Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” -11

அத்தியாயம் – 11

 

அன்று மாலை தூங்கியதாலோ என்னவோ ஷானவிக்கு இரவு தூக்கம் வரவில்லை. நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு கடந்திருந்தது. அனுஷரா தந்த ஐபாட்டையும் வரவேற்பறையில் வைத்து விட்டிருந்தாள். அதைப் போய் எடுத்து வருவோம் என்று எண்ணியவள், ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக வரவேற்பறையை அடைந்து ஐபாட்டை எடுத்தாள். திரும்பி கெந்திக் கெந்தி அறைக்குப் போக அலுப்புப்பட்டவாறே அங்கிருந்த நீள ஸோபாவிலேயே சாய்ந்து கொண்டாள்.

 

“யூ டேர்ன்” கன்னடப் படத்தைப் போட்டுப் பார்த்தவாறு இருந்தாள். அதுவோ ஒரு பேய்ப்படம். வீடெங்கும் விளக்கணைக்கப்பட்டு இருள் சூழந்திருந்தது. இவள் கையிலிருந்த ஐபாட் வெளிச்சத்தை விட வேறு ஒளித்துணுக்கே எங்கும் இல்லை. அப்படி இருளில் இருந்து கொண்டு பேய்ப்படம் பார்த்தால் கிலி பிடிக்காமல் என்ன செய்யுமாம்? முடிவைப் பார்க்காமல் இடையில் நிறுத்தினாலும் அவளால் நிம்மதியாக தூங்க முடியாது.

 

அப்போது தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த லீ யூ வோன், வரவேற்பறையில் அரவம் உணர்ந்து வெளியே வந்தான். இவளைக் கண்டதும் அருகே வந்தவன், பேயறைந்தவள் போல இருந்தவளைக் கண்டு விட்டு,

 

“ஆர் யூ ஓகே ஷானு? ஏன் இப்படி முழிச்சுக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய்? உடம்புக்கு ஏதும் செய்யுதா?”

 

என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருத்தவளுக்கு லீயைக் கண்டதும்தான் உயிர் வந்தது.

 

“இங்க வந்து உட்காரு லீ… எனக்கு தூக்கம் வரேல்ல… நான் மூவி பார்க்கிறேன். நீயும் வந்து பார். எனக்கும் புரியாத மொழி தான். சப்டைட்டில் இருக்கு. வா…”

 

என்று அழைத்தாள். அவள் இப்படி உரிமையோடு அழைத்ததே அவனை மகிழ்விக்கத் தானும் போய் அவளருகே அமர்ந்தான். அமர்ந்தவன் எழுந்து சென்று சிறியதொரு போர்வையையும் எடுத்து வந்தான். தங்களுக்கு முன்னால் இருந்த ஸ்டூலில் ஐபாட்டை வைத்து விட்டு ஆளுக்கொரு காதுக்கு இயர்போனைக் கொடுத்துக் கொண்டார்கள். இருவரையும் ஒரே போர்வையால் போர்த்திக் கொண்ட லீ திரைப்படத்தில் ஆழ்ந்ததும்தான் ஷானவி எதுக்கு தன்னை அவ்வளவு பாசமாக அழைத்தாள் என்று புரிந்தது. இருந்தாலும் அவள் அருகாமை தந்த இதத்தில் எழுந்து செல்லாது பார்க்க ஆரம்பித்தான்.

 

பேய் வரும் இடங்களில் ஷானவிக்கு முதல் இவன் பயந்தடித்து அவள் கையைப் பிடிப்பதும், ஷானவி முறைக்கத் தள்ளி அமர்வதுமாக இருத்தான். ஒருமுறை எதிர்பாராத விதமாகப் பேய் திரையில் தோன்ற லீ கத்த ஆரம்பிக்க, ஷானவி எட்டி தன் கைகளால் அவன் வாயை மூடினாள். இப்படி லீ அடித்த கூத்துகளிலேயே ஷானவி பயத்தை மறந்து சிரித்துக்கொண்டே படத்தைப் பார்த்து முடித்திருத்தாள்.

 

படம் முடியவும் அவளது அறைக்கு அவளை அழைத்துச் சென்ற லீ, “குட் நைட் ஷானு” எனவும்,

 

“எனக்குத் தூக்கம் வரேல்ல லீ… நீ தான் பாடுவேன்னு சொன்னியே… என்னைப் பாட்டுப்பாடி தூங்க வையேன்…”

 

என்றாள். சிறுகுழந்தையின் பிடிவாதத்தோடு கேட்டவளிடம் மறுக்க முடியாமல், கட்டில் ஓரத்தில் சென்று அமர்ந்தான். தனது மொழியில் ஒரு மெலோடி ஒன்றை மென்குரலில் பாட ஆரம்பிக்கவும், ஷானவி சொக்கித்தான் போனாள். அடிதடி லீயாகவே பார்த்திருந்தவனிடமிருந்து இந்த மென்மையான மனதை மயக்கும் கானத்தை இவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

 

மொழி புரியாது விடின் என்ன? இசைக்குத்தான் மொழி ஏது? அவன் மென்குரலில் கட்டுண்டவள், அது செய்த மாயமோ என்னமோ அப்படியே தூங்கி விட்டாள். ஒரு பாடலை முடித்து விட்டு அவளைப் பார்த்தவன், அவள் தூங்கியிருப்பதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டே போர்வையைக் கழுத்து வரை இழுத்து மூடி விட்டு, சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“பெண்ணே…! எங்கிருந்து நீ வந்தாய்? இந்த ஒரு வருடமாக என் மனதில் இருந்த பாரத்தை, என் வேதனையை, என் காயங்களை இப்படி ஒரு நொடியில் துடைத்தெறிந்து விட்டாயே… உன்னோடு நான் போடும் சின்னச் சின்ன சண்டைகளில் நான் என்னை மறந்து ஒரு குழந்தையாகவே மாறிப் போகிறேனே… உன் கோபங்களே என்னை சிரிக்க வைக்கும் மருந்தாகி விடுகின்றனவே… காலம் முழுவதும் நீ என்கூடவே இருக்க மாட்டாயா? என்ற எண்ணம் மட்டுமே இப்போது என்னை அலைக்கழிக்கிறதே… என் மனமே எனக்கு புரியாமல் என்னைத் தடுமாற வைத்து விட்டாயே கண்ணே…!”

 

என்று தனக்குள் புலம்பி விட்டு ஒரு ஏக்கப் பெருமூச்சோடு தனது அறைக்கு விரைந்தான். இவனது எந்த மனக் குழப்பத்தைப் பற்றியும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஷானவி.

 

இருபத்துநாலாம் திகதி காலை. ஷானவியும் லீயும் தாமதமாகத்தான் எழுந்தார்கள். அனுஷராவும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. ஒரு பத்து மணி போல எழுந்து குளித்துத் தயாராகி வந்தவளை, அப்போது தான் எழுந்து ஒரு கஃபேயுடன் அமர்ந்திருந்த லீ தான் வரவேற்றான்.

 

“மோஷூ லீ…! அனு எங்கே? சத்தத்தைக் காணேல்ல…”

 

என்று கேட்டபடி அவன் எதிரே சாப்பாட்டு மேசையில் போய் அமர்ந்தாள்.

 

“மோஷூ ஷானு…! அனுவும் மைக்கேலும் மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க. இப்ப வந்திடுவாங்க. நீ சாப்பிடு முதல்ல…”

 

என்று கூறியவன் அவள் புறமாய் டோஸ்ட்ச் செய்த பிரெட்டையும் பட்டரையும் நகர்த்தினான். அவள் பாணில் பட்டரைப் பூசும் போதே, அவன் அவளுக்காய் தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தான்.

 

இருவரும் பேசிக் கொண்டே உண்ணவும் அனுஷராவும் மைக்கேலும் சந்தையில் இருந்து திரும்பியிருந்தனர். அவர்களும் ஒவ்வொரு கஃபே கப்புடன் இவர்களோடு இணைந்து கொள்ள அங்கே மறுபடியும் பேச்சும் சிரிப்பும் களை கட்டியது. பின்னர் அனுஷரா மதியத்திற்குச் சமையலை ஆரம்பிக்க, ஷானவி உதவி செய்தாள். லீயும் அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவனும் ஏதாவது உதவி செய்து கொண்டு பாத்திரங்களைக் கழுவிக் கொடுத்து என்றிருந்தான்.

 

மதிய உணவு முடிந்ததும் அனுஷராவும் மைக்கேலும் மறுபடியும் வெளியே ஷாப்பிங் சென்றார்கள். கிருஸ்மஸ் தினத்தன்று மதியம் இவர்கள் வீட்டில் தான் ஐந்தாறு நண்பர், உறவினர் குடும்பங்களுக்கு விருந்து. ஆகவே அவர்கள் எல்லோருக்கும் நத்தார் தினப் பரிசுகள் வாங்கவும், பின்னர் இவர்கள் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது கொடுப்பதற்கு பரிசுகள் என்றும் வாங்குவதற்காய்தான் வெளியே புறப்பட்டார்கள்.

 

அப்போது சிறிது பணத்தை அனுஷரா எவ்வளவு மறுத்தும் கேளாது அவள் கையில் திணித்த ஷானவி தனக்கு ஏஃபோர் அளவில் ஒரு போட்டோ பிரேம் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள். அனுஷராவும் சம்மதித்து இவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டுச் சென்றாள். லீ தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாகக் கூறித் தன் லாப்டப்போடு மூழ்கி விட ஷானவி தனது அறையில் சென்று அங்கிருந்த மேசை, கதிரையில் அமர்ந்தாள்.

 

ஆத்விக்கின் வண்ணக் காகிதங்களை வைத்து குயிலிங் முறையில் அழகாக ஒரு மயில் செய்து அதை ஒரு போட்டோ பிரேமில் போட்டு பாக் செய்து சிறு ஞாபகப் பரிசாகக் கொண்டு வந்திருந்தாள் ஷானவி. ஆனால் லீயின் வரவு அவள் எதிர்பாராத உண்டு. ஒரே வீட்டில் இருப்பவனுக்கு எப்படிப் பரிசு கொடுக்காமல் இருப்பது?

 

என்ன செய்வது என்று நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். அனுஷரா, லீ எல்லாம் வசதியானவர்கள் என்பது அவர்களைப் பார்த்தாலே புரிந்து விடும். அவர்களின் தராதரத்துக்குப் பணம் கொடுத்து ஒரு பரிசை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு அவளிடம் பணம் இல்லை. அப்போது தான் என்ன செய்யலாம் என்று சிந்தித்தவள், தனது கைகளாலேயே இந்த அழகிய சுவர் அலங்காரத்தைச் செய்திருந்தாள். குயிலிங் செய்வதற்கு வண்ண காகிதங்களும் அங்கில்லை.

 

திடீரென ஒரு எண்ணம் உந்தப் பெற்றவள், மெதுவாக எழுந்து அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். லீ தனது அக்மார்க் உதட்டுச் சுளிப்புடன் லாப்டாப்பில் புதையல் எடுத்துக் கொண்டிருந்தான். அப்படியே அவனது அந்த முகத்தை மனதில் பதிய வைத்தவள், மறுபடியும் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அங்கிருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தவள், ஒரு பென்சிலை எடுத்து கிடுகிடுவென அவன் தோற்றத்தை மனக்கண் முன் கொண்டு வந்து வரைய ஆரம்பித்தாள். உதட்டுச் சுழிப்போடு அவன் புருவம் உயர்த்திக் கேலியாகப் பார்ப்பது போலத் தத்ரூபமாக வரைந்து முடித்தவள், கீழே “இதே போல என்றும் உன் தனித்துவத்துடன் வாழ்” என்று எழுதி தனது கையொப்பத்தையும் இட்டாள். ஓவியம் அழகாக வந்ததில் மனம் மகிழ்ந்தவள் மாத்திரைகளின் விளைவாய் தூங்க ஆரம்பித்தாள்.

 

எழுந்த போது மாலை ஆறு மணி என்றது. வரவேற்பறையில் பேச்சுக் குரல் அனுஷராவும் மைக்கேலும் திரும்பி விட்டதை உரைக்க மெதுவாய் எழுந்து வெளியே சென்று அவர்களோடு கலந்தாள். வரவேற்பறையில் எங்கும் பொருட்கள். சிறுவர்களுக்கு பெரியவர்களுக்கு என்று வாங்கிக் குவிந்திருந்தனர். ஒரு கட்டு பொதி செய்யும் காகிதங்களும் ஒரு பக்கம் கிடந்தது.

 

அனுஷரா சமையலறையில் அடுத்த நாள் சமையலுக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள். பெரியவர்கள் எல்லோரும் இவள் தாய் உணவு தான் வேண்டும் என்றார்களாம். சிறுவர்களுக்கு பிரெஞ்ச் ப்ரை, சிக்கன் நக்கட்ஸ், பீட்சா என்று முடிவெடுத்தவள், பெரியவர்களுக்கு அவள் நாட்டு முறைப்படி சில உணவுகளைச் செய்வதற்கு தேவையான காய்கறி, இறைச்சிகளை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாள். நாலைந்து வகையான டெசேட்டுகளையும் செய்ய ஆரம்பித்தாள்.

 

ஷானவியும் லீயுமாக அந்த பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் பொதி செய்ய ஆரம்பித்தார்கள். பொழுது இரண்டு கால்களால் ஓடிச் சென்றது. அதற்குள் ஒன்பது மணி ஆகி விட்டதே என்றபடி லீ வீட்டைக் கூட்டி சுத்தம் செய்தான். அனுஷராவும் தனது வேலையை முடித்துவிட்டு வந்தவள்,

 

“சரி சரி… எல்லோரும் ரெடி ஆகுங்க. ஷானு பார்ட்டி ட்ரெஸ்ஸாகப் போட்டுக் கொள். ஏதாவது ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு விட்டு அப்படியே சேர்ச்சுக்குப் போய் விட்டு வருவோம். வீட்டுக்கு திரும்ப அதிகாலை ஆகும். நீ சமாளிப்பாய் தானே ஷானு… உனக்கு ரொம்ப நேரம் இருக்க முடியலை என்றால் மைக்கேலோ, லீயோ உன்னை வீட்டில கொண்டு வந்து விடுவாங்க. அதனால டென்சன் ஆகாமல் கிளம்பு…” என்றாள்.

 

தனது அறைக்குச் சென்ற ஷானவிக்கு எந்த ஆடையை அணிவது என்ற குழப்பம். அவளிடம் மொத்தமாக இருப்பதே இரண்டு டெனிம் ஜீன்ஸ்களும் ஐந்து டாப்புகளும் தான். காலில் மாவுக் கட்டுப் போட்டிருப்பதால் கணுக்கால் நீளம் வரை நீண்ட இரு பாவாடைகளைத் தான் இவ்வளவு நாளும் போட்டுச் சமாளித்துக் கொண்டிருக்கிறாள்.

 

அவளிடமிருந்த ஷல்வாரோ கால் ஒடுங்கியது. அணிய முடியாது. அதனால் அவள் ஷல்வாரையும் எடுத்து வரவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சில்க் சேலையைக் கொண்டு வந்திருந்தாள். கறுப்போ எனும் வண்ணமான கருநீலத்தில் ஆங்காங்கே தெளித்து விட்டது போல வெள்ளைக் கற்கள் ஒட்டப் பட்டு கரைக்கு வெள்ளிச் சருகை வேலை செய்யப் பட்டிருந்தது.

 

அந்த சேலையை எடுத்து இவள் அணிந்து முடியவும்,

 

“ஷானு…! ஏதாவது ஹெல்ப் பண்ணுறதா? ரெடியாகிட்டியா?”

 

என்ற படி அனுஷரா வந்தாள். இவளைக் கண்டதும்,

 

“வாவ்…! சூப்பராக இருக்கிறாய் ஷானு…”

 

என்றவள் தனது அறைக்குச் சென்று சில செயற்கை நகைகளையும் தனது மேக்கப் கிட்டையும் எடுத்து வந்தாள்.

 

ஷானவி மறுக்க மறுக்க அவளுக்கு இலகுவான முகப்பூச்சு செய்து உரிய விதத்தில் கண்ணுக்கு மையிட்டு உதட்டு நிறத்திலயே உதட்டுச் சாயத்தையும் பூசி விட்டாள்.

 

ஷானவிக்கு நீண்ட கூந்தலாக இருந்தாலும் அவளுக்கு எப்போதும் லூஸ் ஹெயார் என்று ஸ்டைலாக சொல்லப்படும் தலை விரி கோலத்தில் இஷ்டம் இல்லை. எப்போதும் அடிவரை ஒரு ஒற்றைப்பின்னல் போட்டுக் கட்டிக் கொள்வாள். இப்போதும் அப்படி இறுக்க பின்னியிருந்தவளின் பின்னலை மறுக்க மறுக்க களைந்தாள் அனுஷரா. மறுபடியும் தலையை வாரியவள்,  தலையின் இருபக்கமும்இருந்து சிறு முடிக்கற்றையை எடுத்து தன்னிடமிருந்த சிறு வெள்ளைக் கற்கள் பதித்த ஒரு சிலைட்டை போட்டு விட்டாள்.

 

இப்போது ஷானவியை அங்கு அலுமாரியில் பதித்திருந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்க்கச் சொன்னாள். ஷானவிக்கே தன் தோற்றம் வியப்பைத் தந்தது.

 

“சூப்பர் அனு…! நீயும் பவுண்டேசன் எல்லாம் போட எங்கே பெயின்ட் அடித்தது போல முகம் ஆகிடுமோன்னு நினைச்சேன். ஆனா ரொம்ப நச்சுலராக இருக்கு. என் பிம்பிள் மார்க்ஸ்ஸ காணேல்லயே.. லிப்ஸ்டிக் கூட லிப் கலர்லயே போட்டிருக்க… ரொம்ப தாங்ஸ்டி…”

 

என்றவள் கண்கள் கலங்கியது.

 

“லூசு…! இப்ப எதுக்கு சும்மா கண் கலங்கிறாய்? சந்தோசமாக வெளிக்கிட்டு வந்து என்ஜாய் பண்ணு… மைக்கேலும் லீயும் எங்களுக்காகத் தான் வெய்டிங்…”

 

“இல்லடி… இந்த பத்து வருசத்தில முதல் முறையா ஒருத்தர் என்னை அழகு பார்க்கிறது இன்றைக்குத்தான்டி… ரொம்ப தாங்ஸ் அனு…”

 

அவளின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட அனுஷராவும் அவளைக் கட்டியணைத்து அவள் முதுகைத் தட்டி ஆறுதல் படுத்தினாள். அப்போது மைக்கேல் இவர்களை வரச் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்கவே இருவரும் வெளியே சென்றனர்.

 

“வாவ்…! த்ரே ப்ஃபூ… த்ரே ஜொலி ஷானு…”

 

என்ற மைக்கேலின் குரலைக் கேட்டு அதுவரைக்கும் தனது கைத்தொலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த லீ யூ வோன் தலையை நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் பார்வையோ கண் சிமிட்டவும் மறந்து அவளிலேயே நிலைத்தது. ஷானவியும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். விழிகளாலேயே அவனிடம் ‘ஓகேவா?’ எனக் கேட்டாள். அவன் அப்போதும் ஏதும் செல்லாது வெறும் பார்வையால் இவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.

 

அனுஷரா லீயை ஷானவியைக் கூட்டி வருமாறு பணித்து விட்டு மைக்கேலோடு காரை எடுக்கச் சென்றிருந்தாள். கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்ததால் காரையும் பாதையையும் சிறிது சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. உப்பைத் தூவி பனியை வழித்தவர்கள் காரை ஸ்டார்ட் செய்தார்கள்.

 

சேலைக்கு மேலே ஜக்கெட்டை எடுத்து ஷானவி அணிய, அவள் மப்ளரை எடுத்த லீ கழுத்தைச் சுற்றித் தானே அணிவித்தான். அவன் சேலையில் தன்னைப் பார்த்தும் ஏதும் சொல்லாததில் மனம் வாடிப் போயிருந்தாள் ஷானவி.

 

“இந்த குனா ரங்கன்னா வடிவா இருக்கு என்று சொல்லாட்டில் எனக்கென்ன வந்துச்சு… நான் கண்ணாடில பார்த்தனான் தானே… வடிவாகத்தான் இருக்கிறன். ஒல்லிப்பிச்சானுக்குப் பொறாமை. நான் அவனை விட வடிவா இருக்கிறன் என்று. பாரன் அவரிட உடுப்பை… வெள்ளைக் கலர் ஜீன்ஸ்ஸும் நாவல் கலர் ரீசேர்ட்டும்… ஜீன்ஸ்ஸோ வேற என்னவுமோ… இரண்டு பக்கமும் சுருக்கு வைச்ச போல கிடக்கு… நாலைந்து நாய்ச்சங்கிலி வேற இடுப்பில தொங்குது. ஏன் பெல்ட் கட்டினா குறைஞ்சு போவாராமே துரை… சங்கிலியைக் கட்டியிருக்கு… கழுத்தில வேற இவ்வளவு சங்கிலி… இவ்வளவு மொத்தம் மொத்தமாக வேற… ஒரு நாளைக்கு இந்த சங்கிலிகளுக்காவவே ரோட்டில திரியிறவங்கள் தங்கட நாய்களுக்கு கட்ட என்று இவனைக் கடத்தாட்டிப் பாப்பம்…”

 

என்று வருத்தத்தில் ஆரம்பித்தவள் கோபமாக மனதுக்குள் திட்டி முடித்தாள். லீயோ இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவள் முகபாவனைகளிலிருந்து இவளது கோபத்தை உணர்ந்தவன்,

 

“ஷானு…!”

 

என்றான் மெதுவாய்.

 

“ம்…”

 

அவள் நாடியைப் பிடித்து தன்புறம் அவள் முகத்தைக் கொண்டு வந்தவன் அவள் கன்னத்தில் தனது இதழ்களைப் பதித்தான். இவளோ திகைத்துப் போயிருந்தாள். அவன் முத்தமிட்டதை அவள் உணரும் முன்னரே, அவன் அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் காரை நோக்கித் தூக்கிச் சென்றான். காரில் இருத்திவிட்டு ஊன்றுகோலையும் எடுத்து வந்து அவள் பக்கத்தில் வைத்தான். ஆனால் அவளோ இன்னும் எதையும் உணரும் வண்ணம் இல்லை.

 

“இப்போ இவன் என்ன செய்தான்? ஏன்டா மூஞ்சூறு… நான் வடிவா இருக்கிறேனா? என்று தானேடா கேட்டேன். அதற்கு எதுக்குடா கிஸ் பண்ணினாய்? அடே நல்லூர்க் கந்தா…!  உனக்கு திரும்ப திரும்ப சொல்லுறன்… இது நல்லா இல்லை… நீ பிழையான ஆளிட்ட என்ர ஓமோன் எல்லாம் கண்டபாட்டுக்குச் சுரக்க வைக்கிறாய்… அவன் சும்மா ப்ரெண்ட்லியாக கிஸ் பண்ணிருக்கலாம். அதுக்கெல்லாம் எதுக்கு என்ர ஹார்ட் இப்படி வெளில விழுந்திடுவனோ என்ற ரேஞ்சில துடிக்குது… முருகா…! நீ ரொம்பத்தான் என்னை சோதிக்கிறாய்… இதெல்லாம் ரொம்ப பாவம்… சொல்லிப்போட்டேன்…”

 

இவள் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருக்க, மைக்கேல் காரை ஒரு ரெஸ்டாரண்டில் நிறுத்தினார். நால்வரும் இறங்கிச் சென்று இரவுணவை முடித்துக் கொண்டு அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றனர். உணவின் போது அனுஷரா, மைக்கேலின் கலகல பேச்சினூடாக ஷானவியும் சகஜ நிலைக்கு வந்திருந்தாள். லீயும் எதுவுமே நடவாதது போல கலகலத்துக் கொண்டிருந்தது இவளையும் இதமான மனனிலைக்குக் கொண்டு வந்திருந்தது.

 

தேவாலயத்தில் பாலன் பிறப்பு பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரவு ஒரு மணி வரை அங்கிருந்தவளுக்கு நீண்ட நேரம் ஒரே ஒரே நிலையில் அமர்ந்திருப்பது சிரமமாக இருக்க அருகிருந்த அனுஷராவிடம் சொன்னாள். இதைக் கவனித்த லீ தானே அவளை அழைத்துச் செல்வதாகக் கூறினான். லீ தனது காரில் தான் வந்திருந்தான்.

 

அந்த ஜனத்திரளில் இவளை கவனமாக ஆலயத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றவன் அங்கு நகரத்தின் மையத்தில் இருந்த பரந்த இடத்தில் வானுயர வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை பார்க்க இவளை அழைத்துச் சென்றான். அது இரவு தானா என்று ஐயம் கொள்ளுமாறு எங்கும் வெளிச்சமாய் இருந்தது. வீடுகளில் ஒரு மனிதர் கூட இல்லை எனும் விதமாய் நடு ராத்திரி என்பது கூட இல்லாமல் மக்கள் அனைவரும் பேசிச் சிரித்துக் கொண்டே அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.

 

அவ்வளவு நேரம் அமர்ந்திருந்தது கால் மரத்துப் போன உணர்வைத் தோற்றுவித்திருக்கவே ஷானவியும் அங்கே ஓரமாய் நின்றபடி இந்த வெளிநாட்டு மக்களின் வாழ்வை வியந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது லீ அங்கே சின்னச் சின்னதாக போட்டிருந்த சிறு கடைகளில் இருந்து உருளைக்கிழங்கும் சீஸ்ஸும் சேர்த்து செய்த ஒரு உணவுப் பதார்த்தத்தையும் சூடாக கப்பசினோவும் வாங்கிக் கொண்டு வந்தான். அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு சூடாய் இருந்ததை உண்டு கப்பசினோவையும் அருந்தினார்கள். அந்த கடுங் குளிருக்கு சூடான பதார்த்தம் இதமாய் உள்ளே இறங்கியது.

 

“எவ்வளவு அழகாக இருக்கு… இந்த சனங்கள் எல்லாம் எவ்வளவு சந்தோசமாக என்ஜோய் பண்ணுறாங்க… இவங்களைப் பார்க்கவே எவ்வளவு மனநிறைவாக இருக்கு…”

 

“நீயும் என்ஜோய் பண்ண வேண்டியது தானே ஷானு… யார் வேண்டாம் என்று சொன்னது…?”

 

“நடுச் சாமத்தில பொம்பிளைப் பிள்ளை எங்க ஊரைச் சுத்தப் போறாய் என்று மாமி நல்ல சாத்துத் தான் தருவா… இப்ப அனுவோட வர விட்டதே பெரிய அதிசயம்…”

 

என்றவளை அதிசயத்துடன் பார்த்தான் லீ.

 

“உனக்கு உன் மாமி வீட்ட இருக்க விருப்பம் இல்லை என்றால் வெளியேற வேண்டியது தானே… ஏன் அங்கேயே இருக்கிறாய்?”

 

‘என் வீட்டிற்கு வருகிறாயா?’ என்று கேட்க துடித்த நாக்கை அடக்கிக் கொண்டான்.

 

“இதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் லீ… ரொம்ப வருசத்துக்குப் பிறகு நான் இப்போதான் சந்தோசமாக இருக்கிறேன். அதைக் கெடுக்காதே சில்துப்ளே…(ப்ளீஸ்)”

 

என்றவளை மேலும் தொந்தரவு செய்யவில்லை அவன். அவள் சோர்ந்து தெரியவே வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இருவரும் உடை மாற்றிக் கொண்டு தத்தமது படுக்கையில் வீழ்ந்தனர். ஆனால் இருவர் மனமுமோ தூக்கம் வராமல் தவித்தது.

 

ஷானவி, லீ முத்தமிட்டதையே எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்க, லீயோ அவள் மீது ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று தன்னையே சுய அலசல் செய்து கொண்டிருந்தான்.

 

சுனாமியாய் சுழற்றிப் போடப் போகும் இந்த காதலை இருவரும் புரிந்து கொள்வார்களா?Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: