Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 47

அத்தியாயம் 47 – பூமி சிவந்தது

“முத்தையா! நல்ல இடம் பார்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறாய்! நீ எவ்வளவோ சரியாக அடையாளம் சொல்லியிருந்தும் கண்டு பிடிப்பதற்குத் திண்டாடிப் போய் விட்டேன். எவ்வளவு அடர்த்தியான காடு! இதில் புகுந்து வருவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போய்விட்டேன்…” என்றான் கமலபதி. பிறகு, “இதற்குப் பொருத்தமாக ஏதோ ஒரு பாட்டு இருக்கிறதே! அது என்ன?…” என்று சொல்லி ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, “ஆமாம் பாரதியின் பாட்டுத்தான்” என்று கூறிப் பாட ஆரம்பித்தான்:

திக்குத் தெரியாத காட்டில் – உன்னைத் 
     தேடித் தேடி இளைத்தேனே! (திக்கு)

     மிக்க நலமுடைய மரங்கள் – பல
     விந்தை சுவையுடைய கனிகள் – எந்தப்
     பக்கத்தையும் மறைக்கும் வரைகள் – அங்கு
     பாடி நகர்ந்து வரும் நதிகள் – ஒரு (திக்கு)

“மலைகளைத் தவிர பாக்கி வர்ணனை யெல்லாம் மிகவும் பொருத்தமாயிருக்கிறதல்லவா!” என்றான் கமலபதி.

அப்போது முத்தையன் சொன்னான்: “அந்தப் பாட்டில் இதையெல்லாம் விட அதிகப் பொருத்தமாயிருக்கும் அடி வேறொன்றிருக்கிறதே!

     “பெண்ணே உனதழகைக் கண்டு – மனம்
     பித்தம் கொள்ளதென்று நகைத்தான் – அடி
     கண்ணே என திருகண்மணியே உனைக் 
     கட்டித் தழுவ மனங் கொண்டேன்!”

இவ்வாறு பாடிவிட்டு முத்தையன் கமலபதியைச் சுற்றிச் சுற்றி வந்து நாடக மேடையில் திருடன் ஆடுவதைப் போல் ஆடத் தொடங்கினான்.

“உங்களுக்கு என்ன ‘கிராக்’ புடிச்சுப்போச்சா?” என்ற குரலைக் கேட்டு இரண்டு பேரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். முகமது ஷெரிப் சாயபுவின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. “அரே! உங்களுக்குப் பிழைச்சுப் போக இஷ்டமில்லையென்று தோணுகிறது. தூக்கு மேடையிலே சாகத்தான் இஷ்டமா? இந்த லயன் கரைச்சாலையிலே இன்றைக்குக் கிழக்கேயிருந்து மேற்கே நூறு சிவப்புத் தலைப்பாகையும், மேற்கேயிருந்து கிழக்கே நூறு சிவப்புத் தலைப்பாகையும் போயிருக்கு. இங்கே நீங்கள் பாட்டுப் படிச்சுக் கொண்டு கூத்தடிக்கிறீங்க!” என்றார் சாயபு.

கமலபதி அவரிடம் நெருங்கி வந்து, “பாயி! கோபம் வேண்டாம். நாங்கள் செய்தது தப்புத்தான். நீங்க போங்க. இதோ உங்கள் பின்னாலேயே நான் வந்து விடுகிறேன்!” என்றான்.

“ஆமாம்! நான் போகத்தான் போகிறேன். நீங்கள் தான் சாகத் துணிஞ்சிருந்தால், நான் ஏன் மாட்டிக்க வேணும்! இதோ நான் போகிறேன். ஐந்து நிமிஷத்தில் நீ என் பின்னோடு வந்து சேர்ந்து கொண்டாலாச்சு! இல்லாட்டா இந்தப் பொம்பிளை எனக்கு வேண்டாம் என்று ‘தலாக்’ சொல்லிவிட்டுப் போய்விடுவேன்” என்றார் சாயபு. பிறகு முத்தையன் முதுகில் தட்டிக் கொடுத்து, “தேகோ! உஜார்!” என்று ஜாக்கிரதைப் படுத்தி விட்டு காட்டுக்குள் புகுந்து போகத் தொடங்கினார்.

கமலபதி, “முத்தையா! நானும் போக வேண்டியது தான். எனக்கென்னமோ போக இஷ்டமேயில்லை. உன்னுடன் இந்தக் காட்டில் இப்படியே இருந்து காலங்கழித்து விடலாமென்று தோன்றுகிறது. ஆனால் முடியாத காரியத்தைப் பற்றி யோசித்து என்ன பிரயோஜனம்? நான் போகிறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்” என்றான்.

“கமலி! ஒருவேளை நம்முடைய ‘பிளா’னெல்லாம் தவறிப்போய் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், நீ தான் அபிராமியைக் காப்பாற்றவேணும்” என்று தழுதழுத்த குரலில் சொன்னான் முத்தையன்.

“சரிதான், போ! நம்முடைய ‘பிளான்’ எதற்காகத் தவறிப் போகவேணும்? எல்லாம் சரியாய் நடக்கும், பார்! இன்னும் பத்து நாளில் நீ ஷெரிப் சாயபுடன் போய்க் காரைக்காலில் கப்பல் ஏறிவிடப் போகிறாய். நாங்கள் உன்னைச் சென்னைத் துறைமுகத்தில் சந்திக்கப் போகிறோம். அங்கே, அபிராமியைப் பார்க்கும்போது மட்டும், ‘எங்கப்பா குதிருக்குள் இல்லை’ என்று ஏதாவது அழுது கிழுது வைக்காதே! சரி, நான் போய் வருகிறேன்” என்று கமலபதி கிளம்பினான். கிளம்பினவனை முத்தையன் கையைப் பிடித்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கட்டித் தழுவிக் கொண்டான். “நீ என்னமோ சொல்கிறாய்; ஆனால் எனக்கு மட்டும் நம்பிக்கை ஏற்படவில்லை. உன்னை நான் பார்ப்பது கடைசி தடவையோ என்னமோ, யார் கண்டது?” என்று முத்தையன் சொன்ன போது அவனுடைய கண்களில் நீர் துளிர்த்தது.

அப்போது கமலபதி தன் முகத்தில் புன்னகை வருவித்துக்கொண்டு, “அதிருக்கட்டும், முத்தையா; இப்போது ஸ்ரீமதி கல்யாணி தேவியார் நம்மைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?” என்றான். முத்தையன் கலகலவென்று நகைத்தான், “நினைத்துக் கொள்வது என்ன? ஆபத்துதான்! சரி, நேரமாய்விட்டது. போய் வா!” என்றான். “ஓகோ! கல்யாணி வரும் நேரமாய்விட்டது என்கிறாயா? நான் அவளைப் பார்த்து விட்டுத்தான் போகிறேனே? ஒரு சக்களத்திச் சண்டை போட்டுப் பார்க்கலாம்” என்றான் கமலபதி.

“ஐயோ! வேண்டாம்! நீ போய் வா” என்றான் முத்தையன். கமலபதி கோஷா அங்கியைக் கையில் சுருட்டி எடுத்துக் கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்று காட்டுக்குள் மறைந்தான்.

*****

கமலபதி போய் சுமார் அரைமணி இருக்கும். முத்தையன் வழக்கம்போல் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான். “இன்றைக்கு ஏன் கல்யாணி இன்னும் வரவில்லை?” என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். நிஜமாகவே கமலபதி சொன்னது போல் நேர்ந்திருந்தால் – அதாவது கமலபதி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாணி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணியபோது அவன் முகத்தில் புன்னகை உண்டாயிற்று. “தன் மேல் அவளுக்குச் சந்தேகம் உண்டாகியிருக்குமா? கோபித்துக் கொள்வாளா அல்லது அழுவாளா? சாதாரண விஷயங்களிலேயே அவளுக்கு ஆத்திரம் வந்துவிட்டால் ரகளைதானே? இந்த சமாசாரத்தில் கேட்க வேண்டுமா? அப்புறம் நிஜம் வெளியாகும்போது என்ன செய்வாள்? கோபம் எல்லாம் பறந்து போய்ச் சிரிப்பாள் அல்லவா? நல்ல வேடிக்கை!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் முத்தையன்.

‘ஆ! அது என்ன, அந்தப் புதர்களுக்கிடையில் சிவப்பாய்த் தெரிகிறது?’ – முத்தையனுடைய நெஞ்சு கோயில் நகராவைப் போல் அப்போது அடித்துக் கொண்டது. ‘இதோ இந்த மரத்தின் மறைவில்? அதோ, அதோ, அதோ அவ்வளவும் சிவப்புத் தலைப்பாக்கள்? இது நிஜமா, சித்தப் பிரமையா அல்லது கனவா? முத்தையன் கண்ணைக் கசக்கி விட்டுப் பார்த்தான். கனவில்லை, பிரமையுமில்லை, – நிஜந்தான். போலீஸ்காரர்கள் தன்னை நாலாபுறமும், சூழ்ந்து கொண்டிருப்பதை முத்தையன் உணர்ந்தான்.

இது சந்தேகமறத் தெரிந்தவுடனே முத்தையனுடைய உள்ளமும் தெளிந்துவிட்டது. அந்த உள்ளத்தில் இப்போது அணுவளவும் குழப்பம் இல்லை. சென்ற இரண்டு மூன்று வருஷ காலமாய் எதிர்பார்த்த விஷயந்தானே? முத்தையனுடைய உடம்பு ஒரு தடவை சிலிர்த்தது. அன்றைய தினம் இரண்டாவது தடவையாக அவன் கையில் ரிவால்வருடன் துள்ளிக் குதித்து எழுந்தான். ஆனால் இந்தத் தடவை ரிவால்வரைக் கீழே போடவில்லை. அதிலிருந்து வேட்டுக்கள் கிளம்பி, அந்த வனப்பிரதேச மெல்லாம் எதிரொலி செய்தன.

அதே சமயத்தில் போலீஸ்காரர்களும் சுட்டார்கள். திருடனுடைய முழங்காலுக்குக் கீழே சுடும்படிதான் அவர்களுக்கு உத்தரவு. அதன்படியே அவர்கள் சுட்டார்கள். முதலில் பல குண்டுகல் அவன் மேலே படாமலே சிதறி விழுந்தன. கடைசியாக ஒரு குண்டு முத்தையனுடைய காலில்பட்டது. அதனால் அவன் கீழே விழுந்த சமயத்தில் இன்னும் நாலு குண்டுகள் அவன் மீது பாய்ந்தன. ஒன்று தோளின் மேல், ஒன்று விலாவில், ஒன்று தொடையில் – இப்படி. முத்தையனுடைய தேகத்தில் இரத்தம் பீறிட்டு அடித்தது. அவன் விழுந்த இடத்தில் பூமி நெடுந்தூரம் இரத்தத்தினால் சிவந்தது!

அடுத்த கணத்தில் பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்தாற்போல் ஓடிவந்து முத்தையனைப் பிடித்துக் கட்டினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘பரிசல் துறை’-1கல்கியின் ‘பரிசல் துறை’-1

1 காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட ‘சலசல’ சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

10. யந்திரம்   முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 52

அத்தியாயம் 52 – பொழுது புலர்ந்தது முத்தையன் கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததும், சர்வோத்தம சாஸ்திரி தாமே நேரில் போய்க் கல்யாணியை அழைத்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டார். வேறு யாராவது போனால் கலவரப்படுத்தி விடுவார்கள் என்றும், ஒரு