Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 21

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 21

இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் – 11. கள்ளனும் காப்பானும்!

 

     பாதாளச் சிறையில் தள்ளப்பட்ட வானவியும், மதுராந்தகனும் என்ன ஆனார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

வானவிக்கு இது இரண்டாவது முறையாகக் கிட்டிய சிறைவாசம். ஆனால் முன்னர் அவள் இந்தப் பாதாளச்சிறையில் இருந்தபோது, அதைச் சிறைவாசமாகவே கருதவில்லை. ஏனென்றால் அப்போது அவளுடன், அவள் உள்ளம் கவர்ந்த குந்தள விக்கிரமாதித்தனும் இருந்தான். ஆதலால் அப்போது அவர்களுக்கு இன்பச் சிறையாகவே இருந்தது. தவிர, அச்சமயம் அவர்களது சிறைவாசத்துக்கு ஒரு காலவரையும் வகுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அதே சிறை அவளுக்குத் துன்பச் சிறையாக இருந்தது. எவனுடன் முன்பு இங்கே பொழுதை இனிதாகக் கழித்தாளோ, அவனை அடைய முயன்ற குற்றத்துக்காக இப்போது அவள் சிறைப்படுத்தப் பட்டிருந்தாள்- அதிலும் இனித் தன் காதலனை என்றுமே காண இயலாதவாறு- தனது ஆயுளின் காலவரையே சிறைவாசத்தின் காலவரையாக! ‘பெயரளவில் சிறைச் சாலை என்றிருந்தாலும் ஓர் அரண்மனையின் வசதிகளில் பெரும்பாலானவை கொண்ட இந்தப் பாதாளச் சிறைக்கு மாறாக, ஒரு வசதியும் இல்லாத சிறையில் அடைத்திருந்தாலும் நான் மனநிறைவு அடைந்திருப்பேனே?’ என்று அவள் நாள் தோறும் புலம்புமாறு அத்தனை கொடிதாகத் தோன்றியது இத்தடவை கிட்டிய சிறைவாசம். ஆம், ஈராண்டுகள் அவளை இன்பவாரிதியில் தள்ளிய இடமல்லவா இது? இங்குள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு பகுதியும் அவளுக்கு அந்த இன்ப நாட்களின் நினைவை எழுப்பி, “அனைத்தையும் இழந்து விட்டோமே!” என்று ஏங்கச் செய்தன.

வானவி இவ்வாறு துன்புற்றிருக்க, மதுராந்தகன் வேறொரு முறையில் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தான். சிறையில் தள்ளுமாறு தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று அவன் கருதினான். பகைநாட்டானான விக்கிரமாதித்தனைச் சிவபோதர் வேடத்தில் அரண்மனை வரையில் அழைத்து வந்தது எத்தனை பெரிய இராசத் துரோகம் என்பதை அவன் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. “நான்தான் முதலிலே எச்சரித்திருந்தேனே- ‘சிவபோதரின் வருகையால் ஏற்படும் நன்மை-தீமைகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேன்!’ என்று. அதைச் சிறிதும் கவனத்தில் வைத்துக்கொள்ளாமல், அவரை அழைத்து வருமாறு அப்பாதானே பணித்தார்? அப்படியும் அவர் அரண்மனைக்கு உள்ளேகூட வரவில்லையே? அதற்குள் அந்த வஞ்சகன் குலோத்துங்கன் எப்படியோ எங்கள் திட்டத்தை அறிந்து அவரைச் சிறை செய்துவிட்டானே? இவ்வாறெல்லாம் நடந்திருக்கையில் எந்த அரசியல் நீதியின் அடிப்படையில் எனக்குத் தண்டனை விதித்தார்?” என்று அவன் கொதித்தான்.

தந்தை இக்குற்றத்துக்காகத் தனக்கு இத்தகைய கடுந்தண்டனை அளித்திருப்பார் என்று அவனால் கருதவே முடியவில்லை. அவன் உள்ளம் இதற்கு வேறு காரணந்தான் கண்டது. ‘அப்பாவுக்கு என்றுமே என்மீது வெறுப்பு. தமக்குப் பின் இச்சோழ அரியணையில் நான் அமருவது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே தமது குற்றத்துக்கு எனக்கு ஆயுள் தண்டனை வழங்கி இங்கே தள்ளிவிட்டு, தம்பி கங்கைகொண்ட சோழனை அரியணையில் அமர்த்தச் சூழ்ச்சி செய்து விட்டார்’ என்று அவன் திண்ணமாக நினைத்தான்.

இதை அவன் வானவியிடம் கூறியபோது, அவளுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ‘தமது அரசியல் சொக்கட்டானில் எங்களைக் காய்களாக வைத்து ஆடிவிட்டார் அப்பா. நானாவது பெண். ஆனால் அரசுரிமையுள்ள இவனை ஆயுள் முடியச் சிறையில் தள்ளியது அவர் செய்த மகத்தான கொடுமைதான்’ என்று அவளும் கருதினாள். அதே போதில் வேறொரு நினைவும் எழுந்து அவள் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தது. ஆம், மதுராந்தகனுக்கு இத்தண்டனைகிட்ட அவள்தானே அடிப்படைக் காரணமாக இருந்தவள்? இந்த நினைவு எழுந்த போது, “ஐயோ! நாம் எப்படி அழிந்து போனாலும், இவனாவது தனது அரசுரிமையைப் பெறச்செய்துவிட வேண்டும்!” என்று தீவிரமடைந்தாள் அவள்.

ஆனால் எப்படி அதைப் பெறச்செய்வது? அவர்களோ, வெளி உலகத் தொடர்பற்ற இடத்தில் அடைபட்டிருக்கின்றனர். ஆதலால் நேர் வழியில் தந்தையின் அநீதியை எடுத்துரைத்து நியாயம் கோர வழியில்லை. எனவே அதற்குக் குறுக்கு வழிதான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அதற்கு குறுக்கு வழிகள் கூடப் பல இருக்கவில்லை. ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அதாவது: ‘இந்தச் சிறையிலிருந்து மதுராந்தகனை எப்படியாவது தப்பிச் செல்லச் செய்துவிடுவது. அவன் இங்கிருந்து வெளியேறி நேரே குந்தள நாட்டுக்குப் போய்விட்டால் போதும். விக்கிரமாதித்தர் எவ்வழியிலேனும் அவனுக்கு இச்சோழநாட்டின் அரசுரிமை கிட்டச் செய்துவிடுவார். தானும், தனது இறுதி இச்சை அது என்று ஓர் ஓலை எழுதி மதுராந்தகனிடமே கொடுத்தனுப்பிவிட்டால், அவர் தமது உயிரைக் கொடுத்தாவது அவனை இவ்வரசுக் கட்டிலில் அமர்த்தியே தீருவார். ஆனால் அவனை இங்கேயிருந்து தப்பச் செய்வது எங்கனம்?’

நல்லவேளையாக இந்த முடிவுக்கு வந்த உடனேயே வானவிக்குத் தனது பாட்டியாரான வானவன் மாதேவி சிறுவயதில் சொல்லியிருந்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. அக்காலத்தில் வானவன் மாதேவியார் தன் மைந்தர்களின் குழந்தைகளுக்குத் தங்கள் முன்னோர்களின் பெருமைகளைப்பற்றிக் கதை கதையாகச் சொல்வாள். ஒருநாள் அவள் இந்தக் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தனது கணவரான முதல் இராசேந்திர சோழர் நிறுவிய பெருமையைப்பற்றிச் சொல்லிவிட்டு அவருடைய முன்னோர்கள் தஞ்சையிலும், பழையாறையிலும், காஞ்சியிலும், இதுபோல் பல அரண்மனைகளைக் கட்டியதைப்பற்றி விவரித்தாள். அப்போது, அங்கெல்லாங்கூட அவர்கள் பல நிலவறைச் சிறைச்சாலைகளை அமைத்திருந்தனரென்றும், அவற்றுக்குப் பல இரகசிய வாயில்கள் உண்டென்றும் குறிப்பிட்டிருந்தாள்.

இதுதான் இப்பொழுது வானவியின் நினைவுக்கு வந்தது. ‘அப்படியானால் இந்தச் சிறைச்சாலைக்கும் நமது பாட்டனார் ஏதாவது இரகசிய வாயிலை அமைத்துத்தான் இருக்க வேண்டும். நாங்களோ இங்கே உண்பதும் உறங்குவதுமாக வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். சிறிது முயற்சி எடுத்துக்கொண்டு இரகசிய வாயில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடுத்து விட்டால் மதுராந்தகன் மட்டுமின்றி, நானுங்கூட அதன் வழியாக வெளியேறி நேரே குந்தள நாட்டுக்குப் போய்விடலாமே’ என்று அவள் எண்ணம் சென்றது.

தனது எண்ணத்தை அவள் மதுராந்தகனிடம் வெளியிட்டாள். அன்று தொட்டு அவனும் அவளும் இரகசிய வாயிலைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக முனைந்தனர். இரவில் பயன்படுத்துவதற்காக அவர்களுக்கு நாள் தோறும் எண்ணெயும் திரியும் இடப்பட்ட சில விளக்குகள் சிறையின் மேல்தளத்திலிருந்து வருவதுண்டு. அந்த விளக்குகளைப் பகல் நேரத்தில் பயன்படுத்தி அந்த பெரிய சிறைச்சலையின் இருண்டுகிடந்த எல்லைச் சுவர்களை அவர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்தனர். ஆனால் பல நாட்கள் பல முறை அச்சுவர்களை மீண்டும் மீண்டும் துழாவியும், இரகசிய வாயில் இருப்பதற்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை.

இது அவர்களுடைய மீண்ட நம்பிக்கையை மீண்டும் மாண்டுவிடச் செய்தது. ஆயினும் இருவரும் முற்றும் ஊக்கம் குன்றிப் போய்விடவில்லை. தாங்கள் தப்பிச் செல்ல வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்தனர். சிறைச்சாலையின் எல்லைச்சுவர்களில் காற்றும் ஒளியும் வரும் பொருட்டு ஆங்காங்கு சில பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனால் அவை இரண்டு-மூன்று ஆள் உயரத்துக்கு மேலே இருந்ததோடு, எளிதில் பெயர்க்க முடியாத கனத்த இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டவைகளாகவும் இருந்தன. முதலில் அவ்வளவு உயரத்தை அவர்கள் எட்ட முடியாது. எட்டினாலும், கம்பிகளை அகற்றுவதென்பது நினைக்க முடியாத செயல்.

ஆதலால் வானவி இதையும் விட்டு விட்டு, வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆலோசித்தாள். சிறைச்சாலையின் மேல் தளத்திலிருந்து தங்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற பொருள்கள் வரும் மண்டபத்துத் தூணைப்பற்றிச் சட்டென்று அவளுக்கு நினைவு வந்தது. ‘அந்தத் தூண்தான் தங்களுக்கும் வெளி உலகுக்கும் இடையேயுள்ள ஒரே தொடர்பு என்றபோதில், அதையே தாங்கள் வெளியேறும் வழியாக்கிக் கொள்ள முடியுமா என்று ஏன் பார்க்கலாகாது?’

அவள் உடனே அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். பாதாளச் சிறையின் மண்டபத்திலிருந்த தூண்கள் எல்லாம் சுமார் மூன்றடி விட்டமுடைய பருமனான தூண்களே. அவற்றுள் ஒன்றின் வழியாகத் தங்களுக்குத் தேவையான பொருள்கள் மேலேயிருந்து வருவதால், அத்தூண் உள்ளே குழல் போன்ற அமைப்புடையதாகவே இருக்க வேண்டும். அதோடு அதன் உச்சிப் பகுதியில் திறந்து மூடும் கதவுடைய ஒரு வாயிலும் இருக்கவேண்டும். பாதாளச் சிறையின் தரைமட்டம் மேல்தளத்திலிருந்து ஏறக்குறைய முப்பது முழம் கீழே இருந்தது. ஆதலால் தங்களுக்குத் தேவையான பொருள்களை தூணின் மேல்வாயில் வழியாகக் கீழே போட்டுவிட மாட்டார்கள். அப்படிப் போடுவதாக இருந்தால் உணவுப் பண்டங்கள் சிதறிப் போய்விடாவா? தங்களுக்கு வந்த உணவுப் பொருள்கள் ஒருநாள்கூடச் சிந்தவோ, சிதறவோ செய்யாததால், மேலே இருந்து யாரோ இறங்கி வந்து அவற்றை வைத்துவிட்டுப் போகிறார்கள் என்றுதான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாள் தோறும் யாராவது வருவதாக இருந்தால், அவர்கள் இறங்குவதற்கான படிக்கட்டு ஒன்று தூணின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு படிக்கட்டு இருக்குமானால் அதையே தாங்கள் மேலே போகப் பயன்படுத்திக் கொள்ளலாமே?…

மேல்தளத்திலிருந்து அனுப்பப்பட்டு வந்த பொருள்களை இவர்கள் எடுத்துக் கொள்ளுவதற்காகத் தூணின் கீழ்ப்பகுதியில் கதவிட்ட வாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயில் வழியாக ஒருவர் படுத்தவாறு உள்ளே நுழைய முடியும். உட்புறம் சென்றுவிட்டால் தூணின் உண்மையைப் பற்றித் தெரிந்து கொண்டு விடலாம்.

வானவி இதைத் தம்பியிடம் கூறியபோது அவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். அவன் அன்றே தூணின் உட்புறத்தில் நுழைந்து பார்த்தான். ஆனால் என்ன ஏமாற்றம்? அங்கே இவர்கள் எதிர்பார்த்தவாறு படிக்கட்டு ஒன்றும் இல்லை.

“அப்படியானால் நமக்குரிய பொருள்கள் எப்படி இங்கே அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும், தம்பி!” என்றாள் அவள்.

மறுநாள் அவர்கள் அதைக் கண்டறிய முனைந்தனர். வழக்கமாக காலையில் விழித்தெழுந்ததும் அவர்கள் தூணின் கதவைத் திறப்பார்கள். உள்ளே அவர்களுடைய அன்றாடத் தேவைகள் வைக்கப்பட்டிருக்கும். அவை விடியுமுன்புதான் கீழே அனுப்பப்படுவதாக இருக்க வேண்டும். ஏனென்றால் சில நாட்கள் சில உணவுப் பொருள்கள் சூடுகூட ஆறாமல் இருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள். ஆதலால் அதிகாலையில் எழுந்து தூணின் கதவைத் திறந்து போட்டுக் கொண்டு காத்திருந்து பார்த்தால் உணவு போன்ற பொருள்கள் கீழே வரும் மர்மம் விளங்கிவிடும்.

அவ்வாறே ஒருநாள் மதுராந்தகன் தூணடியில் காத்திருந்தான். விடிவதற்குக் கிட்டதட்ட நான்கு நாழிகை பொழுதிருக்கும்போது, தூணின் உட்புறத்தில் மெல்லிய ஒலி ஒன்று கேட்டது. அவன் தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தான். நூல் ஏணி ஒன்று மேலேயிருந்து தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் வழியாகக் காவலன் உடை அணிந்திருந்த ஒருவன் கீழே இறங்கிக்கொண்டிருந்தான். அதே உடை அணிந்த வேறோருவன் மேலேயிருந்தவாறு ஒரு தீப்பந்தத்தின் உதவியால் இறங்கியவனுக்கு ஒளி காட்டிக் கொண்டிருந்தான். தீப்பந்தத்துடன் இருப்பவனும், முன்னவனைத் தொடர்ந்து கீழே இறங்கி வருகிறானா என்று சிறிது நேரம் காத்திருந்து பார்த்தான் மதுராந்தகன். ஆனால் அவன் கீழே இறங்கவில்லை. அவன் காட்டிய ஒளி சிறிது தொலைவே வீசியதால், இறங்கி வந்து கொண்டிருந்தவன் பின்னர் இருளில் மறைந்து விட்டான்.

மதுராந்தகன் சட்டென்று தூணின் உட்புறத்திலிருந்து வெளியே வந்து, அதன் கீழ்த்தளக் கதவை மூடிவிட்டு, வானவியிடம் சென்று இந்த விவரங்களை அறிவித்தான். பிறகு அவர்கள் இரண்டு-மூன்று நாட்கள் வரையில் மிக நுட்பமாகச் சிந்தித்து, தாங்கள் வெளியேறுவதற்கு ஒரு துணிகரமான திட்டம் வகுத்தனர்.

மறுநாள் அத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. அன்று அதிகாலையில் உணவுப் பொருள்களைக் கொண்டு வருபவன் இறங்குவதற்காக நூல் ஏணி கீழே விடப்பட்டதும் மதுராந்தகன் தூணின் வாயில் வழியாக உள்ளே சென்று ஓர் ஓரமாகத் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டான். வழக்கப்படி ஒரு காவலன் மட்டும் அன்றைய உணவு உடை போன்றவை அடங்கிய ஒரு பையை முதுகில் கட்டிக் கொண்டு நூல் ஏணி வழியே இறங்கி வந்தான். கீழே ஒரே இருளாக இருந்ததால், மதுராந்தகன் படுத்திருந்ததை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. கீழே இறங்கித் தனது முதுகுச் சுமையை அவிழ்த்து வைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய உடைவாளைச் சட்டென்று உருவி எடுத்துவிட்டான் மதுராந்தகன். பின்னர் அவன் பொருள்களை வைத்துவிட்டு எழுந்ததும், மதுராந்தகன் இடக்கையால் அவன் வாயை மூடியவாறு வலக்கையிலிருந்த உடைவாளால் வேகமாகக் குத்தினான். அக்கணமே அந்தக் காவலாளன் உயிர் பிரிந்துவிட்டது. பின்னர் மதுராந்தகன் தூணின் கதவைத் திறந்து வெளியே வந்து, காவலனின் உடலை வெளியே இழுத்துப் போட்டான். சடுதியில் அவனுடைய உடைகளைக் கழற்றித் தான் அணிந்து கொண்டு, பெருமிதத்துடன் அருகில் நின்ற சகோதரியிடம், “நமது திட்டத்தின் முதல் வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது, அக்கா. அவ்வாறே இரண்டாவது வேலையையும் முடித்துக்கொண்டு திரும்புவேன். நீ தயாராக இவ்வாயிலடியிலே காத்திரு,” என்று கூறிவிட்டு, மீண்டும் தூணுக்குள்ளே நுழைந்து நூல் ஏணி வழியாக மேலே ஏறத் தொடங்கினான்.

கீழே கொன்று போட்டுவிட்டு வந்த காவலனின் தலைப்பாகையைக்கூட மிகக் கவனமாக அவனைப்போலவே சுற்றிக் கொண்டிருந்த போதிலும், மேலே காத்திருந்த காவலன் பந்தத்தின் ஒளியில் தன்னை அடையாளம் கண்டுவிடாதிருக்கும் பொருட்டு முகத்தைத் தாழ்த்திக் கொண்டே அவன் மேலே ஏறினான். ஆனால் அவனுடைய இந்த முன்னெச்சரிக்கைக்குத் தேவையே ஏற்படவில்லை. ஏனென்றால், மேலே இருந்த காவலன், மதுராந்தகன் கடைசிப் படியை எட்டு முன்பே தீப்பந்தத்துடன் எழுந்து அப்பால் சென்று விட்டான். செல்லும்போதே அவன், “என்ன அண்ணே, இத்தினி பொழுதாக்கிட்டே? குளிருக்கு அடக்கமா கீழே போய் ஒரு தூக்கம் போட்டிட்டியா? சரி, சரி, ஏணியை உருவி எடுத்துப் போட்டுட்டுக் கதவை மூடிக்கிட்டு வா; பொழுது ஆகுது,” என்று கூறியதைக் கேட்டபோது மதுராந்தகனுக்கு நிம்மதி மட்டுமின்றி, சிரிப்பும் வந்தது.

இத்தனை வாய்ப்புக் கிடைத்தால் போதாதா அவனுக்கு? அவன் ஒரே தாவில் மேலே வந்தான். முன்னால் பந்தத்துடன் நடந்து கொண்டிருந்த வீரன் மீது பின்புறமாகப் பாய்ந்தான். முன்னவனைத் தாக்கியது போலவே, இவனுடைய வாயையும் ஒரு கையால் மூடியவாறு மறு கையால் கத்தியை உடலில் பாய்ச்சினான். பின்னர் நூல் ஏணி வழியாகக் கீழே இறங்கி, இவனுடைய ஆடைகளைக் கழற்றி வானவியிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னான்.

சற்றைக்கெல்லாம் அவளும் மற்றொரு காவலனாக உருமாறித் திரும்பி வந்தாள். இருவரும் ஒருவர் பின் ஒருவராக நூல் ஏணி வழியே ஏறி மேலே இருந்த சிறைச்சாலையை அடந்தனர். அப்போது பொழுது புலர இன்னும் இரண்டு-மூன்று நாழிகை இருந்தது. சிறை வாயிலைக் காத்து நின்ற வீரர்கள், இவர்களை வழக்கமாக அரண்மனை உணவுச் சாலையிலிருந்து உணவு கொண்டு வந்து வைத்துவிட்டுத் திரும்புகிறவர்கள் என்று கருதிவிட்டதால், நிறுத்தி ஆள் மாறாட்டத்தை அறிந்து கொள்ளாமல், வெளியே போக விட்டு விட்டனர். சகோதரியும் சகோதரனும், ஆயுள் அளவும் உழல வேண்டிருந்தும், மதிநுட்பத்தால், தப்பி வெளியே வந்து நகர எல்லையைத் தாண்டி நடக்கலாயினர். அவர்கள் சோழநாட்டுக் காவல் படையினரின் உடையில் இருந்ததால், உட்கோட்டை, வெளிக்கோட்டை வாயில்களைக் காவல் புரிந்து நின்ற வீரர்களும் அவர்களை நிறுத்தவோ, பரிசோதிக்கவோ இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 8மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 8

அத்தியாயம் – 8. ஓலை கொணர்ந்த ஒற்றன்        முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்தும், சோழ கேரளன் அரண்மனையிலிருந்தும் உட்கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி ஒரு சாலை போகிறது. அச்சாலையும் கோட்டையின் வடக்கு வாசலும் பொதுமக்கள் உபயோகத்துக்கானவை அல்ல. அவை அரசகுல மாதருக்கென்றே

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – நிறைவுப் பகுதிமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – நிறைவுப் பகுதி

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 8. ஆணை நிறைவேறியது!      மாபப்பாளத்தை வந்தடைந்தாள் மதுராந்தகி. அவள் வருகையைக் குலோத்துங்கன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மகிபாலனின் மாளிகையிலே தன் ஆசைக்கிழத்தி ஏழிசைவல்லபியுடன் அவன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் தன் மக்களுடன் அங்கு நுழைந்தாள் மதுராந்தகி. “அப்பா!”

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 27மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 27

மூன்றாம் பாகம்   அத்தியாயம் – 5. நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று        சோழவள நாட்டிலே அக்காலத்தில் ஒவ்வொருவர் உதிரத்திலும் நாட்டுப்பற்று நன்கு ஊறிப்போயிருந்தது. தங்கள் நலனைவிட நாட்டின் நலனே பெரிதெனக் கருதிய மக்களே அன்று நாட்டில் நிறைந்திருந்தனர். சோழப்