Tamil Madhura கள்வனின் காதலி,தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 40

அத்தியாயம் 40 – ராயவரம் ஜங்ஷன்

சாதாரணமாகவே ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல கலகலப்பான இடம் வேறு கிடையாது என்று சொல்லலாம். அதிலும், ராயவரம் ஜங்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அங்கே நாலு முக்கியமான இடங்களுக்குப் போகும் நாலு ரயில் பாதைகள் வந்து சேர்கின்றன. ஆகவே பகல், இரவு இருபத்திநான்கு மணி நேரமும் ஸ்டேஷன் கலகலவென்றுதான் இருக்கும்.

ஆஹா! அங்கே எத்தனை விதமான வாசனைகள் தான் கலந்து வருகின்றன? தாழம்பூ, ரோஜாப்பூ, வெட்டி வேர், மருக்கொழுந்து வாசனை; மசால்வடை, காராபூந்தி வாசனை; சாம்பார் சாதம், தயிர் சாதம் வாசனை; ரொட்டி-பன் பிஸ்கோத்து வாசனை; புகையிலை வாசனை; சுருட்டுப் புகை வாசனை; அழுகிய ஆரஞ்சுத் தோல், வாழைப் பழத்தோல் வாசனை; மனுஷர்கள் மேலிருந்து வரும் ஸெண்டு, ஜவ்வாது, வேப்பெண்ணெய் வாசனை; கங்கையிலே முழுகிய பின், ராமேசுவரத்தில் தான் குளிப்பது என்ற திட சங்கல்பத்துடன் வரும் வடக்கத்தியர்களுடைய அழுக்கடைந்த துணிகளிலிருந்து வரும் வாசனை; அம்மம்மா! அந்த வாசனைகளையெல்லாம் தனித்தனியாகப் பிரித்து எடுத்து எண்ணினால் குறைந்தது முப்பதினாயிரம் வாசனை இராதா?

அப்புறம் எத்தனை தினுசான மனிதர்களை நாம் அங்கே பார்க்கிறோம்! பட்டிக்காட்டு குடியானவர்கள்; பட்டணத்து நாகரிக புருஷர்கள்; உச்சிக்குடுமி மனிதர்கள்; கிராப்புத் தலைக்காரர்கள்; குல்லா அணிந்தவர்கள்; தொப்பி தரித்தவர்கள்; பட்டை நாமங்கள்; சந்தனப் பொட்டுக்கள்; முறுக்கு மீசைகள்; முகக்ஷவரங்கள்; நீண்ட தாடிகள்!

ஸ்திரீகளிலேதான் எத்தனை விதம்? கொரநாட்டுப் புடவை தரித்தவர்கள்; புதுச்சேரி ஸில்க் அணிந்தவர்கள்; நெற்றி நிறையும்படி குங்குமப் பொட்டு இட்டவர்கள்; கண்ணுக்குத் தெரியாதபடி சிறு சாந்துப் பொட்டு வைத்தவர்கள்; தலை பின்னித் தொங்கவிட்டவர்கள்; பின்னலை எடுத்துக் கட்டியவர்கள்; பின்னாமல் கொண்டை போட்டுக் கொண்டவர்கள்; வைரக் கம்மல்கள், தொங்குகிற டோ லக்குகள்!

அங்கே கிளம்புகிற சப்தங்கல் எத்தனை வகை! ரயில் ஊதும் சப்தம்; எஞ்சின் புகைவிடும் சப்தம்; மணி அடிக்கும் சப்தம்; “மசால்வடை முந்திரிப்பருப்பு” என்று விற்கும் சப்தம்; குழந்தைகள் கூக்குரலிடும் சப்தம்; ஸ்டேஷனுக்கு வெளியே ஜட்கா வண்டிகள் கடகடவென்று ஓடும் சப்தம்; மோட்டார் ஹாரன்களின் சப்தம்; எல்லாவற்றிற்கும் மேலாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம்.

ஒரு ரயில் பிளாட்பாரத்தில் நம்முடைய காதில் விழுகிற பேச்சுக்களைப் போல சுவாரஸ்யமானது வேறொன்றுமே கிடையாது என்று சொல்ல வேண்டும்.

“கொஞ்சமாவது மூளையே இல்லாதவர்கள் ராஜ்யத்தை ஆண்டால், வேறென்ன தான் நடக்கும்?” என்று ஓர் அரசியல்வாதி சொல்லிக் கொண்டு போகிறார்.

“அய்யர்வாள்! என்ன தீட்சை வளர்க்கிறாப் போலிருக்கே! ஆத்திலே எத்தனை மாதம்?” என்று கேட்கிறார் ஒரு கர்நாடகப் பேர்வழி.

“அம்மா! எனக்கு ஒரு லயிலு வண்டி வாங்கிக் கொடு! என்று மூக்கால் அழுகிறது ஒரு சின்னக் குழந்தை. (அது வாங்கிக் கொடுக்கச் சொல்லுவது பொம்மை ரயிலைத்தான்; நிஜ ரயிலையல்ல.)

“ஏன, ஸார்! இன்றைக்குப் பேப்பரில் என்ன ஒரு இழவும் இல்லையே!” என்று சொல்லிக்கொண்டு போகிறார் ஒரு பத்திரிகைப் பிரியர்.

“அடே ராமு! பரீட்சையில் ‘கோட்’ அடிச்சுட்டயாமே? இப்படிக் கொடு கையை” என்று ஒரு வாலிபன் இன்னொரு வாலிபனுடைய கையைப் பிடித்துக் குலுக்குகிறான்.

ராயவரம் ஜங்ஷன் இப்படி கலகலப்பாக இருந்து கொண்டிருந்தது. சென்னைக்குப் போகும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வண்டி வருகிற நேரம் நெருங்கிவிட்டபடியால், ஜனங்கள் பெட்டி படுக்கைகளுடனும், மூட்டை முடிச்சுகளுடனும், குழந்தை குட்டிகளுடனும் கூட்டம் கூட்டமாக வந்து பிளாட்பாரத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இப்படி வந்தவர்களில் திருச்சிற்றம்பலம் பிள்ளையையும் அவரது குடும்பத்தாரையும் நாம் பார்க்கிறோம்.

*****

மேற்பாலத்துக்குப் போகும் படிக்கட்டின் அடியில் விழுந்திருந்த நிழலில் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்திருந்தாள் கல்யாணி. அத்தை அவள் பக்கத்தில் நின்றாள். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் அவருடைய மனைவியும் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடாமல் தடுத்து நிறுத்தும் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். வண்டிக்காரர்கள் இரண்டு பேர் கையில் தார்க்குச்சியுடன் பயபக்தியோடு சற்றுத் தூரத்தில் நின்றார்கள்.

அந்தப் பிளாட்பாரத்தில் கூடியிருந்த அவ்வளவு ஸ்திரீகளுக்குள்ளும் கல்யாணி தான் அழகும் வசீகரமும் பொருந்தி விளங்கினாள். அவ்வழியே போன ஸ்திரீகள் அவளைப் பொறாமை பொங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டு போனார்கள். புருஷர்கள் எங்கேயோ பார்க்கிற பாவனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். பட்டு உருமாலையும் ஜவ்வாதுப் பொட்டும் தரித்த ஓர் இளைஞன் அவ்வழியாகக் குறுக்கே நெடுக்கே ஐந்தாறு தடவை போய்விட்டான்.

முதலில் இரண்டொரு நிமிஷம் கல்யாணி பிளாட்பாரத்தின் நாலாபுறமும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்புறம் பட்டென்று அவள் முகத்தில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. கவனத்துடன் எதையோ கேட்பவள் போன்ற பாவனை தோன்றிற்று. ஐந்து நிமிஷத்திற்குள் அவளுடைய முகத்தில் ஆயிரம் விதமான பாவங்கள் காணப்பட்டு மறைந்தன. வியப்பு, கோபம், ஆவல், ஆத்திரம், சந்தேகம், பரபரப்பு இவ்வளவு பாவங்களும் மாறி மாறித் தோன்றின.

அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் சிலர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தது அவளுடைய காதில் விழுந்தது தான் இதற்குக் காரணமாகும்.

கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்: “அதை ஏன் கேட்கிறீர்கள்? சென்னைப் பட்டணமெல்லாம் ஒரே ‘கொல்’லென்று போயிருக்கு! அடாடா! அந்தத் திருடனுடைய சாமர்த்தியத்தைச் சொல்லுகிறார்கள் சொல்லுகிறார்கள் அப்படியே சொல்லுகிறார்கள்…”

கூட்டத்திலே இன்னொருவர்: “ஏன் ஸார்! அது எப்படி பெரிய கூட்டத்திலே அத்தனை போலீஸ்காரனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு அவன் தப்பித்துக் கொண்டான்? நம்ப முடியாத அதிசயமாயிருக்கிறதே!”

முதல் மனிதர்: “பாருங்கள்! ஸ்டேஜ் மேலேயிருந்து அப்படியே அலாக்கா ஒரு தாவு தாவினானாம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்கள் தலைமேலேயே நடந்து இரண்டு எட்டிலே போய்விட்டானாம். இன்னும் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? அவனை அரஸ்ட் செய்ய வந்திருந்த போலீஸ் டிபுடி கமிஷனரின் மோட்டார் வண்டி வாசலிலே நின்று கொண்டிருந்ததாம். அந்த வண்டியைத்தான் அவன் விட்டுக் கொண்டு போய் விட்டானாம்!”

வேறொருவர்: “அவன் எங்கேதான் போயிருப்பான் என்று ஏதாவது தெரிந்ததா?”

“எங்கே போயிருப்பான்? பழையபடி கொள்ளிடக்கரைக்குத்தான் வந்து சேர்ந்திருப்பான். நாணற்காட்டிலே புகுந்து விட்டால், அப்புறம் யாராலே கண்டுபிடிக்க முடியும்! ஆயிரம் போலீஸ்காரர்கள் தான் வரட்டுமே?”

“ஆமாம்; நாணற் காட்டிலே புகுந்துவிட்டால், சாப்பாட்டுக்கு என்ன வழி?”

“அது தெரியாதா உங்களுக்கு? கொள்ளிடக் கரையில் ஏதோ ஒரு கிராமத்தில் அவனுக்கு…(மெதுவான குரலில்) யாரோ ஒரு பெண்பிள்ளை இருக்காளாம்!”

“இதற்கு என்ன ஸார், இவ்வளவு இரகசியம்! முத்தையன் போகிற ஊரெல்லாந்தான் அவனுக்கு ஒரு பெண்டாட்டி இருக்கிறாள் என்று சொல்கிறார்களே!”

“சீச்சீ! ஏன் இப்படிக் கன்னா பின்னா வென்று பேசுகிறீர்கள்? நம்முடைய வழக்கமே இப்படித்தான்; ஒன்று என்பதைப் பத்து என்கிறது!”

“உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பட்டணத்திலே பெண் பிள்ளைகள் எல்லாம் ஒரேயடியாக அவனுடைய மோகத்திலே முழுகிக் கிடந்தார்களாம். அதென்னமோ அவனிடத்திலே ஒரு வசீகரண சக்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். நாடக மேடையில் அவன் முகத்தைத் திறந்து காட்டினானோ இல்லையோ, எத்தனையோ பெண் பிள்ளைகள் மூர்ச்சைப் போட்டு விழுந்து விடுவார்களாம்! பாருங்கள்; கடைசி நாள் நாடகத்தன்று கூட அப்படி ஒருத்தி மூர்ச்சைப் போட்டு விழுந்து விட்டாளாம்!”

“அதென்னமோ, ஸ்வாமி! இந்தப் பக்கமெல்லாம் அவனுக்கு அது விஷயத்தில் ரொம்ப நல்ல பெயர். என்னதான் கொள்ளைக்காரனாயிருந்தாலும், இது வரையில் ஒரு ஸ்திரீக்காவது அவன் கெடுதல் செய்ததில்லையென்று சொல்கிறார்கள்.”

“ஒரு நாளைக்கு அவன் அகப்படப்போகிறான்! அப்போது எல்லாப் பொய் நிஜமும் தெரிந்து போகிறது.”

கல்யாணி இவ்வளவுதான் கேட்டாள். உடனே ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். திருச்சிற்றம்பலம் பிள்ளையைக் கூப்பிட்டு, “அப்பா! எனக்கு உடம்பு ஒரு மாதிரியாய் இருக்கிறது. நான் திருப்பதிக்கு வரவில்லை. நீங்கள் போய் வாருங்கள். நானும் அத்தையும் திரும்பிப் பூங்குளத்துக்கே போய்விடுகிறோம்” என்றாள்.

திருச்சிற்றம்பலம் பிள்ளை திடுக்கிட்டு, “என்ன அம்மா! இப்படிச் சொல்கிறாய்? டிக்கட் கூட வாங்கியாய்விட்டதே!” என்று கேட்டார். அவர் என்ன சொல்லியும் பிரயோஜனப் படவில்லை. கல்யாணி பிடிவாதமாகத் திரும்பித்தான் போவேனென்று சொன்னாள்.

இதற்குள் ரயில் வந்துவிடவே, திருச்சிற்றம்பலம் பிள்ளை வேறு வழியில்லாமல், “சரி, அம்மா! நல்ல வேளையாய் வண்டிக்காரர்களும் இருக்கிறார்கள். திரும்பி ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேர். வீட்டிலும் ஜாக்கிரதையாய் இரு” என்று நூறு தடவை ஜாக்கிரதைப் படுத்திவிட்டு, மனைவி மக்களுடன் ரயில் ஏறினார்.

ஸ்டேஷனை விட்டு ரயில் நகர்ந்ததும், கல்யாணியும் அத்தையும் வெளியே வந்து மாட்டு வண்டியில் ஏறிப் பூங்குளத்துக்குப் பிரயாணமானார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 22சாவியின் ஆப்பிள் பசி – 22

மல்லிகை வாடை அடர்ந்து கமழ மந்தார வானம் வெயிலைத் தணித்தது. தென்னம் ஓலைகள் வானத்தை வரிவரியாகக் கீறியது. கிள்ளைகளின் குரல்கள் அடுத்தடுத்துக் கொஞ்சின. கார் ஓரிடத்தில் போய் நிற்க, சாமண்ணாவும் சகுந்தலாவும் கீழே இறங்கித் தென்னை நிழல்களில் நடந்தார்கள். வெகுதூரம் நடந்த

சாவியின் ஆப்பிள் பசி – 2 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 2 (Audio)

  “கொஞ்சம் நில்லுங்க – நான் போய் முதல்லே லைட்டைப் போடறேன். அப்புறம் நீங்க வரலாம். இது எனக்குப் பழக்கப்பட்ட இருட்டு!” என்று கூறி நாலே எட்டில் மாடிக் கதவை அடைந்து பூணூலில் கோத்திருந்த சாவியால் பூட்டைத் திறந்த சாமண்ணா ஸ்விச்சைப்

சாவியின் ஆப்பிள் பசி – 31சாவியின் ஆப்பிள் பசி – 31

சற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான். “அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு. “சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு”