Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

யாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 10

அத்தியாயம் – 10

 

அன்று காலையே அனுஷராவும் மைக்கேலும் ஷானவியை வந்து அழைத்துச் சென்றார்கள். ஷானவிக்கோ ஒரு புறம் மகிழ்ச்சி; மறுபுறமோ நண்பியைத் தொல்லைப் படுத்துகிறோமோ என்ற குழப்பம்.

 

காரில் ஏறிய நேரமிருந்து இந்த குழப்பத்தில் இருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி மைக்கேல். காரணம், மைக்கேலின் வயது. ஏனென்றால் அனுஷராவுக்கோ வயது முன்னிருபதுகளில். ஆனால் மைக்கேல்   முடி நரைத்த, தோல் சுருங்கிய ஐம்பது வயது தாண்டியவராக இருந்தார். ஷானவிக்கோ இந்த வயது வேறுபாட்டைக் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

 

ஷானவியிடம் கைப்பேசி இல்லாத காரணத்தால் அவள் எந்த வித சமூக வலைத் தளங்களிலும் இருக்கவில்லை. அனுஷரா அடிக்கடி மைக்கேல் பற்றிப் பேசியிருந்தும் ஏனோ புகைப்படம் காட்டும் சந்தர்ப்பம் வரவில்லை. அதனால் இது வரை நாளும் ஷானவி, இந்த வயது வேறுபாட்டை அறிந்திருக்கவில்லை. இன்று திடீரென பார்த்ததும் அதிர்ந்து விட்டாள். மைக்கேலுக்கு முன்னால் இது பற்றிக் கேட்கத் தயங்கியவள், தனது குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த அழகான பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

 

மைக்கேலும் கலகலவென பேசும் ரகம் தான். அதனால் சுவாரஸ்யமாய் அந்த இடங்களைப் பற்றி விளக்கிக் கொண்டே வர, கார் யன்னல் கண்ணாடியால் வெளியே தெரிந்த வெண் பனி முகடுகளைப் பார்வையிட்டவாறே அந்த இயற்கைக் காட்சிகளில் ஆழ்ந்து விட்டாள். வலன்ஸ்ஸை நோக்கிக் கார் செல்லச் செல்ல, முதல் நாள் தான் ஒருவனின் காரில் பயணித்ததும் ஞாபகம் வராமலில்லை. அவன் உச்சியில் முத்தமிட்ட இடம் குறுகுறுப்பை ஏற்படுத்த நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவள், அவன் மாவுக் கட்டில் கோடுகளாகக் கிறுக்கியிருந்ததை தடவி விட்டுக் கொண்டாள்.

 

ஷானவியின் இந்த செய்கைகள் எல்லாம், அவளருகே இருந்த அனுஷராவின் கண்ணிலிருந்து தப்பவில்லை. தனது தோழியை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். தான் எண்ணுவதை ஷானவியிடம் வெளிப்படையாகச் சொல்லி அடி வாங்க அவள் என்ன முட்டாளா?

 

பொதுவான பேச்சுகளினூடே நாற்பது நிமிடங்களில் கார் வலன்ஸ்ஸில் இருந்த மைக்கேலின் பரம்பரை வீட்டைச் சென்றடைந்தது. காரில் இருந்தவாறே வீட்டைப் பார்த்த ஷானவிக்கு ஆனந்தத்தால் கண்கள் குளம் கட்டின. அப்படியொரு அற்புதமான காட்சி அது. சற்றே உயரமான அந்தப் பகுதியில் எங்கும் பனிப் போர்வையால் வெள்ளை வெளேரென மூடியிருக்க ஆங்காங்கே சில வீடுகள் மட்டும் உயர்ந்து எழுந்து நின்றன. மைக்கேலும் அனுஷராவும் உதவி செய்ய மெதுவாய் எழுந்து, அவர்களது துணையுடன் வீட்டினுள்ளே சென்றாள் ஷானவி.

 

ஒரு மாடியோடு மேலும் கீழுமாய் பல பிரிவுகைளைக் கொண்ட அந்த மரப் பலகைகளாலான வீட்டில், கீழ்ப்புறம் பெரிய வரவேற்பறையும் அதனோடு சேர்ந்து திறந்த முறையிலான அமெரிக்கன் சமையலறையும் இணைந்திருந்தது. டாய்லெட்டும் குளியலறையும் தனித்தனியாக அமைந்திருந்தன. இரு படுக்கையறைகளும் கீழே இருந்தன. மேலே பெரியதொரு வரவேற்பறையோடு இரு படுக்கை அறைகள் இருந்தன. ஷானவிக்கு மாடி ஏறி இறங்குவது கடினமாக இருக்கும் என்பதனால் அவளைக் கீழே இருந்த அறை ஒன்றில் தங்கி கொள்ளச் சொன்னார்கள். அவளும் மகிழ்ச்சியாகத் தலையசைத்தாள்.

 

அப்போது மைக்கேலிடமும் அனுஷராவிடமும் மறுபடியும் தனது  சந்தேகத்தைக் கேட்டாள் ஷானவி.

 

“அனு! மைக்கேல்! நான் உங்களுக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லையே? உங்கள் விடுமுறை நாட்களில் இடையூறு செய்யவில்லையே?”

 

“லூஸாடி நீ… இந்த கிருஸ்மஸ்க்கு நீ வந்து எங்களோடு தங்குவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அதனால் தேவையில்லாமல் யோசிப்பதை விட்டு விட்டு சந்தோஷமாக இருடி. நாங்கள் வாரவாரம் ஒவ்வொரு  வெள்ளிக் கிழமை இரவும் இங்கு வந்து தங்கி விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கிரினோபிள் வீட்டுக்குப் போவோம். கடந்த வாரம் வந்தது. அதனால் ஒரு தடவை வடிவாக கூட்டி சுத்தம் பண்ணி விடுகிறேன். அது வரை எனக்கு உதவ முடியவில்லையே என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயவு செய்து நீ ரிலாக்சாக இருடி. ஏதாவது பிரெஞ்சில் பார்க்கப் போகிறாய் என்றால் நீ டிவியைப் போட்டு பார். இல்லையோ இந்த ஐபாடில் உனக்கு பிடித்ததைச் செய். நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்.”

 

“ஸாரி அனு…! என்னால ஹெல்ப் பண்ண முடியல. சமையலுக்கு நிச்சயமாக உதவி செய்கிறேன்டி. ஓகேவா?”

 

“சும்மா போடி… மைக்கேல் எதுக்கு இருக்கிறார்? நீ உனக்குப் பிடித்த படமாகப் போட்டுப் பார். நான் வாறன்.”

 

அனுஷராவும் மைக்கேலும் மேலே செல்ல, ஷானவி காலை உயர்த்தி நீளமான ஸோபாவில் படுத்தவாறு ஒரு தமிழ் படத்தில் ஆழ்ந்தாள்.

 

“நீ இன்று என்ன சாப்பிட விரும்புகிறாய் என்று சொல்லு ஷானு… உனக்குப் பிடித்ததாகவே செய்திடலாம்.”

 

“எனக்கு உன் நாட்டு முறையில் சிக்கின் கறி வேணும்.”

 

இருவரும் பேசிக்கொண்டே சமையலை ஆரம்பித்தார்கள். ஷானவி ஸோபாவில் அமர்ந்தவாறு தனக்கு முன்னால் இருந்த சிறிய முக்காலியில் வைத்துத் தேவையான காய்கறிகளை வெட்டி கொடுக்க, அனு அடுப்பைக் கவனித்துக் கொண்டாள்.  மைக்கேல் பழங்களை வெட்டி புரூட்சாலட் செய்து பிரிட்ஜில் வைத்தார்.

 

அனுஷரா மூங்கிலும் கோழி இறைச்சியும் போட்டு ஒரு கறியும் சோறும் அத்தோடு கோழிப் பொரியல், முட்டையில் ஒரு பதார்த்தம், ஜவ்வரிசியில் பிஞ்சு சோளம் போட்டு பாயாசம் மாதிரி ஒன்று என விரைவிலேயே சமையலை முடித்து விட்டாள். சமையலை முடிக்கவே நேரம் சரியாக இருந்தது. மூவரும் பேசிக்கொண்டு உண்ண ஆரம்பித்தனர். எங்கள் ஊரை போல மளமளவென்று உணவை எடுத்து உண்டு விட மாட்டார்கள்.  சில நேரங்களில் மூன்று, நான்கு மணி நேரம் கூட அவர்கள் பேசிக் கொண்டு உண்டு கொண்டிருப்பார்கள். உணவை முடித்து ஃகபே அருந்திவிட்டு மூவரும் வரவேற்பறையில் சென்று அமர்ந்தார்கள்.

 

அப்போது மைக்கேல் அங்கிருக்கும் ஒரு நண்பனைப் பார்க்க வெளியே சென்று வரப் போவதாக கூறிச் சென்றார். அவர் சென்றதும் தோழிகள் இருவரும் பேசியவாறு அமர்ந்திருந்தார்கள். அப்போது அத்தனை நேரம் தனது மண்டையைக் குடைந்த சந்தேகத்தை ஷானவி அனுஷராவிடம் கேட்டாள்.

 

“எப்படி அனு இவ்வளவு வயது வேறுபாட்டோடு கல்யாணம் செய்ய சம்மதித்தாய் அனு? தயவுசெய்து குறை நினைக்காதே… இப்படி இவ்வளவு வயது வேறுபாட்டுடன் திருமணம் செய்து கொண்டவர்களை இது வரைக்கும் இப்படி பார்த்ததே இல்லை. எங்கட ஊரில் ஆகக்கூடியது பத்து பன்னிரெண்டு வயது கூடிய ஆண்களைத் திருமணம் செய்து கொள்வோம்… இப்படி இருபத்தைந்து முப்பது வயது கூடியவர்களை என்றைக்குமே நாங்கள் மணந்தது கிடையாது.

 

எனக்கு உங்கள் காதல் திருமணம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ளாது விட்டால் மண்டை வெடித்து விடும் போல் உள்ளது. தயவுசெய்து சொல்லிவிடு… என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை அனு…”“ஹா… ஹா… ஹா… நானே சொல்வோம் என்று தான் நினைத்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை ஷானு. நான் சிறுவயதாக இருக்கும்போதே, ஒரு பத்துப் பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே எனது அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள். இருவரும் வேறு வேறு திருமணம் புரிந்து கொண்டார்கள். இதனால் நான் எனது பாட்டியோடு வளர்ந்தேன். பத்து வயதிலேயே பார்ட் டைமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டேன். படித்துக்கொண்டே கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். பதினெட்டு வயதளவில் பாங்கொக்கில் ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான் ஒரு நாள் மைக்கேலைச் சந்தித்தேன்.

 

ஒரு இளம்பெண் தனியாக வேலை செய்யும் போது; அதுவும் தனியாக வாழும் போது; அதுவும் பாங்கொக் போன்ற நகரங்களில் வசிக்கும் போது; மசாஜுக்குப் பெயர்போன தாய்லாந்தில் எத்தனை இன்னல்களைச் சந்திக்க வேண்டும் என்பது உனக்கு தெரியும் தானே…

 

எதேச்சையாக சந்தித்த மைக்கேலிடம் முதலில் ஏற்பட்ட நட்பு, பின்பு பழகப்பழக காதலாக மாறியது. ஆரம்பத்தில் தினமும் நான் வேலை செய்த ரெஸ்டாரண்டுக்கு வந்து போவார். அப்படியே பேசிப் பழகி, பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். ஐந்து வருடங்களுக்கு கிட்ட மைக்கேலோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். அவர் வைத்தியராக இருப்பதால் கிழக்காசிய நாடுகளுக்கு அடிக்கடி மருத்துவ பிரயாணங்களை செய்து வந்தார். நான் என் வேலையில் லீவு கிடைக்கும் போது அவரோடு மற்ற நாடுகளுக்குச் சென்று வருவேன். பிரான்சுக்கும் நான் அடிக்கடி வந்து செல்வேன்.

 

வருடங்கள் செல்லச் செல்ல, அங்குமிங்குமான இந்த வாழ்க்கையில் போரடித்துப் போய் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தோம்.  கடந்த வருடம் மணமுடித்து நான் இங்கேயே இப்போது செட்டிலாகிவிட்டேன். மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் மைக்கேல் என்னை உடல் தேவைக்காக மணந்து கொண்டதாகவும், அல்லது ஒரு வீட்டு வேலைக்கார பெண்ணாக மணந்து கொண்டதாகவும், எது வேணுமானாலும் தோன்றலாம். ஆனால் எனக்கும் மைக்கேலுக்கு மட்டும்தான் தெரியும், நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று.

 

மைக்கேலின் அன்பும் அரவணைப்பும் பெற்றோர் இருந்தும் அனாதையாக வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அன்பு, பாசம் என்றால் என்ன என்று புரிய வைத்தது. தனிமையோடு போராடிக் கொண்டிருந்த எனக்கு மைக்கேலின் அன்பும் அரவணைப்பும் ரொம்பவே தேவைப்பட்டது என்பதுதான் உண்மை. அதனால் நான் ரொம்ப மகிழ்ச்சியாகவேதான் இருக்கிறேன் ஷானு. இந்த வயது வேறுபாடு எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

 

ஆரம்பத்தில் சிலர் ஒரு மாதிரியாக பார்ப்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், போகப்போக மைக்கேலின் அன்பிலே நான் மற்றவர் கருத்துகளையும் பார்வைகளையும் ஏறெடுத்தும் நோக்குவதில்லை. அவற்றை  உதாசீனப்படுத்தவும் புறக்கணிக்கவும் நன்கு பழகி விட்டேன். மற்றவர்களுக்காக நாங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லையே…

 

நானும் மைக்கேலும் சந்தோசமாக இருக்கிறோம். இது போதும். மற்றவர்களுக்கு நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நிரூபிப்பதற்காக வாழ ஆரம்பித்தால் எங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை ஷானு… எங்கள் வாழ்க்கை எங்களுக்காக மட்டுமே தான். அதனால நீயும் இந்த வயது வேறுபாடெல்லாம் பார்த்து நான் சந்தோசமாக இல்லையோ எனக் கவலைப்படாதே சரியா?”

 

“ஹூம்! உன் சின்ன வயசைப் பற்றிக் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு அனு. மைக்கேல் கிடைத்தது உன் அதிர்ஷ்டம் தான். நீ சந்தோசமாக வாழ்ந்தால் எனக்கு அது போதும்டி.”

 

“சரி… சரி… பழசை நினைத்து ஃபீல் பண்ணாதே… நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய்… முதலில் மாத்திரை எல்லாம் ஒழுங்காக போட்டு விட்டு தூங்கி ரெஸ்ட் எடு…”

 

உண்ட களைப்போ, மருந்துகளின் விளைவாகவோ என்னவோ தெரியவில்லை மிகுந்த அலுப்பாகவே இருந்தது ஷானவிக்கு. சிறிது நேரம் தூங்கினால் நல்லது தான் என்று தோன்றவே, அவளும் சரி என்று கூறி அவளுக்குக் கொடுத்திருந்த அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தாள். இரண்டு மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்து கண்விழித்த போது, அங்கு பேச்சுக் குரல் கேட்டது. மைக்கேல் அனுஷராவை விட வேறு யாரோவும் வந்திருப்பது போலத் தோன்றியது.

 

சற்று நிதானித்து தூக்கக்கலக்கம் பாதி விலக, ‘அது யார்? எனக்குத் தெரிந்த குரல் போல் இருக்கிறதே… சரி யார் என்று பார்ப்போம்’ என்று மெதுவாய் எழுந்து வெளியே வந்தாள் ஷானவி. அங்கிருந்த நபரைக் கண்டதும், முகத்தில் பிரகாசம் கூடியது. ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு. காரணம் அங்கிருந்தது வேறு யாருமில்லை. லீ யூ வோன் தான்.

 

அவனைக் கண்டதுமே வரவேற்பறைக்குச் சென்று விடும் வேகத்தில், ஒருவாறு சுவரைப் பிடித்துக்கொண்டு கொண்டு நடந்தாள். ஒரு இடத்தில் சுவர் முடிந்து நேராகச் சென்றால் தான் வரவேற்பறையை அடைய முடியும். மதியம் தூங்கச் செல்லும் போது அனுஷராவின் உதவியோடு தனது அறைக்குச் சென்றிருந்தவள், வரவேற்பறையிலேயே ஊன்றுகோலை வைத்திருந்தாள்.

 

இப்போது எப்படிப் போவது என்று புரியாமல் அப்படியே அறைக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள். லீ இவளின் அறையை நோக்கியவாறு அமர்ந்து இருந்தான். அதனால் இவளின் வருகையை அவன் அறிந்திருந்தான். அனுஷராவும் மைக்கேலும் அறைக்கு எதிர்ப்புறமாக இருந்தமையால் இவள் வந்ததைக் கவனிக்கவில்லை. இவள் தடுமாறி நின்றதைக் கண்டதும் லீ உடனே எழுந்து சென்று அவளைக் கை கொடுத்து வரவேற்பறைக்கு அழைத்தான்.

 

ஷானவிக்கோ மறுப்பதும் மடத்தனமாகப்பட்டது. ஒரு இயல்பான சக மனிதரின் உதவியை ஏற்காது, மைக்கேலின் முன்னால் ஒரு நாடகத்தை அரங்கேற்ற அவள் விரும்பவில்லை. அதனால் லீயின் கையைப் பிடித்தவாறு மெதுவாய் வரவேற்பறையில் சென்று அமர்ந்தாள். லீயும் வெகு சாதாரணமாக அவளின் அருகிலேயே அமர்ந்து கொண்டு, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் தனது உரையாடலை ஆரம்பித்தான். அவனின் அண்மை தந்த இம்சையோடு இவள் தான் சங்கடமாய் அமர்ந்திருந்தாள்.

 

பேச்சு கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பற்றியதாக இருக்க, சிறிது நேரத்தில் அந்த சங்கட உணர்வும் நீங்கி இவளும் இயல்பாய் பேச்சில் கலந்து கொண்டு, மற்றவர்களோடு சேர்ந்து விழாவுக்கான ஒழுங்குகளைத் திட்டமிட ஆரம்பித்தாள்.

 

அதன் பின்னர் ஆள் உயர கிருஸ்துமஸ் மரத்தை கணப்பின் அருகே வைத்து, எல்லோருமாக அலங்கரிக்கத் தொடங்கினார்கள். ஷானவி இருந்த இடத்தில் அமர்ந்தவாறே வண்ணக் காகிதங்களால் அலங்காரங்களைச் செய்து கொடுத்தாள். பேச்சும் சிரிப்புமாக வீடே கல கல என்றிருந்தது. இதனூடே நேரம் இரவு ஏழு மணி ஆகி விட, வெளியே சென்று சாப்பிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

 

ஒரே காரில் செல்ல முடிவெடுத்து மைக்கேல் காரை ஓட்ட அனுஷரா அவர் பக்கத்தில் முன்னால் அமர்ந்து கொண்டாள். லீயும் ஷானவியும் பின்னால் அமர்ந்தார்கள். லீ வந்த நேரம் இருந்து ஷானவியோடு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இருந்தாலும் தனது செய்கைகளால் அவளை அரவணைத்துக் கொண்டிருந்தான்.

 

ரெஸ்ட்டாரண்ட்டைச் சென்றடைந்ததும் லீயும் அனுஷராவும் ஒவ்வொரு பக்கமாக அணைத்துப் பிடிக்க, ஷானவி அவர்கள் உதவியுடன் உள்ளே சென்றாள். அப்போதும் லீ ஒரு மூலைப் பக்கமான இருக்கையைத் தெரிவு செய்து ஷானவி காலை நீட்டி இலகுவாக அமர்ந்து கொள்ளுமாறு பார்த்துக் கொண்டான்.

 

மெழுகுதிரி வெளிச்சத்திலே இப்படிப் பேசிக் கொண்டே சாப்பிடுவது ஷானவிக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. உணவை முடித்ததும் காருக்குச் சென்றவர்கள் அருகே ஒரு பூங்கா இருப்பதைப் பார்த்தார்கள். கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் இரவையும் பகலாக்கும் வண்ணம் எண்ணற்ற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த இடத்தில் ஒரு உலாப் போய் விட்டு வந்தால் என்ன என்று மைக்கேல் கேட்க அனைவரும் பூங்காவை நோக்கிச் சென்றார்கள்.

 

ஷானவியால் அதிகம் நடக்க முடியாது என்பதால் அவள் பூங்காவின் வாயிலில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். அவளருகே அமர்ந்த லீ யூ வோன்,

 

“நான் ஷானுக்குத் துணையாக இங்கே இருக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் நடந்திட்டு வாங்க…”

 

என்றான். அவர்களும் சம்மதித்து, கைகளை கோர்த்தவாறே பேசிக்கொண்டு சென்றனர்.

 

மின்விளக்கு அலங்காரங்களையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஷானவி. மார்கழி உறைபனிக் குளிர் உடலை ஊடுருவ, கைகளத் தேய்த்து சூடாக்கி கன்னத்தில் வைத்து விட்டு, நெஞ்சுக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டாள். முதல் குளிர்! இன்னமும் பழக்கப்படாமல் நடுங்கிக் கொண்டிருந்தாள். கத்தரி வெயில் உச்சி மண்டையைப் பிளக்கும் தேசத்திலிருந்து வந்தவளுக்கு இந்தக் குளிரைத் தூங்குவது கடினம் தானே?

 

அவள் குளிரால் வாடுவதை உணர்ந்து கொண்டவன், தனது நீண்ட குளிர் அங்கியைக் கழட்டி அவள் முன்புறமாகப் போர்த்து விட்டான். இவள் திகைப்புடன் அவனை நோக்கினாள். அவனோ தனது ஜிலே பொக்கற்றுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு சாதாரணமாய் அமர்ந்திருந்தான்.

 

‘அடேய் ஜந்து! நீ எந்தக் கிரகவாசிடா? மனுஷருக்கு குளிரில விறைச்சு உயிரே போய்டும் போல இருக்கு… நீ என்னடாவென்றால் ஏதோ பீச்சில சன்ஃபாத் எடுக்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கிறாயே… முதல்ல நீ ஆம்பிளையா? பொம்பிளையா? என்ற சந்தேகம் தான் எனக்கு வந்துச்சு… ஆனா இப்ப என் சந்தேகமே வேற… நீயெல்லாம் உண்மையாகவே மனுச ஜென்மம் தானாடா?’

 

அவன் போர்த்தி விட்ட ஜக்கெட்டை இன்னமும் வடிவாக போர்த்திக் கொண்டு தனது மைண்ட் வாய்ஸில் லீயை அர்ச்சித்தபடி அமர்ந்திருந்தாள் ஷானவி. அவனோ எதைப் பற்றியும் சிந்திக்காதவனாய், தனது நீண்ட கால்களை முன்னே நீட்டி பின்புறம் நன்கு சாய்ந்து அமர்ந்து, அண்ணாந்து பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான்.

 

‘ஏதோ ரொம்ப நல்லவன் மாதிரி, பெரிய ரொமான்ஸ் மன்னன் போல உன் ஜக்கெட்டை எனக்குத் தந்திட்டாய்… ஆனால் நான் திருப்பித் தருவன் என்று மட்டும் நினைக்காதைடா மூஞ்சூறு… நீ குளிரில விறைச்சு சாகு. உன்னை யார் பெரிய ஹீரோ போல இப்ப ஸீன் போடச் சொன்னாங்களாம். அனு கார் கீ தந்திட்டுத்தானே போயிருக்கிறாள். ரொம்பக் குளிர்ந்தால் நான் காரில போய் இருப்பன்தானே’

 

மறுபடியும் தனது மைண்ட் வாய்ஸுடனே பேசியபடி லீயைத் திரும்பிப் பார்த்த ஷானவிக்கு நெஞ்சம் துணுக்குற்றது. முகம் இறுகிப் போய் கண்களிலிருந்து நீர் வழிய அமர்ந்திருந்தான் அவன். அவ்வளவு நேரம் அவனைத் திட்டியது மறந்து, அவன்புறம் திரும்பி அமர்ந்து அவன் சில்லிட்டிருந்த கைகளைத் தன் கைகளில் எடுத்தவள்,

 

“லீ…! என்னசுடா…? எதுக்கு இப்போ அழுகிறாய்? ரொம்ப குளிருதா? உன்னை யார் ஜக்கெட்டைக் கழட்டித் தரச் சொன்னது? இந்தா… முதல்ல இதைப் போடு… வா… கெதியா காருக்குப் போவோம்…”

 

என்று படபடத்தவளை,

 

“போன கிருஸ்மஸ்தான் நான் அம்மாவோட கழிச்ச கடைசி கிருஸ்மஸ். அப்போ அம்மாவை இது போல ஒரு பார்க்குக்கு கூட்டிப் போனேன். இந்த லைட்டுகள், டெக்கரேசன் எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணினாங்க. அவங்களாலயும் நடக்க முடியாது. நான்தான் தூக்கிட்டுப் போய் பார்க்கில உட்கார வைச்சன். ஏனோ இப்ப அம்மா ஞாபகம் வந்துவிட்டது. ஐ மிஸ் யூம்மா… ஐ டெரிபிளி மிஸ் யூம்மா…”

 

என்று கண்களில் நீர் வழிய தளுதளுத்த குரலில் கூறியவனை தேற்றும் வகையறியாது திகைத்தாள் இவள்.

 

“டேய் அழாதைடா… நீ அழ எனக்கும் அழுகை வருது… அம்மா உன்னை விட்டிட்டு எங்கேயும் போக மாட்டாடா… எப்போதும் உன் கூடவே தான் இருப்பாங்க… உன்ர மூஞ்சி சும்மாவே சகிக்காது. இதில நீ அழுதா பார்க்கவே முடியலைடா. தயவுசெய்து அழாதை… உன்ர இந்த அழுது வடிஞ்சான் மூஞ்சியைப் பார்த்தா அம்மாவுக்கு சந்தோசமாகவா இருக்கப் போகுது…?”

 

அவள் சொன்னதைக் கேட்டு சிறு முறுவலுடன், கண்களைத் துடைத்தவன்,

 

“ஹூம்…! நீ சொல்லுறது சரிதான் ஷானு. நான் எப்பவுமே அம்மா என்னை விட்டுப் போனதா நினைச்சது கிடையாது. ஆனால் ஒரு உருவமாக அவங்களை என் முன்னால பார்க்க முடியாத போது அது ரொம்ப வேதனையாக இருக்கு…”

 

“புரியுது லீ… நான் உனக்கு ஒரு ஐடியா சொல்லுறன் கேள். நீ இப்ப இருக்கிறது பிரான்ஸ்ல. அம்மா கொரியாவில இருக்கிறதாக நினைச்சுக் கொள். அம்மாக்கு என்ன சொல்லணுமோ அதையெல்லாம் லெட்டர்ஸா எழுதி வைச்சுக் கொள். உனக்கு மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸாக இருக்கும்…”

 

என்றவள், அவனது கைகளை தனது கைகளோடு சேர்த்து வானத்தை நோக்கி உயர்த்தியவள் அங்கு பிரகாசித்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக்காட்டி,

 

“அங்க பாரு லீ… அது தான் உன் அம்மா… அவ எப்பவுமே அங்க இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பா… இன்றைக்கு அனு ஒரு விசயம் சொன்னாள். நாம் நமக்காக வாழ வேண்டும் என்று. அது உண்மைதானே… நமக்கு இருக்கிறது ஒரு வாழ்க்கை. இழந்ததை நினைச்சு மீதிக் காலத்தை சோகமாகவே கழிக்கிறதும், இல்லையோ அவர்கள் எங்களோடிருந்த சந்தோசமான நேரங்களை மட்டும் எண்ணி சந்தோசமாகவே வாழ்வதும் எங்கட கையில தான் இருக்கு… அம்மா திரும்ப உயிரோட வர முடியாது என்பது தெரிந்த விஷயம். ஸோ நீ அதை ஏற்று வாழப் பழகுறதுதான் உனக்கு நல்லம்.”

 

“ஓகே புரபஸர்! நீங்கள் சொன்னபடியே நடக்கிறேன்.”

 

என்று சிரித்தான் லீ. ஷானவியும் சிரித்தவாறே,

 

“ஓவராய் பிளேடு போடுறேனா?”

 

“அதே… அதே… ஹூம்! அப்படியில்ல ஷானு. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, நான் மூணு பேர் தான். எனக்கு பத்து வயசாக இருக்கும் போது அம்மாவுக்கு ஹார்ட்ல ப்ரொப்ளம் இருக்கு என்று கண்டுபிடிச்சாங்க. அதுக்கப்புறம் அம்மா ஹொஸ்பிடலும் வீடும் தான். அப்பா எப்பவுமே வேலை வேலை என்று வீட்டிலேயே இருக்க மாட்டார். எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணினதே கிடையாது. அம்மாவுக்கு இப்படியாகினதும் நான் ஸ்கூல் முடிஞ்சதும் மிச்ச நேரம் எல்லாம் அம்மாவோடதான் இருப்பேன்.

 

அம்மா நல்லா பாடுவாங்க. கவிதை எழுதுவாங்க. அவங்களிட்ட இருந்து பாட்டுக் கற்றுக்கொண்டேன். ஏதாவது இண்டோர் கேம்  விளையாடுவோம். அம்மா சொல்ல சொல்ல நான் சமைப்பேன். அம்மா இறக்கிற வரைக்கும் நான் எப்பவுமே அவங்க கூடத்தான் இருப்பேன். திடீரென இப்படித் தனியாகினதும் தாங்க முடியலை. அந்த வீட்டிலேயே இருக்க முடியலை. அதுதான் பிரான்சுக்கு வந்தேன்…”

 

“ஹூம்! அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். நீ கவலைப்படாதேடா. இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. இதுவும் கடந்து போகும் என்று கடந்து வந்திடணும். உனக்கு ரொம்ப குளிரப் போகுது. வா….காருக்குப் போவோம்…”

 

என்று கூறியபடி எழ பிரயத்தனப்பட்டாள். அவள் கஷ்டப்படுவதைப் பார்த்த லீ அப்படியே அவளைத் தூக்கிச் சென்று காரிலே இருத்தி விட்டான். உலாவப் போன மைக்கேல், அனுஷராவும் வந்துவிட அனைவருமே ஒரு இனிய மனனிலையோடு வீடு திரும்பினார்கள்.

 

இந்த புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் நிலைக்குமா?

 

2 Comments »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: