Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 15

இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் – 5. தோல்வியில் வெற்றி

 

வீரம் செறிந்த நாடு சோழ நாடு. போர்க்களத்தில் உயிரைத் துரும்பாக நினைத்து, நாட்டின் நலமே பெரிதென வாளெடுத்துச் சமர் செய்யும் ஆண்களிடம் மட்டுந்தான் அன்று வீரம் இருந்தது என்றில்லை. வீட்டிலே இருந்த பெண்டிரும் வீர மனப்பாங்கு கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய சொல்லிலும், செயலிலுங்கூட வீரம் கொடி கட்டிப் பறந்தது. ஆயிரக்கணக்கான போர்வீரர்களில் ஒருவனாகச் சென்று வெற்றி வீரனாகத் திரும்பும் மைந்தனையோ, கணவனையோ, அல்லது உடன்பிறந்தானையோ சோழ நாட்டுப் பெண்டிர் எத்தனை மகிழ்ச்சியோடு ஆத்திமாலை சூடி, மங்கள நீர் சுற்றித் திலகமிட்டு வரவேற்றனரோ, அவ்வாறே தோல்வியுடன் திரும்பும் அவர்களை ஏறெடுத்துப் பாராத அளவு வீர உணர்ச்சி அவர்களிடம் மிகுந்திருந்தது.

சோழப் படையினர் எல்லாப்போர்களிலுமே வெற்றியுடன் திரும்பினர் என்று சொல்வதிற்கில்லை. அவர்கள் தோல்வியை மருவித் திரும்பியிருந்ததும் உண்டு. ஆனால் அப்படித் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் போது, அவர்களுக்கு அத்தோல்வியால் ஏற்படும் அவமானத்தைவிட, வீட்டுப் பெண்டிரின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்ற கவலையே பெரிதாக இருக்கும். சில வீர மகளிர், தோல்வியுடன் திரும்பிய கணவனைக் கணவனென்றும் பாராமல், வீட்டுக்குள்ளேயே வர விடாமல் கதவைத் தாழிட்டுக் கொண்டுவிடுவார்களாம். இன்னும் சிலர் மீண்டும் பொருது கொண்டு சென்று வெற்றிவாகை சூடி வரும் வரையில் தங்களைத் தீண்டுவதில்லை என்று ஆணையிடச் செய்த பிறகே கணவன்மார்களை வீட்டுக்குள்ளே விடுவார்களாம்.

இவற்றையெல்லம் பார்க்கும்போது, சோழப் படையினரிடையே வீரத்தை வளர்க்கக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டு மகளிர்தான் என்று கூசாமல் சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட வீரம் வளர்த்த மகளிர் சாதாரணக் குடிமக்களிடையேதான் இருந்தார்கள் என்று கருதிவிடக் கூடாது. அரசகுல மாதர்கள்கூட இவ்வாறுதான் விளங்கினார்கள்.

ஆனால் இப்போது நம் கதையில் இந்த வழக்கத்துக்கு மாறான செயல் ஒன்றைக் காணப் போகிறோம். அதாவது, வெற்றிக்கொண்டு திரும்பிய கணவனுக்குச் சோழ நாட்டுப் பெண் ஒருத்தி தோல்விக்குரிய வரவேற்பை அளித்தாள். ஆம், நமது கதைத்தலைவி மதுராந்தகிதான்! ஆனால் அது எப்படிப்பட்ட வரவேற்பு? எதற்காக?

ஏமாற்றத்துக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை அது மீறிவிடும்போது, உள்ளம் சிதறித்தான் போய்விடுகிறது. அந்த உள்ளச் சிதறல்கள் கனல் பொறிகளாக எதிரே நிற்பவரைச் சுட்டெரிக்கின்றன. அவர்களுக்கும் தனது ஏமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா, அவர்கள் அதற்கு எவ்வகையிலாவது உதவினார்களா என்று கூட அந்தப் பொறிச் சிதறல்கள் கவனிப்பதில்லை. அயலார் பாடே இப்படியானால், எதிரே நிற்கும் ஆள் ஏமாற்றத்துக்கு முழுப் பொறுப்பாளியாகவே இருந்து விட்டால், கேட்கவா வேண்டும்? இதுதான் உலக வழக்கு. ஆனால் இந்நிலைக்கு உள்ளானபோது, மதுராந்தகி என்ன செய்தாள்?

எப்பொழுதும்போல் இத்தடைவையும் வேங்கிப் போரில் வெற்றி கொண்டு திரும்பிய சோழப்படை சோழகங்கன் ஏரிகரையில் தண்டிறங்கி இருப்பதாக முன்னாள் இரவு கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் செய்தி வந்தது. வீரராசேந்திரர் அரசை ஏற்ற பிறகு நிகழ்த்திய முதலாவது பெரும்போர் இது. ஆதலால் மறுநாள் காலையில் வெற்றிப்படை வரவேற்புச் சிறப்பான முறையில் நடைபெற வேண்டுமென்று நகரெங்கும் பறையறிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி, அதாவது தனது சிறிய தந்தையின் தலைமையில், தன் கணவரைப் படைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்டு பொருது சென்ற படை வெற்றி முரசு கொட்டித் திரும்பும் செய்தி, மற்றவர்களை விட மதுராந்தகியைத்தான் மகிழ்ச்சிக் கடலில் அதிகமாக ஆழ்த்தியது.

‘கணவர் தனது ஆணையை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருந்ததை அவள் மறந்துவிடவில்லை. ஆனால் அந்த ஆணை நிறைவேறாமற் செய்துவிட வேண்டுமென்று தந்தையே தனக்குத் தீங்கு இழைக்கும் முறையில் வேங்கி அரசைத் தன் கணவரின் தாயாதிக்கு வழங்கியபோது மதுராந்தகி ஏன் வாய் திறவாதிருந்தாள் என்றால், அதற்குக் காரணம் உண்டு. அவள் அரசியலில் அதிகமாகத் தலையிட்டவள் இல்லையெனினும், தந்தைக்கு இருந்த அரசியல் மதிநுட்பம் அவருடைய உதிரம் ஓடிய மகளிடமும் ஓரளவு இல்லாமற் போய்விடவில்லை. வேங்கி அரசை ஏற்றுள்ள விசயாதித்தன் வெறும் கோழை என்பதைத் தன் அத்தை அம்மங்கை தேவியும், கணவன் குலோத்துங்கனும் பலதடவை கூறக்கேட்டிருக்கிறாள். அதோடு, குந்தள ஆகவமல்லன் வேங்கியைத் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள எத்தனை விடாமுயற்சியுடன் இருந்து வருகிறான் என்பதையும் அவள் அறிவாள். இந்நிலையில் வேங்கிநாடு ஒரு கோழையின் கைக்கு வந்திருக்கும் தருணத்தை ஆகவமல்லன் நழுவ விட்டுவிடுவானா? ஒருகாலும் மாட்டான். தருணம் பார்த்து அதைக் கவ்விக் கொள்ளவே முயலுவான்; கவ்விக் கொண்டாலும் கொண்டு விடுவான். அப்போது சோழர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் போரிட்டு வேங்கியை மீட்கத்தான் மீட்பார்கள். அப்படி மீட்ட பிறகு, இனியாவது எல்லைக் கேந்திரமாக விளங்கும் அந்நாடு திறமையற்றவர்களிடம் இருக்கக் கூடாது என்பது அவர்களுக்குத் தோன்றாமல் இராது. அது தோன்றி, இனி யாரை அங்கே ஆளச் செய்வது, அல்லது குறைந்தது ஒரு மாதண்டநாயகனாக இருந்து அந்நாட்டைப் பாதுகாத்து வரச் செய்வது என்ற வினா எழும்போது, திறமைசாலியும், உரிமையாளருமான தனது கணவரின் நினைவு அவர்களுக்கு எழவே செய்யும். அதுபோது, தானும் சிறிது தூண்டுகோல் போட்டால் தன் கணவரின் நாடு அவருக்கே கிட்டி விடும். நாடு கிட்டி, அவரைத் தனது ஆணைக்கு உதவத் தயார் செய்வது அத்தனை பெரிதல்ல…!’ இவ்வாறு எண்ணியிருந்தாள் அப்பேதை. அதன் காரணமாகத்தான் அன்று தங்கள் திருமணத்துக்கு முன் கணவன் தன்னைக் குத்திக் காட்டுவதுபோல், “என்ன ஆயிற்று உன் ஆணை?” என்று கேட்டபோது அவள், “என் ஆணை அப்படியேதான் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளக் காலம் வரும்; அதுவரையில் காத்திருப்பேன்!” என்று தயக்கமின்றி உரைத்தாள்.

நினைத்தவாறே, வேங்கிப் போர் பெரிய அளவில் மூண்டபோது, அதற்கு உதவ ஆளும் மன்னருடன் தன்னை ஆண்டவரும் பொருதுகொண்டு சென்றபோது, “காலம் வந்துவிட்டது; குறைந்த அளவு தொடங்கியாவது விட்டது,” என்று அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவளுக்குத் தெரியும், என்னதான் ஆகவமல்லனோ, அவன் மக்களோ, அன்றி அவர்களது புதிய படைத்தலைவன் சாமுண்டராயனோ சீற்றத்துடன் போரிட்டாலும் சோழப்படையே வெற்றி அடையும் என்பது. ஆதலால் அவ்வெற்றியும், தான் நினைத்தவாறு கிட்டி விட்டதாகச் செய்தி வந்தபோது அவளுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தது.

அதே சமயம், வெற்றிக்குப் பின் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலும் மதுராந்தகிக்கு ஏற்பட்டது. அதல்லவா அவளுக்கு முக்கியம்? செய்தி கொணர்ந்த தூதனுக்கு அவள் தன் கழுத்திலிருந்த மணிமாலை ஒன்றைப் பரிசாக வழங்கப்போனாள். வெற்றிச் செய்தி கொண்டுவரும் தூதர்களுக்கு அத்தகைய பரிசில்களை பெரிதும் எதிர்பார்பார்கள். பேராவலோடும் பெருமகிழ்ச்சியோடும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இது என்ன? இந்தத் தூதன் மதுராந்தகி அளித்த பரிசிலைப் பெற்றுக்கொள்ளத் தயங்குகிறானே?

“வாங்கிக்கொள் வீரனே, எங்கள் உளம் குளிரும் செய்தி கொணர்ந்த உனக்குக் கனகாபிடேகம் செய்தாலும் தகும்,” என்றாள் அருகில் நின்ற லோகமகாதேவியார் – காலஞ்சென்ற இராசமகேந்திரரின் மனைவி.

“வேண்டாம் தாயே. பரிசிலை நீங்கள் யாரேனும் அளித்தால் தலை வணங்கிப் பெற்றுக் கொள்ளுவேன். ஆனால் வேங்கிப் பிராட்டியின் கையால் பரிசிலைப் பெற இத்தடவை இந்த எளியோன் கொடுத்து வைக்கவில்லை,” என்று தலை குனிந்து உரைத்தான் அந்த வீரன்.

“ஏன் வீரனே? ஏன்?” என்று அங்கே குழுமியிருந்த முடிகொண்ட சோழன் அரண்மனைவாசிகள் அனைவரும் ஒரு குரலில் குழம்பினர்.

“இந்த வெற்றி சோழநாட்டுக்கு மகத்தான வெற்றிதான், தாயே; ஆனால் வேங்கிக்கு அது மீண்டும் ஒரு தோல்வியே!”

“நீ சொல்வதன் பொருள் என்ன?” என்று உள்ளம் பதறக் கேட்டாள் மதுராந்தகி.

“ஆம், வேங்கிப் பிராட்டியாரே. நமது மன்னர்பிரான் அந்நாட்டை வென்று உரியவரிடம் வழங்கிய போது அவர் அதனை மறுதளித்துத் தனது சிறிய தந்தைக்கே மீண்டும் கொடுக்கச் செய்துவிட்டார்!” என்று தொடங்கி வேங்கியில் நடந்தவை அனைத்தையும் விளக்கினான் அவ்வீரன்.

இதைக் கேட்டபோதில், மதுராந்தகியின் மகிழ்ச்சியெல்லாம் மண்ணோடு மண்ணாகியது; அவளுடைய கையிலே சுழன்ற மணிமாலையும் மண்ணைக் கவ்வச் சென்றது. ஆம்; வீரன் கூறியது உண்மையே! இந்த வெற்றி சோழ நாட்டினருக்கு வெற்றி. ஆனால் வேங்கி நாட்டானை மணந்து வேங்கிப் பெண்ணாகிவிட்ட அவளுக்குத் தோல்விதானே? அவளுக்கு மட்டுமா தோல்வி? அவளுடைய ஆணைக்கும் மற்றோரு படுதோல்வி!

அன்று சோழகேரளன் அரண்மனை முன் நடந்த வெற்றிப்படை வரவேற்பைக் காண அவள் வரவில்லை. பின்னர், தன் கணவர் முடிகொண்ட சோழன் அரண்மனைக்குத் திரும்பு முன் ஓடோடி வந்து அவருக்கு ஆத்தி மாலை சூடி, மங்கள நீர் சுற்றித் திலகமிட்டு வரவேற்கவில்லை. அவள் ஏமாற்றத்தில் மூழ்கி, முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்த தங்கள் விடுதியில் படுக்கையில் படுத்து, பிறந்து சில திங்களே ஆகியிருந்த தங்கள் இரண்டாவது மைந்தன் மும்முடிசோழனை அருகில் கிடத்தியவாறு அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவள் தன் படுக்கை அறையின் கதவை மூடிக் கொண்டிருக்கவில்லை. திறந்துதான் வைத்திருந்தாள்; அதோடு ஒவ்வொரு கணமும் கணவனை எதிர்நோக்கிக் காத்தும் இருந்தாள்.

குலோத்துங்கனும், நாடு திரும்பியதும், மனைவி தனக்கு அளிக்கப்போகும் வரவேற்பு எத்தகையதாக இருக்கும் என்பதை ஓரளவு ஊகித்தே இருந்தான். கைக்கு வந்த நாட்டை உதறிவிட்ட செய்தி இதுகாறும் அவளுக்கு எட்டியிருக்கும் என்பது அவனுக்குத் தெரியுமாதலால், வெற்றிப்படை வரவேற்பின்போது சோழ கேரளன் அரண்மனைமுன் கூடியிருந்த பெண்டிரிடையிலோ, அன்றி, அரண்மனையின் மேன்மாடத்திலோ அவளைக் காணாதது அவனுக்குத் திகைப்பளிக்கவில்லை. அவ்வாறே முடிகொண்டசோழன் அரண்மனைக்குத் திரும்பியபோது அங்கும் தன்னை வரவேற்க அவள் இல்லாதது அவனுக்கு வியப்பளிக்கவில்லை. தவிர, இதனால் அவன் அவமானமோ, மனவருத்தமோ கூட அடையவில்லை. ஆனால், மனைவியின் இந்தப் புறக்கணிப்பு, இந்தப் பதுங்கல், தன் மீது பாயப் போவதன் அறிகுறி என்பதை அறிவான். அந்தப் பாய்ச்சலைத் தவிர்க்க முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும்.

முடிகொண்ட சோழன் அரண்மனைக்கு வந்ததும் அவன் முறைப்படி தனது அத்தைகளான கிழானடிகள், திருலோக்கியமுடையாள், லோகமகாதேவி ஆகியோரை அவரவர்கள் அந்தப்புரங்களுக்குச் சென்று வணங்கி, வாழ்த்தைப் பெற்றுக்கொண்டு மனைவியின் அந்தப்புரத்துக்கு வந்தான். அங்கு ஒருபால் சேடி ஒருத்தியுடன் விளையாடிக்கொண்டிருந்த தனது மூத்தமைந்தன் கங்கசோழனைத் தூக்கி எடுத்து முத்தமாரி பொழிந்து, அவனைப் புசங்களில் சுமந்தவாறு மதுராந்தகியின் படுக்கை அறைக்கு வந்தான். அறைக்கதவு மூடப்பட்டிருக்கும் என்று எண்ணியிருந்த அவனுக்கு அது திறந்து கிடந்தது சிறிது வியப்பைத்தான் அளித்தது.

அறையில் பொன்முலாம் பூசப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்த மனைவியை நெருங்கி, “கண்ணே!” என்று குரல் கொடுத்தான் குலோத்துங்கன்.

எரியும் தீயைக் கிளறிவிட்டதும் திடீரென எழும் அதன் கொழுந்தைப்போல், மனைவியின் சீற்றத் தீயின் கொழுந்தை எதிர்பார்த்த குலோத்துங்கனைத் திகைக்கச் செய்தது மதுராந்தகி செய்த செயல். அவள் குபீரென்று எழுந்தாள். ஆனால் சீற்றத்தின் தோற்றமே அவளிடம் இல்லை. இத்தனை நேரமாகக் குமுறிய அழுகையெல்லாம் அவளிடமிருந்து எங்கே போய்விட்டது? கண்ணீர்க்கறை நன்கு தெரிந்தபோதிலும் அவளுடைய முகத்திலே ஒருவித மலர்ச்சி அல்லவா பரவியிருக்கிறது? இது என்ன விந்தை!

ஆம்; மதுராந்தகி விந்தைப் பெண்தான். அந்த விந்தைப் பெண் செய்த அடுத்த விந்தைச் செயல் என்ன தெரியுமா? கட்டிலுக்கு அருகில் ஓர் ஆசனத்தின்மீது ஏதோ பொருள்கள் பட்டுத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தன. அவள் எழுந்ததும், அந்த ஆசனத்துக்குச் சென்று பட்டுத் துணியை விலக்கினாள். ஒரு பொன் தட்டில் மங்கள நீரும், அருகே ஓர் ஆத்திமாலையும் இருந்தன. ஆத்திமாலையை எடுத்துக் கணவனுக்குச் சூட்டினாள். மங்கள நீரை மும்முறை சுற்றி அவனுக்குக் கண்ணேறு கழித்தாள். பிறகு அந்நீரால் அவனுக்குத் திலகமிட்டு, அவனுடைய பாதத்தில் தலை சாய்த்து வணங்கினாள்.

குலோத்துங்கனுக்கு ஏற்பட்ட வியப்பில், அவளுக்கு ஆசி கூறவேண்டியதைக் கூடக் கணப்பொழுது மறந்துவிட்டான். அவன் எண்ணி வந்தது என்ன? இங்கே நடப்பது என்ன?

“கண்ணே!” அவன் கையிலிருந்த மூத்த மகனைத் தரையில் இறக்கிவிட்டு மனைவியை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். போர்க்கவசம் பூண்ட அந்தப் பரந்த மார்பினில் அழுந்திய முகத்தை நிமிர்த்தாமலே நெடுநேரம் இருந்தாள் மதுராந்தகி.

“அன்பே! என் ஆருயிரே!” என்று அவளை இன்னும் ஆரத் தழுவி மெய்ம்மறந்தான் அவன்.

தந்தையும் தாயும் இவ்வாறு நீண்ட பொழுது ஒன்றாகி நின்றது அந்தப் பாலகன் கங்கசோழனுக்கு அச்ச மூட்டியதோ, என்னவோ? அவன், “அம்மா! அப்பா!” என்று விளித்து அவர்களை நினைவுலகுக்குக் கொணர்ந்தான்.

கணவனின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு மகனைத் தூக்கி உச்சி மோந்தாள் மதுராந்தகி. பிறகு அவனைக் கட்டிலில் உட்கார்த்திவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த இளைய மகன் மும்முடிச் சோழனை எழுப்பி, “உன் தந்தை வந்திருக்கிறாரடா, கண்ணே, எழுந்திரு,” என்று கூறியவாறு அவனை எடுத்துக் கணவனிடம் கொடுத்தாள். பின்னர் அந்த வியப்புறு மங்கை, கொண்டவனைக் கட்டிலில் அமர்த்தி அவனுடைய போர்க்கவசங்களை அகற்றிவிட்டு, உண்ணப் பழங்களும், பருகப் பாலும் கொடுத்து உபசரித்தாள்.

குலோத்துங்கன் பேச வாயிழந்தவனாய், அவள் ஆட்டி வைத்த பாவையாக ஆடிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், மதுராந்தகியின் பெண்மை விழித்துக்கொண்டு செயற்படத் துவங்கியது. அவள் தன் இரு மக்களையும் கணவனின் மடியில் அமர்த்தி, “குழந்தைகளுக்கு ஆசி கூறுங்கள்,” என்றாள்.

குலோத்துங்கன் வியப்புடன் அவளை நோக்கி, “இது என்ன புதிய நடைமுறையாக இருக்கிறதே, மதுரா?” என்று வினவினான்.

“பெற்ற குழந்தைகளுக்குப் பிறப்பித்தவர் ஆசி வழங்குவது புதுமையா?” என்று எதிர்வினா ஒன்றை விடுத்தாள் அந்த வீரப்பெண்.

“என் சேய்களுக்கு என் ஆசி என்றும் உள்ளதுதானே, கண்ணே?”

“உண்மையாக உண்டா?”

“இது என்ன கேள்வி, மதுராந்தகி…?

“அப்படியானால் என் காது குளிர அதை ஒரு தடவை கூறுங்கள்.”

“என்னவென்று ஆசி வழங்க வேண்டும்?”

“உங்கள் மக்களின் நலன் உங்களுக்குத் தெரியாதா? அவர்களுக்கு அந்த நலன்கள் கிட்டுமாறு, கிட்டச்செய்வதாக ஆசி அளியுங்களேன். இதைக்கூட ஒருத்தி சொல்லித் தரவேண்டுமா?”

“சொல்லித்தர வேண்டியதில்லை. ஆனால் நீ எதையோ உள்ளத்தில் கொண்டு, இன்று புதிதாக இவர்களுக்கு ஆசி வழங்கச் சொல்கிறாய். உன் உள்ளத்தில் இருப்பதைச் சொல். அதையே என் ஆசியாக வழங்குகிறேன்.”

“ஆமாம், என் உள்ளத்தில் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. நேற்றுவரை நான் தன்னலமே உருவாக இருந்தேன். அதற்குத் தங்களைக் கருவியாக்கிக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தேன். இன்றுதான் என் மனக்கண்கள் திறந்தன. நமக்கு இரு மைந்தர்கள் இருப்பதும், அவர்களது வருங்கால நலனே இனி நமது நலன் என்றும் உணர்ந்தேன். ஆதலால், நான் மாறிவிட்டதைப்போல் உங்களையும் மாறச் செய்ததை உறுதி செய்து கொள்ளவே இன்று இவர்களுக்கு ஆசி கூறுமாறு வேண்டிக் கொண்டேன்.”

“சொல் கண்ணே, என் மக்களின் நலனுக்காக எதையும் நான் உறுதியாகச் செய்வேன்.”

“செய்வீர்களா?”

“பெற்ற செல்வங்களின் விஷயத்தில் நான் அத்தனை இரக்கமற்றவனாக இருப்பேன் என்று நீ ஐயமுறுகிறாயா?”

“அப்படியானால், வேங்கி அரசகுலத் தோன்றல்களாகிய அவர்களுக்கு அந்நாட்டைக் கிட்டச்செய்வதாக ஆசி வழங்குங்கள்.”

“மதுராந்தகி! இது என்ன மதுராந்தகி?” குலோத்துங்கன் சட்டென்று பின்னடைந்தான்.

“ஏன்? நான் உங்களால் இயலாததைச் செய்யுமாறு கேட்டுவிட்டேனா?”

“ஆம்; சோழப் படைத்தலைவனான நான் வேங்கி அரியணையை என் மைந்தர்களுக்குக் கிட்டச்செய்வதாக எவ்வாறு ஆசி வழங்க முடியும்?”

“முடியும். அதனால்தான் கேட்டேன்.”

“எப்படி முடியும்?”

“மீண்டும் எப்பொழுதாவது அது உங்களுக்கு வழங்கப்பட்டால், இந்தப் பச்சைக் குழந்தைகளை நினைத்துக் கொள்ளுங்கள். இவர்களும் உங்களைப்போல் அந்நாட்டின் பட்டத்துக்கு உரியவர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் அரசை மறுத்துப் படைத் தலைமையை ஏற்றதைப்போல், இவ்விருவரும் செய்தாலன்றி, ஏன் செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலுங்கூட, அப்படிச் செய்யும் வரையில், அவர்களது உரிமையைப் பாதுகாத்து அவர்களுக்கு வழங்க வேண்டியது தந்தையாகிய உங்கள் கடமை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உணர்ந்து அதன் பொருட்டாவது, வலியக் கிடைப்பதை மறுப்பதில்லை என்று உறுதி கொண்டீர்களானால், ஏன் இவர்களுக்கு நான் விரும்பியவாறு ஆசி வழங்க முடியாது?”

“என் அன்பே! நான் இப்போது எனக்காக எதையும் கோரவில்லை. உங்களுக்காகவும் கோரவில்லை. நம் மைந்தர்களுக்காகக் கோருகிறேன். அவர்களுக்குரிய உரிமையை வழங்க முடியாவிட்டாலும், பறித்தவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் இலக்காகக் கூடாது என்பதற்காகவே இறைஞ்சுகிறேன். வேங்கிநாடு உங்கள் மைந்தர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் வாளெடுத்துப் போர் செய்ய வேண்டாம். நாளை ஒருநாள் மீண்டும் அந்நாடு சோழநாட்டின் பிடியிலிருந்து நழுவும்போல் இருந்தால், சோழநாட்டுக்காக போர் செய்வீர்கள் அல்லவா? அந்தப் போரில் வெற்றி கிட்டியதும், அந்நாடு உங்களுக்கு வழங்கப்படுமானால் இத்தடவை மறுத்ததுபோல் மறுத்துவிடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. ‘தந்தை என்ற முறையில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை மறக்காமல், அடுத்த தடவை வேங்கி எனக்கு வழங்கப்பட்டால் உங்களுக்காக ஏற்றுக்கொள்ளுவேன்’ என்று கூறி இந்தப் பஞ்சைகளுக்கு ஆசி கூறுங்கள்.”

உணர்ச்சி வசப்பட்டு விட்டதால் மதுராந்தகிக்குக் கண்டம் அடைத்துக் கொண்டது; கண்களில் கண்ணீர் பொங்கி விட்டது.

அந்தக் கண்ணீரோ, அல்லது மக்களுக்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையோ, ஏதோ ஒன்றுதான் குலோத்துங்கனின் உள்ளத்தைக் கரைத்திருக்க வேண்டும். “ஆகட்டும், கண்ணே!” என்று மனைவியை அணைத்துக் கொண்ட அவன், பின்னர் அவ்வாறே தன் மைந்தர்கள் கங்க சோழனுக்கும், மும்முடி சோழனுக்கும் ஆசி வழங்கினான். வீம்பும் குரோதமும் நிறைவேற்ற முடியாத செயல்களை அன்பு எளிதாக நிறைவேற்றிவிடும் என்பது எத்தகைய உண்மை! ஆம், அன்பினால் தோல்வியிலே வெற்றி கண்டுவிட்டாள் மதுராந்தகி. அவளுடைய ஆணை, நிறைவேற்றப்படும் போக்கிலே முதல் அடி எடுத்து வைத்து விட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: