Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

யாழ்வெண்பாவின் ‘ஊடலுவகை’ – 7

ஊடலுவகை – 07

 

‘வேலை ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்கும்’ என்று யாரேனும் கூறியிருந்தால் உமாவதி அதை அசட்டையாக ஒதுக்கி இருப்பாள். ஆனால், அவள் வாழ்வில் அவளுடைய வேலை நிம்மதியை வாரி வழங்கியது என்பதை அவள் அனுபவத்தில் உணர்கிறாளே! அதற்கு வேலை மட்டும் காரணமில்லை, அவளுடைய ஆருயிர் தோழியும் தான் காரணம் என்பதை உமாவும் ஐயம் திரிபுர அறிவாள்.

 

ஆம்! நிம்மதியே தான்! முன்பெல்லாம் கைப்பேசியிலேயே குடியிருக்க வேண்டும். பல் துலக்கும் முன்பு, அதாகப்பட்டது கண் விழித்த நிமிடமே மொபைலை எடுத்து ரஞ்சித்துக்கு ‘குட் மார்னிங்’ அனுப்பியாக வேண்டும். அது ஒரு எழுதப்படாத விதி! ஒரு நாள் மறந்து தாமதித்து அனுப்பினாலும், “ஏன் இப்போ தான் எழுந்தியா?” என சுள்ளென்று தொடங்கி விடுவான். அடுத்த இரு தினங்களுக்கும் ரஞ்சித்திடம் ‘சாரி’ சொல்லி, அவனை சாமாதானம் செய்தே அவளுடைய நேரங்கள் ஆமையாய் நகரும். முன்பெல்லாம் ஒவ்வொரு தினமும் உமாவிற்கு நீண்…ட… நெடிய… தினங்கள் தான்.

 

ரஞ்சித்தைப் பொறுத்தமாட்டிலும் அவன் தவறே இழைத்திடாத மாமனிதன். உமா குற்றங்களை சேர்த்துக் கொண்டே செல்லும் ஒரு ஜீவன். அவள் குற்றங்களுக்கு கெஞ்சி, கூத்தாடி, அழுது, வருந்தி மன்னிப்பு கேட்டாக வேண்டும். பிறகே, மனம் இளகாவிடிலும் மன்னிப்பை போனால் போகிறதென்று பெருந்தன்மையாய் வழங்குவான்.

 

அப்படி அனுதினமும் கெஞ்சி கைப்பேசி மட்டுமே உலகம் என்று வாழவேண்டிய நிலையில் தான், கல்லூரி விடுமுறை தொடங்கியதில் இருந்து உமா அல்லாடிக் கொண்டிருந்தாள். அதற்கெல்லாம் விடுதலையாய் இந்த வேலை அமைந்து விட்டது. கூடவே ரிதன்யாவும் இருக்கவும்… வேலை, தோழி என்ற காரணங்கள் அவளுக்கு பேருதவியாய் இருந்ததால், வேலையில் சேர்ந்த கடந்த இரண்டு மாதங்களாய் ஆறாம் விரலாய் தன்னில் அங்கம் வகித்த கைப்பேசியிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருந்தது.

 

இப்பொழுதெல்லாம் தினமும் பெற்றோருடன் பேசும் பொழுது ரஞ்சித்திடமும் பேசி விடுவாள். ரஞ்சித்திற்கு ரிதன்யா பற்றி நன்றாகவே தெரியும். உண்மை காதலாக இல்லாமல், வெறும் ஈர்ப்பு என்றால் அவள் எளிதாக அதை கலைத்து விடுவாள். அவன் வகுப்பில் பல பேரின் காதலை முளையிலேயே கிள்ளி விட்ட பெருமை அவளுக்கு இருந்தது. ஆகையால், உமா ரிதன்யாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில் அவனும் உடன்பட வேண்டியிருந்தது. இல்லையேல், அவன் இழப்பது காதல் மட்டுமா? தற்பொழுது அவன் கை செலவுக்கு கிடைக்கும் கணிசமான தொகையும் கனவாகி விடுமே! அதோடு அவனை ஒரு பெண் நிராகரிப்பது தன்மானப்பிரச்சினை அல்லவா? யார் இது போன்ற ஜீவன்களுக்கு எல்லாம் தூபம் போடுகின்றனரோ? மொத்தத்தில் ‘கமிட்மென்ட்’ என்று செய்து விட்டு இவர்களிடம் மாட்டி அல்லாடும் ஜீவன்கள் அதிகம். அது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்.

 

சுடர் விட்டு எரியும் விளக்கின் ஒளி, வெளிச்சத்தை வாரி வழங்கினாலும், அதன் மீது கொண்ட ஈர்ப்பினால் விளக்கின் நெருப்பில் விழும் விட்டில் பூச்சியைப் போன்று… மனம் நிலையில்லா பருவத்தில் தவறான முடிவெடுத்து மாட்டி தவித்தாள் அந்த சிறுபெண்.

 

நமக்கான துணை, அது ஒரு அழகான இனிய கனவு தான். அதை ஏனோ தானோ என்று முடிவெடுக்காது, நிதானமாக முடிவெடுக்கும் பக்குவம் வேண்டும். ஈர்ப்புக்கும், நேசத்திற்கும் பாகுபாடு தெரிய வேண்டும். நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தானே வாழ்வை அழகாக செதுக்கும். வாழ்வில் ஒருவர் வந்தே தீருவர். அதை யார் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்க்காது, இயல்பாய் வாழ்வை எதிர்கொண்டாலே போதும். வீணாக எந்த புதைகுழியிலும் விழும் அவசியம் இருக்காது.

 

ரஞ்சித்திடம் பேசக் கிடைக்கும் சிறு இடைவெளியும் உமாவிற்கு வரமாக தோன்றியதில்லை. சலிப்பாகவே உணர்ந்திருக்கிறாள்! பின்னே! கைப்பேசியை எடுத்ததிலிருந்து குற்றப் பத்திரிக்கை அல்லவா வாசிப்பான். கைப்பேசி உரையாடல் முடித்து சோர்ந்து போய் திரும்பி வரும் தோழியிடம், “என்னடி அம்மா நியாபகமா?” என ரிதன்யா ஆறுதலாய் அணைத்துக் கொள்ளும் பொழுது உமாவிற்கு குற்ற உணர்வாய் போய்விடும்.

 

உமாவிற்கே தனது சோர்ந்த தோற்றம் எரிச்சலையும், இயலாமையையும் தூண்டி விடும். அம்மா, அப்பாவை நினைச்சு ஏக்கப்பட கூட நேரம் இல்லை. இதுல இவளையும் ஏமாத்துறோமே! என எண்ணியபடி கலங்கி போவாள். கலக்கத்தை சிறிது வெளிப்படுத்தினாலும் ரிதன்யா கண்டு கொள்வாள் என்பதற்காக மனதிற்குள் மருகி, தனக்குள்ளேயே தன் உணர்வுகளை புதைத்து தோழியை திசை திரும்புவாள்.

 

“இல்லை ரிது. ஆமா, என்னைய கேக்குறியே? மேடம் எப்படி? நானாவது ஹாஸ்டல்ல இருந்து பழக்கம். உனக்குதான் சிரமமா இருக்கும் இல்லை?” என முயன்று வரவழைத்த இலகு குரலில் உமா கேட்க மறுநிமிடமே, விரல் பட்டு சுருங்கும் தொட்டாச்சிணுங்கியாய் சுருங்கி விடுவாள் ரிதன்யா.

 

“ஆமாம் உப்புமா. இதுல கொடுமை என்ன தெரியுமா? அம்மா, அப்பா கஷ்டமா இருக்கான்னு கேக்கும் போது தான்… ரொம்ப… கஷ்டமா இருக்கும்” என்பாள் முகத்தை சுருக்கி.

 

“ஏன்டி எல்லார் வீட்லயும் கேக்கறது தானே?”

 

“ஹ்ம்ம் எல்லார் வீட்லயும் கேப்பாங்க தான். பட் எல்லாரும் இல்லைம்மான்னு பொய் சொல்லி சமாதானம் பண்ணுவாங்களே!” என பெருமூச்சு விட, உமாவிற்கு விழுந்து விழுந்து சிரிப்பு வந்துவிடும்.

 

“நீ ஒரு ஸ்பெஷல் மேக் (special make) டி” என சிலாகிப்பாள். “சரி கடைசியா எப்படி தான் சமாளிச்ச?”

 

“எங்கே? பொய் தானே பேசக்கூடாது, அமைதியா இருப்போம்ன்னு நினைச்சு பதில் சொல்லாம விட்டேனா… ஈசியா கண்டு பிடுச்சுட்டாங்க. ஏன் பாப்பா அமைதி ஆயிட்ட, ரொம்ப கஷ்டமா இருக்கா? ஊரு பிடிக்கலையா? சாப்பாடு ஒத்துக்கலையா?ன்னு கேள்வியா கேட்டு…”

 

“கேட்டு…?” என ஆர்வமாக கதை கேட்டாள் உமா.

 

“எல்லா உண்மையையும் வாங்கிட்டாங்க. அப்போ இருந்து, அம்மா, அப்பா, அப்பத்தா, அக்கா, மாமா கடைசிக்கு அந்த பொடிசு அஜய் கூட அட்வைஸ் பண்ண கால் பண்ணிட்டான்” என தலைசரித்து சோகமாக சொல்லவும், ரிதுவின் கைப்பேசி சிணுங்கவும் சரியாக இருந்தது. “ஹையோ! இப்போ சித்தி கூப்பிடறாங்களே! இந்த அம்மா யார்கிட்ட எல்லாம் புலம்பறாங்களோ தெரியலையே?” என்றபடி கைபேசியை தூக்கிக் கொண்டு பால்கனி பக்கம் ஓடினாள். உமாவின் கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடும் அளவு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

 

மறுநாள் காலையில் சமையல் அறையில் தனியாக அலப்பறை செய்து கொண்டிருந்தாள் ரிதன்யா. “ரிது என்னடி பண்ணற?” என பிரியா வர, “வாங்க பிரியாக்கா. குட் மார்னிங். சமைக்கிறேன் கா” என்றபடி சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

பிரியாவுடன் தங்கியிருந்த மூவரில், இருவருக்கு திருமணம் முடிந்திருக்க, ஒருத்தி பெங்களூரில் வேறு வேலை கிடைத்ததால் சென்றிருந்தாள். ஆகவே, தற்சமயம் இவர்கள் மூவரும் அந்த அப்பார்ட்மென்டில் இருந்தனர்.

 

“அது தெரியுது. ஏன் தனியா கஷ்டப்படற?” என பிரியா கேட்கவும், அதே கேள்வியை முகத்தில் தாங்கி உமா வரவும் சரியாக இருந்தது.

 

“இல்லை நேத்து எங்க குடும்பம், சொந்தக்காரங்க எல்லாரும் சேந்து போன் பண்ணி, எப்படி சமைக்கணும், எப்படி நடந்துக்கணும், ஈஸியா சமைக்கிற டிஷ்ஷஸ் அது இதுன்னு ரொம்ப நேரம் பேசுனாங்க தானே, அப்போ அவங்ககிட்ட இனிமே முடிஞ்சவரை ஒழுங்கா சமைச்சு ஒழுங்கா சாப்பிடறேன் சொல்லிட்டேன்.”

 

“சரி…” என உமா சிரிக்க தயாராகிக் கொண்டு கதை கேட்க, “நாளைக்கே இதை செஞ்சு பாருன்னு சாம்பார் சாதம் செய்யறதுக்கு சித்தி டியூஷன் எடுத்தாங்க. நானும் பேசிப்பேசி டையர்ட் ஆனதுல சரின்னுட்டேன். ஆறு மணிக்கு எழுந்து சமைக்கணும் கேட்டாங்களா, ரொம்ப நேரமா போன் பேசுன டையர்டுல அவங்க கேட்ட எல்லாத்துக்கும் சரி, சரின்னு சொல்லிட்டேன். அதான்…” என இழுக்க,

 

காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பாள், எல்லாரும் தூங்குவதால் எழுப்ப மனமின்றி சித்தியிடம் ஒப்புக்கொண்டதிற்காக அதை பொய்யாக்க மனமின்றி அவளே சமைத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்ட உமாவும், பிரியாவும் சமையல் செய்து களைத்து போய் இருந்த ரிதுவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

“சிரிக்காதீங்க…” என்ற அவளது அதட்டலை இருவருமே அசட்டை செய்தனர்.

 

நட்பில் மட்டுமே சோர்வும், களைப்பும்… புன்னகையிலும், கேலிகளிலும் கரைந்து போய் விடும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அழகிய வரம் நட்பு.

 

***

ரிதன்யா வேலையில் சேர்ந்ததிலிருந்து இரண்டு மாதங்களாக எதிர்பார்த்த வாய்ப்பு, அன்றைய தினம் அவளுக்கு கிடைத்தது. அவள் யுகேந்திரனை எதிர்கொண்டு அவனிடம் வம்பும் வளர்த்தாள். யார் நல்ல நேரமோ, இல்லை யார் கெட்ட நேரமோ இருவரும் தனிமையில் எதிர்கொண்டனர்.

 

பொதுவாக மதிய உணவை அலுவலக பேன்ட்ரியிலேயே ரிதுவும், அவளுடைய தோழமை வட்டத்தினரும் உண்டு விடுவர். அவ்வப்பொழுது, பலர் உணவு கொண்டு வராமல் வெளியில் வாங்க வேண்டும் என்கிற சூழல் வரும்பொழுது மட்டும் கீழே இருக்கும் ‘புட் கோர்ட்’ செல்வார்கள். அன்றைய தினமும் அதுபோலத்தான், கீழே ‘புட் கோர்ட்’ சென்று உணவருந்திவிட்டு தங்களுடைய ‘டி’ ப்ளாக் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது உமா அனைவரிடமும் நேத்து இரவும், இன்று காலையும் ரிதன்யா செய்த அட்டகாசத்தை சுவாரஸ்யமாய் விளக்க, ரிதுவால் அனைவரின் கேலிக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பிக்க, “நான் ஸ்டேர்கேஸ் வழியா வந்துடறேன்” என வேகமாக படிக்கட்டுகள் இருந்த பகுதிக்குள் நுழைந்து விட்டாள். “ஏய்! ஏழு மாடி டி…” என உமா சொன்னது அரைகுறையாக காதில் விழுந்தாலும் அதனை அசட்டை செய்தபடி படியேறினாள்.

 

ட்ரைன்னிங் செஷன் நடக்கும் ஏழாம் தளத்திற்கு ரிது சிரமப்பட்டு மாடி ஏறிக் கொண்டிருக்க, அவள் ஏழாம் தளம் அடையும் சமயம், அங்கே படிக்கட்டுகள் இருந்த பகுதியில் நடைபயின்றவாரே கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான் யுகேந்திரன்.

 

யுகேந்திரன் இன்றைய தினம் நடைபெற்ற நேர்முக தேர்வில் இரண்டாம் சுற்று மற்றும் மூன்றாம் சுற்று எடுப்பதற்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். அவன் தேர்வு செய்யும் முறை சிறப்பானதாக இருக்கும். அவன் தேர்வு செய்து அனுப்பும் நபர்கள் அடுத்த சுற்றுகளிலும் தேர்வாகி வேலையும் வாங்கி விடுவார்கள். ஆகையால், அவனின் மீது மேனேஜர்களுக்கு நம்பிக்கையும், நன்மதிப்பும் அதிகம். எனவே எந்த டீம்மிற்கு அவசரமாக ஆட்கள் தேவை என்றாலும் யுகனிடமும் தேர்வு குழுவில் இருக்குமாறு அழைப்பு செல்லும். இவனும் வேலை குறைவாக இருக்கும் நேரங்களில் எல்லாம் இன்டெர்வியூ எடுக்க வருவான்.

 

யுகன் டெவலப்மெண்ட் டீமில் இருப்பதால் டெவலப்பர்ஸ்க்கான இன்டெர்வியூவை எடுப்பான். அவர்கள் கம்பெனியில் டெவலப்பர்களுக்கான இரண்டாம் சுற்று டெக்னிக்கல் கேள்விகள் கொண்ட நேர்முகத்தேர்வாய் இருக்கும். மூன்றாம் சுற்றில் ப்ரோக்ராம் எக்ஸுகியூட் செய்ய வேண்டும்.

 

இந்த முறை மூன்றாம் சுற்று இன்டெர்வியூவில் இருவர் மிக வேகமாக ப்ரோக்ராம் போட்டு முடித்து விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இரண்டாம் சுற்று இவன் எடுக்காத பொழுதும், அந்த ரிசல்டையும் வாங்கி வெரிஃபை செய்தான். அதில் அவர்கள் ஓரளவே தேறி இருந்தார்கள். ஆனால், அவர்கள் போட்ட ப்ரோக்ராம்மில் ‘டைம் எஃபிஸியன்ஸி’, ‘ஸ்பேஸ் எஃபிஸியன்ஸி’ எல்லாம் மிகவும் பர்பெக்ட்டாக இருந்தது.

 

இரண்டாம் சுற்றிற்கும், மூன்றாம் சுற்றிற்கும் இருக்கும் முரண்பாடு அவனுக்கு நெருடியது. ‘இத்தனை பர்பெக்ட்டாக இவ்வளவு எளிதில் போட முடியாதே’ என்று சிந்தித்தவன், அவர்கள் இருவரையும் அதே ப்ரிக்ராம்மில் சில லாஜிக்களை மாற்ற சொன்னான்.

 

‘நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மனப்பாடம் செய்ததை வேக வேகமாக அடித்து காட்டினால், இப்படி சொதப்பி விட்டதே!’ என இஞ்சி தின்ற குரங்கை போல முழித்தவர்கள் அவன் சொன்னதை செய்வது போல பாவ்லா செய்தார்கள்.

 

கேலியாக உதடு சுளித்தவனுக்கு கண் மண் தெரியாத ஆத்திரம். அதை அடக்கிக்கொண்டு அந்த சுற்று முடியும் வரை காத்திருந்தான். அவர்கள் இருவராலும் அவன் சொன்ன மாற்றத்தை செய்ய முடியாததால் அந்த சுற்றில் நிராகரித்திருந்தான்.

 

ஏழாம் தளத்தில் இன்டெர்வியூவை முடித்துவிட்டு அடங்க மறுத்த கோபத்துடனும், கட்டுக்குள் அடங்கா ஆத்திரத்துடனும் வெளியேறிவன் தனது கைப்பேசியை உயிர்பித்தவாறே தனிமையில் பேசும் பொருட்டு படிக்கட்டுகள் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தான். அவன் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில் ரிது அவ்விடத்தை அடைந்திருந்தாள். அதிகமான தளங்கள் என்பதால் பெரும்பாலும் யாரும் படிகளை உபயோகிக்க மாட்டார்கள். அதனால் அவ்விடமே நிசப்தமாக இருந்தது.

 

அவ்விடத்தின் நிசப்தத்தை கலைத்த வண்ணம் கேட்ட ரிதுவின் காலடி ஓசையிலும், மெல்லிய கொலுசொலியிலும் கூட யுகனின் கவனம் கலையாமல் தன் பேச்சிலேயே மும்மரமாக இருந்தான்.

 

“இன்டெர்வியூ கொஸ்டின்ஸ் கண்டிப்பா லீக் ஆகி இருக்கு. அன்னைக்கு மீட்டிங்ல யாரெல்லாம் இருந்தாங்கன்னு லிஸ்ட் எனக்கு வேணும்” என தனது டீம்மேட்டிடம் யுகன் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

யாரும் வர போவதில்லை என்ற நிச்சயத்தில் வழியை மறைத்த வண்ணம் படிக்கட்டுகளின் நடுவில் நின்று தனது நீண்ட, வலிய கரங்களால் கைப்பிடியை பிடித்த வண்ணம் யுகன் பேசிக்கொண்டிருக்க, அவன் அருகில் வந்து விட்டவள் கடுப்பானாள். அவன் முதுகுகாட்டி நின்றிருப்பதால் அதுவரையிலும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை.

 

ஏனோ ரிதன்யாவிற்கு அவளுடைய நண்பர்களின் கேலியும், இத்தனை நேரமாய் படி ஏறியதினால் ஏற்பட்ட சோர்வுமாய் ஒரு எரிச்சலான மனநிலையாய் இருந்தது. அது தன் முன்னே அவள் காத்திருப்பதை கூட கவனியாமல் வழிமறித்து நிற்பவனின் மீது கோபமாய் விடியவும், “ம்ப்ச்… இதென்ன இவன் இடமா? வழி விடாம அடைச்சு நின்னுக்கிட்டு இருக்கான்” என அவள் முணுமுணுக்க, அந்த நிசப்தத்தில் அவள் குரல் அவன் செவிகளில் தெள்ளத் தெளிவாய் கேட்டது.

 

ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் முன்பின் தெரியாத பெண்ணின் ஒருமை அழைப்பிலும், அலட்சியத்திலும் மேலும் கோபங்கொண்டான்.

 

அதே கோபத்தோடு “நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் லிஸ்ட் எடுத்து வைங்க” என்று எதிர்முனையில் இருப்பவனிடம் சொல்லி போனை கட் செய்துவிட்டு பின்புறம் திரும்பியவனின் பார்வையில் ரிதன்யா விழுந்தாள்.

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: