Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 9

அத்தியாயம் – 9. காதலனும் காதலியும்

 

     ஏமாற்றத்தினாலும், அதிர்ச்சியினாலும் என்ன செய்வதென்பதே தோன்றாமல் சிலையாக நின்றுவிட்டாள் வானவி. அபாயமோ நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவர்கள் நின்ற இடம் படிக்கட்டின் முகப்பு. இரு புறங்களிலும் சிறிது தூரம் வரையில் புதர்களோ, மரங்களோ கிடையா. பகலைப்போல் நிலவு வேறு காய்ந்ததால், எதிர்க்கரை வழியே மங்கிய பார்வையுடயவர் சென்றால் கூட இவர்கள் நால்வரையும் நன்றாகக் கண்டுவிட முடியும். எதிர்க்கரையில் கேட்ட குளம்போசைகள், வருகிறவர்கள் நிச்சயமாகச் சோழப் படையினரே என்பதை நன்றாக அறிவுறுத்தின. இவையெல்லாம் தெரிந்திருந்த போதிலும் செயலற்று நின்றாள் வானவி.

 ஆனால் அவளுடைய உற்ற தோழி பங்கயற்கண்ணி உடனேயே எச்சரிக்கை அடைந்து விட்டாள். அவளுந்தான் இந்த எதிர்பாராத செய்தியால் ஏமாற்றமடைந்திருந்தாள். ஏன்? கூறிய அறிவு படைத்த அவள் முன்பே இந்த ஏமாற்றத்தை எதிர் பார்த்து விட்டாள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆம்; வேங்கி வீரனாக வந்து தங்கள் இளவரசியின் உள்ளத்தைக் குளிர்விக்கும் ஓலையத் தந்தவன் வேங்கி வீரன் அல்லன்; குந்தள நாட்டு இளவரசன் என்று அறிந்ததுமே ‘சிறைப்பட்டிருக்கும் அம்மங்கை தேவியார் இவரிடம் எங்ஙனம் ஓலை கொடுத்து அனுப்பியிருக்க முடியும்?’ என்ற கேள்வி பங்கயற்கண்ணியிடம் எழுந்தது. ‘ஒரு கால் அரசியல் சூழ்ச்சி ஏதாவதாக இருக்கலாமோ? இந்நாட்டில், முடக்காற்றுப் போருக்குப் பின் எஞ்சியுள்ள படைகளின் எண்ணிக்கையை அறியும் பொருட்டுக் கோட்டைக்குள்ளே வருவதற்கு இவர் வேங்கி வீரனாக வேடம் தரித்து வந்திருப்பாரோ? அவ்வாறாயின், அவர் கொணர்ந்த ஓலை, அதில் அடங்கியிருந்த செய்தி எல்லாம் பொய்யாக அல்லவா இருக்க வேண்டும்?’ என்று அப்பொழுதே சிந்திக்கத் தொடங்கி விட்டாள் அவள்.

வானவிக்கும் இயற்கையாக இது போன்ற ஐயம் தோன்றித்தான் இருக்க வேண்டும். ஆனால் அவள், காரியார்த்தமாகக் காதல் கொண்ட காளையைக் கட்டழகனாகக் கண்ணெதிரே கண்டதும் அடைந்த களிப்பில் உலகையே மறந்திருந்ததால், ஐயங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அவள் உள்ளம் அப்போது இடம் அளிக்கவில்லை. ஆதலால்தான் செய்தி வெளிப்பட்டதும், அவள் அடைந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் பங்கயற்கண்ணி அடைந்தவைகளைவிட அதிகமாக இருந்தன.

மதுராந்தகன் வந்து அந்தத் திடுக்கிடும் செய்தியை அறிவித்ததும், தான் நினைத்தவாறு இது ஓர் அரசியல் சூழ்ச்சியே என்பது பங்கயற்கண்ணிக்கு உறுதியாகிவிட்டது. தன் தோழி வானவிக்கு இது ஏமாற்றத்தையே அளித்திருக்கும்; அவளுடைய வெற்றிக் களிப்புக்கு ஒரு பேரிடியாகவே இருந்திருக்கும். ஆயினும் என்ன நோக்கத்தோடு குந்தள இளவரசர் இச்சூழ்ச்சியைக் கையாண்டிருக்கிறாரோ, யார் அறிவார்? எதுவாயினும், வானவிக்கு ஆசை காட்டி மோசம் செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அவர் இதைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால், அவள் ஓலை கொடுத்து அனுப்பியிருந்த வீரனையே அவர் நடுவழியில் தானே சந்தித்திருக்கிறார்! எனவே இதில் மிக முக்கியமான அரசியல் தந்திரந்தான் ஏதேனும் இருக்க வேண்டும்; அதை அறிந்து கொள்ளுமுன், குந்தள இளவரசரைத் தவறாக மதிப்பிடுவது மதியீனம் என்று முடிவுறுத்தினாள் அவள்.

கணப் பொழுதில் இத்தகைய மதி நுட்பமான முடிவுக்கு வந்துவிட்ட பங்கயற்கண்ணிக்கு, நெருங்கிக் கொண்டிருக்கும் அபாயத்திலிருந்து விக்கிரமாதித்தனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆதலால், அங்கே நிலவிய அமைதியைக் கலைத்தாள் அவள். “நம் வீரர்களென்றே நினைக்கிறேன். வாருங்கள், அவர்கள் தலை மறையுமட்டும் எல்லோரும் அந்தப் புதர் மறைவில் பதுங்கிக் கொள்வோம்,” என்று கூறிவிட்டு, கால் அளித்த வேதனையையும் பொருட்படுத்தாமல், சிலையாகி நின்ற வானவியை இழுத்துக் கொண்டு சிறிது தொலைவில் இருந்த பெரிய தாழம்புதர் ஒன்றை நோக்கி விரைந்தாள்.

“என்ன அக்கா? என்ன அபாயம்? யார் இவர்?” என்று கேள்விகளை அடுக்கிய மதுராந்தகனையும், சிறிது நேரம் வாய் பேசாமல் மற்றொரு புதர் மறைவில் பதுங்கிக் கொள்ளச் செய்தாள் பங்கயற்கண்ணி.

எதிர்க் கரையில் கேட்ட குதிரை அடி ஓசைகள் நெருங்கி வந்து, பிறகு தொலைவில் சென்று தேய்ந்துவிட்டன. அதன் பிறகுதான் பங்கயற்கண்ணிக்கு மூச்சுச் சரியாக வந்தது. இன்னும் வேங்கி வீரனின் உடையிலேயே இருந்த குந்தள இளவரசரை அந்த வீரர்கள் மட்டும் கண்டிருந்தால்? அதிலும் சோழ அரச குடும்பத்தைச் சார்ந்த இருவருடன்? – தெய்வந்தான் மதுராந்தகனின் உருவில் வந்து சரியான சமயத்தில் விக்கிரமாதித்தனையும் வானவியையும் காத்தது என்று அவள் நினைத்தாள். ‘இல்லாவிட்டால், குதிரைகளின் குளம்போசை காதில் விழும்பொழுது நாங்கள், நம் வீரர்கள் கால்வாய்க் காவலுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணி வாளா இருந்திருப்போமே!’

“படையினர் போய்விட்டனர். எல்லோரும் வெளியே வாருங்கள்,” என்று கூறியவாறு, தான் பதுங்கியிருந்த புதரிலிருந்து வெளியே வந்தான் மதுராந்தகன். அவனுக்கு இவர்கள் செயல் ஒரே குழப்பமாக இருந்தது.

ஆனால் வானவி, பங்கயற்கண்ணி, விக்கிரமாதித்தன் மூவரும் மறைவிடத்திலிருந்து நகரவில்லை. எனவே அவன் அவர்கள் அருகில் வந்து, “ஏன் அமர்ந்திருக்கிறீர்கள்? இவர் யார்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!” என்றான்.

வேங்கி வீரனை ஒற்றனெனச் சந்தேகித்துச் சோழப் படையினர் வருகிறார்கள் என்றதும், வானவியும், பங்கயற்கண்ணியும் பரபரப்படைந்து தங்களுடன் இருந்த அந்நியனை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்றனர். கூர்மதியுடைய எவரும் இந்நிகழ்ச்சியிலிருந்தே அந்த அந்நியன்தான் வேங்கி வீரன் என உணர்ந்திருப்பார்கள். ஆனால் மதுராந்தகன் அத்தனை அறிவு படைத்தவன் அல்லன். வெறும் வாய் வீச்சையும், அசட்டுத் துணிவையும் அன்றி, பாராட்டுதற்குரிய பண்புகள் ஏதும் அவனிடம் கிடையாது.

அதை வானவியும், பங்கயற்கண்ணியும் அறிவார்கள். எனவே அவன் இன்னுங்கூடத் தங்களுடன் இருப்பவர் யார் என்று உணர்ந்து கொள்ளாததைக் கண்டு வியப்படையவில்லை. “இவர்தான் அவர்கள் தேடி அலையும் வேங்கி வீரர்!” என்று பங்கயற்கண்ணி வெளிப்படையாகக் கூறியபோது கூட அந்த நுண்ணறிவு அற்றவன், “என்ன? உண்மையாகவா?” என்று வியப்பைச் சிந்தினான்.

“ஆமாம்.”

“ஐயோ! அப்படியானால் இவரை ஏன் பதுக்கி வைத்தீர்கள்? நான் இப்பொழுதே போய்…”

விக்கிரமாதித்தானின் உறையிலிருந்து வெளிவந்து தன்னை நோக்கி நீட்டப்பட்ட வாள் அவனை பேசவிடாமற் செய்தது. “இளவரசே! இங்கிருந்து நகர்ந்தீர்களானால், உங்கள் தலை உங்களுக்கு முன் உங்கள் உடலிலிருந்து நகர்ந்து விடும்!”

“சீ! கேவலம், ஓர் அயல்நாட்டுப் படைவீரன் நீ! உனக்கு இத்தனை வாய்த்துடுக்கா?” என்று குதிக்க முயன்ற சகோதரனை வானவி கையமர்த்தினாள். “மதுராந்தகா! நாவை அடக்கு. இவர்… இவர்…”

“ஆமாம், உங்கள் மைத்துரனராகப் போகிறவர்!” என்று தோழி கூறத் தயங்கியதைத் தெளிவாக்கினாள் பங்கயற்கண்ணி.

“பங்கயா! விளையாடுகிறாயா? அன்று குந்தள இளவரசரை மணக்கப் போவதாக ஓலை அனுப்பிய என் சகோதரி, இன்று சாதாரண வேங்கி வீரன் ஒருவனை…” அவனுக்கே மேலே பேச வரவில்லை.

அவனுடைய பேதமையைக் கண்டு கொல்லென நகைத்த பங்கயற்கண்ணி, “இல்லை இளவரசே; நீங்கள் நினைத்திருக்கிறவாறு இவர் வேங்கி வீரன் இல்லை. வேங்கி வீரரின் உடையில் இருக்கும் குந்தள இளவரசர்தாம்!” என்று விளக்கினாள்.

“அப்படியா? குந்தள இளவரசர் விக்கிரமாதித்தரா? மன்னிக்க வேண்டும், மைத்துனரே!” என்று விக்கிரமாதித்தனின் கரங்களைப் பற்றினான் மதுராந்தகன்.

விக்கிரமாதித்தன் மறுமொழி கூறவில்லை. அவன் மதுராந்தகனின் கையை உதறிவிட்டுத் தன் கையிலிருந்த உடைவாளை உறையில் செருகிக் கொண்டே பங்கயற்கண்ணியை நோக்கி, “தோழி, நான் சிறிது நேரம் இளவரசியுடன் தனிமையில் பேச விரும்புகிறேன்,” என்றான்.

அதனை ஆமோதிப்பவள் போல வானவியும் அவளை நோக்கிக் கண்சாடை காட்டவே, “வாருங்கள் இளவரசே, நாம் சாலைக்குப் போகலாம்,” என்று பங்கயற்கண்ணி மதுராந்தகனை அழைத்தாள்.

“அக்கா! மைத்துனர் ஜாக்கிரதை. மீண்டும் நம் படையினர் யாரேனும் இந்தப் பக்கம் வந்தாலும் வரலாம்,” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான் மதுராந்தகன். பங்கயற்கண்ணியும் அவனைப் பின் பற்றினாள்.

அவர்கள் தலை மறைந்ததும், “உட்கார் வானவி,” என்று உரிமையுடன் அவளை ஒருமையில் குறிப்பிட்டான் விக்கிரமாதித்தன்.

வானவி அமரவில்லை. அவள் திடீரென எதையோ நினைத்துக்கொண்டு, “இளவரசே! நீங்கள் இனி இந்த உடையில் இருப்பது அபாயத்தை விரும்பி அழைப்பதாகும். உங்களிடம் மாற்றுடை ஏதும் இல்லையா?” என்று கவலையோடு வினவினாள்.

“இருக்கிறது. ஆனால் மாற்றுடை அணிய வேண்டிய தேவை இப்போதுதானே ஏற்பட்டிருக்கிறது!” என்றான் விக்கிரமாதித்தன்.

“எங்கே வைத்திருக்கிறீர்கள் மாற்றுடைகளை?”

“அருகில்தான். அதோ, அந்த மரக் கூட்டத்தின் மறைவில் என் குதிரையைக் கட்டியுள்ளேன். அதன் சேணத்தில் இருக்கின்றன.”

“அப்படியானால் முதலில் அங்கே போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறீர்களா? நாம் பயமின்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்,” என்று கொஞ்சும் குரலில் வேண்டிக் கொண்டாள் வானவி.

விக்கிரமாதித்தனும் அபாயத்தைத் தானாக எதிர்கொள்ள விரும்பவில்லை. “சரி வானவி,” என்று கூறிவிட்டு அவன் மரங்களிடையே புகுந்து சென்றான்.

வானவி முன்பே தன்னைச் சமாளித்துக் கொண்டு விட்டாள். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தும், ஏமாற்றத்திலிருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு விட்டாள். தம்பி மதுராந்தகனைப் போல் அறிவிலியல்லள் அவள். கூரிய அறிவு படைத்தவள். ஆதலால் ஏதோ ஒரு நிமித்தம் பற்றியே விக்கிரமாதித்தன் வேங்கி வீரனாக இங்கு வந்து ஒரு பொய்யோலையைத் தன் பெரிய தந்தையாரிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று அவள் ஊகித்து விட்டாள். அது எந்த நிமித்தம் பொருட்டாக இருந்தாலும், தன் ஆணைகளை அவன் ஒருவனே நிறைவேற்றி வைக்கக் கூடியவன் என்ற நம்பிக்கை அவளிடம் தளரவில்லை. ஆம், சற்று முன் கூட அவன் அதனை நிறைவேற்றி வைப்பதாக உறுதி கூறினானே! எனவே, தனது வெற்றிக் களிப்பு இப்பொழுது தோல்வியில் முடிந்து விட்டாலும், இவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு காரியம் நிறைவேற வழி செய்து கொள்ள வேண்டும் என்று அவள் துணிந்தாள். அதற்காகவேதான் அவன் தன்னுடன் தனிமையில் பேச விரும்பியதும் கண் அசைவின் மூலம் தம்பியையும், தோழியையும் அப்புறப் படுத்தினாள். இப்பொழுது அவனை உடைமாற்றி வருமாறும் வேண்டிக் கொண்டாள்.

சற்றைக்கெல்லாம் விக்கிரமாதித்தன் மாற்றுடை அணிந்து திரும்பி வந்தான். பகலெனக் காய்ந்த நிலவில் அரசகுலத்தினர் அணியும் பகட்டான ஆடைகளுடன் வந்து நின்ற அவனது தோற்றம் வானவியின் இளமை உள்ளத்தைப் பரவசமடையச் செய்தது. கண்ணால் கண்டிராத ஒருவனை அவள் காரியார்த்தமாகக் காதலித்தாள். தன் காரியத்தை நிறைவேற்றி வைத்தால் அவனை மணந்து கொள்வதாக ஓலை அனுப்பினாள். இப்பொழுது அவனது எழில் உருவைத் தெளிவாகக் கண்டதும் இயல்பாகவே அவள் உள்ளம் அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டது. ‘என் ஆணைகள் நிறைவேற உதவினாலும், உதவாவிட்டாலும் இந்தக் கட்டழகரைக் கணவராகப் பெற்றால் நான் பாக்கியசாலியே’ என்று அவள் எண்ணினாள்.

திரும்பி வந்த விக்கிரமாதித்தன் தாங்கள் முன்பு மறைந்து கொண்ட தாழம்புதரை அடுத்திருந்த பிரும்மாண்டமான வாகை மரம் ஒன்றன் வேரில் அமர்ந்தான். வானவியும் அங்கே வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள்.

விக்கிரமாதித்தன் பேசலானான்: “என்னை மன்னித்துக் கொள் வானவி. என் செயல் உனக்குப் பெரிய ஏமாற்றத்தையே விளைவித்திருக்கும். ஆனால், நீ ஏமாற்றத்துக்கு உள்ளானாலும் தவறில்லை; பொய்யை உண்மையென நம்பி, தவறாக ஏதாவது செய்துவிடலாகாது என்பதற்காகவே, நாடு திரும்பு முன் உன்னை எவ்வாறேனும் தனியே சந்தித்து விவரங்களைக் கூறிவிட வேண்டுமென்று விழைந்தேன். எனக்கு அதிகக் கஷ்டம் அளிக்காது, தற்செயலாகவே நிகழ்ந்து விட்டது நமது சந்திப்பு!” என்றான் அவன்.

வானவி ஒன்றும் பேசவில்லை. அவனுடைய எழில் உருவை தெவிட்டாமல் கண்களால் பருகிக் கொண்டிருந்தமையால், விக்கிரமாதித்தன் பேசியது ஒன்றுமே அவளது செவிகளில் புகவில்லை.

அவளுடைய அமைதியைத் தவறாகக் கருதிய விக்கிரமாதித்தன், “என் மீது கோபமா, வானவி?” என்று வினவி, அன்புடன் அவளது கரங்களைப் பற்றினான்.

அந்த முதல் ஸ்பரிசம் வானவியை மெய்மறக்கச் செய்தது. “உங்கள் மீது கோபமா? இளவரசே! இது என்ன அபசாரம்?” என்று அவள் குமுறினாள்.

“கோபம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உன்னிடம் முழு விவரங்களையும் கூறிவிட விரும்புகிறேன். கண்ணே! நான் இங்கே அந்தப் பொய்யோலையுடன் வந்தது எதற்காகத் தெரியுமா?”

“குறிப்பாகத் தெரியாது. இருந்தாலும் அரசியல் காரணம் ஏதாவது பற்றி இருக்குமென நினைத்தேன்.”

“அரசியல் காரணம் ஏதும் இல்லை, அன்பே. எல்லாம் உனக்காகத்தான். இந்தப் பொன்னுடலை என் உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டுத்தான்.” அவன் வானவியை அருகில் இழுத்து அவள் தலையைத் தன் பரந்த மார்பின் மீது சாய்த்துக் கொண்டான்.

“எனக்காகவா?” போதையேறிய குடிகாரனைப் போல் இன்பத்தின் சிலு சிலுப்பில் தேனென இசைத்தால் வானவி.

“ஆம், உன் விருப்பத்தை நிறைவேற்றத்தான். விவரமாகச் சொல்கிறேன், கேள். முடக்காற்றுப் போரில் நாங்கள் அடைந்த தோல்வி படுமோசமானது. ஏறக்குறைய எங்கள் படைப்பலம் அனைத்தையுமே இழந்து விட்டோம். ஆயினும் அது கூட எங்களைப் பாதிக்கவில்லை. தண்டநாயகன் வாலாதேவனை இழந்ததுதான் எல்லாவற்றிலும் பெரிய இழப்பாகப் பட்டது எங்களுக்கு. அவன் மூலம் நாங்கள் பல வெற்றிகளை எதிர்பார்த்திருந்தோம். போர்க் களத்தில் படைகளை அணிவகுத்து நடத்துவதிலும் சரி, நேர் நின்று போர் செய்வதிலும் சரி, அவனுக்கு இணையே இல்லையென்று நாங்கள் இறுமாந்திருக்க, உங்கள் பெரிய தந்தை அத்தகைய அசகாயசூரனைப் போர் செய்து கொன்றுவிட்டதைக் கண்டதும் நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். வாலாதேவனையே வீழ்த்திவிட்ட அவரைப் போரில் வெல்வதென்பது இயலாத செயல் என உணர்ந்த நாங்கள், அவரை வஞ்சகமாகக் கொன்றாலன்றி, இனி சோழர்களுடன் நிகழ்த்தும் போர் எதிலும் வெற்றியை எதிர்பார்க்க முடியாதென்று தெளிந்தோம். எனவே சோழ நாட்டுக்குச் சென்று இராசமகேந்திரரை ஒழிக்கும் பணியை என் தந்தையார் எனக்கு இட்டார். அதற்காகவே நான் இங்கு வந்து கொண்டிருந்தேன்.”

“விளங்கி விட்டது. வழியில் நந்துகனைச் சந்தித்தீர்கள். அவன் என் பெரிய தந்தையார் இறந்ததை அறிவித்திருப்பான். ஏனெனில், அவன் பரிச்சாலையில் குதிரை வாங்கிக் கொண்டு அன்றிரவுதானே புறப்பட்டிருப்பான்? அதற்குள் அவர் காலமாகிவிட்ட செய்தி அவனுக்கு தெரிய வந்திருக்குமே? அதோடு என் ஓலையையும் தந்திருப்பான். உங்களை அடைய சோழ இளவரசி ஒருத்தி ஏங்கி நிற்பதை அறிந்ததும், அவள் அழகியா, குரூபியா என்பதைத் தெரிந்து கொண்ட பின்னரே செயற்பட வேண்டும் என்று எண்ணியிருப்பீர்கள். ஆனால் அதைக் கண்டறிய கோட்டைக்குள்ளே வர வேண்டியிருக்குமே! அதற்காக வேங்கி வீரனாக மாறி ஒரு பொய்யோலையைத் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தீர்கள்: அப்படித்தானே?” என்று குறும்பு நகையுடன் குறுக்கிட்டுக் கூறினாள் வானவி.

“இல்லை வானவி. அப்படியில்லை. உன் எழிலைப்பற்றி ஓலையைத் தந்த போதே நந்துகன் விவரித்து விட்டான். ஆதலால் அதுவன்று நான் இங்கே வந்ததன் நோக்கம்.”

“பின்?”

“வானவி! உன்னை என் உயிருக்கு உயிரானவள் என நம்பி அரசியல் அந்தரங்கங்கள் சிலவற்றை இப்பொழுது சொல்லப் போகிறேன். முடக்காற்றுப் போரில் நாங்கள் எங்கள் படைப்பலத்தை வெகுவாக இழந்து விட்டோம் என்று சற்றுமுன் சொன்னேன். உண்மையைச் சொல்லப் போனால், அப்போரில் எஞ்சியவர்கள் நான், என் தந்தை ஆகவமல்லர், என் சகோதரன் ஜெயசிம்மன், மற்றும் இருகையன் போன்ற சில படைத் தலைவர்கள் தாம். ஆம், போரில் உயிர் தப்பிய எங்கள் படையினர் அனைவரையுந்தான் உங்கள் நாட்டினர் போர்க் கைதிகளாகச் சிறைப்பிடித்து வந்து விட்டனர்.

“இத்தகைய நிலையில் நாங்கள் மீண்டும் ஒரு சிறு படையைத் திரட்டுவதென்றால் கூடக் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். ஆனால் உன் ஓலையோ, உடனடியாக விசயாதித்தருக்கு உதவினாலன்றி குலோத்துங்கன் வேங்கி அரியணையில் ஏறிவிடக்கூடுமென்று அறிவித்தது. ஆதலால் நான் முதன் முதலில் குலோத்துங்கன் வேங்கி போய்ச் சேராமலிருக்க வகை செய்ய விரும்பினேன். நந்துகனைக் கல்யாணபுரம் சென்று என் தந்தையாரிடம் எல்லா விவரங்களையும் அறிவித்து, விரைவில் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு தயாராக இருக்கும்படி செய்தி அனுப்பிவிட்டு, வேங்கி வீரன் உடையில் அந்தப் பொய்யோலையுடன் இங்கே வந்தேன். என் ஓலைச் செய்தி பொய்யென்பது வெளியாகாமலே இருந்துவிடும் என்பது என் எண்ணமன்று. அதற்கு சிறிது காலம் பிடிக்குமென்று நினைத்தேன். ஆனால் என் நினைவுக்கு மாறாக, அது உடனடியாகவே வெளியாகி விட்டது. ஆயினும் நீ கவலை கொள்ளாதே, வானவி. இனி உன் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒன்றே என் வாழ்வின் குறிக்கோளாக இருக்கும், உடனே இயலாவிடினும், விரைவில் உன் ஆணைகளை நிறைவேற்றி, உன் உள்ளத்தைக் குளிர்வித்து, உன் கரங்களை உவகையோடு பற்றுவேன்.”

விக்கிரமாதித்தனின் இந்த வாக்குறுதி வானவியை இன்பவாரிதியில் ஆழ்த்தியது. அவள் தன்னை மறந்த களிப்புடன் அவன் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, “அந்த நன்னாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன், அன்பே. என் ஆணைகள் நிறைவேறி, அன்புக்குரிய உங்களோடு கல்யாணபுரத்தில் காத்திருப்பேன்!” என்றாள்.

காதலர்கள் பின்னும் சிறிது நேரம் உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த பிறகு பிரிந்தனர். விக்கிரமாதித்தன் தன் குதிரை நிறுத்தப் பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். வானவி சாலைக்குப் புறப்பட்டாள். இருவரும் நின்ற இடத்திலிருந்து ஓரடி எடுத்து வைத்தார்களோ இல்லையோ, “நில்லுங்கள்!” என்ற ஓர் அதட்டல் குரல் அவரகளைத் திடுக்கிட வைத்தது. மறுகணம் எதிரே இருந்த மரத்தின் மறைவிலிருந்து உருவிய வாளுடன் குலோத்துங்கன் எதிர்ப்பட்டான். அவனைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய சோழப் படைவீரர் பலர் வெளிவந்தனர்.

விக்கிரமாதித்தன் சட்டென்று வாளை எடுத்துக்கொண்டு சண்டைக்குத் தயாரானான். குலோத்துங்கனையும், சோழ வீரர்களையும் வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடிவிடத்தான் அவன் முயன்றான். ஆயினும் இருபதுக்கும் மேற்பட்டவர்களுடன் அவன் ஒருவனாகவே போரிட்டு மீள இயலவில்லை.

விரைவில் அவன் உடைவாள் ஒடிந்து விழுந்தது. விக்கிரமாதித்தன் கைதானான். அவனது கைகளைக் கயிற்றால் பிணித்துச் சோழ வீரர்கள் இழுத்துச் சென்ற காட்சியை வானவி மட்டும் கண்டிருந்தாளானால், அங்கேயே மனமுடைந்து விழுந்து செத்திருப்பாள். ஆனால் அவள்தான் விக்கிரமாதித்தன் சோழ வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, தன் தலை தப்பினால் போதுமென்று அங்கிருந்து நழுவி விட்டாளே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: