந்தாள். ஆனால் இன்று இங்கே வந்து, அவர் தனித்து விடப்பட்டிருந்ததையும், தொடர்ந்து அவர், “உனக்காவது இந்த அபாக்கியனைக் காண வர வேண்டும் என்று தோன்றியதே?” என்று கூறியதையும் கண்டபோது மதுராந்தகி மன்னரது நிலையை ஒருவாறு ஊகித்து விட்டாள்.

நோயால் வாடிய மாமன்னர் தேம்பினார். “கண்ணே! அவர்கள் என்னைப் பழிக்குப் பழி வாங்குகிறார்கள். என் பொல்லாத முன்வினைப் பயன், எனக்குச் சுற்றமும் சூழும் அளவற்று இருந்தும், ஒரு வாய்த் தண்ணீருக்குக்கூட அரண்மனைப் பணிப்பெண்களைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக நான் வருந்தவும் இல்லை; கவலை கொள்ளவும் இல்லை, மதுரா! ஆனால் என்னை வாட்டும் கவலை வேறொன்று இருக்கிறது. அதை உள்ளன்போடு என்னை நேசிக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று தவித்துக்கொன்டிருந்தேன். சொல்ல முடியாமலே இறந்து விடுவோமோ என்றும் அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ இன்று வந்து விட்டாய். உட்கார் மகளே, உட்கார்ந்து நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள்,” என்றார் அவர்.

மதுராந்தகி மஞ்சத்தில் அவருடைய காலருகில் அமர்ந்து, உதிரமற்று உலர்ந்து போயிருந்த பாதங்களை மென்மையாக வருடிக்கொண்டே, “சொல்லுங்கள் சிற்றப்பா,” என்றாள்.

வீரராசேந்திரர் சிறிது பொழுது அவளுடைய விசனம் தோய்ந்த முகத்தை, விழிகளைக்கூட அசைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தார். பிறகு கண்களை இறுக மூடிக்கொண்டு சொல்லலானார்: “மகளே! நமது மூதாதையான விசயாலய சோழ தேவர் இந்தச் சோழப் பேரரசை நிறுவிய காலந்தொட்டு, இந்நாட்டை ஆண்டு வந்த ஒவ்வொறு மன்னரும் அதனைப் பெருக்குவதிலே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் மகளே, இந்தப் பாவிமட்டும் அதன் அழிவுக்கு விதையூன்றிவிட்டுப் போகும் துர்ப்பாக்கியத்தைப் பெற்றுள்ளேன். ஆம் கண்ணே, உன் தம்பி மதுராந்தகனின் கைக்கு இந்நாடு போவதும் ஒன்றே; ஓர் அழிவரக்கன் கைக்குப் போவதும் ஒன்றே அல்லவா?”      மாமன்னர் இத்துடன் நிறுத்திவிட்டு மூடியிருந்த கண்களைத் திறந்து மதுராந்தகி தன் வினாவுக்கு என்ன விடை தரப் போகிறாள் என்பதை ஆவலுடன் நோக்கினார். ஆனால் அவள் அவருடைய வினாவுக்கு விடை பகராமல், “ம்… மேலே சொல்லுங்கள் சிற்றப்பா,” என்றாள்.

ஆனால் வீரராசேந்திரர் விட்டுகொடுக்காமல், “என் ஊகம் தவறா, மகளே?” என மீண்டும் வினவினார்.

“தம்பியின் அரசியல் திறனைப்பற்றி நான் என்ன கண்டேன் சிற்றப்பா?”

“மதியூகியான உனக்கு அது தெரிந்துதான் இருக்கும், மதுரா. ஆனால் என் முன் என் மகனின் திறமையைக் குறைத்துப் பேச அஞ்சுகிறாய், அப்படித்தானே? போகட்டும்; நான் வேறொன்று கேட்கிறேன்; அதற்காவது விடையளிப்பாயா? மகளே! உன் கணவனின் நாட்டை உன் தந்தையே ஏதோ அரசியல் காரணத்துக்காக உங்களுக்கு இல்லையென்று ஆக்கிவிட்டார். தமது அந்த அரசியல் நோக்கம் தவறு என்பதை அவர் இன்று உயிரோடிருந்தால் அறிந்திருப்பார். ஆனால் அதை அறியும் வாய்ப்பு எனக்குத்தான் கிட்டியது. உடனே நான் விழித்துக்கொண்டு, இச்சோழ நாட்டின் எல்லைப் பாதுகாப்புக் கேந்திரமாக வேங்கி விளங்க வேண்டுமென்றால், அது ஒரு கோழையின் கையில் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து, அந்நாட்டுக்குரிய உன் கணவனுக்கு அதனை வழங்கினேன். ஆயின் அவன் அதை மறுத்துவிட்டுத் தன் சிறிய தந்தைக்கே மீண்டும் கொடுக்கச் செய்தான். அந்தக் கோழை அதை மற்றொரு முறை இழந்துவிட்டு ஓடி வந்தான். அப்போதே நான் தீர்மானித்து விட்டேன், இனியும் அக்கோழையை வேங்கி அரியணையில் அமர்த்தலாகாது என்று.”

“ஆனால் மீண்டும் அவரைத்தானே அந்த அரியணையில் உட்கார்த்திவிட்டு வந்திருக்கிறீர்கள், சிற்றப்பா?” என்று மதுராந்தகி குறிக்கிட்டுக் கேட்டாள்.

உலர்ந்து வெடித்திருந்த தமது உதடுகளை விரித்து மாமன்னர் சிரித்தார். பின்னர் சொன்னார்: “எனக்குத் தெரியும் மகளே, அதற்காக நீ என்மீது அளவற்ற சினம் கொண்டிருப்பாயென்பது. ஆனால் மதுரா, அது ஒரு தாற்காலீக ஏற்பாடு. திக்குவிசயம் சென்றிருக்கும் குலோத்துங்கன் சோழநாடு திரும்பிய பிறகு நாட்டை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டே வேங்கியில் விசயாதித்தனை உட்கார்த்தியிருக்கிறேன்.”

 “உண்மையாகவா, சிற்றப்பா?” மதுராந்தகியின் முகமலர் சட்டென மலர்ந்தது. ஆம், கூடல் சங்கமப் போர் வேங்கியை மீட்பதற்காக நடக்கப் போகிறது என்று அறிந்தவுடனே, அவள் தன் ஆணை நிறைவேறப் போகும் நாள் இனி அதிக தூரத்தில் இல்லை என்று களிப்படைந்தாள் அல்லவா? அந்தக் களிப்பு, வேங்கி நாடு மீண்டும் விசயாதித்தனுக்கே வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தி வந்தபோது பெருத்த ஏமாற்றமாக மாறியது. ஏனென்றால் அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பது கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த எவருக்கும் தெரியாது. அந்த ஏற்பாடு நடந்தபோது உடனிருந்த சோழநாட்டுப் படைத்தலைவர்கள் பலர் அப்போது கங்கை கொண்ட சோழபுரத்தில்தான் இருந்தனர். ஆனால் அரசியல் நோக்கங்களையும், செயல்களையும் அவர்கள் யாரிடமும் வெளியிடுவது கிடையாது. வேங்கியை மிட்ட பிறகு அங்கே சோழநாட்டின் பிரதிநிதி ஒருவரையோ, அல்லது மாதண்டநாயகர் ஒருவரையோ வீரராசேந்திரர் நியமித்துவிட்டு வந்திருந்தாரானால், தன் கணவர் திக்குவிசயத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் அந்நாடு அவருக்கு வழங்கப்படலாம் என்ற அற்ப நம்பிக்கையாவது மதுராந்தகிக்கு இருந்திருக்கும். நேர்மாறாக, ஒரு நாட்டை ஆளும் தகுதி சிறிதும் இல்லையெனப் பலதடவை மெய்ப்பித்திருந்த தனது சிறிய மாமனுக்கே நாடு மீண்டும் வழங்கப்பட்டதைக் கண்டதும், ‘சிற்றப்பாவும் நமது ஆணையை மனத்தில் கொண்டுதான் இவ்வாறு செய்துவிட்டார்’ என்றே தவறாகக் கருதி விட்டாள். எனவே இப்போது தன் கருத்துத் தவறு என்பது தெரிய வந்ததும் அவளுடைய அகத்தில் தோன்றிய மலர்ச்சி முகத்தில் வெளிப்பட்டது.

வீரராசேந்திரர் ஓரக் கண்ணால் அவளுடைய முக மலர்ச்சியைப் பார்த்துப் புன்னகை பூத்தார். “ஆமாம், கண்ணே,” என்று கூறிவிட்டு அவர் தொடர்ந்தார்: “இதைச் செய்ததன் மூலம் என் ஆயுளிலே ஒரு நல்ல செயலைச் செய்த மன நிறைவை அடைந்திருக்கிறேன். அரசியல் என்பது ஒரு சொக்கட்டான் விளையாட்டு, மதுரா. அதிலே மன்னர்கள் தவறுவது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அப்படித்தான் உன்னுடைய தந்தை வேங்கி விஷயத்தில் தவறிவிட்டார். அவருடைய தவற்றை என் ஆட்சிக் காலத்தில் திருத்தி விட்டேன். உங்களுக்கு உரிய நாட்டை உங்களுக்கே கிடைக்கச் செய்துவிட்டேன். அதற்குக் கைமாறாக நீங்கள் என் கடைசி விருப்பம் ஒன்றை நிறைவேற்றி வைக்க வேண்டும்.”

“சொல்லுங்கள் சிற்றப்பா; உங்கள் விருப்பம் ஏதாக இருந்தாலும் அதை நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்.”

“மகளே! இந்தச் சோழநாடு உதவாக்கரையான என் மைந்தன் மதுராந்தகன் கைக்குப் போவதை இனித் தவிர்க்க முடியாது. அவனுடைய போக்கும், திறமையற்ற தன்மையும் நீங்கள் அறியாததல்ல. ஆதலால் அவன் முடிசூடிக்கொண்ட பிறகு பகைவர்கள் இந்நாட்டைக் கவ்விக்கொள்ள ஓடோடியும் வருவார்கள். உன் கணவன் குலோத்துங்கன் இந்நாட்டின் படைத் தலைவர்களில் ஒருவனாகவே வருங்காலத்திலும் இருப்பானாகில் நான் கவலை கொள்ள மாட்டேன். ஆனால் நீங்கள் வேங்கிக்குப் போய் விடுவீர்கள். அதனால்தான் இந்த வேண்டுகோளை இப்போது விடுக்கிறேன். மகளே! சோழநாடு உன் தாய்நாடு. உன் கணவனை வளர்த்த நாடு. அந்த நாடு ஒரு போதும் பகைவர்கள் கைக்குப் போய்விடாமல் நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். ஊழ்வினைப் பயனால் இப்போது கொள்வினை மூலம் உறவு கொள்ள நேர்ந்துள்ள குந்தளத்தாரைப் பற்றித்தான் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். இந்தத் திறமையற்ற மதுராந்தகனைத் துரத்திவிட்டு சோழநாட்டின் அரியணையில் விக்கிரமாதித்தன் அமர முயலலாம். ஏனென்றால் பல தலைமுறைகளாக அவர்களுக்கு வளம்பெற்ற இந்நாட்டின் மீது ஒரு கண் இருக்கிறது. அதை நடக்கவிடாமல் நீங்கள் கண்காணிக்க வேண்டும். குலோத்துங்கன் இங்கிருந்தால் இதையெல்லாம் அவனிடமே சொல்லியிருப்பேன். அவன் இல்லாத காரணத்தாலும், அவன் திரும்பும்வரையில் உயிரோடிருப்பேனோ என்ற ஐயம் எனக்கு இருப்பதாலும், அவனிடம் கூற வேண்டியவைகளை உன்னிடம் சொல்கிறேன். மதுரா! வேங்கி நாடு மூன்று தலைமுறைகளாகச் சோழ நாட்டின் ஒரு கிளையாக இருந்து வருகிறது. மூன்று தலைமுறைகளாக நாம் ஒரே குடும்பத்தினராகவும் இருந்து வருகிறோம். ஆதலால், தேவை ஏற்பட்டால் இந்நாட்டு அரியணையில் குலோத்துங்கன் அமர்ந்தாலும் அமரலாம்; ஆனால் ஒரு குந்தளத்தான் அமர்ந்துவிடக் கூடாது. இந்த என் இறுதி விருப்பத்தை உன் கணவனைக்கொண்டு நிறைவேற்றி வைக்கச் செய்வாயா, மகளே?”

மதுராந்தகியால் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. என்ன? சோழ நாட்டுக்குத் தன் கணவன் மகிபன் ஆனாலும் ஆகலாம்; சிற்றப்பாவின் முறை மருமகனான விக்கிரமாதித்தன் அமரக் கூடாதா? இதுவா சிற்றப்பாவின் விருப்பம்? அவரது இறுதி வேண்டுகோள் இதுவா? அவள் தன் ஐயத்தைப் போக்கிக் கொள்ள, “என்ன சொன்னீர்கள், சிற்றப்பா?” என்று கேட்டாள்.

“வேங்கி மன்னனாகப் போகும் குலோத்துங்கனே சோழநாட்டுக்கும் மன்னன் ஆனாலும் ஆகலாம்; ஒரு குந்தளத்தானோ, அல்லது வேறு அயல்நாட்டானோ இந்த அரியணையில் அமரக்கூடாது. அமர நீங்கள் விடக்கூடாது, என்றேன் மகளே!…”

கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? “உங்கள் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவது எங்கள் கடன், சிற்றப்பா!” என்றாள் மதுராந்தகி. அதே போதில், ‘இறைவன் தான் என் ஆணை நிறைவேற இவ்வாறு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்’ என்று அவள் உள்ளம் அவரை மனதார வாழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 26மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 26

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 4. சந்தர்ப்பம் செய்த சதி        மனிதர் மனிதரைச் சதி செய்வது ஒருபுறம் இருக்கட்டும்; சிலபோது சந்தப்பங்களே மனிதரைச் சதி செய்து விடுகின்றனவே, அதை என்னவென்று சொல்வது? மதுராந்தகிக்கும் குலோத்துங்கனுக்கும் அப்போது போதாத காலம்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5

அத்தியாயம் – 5. எதிர்பாராத நிகழ்ச்சி        சோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 22

இரண்டாம் பாகம்   அத்தியாயம் – 12. வியப்புறு திருப்பம்!        ஆகவமல்லனின் எதிர்பாராத மரணத்தால் விக்கிரமாதித்தன் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளானான். ஆம், அவனுடைய திட்டங்கள் அனைத்தையுமே கிட்டத்தட்ட நிலைகுலையச் செய்துவிட்டது அச்சாவு. வீரனான விக்கிரமாதித்தனின் திட்டங்கள் பலப் பல. ஆயினும்